அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/301-383
297. உலகிலுள்ள அரசநீதிகளின் நோக்கும் அந்தந்தக் குடிகளின் போக்கும்
முதலாவது ஐரோப்பா கண்டத்தின் அரசாங்கங்களை நோக்குங்கால் அரசு எவ்வழியோ குடிகளும் அவ்வழியென்பது போல் அரசநீதிமொழிகளைக் குடிகளுந்தழுவி நிலைபிறழா ஒழுக்கத்தினின்று தாங்கள் சீரடைவதுடன் தங்கள் தேசத்தையுஞ் சிறப்படையச் செய்து வருகின்றார்கள்.
இவற்றுள் அமெரிக்கா, ஆஸ்டிரேலியா, ஆபிரிக்கா முதலிய கண்டங்களிலுள்ள அரசர்களுங் குடிகளும் அவ்வகையாய சிறப்பையே தழுவி நிற்கின்றார்கள் என்பதற்குப் போதிய ஆதாரமுண்டு.
மற்றும் மதக்கர்வமும் சாதிகர்வமும் பெருகியுள்ள தேசங்கள் எவைகளோ அவைகள் யாவும் அரசர்கள் நீதிக்கும் அவர்கள் நெறிக்கும் அடங்காது மதத்திற்குத்தக்க மன்றாட்டுகளும், சாதிக்குத்தக்கச் சாக்கு போக்குகளும் வேறுபடுத்துவதால் நீதியும் நெறியும் பிறழ்ந்து சாதியும் சமயமும் மேனோக்கி தேசக்குடிகள் தங்களுக்குத்தாங்களே சீர்கெடவும் தேசம் பாழ்படவுமாகின்றது.
எத்தேசத்தில் மதகர்வமும் சாதிகர்வமும் பெருகிக்கொண்டே வருகின்றதோ அத்தேசத்திற்கு வேறு சத்துருக்கள் கிடையாவாம், தங்களுக்குள் தாங்களே வெட்டி மடிந்து பாழடைவார்கள். இதற்குப் பகரமாக தற்கால சண்டைகளில் பால்கன் கிரீஸ், ரோமேனியர்களே போதுஞ் சான்றாம். பூமியின் ஆசை ஓர்புறம் இருப்பினும் மதகர்வமே மூன்று லட்சத்திற்கு மேற்பட மக்களை துள்ளத்துடிக்க மடித்து பள்ளம் வெட்டி புதைப்பதற்கு ஆளில்லாமல் விடுத்து ஓடோடியும் போயதும் அம்மடிந்தவர்களின் பெண்டு பிள்ளைகள் யாவரையும் பதரவும் கதரவும் வைத்து விலகினின்று வேடிக்கைப் பார்ப்பவர் மதகர்வமுண்ட மல்லர்களே யாவர்.
அரசாங்கங்களே தங்கடங்கள் நீதிதவறி மதபோதகர்க்கு உட்பட்டு மதகர்வம் மேற்கொண்டு தங்களுக்குத் தாங்களே மடிவதாயின் குடிகளென்னப் போக்கில் பிறழ்ந்து சீர்பெறுவார்கள். தேசம் எவ்வகையால் சிறப்படையும். நாளுக்கு நாள் மதக்கர்வங்கொண்ட தேசம் மதத்தாலழிவரென்னும் பழமொழி விளங்க தேசசிறப்பும் மக்கள் சுகமுங் கெட்டு மாளாதுக்கத்தில் அவதியுறுதல் அநுபவமுங் காட்சியுமாகும்.
