உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/308-383

விக்கிமூலம் இலிருந்து

304. வித்தை புத்தி ஈகை சன்மார்க்கம் நிறைந்த மேலாய பிரிட்டிஷ் ராஜாங்கம் தோன்றியும் நமது தேசத்தோர் கற்றுக் கொண்ட மேலாய வித்தையைப் பார்த்தீர்களா

பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் இத்தேசத்தை ஆளுகைசெய்ய முயன்றது முதல் இத்தேசங் கெட்டழிவதற்கேயிருந்த சாதிபேதக் கேடுபாடுகளையும், மதபேதக் கேடுபாடுகளையும், நீர்வசதிக் கேடுபாடுகளையும், நிலவசதிக் கேடுபாடுகளையும், கல்வியழிவுற்றுவந்த கேடுபாடுகளையும், வீதிவசதிகளற்றிருந்த கேடுபாடுகளையும், நன்குணர்ந்து அவர்களுக்குள்ள வித்தையின் மிகுதியாலும், புத்தியின் மிகுதியாலும், ஈகையின் மிகுதியாலும், சன்மார்க்க மிகுதியாலும் தேசத்தையுந் தேசமக்களையுஞ் சீர்த்திருத்தி சகலசாதியோரும் நாகரீகத்தில் முன்னேறும்படியானக் கல்வி இலாக்காக்களையும், இரயில்வே பாதைகளையும், கடிதப்போக்குவருத்துகளையும் டெல்லகிராப்புகளையும் உண்டுசெய்துவரும் சுகாதார வித்தைகளில் இரயில்வேவித்தை எளிதானதன்று, இஸ்டீமர்வித்தை எளிதான தன்று, டெல்லகிராப் வித்தை எளிதானதன்று. போட்டகிராப் வித்தை எளிதான தன்று. லெத்தகிராப்வித்தை எளிதான தன்று, போன கிராப்வித்தை எளிதான தன்று. தற்காலம் அவர்களால் குடிகளுக்குக் கற்பித்து வரும் விவசாய வித்தைகள் எளிதான தன்று. நெசிவு வித்தைகள் எளிதான தன்று. மற்றும் அனந்தவித்தைகளை விருத்தி செய்து இத்தேசமக்களுக்குக் கற்பித்து அவர்களை சுகசீவனஞ் செய்யும் வாழ்க்கையில், விடுத்திருக்கின்றார்கள். இத்தியாதி மேலாயவித்தைகளில் இத்தேசத்தோர் எவ்வித்தைகளிலும் மேலாகப் பிரகாசியாது (வெடிகுண்டு) வித்தையில் மேலாகப் பிரகாசிப்பதில் இவர்களது வஞ்சநெஞ்ச வித்தையும், கொழுக்கட்டை புத்தியும், ஈகையற்ற லோபமும், துன்மார்க்கசேட்டையும் நிறைந்த நிலை சொல்லாமலே விளங்கிவருகின்றது. இத்தகைய துன்மார்க்க வித்தைகளை மட்டிலுங் கற்றுக்கொண்டு சமயநேர்ந்த போது மக்களை வதைத்துங் கொன்றும் வரும் படுபாவிகள் வாசஞ்செய்யும் இடங்களிலுள்ள குடிகளுக்கு ஆறுதலுண்டாமோ. அவர்கள் சுகபுசிப்பை புசிப்பரோ, சுகநித்திறைக் கொள்ளுவரோ இல்லையே. மனிதன் ஓர் வித்தையைக் கற்றுக் கொள்ளுவானாயின் அவ்வித்தையின் பயனால் தான் சுகசீவனமுற்று தனசம்பத்தை அடைவதுடன் தன்னை அடுத்தோர்களும் தனசம்பத்தையடைந்து சுகசீவ வாழ்க்கைப் பெற்றிருக்கின்றார்கள். அத்தகைய விஷ்டகாமிய வித்தையைக் கற்காது துஷ்டகாமிய வித்தையாம் வெடிகுண்டு வித்தையைக் கற்றுக்கொண்டு வீணே ஒருவரை வதைத்துந், துன்புறச் செய்துங், கொன்றும் வருவதினால் அவ்வித்தையையுடையோன் வீடு வீடாக பயந்து ஒளிந்து சுகநித்திறையற்று தன்னைக் கண்டோர் வதைப்பார்கள், துன்புறுத்துவார்கள், கொல்லுவார்கள் என்று ஒடிங்கி ஒளிந்து திரிவதுடன் தன்னை அடுத்தோரும் பயந்து சுகப்புசிப்பற்றும் சுக நித்திறை அற்றும் ஏக்கமுந் திகிலுங் கொண்டிருப்பார்களன்றி ஏதொரு சுகமுமடையமாட்டார்கள். இத்தகைய துஷ்டவித்தையைக் கற்றுள்ளோனை மற்றய நன்மார்க்கர்களுஞ் சேர்ப்பாரோ. அவ்வகை சேர்த்து வாழும் மக்களும் சுகவாழ்க்கையுற்றிருப்பரோ, இல்லை. ஒருவன் கற்றுள்ள துஷ்டவித்தையால் ஊராரே நடுக்குற்று திகைக்கவும் ஒருவருக்கொருவர் பேசுதற்கு பயங்கொள்ளவு மாகிவிடுகின்றதே. மனிதன் எப்போதுந் தனக்கு சுகம் வேண்டுமென்று கோறுவானேயன்றி எக்காலுமுள்ள ஓயாதுக்கத்தைத் தேடிக்கொள்ளமாட்டான். ஆதலின் மனிதன் கற்கவேண்டிய வித்தையால் தானும் சுகமுற்று தன்னுடைய சந்ததியோரும் சுகமுற்று நல்வாழ்க்கையை அடைதல் வேண்டும். அங்ஙனமின்றி சகலரும் அஞ்சக் கூடியதும் சகலராலும் நிந்திக்கக்கூடிய துன்மார்க்க வித்தைகளைக் கொண்டு அரசுகுழாங்களுக்குத் துரோகிகளாகி அல்லலடைவது அழகல்லவே. இஃதோர் மானுஷீக தன்மமல்லவே. எப்போது உலகத்தில் மனிதனென்னும் உருகொண்டு தோன்றுகின்றானோ அவன் சகலருக்கும் உபகாரியாக விளங்கல் வேண்டும் அங்ஙனம் உபகாரஞ்செய்யும் பொருளற்றவனாயிருப்பானாயின் சகலருக்கும் நல்லவனாக நடந்துக்கொள்ளல் வேண்டும். ஓர் சீர்திருத்தத்திற்கு முயல்வானாயின் மற்றவருக்கு ஏதொரு துன்பமணுகாமற் கார்த்து விளக்கவேண்டியவற்றை செவ்வனே விளக்கியும் அரசருக்குத் தெரிவிக்க வேண்டியவற்றை அன்புடன் தெரிவித்தும் உள்ளக் குறைகளை விளக்கிவருவதே சீர்திருத்தங்களுக்கழகாம்.

