அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/302-383

விக்கிமூலம் இலிருந்து

298. முனிசபில் கமிஷனர்கள் நியமனம்

இம்முனிசபில் கூட்டம் என்பதும் பிரிட்டிஷ் ராஜாங்கத்திற்கு உட்பட்டதேயன்றி வேறன்றாம். எவ்வகையாலென்பரேல், இராஜாங்கத்தோரே முனைந்து தங்கள் குடிகளுக்கு சுகாதாரமளிக்க வேண்டுமென்னுங் கருணையால் பிரிட்டிஷ் இராஜாங்க அதிகாரஸ்தர் ஒருவரை முதன்மெயாக நியமித்து அந்தந்த டிவிஷனிலுள்ளப் பெரியோர்களையே கூட்டத்தோராக ஏற்படுத்திக் கொள்ளும்படி செய்து குடிகளது தொகைகளைக்கொண்டே அவர்களுக்கு வேண்டிய வீதிவசதிகளையும், தீபவசதிகளையும், நீர்வசதிகளையும், கள்ளர் பயமில்லாமலும், துஷ்டர் பயமில்லாமலும், வாழும் படியான போலீஸ்காவல் வசதிகளையும், வியாதிகள் அணுகா சுகாதார வசதிகளையும், வியாதிகளுக்கு உட்பட்டோரை காத்து ரட்சிக்கும் வைத்திய சாலை, வசதிகளையும் அவ்வைத்தியசாலை வசதிகளிலும் புருஷர்களுக்கு வேறு இஸ்திரிகளுக்கு வேறு வசதிகளை வகுத்து தங்களைப்போல் குடிகளும் சுகச்சீர்பெற்ற வாழ்க்கையை அடைய வேண்டுமென்னும் சுகாதாரங்களை அளித்து வருகின்றார்கள்.

இத்தகைய சுகாதாரச் செயல்களுக்கு அந்தந்த டிவிஷன்களிலுள்ள ஒவ்வொர் பெரியோர்களையே தெரிந்தெடுத்துக் கொண்டு அவர்கள் மூலமாக தங்கள் தங்கள் குறைகளை விளங்கச்செய்து சுகம் பெற வாழ்கும் சுயாதிகாரங்களையுங் கொடுத்துள்ளார்கள் இவற்றுள், கமிஷனர்களாக நியமனம் பெறுவோர் தாங்களே குடிகள் வீடுகள் தோரும் வண்டிகளைக் கொண்டு போய் தங்கள் தங்கள் பெயர்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்களன்றி குடிகளே ஒன்றுகூடி ஆலோசித்து தங்கள் மனதுக்கிசைந்த கமிஷனர்களை நியமித்துக் கொள்ளுவது கிடையாது. அதனால் அன்று வண்டி கொண்டுவந்து குடிகளை அழைத்துப்போன கமிஷனரை மறுவருஷத்தில் தான் அவ்வீதியிற் காணலாமேயன்றி வேறு நாளில்லை. இவ்வகையாக நியமித்துக்கொண்ட குடிகளுக்கும் அக்கமிஷனர்களுக்கு மட்டிலும் சுகமிருப்பதாக விளங்குகின்றதேயன்றி மற்றய பெருங்குடிகளுக்கு அக்கமிஷனர்களால் சுகக்குறைவு உள்ளதென்றே விளங்குகின்றது.

எவ்வகையிலென்பரேல், இரண்டு வீடு மூன்று வீடு வைத்துக்கொண்டு பெருந்தொகை செலுத்துவோரே கமிஷனர்களை நியமித்துக் கொள்ளும் யோக்கியதையுடையவர்களாயிருக்கின்றார்கள். இவற்றுள் வரியை நியமிக்கும் உத்தியோகஸ்தர்களோ வீடுவீடாக சென்று அவர்கள் அவர்கள் மனம்போனவாறு இந்த வீட்டிற்கு மாதம் ஒன்றிற்கு பத்து ரூபாய் வாடகை வாங்கலாமென வகுத்து அதற்குத்தக்க வரிகளை விதித்து வசூல் செய்கின்றார்கள். வீட்டுக்குடையவர்களோ பத்து ரூபாயே வாடகை வாங்குவதாயினும் வரியை அதிகப்படுத்திவிட்டார்கள் வாடகை பன்னிரண்டு ரூபாய்க் கொடுக்கவேண்டும் அவ்வகைக் கொடாதோர் வீட்டைக் காலி செய்யவேண்டுமென்றும் வற்புறுத்துகின்றார்கள். இதுபோலவே ஐந்து ரூபாய் வாடகைக் கொடுத்துள்ளோரை ஆறு ரூபாய் கொடுக்கவேண்டுமென்றும் சில்லரைக்குடிகளில் பத்தணா வாடகைக் கொடுத்துள்ளோரை ஒரு ரூபாய்க் கொடுக்கவேண்டும் என்றும், ஒரு ரூபாய் வாடகைக் கொடுத்துள்ளோரை ஒண்ணரை ரூபாய்க் கொடுக்க வேண்டும் என்று உயர்த்தி தங்கள் தங்கள் இலாபங்களைப் பெருக்கிக் கொள்ளவும் வாடகைக் குடிகள் கஷ்டப்படவுமாயிருக்கின்றது. ரூபாயிற்கு நான்குபடியரிசி விற்கக்கூடிய பஞ்சகாலத்தில் குடிக்கூலிக்கிருக்கும் ஏழைகளின் கஷ்டமோ சொல்லத்தரமன்று. சொந்த வீடுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டிலும் பெருலாபமும் சுகவாதரவுமிருப்பதாக விளங்குகின்றதேயன்றி குடிக்கூலி அளித்து வாழும் ஏழை மக்களுக்கு லாபமும் கிடையாது சுகமுங் கிடையாதென்பதே திண்ணம்.

வியாபாரிகளோ வென்னில், தானியங்களையும் பல சரக்குகளை தங்கள் தங்கள் மனம்போல் விற்று பெரும் லாபங்களை அநுபவிக்கன்றார்கள். ஏழைக்குடிகளோ கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கஞ்சிக்கு அழுகின்றார்கள். அந்தந்த டிவிஷன்களுக்கென்று ஒவ்வோர் கமிஷனர்களிருந்தும் வாடகைகளின் குறைவு நிறைவுகளையும், வியாபாரிகளின் பெருக்க சிறுக்கங்களையும், குடிகளின் கஷ்ட நஷ்டங்களையுங் கண்ணோக்குவோரைக் காணோம். அதாவது வாடகைகள் விதித்துள்ளபடிக்கு வீடுள்ளோர் வாடகையை வசூல் செய்கின்றார்களா அதற்கு மேற்படி வசூல் செய்கின்றார்களா என்றும், வியாபாரிகளுக்கு விதித்துள்ளவரிகள்படிக்கு தானியங்களை விற்கின்றார்களா என்றும், குழாய் மூலம் சகல வீதிகளுக்கும் சரிவர வருகின்றதாவென்றும், தீபங்கள் சகல வீதிகளிலும் பிரகாசமுற்றெரிகிறதா என்றும், வீதிகள் யாவும் பள்ளமேடின்றி சமநிலையிலிருக்கின்றதா என்றும் பார்வையற்றிருப்பதினாலேயாம்.

எப்போது அந்தந்த, டிவிஷன்களுக்கு கமிஷனர்களாக ஒவ்வோர் பெரியோர்கள் ஏற்படுகின்றார்களோ அவர்கள் யாவரும் பொது நலங்கருதி குடிகள் யாவரையும் சுகாதாரத்தில் நிலைக்கச்செய்தல் வேண்டும்.

இவற்றுள் சொந்த வீட்டை உடையோர்களுக்கு மேலும் மேலும் சுகமும், குடிக்கூலி வீடுடையோருக்கு மேலும் மேலும் அசுகமுமாயிருக்குமாயின் அவைகளை அந்தந்த டிவிஷன் கமிஷனர்களே நன்காராய்து சுகச்சீரளிப்பார்களென்று நம்புகிறோம்.

ஐரோப்பியர்களே இருந்து ஆண்டு வரும் ஓர் தேசத்தில் முநிசபில் கமிஷனர்களாயுள்ளவர்களே முனைந்து குடிகளுக்கு சகல சுகாதாரங்களையும் அளித்து வருவதுடன் சொற்பலாபத்தைக் கருதி சகல வியாபாரங்களையும் நடத்தி வருகின்றார்களாம். அதனால் ஏழைமக்கள் யாவரும் அகச்சீர் பெற்றிருப்பதாக விளங்குகின்றது. அத்தகைய கருணையும் ஊக்கமும் முயற்சியும் நம்தேய கனவான்களுக்குண்டாகுமாயின் தேசமும் தேசமக்களும் எவ்வளவோ சீரும் சிறப்புமடையுமென்பது சொல்லத்தரமன்று.

- 7:12; ஆகஸ்டு 27, 1913 -