அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/339-383

விக்கிமூலம் இலிருந்து

10. யதார்த்தபிராமண வேதாந்த விவரம்

வேதமென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், சுருதியென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், மறையென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், அதனதன் பொருட்களையும், அவைகளின் உற்பவத்திற்குக் காரணம் யாவரென்பதையும் முன்பு விசாரித்து பின்பு பிரம்மோற்பவத்தையும், பிராமணோற்பவத்தையும் விசாரிப்போமாக.

வேதம் என்னும் மொழி பேத மென்னும் மொழியினின்று மாறியது.

அதாவது பாலிபாஷையில் பரதனென்பது வரதனென்றும், பைராக்கி என்பது வைராக்கி என்றும், பாண்டி என்பது வண்டி என்றும், பாலவயதென்பது வாலவயதென்றும் வழங்குதல்போல் பேதவாக்கியங்கள் என்பதை வேத வாக்கியங்கள் என்றும் வழங்கிவருகின்றார்கள்.

அத்தகைய பேதவாக்கியங்கள் யாதென்பீரேல்: ஜெகந்நாதனென்றும், ஜெகத்திரட்சகனென்றும், ஜெகத்குரு என்றும் வழங்கும் புத்தபிரானால் ஓதிய முப்பிடகம் என்னும் திரிபீட வாக்கியங்களே திரிபேத வாக்கியங்கள் என வழங்கலாயிற்று. அப் பேதவாக்கியங்கள் யாதெனில்:-

சௌபபாபஸ்ஸ அகரணம்
குஸலஸ உபுசம்பந்தா
சசித்த பரியோபனம்
ஏதங் புத்தானுபாஸாஸனம்

அதாவது:- பாபஞ் செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்திசெய்யுங்கோளென்னும் மூன்று வாக்கியங்களும் மூன்று பேதமாய் இருந்தபடியால் திரிபேத வாக்கியங்கள் என்றும், பகவன் மூன்று வேதவாக்கியங்களை ஓதுங்கால் அட்சரங்கள் உடைத்தாய வரிவடிவில்லாமல் ஒலிவடிவாம் மகடபாஷையாகும் பாலிபாஷை வழங்கிவந்தபடியால் மேற்கூறியுள்ள மூன்று பேதவாக்கியங்களையும் ஒருவர் நாவினால் ஒதவும், மற்றோர் செவியினால் கேட்கவும் இருந்தது கொண்டு அவற்றை சுருதி வாக்கியங்கள் என வழங்கிவந்தார்கள்.

கரோத்திராதித்தே சுருதி. வரிவடிவாம் அட்சரபாஷையிராது ஒலிவடிவில் இருந்ததால் சுருதி வாக்கியங்களின் அந்தரார்த்தம் விளங்காது மறைந்திருந்தது கொண்டு மறை என்றும் வழங்கிவந்தார்கள்.

இம்மூன்று பேதவாக்கியங்களின் உட்பொருளாம் பாபஞ்செய்யாமல் இருங்கோளென்பதை கர்ம்மபாகை என்றும், நன்மெய்க் கடைபிடியுங்கள் என்பதை அர்த்தபாகை என்றும், இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்பதை ஞானபாகை என்றும் வழங்கிவந்தார்கள்.

இம்முப்பாகையும் தன்தேகத்துள் நிகழ்வனவாதலின் இவற்றை அறம், பொருள், இன்பம் என்னும் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம் என்றும் வழங்கி வந்தார்கள்,

சீவகசிந்தாமணி

ஆதிவேதம் பயந்தோய் நீ / யலர்பெய்மாரி யமர்ந்தோய் நீ
நீதிநெறியை யுணர்ந்தோய் நீ / நிகரில் காட்சிக்கிறையோய் நீ
நாதனென்னப்படுவோய் நீ / நவைசெய் பிறவிக்கடலகத்துன்
பாதகமலத் தொழிவெங்கள் / பசையாப்பவிழப் பணியாயே.

