அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/319-383

விக்கிமூலம் இலிருந்து

315. இராஜாங்க விஷயங்களையே பேசித் திரியுங் காங்கிரஸ் கமிட்டியும் மற்ற கூட்டங்களும் எற்றிற்கு

இந்தியதேசத்தில் இந்துக்களென்போர் கூடிவருங் கூட்டங்கள் யாவற்றிலும் இராஜாங்க சட்டதிட்ட விஷயங்களையே பெரும்பாலும் பேசிக்கொண்டே வருகின்றார்களன்றி தேச சிறப்பையுந் தேசமக்கள் சுகா சுகங்களையுங் கருதினவர்களாகக் காணோம். அதன் காரணமோ வென்னில் இக் கூட்டங்களைக் காட்டிவருவோர் யாவரும் பெரும்பாலும் நூதனமாகக் குடியேறியவர்களே யாதலின் அவர் இத்தேச சிறப்பைப்பற்றியேனும் தேசமக்கள் சுகா சுகங்களைப்பற்றியேனுங் கருதாது தங்கள் சுகத்திற்காய வழிவகைகளையும் தாங்களே ராஜாங்கத்தை ஆளவேண்டுமென்னும் பேரெண்ணத்தையுங் கொண்டு பலவற்றாய வார்த்தைகளை சமயோசிதமாகப் பேசிக்கொண்டே வருகின்றார்கள்.

அவற்றுள் ஒன்றை இவ்விடம் ஆலோசிப்போமாக. அதாவது தற்காலம் இராஜதுரோகத்தைப் பரவச்செய்வதற்கு ஏதுவாய வார்த்தைகளையும் இராஜாங்கத்தைப் புறங்கூறும் வார்த்தைகளையும் பத்திரிகைகளில் எழுதிப் பிரசுரிப்போரை தண்டிக்கவேண்டுமென்னும் சட்டத்தையேற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். இக்கூட்டத்தோர்களோ அச்சட்டத்தை எடுத்து விடவேண்டுமென்று பெரும் பேச்சாகப் பேசிவருகின்றார்கள். இதன் கருத்தை யோசிக்குங்கால் சமயம் நேர்ந்தபோது இராஜாங்கத்தைத் தூற்றிக் குடிகளுக்கு இராஜத்துவேஷத்தை உண்டு செய்யவேண்டும் என்பதாகவே விளங்குகிறதன்றி இராஜ விசுவாசத்தை வளர்த்துக் குடிகளுக்கு சுகமளிக்குங் கருத்தாகவே விளங்கவில்லை. அத்தகையாயக் கருத்துடையவர்களாயின் அச்சட்டத்தை இன்னும் வலுபெறச் செய்து பத்திரிகைகள் யாவற்றிலும் தேசச்சிறப்பும் மக்கள் சுகமுமடையும் அறிவின் விருத்தி, வித்தியா விருத்தி, விவசாய விருத்தியைப் பரவச்செய்யும் வழிவகைகளைத் தேடுவார்கள். அங்ஙனமின்றி இராஜத்துரோக நிந்தைகொண்டு நடைபெறும் பத்திரிகைகளை அடக்க வேண்டுமென்று வகுத்து வைத்துள்ள சட்டத்தை எடுத்துவிட வேண்டும் என்று முயல்வதே தங்கள் உட்கருத்தை விளக்குகின்றதன்றோ, வீதிகளில் மலோபாதை ஜலோபாதைக்கு ஒதுங்குவோரை தண்டிக்க வேண்டுமென்று சட்டத்தை வகுத்து வைத்திருக்கின்றார்கள். அச்சட்டத்தை மீறி ஜலோபாதை மலோபாதைக்கு ஒதிங்கி வீதியை அசுத்தப்படுத்துவோரை தண்டித்து சுகாதாரமளித்து வருகின்றார்களன்றி அவ்வகை ஒதுங்காதோரை ஏதேனுந் கண்டிக்கின்றார்களோ இல்லையே. அவைபோல் இராஜ துரோகங் கொண்டு வரையும் பத்திராதிபர்களை தெண்டிக்க வேண்டும் என்று அச்சட்டங்தோன்றியுள்ள தேயன்றி இராஜ விசுவாசிகளை அச்சட்டம் ஒன்றுஞ் செய்யாவே. மலோபாதைக்கு ஒதிங்கினும் ஜலோபாதைக்கு ஒதிங்கினும் போலீசார் பிடித்துப் போய்விடுகின்றார்கள். அச் சட்டத்தை, எடுத்துவிடவேண்டுமென முயல்வது இராஜ நீதிக்குப் பொருந்துமோ, சகல மக்களுக்கும் சுகாதாரத்தை வேண்டுவோர் மலோபாதை ஜலோபாதை சட்டத்தை இன்னும் உறுதிபெறச்செய்து வருவதுபோல் இராஜ விசுவாசத்தை நிலைக்க வேண்டியவர்கள் இராஜ துரோகிகளை அடக்குஞ் சட்டங்களை மேலும் மேலும் உறுதிபெறச் செய்வதழகன்றோ. அங்ஙனமாயப் பொதுநல சுகச்சீரைக் கருதாது சுயநலம் பாராட்டிப் பத்திரிகைகளில் பலவாறாயக் கலகக்கதைகளை வரைவதால் யாது பயனுண்டாம். இத்தேசத்திலோ பலவகைப் பொய்யாய நூதன சாதிபேதங்களை உண்டு செய்துக் கொண்டு ஒருவருக்கொருவர் முறுமுறுப்பும் பற்கடிப்பும் பொறாமெயுமே கொண்டு ஒற்றுமெக்கேடுற்றிருப்பது உலகமே அறிந்திருக்க, அவைகள் யாவற்றையும் சீர்த்திருத்தக் கூட்டத்தோர் ஆலோசியாது வெறுமனே இராஜங்க சட்ட திட்டங்கள் மீது நோக்கம் வைத்தலைவது வீணேயாம். இராஜாங்க சட்டதிட்டங்களை கூட்டுவதற்குக் குறைப்பதற்கும் எக்ஸிகூட்டிவ் மெம்பர்கள் என்னும் ஐந்தாறு விவேக புருஷர்கள் உழ்க்கார்ந்துகொண்டு முடிவு செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு உபபலமாக அந்தந்த ஜில்லாக்களில் அடைந்துவருங் கஷ்ட நஷ்டங்களை ஆய்ந்து தெரிவித்து மற்றுஞ் சட்டங்களைப் புதுப்பிப்பதற்கும் குறைப்பதற்கும் லெஜிஸ்லேடிவ் மெம்பர்களென்னும் அறுபது எழுபது விவேக புருஷர்கள் நியமனம் பெற்றிருக்கின்றார்கள் அவர்கள் யாவரையும் புறம்பே அகற்றிவிட்டு இவர்கள் மனம் போனவாறு இரண்டு மூன்றுபேர் முனைந்து பெருங் கூட்டங்களைக் கூட்டி அவற்றுள் இராஜாங்க சட்டத்தை யோசிப்பதற்கும் இராஜாங்க ஆலாசினைகளை ஆய்வதற்கும் இவர்களுக்கு அதிகாரங் கொடுத்தவர்கள் யார். சகல சாதியோரையும் பொதுவாக சீர்திருத்தும் ஆலோசனை சங்கத்தோர்கள் என்பார்களாயின் இத்தேசத்துள் ஆறுகோடி மக்கள் அல்லலடைகின்றார்களே, அவதியுறுகின்றார்களே, கொடிய துன்பங்களுற்றுக் கண்கலங்குகின்றார்களே, பசியாலும் பிணியாலும் பாழடைந்து மடிகின்றார்களே, அப்பெருந்தொகையோருள் யாவரேனும் இக்கூட்டத்தோரை ஆமோதித்துள்ளரோ ஒருவரும் கிடையாவே. சாதித் தலைவர்களில் சிற்சிலர் கூடிக்கொண்டு அவர்களுக்கு பிரியம் போன்ற சாதியுள்ளோர்களை சேர்த்துக்கொண்டு நாங்களுமோர் பொது சீர்திருத்தக் கூட்டத்தோர்களென்பதை யார் ஒப்புக்கொள்ளுவார்கள். இத்தகைய சொற்பமாயக் கூட்டத்தோர் இராஜாங்க சட்டதிட்டங்களை நோக்குவதற்கும் இராஜாங்க பல விஷயங்களை ஆய்வதற்கும் அதிகாரங் கொடுத்தவர்கள் யார். இவர்கள் கூடி செய்துவருஞ் செய்கைகளாலும் பேசிவரும் வார்த்தைகளாலும் குடிகளுக்கேதேனுங் கேடு விளைந்துவிடுமாயின் அவற்றிற்கு உத்திரவாதிகள் யார் அப்போதேனும் முன்வருவார்களோ, வரவேமாட்டார்கள். சகல சாதியோரையும் பொதுவாக பாவிக்காத கூட்டத்தோர் கூடுவதும் பேசுவதும் பெருங் கூட்டத்தோருக்கே கேட்டை உண்டு செய்து விடுமாதலால் கருணை தங்கிய ராஜாங்கத்தார் சற்று கண்ணோக்கி இத்தகையக் கூட்டத்தோர் கூடுவதையும் இராஜாங்க சங்கதிகளை எடுத்துப்பேசுவதையும் தடுத்து தங்களாளுகையில் சகலசாதி மக்களும் முன்னேறும் வழிவகைகளை செய்விக்க வேண்டுகிறோம்.

- 7:32: ஜனவரி 14, 1914 -