அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/337-383

விக்கிமூலம் இலிருந்து

8. மதுரை செந்தமிழ்

ம-அ-அ-ஸ்ரீ மதுரை செந்தமிழ் பத்திராதிபருக்குப் பட்சமான வந்தனம்:- ஐயா தாம் பராபவ வருஷம் சித்திரைமீ வெளியிட்டுள்ள பகுதி-6 தொகுதி-4 பக்கம் 223-ல் பழந்தமிழ் குடிகள் என முகப்பிட்டு அவற்றுள் காலவரையின்றி மிகு பழயகாலமெனக் கண்டு இந்தியாவின் வடபாலில் ஆரியர் படிப்படியாகக் குடியேறி இத்தேசத்தோருடன் பெரும் போர்புரிந்து ஜெயம்பெற்றதாகக் குறித்திருக்கின்றீர். அவ்வகைக் குறிப்பிற்கு எத்தகைய சரித்திர ஆதாரங்களும் கிடையாது. ஆரியர்கள் இத்தேசத்தோருடன் போர்புரிந்து ஜெயம் பெற்றார்கள் என்னும் சரித்திராதாரம் ஏதேனும் இருக்குமாயின் அதன் காலவரை வம்மிஷாவளி முதற் கண்டெழுதுவீராக.

ஈதன்றி 426-ம் பக்கத்தில் பாணன், பறையன், துடியன், கடம்பனென்னும் நான்கு வகுப்பினரைக் குறிப்பிட்டு அன்னோர் ஆயிரத்தி எண்ணூறு வருஷங்களுக்கு முன்பே இத்தேசத்தில் இருந்துள்ளார் என்றும் வரைந்திருக்கின்றீர்.

அத்தகையக் காலவரைக்கும் அப்பெயர்கள் இருந்ததென்பதற்கும் ஆதாரமென்னை.

பாணரென்னும் பெயர் கலிவாணர் என்னும் வித்துவச் செயலால் தோன்றியவை. அவற்றுட் செய்யுள் அமைப்போரைப் பாணர் என்றும், யாழுடன் இசைபாடுவோரை யாழ்ப்பாணரென்றும் கூறுவர்.

பாணர் என்பதும் யாழ்ப்பாணரென்பதும் கவிபாடுவோருக்கும் இசைபாடுவோருக்கும் உரிய பெயர்களாம். இப்பெயர் வித்துவத்துக்குரிய எப்பாஷைக்காரனுக்கும் பொருந்தும். பறையன் என்பதில் பறை - பகுதி, யகரமெய் சந்தி, அன் ஆண்பால் விகுதியாகக் கொண்டு பறையடிப்போருள் வாய்ப்பறை அடிப்பவனும் பறையனாகின்றான். தோற்பறை அடிப்பவனும் பறையனாகின்றான். இவ்விருதிரத்தாருள் ஆரியரிலும் வாய்ப்பறை, தோற்பறை அடிப்பவரும் உண்டு. அநாரியரிலும் வாய்ப்பறை, தோற்பறை அடிப்பவரும் உண்டு. அவர்களைக் கருதாது பறையர்கள் என்னும் ஓர் கூட்டத்தார் இருந்ததாகக் குறிப்பிடும் காரணம் யாது.

“பாணன், பறையன், துடியன், கடம்பன்” என்று தாம் குறிப்பிட்டுள்ள பாடல் எக்காலத்தில் யாவரால் எழுதியது. புறப்பாட்டாலுணரலாம் என்று வரைந்திருக்கின்றீர். அப்புறப்பாட்டென்னும் ஓர் நூலுண்டா, அது யாவரால் இயற்றியது. எக்காலத்தது. அஃதெங்குளது. அவற்றை விளக்கும்படி வேண்டுகிறேன்.

- 2:5; சூலை 15, 1908 - 9