அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/315-383

விக்கிமூலம் இலிருந்து

311. சௌத் ஆபிரிக்காவிலிருக்கும் இந்தியர்களுக்கு இத்தேசத்தோர்படும் பரிதாபம் அன்புமிகுத்தப் பரிதாபந்தானோ ஆராய்வோமாக

இவ்விடமிருந்து செளத்தாபிரிக்காவுக்குப் போனவர்கள் யாவரும் சீவனத்தை நாடி கூலியாட்களாகப் போனவர்களே அன்றி உத்தியோகமுறையால் அழைக்கப் பெற்றவர்கள் அன்றாம். அத்தேசத்தோர் கடினமாய் வேலை வாங்குவார்களாயின் அங்குள்ள மேலதிகாரிகளுக்குத் தெரிவித்துக் கொள்ளவேண்டியதே அவற்றிற்குப் பரிகாரம். அவர்களுங் கேளாவிடிலோ அவ்விடம் விட்டு வேறிடம் அகலவேண்டியதே முடிவாம். அவைகளின்றி அத்தேசமே போதிய சுகத்திற்கு ஆதாரமாயிருக்கின்றதென்று எண்ணி அவ்விடமே நிலையாயுள்ளவர்களுக்கு அதிகமாய வரிகளை விதித்திருப்பார்களாயின் அவற்றை செலுத்தக்கூடிய அந்தஸ்துள்ளவர்கள் செலுத்தியும் அவ்வரியை செலுத்தக் கூடாத ஏழைகள் தங்கள் வருமானங்களை மேலதிகாரிகளுக்கு விளக்கி அவ்வரியைக் குறைக்கும் வழியைத் தேடிக் கொள்ளல் வேண்டும். அவைகளையும் அவர்களேற்றுக் கொள்ளாவிடில் அத்தேசத்தைவிட்டு நீங்கவேண்டியதே அதற்குப் பரிகாரம்.

அத்தேசத்தார் உலாவுமிடங்களிலும் நடக்கும் பாதைகளிலும் அவர்களை நடக்கக்கூடாது என்றாலோ, இவர்கள் உலாவுதற்கும் இடமும் நடக்கும் பாதையும் வேறு தேடிக்கொள்ள வேண்டியதேயாம். அதுவும் கிடைக்காவிடில் உள்ளயிடமே போதுமென்று சுகிக்க வேண்டியதே அழகாம்.

இத்தியாதி சுருக்க ஏதுக்களை தேடாமலும் இராஜாங்கத்தோர் நூதனமாக ஏற்படுத்திய சட்டங்களின் உட்கருத்துயாதென்று அறியாமலும் அவரவர்கள் மனம் போனவாறு இரண்டொரு வாசித்தவர்கள் எழும்பி யாதொன்றும் அறியா பேதை மக்களைக் கலைத்து இராஜாங்கத்தை எதிர்க்கும்படியானப் போதனைகளை யூட்டி அவர்களை அல்லலடையச் செய்துவிட்டு செளத்தாப்பிரிக்காவிலுள்ள இந்தியக் குடிகள் யாவரும் மெத்தக் கஷ்டத்தை யநுபவிக்கின்றார்கள், அதனை பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் நோக்கவேண்டும், இந்தியா மக்கள் யாவரும் அவர்களுக்குப் பணவுதவி செய்யவேண்டுமென்று பத்திரிகைகளின் வாயலாகவும் கூட்டங்களின் மூலமாகவும் கூச்சலிடுவதினால் செளத்தாப்பிரிக்காவிலுள்ள இந்திய மக்களின் கஷ்டங்கள் நீங்கிப்போமா. ஒர் இராஜாங்கத்தார் கூடி ஆலோசித்து ஏற்படுத்தியுள்ள சட்ட திட்டங்களை கூலியாட்களாகக் குடியேறியுள்ளவர் களுக்கு பயந்து எடுத்து விடுவார்களோ, அது கஷ்டமேயாம்.

அவ்விடமுள்ள நன்கு வாசித்தவர்கள் இரண்டொருவர் கூடி இராஜாங்கத்தார் இத்தகையாய சட்டங்கள் ஏற்படுத்தியுள்ளக் காரணங்கள் யாதென்று அறிந்து அக்காரணத்திற்குத்தக்க வழிகளை உணர்ந்து அவ்விராஜாங்கத் தோரையே வணங்கி, இந்தியக் குடிகளின் இடுக்கங்களை நீக்கி ஆதரிக்கவேண்டுமென்று கேட்டிருப்பார்களாயின் அவ்விராஜாங்கத்தோரும் அத்தேசத்தியக் குடிகளும் இதக்கமுற்று இந்திய தேசத்திலிருந்து நமது தேசத்தில் வந்து குடியேறி இருப்பவர்களும் நமது குடிகள்தானே என்று பாவித்து சகல சுகங்களும் அளிக்க முன்வருவார்கள். அங்ஙனமின்றி கூலியாளாகச் சென்றவர்கள் இராஜாங்க சட்டத்தை எதிர்க்கயேற்பட்டுள்ளதே அச்சட்டந் தோன்றுவதற்கு ஏதுவாய்ச் செயல்கள் இந்தியக் குடிகளிடம் இருந்துள்ளது என்பது சொல்லாமலே விளங்குகிறதன்றோ. கூலியாகச் சென்றவர்கள் இராஜாங்கத்தோரை எதிர்க்காமல் எதிர்ப்பதால் தங்களைப் போல் இன்னுஞ் சுதந்தரத்தைக் கொடுத்து வருவதான் தங்களை எதிர்த்துக் கொள்ளுவார்களென்றறிகுறியாகவில்லையோ. இவைகள் யாவையும் இந்து சமுகப் பெரியோர்கள் ஆலோசியாது அவ்விடங் கஷ்டத்தை அநுபவித்தும் சுக சீவிகளாக வாழ்கும் இந்தியர்களை இன்னும் இன்னு மிகுதுக்கத்தில் அவதியுறச் செய்வது அழகல்லவே. இந்து சமுகப் பெரியோர்கள் யாவரும் கூடி நமக்கு வேண்டிய பணங்களை உதவிசெய்வார்கள், நாம் இராஜாங்கத்தை எதிர்த்தே நிற்போமென்று அவ்விடத்தில் குடியேறியுள்ளவர்கள் மென்மேலும் எதிர்க்கவும், அவர்களை இன்னுமின்னும் அடக்கியாள அவ்விடத்திய ராஜாங்கத்திற்கு ஏதுவுண்டாகிப்போமன்றோ. கூலிகள் இராஜாங்கத்தை எதிர்க்காமலெதிர்ப்பது கெடாமல் கெடுவதற்கே வழியன்றோ.

