அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/322-383
318. இந்துக்களும் மகமதியரும் ஒற்றுமெய் அடைவரோ வேற்றுமெபிரிவரோ
இவ்விடம் ஒற்றுமெய் என்பது சமதேகிகளாவரோவென்பதும் வேற்றுமெயென்பது வேறு வேறு தேகிகளாவரோ என்பதேயாம். இந்துக்களுக்குள்ள சாதிபேதி மற்றும் மகமதியருக்குள்ள மதபேதப்பற்றும் அகலும் வரையில் ஒற்றுமெ அடைய மாட்டார்கள் என்பதே துணிபு.
இந்துக்களென்போருள் பி.ஏ., எம்.ஏ, பட்டம் பெற்ற விவேகிகள் சிலர் தோன்றி சாதிபேதத்தால் தேச விருத்திக்கே கேடுண்டாகின்றது அவற்றை ஒழித்து விடவேண்டுமென்று பந்தல் பிரசங்கங்களிலும் வெளிப் பிரசங்கங்களிலும் கோவிற் பிரசங்கங்களிலுங் கூச்சலிட்டுகொண்டே வருகின்றார்கள். அவர்கள் பிரசங்கத்தை செவியிலேற்காது மறுப்போர் ஆயிரம் பேராயின் ஏற்போர் இருவரோ ஒருவரோ, அறியோம். காரணமோ வென்னில் பிரசங்கிப்போரே பேசிய வழி நடவாததினாலேயாம். இந்துக்களென்போருள் மூன்று நான்கு பி.ஏ. பட்டம் பெற்றவர்களும் இரண்டு மூன்று எம்.ஏ. பட்டம் பெற்றவர்களும் கூடிக்கொண்டு சாதிபேதங்களை ஒழித்துவிட்டோம் என்றால் அம்மொழிபொருந்துமோ. மகமதியருள் ஏதோவோர் எம்.ஏ. பட்டம் பெற்றவரேனும் பி.ஏ. பட்டம் பெற்றவரேனும் இந்துக்களது கூட்டத்தில் அக்கிராசனம் வகித்து சிற்சில சீர்திருத்தங்களை பேசி விடுவாராயின் அதனால் இந்துக்களும் மகமதியரும் சேர்ந்து விட்டார்களென்னும் அறிகுறியாமோ, முக்காலும் ஆகாவாம். இந்துக்களென்போரில் சிலர்கூடி தங்களுக்குள் பி.ஏ, எம்.ஏ, பட்டம் பெற்றவர்களை அடுத்து மகமதியர்கள் கூடி பசுக்களையும் எருதுக்களையுங் கொல்லுகிறார்கள், அவற்றை தடுக்க வேண்டுமென்னும் முறையிடில் அதனைக் கேட்போர் பலரறிய மாமிஷங் தின்பவராயின் அதனால் குற்றமென்னவென்று மறுப்போர், யாருமறியாமல் மாமிஷந் தின்போரும் தினனாதவருமாயின் கலகத்திற்குத் தலைமெ வகிப்பர். அவர்களது பண்டிகையில் ஏதோ வொன்றைக் கொன்று தின்கின்றார்கள் அதனால் தோஷமென்ன என்போர் நான்கு பேரிருக்கின், அவைக் கூடாதென துடைதட்டி மறுப்போர் நாலாயிரம் பேர் தோன்றுவது அநுபவமுங்காட்சியுமாக விளங்குகின்றதே. மகமதியருள் சிலர்க்கூடி ஓர் பி.ஏ. பட்டம் பெற்றுள்ள மகமதியரை அடுத்து இந்துக்கள் கூடிக்கொண்டு நமது பள்ளி வாசலண்டை மேளமடிக்கின்றார்கள். அவர்களை அடக்க வேண்டுமென்பரேல், அதற்கு பி.ஏ. அவர்கள் மறுத்து, மேளமடித்தால் என்ன, அடித்துக்கொண்டே போய்விடுகிறார்கள் அதனால் தோஷமென்னவென்று கூறிவிடுவாராயின் அவர் ஒருவர் வார்த்தையை மறுத்து ஓராயிரம் பேர் கூடி கலக்கத்தை உண்டு செய்வது உலகப்பிரசித்தமாச்சே. இத்தகைய உள் சீர்திருத்தக் கலகத்தை உண்டு செய்யவிடாத, ஒற்றுமெபெறவும் அன்புப்பாரட்டவும் இல்லாதவர்கள் சுயராட்சியம் பெற்று குடிகளை அடக்கி இராட்சிய பாரமுந் தாங்குவரோ, இல்லை, கீரியையும் பாம்பையுங் கீரைத்தோட்டத்திற்குக் காவல் வைத்தது போலாம். மாட்டைப்பற்றிய இந்துக்கள் கலகத்தையும் பள்ளிவாசலைப் பற்றிய மகமதியர் கலகத்தையும் தங்களுக்குத் தாங்களே அடக்கி ஒற்றுமெப்படுத்த இயலாது பிரிட்டிஷ் போலிஸ் வந்து அடக்கவும் நியாயஸ்தலமேகவும் அவ்விடம் ஓர் மகமதிய நியாயாதிபதி இருப்பராயின் தங்கள் விசாரணையை செய்யலாகாது ஓர் துரையிடம் போகவேண்டுமென்பதும், ஓர் இந்து நியாயாதிபதியிருப்பாராயின் மகமதியர்கள் யாவரும் ஒன்றுகூடி தங்கள் விசாரணையை இந்து விசாரிப்பரேல் நியாயங் கிடைக்காது, ஒர் துரையிடமே