பிரிட்டிஷ் அரசாட்சியோரால் கற்பித்து வரும் மேலாய வித்தைகளைக் கற்று தேசத்தையும் தேசமக்களையுஞ் சிறப்படையச் செய்வதே வித்தையாம். அவ்வகைக்கல்லாது துன்மார்க்க வித்தைகளால் வெடிகுண்டு வித்தை, துப்பாக்கி வித்தையைக்கையாடுவதாயின் இத்தேசத்தோரை வித்தையற்ற வஞ்சக வீணர்களென்றே கருதுவார்கள். எக்காலும் சன்மார்க்கம் நிறைந்த இந்திர தேசத்தை துன்மார்க்கர் தேசமென்னும் பேரெழாமற் கார்ப்பதே சிறப்பாம்.

இத்தேசத்தோரில் ஒருவன் இரயில்வே வித்தையை நன்றாய்க் கற்றுக் கொண்டிருக்கின்றான், டெல்லகிராப் வித்தையை நன்றாய் கற்றுக் கொண்டிருக்கின்றான், லெத்தகிராப், போனோகிராப் வேலைகளை நன்றாய்க் கற்றுக்கொண்டிருக்கின்றான், விவசாய வேலைகளில் நன்கு தேர்ந்திருக்கின்றான், நெசிவு வேலைகளில் நன்கு பழகியிருக்கின்றான் என்று தேசத்தோர்க் கேழ்விப்படுவார்களாயின் தேசம் சிறப்படையும், மக்கள் சுகம் பெறுவார்களென்று புகழடைவார்கள். இத்தேசத்தோருள் ஒருவன் வெடிகுண்டு வித்தைக் கற்றுக்கொண்டான், துப்பாக்கி வித்தையை கற்றுக்கொண்டானென்று கேள்விப்பட்டாராயின் துக்கமும் பயமுங் கொள்ளுவதுடன் அஃது ஆட்கொல்லி வித்தையாச்சுதே அது உதவாது, உதவாதென்றே இகழ்ச்சிபடுத்துவார்கள். ஆதலால் இத்தேசமக்கள் இகழ்ச்சி வித்தைகளைக் கற்காது புகழ்ச்சி வித்தைகளைக் கற்பதும் கையாளுவதுமே அழகாம்.

- 7:18: அக்டோபர் 8. 1913 -