அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/338-383

விக்கிமூலம் இலிருந்து

9. வேஷப் பிராமண வேதாந்த விவரம்

அதாவது ஓர் தேயத்தைக் குடிபடை- அமைச்சுடன் ஆண்டுவரும் அரசனை மன்னனென்றும், இறைவன் என்றும் கொண்டாடி குடிபடைகள் யாவும் அவனடைக்கலத்தில் மடங்கினிற்பார்கள். அவனே யதார்த்த ராசனாவன்.

ஓர் எழிய குடும்பத்தோன் அவ்வரசனைப் போல் நடையுடை பாவனைக்காட்டி அரசனென்று சொல்லி நடிப்பானாயின் அவனை வேஷராசனென்று கூறுவர்.

இலட்சம் பொன்னுக்கு ஏற்பட்ட திரவியம் உடையவளை இலட்சுமி என்பார்கள். உடுக்கக் கந்தைக்குங் குடிக்கக் கூழுக்கும் இல்லாதாள் இலட்சுமீயென்று அழைக்கப்படுவாளே யாயின், அவள் நாம லட்சுமியேயாவள்.

அதுபோல் நீதியும், நெறியும், வாய்மெயும், தண்மெயும் நிறைந்த பிராமணனை மற்றும் விவேகிகள் பிராமணர் என்று அழைப்பார்களன்றி தங்களுக்குத் தாங்களே பிராமணர் என்று சொல்லித் திரியமாட்டார்கள்.

அவர்கள் செயலோ, தன்னைப்போல் சருவ உயிர்களையும் பாதுகாத்தலும் சாந்தகுணம் பெருக்கமுற்று சகல பற்றுக்களும் அற்று சமணநிலை கடந்து பிரமமணத்தால் சருவ சீவர்களுக்கும் உபகாரியாக விளங்குவார்கள். இவர்களையே எதார்த்த பிராமணரென்று கூறப்படும்.

இந்நியாயர்களை மகட் பாஷையில் பிம்மணரென்றும், சகட பாஷையில் பிராமணர் என்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைப்பார்கள்.

பாலி : பிம்மதேயதேபிம்மண.
சமஸ்கிருதம் : பிரம்ம சம்பத்தே பிராமண.
தமிழ் :

திரிக்குறள்

அந்தணரென்போ ரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மெய் பூண்டொழுகலால்.

நல்லாப்பிள்ளை பாரதம்

நீதியும் நெறியும் வாய்மெயு முலகில் / நிறுத்தினோன் வேதியனன்றி
வேதியனேனு மிழுக்குறி னவனை / விளங்கு சூத்திர னெனவேத
மாதவர் புகன்றா றாதலாலுடல / மாய்ந்த பின் பாவதோர் பொருளோ
கோதிலாவிந்தப் பிறவியில் வேதக் / குரவநீயல்லையோகுரியாய்.

சமண நிலை கடந்து அறஹத்துக்களால் உபநயனமென்னும் ஞானக்கண் பெற்று உள்விழி பார்வை மிகுதியால் உண்மெய் உணர்ந்து புறமெய் அகற்றி தானே தானே தத்துவ சுயம்பிரகாச பரிநிருவாண சுகமடைவானாயின் அவனையே இருபிறப்பாளனென்று கூறப்படும். அதாவது தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும் பரிநிருவாண பிறப்பொன்றுமேயாம். இத்தகைய உபநயனமென்னும் ஞானவிழி பெற்று ஞானசாதன மிகுதியால் இருபிறப்பாளனாகும் பரிநிருவாணத்திற்கு உரியவனெவனோ அவனே யதார்த்த பிராமணனாவான்.

ஞானபோதம்

ஊனக்கண் அன்றென் றுளக்கண் அளித்தபின்
ஞானவநுபவ முரையென் றுரைத்தது.

கைவல்யம்

அசத்தி லெம்மட்டுண் டம்மட்டும் - பராமுக மாகினாய்
நிசத்தி உள்விழி பார்வை - யிப்படி நிறந்தர பழக்கத்தால்
வசத்தி லுன்மன நின்று - சின்மாத்திர வடிவமாகிடில் மைந்தா
கசத்த தேகத்தி விருக்கினும் - ஆனந்தக்கடல் வடிவாவாயே.

பட்டினத்தார்

நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன நீமனமே
மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக்கிடக்குது யெழுகோடி மந்திரம் என்ன கண்டாய்
ஆற்றிற் கிடந்துத் துறைதெரியாம வலைகின்றயே.

அங்ஙனமின்றி பெண்டு பிள்ளைக் கூட்டத்தினின்று பொருளாசை மிகுதி கொண்டு தன்னவர்களை ஏற்றியும் அன்னியர்களைத் தூற்றியும் சீவகாருண்ணிய மற்று தன்னையொற்ற மக்களைக் கொல்லாமல் கொன்று பத்துக்குடிகள் நாசமடைந்த போதிலும் தன் குடி சுகமடைந்தால் போதும் என்னும் பொறாமெயே ஒருருவாகக் கொண்டுள்ளார்கள் தங்களை பிராமணரென்று சொல்லித்திரிவது வேஷபிராமணமேயாகும்.

பெளத்த தன்மத்தோரால் பிரமமென்னும் சாந்தம் நிறைந்தவர்களுக்கு பிராமணர் என்றும் புஜபல க்ஷாத்திரியமுடையவர்களுக்கு க்ஷத்திரியரென்றும் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறுகிறவர்களுக்கு வைசியர் என்றும் கையையுங் காலையும் ஓர் சூஸ்திரமாகக் கொண்டு பல சூஸ்திரங்களைச் செய்து பூமிகளின் விருத்திகளையும் கைத்தொழில் விருத்திகளையுஞ் செய்வோர்களுக்கு சூத்திரரென்றும் அவரவர்கள் தொழில்களுக்கும் விவேக விருத்திக்கும் வல்லபத்திற்கும் தக்கப் பெயர்களைக் கொடுத்திருந்தார்கள்.

