உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/310-383

விக்கிமூலம் இலிருந்து

306. இந்திய தேசத்தின் விவசாயக் கேட்டிற்கும் வித்தியா கேட்டிற்குங் காரணம்

இந்திய தேசத்தில் வடயிந்தியமென்றுந் தென்னிந்தியமென்றும் இருவகையுண்டு. இவற்றுள் வடயிந்தியர்கள் வித்தியா விருத்தியிலும் விவசாய விருத்தியிலுங் கூடியவரையில் பிரிட்டிஷ் துரைமக்கள் செய்கைகளைப் பின்பற்றி அனந்த மில்ஸ்களும் அனந்தமாயத் தரிகளும் விவசாய விருத்திக் கருவிகளும் உழைப்பாளிகளும் நாளுக்குநாள் பெருகி தேச சிறப்பும் மக்கள் சுகமுமடைந்து வருகின்றார்கள். அங்கும் சில நாட்களுக்கு முன் சாதி வித்தியாசம் பாராட்டி வந்துள்ள இந்துக்களென்போர் இந்தியராம் பௌத்தக் கூட்டத்தோர் யாவரும் தங்கள் பொய்யாய சாதிபேதக்கட்டுகளுக்கும் சமய பேதமதப் புறட்டுக்கும் சம்மதியாது எதிரிகளாகவே இருந்தபடியால் அவர்கள் யாவரையும் சண்டாளர்கள் என்றும் தாழ்ந்த சாதியோர் என்றும் வகுத்து அவர்களை முன்னேறவிடாதப் பல பாடுகளைப் படுத்திவந்தார்கள். அவர்கள் யாவரும் ஒன்று கூடி ஓர் சென்ஸெஸ் காலத்தில் நீதிநெறியமைந்த ராஜாங்கத்தோரை நோக்கி எங்களை சண்டாளர் என்று சென்ஸசில் குறிக்கப்படாதென முறையிட்டதின்பின் சாதிபேதமுள்ள இந்துக்களென்போரே முயன்று அவர்களை நாமசூத்திராள் என்றழைக்கலாமென்றபோது அப்பெயரையும் அவர்கள் சட்டை செய்யாது தங்கள் பூர்வ நிலையையுணர்ந்து பௌத்தர்களெனக் கண்டறிந்து தற்காலம் அறுபதினாயிரத்திச் சில்லரைபேர் பௌத்தர்களாகித் தங்களுக்கென்று மடங்கட்டிக் கொண்டும் தங்களுக்குள்ளாகவே குருக்களை நியமித்துக் கொண்டும் கருணைதங்கிய மிஷனெரிமார்களின் கலாசாலையிலும் தங்களே ஏற்படுத்திக் கொண்ட கலாசாலைகளிலுங் கற்றுத் தேர்ந்து மாஜிஸ்டிரேட்டுகளாகவும் ஜர்ஜ்ஜிகளாகவும், பாரிஸ்டர்களாகவும், கவுன்ஸல் மெம்பர்களாகவும் நியமனம் பெற்று வரும் அப்பௌத்தர்களானோர் யாவருஞ் சுகமுற்ற வாழ்க்கையடைந்து வருகின்றார்கள். அதினினும் இன்னோர் கட்டுப்பாடு அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவைகள் யாதென்னிலோ தங்களைச் சண்டாளரென்றும் தாழ்ந்த சாதியோரென்றுங் கூறி அலைக்கழித்து வந்த சாதியோடும் எவ்வகை வேலையிருப்பினும் அவர்களிடம் போய் செய்யவுங் கூடாது அவர்களுக்கு அடங்கவுங் கூடாது என்பதே முடிவான நிபந்தனையைச் செய்துக் கொண்டு சகல சாதியோரைவிட வித்தையிலும் விவசாயத்திலும் சிறந்தே வருகின்றபடியால் வடயிந்தியம் வித்தையிலும் விவசாயத்திலும் சிறந்தே வருகின்றது. தென்னிந்தியாவிலோ வித்தையிலும் விவசாயத்திலும் முனைந்து உழைப்பவர்களும் சோம்பலற்றவர்களும் இந்துக்களென்போரால் தாழ்ந்த சாதியென்று வகுக்கப்பட்டுள்ளவர்களே யாவர்.