திருக்கலம்பகம்

ஒதாதுலகிற் பொருளனைத்துமுடனே / யுணர்ந்தா னுணர்ந்தவற்றை
வேதாகமங்களா றேழால் / விரித்தான் விமலன் விரித்தனவே
கோதார் நெஞ்சத்தவர் பிறழக் / கொண்டேதாமே கண்டார்போற்
பேதா, பேதம், பேதமெனப் / பிணங்கா நின்றார் பிரமித்தே.

மணிமேகலை

சுருதி சிந்தனாபாவனா தெரிசனை.

திருக்கலம்பகம்

போற்றுமிதுவென்கொல் பொய்ந்நூல்களைப் புலவீர்
சாற்றுமனந்த சதுட்டயத்தா - னேற்றுத்
துளக்கப்படாத சுருதியாலல்லா
வளக்கப்படுமோ வறம்.

பாபஞ் செய்யாமல் இருங்கோள் என்பது ஓர்வகையும், நன்மெய்க் கடைபிடியுங்கள் என்பது ஓர் வகையும், இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்பது ஓர் வகையுமாக மூன்றுவகை வாக்கியங்களானது கொண்டு மூன்று பேர் வாக்கியங்கள் என்றும், திரிவேதவாக்கியங்கள் என்றும் வழங்கலாயிற்று.

இவ்வாக்கியங்களை ஒருவர் போதிக்கவும் மற்றவர் கேட்டுக் கொள்ளும் சுருதி வாக்கியங்களாய் இருந்தபடியால் அவைகள் மறதிக்கு வந்து விடும் என்று எண்ணிய அவலோகிதராம் புத்தபிரான் வடமொழியென வழங்கும் சகடபாஷையையியற்றி பாணினியார் வசமும், தென்மொழி என வழங்கும் திராவிடபாஷையை இயற்றி அகஸ்தியர் வசமும் அளித்து சுருதி வாக்கியங்கள் என்னும் திரிபேதவாக்கியங்களையும் அதன் பிரிவுகளாம் அதனதன் அந்தரார்த்த விரிவுகளையும் வரிவடிவாம் அட்சரங்களில் பதிவுபடப் பரவச் செய்தார்.

- 2:12; செப்டம்பர் 2, 1908 -

வீரசோழியம் பதிப்புரை

வடமொழியை பாணினுக்கு வகுத்தருளியதற்கிணையாய்
தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்த
கு முநிக்கு வற்புறுத்தார் கொல்லேற்று பாகர்.

வீரசோழியம்

மதத்திற் பொலியும் வடசொற் கிடப்புந்தமிழ்மரபும்
முதத்திற் பொவியேழை சொற்களின் குற்றமு மோங்குவினைப்
பதத்திற் சிதைவு மறிந்தே முடிக்கப்பன்னூறாயிரம்
விதத்திற்பொலியும் புகழவலோகிதன் மெய்த்தமிழே.
ஆயுங் குணத்தவ லோகிதன்பக்க வகத்தியன்கேட்
டேயும் புவனிக்கியம்பிய தண்டமி ழீங்குரைக்க
நீயு முனையோ வெனிற் கருடன்சென்ற நீள்விசும்பி
லீயும்பறக்கு மிதற்கென்கொலோ சொல்லு மேந்திழையே.

சிலப்பதிகாரம்

தண்டமிழாரான் சாத்தன்ஃதுரைக்கும்

சகல இலக்கணங்களிலும் சாற்றுதற்குரிய சாத்தன் வந்தான் சாத்தன் சென்றான் என்னும் இலக்கண உதாரண வாக்கியங்களைக் காணலாம்.

வீரசோழிய பதிப்புரை

இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்லாய்ப்ப
இருமொழியும் வழிபடுத்தார் முநிவேந்த ரிசைபரப்பும்
இருமொழியு மான்றவரே தழீஇனா ரென்றாலிங்
கிருமொழியு நிகரென்னுமிதற்கைய முனதேயோ

சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிடபாஷையாந் தமிழையும், புத்தபிரான் இயற்றி பாணினியார் வசமும் அகஸ்தியர் வசமும் அளித்து திரிபீடவாக்கியம், திரிபேத வாக்கியம் என வழங்கிவந்த சுருதிவாக்கியங்களாம் ஒலிவடிவை வரிவடிவில் பதிந்து சகலர் மனதிலும் பதியச்செய்து ஞான பாகையாம் இதய சுத்தத்தால் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பந் தோன்றி பரிநிருவாணமுறும் நிலையை நான்காவது மறைமொழியாகக் கொண்ட நான்கு மறைமொழி என்றும், நான்கு வேதவாக்கியங்கள் என்றும் வழங்கலாயினர்.