அத்தொழிற்பெயர்கள் யாவையும் வேஷபிராமணர்கள் சாதிப் பெயர்களாக மாற்றி மதுப்பிரஜாபதி நான்கு வருணாசிரமங் கூறியுள்ளார் என்னும் மநுஸ்மிருதியில் ஒவ்வொரு சாதியோனும் அவனவன் பெயர்களிற்றில் இன்னின்ன வருணத்தானென்று அறிந்து கொள்வதற்கு தொடர்மொழிகள் வகுத்திருக்கின்றார்கள். அதாவது:-

மநுஸ்மிருதி

சாதக கர்மாதி சம்ஸ்காரம் நுக-ஙஉ ம் வசனங்களில் ஒரு பிராமணன் இராமசாமி என்னும் பெயர் வைத்துக் கொண்டிருப்பானாயின் அவனை பிராமணரென்று மற்றவர் அறிய இராமசாமி சர்மா என்னும் தொடர் மொழி சேர்த்துக் கொள்ளல் வேண்டும். ஒரு க்ஷத்திரியன் முத்துசாமி என்னும் பெயர் வைத்துக்கொண்டிருப்பானாயின் அவனை க்ஷத்திரியனென்று மற்றவர் அறிய முத்துசுவாமிவர்மா என்னும் தொடர்மொழியை சேர்த்துக் கொள்ளல் வேண்டும். ஒரு வைசியன் பொன்னுசாமி என்னும் பெயரை வைத்துக் கொண்டிருப்பானாயின் அவனை வைசியன் என்று மற்றவர் அறிய பொன்னுசாமி பூதி என்னும் தொடர் மொழியைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

யீதன்றி சச-ம் வசனத்தில் இவர்கள் வருணாசிரம விதிப்படி பிராமணன் பஞ்சு நூலினாலும், க்ஷத்திரியன் சணப்ப நூலினாலும் வைசியன் வெள்ளாட்டு மயிரினாலுந் திரித்த பூ நூலணைதல் வேண்டும்.

(மநு) மாமிஷத்தின் விதிவிலக்கு

ஙக-வது வசனம்.

பிராமணன் செய்யும் எக்கியத்திற்கே பசுக்களை பிரம்மா உண்டு செய்திருக்கின்றார்.

(மநு) அநித்தியயனம் கக-வது வசனம்.

சூத்திரன் சமீபத்திலிருக்கும்போது வேதத்தை வாசிக்கப்படாது. (மநு) யூகிதாக்கினி விஷயம் எக - ம் வசனம்.

ஒரு பிராமணன் பதிதர், சண்டாளர், புழுக்கையர், வண்ணார், செம்படவர் இவர்களுடன் ஒரு மரத்திலடியிலேனும் வாசஞ் செய்யப்படாது.

(மநு) சங்கர்சாதியா னுற்பத்தி ச-ம் வசனம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நான்கு வருணந்தவிர ஐந்தாவது வருணங் கிடையாது.

(மநு) உதாஹரணம் அஉஉ-ம் வசனம்.

ஒரு சூத்திரன் மோட்சம் வேண்டுமானாலும் பிராமணனையே தொழுதுவரவேண்டும், ஜீவனம் வேண்டுமானாலும் பிராமணனையே தொழுது கொண்டு வரவேண்டும்.

- 2:6: சூலை 22, 1908 -

பராசஸ்மிருதி முதலத்தியாயம். 22-ம் வசனம்.

எக்கியத்திற்காகப் பசுக்களைக் கொல்லலாம்.

பராசஸ்மிருதி முதலத்தியாயம். 177-ம் வசனம்.

பிராமணரென்றும் வேதியரென்றும் அழைக்கப்பெற்றோரை கடவுள் வேள்விசெய்வதற்கே படைத்தார்.

பராசஸ்மிருதி ஆசாரகாண்டம். 164-ம் வசனம்.

எந்த பிராமணனாயினும் வேதத்தை ஓதாமல் வேறு நூற்களை போதிக்கின்றானோ அவன் சூத்திரனுக்கொப்பாவான்.

இத்தகைய மநுஸ்மிருதி கட்டளைகளையும் பராசஸ்மிருதி கட்டளைகளையும் குறிக்கவேண்டிய காரணம் யாதென்பீரேல்,

பெளத்த தன்மசாஸ்திரிகள் ஏற்படுத்தி இருந்த தொழிற்பெயர்கள் யாவையும் மேற்சாதி கீழ்ச்சாதி என்று ஏற்படுத்தி அவர்கள் செய்துவந்த பிராமணர்கள் செய்கைக்கு மாறுபாடுடையோரை வேஷப் பிராமணர் என்று கூறினும், இக் கீழ்சாதி மேற்சாதி என்னும் சாதிகளுக்கு ஆதாரமாக ஏற்படுத்திக் கொண்ட மநுஸ்மிருதி பராசஸ்மிருதி இவ்விரண்டிலும் வரைந்துள்ளபடிக் கேனும் இவர்கள் வேஷப்பிராமணர்களா அன்றேல் யதார்த்த பிராமணர்களா என்பதை இன்னும் விளக்க வேண்டியதற்கேயாம்.

(மநு) பத்தாவது அத்தியாயம்
86, 87, 88, 89, 92

பிராமணன் இரச வஸ்துக்கள், சமைத்த அன்னம், எள்ளு, கெம்புக்கல், உப்பு, மனிதர், பசுக்கள், சிவந்த நூல், வஸ்திரம், சணப்பு, பட்டு, கம்பளம், பழம், கிழங்கு, மருந்து, ஜலம், ஆயுதம், விஷம், மாம்ஸம், கருப்பூரம், வாசனா திரவியம், பால், தேன், தயிர், எண்ணெய், மது, வெல்லம், தருப்பை, யானை, குதிரை, சிங்கம், பட்சி, சாராயம், அவுரி, அரக்கு, இவைகளில் ஒன்றையேனும் விற்கப்படாது.

அங்ஙனம் மாம்ஸம், அரக்கு, உப்பு, விற்பவன் பதிதனாக மாறிவிடுவதுமன்றி பால் விற்பவன் மூன்று தினத்தில் சூத்திரனாகிவிடுகின்றான்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நான்கு சாதிகளுக்குமேல் ஐந்தாவதுசாதி வேறு கிடையாதென்று கூறியுள்ள சாஸ்திரத்துள், சங்கரசாதி, அநலோமசாதி, பிரிதிலோமசாதி, அபோகவசாதி, க்ஷத்தாசாதி, உக்கிரசாதி, வைதேகசாதி, அந்தராளசாதி, அபீரசாதி, திக்குவணசாதி, மாகதசாதி, சூதசாதி, புல்கசசாதி, குக்குடசாதி, வேணசாதி, விராத்தியி சாதி, வாடாதானசாதி, புஷ்பதன்சாதி, சைகன்சாதி, நிச்சுவிசாதி, நடனசாதி, கறணன்சாதி, கஸன்சாதி, காரூசசாதி, விஜன்மாசாதி, மைத்திரசாதி, பாகியசாதி, தகயுசாதி, சையின்திரிபசாதி, மைத்திரேயனசாதி, மார்க்கவசாதி, காருவாரசாதி, வைதேகசாதி, பாண்டுசாதி, சோபாகசாதி, ஆகிண்டிசாதி, அந்தியாவசாதி, என்னும் முப்பத்தியேழு சாதிப்பெயர்களைக் குறித்திருக்கின்றார்கள்.

