அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/318-383
314. இந்தியன் நாஷனல் காங்கிரஸ் இதுதானோ
இந்தியன் நாஷனல் காங்கிரஸ் என்பது இந்திய தேசத்திலுள்ள சகல சாதியோரையும் சமரசமாக சீர்திருத்துவோர் என்பது கருத்தாம். இப்போதவர்களது நடவடிக்கைகளையும் செயலையும் ஆலோசிக்குங்கால் பெரிய சாதிவேஷக் காங்கிரசாகவே பரக்க விளங்குகிறது. அவை யாதென்னிலோ இந்தியாவின்கண் பெரியசாதி சிறிய சாதியென்னும் பொய்யாய் வேஷங்களை ஏற்படுத்திக் கொண்டு இத்தேசத்தியப் பூர்வக்குடிகளை பலவகையாலும் பாழ்படுத்தி அவர்களைக் கொல்லாமற் கொன்று வருவதுடன் அச்சாதி வேஷச் செயலால் விவசாய விருத்தியும் வித்தியா விருத்தியுங்கெட்டு தேசம் பாழடைந்து வருவது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்க அவைகள் யாவற்றையுங் கண்ணுற்று நோக்காமலும் செய்யவேண்டிய சீர்திருத்தங்களைச் செய்து தேசத்தையும் தேசமக்களையுஞ் சிறப்படையச் செய்யாமலும் இராஜாங்க விஷயத்திலேயே நோக்கம் வைத்திருப்பதைக்காணில் பெரிய சாதி வேஷமும் சிறியசாதி வேஷமும் இவ்வவ்வகையே இருத்தல் வேண்டும், இராஜாங்க உத்தியோகங்கள் யாவும் தங்களுக்கே கிடைத்துவிட்டால் சிறிய சாதியோரென்று வகுத்து வைத்துள்ள ஆறு கோடி மக்களையும் அர்த்தநாசஞ்செய்து விடவேண்டுமென்னும் அபிப்பிராயத்தை வைத்துக்கொண்டே மேலுக்கு நாஷனல் காங்கிரஸ் என்னும் பெயரை வைத்துக் கொண்டு உள்ளுக்குள் பெரியசாதி வேஷக் காங்கிரசாகவே நடாத்தி வருகின்றார்கள்.
அதன் விவரம் யாதென்னிலோ இவ்வருஷக் காங்கிரஸ் கமிட்டியார் கூடியக் கூட்டத்தில் இருபத்தியெழு வருஷமாகப் படித்துவரும் பழைய பாடங்களைப் படித்து விட்டு செளத்தாப்பிரிக்கா இந்தியர் விஷயப் பாடம் ஒன்றை நூதனமாகப் படித்திருக்கின்றார்கள். அதாவது இந்தியர்கள் மனதிற் கொதிப்பை உண்டு செய்திருக்கும் செளத்தாப்பிரிக்கா இந்தியர்களின் நிலையைப்பற்றி முக்கியமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டதாம். அப்பிரஸ்தாப சுருக்கமோ செளத்தாபிரிக்கா இந்தியர்களை அதிகக் கஷ்டமாக நடத்தப்படுவதும் சாமான்யமான சுதந்தரங்கள் கூட, கொடாமல் தொந்திரவு செய்வதுமேயாம். ஆ, ஆ எத்தகைய கஷ்டத்தை காங்கிரஸ் கமிட்டியார் கண்ணோக்கம் வைத்துவிட்டார்கள், பாருங்கள், கோபாலியை எடுத்துக் தங்களுக்குத் தாங்களே காலிலிட்டுக் கொண்டு குடையுது குடையுதென்பது போல செளத்தாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் தங்களுக்கு தாங்களே கேட்டை விளைவித்துக்கொண்டது போக ஏழைக் கூலிகளையுந் துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டது சகல