அவ்விடமுள்ள இந்தியக் குடிகளின் மீது பரிதாபமுறும் பத்திரிகைகளும் பரிதாபமுறுங்கூட்டங்களும் பணஞ் சேர்ப்பவர்களும் மெய்யாய பரிதாபிகள்தானோ. அவ்வகை மெய்யாயப் பரிதாபிகளும் இத்தேசத்திலிப்பார்களாயின் ஆறுகோடி மக்கள் இவ்விடம் அல்லலும் அவதியுமடைந்து வருவோர் மீது பரிதாபமில்லாதது என்னை இந்துக்கள் நடக்குங்கொடிபாதைகளில் ஏதோ ஓர் ஏழை வந்து விடுவானாயின் எதிரில் பறையன் வருகின்றான், ஓலையன் வருகின்றான், தீயன் வருகின்றான் சண்டாளன் வருகிறானெனக் கூச்சலுங் கொள்ளையுமிட்டு, அவன் வந்த வழியே பின்னுக்கோடும்படிச் செய்வதைக் கண்ணாற் கண்டதில்லையோ, செவியிலேனுங் கேட்டதில்லையோ நல்லத்தண்ணீர் மொண்டு குடிக்கவிடாமலும் வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும் அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும் நாள் முழுவதும் உழைக்கும் பண்ணையாட்களுக்கு ஓராணாவிற்கு மேல் கூலிகொடாமலும் கோலுங் குடுவையும் எலும்புந்தோலுமாக கொல்லாமற் கொன்றுவருவதை கண்ணாரக் காணவில்லையோ, செவியாரக் கேட்கவில்லையோ. இத்தியாதி துன்பத்தை அநுபவித்துவரும் ஆறுகோடி மக்களும் இந்தியர்களல்ல போலும். அதனாலிவர்கள் மீது பரிதாபமுமில்லை போலும். அந்தோ இவர்கள் படுந்துன்பத்திலுங் கஷ்டத்திலும் செளத்தாப்பிரிக்கா இந்தியர்கள் காலபாகமேனும் அனுபவிப்பதைக் காணோமே. அத்தகையோர்மீது வித்தியா புருஷர் யாவரும் பரிதாபமுற்று பணஞ் சேர்ப்பதாயின் இத்தேசத்திலுள்ள ஆறு கோடி மக்களும் அதோகதியடைந்து நாசமாக வேண்டுமென்னுங் கருத்துபோலும். இல்லாது மெய்யாய பரிதாபிகளாயின் உள்ளூரில் அல்லல்படும் இந்தியர்களுக்கு சுகங்கொடுத்து அயலூரிலுள்ள விந்தியர்களின் கஷ்டங்களை நீக்குவார்கள். அங்ஙனமின்றி உட்சுவரிடிந்துவிழ, புறச்சுவரைப் பூசுவதைப்போலும், தன் கண்ணில் கன்னத்தைத் தடவிக்கொண்டு அன்னியன் கண்ணில் வெண்ணெயைத் தடவுவது போலும் இத்தேசத்தில் பொய்யாய சாதிவேஷ கொடு நாற்றத்தால் ஆறுகோடி மக்கள் சொல்லொண்ணா பலவகையான துன்பங்களை அநுபவித்து வருவது உலகமெங்கும் பிரசித்தமாயிருக்க அவைகளைக் கண்ணோக்காது செளத்தாப்பிரிக்காவில் சாதிபேதம் பாராட்டுகின்றார்கள், அவைகளை நீக்கவேண்டுமென்று இத்தேசத்தோர் முயன்று நிற்பது என்ன பரிதாபமோ, ஏது கருணையோ விளங்கவில்லை.

இத்தேசத்துள் சிறிய சாதியோன் ஏதொரு குற்றஞ் செய்யினும் அவனைத் தொழுவிலிட்டு வாதிக்கவேண்டும், பெரிய சாதியோன் ஏதொரு குற்றஞ் செய்து விடுவானாயின் அவனை யாதொரு உபத்திரவமின்றி ஓர் நிலையிலிருக்கச் செய்வதுமாய பாராபட்ச சட்டங்களை நிலைபடுத்திக் கொண்டு செளத்தாப்பிரிக்காவின் மூன்று பவுன் வரியிட்டிருக்குஞ் சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று முயல்வது என்ன நீதியோ, யாது கருணையோ ஏது பரிதாபமோ விளங்கவில்லை.

இத்தியாதி வித்தியார்த்திகளின் மித்திரபேத பரிதாபம் அவ்விடமுள்ள இந்தியர்களை சீர்கெடுக்குமோ, சீர்படுத்துமோ, சற்று ஆழ்ந்து ஆலோசிக்க வேண்டியதே ஆகும்.

- 7:27; டிசம்பர் 10. 1913 -