போகவேண்டுமென்று கட்சி, பிரிதி கட்சியில் சலஞ்சாதிப்பவர்பால் சுயராட்சியங் கொடுத்துவிட்டு ஒருவருக்கொருவர் இராஜாங்கக் கலகமே நேர்ந்து விடுமாயின் அவற்றை அடக்குதற்கு பிரிட்டிஷ் படைவீரரே வந்து தீரவேண்டுமே யன்றி வேறெருவரால் அடங்குவது அரிதாமன்றோ. இந்துக்களுக்கும் மகமதியருக்கும் சேர்த்து சுயராட்சியங் கொடுப்பதிலும் பெரும் கலகமே உண்டாகிப்போம். மகமதியர் மதத்திலும் பாஷையிலும் ஒற்றுமெயிலும் அமைந்தவர்களென்று எண்ணி இந்திய சுயராட்சிய பாரத்தை அவர்கள் பால் ஒப்பிவிடுவதாயின் பல சாதிவேற்றுமெயும் பல மதப்பிரிவுகளும் நிறைந்துள்ள இந்துக்களால் மீளாமித்திர பேதக்கலகங்களே பெருகி தேசமும் தேசமனுக்களும் சீரழியும்படி நேர்ந்துபோம். இந்துக்களென்போருக்கே இந்திய தேச சுயராட்சியத்தைக் கொடுப்பதாயின் உள்ள சாதிபேதக் கேட்டாலும் மதபேதக் கேட்டாலும் சுயநல விருப்பாலுந் தேசம் அன்றே பாழடைந்துபோம். ஈதன்றி இராட்சிய பாரத்தை நியாயவாயலிற் கருதுங்கால் இந்துக்களென்போரும் இந்திய தேசத்தில் வந்தேறிய குடிகளே யாவர். மகமதியரென்போரும் அவ்வகையேயாம். இவ்விருதரத்தாருக்கும் இந்தியதேசம் சுயதேசமாகாததினால் அவர்கள் சுயராட்சியம் கேட்பதற்கும் ஆதாரமில்லை, பிரிட்டிஷ் அரசாட்சியார் அவர்களுக்குக் கொடுப்பதற்கும் ஆதாரமில்லை. இந்திய தேசப்பூர்வக் குடிகள் யாரோ அவர்களைக் கண்டு தெரிந்து இதே அரசாட்சியில் அவர்களும் முன்னேறி சுகச்சீர்பெற்று சுகராட்சியம் விரும்புவார்களாயின் அப்போதும் அவர்கள் இராட்சியபாரம் தாங்குவரா தாங்கமாட்டார்களா என்றறிந்தேயளிப்பது உசிதமாகும். ஆதலின் நமது பூர்வ இந்திய தேசக்குடிகளும் வந்தேறியுள்ளக் குடிகளும் தேறவாலோசித்து செய்யவேண்டிய காரியங்களும் பேசவேண்டிய வார்த்தைகளையும் விட்டு வெறும்வாயை மெல்லுவதுபோல் நாலைந்து பி.ஏ. பட்டம் பெற்றவர்களும் இரண்டொரு எம்.ஏ. பட்டம் பெற்றவர்களும் நானூறு ஐன்னூறு பெயரைச் சேர்த்துக்கொண்டு சுயராட்சியங் கேட்கப்போவதும் இராஜாங்க சட்டங்களைத் திருத்தப் பார்ப்பதும் வீண்பிரளியேயன்றி யாதொரு பயனுந் தராவாம். இந்திய தேச மனுக்களோ பிரிட்டிஷ் அரசாட்சியார் முன்னிலையில் பத்து வயதிற்கு ஒப்பாய சிறுவர் போலிருக்கின்றார்களன்றி வேறில்லை. இன்னுங் கற்றுத் தெளிந்து இராஜாங்க நீதிநெறியாளுகையீதீதென்றுங் குடிகளின் சுகவிருத்திகளின்னது இன்னதென்றும் கண்டு தெளிவதற்கு இன்னும் நெடுநாட் செல்லும். பிரிட்டிஷ் ஆளுகையின் செயலாலும் அவர்கள் அளித்து வரும் கல்வியாலும் அவர்கள் காண்பித்து வரும் வித்தையாலும் அவர்கள் போதித்துவரும் புத்தியாலும் மெய்யின்னது பொய்யின்னதென்றும் சுகமின்னது அசுகமின்னதென்றும் பலசாதி பல மதம் பல பாஷை மக்கள் ஒவ்வொருவருங் கிஞ்சித்துத் தெளிந்து சுகச்சீர் பெற்று முன்னேறி வருகின்றார்கள். இத்தகைய சுகவிருத்தி காலத்தில் தீட்டிய மரத்திற்கு கூர் பார்ப்பது போலும் உண்ட வீட்டிற்கு ரண்டகஞ் செய்வதுபோலும் அன்னமிட்டோர் வீட்டிலேயே கன்னமிடுவதுபோலும் அன்னை தந்தையர்போல் ஆதரித்து வரும் அரசாட்சியோரையே எதிர்ப்பதும் அவர்களரசாட்சியையே அபகரிக்க வழிதேடுவதுமாய ஏதுக்கள் நீதிக்கும் நெறிக்கும் பொருந்தவே பொருந்தாவாம். நீதியும் நெறியும் அமைந்த செயல்களே சகல சித்தியையுமளிக்கும். நீதிநெறி அற்றச் செயல்களோ உள்ளத்தையும் பாழ்படுத்திப்போடும் என்பது சத்தியம் சத்தியமேயாம்.
- 7:37: பிப்ரவரி 18, 1914 -