முதன் மும்மொழியையே முதன்மொழி என்றும் வரையாக் கேள்வி என்றும் வழங்கி, வரிவடிவாம் அட்சரங்கள் ஏற்பட்ட போது அவற்றை ஆதி பீடம் என்றும், ஆதி நூல் என்றும், ஆதி வேதம் என்றும் வழங்கலாயினர்.

முன்கலை திவாகரம்

ஆதிநூ லெழுதாக்கேள்வியாரண மொத்துசாகை
யேதமில் சுருதி தன்னோடிருக்கிவை யேழும் வேதம்
வேதநூற் பொருளினாமம் விதித்திடு ஞானபாகை
ஆதியாங் கருமபாகை அறுத்தபாகையுமாமென்ப.

மெய்தெரி யாரணந்தான் வேதத்தின் ஞானபாகை
மையலுட் பொருளினாம மற்றுப நிடதமென்ப
வைதிக வேதமுற்ற மார்க்கமே பார்க்குங்காலை
பையம லிருக்கினோடு பிடகமே யாதிவேதம்.

பாபஞ் செய்யாதிருங்கோள் என்னும் வேத வாக்கியத்தின் உட்பொருளே கன்மபாகை என்றும், அவையே மெய்யற விசாரமும், நன்மெய்க்கடை பிடியுங்கோள் என்னும் வேதவாக்கியத்தின் உட்பொருளே அறுத்தபாகை என்றும், அவையே மெய்ப்பொருள் நிலையும், இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் வேதவாக்கியத்தின் உட்பொருளே ஞானபாகை என்றும், அவையே மெய்யின்ப சுகமாதலின் வீடுபேறு என்றும் பேரின்ப நிலை என்றும், முத்தி என்றும், நிருவாணம் என்றும் வகுத்தார்கள்.

கன்மபாகை, அறுத்தபாகை, ஞானபாகையாம் வேதத்தின் உட்பொருளை விளக்குவான் வேண்டி, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேத வாக்கியங்களாக வரைந்து அவற்றையே நான்கு வேதவாக்கியங்கள் என்றும் நான் மறை என்றும் வழங்கலாயினர்.

திரிபீடம் என்றும், சதுர்மறை என்றும் பாலிபாஷையிலும் சமஸ்கிருதத்திலும் வழங்கியுள்ள முதனூலுக்கு திராவிடபாஷையில் திருவள்ளுவநாயனார் இயற்றிய வழி நூலாந் திரிக்குறளுக்கு தமிழ் வேதம் என்னும் பெயரையும் அளித்துள்ளார்கள்.

நான்கு பேதவாக்கியங்களும் போலுமேலும் தெளிந்துக் கொள்ளற்கு உட்பொருளாம் உபநிட்சயார்த்தங்களை பேதவாக்கியம் ஒன்றுக்கு எட்டு உபநிட்சயார்த்தங்களாக நான்கு பேதவாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு உபநிட்சயார்த்தங்களை வகுத்துள்ளார்கள். அவைகளுக்கே பாலிபாஷையில் உபநிடதங்கள் என்றும், உபநிஷத்துக்கள் என்றும், உபநிட்சய அருத்தங்கள் என்றும் வகுக்கப்பெற்றது.

- 2:13; செப்டம்பர் 9, 1908 -

புத்தபிரான் ஓதிய மும்மொழி விளக்கத்தை முதநூல் என்றும், ஆதி நூல் என்றும் வழங்கி வந்தார்கள்.

நன்னூல் விளக்கம்

வினையீனீங்கி விளங்கிய வறிவின் / முனைவன் கண்டது முதநூலாகும்.

ஆதி நூலென்றும் முதநூலென்றும் வழங்கிய திரிபீட வாக்கியங்களையே வேதநூல் என்றும் வழங்கி வந்தார்கள்.