இத்தகையாய மேனாடுகள் மதகர்வத்தினால் நாளுக்கு நாள் சீரழியுமாயின் சாதிகர்வம் மதகர்வம் இவ்விரண்டும் பெருகியுள்ள இந்தியதேசமக்கள் எவ்வகையால் சீர்பெருவார்கள். இந்திய தேசம் எவ்வகையால் சிறப்படையும். இந்தியதேசப் பூர்வக்குடிகளை மதகர்வத்தினால் வழியில் நாட்டி வதைத்த வன்னெஞ்சர்களும் கழுவிலேற்றி வதைத்தக்கொடுபாவிகளும், கற்காணங்களில் வதைத்த துற்சாதனர்களே இத்தேசத்திற் பெருகி சாதி கர்வத்தையும் பெருக்கிக்கொண்டு ஆறுகோடி மக்களை அதனால் அழக்களித்து பல வகையாலும் அவர்களைத் துன்பப்படுத்தி தலையெடுக்க விடாத வழிவகைகள் ஏதேதோ அவைகள் யாவற்றையுஞ் செய்துகொண்டே வருகின்றார்கள்.
இத்தகைய சீவகாருண்யமற்ற மதகர்வமும், நீதிநெறியற்ற சாதிகர்வமும் பெருகுவதினாலுண்டாம் துன்பங்களையும் இடுக்கங்களையும் சகித்துக் கொண்டுள்ள ஆறு கோடி மக்களுள் விவேகமிகுத்தோர் யாவரும் அவிவேகிகளால் நடாத்தி வருஞ் சாதி வேஷத் தீங்குகளையும் சமயவேஷத் தீங்குகளையும் பொறுத்துக்கொண்டே தங்கள் சுகக்கேட்டை அநுபவித்து வருகின்றார்கள்.
நீதியும் நெறியுங் கருணையும் அமைத்த பிரிட்டிஷ் அரசாட்சியின் நோக்கமோ சருவ மக்களையும் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமற்ற நோக்குற்று காரியாதிகளை நடாத்திவருகின்றார்கள். இந்திய தேயத்தில் அவர்கள் ஆளுகைக்கு உட்பட்டக் குடிகளோ சாதிபோக்கு, சமயபோக்குகளையே நீதிபோக்கு நெறியின் போக்கென்றெண்ணித் தங்கடங்கள் அதர்மச் செயல்களையே மீண்டும் மீண்டும் அதிகரிக்கச் செய்துவருகின்றார்கள். இப்பொய்யாய சாதிவேஷத்தால் பெருங்குடிகளைத் தாழ்த்தி நசித்துவரும் தீவினையின் பிரதிபலன் ஏதேது செய்யுமோ என்பது இன்னுஞ் சில நாளில் விளங்கும்போலும். ஆட்டுக்கடாக்கள் பிந்துவதும் புலிகள் பதுங்குவதும் தங்கள் பாச்சலுக்கென்பதுபோல ஆறுகோடி மக்களும் சாதிவேஷக்காரர்கள் செய்யும் இடுக்கங்களுக்குங் கஷ்டங்களுக்கும் பின்னடங்கி நிற்பது பெரும்பாய்சசலுக்கென்றே தெரிந்து கொள்ளல் வேண்டும். அவ்வகை தெரிந்தோர் ஆறுகோடி மக்களையும் அன்பார்ந்த சோதரர் என்று எண்ணி தங்களைப் போலவர்களையும் சுகச்செயல் பெற்று நல்வாழ்க்கையில் நிலைக்கச் செய்தல் வேண்டும். அங்ஙனமின்றி தங்கள் சாதிகர்மமே கர்வம் மதகர்வமே கர்வமென மதோன்மத்தால் இருமாப்புற்று இத்தேசப்பூர்வக்குடிகளாம் ஆறுகோடி மக்களை இன்னுந் தாழ்த்தி இடுக்குறச் செய்வரேல் அதற்குப் பிரதிபலனாகட்ட பின்னும் முடிவது ஒற்றுமெக்கே பெருங்கேடாகும் போலும். ஆதலின் விவேகமிகுத்தோர் இராஜாங்கநோக்கையுங் குடிகளின் போக்கையுமறிந்து சீர்திருத்துவார்களென்று நம்புகிறோம்.
- 7:17; ஆகஸ்டு 20, 1913 -