அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/303-383
299. ஐரோப்பியருக்குள் நிறைவேறும் முநிசிபாலிடியும் ஐரோப்பிய முநிசபில் கமிஷனர்களும்
ஐரோப்பியர்களே பெரும்பாலும் வாழக்கூடிய சில தேசங்களில் ஐரோப்பியர்களே கமிஷனர்களாயுள்ளவர்கள் தங்கள் சுயவேலை யாதொன்றிருந்தபோதிலும் அவைகளை நிறுத்திவிட்டு அதிகாலையில் எழுந்து தங்களுக்கு வகுத்துள்ள டிவிஷன்களுக்குச் சென்று அந்தந்த வீதிகளின் சுத்தங்களை சரிவரச் செய்து வருகின்றார்களா என்றும் அந்தந்த வீதிகளில் தீபங்கள் சரிவர எரிந்து வருகின்றதா என்றும், அந்தந்த வீதிகளில் நீர் வருத்துப்போக்குகள் சரிவரப் பாய்ந்து வருகின்றதா என்றும், இரவுகாலங்களில் போலீஸ் பந்தோபஸ்துக் காவல் சரிவரக் கார்த்து வருகின்றதா என்றும், அந்தந்த டிவிஷன் வைத்தியசாலைகளில் வந்துள்ள வியாதியஸ்தர்களுக்கு சிகிட்சையும் உணவும் மேற்பார்வையும் சரிவரப் பார்த்து வருகின்றார்களா என்றும், அந்தந்த வீதிகளும் பயிரங்க ரோடுகளும் வண்டிகள் போக்குவருத்துக்கும் மக்கள் போக்குவருத்துக்கும் மேடுபள்ளங்களின்றி வசதியாயிருக்கின்றதா என்றும் பார்வையிட்டு வருவது அவர்களது கருணையும் செயலுமாயிருக்கின்றதாம்.
குடிகளுக்கு வேண்டிய எந்ததெந்த சுகாதாரங்களை ஒட்டி வரி வசூல் செய்கின்றார்களோ அந்தந்த சுகாதாரங்களையே மிக்கக் கவனித்து நீர்வசதிகள் கெட்டிருக்குமாயின் உடனுக்குடன் அவற்றை சீர்திருத்தியும், தீபவசதிகள் கெட்டிருக்குமாயின் உடனுக்குடன் சீர்திருத்தியும், வீதி வசதி கெட்டிருக்குமாயின் உடனுக்குடன் சீர்திருத்தியும், சுகாதாரங்களை அளித்து வருவதுடன் விரகுகள் கிடையாமல் மக்கள் சீரடைவார்களாயின் முநிஸ்பாலிட்டியாரே காடுகளை குத்தகையெடுத்து அந்தந்த டிவிஷனில் விறகு தொட்டிகளை ஏற்படுத்தி குடிகளுக்கு சொற்ப லாபத்திற்கு விற்று சுகமளிக்கின்றார்களாம். மற்றுந் தானியங்களை வியாபாரிகள் கலப்புற்றும் அதிகலாபம் வைத்தும் குட்டிகளை நஷ்டப்படுத்துவார்களாயின், முநிசிபாலிட்டியாரே அந்தந்த டிவிஷன்களில் மண்டிகளை ஏற்படுத்தி, பலதேச தானியங்களைத்தருவித்து குடிகளுக்கு சொற்ப லாபத்திற்கு விற்று சுகமளித்து வருகின்றார்களாம். மற்றும் பல சரக்குகளிலும் நெய்களிலுங் கலப்புற்று அதிக லாபம் வைத்து குடிகளை நஷ்டப்படுத்துவார்களாயின் முநிசிபாலிட்டியாரே முநிந்து பல தேச பலசரக்குகளையும் நெய்களையுந் தருவித்து சொற்ப லாபத்திற்குக் குடிகளுக்கு விற்று சுகமளித்து வருகின்றார்களாம். அத்தகையக் கருணை மிகுந்தச் செயலால் வரிசெலுத்துங் குடிகள் யாவரும் தங்கள் தங்கள் வரிகளை ஆனந்தமாக செலுத்தி சுகச்சீரடைவதுடன் முநிசிபாலிட்டியாருக்கு நன்றியறிந்த வந்தனமும் செலுத்தி வருகின்றார்களாம்.
அவ்வியாபாரங்களில் உண்டாம் சொற்ப லாபங்களைக் கொண்டு ஏழைகளாயுள்ள கூன்குருடு, சப்பாணிகளுக்கு தங்கும் வசதிகள் ஏற்படுத்தி ஊணுமுடையும் அளித்துக் காப்பாற்றியும் வருகின்றார்களாம். இவர்களல்லோ குடிகளைக் காக்கும் கருணையும் பட்சாதாபமும் உடையவர்களாவர். இத்தகையப் பட்சாதாபமும் கருணையுமுண்டாவதற்குக் காரணம் யாதெனில் ஏக பாஷையும் ஏக மதமும் ஏக காருண்யமுமேயாகும்.
இத்தேசத்திலோ பல சாதியும் பல பாஷையும், பல மதமுமாயுள்ளவர்களாதலின் குடிகளை சீர்திருத்தி சுகாதாரமளிக்கும் கமிஷனர்களாகத் தோன்றியும் ஐரோப்பியர்களுக்குள் தோன்றுங்கருணை அரிதாயிருக்கின்றது. காரணமோ சாதிபேதமும் சமயபேதமுமேயாகும். ஒரு சாதியோரைக் கண்டால் மற்றொரு சாதியார் முறுமுறுத்தலும், ஒரு சாதியார் வீட்டில் மற்றொரு சாதியார் புசிக்க அருவெறுத்தலுமாய்ப் பொறாமெச் செயல்களோடு ஒரு மதத்தோரைக் கண்டால் மற்றொருவர் சீறுதலும், மதத்திற்கு மதத்தோர் சண்டையிட்டுக் கோர்ட்டுக் கச்சேரிக்கு ஏறுதலுமாயச் செயல்களே அன்பு ஒற்றுமெய் இரண்டையுங் கெடுத்து தங்களுக்குள் தாங்களே சீர்கெடுவதுடன் தேச சீர்திருத்தத்திற்காக தாங்களெடுக்கும் முயற்சிகளுங் குன்றி சீர்கெடுகின்றது. இத்தேசத்துள் சாதிபேதம் உள்ளளவும் நீதி போதமும், மதபேதமுள்ளளவும் இதபோதமும் மாறுகொண்டே நிற்குமாதலால் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரே முறிந்து குடிகளின் சுகாதாரத்தை நோக்குவார்களாயின் சகலகுடிகளும் சுகச்சீர் பெற்று ஆனந்தத்தில் நிலைப்பார்கள். காரணமோ வென்னில் பிரிட்டிஷ் ஐரோப்பிய துரை மக்களுக்கு சாதிபேதமுங் கிடையாது, மதபேதமுங் கிடையாது அவர்களால் நடாத்துங் காரியாதிகளோ தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமற்றே நிற்கும். ஆதலின் சருவ சீர்திருத்தத் தலைவர்களும் ஐரோப்பியர்களாயிருப்பார்களாயின் சகல சாதி மக்களும் சுகச்சீர் பெற்று வாழ்வார்களென்று நம்புகிறோம்.
- 7:13; செப்டம்பர் 3, 1913 -