முன்கலை திவாகரம்

ஆதிநூலென்பது - வேதநூற்பெயரே.

இத்தகைய வேதநூலின் உட்பொருள் நுட்பங்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு உபநிடதங்கள் என்று வழங்கலாயினர்.

முன்கலை திவாகரம்

உபநிடதம் வேதத்தினுட்பொருள் நுட்பம்.

வேதவாக்கியம் ஒன்றுக்கு எட்டு உபநிடத உட்பொருள் நுட்பங்களைக் கூறி நான்குவகை பேதவாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு உபநிடத உட்பொருள் நுட்பங்களைக் கூறியுள்ளார்கள்.

அதாவது:-

1. அன்னியப் பிராணிகளின் மீது கோபங் கொண்டு அவைகளைத் துன்பஞ்செய்தலால் உண்டாகும் கெடுதிகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு காலாக்கினி உபநிடதம் என்றும்,

2. அன்னியர்கட்பொருளை அவர்கள் அநுமதியின்றி அபகரித்தலால் உண்டாகும் கெடுதிகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு காத்தியாயன் உபநிடதம் என்றும்,

3. அன்னியரைக் கெடுக்கவேண்டும் என்று தீங்கு நினைத்தால் தனக்குண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு முண்டிர உபநிடதம் என்றும்,

4. அன்னியர் தாரத்தை அபகரித்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு ஆர்ணிக பகுவபஞ்சக உபநிடதம் என்றும்,

5. அன்னிய சீவப்பிராணிகளைக் கொலைச் செய்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு பெளண்டரீக உபநிடதம் என்றும்,

6. அன்னியர் மனம் புண்பட வார்த்தைப்பேசுதலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சுரோர்த்தாக்கினிய உபநிடதம் என்றும்,

7. அன்னியர்களை வஞ்சித்துத் துன்பப்படுத்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பாராக உபநிடதம் என்றும்,

8. அன்னியர்கள் அறிவை மதுவூட்டி, மயக்கச் செய்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சுராபாநீய உபநிடதம் என்றும்,

எட்டு கன்மபாக அஷ்டக உட்பொருளை விளக்கியுள்ளார்கள்.

1. அன்னியர்களுக்கு உண்டாகும் துன்பங்களை அகற்றி தண்மெய் அடையச் செய்தலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு நாராயண உபநிடதம் என்றும்,

2. அன்னியருக்கில்லா பொருளீய்ந்து ஆதரித்துத் தன்னைப்போல் சுகம்பெறக்கருதிச் செய்யும் நன்மெயால் உண்டாகும் சுகத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு பிரமபிந்து உபநிடதம் என்றும்,

3. அன்னியர்களைத் தன்னைப்போல் நேசித்து ஆதரிக்குஞ் செயலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு தேசோபிந்து உபநிடதம் என்றும்,

4. அன்னியர் தாரங்களைத் தங்கள் தாய் தந்தையர்களைப் போல் கருதி ஆதரிக்கும் நன்மெய் செயலால் உண்டாகும் பயனை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு வாசிராயநீய உபநிடதம் என்றும்,

5. அன்னிய சீவப்பிராணிகளை ஆதரித்து அவைகளுக்கோர் தீங்கு வராமலும் காத்தலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு அங்கிச உபநிடதம் என்றும்,

6. அன்னியர் மனமும், உடலும் பூரிக்கத்தக்க மிருதுவான வார்த்தைப் பேசுதலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு போதாயநீய உபநிடதம் என்றும்,

7. வார்த்தைப் பேசுவதில் அன்னியர்கள் பலனடையக்கூடிய வார்த்தைகளைப் பேசுவதில் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு வார்ச்சியநீய உபநிடதம் என்றும்,

8. அன்னியர்கள் அறிவை வளரச் செய்யும் வாய்மெய்களைப் போதித்து அமுதுண்ணும் பாதையில் ஏறச் செய்தலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சாங்கியாயநீய உபநிடதம் என்றும்,

எட்டு அர்த்தபாகை யஷ்டக உட்பொருளை விளக்கியுள்ளார்கள்.

