அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/316-383
312. சௌத் ஆப்பிரிக்கா இந்தியர் மீதுற்றுள்ள பரிதாப ஆராய்ச்சி
செளத்தாப்பிரிக்காவிற் சென்றுள்ள இந்தியர்கள் படுங் கஷ்டத்திற்காகப் பணஞ் சேர்ப்பதைப்பற்றி தமிழன் என்னும் பத்திரிகை விரோதமாகக் கூறுகிறதென்று சில கூட்டத்தோர் ஆயாசமடைவதாகக் கேள்விப்படுகிறோம். அவ்வாயாசம் ஆலோசனையற்றதேயாம். எக்கால் இத்தேசத்தோருக்குப் பொதுநல அன்பும் பொது நல உபகாரமும் உண்டாயிற்றோ அதுவே நமக்குப் பேரானந்தமாம்.
அத்தகைய உபகாரத்தையும் பணஞ்சேர்ப்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டுமென்பதே எமது கோறிக்கை. ஓயாக் குடியனுக்கு தினேதினே நாலணா தானஞ் செய்வதாயின் அவன் சீர்பெறுவானா சீர்கெடுவானா என்றும் பாலதானமுள்ள ஓர் சிறுவனுக்கு நித ஒத்தை ரூபாய் அன்புடன் ஈய்ந்து வருவதாயின் சிறுவன் கலைகற்று அறிவின் விருத்தி பெறுவானா, அன்று அறிவு மயங்கி சீர்கெடுவானா என்றும், ஓர் எஜமானிடம் பத்து ரூபா கூலியில் உத்தியோகஞ் செய்வோனுக்கு வேறிடம் பத்து ரூபாய்க் கிடைக்குமாயின் எஜமானனின் ஊழியத்தை சரிவரச் செய்வனோ ஒருக்காலுஞ் செய்யமாட்டான். அதுபோல் செளத்தாபிரிக்காவிலுள்ள இந்தியர் கஷ்டப்படுகின்றார்கள் என்று பரிதவித்து பணங்களை சேகரித்தனுப்புவதாயின் அப்பணத்தினால் அங்குள்ள இந்தியர்களுக்கு சுகமுண்டாமா அன்றே அசுகமுண்டாமா என்று முதலாவது ஆலோசிக்க வேண்டியது. அவற்றுள் பணங்களை சேகரித்து அனுப்பும் தைரியத்தினால் அவ்விடமுள்ள இந்தியர்கள் இராஜாங்கத்தையே எதிர்த்துக்கொண்டு உள்ள சுகமுங் கெட்டு பாழடைவார்களாயின் அவர்களை முற்றும் சீர்திருத்தி சுகமடையச் செய்தற்கு இத்தேசத்திய இந்துக்களுக்கு இயலுமோ. இத்தேசத்திய இந்துக்களை நெல்லிக்காய் மூட்டை என்றும், மகமத்தியர்களை வெல்ல மூட்டையென்றுஞ் சொல்லத்தகுமே. அதாவது ஐந்தாறு பெயர் கூடி நெல்லிக்காய்களைப் பொறுக்கி ஓர் கோணிப்பையில் நிரப்பி விட்டால் அதற்கு நெல்லிக்காய் மூட்டையென்று பெயர். அம்மூட்டையைக் கொட்டினாலோ பல விடங்களிலும் சிதறியோடுங்கால் மறுபடியும் ஐந்தாறு பெயர்கூடி அவைகளை சேர்க்கவேண்டியதே பெரும் வேலையாகிப்போம். அவைபோல் இந்துக்களென்போருள் ஐந்தாறு பெயர் சேர்ந்து ஐந்நூறு பெயரை சேர்த்து ஓர் கூட்டத்தை முடிவுசெய்து காரியத்தை நடத்துவதாயின் கூட்டம் முடிந்தவுடன் மறுபடியும் அவர்களைக் கூட்டல் வேண்டுமேயன்றி அவர்களே முறிந்து சேரமாட்டார்கள் ஆரம்பத்தில் வீரியச் செயலுற்று வரவரக் காரிய ஊழலுற்றுப்போவது அநுபவமுங் காட்சியுமாயிருக்க அவ்விடமுள்ள இந்தியர்களுக்கு இவ்விடமுள்ளோர் வீண் வைராக்கியத்தையும், வீணாய உற்சாகத்தையும் உண்டாக்கிவிடுவது பிசகேயாம்.
ஈதன்றி பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் செளத்தாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களின் கஷ்டங்களை நோக்குவதில்லை என்று வீண்பிரளி செய்வதும் பிசகேயாம். அதாவது பிரிட்டிஷ் ஆட்சியோர் செளத்தாப்பிரிகர்களுக்கு சுயராட்சியங் கொடுத்துவிட்டார்கள் அத்தகைய ஆட்சியில் இராஜாங்க காரியாதிகளில் ஏதேனுங்குறைவுறுங்கால் அவர்களுடன் கலந்து ஆலோசிப்பார்களன்றி அவ்விடத்தியக் கூலிகளது உள் சீர்திருத்த விவகாரங்களில் மறந்தும் பிரவேசிக்கமாட்டார்கள். அவரவர்களது தேச உட்சீர்திருத்தங்களை அவர்கள் வசதிகள் எவ்வகையோ அவ்வகையாகச் செய்துக்கொள்ளுவார்கள். அதன் மத்தியில் நீதியும் நெறியுமைந்த பிரிட்டிஷ் ஆட்சியார் பிரவேசிக்க வேண்டுமென்பதும் நோக்கவேண்டுமென்பது நியாயவழுவேயாம்.
இத்தேசத்திலுள்ள பூமிகள் யாவையுஞ் சரிவர உழுது பண்படுத்தி சீவிக்காது புறதேசங்களுக்குப்போய் இத்தியாதி கஷ்டங்களையும் அநுபவிப்பதற்கு ஏதுவாக இருந்தவர்கள் யார், பொய்யாகிய சாதிநாற்றத்தைப் போர்த்துத் திரிவோர்கள் அன்றோ. இப்போது அவர்களுக்காகப் பரிதவித்து பணஞ் சேர்ப்பவர்கள் யார், அவர்கள் தானோ, இவர்கள் வேறோ விளங்கவில்லையே. இத்தேசப் பூர்வக் குடிகளாம் ஆறு கோடி இந்தியர்களை தலையெடுக்கவிடாமலும் சீர்பெறவிடாமலும் முன்னேற விடாமலும் பலவகையாலுங் கொல்லாமற் கொன்று பாழ்படுத்தி வருவதுடன் தீண்டக்கூடாதவர்கள் தீண்டக் கூடாதவர்கள் என்று தாழ்த்தி இழிவடையச் செய்து வருவோர் தங்களுடலில் துர்நாற்ற மலத்தையும் துர்நாற்ற நீரையும் துர்நாற்ற சீழையும் துர்நாற்ற வழும்பையும் சேர்த்து வைத்துள்ள தேசிகர்களோ, அன்றேல் பொறாமெ வஞ்சினங்குடிகெடுப்பு நிறைந்த பூவாலர்களோ யாதும் விளங்கவில்லை. ஆதலின் இத்தேசத்தில் வாழும்பூர்வ இந்தியர்களின் கஷ்டம் விளங்காதிருத்தலால் இருதிரத்தாரின் கஷ்டங்களையும் சீர் தூக்கி இனிது விளக்குவாம்.
- 7:28; டிசம்பர் 17, 1913 -