உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/313-383

விக்கிமூலம் இலிருந்து

309. சௌத் ஆப்பிரிக்கா சாக்கைய புத்த சங்கத்தோருக்கு அறிக்கை

சாக்கைய புத்த சோதிரர்களே சற்று கவனியுங்கள் தாங்கள் அனுப்பியுள்ளப் பத்திரிகைகளாலும் இவ்விடம் நடைபெறும் பத்திரிகைகளாலும் செளத் ஆபிரிக்காவில் அத்தேச வாசிகளுக்கும் இந்தியாவிலிருந்து குடியேறி உள்ளவர்களுக்கும் நடந்தேறிவரும் வாக்கு வாதங்களையும் கஷ்டங்களையும் அறிந்தே வருகின்றோம். ஆயினும் நீங்களும் அவ்விடங் குடியேறி பௌத்தர்களாகிவிட்டபடியால் உங்களுக்கு எக்காலும் ஜகத்தீசனாம் புத்த குருவின் விசுவாமும் இராஜ விசுவாசமும் மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் அன்பும் இருந்தே தீர வேண்டும்.

ஏதோ சிலர் இராஜாங்க சட்ட திட்டங்களை எதிர்த்து வாதிடினும் நீங்கள் அவர்களுக்குள் சம்மந்தப்படாது இராஜ விசுவாசத்தில் சீவிப்பதே அழகாம் அவர்களோ ஈட்டி முனைமீது கோபித்து உதைப்பதுபோல் இராஜாங்கத்தோரை எதிர்த்து நிற்கின்றார்கள். அதனால் யாது சுகமுமடையார்கள், துக்கத்தையே அநுபவிக்க நேர்ந்துபோம். நெருப்பால் நெருப்பையவிக்க நோக்குவது மேலும் மேலும் நெருப்பை உண்டு செய்வதாகும். நெருப்பை நிராலவிக்க வேண்டும். கோபத்தால் கோபத்தைத் தணிக்கலாகாது, கோபத்தை சாந்தத்தால் தணிக்கலாம். அவைபோல் இராஜாங்கததோர் சட்ட திட்டங்களுக்கடங்கி அவர்களுக்கு அன்பையும் ஆறுதலையும் உண்டுசெய்து வேணவற்றை அவர்களுக்கு விளக்கி சாந்தத்தோடு பெற்றுக்கொள்ளலாம் அவற்றைவிடுத்து ஒண்டவந்தகுடி ஊர்க்குடியை ஓட்டுவது போல் அவ்விடம் பிழைக்கபோனவர்கள் இராஜாங்கத்தை எதிர்ப்பது அழகாமோ, நீதியாமோ. இராஜாங்கத்தோர் தங்கள் ஆலோசனையில் எந்தெந்தக் குடிக்களை தங்கள் ஊரில் நிலைக்கச் செய்யலாம் எந்தெந்தக் குடிகளை நிலைக்கச் செய்யலாகாது என்பது முடிவாகும். அம்முடிவை நடாத்தத்தக்க சட்ட திட்டங்களையும் வகுப்பது இயல்பாம்.

இத்தகைய ஆலோசனையை இந்திய தேசத்தார் ஆதியில் ஆலோசித்து நடாத்தாததினால் இந்தியா யென்னக் கேட்டிற்கு வந்திருக்கின்றது என்பதும், இந்தியர்களாம் பூர்வ அரசர்களும் ஞானிகளும் பூர்வக் குடிகளும் தாழ்ந்த சாதியார், தாழ்ந்த சாதியாரென வகுக்கப்பட்டு கட்டத் துணிக்கும் குடிக்கக் கூழுக்குமின்றி கோலுங் குடுவையும் எலும்புந் தோலுமாகி சுத்த நீரை மொண்டு குடிக்ககூடாத சுவாதீனமற்று, சகலராலுந் தீண்டக்கூடாதவர்கள் தீண்டக் கூடாதவர்களென்னுமிழிவு பெற்று நாணமுற்றலைவதே போதுஞ் சான்றன்றோ.

ஒரு தேசத்தில் பிச்சை இரந்துண்டே குடியேறி பெரிய சாதியோராகப் பிரபல முற்று சகல சுவாதீனர்போல் விளங்குங்கால், கூலிவேலை செய்துக் கொண்டே குடியேறியவர்கள் சற்று வலுத்து விடுவார்களாயின் இராஜாங்கத்தோருக்கும் அத்தேசத்திற்கும் ஏதே தீங்குண்டாமோ என்னும் அச்சமுண்டாமன்றோ, பெருத்தவோர் இராட்சிய பாரத்தைத் தாங்கி நிற்கும் அரசர்களுக்கும் மந்திரிவாதிகளுக்கும் உலக சரித்திரம் தெரியாதோ, தெரிந்தோரேயாவர். அந்தந்த தேச சரித்திரங்களையும் அந்தந்த தேச மக்களது குணாகுணங்களையுஞ் செயல்களையும் நன்கறிந்தோராதலின் தங்கள் தேசத்தையும் தேச மக்களையும் சீர்திருத்தி எக்காலும் சுகம்பெற்றுய்யும் வழிவகைகளைத் தேடிக்கொள்ளுகின்றார்கள்.

அத்தகைய ராஜாங்க சீர்திருத்த சட்டதிட்டங்களை நீங்கள் எதிர்க்காது அவைகளுக்கடங்கி இராஜவிசுவாசமுற்று உங்கள் தொழில்களை நடாத்தி வருவீர்களாயின் அவ்விராஜாங்கத்தோர்களைக் கொண்டே நீங்கள் சகல சுகமும் பெற்று ஆனந்த வாழ்க்கை அடைவீர்கள். இராஜாங்கத்தை எதிர்ப்போர் கூட்டுரவிலும் தனியுரவிலும் நீங்கள் சேராது குரு விசுவாசத்திலும் இராஜ விசுவாசத்திலும் நீதி நெறி ஒழுக்கத்திலும் நிலைத்திருப்பீர்களாயின் துக்கமென்பதற்று சுகவாழ்க்கைப் பெறுவீர்களென்பது திண்ணம் திண்ணமேயாம்.

- 7:24: நவம்பர் 19, 1913 -