1. தன்னிடத்து உண்டாகும் கோபத்தை தங்கவிடாமல் அகற்றி சாந்தத்தை - நிறப்பச்செய்தலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பிரம் உபநிடதம் என்றும்,

2. தன்னிடத்து உண்டாகும் காமத்தை தங்க விடாமல் அகற்றி அன்பைப் பெருகச் செய்தலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு கடம் உபநிடதம் என்றும்,

3. தன்னிடத்து உண்டாகும் மயக்கங்களை அகற்றி அறிவை வளர்த்து விழிப்பு நிற்பதினால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பிரமசாபல்ய உபநிடதம் என்றும்,

4. தன்னிடத்துண்டாகும் வஞ்சினம், பொறாமெய் முதலிய துற்குணங்களை அகற்றி சகலர் சுகத்தையும் விரும்புதலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பிரகதாரண்ய உபநிடதம் என்றும்.

5. தன்னிடத்தில் உண்டாகும் பொய்ப்பொருளாசையை அகற்றி மெய்ப்பொருளை உசாவுவதால் உண்டாகும் இதயசுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சுவேதாசுவதாம் உபநிடதம் என்றும்,

6. தன்னிடத்து உண்டாகும் சிற்றின்பச் செயல்களை அகற்றி பேரின்பத்தை நாடுதலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு ஆசுவலாயாநீய உபநிடதம் என்றும்,

7. தன்னிடத்து உண்டாகும் டம்பச் செயல்களை அகற்றி அடக்கத்தில் நிற்றலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு மாண்டூகா உபநிடதம் என்றும்,

8. தன்னை வஞ்சித்து துன்பப்படுத்துவோர் துற்செயலுக்கிதங்கி அவர்களை அன்புடன் ஆதரித்தலால் உண்டாகும் இதயசுத்தத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சிவசங்கற்ப உபநிடதம் என்றும்,

எட்டு ஞானபாகை யஷ்டக உட்பொருளை விளக்கியுள்ளார்கள்.

- 2:14: செப்டம்பர் 16, 1908 -

1. தன்னிடத்து உண்டாகும் பற்றுக்களற்று நீதிநெறியின் பற்று நிறைவாம் நிருவாண சுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு வல்லி உபநிடதம் என்றும்,

2. தன்னை மறைக்கும் நித்திரையை ஜெயித்து சதாவிழிப்பாம் இரவு பகலற்ற நிருவாண சுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்குக் கைவல்லிய உபநிடதம் என்றும்,

3. தன்னை மாறிமாறி பிறவிக்கு ஆளாக்கும் மரணத்தை ஜெயித்து காலகாலனென்னும் நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பராமாம்ஸ உபநிடதம் என்றும்,

4. தன்னை சதாதுக்கத்தில் ஆழ்த்தும் காமவெகுளி மயக்கங்களை அறிந்து சதானந்த நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு அமுர்தபிந்து உபநிடதமென்றும்,

5. தானே தோன்றுகிறதும் கெடுவதுமாகிய மனதைத் தோன்றாமலும் கெடாமலும் அலையற்ற கடல்போல் அமர்ந்த நிருவாண சுகத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு பாஷ்கர உபநிடதமென்றும்,

6. தனக்குள் எழும் மரணபயம் ஜெநநபயமற்று கலங்காமல் நிற்கும் அசைவற்ற தீப நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சௌனகீய உபநிடதம் என்றும்,

7. தன்னுள் தானாய் திரளும், சாந்தம், ஈகை அன்பென்னும் உண்மெய் உருவின் பேரின்ப நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்குக் கிம்புரோட்சய உபநிடதம் என்றும்,

8. தானே தானே தசநாதமுற்று சுயம்பிரகாச உருவ அகண்ட பார்வையாம் சதாநித்திய சித்தின் நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சிறவாண உபநிடதம் என்றும்,

எட்டு வீடுபேறாம் அஷ்டகப்பொருளை விளக்கியுள்ளார்கள்.

மனிதனுக்கு உண்டாகும் சதாதுக்கங்கள் அற்று சதானந்தத்தில் லயிக்கும் ