அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/317-383

விக்கிமூலம் இலிருந்து

313. சௌத் ஆப்பிரிக்க இந்தியர்கள் எதிர்க்காமல் எதிர்க்குங் கஷ்ட நஷ்டங்களும், இந்தியாவில் பூர்வ இந்தியர்கள் கொல்லாமற் கொல்லப்படும் கஷ்ட நஷ்டங்களும்

சௌத் ஆப்பிரிக்காவில் குடியேறியுள்ள இந்தியக்கூலிக்குடிகள் இலட்சத்தியைன்பதினாயிரத்திற்கு உட்பட்டவர்களே யாவர். இவர்களுள் தங்கள் கைப்பணங்களைக் கொடுத்தே சென்றவர்கள் ஆயிரத்திற்கு ஒருவரேனும் இருவரேனும் இருக்கலாம். இப்போது அவ்விடமுள்ள இராஜாங்கத்தோர் குடியேறிய பின்னரே இந்தியரவர்களுக்குக் கூலிகளாகச் சென்று அவர்கள் காலதவணை நீங்கியவுடன் அதையே சுகநாடென்று எண்ணி விவசாய விருத்தியிலும் வியாபார விருத்தியிலும் மிக்க சிறப்புடையவர்களாக வாழ்ந்து வருவோர் இலட்சத்தி இருபதினாயிரம் பேரிருக்கலாம். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சிலக்கூலிகள் நூறுபவுன் இருநூறுபவுன் கையிருப்புடன் இந்தியாவிற்கே திரும்பி வந்திருக்கின்றார்கள் தற்காலம் இவ்விடக் கூலியாக ஒப்பந்தக் கட்டுப்பாட்டில் நின்று உழைத்து வருகின்றவர்கள் முப்பதினாயிரத்துக்குட்பட்டே இருக்கலாம். கூலிகளாக பொற்சுரங்கங்களிலும் கரிச்சுரங்கங்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்து வரும் ஏழை மக்களை சில படுபாவி கண்காணிகள் அதிக துன்புறுத்தியும் கஷ்டத்தைக் கொடுத்தும் வேலை வாங்குவதாகப் பத்திரிக்கைகளின் வாயிலாகவும் கேள்வியாலும் அறிந்துள்ளோம். ஆயினும் அவர்களுக்குத் தகுந்த கூலி கொடுத்து பசியாறப்புசிக்கச் செய்து வருவதாகவுந் தெரிந்துள்ளோம். அத்தகையக் கூலிகளின் கஷ்டங்களை சில துரைமக்களே தோன்றி நிவர்த்தி செய்து வருவதாகப் பத்திரிகைகளிலுங் கண்டுள்ளோம். இக்கூலிகள் படுங் கஷ்டங்களை நீக்கிக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் கால ஒப்பந்தந் தீர்ந்தவுடன் அவ்விடம் விட்டு நீங்கி விடுவது ஒன்று. அத்தகையோர் பால் கூலிவேலைக்கு செல்லாமலிருப்பது ஒன்று, அவ்விரண்டு செயலே அக்கஷ்டங்களுக்குப் பரிகாரமே அன்றி வேறொன்றுங் கிடையாவாம். தற்காலம் சௌத் ஆபிரிக்காவில் நடந்துவரும் இந்தியர்களுள் கலகம் கூலிகளின் கால ஒப்பந்தம் நீங்கி சுகமாக வாழ்ந்து வருவோர்களால் நேர்ந்து வருவதாகக் காண்கின்றதேயன்றி வேறில்லை. பிச்சை இரந்துண்போனுக்கு சற்று கல்விச்செல்வ மிகுத்தால் பெரிய அதிகாரம் வேண்டுமென்று கேட்பதுபோல கூலிகளாகச் சென்றோருக்குக் கல்விச்செல்வமிகுத்து கோமானாகும் வழிவகைகளைத் தேட முயன்றதைக் கண்ட அவ்விடத்திய ராஜாங்கத்தார் இந்தியர்களை அவ்விடம் விட்டோட்ட வேண்டிய வழிவகைகளைத் தேடுகின்றார்கள். சொத்துக்கள்ளுள்ள இந்தியர்கள் ஏழைக்கூலிகளையும் இழுத்துக்கொண்டு அவர்களையும் பொருந்து துன்பத்திற்காளாக்கி வைத்து விட்டார்கள். தங்களுக்குண்டாகிய கோபாவேஷத்தால் ஈட்டி முனையில் எட்டி உதைப்பதை போல் இராஜாங்கத்தையே எதிர்த்து நிற்க ஆரம்பித்துக்கொண்டே வருகின்றது அக்கஷ்டங்களுக்கு நிவர்த்தியோ வென்னில் அத்தேசத்தைவிட்டு அகன்றுவிடவேண்டியது ஒன்று. அன்றேல் அவ்விராஜாங்கத்தோர் சட்ட திட்டங்களுக்கடங்கி சமயோசிதமாகக் கஷ்டங்களை விளக்கி சுகவழிகளைத் தேடிக்கொள்ள வேண்டியதே நிவர்த்தியாம்.

அத்தகைய நிவர்த்தியில்லாது கொல்லாது கொல்லப்பட்டுவரும் இத்தேசத்தியப் பூர்வ இந்தியர்களாம் ஆறுகோடி மக்களின் அல்லலையும் அவதியையும் விளக்குவாம்.

இந்திய தேசத்தில் நூதனமாகக் குடியேறி நூதன சாதிகளையும் நூதன மதங்களையும் உண்டு செய்துக் கொண்டு அதை அநுசரித்தே மேம்பாடு அடைந்துக் கொண்டுள்ள பராய சாதியோர் பொய்யாய சாதி கட்டுப்பாட்டுக்கு அடங்காமலும் பொய்யாய மதக்கோட்பாடுகளுக்கு ஒடுங்காமலும் இருந்த பெருங்கூட்டத்தோரை தாழ்ந்த சாதியோரென வகுத்துவிட்டு அவர்களை நகரங்களிற் செய்யும் அக்கிரமங்களை முதலாவது காண்க. நகரமென்பது அரசாங்க பீடமென்னப்படும். அவ்வரசாங்கமோ சாதிபேத பொறாமெ என்னும் துர்நாற்ற மற்றவர்களும் நீதியும் நெறியும் அன்பும் பெற்றவர்களுமாகிய பிரிட்டிஷ் அரசாங்கமேயாம், அத்தகைய ராஜாங்கத்தார் வசிக்கும் நகரத்தின்கண் தாழ்ந்த சாதியோரென்று தங்களுக்குத் தாங்களே பிரித்து விட்டவர்களை தாங்கள் உத்தியோகஞ் செய்யுமிடங்களில் அவர்கள் பிள்ளைகளைப் படிக்கவிடாமலும், தாங்கள் தண்ணீர் மொண்டு குடிக்குங் குளம் கிணறுகளில் அவர்களை மொண்டு குடிக்கவிடாமலும், தங்களுக்கு மேளமடிக்கவும் தம்பட்டம் அடிக்கவுமுள்ள ஆட்களை அவர்களுக்கு அடிக்கவிடாமலுந் தாழ்த்தி, அவர்களை எவ்வகையானும் தலையெடுக்க விடாமலே நசித்துக்கொண்டே வருகின்றார்கள். இவ்வகையாகத் தாழ்த்தி நசித்துவருங் கேடுபாடுகள் யாவற்றையும் தற்கால சீர்திருத்தக் கூட்டத்தோரறிவார்களேயன்றி அறியாதவர்களொருவருமில்லை. எல்லாமறிந்தும் தாழ்த்தப்பட்டுள்ளோர் கஷ்ட நஷ்டங்களை இஷ்டமாகவே பாவித்துலவுகின்றார்கள். நகரங்களில் தாழ்த்தப்பட்டுள்ளோரில் சிலர் முன்னேறி சுகமுற்றிருப்பது பிரிட்டிஷ் துரைமக்களின் கருணையாலும் மிஷநெரி கிருஸ்தவ துரைமக்களின் அன்பினாலுமேயன்றி சாதிவேஷமுற்றுள்ள சீர்திருத்தக்காரரால் அன்றென்றே துணிந்து கூறுவோம்.

பெரிய சாதிவேஷக்காரரால் தாழ்த்தப்பட்டுள்ளோர், பெரியசாதி என்போர் கடைகளுக்குச் சென்று ஓர்பலகாரத்தைச் சுட்டிக்காட்டி இந்த பலகாரம் வேண்டாம் அந்த பலகாரங்கொடு என்றாலோ, தாழ்ந்த சாதியான் பலகாரத்தைத் தீண்டிவிட்டான், அந்த பலகாரங்களின் விலையை எல்லாம் அவன் கட்டிக்கொடுக்க வேண்டுமென்று அவனை பலவந்தப்படுத்தவும், அக்கம் பக்கத்து பெரியசாதி வேஷக்காரர்களும் சேர்ந்துகொண்டு மிரட்டவும், ஏழை திகைத்து அவமானமடைவதுடன் காலணா பலகாரம் வாங்கப்போனவன் கால்ரூபாயோ அரைரூபாயோ தெண்டங்கொடுக்கும்படி அலக்கழித்து விடுகின்றார்கள்.

மற்றொரு ஏழை தன் பசிக்கு அரையணா கொடுத்து பலகாரத்தைக் கையில் வாங்கிக்கொண்டு சாப்பிடுங்கால் அது பாசித்துப் பூரணமுற்றும், பழைய ரண்டு மூன்று நாளய பலகாரமாயிருக்கின்றது. இதையெடுத்து வேறு கொடுங்கோள் என்றால் அதை நீ தீண்டிவிட்டு நாங்கள் மறுபடியும் அதை வாங்குவோமாவென்று வைய, பக்கத்து சாதிவேஷக்காரனும் வைய, துட்டு கொடுத்த ஏழை நாணமுற்று பலகாரத்தையும் அவன் கடையெதிரில் கொட்டிவிட்டு பசியோடு அல்லலுற்று வீடேகச்செய்கின்றார்கள்.

இத்தகைய சாதிவேஷக்காரர் செய்கைகளால் நகரத்தில் கிஞ்சித்து சுகச்சீர்பெற்று முன்னுக்கு வந்திருப்போரை நாணடையவும் மனங்குன்றவும் செய்து வருவதுமல்லாமல் பாப்பான் என்னும் மேல்சாதி ஒருவனிருக்கின்றான், பறையன் என்னுங் கீழ்சாதி ஒருவனிருக்கின்றானென நந்தன் சரித்திரம் என்னும் ஓர் பொய்க்கதையையும் அரிச்சந்திரன் சரித்திரமென்னும் ஓர்ப் பொய்க் கதையையும் ஏற்படுத்தி வைத்துக்கொண்டு கூத்து மேடைகளில் கேவலப்படுத்தி ஆடுவதும் வீதி வீதியாக இப்பாடல்களைப் பாடி இன்னும் அவர்களை இழிவடையவும், நாணமடையவும் செய்து வரும் இழிவுகளோ சொல்லத்தரமன்று. அரசாங்கத்தோர் வசிக்கும் இடங்களிலேயே இத்தியாதி துன்பங்களையும் இழிவையும் மானக்கேட்டையும் உண்டுசெய்து அவர்கள் தலையெடுக்கவிடாமல் நசித்து வருகின்றவர்கள் இன்னும் நாட்டுவாசிகளை எவ்வகையாற் கொல்லாமற் கொன்று வருகின்றார்கள் என்பதை இனிது விளக்குவாம்.

- 7:29; டிசம்பர் 24, 1913 -

நகர வாசங்களில் இந்திய தேசப் பூர்வக்குடிகளை தாழ்ந்த சாதியோர் என்றும் தீண்டக்கூடாதவர்கள் என்றும் பொய் சாதிவேஷக்காரர்கள் தாழ்த்தி தலையெடுக்கவிடாமற் செய்வதுடன் நூதனமாக இத்தேசத்தில் வருவோர் போவோருக்கும் இவர்களை சுட்டிக்காட்டி இவர்கள் தாழ்ந்த சாதியோர், இவர்களைத் தீண்டப்படாது, அருகில் சேர்க்கப்படாது என்று இழிவுபடுத்தி பொதுவாய சத்திரங்களிலும் ஒண்டவிடாது பலவகையான துன்பங்களைச் செய்து வருவதுடன் இச்சாதி வேஷக்காரர்களே நாட்டுப்புறங்களில் ஜமீன்தாரர்கள் என்றும் மிட்டாதார்கள் என்றும் மிராசுதாரர்கள் என்றும் சுரோத்திரதாரர்கள் என்றும் தங்கள் பேராசையால் பெரும் பூமிகளை வளைத்துக் கொண்டும் அவைகளை உழுது பண்படுத்துவதற்கு ஏதுவில்லா பெருஞ் சோம்பேறிகளாதலால் தங்களால் தாழ்ந்த சாதியோரென்று அழைக்கப்பட்ட ஏழை உழைப்பாளி மக்களையே தங்கடங்கள் பூமிகளுக்கு உழைப்பாளிகளாக்கி கொண்டு அவர்கள் பிள்ளை கலியாணத்திற்கு ஐந்து ரூபா கடன் கொடுத்தால் அவன் பேரபிள்ளை வரையில் வட்டி கணக்குக் காட்டி வேலை வாங்கி வருவதும், தகப்பனிறந்தானென்று இரண்டு ருபா கடன் வாங்கினால் அவன் பிள்ளை வரையில் வட்டிக்கணக்குக் காட்டி வேலை வாங்கிவருவதுமாய அடிமைகளாக்கிக் கொண்டு வட்டி பணத்திற்கு பிள்ளைகளை வேலை வாங்குவதும் பெரிய ஆட்களுக்கு நாளொன்றுக்கு ஓரணா விலை பெறும்படியான தானியங்களைக் கொடுத்து நாள் முழுவதும் கஷ்டமான வேலைகளை வாங்கிக்கொண்டு எலும்புந் தோலுமாகச் செய்து கோலுங் குடுவையுங் கொடுத்து கொல்லாமற் கொன்றுவருவதுடன் சுத்த நீருள்ள குளங்களிலும் கிணறுகளிலும் நீர்மொண்டு குடிக்கவிடாமல் அசுத்தமடைந்துள்ள ஓடை நீர்களையும் கட்டை நீர்களையும் மொண்டு குடிக்கச் செய்து பல வகை வியாதி உண்டாகக் கொல்லும் எண்ணங் கொண்டு கொன்றே வருகின்றார்கள்.

இத்தியாதி கஷ்டங்களை பொறுக்க முடியாது வேலையை விட்டு ஓடிப்போவதாயிருந்தாலும் வேலைக்கு வராமலிருந்தாலும் அதற்கென்ற ஓர் சட்டமேற்படுத்தி வைத்துக் கொண்டார்கள். தாழ்ந்த சாதியென்று வகுக்கப்பட்டவர்களை யாதொரு சுகாதாரமுமின்றி கொன்றுவருவதுடன் (தொழுவு) என்னும் இதக்கமற்ற ஓர் வகை விலங்கும் வைத்திருக்கின்றார்கள். அத்தொழுவிலோ சாதிவேஷக்காரர்கள் யாரோ அவர்களொரு வரையும் அதிற் போடக்கூடாது, தாழ்ந்த சாதிகளென்று வகுத்துள்ளோர்கள் யாரோ அவர்களை மட்டுமே அத்தொழுவில் மாட்டி வதைத்தல் வேண்டுமென்பதாம். அத்தொழுவென்பதோவென்னில் நீண்ட கட்டைகளில் நான்கு துவாரமிட்டு சொற்ப குற்றஞ் செய்த போதினும் இவனது இரண்டு காலை இரண்டு துவாரத்திலும், இரண்டு கையை இரண்டு துவாரத்திலும், மாட்டி பூட்டிட்டு வெய்யிலில் விட்டு விடுதே தண்டனையாம். அவனுக்கு வேர்வை வடிந்தாலுந் துடைக்கக் கையுதவி கிடையாது. ஈமொய்த்தாலும் ஓட்டமுடியாது. எறும்புகள் கடித்தாலும் துடைக்க முடியாது. கூவி அழைக்கவும் அருகில் ஒருவரும் கிடையாது. அவன் சொந்தக்காரர்கள் அவன் படும் உபத்திரவத்தை சயிக்க முடியாது அருகில் வந்துவிட்டாலோ அவர்களும் அத்தொழுவத்தில் மாட்டிக்கொள்ள வேண்டியதே. அந்தோ இத்தகைய தண்டனையை எத்தேசத்தேனுங் கண்டதுண்டோ, கேள்வியேனும் பட்டதுண்டோ.

இத்தகையக் கருணையற்றப் படும்பாவச் செயலாற் கொல்லாமற் கொல்லும்படியானப் படும்பாவிகளும் உலகத்திலுண்டோ. மனிதர்களுக்கு என்று நீதி வகுக்குஞ் சட்ட திட்டங்களில் உயர்ந்த சாதியோனுக்கோர் சட்டமும் தாழ்ந்த சாதியோனுக்கோர் சட்டமுமாகிய பேதமும் உண்டாமோ. இத்தியாதி சட்டங்களை ஏழைக்குடிகளடைந்து வரும் துன்பங்களையும் தற்கால சீர்திருத்தக்காரர்களும் பத்திராதிபர்களும் அறிந்ததில்லை செவியிலேனும் கேட்டதில்லையோ, எல்லாம் அறிந்தவர்களே யாவர். ஆயினும் தாழ்ந்த சாதியென்று வகுக்கப்பட்ட ஆறுகோடி மக்களும் அழிந்து நாசமாகிவிட வேண்டும், உயர்ந்த சாதி வேஷமிட்டுள்ளோர் யாவரும் சுகமுற்று வாழ்க வேண்டுமென்பதே அவர்கள் அபிபிராயமாகும். இவற்றிற்கு ஆதாரமாக தற்காலம் நடந்துள்ள பரிதாபமற்றச் செயலொன்றை விளக்குகின்றேன். அதாவது அவ்வருஷம் பெய்த மழையின் மிகுதியால் சிதம்பரத்தில் பெரும் வெள்ளமுண்டாகி அனந்தக் கிராமங்களை அடித்துக் கொண்டு போனவிஷயத்தில் பஞ்சமரென்னும் தாழ்ந்த வகுப்போர் வீடுகளே பெரும்பாலும் நஷ்டமடைந்ததுடன் அனந்தபேர் மரணமடைந்து போனவர்கள் போக மிகுதியுள்ளோர் இருக்க இடமின்றியும் குடிக்கக் கஞ்சின்றியும் பல கஷ்டங்களை அனுபவிப்பதாக விளங்குகின்றது. சில பத்திரிக்கைகளிலும் பஞ்சமர்கள் அதிகக் கஷ்டப்படுகின்றார்களென்றும் வரைந்திருக்கின்றார்கள். உள்ளுரில் இத்தியாதி கஷ்டப்படும் ஏழைகளைப்பற்றி எவரேனும் பரிதாபப்பட்டவர்களுண்டோ. எப்பத்திராதிபர்களாயினும் வெள்ளத்தால் நசிந்துள்ளோரை காக்கவேண்டுமென்று பரிதவித்து எழுதியதுண்டேடா. எப்புண்ணிய புருஷராயினும் ஸ்திரீகளாயினும் பண உதவி செய்து பஞ்சமர் என்போரை பாதுகாத்தது ஏதுங்கிடையாவே.

இந்திய தேசத்தின் கண்ணே பலவகையான துன்பங்களையும் சகிக்க முடியா கஷ்டங்களையும் அநுபவித்துவரும் ஆறு கோடி மக்களை கண்ணெடுத்துப் பாராமலும் அவர்கள் மீது கருணையென்பதே வையாமலும் வதைப்பவர்கள் செளத்தாப்பிரிக்காவில் கஷ்டப்படும் இலட்சத்துச்சில்லரைக் குடிகளுக்காகப் பரிந்து பத்திரிக்கைகள் யாவும் பேசுகிறதும் பரிந்து பணங்களை சேகரிக்கிறதும் அவர்களை எதிர்க்காமல் எதிர்த்து நில்லுங்கோளென்னும் உற்சாகங்கொடுக்கின்றதும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் அவர்கள் விஷயத்தில் முறிந்து பேசவில்லையே என்று முறுமுறுப்பதுமாய செயல்களை ஆலோசிக்குங்கால் செளத்தாபிரிக்க இந்தியர்களுக்கு மெய்யாகப் பாடுபடுவோர்களாக காணோம். மெய்யாகப் பாடுபடுவோர்களாயின் இந்தியாவிற்குட்பட்ட சகிக்க முடியாது கஷ்டபடுவோர்களை நோக்கியிருப்பார்கள். இங்ஙனமுள்ள பெருங்குடிகளின் கஷ்டங்களை கிஞ்சித் தேனுங் கவனியாது புறதேசத்தோருக்குப் படும் கஷ்டத்தை நோக்குங்கால் ஏதோ ஓர் காரணத்தைக் கொண்டே கூச்சலிடுவதாக விளங்குகின்றது அக்காரணம் கூடிய சீக்கிரம் விளங்கிப்போம்.

- 7:30: டிசம்பர் 31, 1913 -