இங்கலீஷ் பத்திரிகைகளிலுஞ் சிறக்க விளங்குவதைக் கண்டும் காணாததுபோல் இவ்விடமுள்ள இந்தியர்களுக்கெல்லாம் மனக்கொதிப்பை உண்டாக்கிவிட்டதாயும் அக்கொதிப்புக்குப் பலமாகக் காங்கிரஸ் கமிட்டியும் உழைக்கவேண்டுமென்று முடிவு செய்தவர்கள் இந்தியாவிலேயே ஆறுகோடி மக்கள் அல்லல்படுவதற்கு மனக்கொதிப்பைக் காணோமே இது மனவாறுதல் போலும். இந்தியாவில் கருணை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியோரால் பொதுப்பணத்தைக் கொண்டு சகல மனுக்களும் போக்குவருத்து காலங்களில் தங்கியிளப்பாறிப்போவதற்கு பொதுவாய சத்திரங்களைக்கட்டி வைத்திருக்கின்றார்கள். அச்சத்திரங்களில் தாழ்ந்த சாதியென வகுக்கப்பட்டோர் மழையின் கஷ்டத்தாலோ வெய்யிலின் கஷ்டத்தாலோ தனக்கு வழியில் கண்டுள்ள நோயின் கஷ்டத்தாலோ அச்சத்திரத்திற்குள் தங்குதற்குப் போவானேயானால் அவ்விடந் தங்கியுள்ள சாதிவேஷக் காவல்காரன் நீயென்ன சாதி என்ன சாதியெனக்கடிந்து துரத்திவிடுகின்றான். வழிபோக்கு ஏழையோ தங்குதற்கிடமின்றி மழையிலும் வெய்யிலிலும் நோயிலும் மரத்தடிகளில் ஒதிங்கி மடிவோர்போக பிழைத்துள்ளோர் அதிகஷ்டத்துடன் அவரவர்கள் இல்லம்போய் சேருகின்றார்கள். இத்தகைய துன்பத்தை செளத்தாப்பிரிக்கா இந்தியர்கள் அனுபவிக்கின்றார்களோ. இக்கஷ்டங்களை காங்கிரஸ் கமிட்டியா ரறியார்களோ. கிராமங்களிலும் தாலுக்காக்களிலும் உள்ளக் கோர்ட்டுகளில் தாழ்ந்த சாதியென்போர் உள்ளே நுழையவுங் கூடாது அருகில் வரவுங் கூடாது தூரவே நின்றுக்கொண்டு அவன் பிரையாதை எவனாவது கேட்டுச் சொல்ல அவன் தீர்ப்படைவது நியாயமோ, அந்நியாயமோ, அவை அக்கோர்ட்டிற்கே வெளிச்சமாம். இத்தகைய கஷ்டத்தை செளத்தாபிரிக்க இந்தியர்களடைகின்றார்களோ. இதுவும் இக்காங்கிரஸ் கமிட்டியாருக்குத் தெரியாதோ. தாழ்ந்த சாதியானென்போன் ஏது சொற்ப குற்றஞ் செய்தபோதினும் தொழுவென்னுங் கட்டையில் இரு கைகளையுங் காலையும் மாட்டிவிட்டு வெய்யலோ மழையோ இருந்தபோதிலும் வெளியிலிட்டு ஈயும் எறும்பு மிக்கக் கொடிய துன்பத்தைச் செய்துவருகின்றார்களே. அதுபோல் செளத்தாப்பிரிக்கா இந்தியர்கள் ஏதேனுங் கஷ்டப்படுகின்றார்களோ. இத்தொழுவு கட்டை தெண்டனையை இக்காங்கிரஸ் கமிட்டியாரறியார்களோ. தாழ்ந்த சாதியானென்போன் ஓர் கொடி வழியில் ஏதேனும் வந்து விடுவானாயின் அவனை வந்த வழியே திருப்பி அரைமயில் ஒரு மயில் துரத்தி அடிக்கின்றார்களே அவ்வகையான கஷ்டமேதேனும் செளத்தாபிரிக்கா இந்தியர்களடைகின்றார்களோ. இச்சங்கதியைக் காங்கிரஸ் கமிட்டியார் அறியார்களோ. தாழ்ந்த சாதியானென்போனை பொதுவாயக் குளங்களிலுங் கிணறுகளிலும் சுத்த நீரை மொண்டு குடிக்கவிடாமல் விரட்டி