ஆயினும் பௌத்தர்கள் தொழில்களுக்கென்று வகுத்திருந்த பெயர்களே தற்காலம் வழங்கிவருகிறதன்றி இன்னூதன மதுசாஸ்திரத்தில் ஏற்படுத்தியுள்ள மேற்கூறிய சாதிகள் ஏதேனும் தற்காலம் வழங்கிவருகின்றதா, அதுவுமில்லை.

மநுஸ்மிருதியினுள்ளும் பராச ஸ்மிருதியினுள்ளும் பிராமணரென்றும், வேதியரென்றும் வழங்கும்படியானவர்களை கடவுள் வேள்வி செய்வதற்கே உண்டு செய்தாராம். அங்ஙனம் வேள்விசெய்துவரும் பிராமணர்கள் தற்காலமுண்டோ அதுவுமில்லை.

எந்த பிராமணன் வேதத்தை யோதாமல் வேறு நூல்களை ஓதுகின்றானோ அவனை சூத்திரனென்று அழைக்கக் குறிப்பிட்டிருக்கின்றது. ஆதலின் வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பிராமணர்களுண்டோ அதுவுமில்லை.

பிரம்மா பசுக்களை எக்கியத்திற்காகவே சிருட்டித்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அதன் ஆதரவைக் கொண்டு தற்கால பிராமணர்கள் பசுக்களைச் சுட்டுத் தின்று வருகின்றார்களா அதுவுமில்லை.

ஓர் சூத்திரனுக்கு மோட்சமாயினும், சீவனுமாயினும் வேண்டுமானால் பிராமணனையே தொழுதுவரவேண்டுமெனக் குறிப்பிட்டிருக்கின்றது. அதுபோல் சூத்திரர்கள் பிராமணனை தொழுது கொண்டு வருகின்றார்களா அதுவுமில்லை.

பிராமணர்கள் செம்படவர்களுடன் ஓர் மரத்தடியிலேனும் வாசஞ் செய்யப்படாதென்று குறித்திருக்கின்றார்கள். அதுபோல் செம்படவர்களுக்கு அருகே வாசஞ் செய்யாமலிருக்கின்றார்களோ அதுவுமில்லை.

சூத்திரன் அருகிலிருக்கும்போது வேதத்தை போதிக்கலாகாதென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதுபோல் சூத்திரர்கள் அருகே வேதத்தைப் போதிக்காமலிருக்கின்றார்களோ அதுவுமில்லை.

பிராமணனுக்கு சர்மாவென்றும், க்ஷத்திரியனுக்கு வர்மாவென்றும், வைசியனுக்கு பூதி என்றும் அவரவர்கள் பெயர்களினீற்றில் இத்தொடர் மொழிகளை சேர்த்து வழங்கிவரவேண்டும் என்று ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வகையேனும் வழங்கிவருகின்றனரோ அதுவுமில்லை.

பிராமணனுக்கு பருத்தி நூலும், க்ஷத்திரியனுக்கு சணப்ப நூலும், வைசியனுக்கு வெள்ளாட்டுமயிரினால் திரித்த நூலையும் அணைத்துக் கொள்ள வேண்டுமென்று குறித்திருக்கின்றார்கள். அதுபோல் க்ஷத்திரியர்கள் சணப்ப நூலையும், வைசியர்கள் வெள்ளாட்டுமயிரையும் பூநூலாக அணைவதுண்டோ அதுவுமில்லை.

- 2:7; சூலை 29, 1908 -

மநுதருமசாஸ்திரம் முதலத்தியாயம், 11-வது வசனம்.

87 வசனங்களில் பரமாத்துமா பிரம்மாவை சிருஷ்டித்தார், பிரம்மாதன் முகத்திலிருந்து பிராமணரை சிருஷ்டித்தாரென்றும் வரைந்திருக்கின்றார்கள்.

பிரம்மா முகத்தில் பிறந்தபடியால் பிராமணரென்று சொல்ல ஆதாரமிருந்தபோதினும் தற்கால பிறப்பு மாறுபட்டுள்ளதுமன்றி பிராமணத்தில் பிறந்த வழியே தெரியாததினால் மநுசாஸ்திரத்தின்படி யாதார்த்த பிராமணன் இல்லை என்றே விளங்குகின்றது.

தொழிற்பெயர் செயற் பெயர் யாவையுஞ் சாதிகளாக ஏற்படுத்தி அதற்கு ஆதரவாக மநுசாஸ்திரம் என்பதை நூதனமாக ஏற்படுத்தி வகுத்துள்ளக் கட்டளைபடிக்கு செயலுந் தொழிலும் பொருந்தாமல் அகன்றுள்ளது கொண்டு அவ்வாதரவாலும் எதார்த்த பிராமணரில்லை.

விவேக மிகுதியாலும் ஞானமகத்துவத்தினாலும் புத்தபிரானை “ஆதிகாலத் தந்தண” என்று காவியங்களில் கூறியுள்ளவாறு விவேகமிகுதியும், அன்பின் மிகுதியும், சாந்த மிகுதியும் திரிகால உணர்ச்சிமிகுதியும் உற்று சருவ சீவர்களையுந் தன்னுயிர்போல் கார்த்து அறஹத்துக்கள் என்றும், பிராமணர்கள் என்றும், அந்தணர்கள் என்றும் பெயர் பெற்ற மகாஞானிகளாகும் மேன்மக்கள் ஒருவரேனும் இவ்விந்துதேசத்தில் இல்லை என்பது திண்ணம் திண்ணமேயாம்.

இவ்விடம் யதார்த்தபிராமணரையும் வேஷப்பிராமணரையும் விசாரித்துணரும் காரணம் யாதென்பீரேல் சகல சாதியோரிலும் தங்களை உயர்ந்தசாதி பிராமணர்கள் என்று ஏற்படுத்திக் கொண்டு இத்தேசப் பூர்வக் குடிகளுந் திராவிட பௌத்தர்களுமாகியத் தமிழர்களை சகல சாதியோரிலுந் தாழ்ந்தசாதிப் பறையர்கள் என்று கூறி பலவகைத் துன்பங்களைச் செய்து பதிகுலைத்ததுமன்றி இவ்விடம் நூதனமாகக் குடியேறுகிறவர்களுக்கும் போதித்து அவர்களால் இழிவடையச் செய்கிறபடியால் வேஷப்பிராமணர் எவ்வகையால் உயர்ந்தசாதிகளாயினர் என்றும் திராவிட பெளத்தாள் எவ்வகையால் தாழ்ந்த சாதி பறையர்களாயின ரென்றும் விளக்குவதற்கேயாம்.

தங்களுக்குத் தாங்களே பிராமணரென்று சொல்லித் திரிவோர்களை விசாரித்தோம். இனியவர்களின் வேதோற்பவங்களையும் அதன் பலன்களையும் விசாரிப்போமாக.

நான்கு வேதத்தின் பாயிரத்துள் கடவுள் பிரம்மாவுக்குப் போதித்து பிரம்மா முனிவருக்குப் போதித்தாக கூறியிருக்கின்றது.

மநுதருமசாஸ்திரம் முதலத்தியாயம்

23 - வசனம்.

பிரம்மா அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன், இம்மூவர்களிடத்தினின்று வெளிப்படுத்தியதாகக் கூறியிருக்கின்றது. மற்றோரிடத்தில் நாயின் வயிற்றிலும், நரியின் வயிற்றிலும், கழுதையின் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும், தவளையின் வயிற்றிலும், மனிதர்கள் பிறந்து வேதங்களை எழுதியதாக வரைந்திருக்கின்றது. இருக்கு வேத 2-3-4 வது வாக்கியங்கள். வேதங்களை சிலரிஷிகளும், சில அரசர்களும் எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்நான்குவகை வேதோற்பவத்தில் எவை மெய்யென்றும், 67வை பொய் என்றும் ஏற்பது விவேகிகளின் கடனாம். இத்தகைய வேதங்களை வாசிப்பதால் மநுக்கள் சீரடைவார்களா சீர் கெடுவார்களா என்பதை ஆலோசிப்போமாக.

இருக்கு வேதம் 20 - வது வசனம். வசிஷ்டர் வருணன் வீட்டில் தானியம் திருடுவதற்குப் போனதினால் அவ்விடமிருந்த நாய் கடிக்கவரவும் அதைத் தூங்கும்படி மந்திரஞ் செய்திருக்கின்றார். இஃது அன்னியன் பொருளை அஞ்சாமல் திருடலாம் என்னும் சீர்கேட்டின் முதற்படியேயாம்.

இருக்குவேதம் 24 - வசனம்.

இயமனென்பவன் தன் புத்திரி யமுனா என்பவளை கற்பழிக்க எத்தனித்த போது அவள் மதிகூறல். யசுர் வேதம் 95 - வசனம், முதல் மநு தன் புத்திரியை மணந்திருக்கின்றான். இஃது அன்னியர் தாரங்களை ஆனந்தமாக இச்சிக்கலாம் என்னும் சீர்கேட்டின் இரண்டாம்படியேயாம்.

யசுர்வேதம் 117 - வசனம்.

அதர்வணவேதம் 160 - வது வசனம் எக்கியமாகிய நெருப்பில் சுட்டுத்தின்பதற்கு ஆயிரம் பசுக்களை தானஞ்செய்ய வேண்டும் என்றும்,

தனக்கு சத்துருவாக யார் தோன்றுகிறார்களோ அவர்கள் யாவரையும் அழிப்பதற்கு குசப்புல்லுக்கு மந்திரஞ் சொல்லப்பட்டிருக்கிறது,

இஃது அன்னியர்களையும் அன்னிய சீவப்பிராணிகளையும் இம்சை செய்யலாமென்னுஞ் கொலைபாதக சீர்கேட்டின் மூன்றாம் படியேயாம்.

யசுர்வேதம் 111 - வசனம்.

சோமபானஞ் சுராபானம் என்னும் மயக்க வஸ்துக்களை உண்டுசெய்யும் பாகங்களையும் அதை உட்கொள்ளும் பாகங்களையும் கூறுகின்றது. இஃது மனிதன் சுயபுத்தியிலிருக்கும் காலத்திலேயே அனந்த கேட்டுக்குள்ளாகி அவத்தைப் படுகின்றான். அவ்வகை அவத்தையுள்ளோன் தன்னை மயக்கத்தக்க மதுபானங்களை அருந்தி இன்னும் மயங்குங்கோள் என்னும் சீர் கேட்டின் நான்காம் படியேயாம்.

யசுர்வேதம் 72 - வசனம். இதர மனிதர்களும் இருக்குவேதம் 5 - வது வசனம் விரகங்கர் என்னும் அரசனுடைய ஐந்து பிள்ளைகளும் வேதத்தின் கிரந்தகர்த்தர்களாய் இருந்ததாய் குறிப்பிட்டிருக்கின்றது.

அதே யசுர்வேதம் 112 0- வது வசனத்தில் இவ்வேதம் எழுதியவர்களில் நர மநுஷியராகிய கிரந்தகர்த்தாக்கள் இல்லை என்று கூறியிருக்கின்றது. இஃது கண்ணைக் கேட்டால் மூக்கைக் காட்டுவதும், காதைக் கேட்டால் வாயைக் காட்டுவதுமாகி சகலமுந் தேகந்தானே என்பது போல சமயத்திற்குத் தக்க மாறுகோட்களால் வேறுபட பேசற்கு பொய்யாம் சீர்கேட்டிற்கு ஐந்தாம் படியேயாம்.

- 2:8: ஆகஸ்டு 5, 1908 -

இத்தகைய விபச்சாரம், கொலை, களவு முதலிய பஞ்சபாதகங்களை தினேதினே செய்யினும் பாதகமில்லையாகும். வேதத்தின் நீதிபோதத்தை விசாரித்தோம். இனி இவ்வேதம் யாவரால் எக்காலத்தில் எவ்விடத்தில் தோன்றியது என்பதையும் விசாரிப்போமாக.

இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் இந்நான்கு வேதத்தை சங்கராச்சாரியேனும் பூர்த்தியாக வைத்திருந்து இன்ன கண்காட்சி சபையில் சேர்த்திருந்தார் என்னும் ஓர் சரித்திராதாரங் கிடையாது.

மாதவாச்சாரியேனும் இவ்வேதங்கள் முழுவதும் வைத்திருந்து இன்ன மடத்தில் கிடைத்தது என்றேனும் ஓர் சரித்திராதாரமும் கிடையாது.

இந்நான்கு வேதமும் இன்னின்ன வம்மிஷ வரிசையோரால் இன்னின்ன மடங்களில் இருந்துள்ளதாகுஞ் செப்பேடுகளேனுஞ் சிலாசாசனங்களேனும் ஏதொன்றும் கிடையாது.

மற்றும் எவ்வகையால் யாவரால் எப்பாஷையில் வெளிவந்தது என்பீரேல், பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இத்தேசத்தில் வந்து குடியேறிய சிலகாலங்களுக்குப் பின் சகலசாதியோருக்கும் தாங்களே பெரியசாதிகள் என்று சொல்லித்திரியும் சில வேஷபிராமணர்களை சில ஐரோப்பியர்கள் தருவித்து உங்களுக்கு வேதமுண்டா அவற்றைப் பார்க்கவேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள்.

அதினால் தற்காலமுள்ள வேதத்தில் அரைபாகத்தை அக்கினியைத் தெய்வமாகத் தொழும் பாரீசுசாதியோருள் ஒருவராகிய தாராஷ்கோ என்பவர் பாரீசுபாஷையில் கொண்டுவந்து கொடுத்திருக்கின்றார்.

இப்பாரீசு சாதியாரால் பாரீசுபாஷையில் தற்காலமுள்ள வேதத்தின் பாதிபாகம் முதலாவது வெளிவந்து கல்கத்தா கண்காட்சி சபையில் வைக்கப்பட்டது.

இவ்வேதங்களிலுள்ளப் பெரும்பாகங்களையும் பாரீசுசாதியார் வேதமாகும் ஜின்டவிஸ்பா என்னும் நூலிலுள்ளவைகளையும் ஒத்திட்டுப் பார்ப்போமாயின் இருவர் அக்கினியின் தொழுகைகளும் மந்திரங்களும் பிராமணங்களும் பொருந்தக் காணலாம்.

பாரீசுசாதியார் தாராஷ்கோ என்பவரால் வந்த பாதி வேதக்கதைகளுடன் பௌத்ததருமச் சரித்திரங்களில் சிலதையும் நீதி நெறி ஒழுக்கங்களில் சிலதையும் வேஷபிராமணாள் கிரகித்து கர்னல் போலியர் அவர்களிடத்தில் சிலரும், சர். ராபர்ட் சேம்பர்ஸ் அவர்களிடத்தில் சிலரும், ஜெனரல் மார்ட்டீன் அவர்களிடத்தில் சிலரும், சர். உல்லியம் ஜோன்ஸ் அவர்களிடத்தில் சிலரும், மிஸ்டர் கோல்புரூக் அவர்களிடத்தில் சிலரும் கொண்டுபோய்க் கொடுக்க அத்துரை மக்கள் இவர்கள் கொடுத்த கையேட்டுப் பிரிதிகள் யாவையும் மொழிபெயர்த்து ஒன்றுசேர்த்து அச்சிட்டுப் பெரும்புத்தகமாக்கி இந்துக்கள் வேதமென்று சொல்லும்படியான ஓர் உருவமாக்கிவிட்டார்கள்.

புத்ததர்ம்ம வாக்கியங்களும் அதன் சரித்திரங்களும் அதில் எவ்வகையில் சேர்ந்துள்ளது எனில், புத்தபிரான் அரசமரத்தடியில் உட்கார்ந்து ஐயிந்திரியங்களை வென்றபடியால் ஐந்திரரென்றும் இந்திரர் என்றும் அவருக்கோர் பெயர் உண்டாயிற்று. அப்பெயரைக் காரணமில்லாமல் இவர்கள் நூதன வேதத்தில் சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

புத்தபிரானாகும் இந்திரர் தேவர்களில் ஆதியாகத்தோன்றி, மற்ற மக்களுக்கும் தேவராகும் வழிகளை விளக்கி வானில் உலாவும்படிச் செய்தவராதலின் பௌத்த சரித்திரங்களில் அவரை வானவர்க்கு அரசன் என்றும், வானவர் கோன் என்றும், தேவேந்திரன் என்றும், இராஜேந்திரன் என்றும் வரைந்திருக்கின்றார்கள்.

வானவர்க்கரசன் இந்திரன் என்னும் சரித்திரத்தையும் இவர்கள் நூதனவேதத்தில் வரைந்திருக்கின்றார்கள்.

மற்றும் பெளத்தமார்க்க அரசர்களில் சிலருடையப் பெயர்களையும் அறஹத்துக்களுடைய பெயர்களையும் இவர்கள் நூதன வேதத்தில் வரைந்து வைத்திருக்கின்றார்கள்.

இன்னும் புத்தமார்க்கத்தைத் தழுவிய அனந்தம் பெயர்களையும் சரித்திரங்களையும் அதில் காணலாம்.

சரித்திரக்காரர்கள் எழுதியுள்ள ஆதாரங்களின் படிக்கு கிறீஸ்து ‘பிறப்பதற்கு அறுநூறு வருஷங்களுக்கு முன்பும் அவர் பிறந்த எழுநூறு வருஷங்களுக்குப் பின்பும் இந்துதேசம் முழுவதும் புத்தரது திவ்விய சரித்திரங்களும் அவருடைய சத்தியதருமங்களும் நிறைந்திருந்ததன்றி வேறுமதஸ்தர் வேதங்களேனும் மார்க்கங்களேனும் இருந்ததென்னும் சரித்திரங்களுஞ் சிலாசாசனங்களும் கிடையாது.

கிறீஸ்துபிறந்து எழுநூறு வருஷங்களுக்குப் பின்பு பிராமணமதந் தோன்றியுள்ளதென்றும் அதன்பின் திரிமூர்த்தி மதங்களாகும் விஷ்ணு மதம் சிவமதங்கள் தோன்றியது என்றும் சரித்திராதாரங்களுண்டு.

அவைகள் தோன்றியது புத்தமார்க்க சரித்திரங்களையும் தன்மங்களையும் ஆதாரமாகக் கொண்டே தோன்றியதென்னும் பாகுபாடுகளும் உண்டு.

இவ்வேஷபிராமணர்கள் புத்தர்காலத்திலேயே இருந்ததாக பிராமஜால சூத்திர முதலிய பௌத்த நூற்கள் கூறுகிறதென்று நடிப்பார்கள். அஃது பொய் நடிப்பேயாம்.

எங்ஙனமென்னில்:-

திருவள்ளுவநாயனாராகும் அறஹத்துவின் காலத்திலேயே, இவ் வேஷபிராமணர்கள் இருந்தார்கள் என்று கூறுவதற்கு கபிலர் அகவல் என்னும் ஓர் கட்டுக்கதையை ஏற்படுத்தியிருக்கின்றார். அஃது தோன்றிய அந்தரங்கம் அறியாதோர் அதனை மெய் சரித்திரம் என்றும் படித்து வருகின்றார்கள்.

இவ்வகவல் தோன்றிய காரணம் யாதென்பீரேல் வேஷ பிராமணர்களும் பறையர்களும் பூர்வக்காலத்தில் இருந்தவர்கள் என்று தங்கட்பொய்யை பிலப்படுத்துவதற்கேயாம்.

அதுபோல் சீனதேச பௌத்தர்களும், சிங்களதேச பௌத்தர்களும் பிரமதேச பௌத்தர்களும் இந்திர தேசம் வந்து இவ்விடமுள்ளவர்களிடம் புத்தரது சரித்திரங்களையும் அவர் தருமங்களையும் கேட்டு எழுதிக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது.

அக்காலங்களில் இவ்விடம் குடியேறி பெளத்ததருமங்களைப் பாழ்படுத்தி வேஷ பிராமணத்தை விருத்திசெய்து வந்தக் கூட்டத்தார் சகட பாஷையிலிருந்து புத்ததன்மங்களுடன் புத்தபிரான் சில பிராமணர்கள் கோட்பாடுகளைக் கண்டித்து அவர்களை புத்தமார்க்கத்தில் சேர்த்துவிட்டதுபோல் எழுதி அனுப்பி விட்டிருக்கின்றார்கள்.

அவ்வகையால் தங்களைத் தாழ்த்தி புத்தரை உயர்த்தி எழுதிக்கொடுக்க வேண்டியக் காரணம் யாதென்பீரேல், அவர்களைத் தாழ்த்துவதும் உயர்த்துவதும் பெரிதல்ல. இப்பிராமணர் என்று சொல்லித் திரியும்படியான கூட்டத்தார் புத்தர் காலத்திலேயே இருந்தார்கள் என்னும் ஓர் ஆதாரம் நிலைத்துவிடுமாயின் அதைக் கொண்டே தங்களை இத்தேசப் பூர்வக்குடிகள் என விளக்குவதற்கேயாம்.

சிலர் உபநிடதங்களை வாசித்து புத்தர் தெளிந்திருக்கின்றார் என்று மாக்ஸ்முல்லர் கூறுகின்றாரே அதினால் இப்பிராமணமதம் முன்பே இருந்ததல்லவா என்பாரும் உண்டு.

இவ்வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் உரியவர்களாகிய பிராமணர்கள் அறியாமல் மாக்ஸ்முல்லர் சொல்லுகிறார் நானும் அவற்றை சொல்லுகிறேன் என்பது ஏனவாயன் கதையேயாகும்.

மாக்ஸ்முல்லர் அவர்களோ புத்தர்கால பாஷையையும் அவர் கண்டடைந்த மார்க்கத்தையும் அவரால் உண்டு செய்துள்ள பாஷைகளையும், பௌத்த சங்கத்தோர் உபநிடதங்களையும் அதனதன் காலவரைகளையும் சீர்தூக்கிப்பாராமலும் தன்னிடம் கிடைத்துள்ள உபநிடதம் முந்தியதா புத்ததன்மங்கள் முந்தியதா என்று உணராமலும் ஆதாரமற்ற அபிப்பிராயம் அளித்திருக்கின்றார்.

- 2:9; ஆகஸ்டு 12, 1908 -

அவர் ஒருவர் அபிப்பிராயத்தைக்கொண்டு சரித்திரங்களையும் செப்பேடுகளையுஞ் சிலாசாசனங்களையும் அவமதிக்கப்போமோ ஒருக்காலுமாகா.

புத்தபிரானுக்கு முன்பு வேதங்கள் இருந்ததென்பதும், உபநிஷத்துக்கள் இருந்ததென்பதும் இந்துதேசப் பூர்வ விசாரிணையற்ற பொது அபிப்பிராய மன்றி அஸ்த்திபாரமற்றக் கட்டிடமுமாகும். இந்நான்கு வேதங்களும் திரண்டு புத்தகருபமாய் வெளிவருவதற்குக் காரணம் யாவரென்றும் எப்பாஷையிலிருந்து யாவரால் கொடுக்கப்பட்டதென்றும் எக்காலத்தில் தோன்றியதென்றும் அறிந்தோம்.

இனி ஒருவன் அதை வாசிப்பதினாலும் அதைக் கேட்பதினாலும் யாது பயனடைந்து யீடேறுவானென்பதையும் விசாரிப்போமாக.

இருக்குவேதம் 13-ம் பக்கத்தில் அக்கினி, வாயு, சூரியனென்னும் மூன்று கடவுளர்கள் உண்டென்று கூறி அவற்றுள் யதார்த்தமாக ஒரே கடவுளாகிய மகாத்மா உண்டென்றும் அம் மகாத்மாவே சூரியனென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இத்தகைய வேதத்தை ஒரு கடவுள் பிரம்மாவுக்குப் போதித்து, பிரம்மா முனிவர்களுக்குப் போதித்து அவர்கள் சிஷியர்களுக்குப் போதித்ததாகக் கூறி அதே கடவுள் வேதங்களிலுள்ள சில பாகங்களை நேரில் முநிவருக்கே போதித்திருப்பதாகவே பாயிரத்தில் குறிப்பிட்டிருக்கின்றது.

இதைப் பின்பற்றிய ஒருவன் கடவுள் என்னும் வார்த்தையை நம்புகிறதா, பிரம்மாவை நம்புகிறதா, முநிவர்களை நம்புகிறதா, அக்கினியை நம்புகிறதா, வாயுவை நம்புகிறதா, சூரியனை நம்புகிறதா, சூரியனே மறுபெயர் கொண்ட மகாத்மாவை நம்புகிறதா, அன்றேல் அச்சூரியனைக் காலம் பார்த்து விழுங்கும் இராகு என்னும் பாம்பை நம்புகிறதா என்னும் விவரம் யாதும் விளங்கவில்லை.

இவற்றை யாரொருவர் நம்பி இன்ன சுகமடைந்துள்ளார் என்னும் பலனும் விளங்கவில்லை. இத்தியாதி கடவுளர்களும் நீங்கலாக யஜுர்வேதம் 120-வது பாகத்தில் பிரம்மத்தைத் தெளிவிக்கவேண்டும் என்று புத்திரன் பிதாவைக் கேட்கின்றான். அதற்குப் பிதா சருவமும் பிரம்மமென்றார்.

121-வது பாகத்தில் புசிக்கும் பொசிப்பு அல்லது தேகமே பிரம்மமென்றார்.

122-வது பாகத்தில் உயிர்ப்பாகிய பிராணனே பிரம்மமென்றார்.

123-வது பாகத்தில் அறிவே பிரம்மமென்றார்.

124-வது பாகத்தில் ஆனந்தமே பிரம்மமென்றார்.

இவ்வகையாய் ஆனந்தமே பிரமம், அறிவே பிரமம், உயிர்ப்பே பிரமம், பிராணனே பிரமம் தேகமே பிரமம் உண்டியே பிரமமென்று கூறுவதானால் பிரம்மம் என்னும் வார்த்தைக்கே பொருளற்று இன்ன வஸ்து என்னும் நிலையற்று இருக்கின்றது.

இவ்வகை நிலையற்ற பிரம்மத்தை வேதம் கூறுமாயின் மக்கள் எவ்வகையால் அவற்றைப் பின்பற்றி ஈடேறுவார் என்பதும் விளங்கவில்லை.

பிரம்மமென்னும் வார்த்தையின் பொருளும் அதன் தோற்றமும் அதினால் உண்டாகும் பயனும் நிலையற்றிருப்பதை விசாரித்தோம்.

இனி சாமவேதம் 144-வது பக்கத்தில் சருவபரிபூரண ஆத்துமக் கியானத்தை அசுவாதி என்னும் அரசனிடம் சென்று விறகுகட்டை ஏந்திய மாணாக்கர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். அவற்றுள்,

சாமவேதம் 146-வது பாகத்தில் வானத்தையே ஆத்துமா என்று கூறியுள்ளார்கள்.

147-வது பாகத்தில் சூரியனையே ஆத்துமாவாக வரைந்திருக்கின்றார்கள்.

148-வது பாகத்தில் வாயுவையே ஆத்துமாவாகக் கூறியிருக்கின்றார்கள்.

149-வது பாகத்தில் ஆகாயப் பரமாணுவே ஆத்துமா என்று கூறியிருக்கின்றார்கள்.

150-வது பாகத்தில் உதகமே ஆத்துமா என்று குறித்திருக்கின்றார்கள்.

151-வது பாகத்தில் பிரிதிவியாகிய மண்ணே ஆத்துமா என்று குறித்திருக்கின்றது.

இவ்வகையாக ஆத்துமா என்னும் வார்த்தைக்குப் பொருள் ஏதும் அற்று அதன் நிலையற்று இருப்பதால் ஒருமனிதன் வானத்தையும் மண்ணையும் காற்றையுஞ் சூரியனையும் ஆத்துமமாக எண்ணுவதால் என்ன பலன் அடைவான் என்பதும் விளங்கவில்லை.

இந்நான்கு வேதங்களில் கூறியுள்ள பிரம்மம் என்னதென்றும் ஆத்துமா இன்னதென்றும் நிலையாதிருப்பதை தெரிந்துக் கொண்டோம்.

இத்தகைய பிரமத்தையும் ஆத்துமாவையும் அறியக்கூடிய வேத அந்தத்தையும் விசாரிப்போமாக.

- 2:10; ஆகஸ்டு 19, 1908 -

அதர்வணவேதம் 165-வது பக்கத்தில் உபநிடதங்கள் என்பது வேதாந்த சாஸ்திரங்கள் எனக் குறிப்பிட்டிருகின்றது. 167-வது பக்கத்தில் வேதாந்த சாஸ்திரங்கள் எல்லாம் உபநிடதங்களின் பேரில் ஆதாரப்பட்டதென வரைந்திருக்கின்றது.

இவற்றினாதரவாலும், நான்கு வேதங்களில் கூறியுள்ள மந்திரங்கள், பிராமணங்கள் உபநிடதங்கள் என மூன்று பிரிவில் உபநிடதங்களைக் கடை-பாகமாகக் கொண்டு வேத அந்தங்களென வகுத்துக் கொண்டார்கள்.

வேதம், வேத அந்தம் எனும் இருவகுப்பில் வேதத்தில் கூறியுள்ள பிரமமும், ஆத்துமமும் நிலையற்றிருப்பதை தெரிந்துக்கொண்டோம்.

இனி வேத அந்தமாகும் உபநிடதங்களில் கூறியுள்ள பிரம்மத்தையும் அதன் நிலையையும் அதன் பலனையும் விசாரிப்போமாக.

உபநிடதங்களில் 52 வகை இருந்ததாக அதர்வண வேதத்தில் கூறியிருக்கத் தற்காலம் இரு நூற்றிச்சில்லரை உபநிடதங்களுள்ளதாய் விளம்புகின்றனர். அத்தகைய விளம்பல் உளதாயினும் இலதாயினுமாகுக.

முண்டகோப உபநிஷத்து இரண்டாமுண்டகம் முதலத்தியாயத்தில் ஜவலிக்கின்ற அக்கினியினின்று ஆயிரம் பக்கங்களில் பொறிகள் எப்படி உண்டாகின்றனவோ அதுபோல் அழிவற்ற பிரமத்திடத்தினின்று பலசீவாத்மாக்கள் உண்டாகி மறுபடியும் அதிலடங்குவதாகக் குறிப்பிட்டிருக்கின்றது.

தலவகார் உபநிஷத்து இரண்டாவது காண்டம் 3-4-5 வாக்கியங்களில் பிரமத்தை அறியேனென்பவன் அறிவான், அறிவேன் என்பவன் அறியான் பிரமந் தெரியும் என்பவர்களுக்குத் தெரியாது. தெரியாது என்பவர்களுக்குத் தெரியும் என்று கூறியிருக்கின்றது.

கடோபநிஷத்து நான்காவது வல்லி 11-வது வாக்கியத்தில் மனதினால் மாத்திரமே அப்பிரம்மத்தை எட்டக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கின்றது.

கேனோபநிஷத்து முதல்கண்டகம் மூன்றாம் வாக்கியமுதல் எட்டாம் வாக்கியம் வரையில் அதைக் கண்ணாவது, வாக்காவது, மனமாவது எட்டுகிறதில்லை. அதை நாம் அறியோம். அதை தெரிவிக்கும் வழியும் நமக்குத் தெரியாதென வகுத்திருக்கின்றது.

வாஜகாநேய உபநிஷத்து எட்டாவது வாக்கியத்தில் பிரமம் எவ்வித சரீரமும் அற்றவர், ஒளி பொருந்தியவர், பாபமற்றவர், விவேகி, மனதை ஆள்பவரெனக் குறித்திருக்கின்றது.

முண்டகோபநிஷத்து இரண்டாவது முண்டகம் எட்டாவது வாக்கியத்தில் கண்களாலாவது வாக்காலாவது கர்மத்தினாலாவது பிரமத்தைக் கிரகிக்கப்படாதென்று குறித்திருக்கின்றது.

அதே உபநிஷத்து பத்தாவது வாக்கியத்தில் இப்பரமாத்துமா அணுவைப்போல வெகு சிறியவனாகவும் மனதினால் அறியத்தக்கவனாயும் இருக்கின்றான் என்று கூறியிருக்கின்றது.

அதே உபநிஷத்து இரண்டாவது முண்டகம் இரண்டாவது அத்தியாயம் ஏழாவது வாக்கியத்தில் விவேகபரிபூரணனும், சர்வக்யனனும், பிரும்மபுரமெங்கும் பரவி மகிமையுள்ளவனுமாகிய ஆத்மா ஆகாசத்தில் இருக்கின்றானென்றும் குறித்திருக்கின்றது.

சுவேதாசுவத உபநிஷத்து முதலத்தியாயம் மூன்றாம் வாக்கியத்தில் தியானத்தையும் யோகத்தையும் அநுசரித்தவர்கள் காலாத்துமாக்களோடு அமைந்த தேவாத்தும் சக்த்தியைக் கண்டார்கள் என்று குறித்திருக்கின்றது.

அதே அத்தியாம் 13-வது வாக்கியத்தில் புருஷன் அந்தராத்துமாவாகி விரலளவுடைய ஜனங்களின் இருதயத்தில் இருக்கின்றான் என்று குறித்திருக்கின்றது.

இவ்வகையுள்ள மற்றும் உபநிடதங்களை வரைய வேண்டுமானால் வீணே வாக்கியங்கள் வளருவதுமன்றி ஈதோர் பயித்தியக்காரன் பாட்டுகள் என்றும் பரிகசிப்பார்கள்.

விசாரிணைப் புருஷர்களே வேஷப்பிராமணர்கள் வேதங்களில் கூறியுள்ள பிரம்ம விவரமும் ஆத்தும் விவரமும் நிலையற்றிருப்பது போலவே இவ்வேத அந்தமாகும் உபநிஷத்துக்கள் யாவும் ஒன்றுக்கொன்று அப்பிரமத்தின் நிலையையும், ஆத்துமநிலையையும் ஆதாரமின்றி கூறி பிள்ளைகள் விளையாட்டில் கண்ணைக்கட்டியடிக்க ஆள் தெரியாது தடவி அவ்விடம் உள்ளவர்களின் பெயரை ஒவ்வொன்றாகச் சொல்லித்திரிவதுபோல் வேத அந்தங்களை வாசித்தும் விழலுக்கிறைத்த நீராய் விருதாவடைகின்றன.

வேதத்திலுள்ள பொருளும் வேத அந்தத்திலுள்ள பொருளும் இன்னதென்று விளங்காதிருக்க சருவமும் விளங்கியவர்கள் போல் நடித்து வேதாந்த குருக்கள் என வெளி தோன்றியும் தருக்க சாஸ்திரம் பெருக்கக் கற்றுள்ளோம் நீங்களும் அவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் பிரம்மத்தின் பின்னும் முன்னும் எமக்குத் தெரியாது நான் சொல்லுவதைக்கொண்டு நீங்கள் அறிந்துக் கொள்ளுங்கள் இன்னும் வருந்திக் கேட்பீர்களானால் பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கின்றது. ஆனால் பறையனிடத்தில் மட்டும் இல்லை என்பது போல் அவனை தூரம்வைத்துப் பாடஞ் சொல்ல வேண்டியதென்பர்.

இத்தகைய வேஷபிராமணர்கள் வேதாந்தத்தைப் பின்பற்றிய வேஷ வேதாந்திகளை விடுத்து கண்டதைக் கண்டவாறும் உள்ளதை உள்ளபடி உரைக்கும் மேன்மக்களைப் பின்பற்ற வேண்டுகின்றோம்.

“சாதி குலம் பிறப்பிறப்பு பந்தமுத்தி யருவுருவத் தன்மெய் நாமம்” ஆம், துவிதமற்ற அத்துவித விசாரிணைப் புருஷரை நாடுங்கள். விவேகிகளால் ஓதியுள்ளக் கலைநூல்களைத் தேடுங்கள். சகலசீவர்களும் விருத்திபெறக்கூடிய நீதிபோதங்களைப் பாடுங்கள்.

ஏனென்பீரேல், உலகத்தில் தோன்றியுள்ள மக்களுள் ஒரு விவேகமிகுத்தோன் தோன்றுவானாயின் உலகம் சீர்பெறுவதுமன்றி மக்களும் அசத்திய தன்மங்களை விலக்கி சத்திய தன்மத்தைக் கைக்கொள்ளுவார்கள். சத்தியதன்மத்தைக் கைக்கொள்ளுவதால் சகல சுகமும் வாய்க்கும் என்பதே.

- 2:11; ஆகஸ்டு 26, 1908 -