அவர்களோ இச்சாதி வேஷமிட்டுள்ளோர் மத்தியில் எத்தகையாக விளங்குகின்றார்களென்னில் தாயையேனுங் கழுதையையேனுங் குதிரையையேனும் மாட்டையேனுந் தங்களருகில் வைத்துக் கொண்டு தடவிகொடுப்பார்கள். இத்தாழ்த்தப்பட்டுள்ளவனைக் கண்டவுடன் சீறிச்சினந்து தூரவிலகச் செய்து வருவதுடன் அவர்களுக்கு வெளுத்து கொடுக்கும் வண்ணார்களை இவர்களுக்கு வெளுக்கவிடாமலும், அவர்களுக்கு சவரஞ்செய்யும் அம்மட்டர்களை இவர்களுக்குச் செய்யவிடாமலும், அவர்கள் மொண்டு குடிக்குந் தண்ணீரை இவர்களை மொண்டு குடிக்கவிடாமலும், கெடுத்து அசுத்தமுண்டாகச் செய்து, கொல்லுவதற்கான வழிவகைகளைத் தேடுவதுடன் தங்கள் விவசாயத்திற்குப் பண்ணையாட்களாக சேர்ந்துள்ளவர்களையோ நாளெல்லாம் உழைத்தபோதினும் அரைவயிற்றுக்கேனுங்கஞ்செட்டாது வதைத்து கொல்லாமற் கொல்லும் வழிவகைகளைத் தேடுவார்களன்றி அவர்களைச் சுகதேகிகளாகவும் சுத்ததேகிகளாகவும் உலாவக் கண்ணால் பார்க்கவே சகியார்கள். இத்தகையக் கொடுநெஞ்சர் பார்வையிலும் படுபாவிகள் மத்தியிலும் விவசாயிகள் சீர்குலைந்து சீரழிந்து பல தேசங்களுக்குஞ் சென்றவர்கள் போக எஞ்சியுள்ளவர்களோ எங்கும் போவதற்கில்லாமல் வஞ்சகர்கள் ஒப்பந்தங்களில் சிக்கிக் கொண்டு பாம்பின் வாய்ப்பட்ட தேரைபோல் தயங்கி நிற்கின்றார்கள்.

இத்தகைய காலத்தில் நீதியும் நெறியுங் கருணையுமைந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் இத்தென்னிந்தியாவின் விவசாய விருத்தியும் வித்தியா விருத்தியும் பலுகவேண்டுமென்று கருதி வேண பணவுதவியும், கருவிகளுதவியும், விவசாயங்களை விளக்கிக்காட்டும் பத்திரிகைகளுதவியும், தானியவுதவியுஞ் செய்து அதே கண்ணோக்கத்தில் உழைத்து வருகின்றார்கள். அவ்வகை நோக்கம் வைத்தும் பெரும்பாலும் பூமிக்குடையவர்களாயிருப்போர் சாதிப்போர்வையை மூடிக்கொண்டிருப்பவர்கள். அவர்களுள் பெரும்பாலோர் தங்களுக்குப் பிள்ளைகளிருக்குமாயின் தங்கள் பூமியின் விருத்தி வழியில் நோக்கவிடாது இங்கிலீஷ் பாஷையைக் கற்று இராஜாங்க உத்தியோக விருத்தியையே நாடவேண்டுமென்றே அநுப்பிவிடுகின்றார்கள், சிலரோ தேசச்சிறப்பையும் மக்கள் விருத்தியையும் நாடாது தங்கள் சுயப்பிரயோசனத்தை நாடி உள்ள பூமிகள் யாவற்றிலும் மணிலாக் கொட்டை என்னும் வேருகடலைப் பயிற்றையே விருத்திசெய்து வேறு தேசங்களுக்கனுப்பும் முயற்சியிலேயே நின்றிருக்கின்றார்கள். ஏதோ சிற்சிலவிடங்களில் இராஜாங்கப் போதனைப்படிக்கு விவசாயத்தை விருத்திசெய்த போதினும் உழைக்கும் பண்ணையாட்களுக்கு அரைவயிற்றுக் கஞ்சிக்குமேல் முழுவயிற்றுக்கஞ்சு கிடையாது. இலட்ச கணக்கான ஏக்கர் பூமிகளை இலட்ச கணக்கான மக்கள் உபயோகித்து வந்தும் அதில் நாலைந்து பெயரே வெளிதோன்றி ஒற்றை நாற்று நடுவின் பயனையும் இரட்டை நாத்து நடுவின் குறைவையுங் கண்டெழுதி யிருக்கின்றார்கள் மற்றையோர்கள் யாவரும் ஏழை உழைப்பாளிகள் ஏது கெட்டு நாசமடைந்தாலும் அடையட்டும் தங்கள் புசிப்பிற்கும் இராஜாங்கத்தோர் வரியிறைக்கும் போதுமான விளைவு விளைந்தால் போதுமென்னும் திருப்திகொண்டு திண்டு திண்ணையில் சார்ந்திருக்கின்றார்கள். பூமிக்கென்று பண்ணையாட்களே முனைந்து வெறுமனேயுள்ள பூமிகளை ராஜாங்கத்தாரிடம் கேட்பார்களாயின் குறைந்த கூலிக்குத் தங்களுக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள் என்றெண்ணி கேட்ட பூமி அவர்களுக்குக் கிடைக்கவியலாத வழிவகைகளைத் தேடிவிடுகின்றார்கள். ஏதோ ஒரு வகையால் பூமி கிடைத்து பயிறுகளை ஓங்கச் செய்வார்களாயின் அப்பயிறுகள் ஓங்காத தீங்குகளைச் செய்து விடுகின்றார்கள். அதற்கும் அஞ்சாது விருத்தி பெறுவார்களாயின் எல்லோரு மொன்று சேர்ந்து அத்தலைவனையே கொல்ல முயலுகின்றார்கள். அவ்வகையாகவே இராகவன் என்னும் ஒருவனை கொன்றும் இருக்கின்றார்கள். இத்தியாதி கஷ்டங்களால் பூமியின் உழைப்பாளிகளும் வித்தையில் ஊக்கமுள்ளோரும் நசிந்து வருகின்றார்கள். அதனால் வித்தியா விருத்திக்குக்கேடும் விவசாய விருத்திக்குக் கேடுமுண்டாகி தென்னிந்தியம் ரூபாயிற்கு மூன்றரைபடியரிசி விற்கும் நிலையில் வந்துவிட்டது.

இத்தகைய பெரும் பஞ்சகாலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரின் கருணையால் வகுத்துள்ள இரயில்வேக்களும் இஸ்டீமர்களும் தொழிற் சாலைகளாம் அச்சியந்திரங்களும், மில்லுகளும், ஷாப்புகளும் இல்லாமற் போயிருக்குமாயின் அந்தந்த தேசத்திலுள்ள மக்களும் மாடு கன்றுகளும் அங்கங்கே மடிந்து மண்ணாயிருப்பார்களன்றி மனிதவுருவாகத் தோன்றார்கள். ஆகலின் தாழ்ந்த சாதியார், தாழ்ந்த சாதியாரென்று வகுத்து பொறமையால் நசித்துவருஞ் செயல்களே வித்தையையுந் தாழ்த்தி விவசாயத்தையந் தாழ்த்திக் கேடடையச் செய்துவருகின்றதென்பதை தென்னிந்திய வித்தியா விவேகிகள் நோக்குவாரென்று நம்புகிறோம்.

- 7:21: அக்டோபர் 29, 1913 -