அடித்து புழுதியடைந்துள்ள குட்டை நீரையும் வாய்க்கால் நீரையும் மொண்டு குடிக்கவைத்து பலவகை வியாதிகள் கண்டு மடியச் செய்வதுடன் ஏதோ தெரியாமல் வந்து நீரை மொண்டு விடுவானாயின் அவனைப் பிடித்து மரத்தில் கட்டி புளிய மலார்கொண்டு முதுகிலடிப்பதுடன் தொழுவிலும் மாட்டிவதைக்கின்றார்களே, இத்தகையாயக் கொடுந்துன்பத்தை செளத்தாப்பிரிக்கா இந்தியர்கள் ஏதேனும் அநுபவிக்கின்றார்களோ. இந்த சங்கதியுங் காங்கிரஸ் கமிட்டியாரறியாததோ. ஜமீன்தார், மிட்டாதார்களென்போர் பெரும் பூமிகளை வளைத்துக்கொண்டு அவைகளை உழுது பண்படுத்தி பயிரிடுவதற்கு தாழ்ந்த சாதியோரென்போர்களையே ஆட்களாக வைத்துக்கொண்டு அவர்களிடம் நாள் முழுவதும் வேலை வாங்கி நாளொன்றுக்கு ஓர் அணா கூலி நியமித்து அவ்வணாவையுங் கையில் கொடாது ஓரணாவுக்குத்தக்கக் கம்போ, சோளமோ, கேழ்வரகோ கொடுத்துவருவதும், பெண்டுகளுக்கும் மாடு மேய்க்கும் பிள்ளைகளுக்கோ சாப்பாடு போட்டுவிடுகிறோமென்று கூறி மூன்று நாளைய கேழ்வரகின் காந்தலையோ நான்கு நாளைய கம்புக்கூழின் காந்தலையோ வார்த்து வருவதுமாயக் கொடுங்கஷ்டங்களை அநுபவித்து வருவதுடன் கஷ்டத்திற்கு பயந்தும் வயிற்றிற்குக் கஞ்சில்லாமலும் வேறு தேசத்திற்கேனும் வேறு வேலைக்கேனும் போவதற்கு முயலுவாராயின் பாட்டனுக்குக் கொடுத்த கடன் ஐந்து ரூபாயிற்கு ஐன்பது ரூபாய் வட்டியுமுதலும் கொடுக்கவேண்டுமென்றும், அப்பனுக்கு வாங்கிய நாலு ரூபாய் கடனுக்கு நார்ப்பது ரூபாய் வட்டியு முதலுங் கொடுக்கவேண்டும் என்று தடுத்து சாதிவேஷக்காரனெல்லாம் ஒன்றாய் சேர்ந்துக்கொண்டு ஏழைகளை மிரட்டுவதுடன் மீறிப்போவார்களாயின் மரத்திற்கட்டிப் புளியமலாரில் அடிப்பதும் தொழுவில் மாட்டி துன்பப்படுத்தி வதைக்கின்றார்களே, இத்தகையாய கொடுந்துன்பத்தை செளத்தாப்பிரிக்கா இந்தியர்கள் ஏதேனும் அநுபவிக்கின்றார்களோ. இந்த சங்கதியுங் காங்கிரஸ் கமிட்டியார் அறியாததோ. மற்றுமுள்ள சில ஏழைகள் தெரியாமல் ஓடி கோலார் முதலிய பொன் சுரங்கங்களிலேனும் மில்சுகளிலேனும் உழைத்து பாடுபட்டு வயிராறப் புசித்து சொற்ப பணத்துடன் தங்களூரில் வந்து சேருவார்களாயின், ஆ ஆ தாழ்ந்த சாதியான் முழங்காலுக்குக் கீழே துணிக்கட்டிக்கொண்டு நமது முன்னில் வருகிறான் பார்த்தீர்களா, அவனுக்கு துட்டு கொழுப்பேறி விட்டது, அவனை அடக்கவேண்டுமென சாதிவேஷக்காரனெல்லாம் ஒன்றாய் சேர்ந்துக்கொண்டு அவனைப் புளியமலார்க்கொண்டடிப்பதும், அதிகாரிகளுக்குத் தெரிவிப்பானாயின் இரவில் அவன் குடியுள்ள குடிசைக்கே நெருப்பிட்டுக் கொளுத்தி ஊரைவிட்டோட்டுவதும் மற்றொருவன் ஏதோ தான் சம்பாதித்துவந்தத் தொகையைக் கொண்டேனும் தனது முயற்சியிலேனும் சொற்ப பூமியை சம்பாதித்து உழைத்து பண்படுத்தி பயிரை ஓங்கும்படிச் செய்விப்பானாயின், தாழ்ந்த சாதியான் நமக்கு வந்து வேலை செய்யாமல் பூமிக்குடையவனாகிவிட்டான் இனி தங்களை மதியானென்னும் பொறாமெகொண்டு இரவில் பயிறுகளை மாடுகளை விட்டு மேய்ந்து விடும்படிச் செய்கிறதும் அம்மாடுகளைப் பிடித்து பவுண்டுக்குக் கொண்டு போவானாயின் சாதி வேஷக்காரனெல்லாம் ஒன்றாய் சேர்ந்துக்கொண்டு மடக்கி அவனைக் கொன்றே போடுவதுமானக் கொலைச் செயலையே செய்து வருகின்றார்களே. அதுபோல செளத்தாப்பிரிகா இந்தியர்களை ஏதேனுந் துன்பஞ் செய்கின்றார்களோ. இத்தகையாக நடந்துவருந் துன்பமாயச் செயல்களைப் பத்திரிகைகளிலேனும் கேள்விகளாலேனும் இக்காங்கிரஸ் கமிட்டியார் அறியாததோ. உயர்ந்த சாதியென்னும் பொய்வேடமிட்டுக்கொண்டு தாழ்ந்த சாதியோரென்று வகுத்துவைத்துக்கொண்டுள்ள ஆறுகோடி மக்களையும் பலவகையாயத் துன்பப்படுத்திக் கொன்றுவரும் படியான செயல்கள் ஒவ்வொன்றையும் விரித்தெழுதவேண்டுமாயின் பெரும்புத்தகமாக முடியுமே. இத்துன்பச் செயல்கள் யாவும் இக்காங்கிரஸ் கமிட்டியாருக்குத் தெரிந்த விஷயங்களேயன்றி தெரியாதது ஒன்றுங் கிடையாவாம். இக்காங்கிரசில் பெரும்பாலும் சேர்ந்துள்ளோர் யாவரும் சாதித்தலைவர்களேயாதலின் தங்களால் தாழ்ந்த சாதியோரென்று தாழ்த்திவைத்துக்கொண்ட ஆறுகோடி மக்கள் ஏதுபாடு பட்டு எக்கேடு கெட்டு பாழடைந்து சீர்குலைந்து மடிந்துப்போக வேண்டுமென்னும் எண்ணத்தை உள்ளுக்கு வைத்துக்கொண்டும் நாஷனல் காங்கிரசென்னும் வெறும் பெயரைச் சொல்லிக் கொண்டும் தங்கள் சுயகாரிய நோக்கத்திலே பேசிவருகின்றார்கள். அவைகளுள் செளத்தாபிரிக்கா வெள்ளையர்கள் இந்திய கறுப்பர்களை சாதி வித்தியாசம் பாராட்டி அலக்கழக்கின்றார்களென்றும் இந்தியர்களைத் துன்பப்படுத்துகின்றார்கள் என்றும் தாங்களும் அதற்கு உபபலமாக வொத்தாசை செய்யவேண்டுமென்றும் பரிந்து பரிந்து பேசியிருக்கின்றார்கள். அந்தோ இத்தேசத்திலுள்ள ஆறுகோடி இந்திய ஏழைகள் கண்ணீர்விட்டுக் கதருவதையென்னென்றும் நோக்காது, செளத்தாபிரிக்காவிலுள்ள ஒன்றரை லட்சம் இந்தியர்கள் தங்களுக்குத் தாங்களே படுங்கஷ்டங்களுக்குப் பரிந்து பேச மட்டிலும் ஆரம்பித்தது விந்தையிலும் விந்தையேயாம். சுயதேசத்தோர் படுந் துன்பங்களையும் கேடுபாடுகளையுங் கண்ணோக்கமுறாது புறதேசத் துன்பத்தை மட்டிலும் நோக்கிப் பேசப்புகும் ஓர் கூட்டத்தோருக்கு நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரென்னும் பெயர் பொருந்துமோ, அவர்களே ஆலோசிக்க வேண்டியதேயாம்.
- 7:31: ஜனவரி 7, 1914 -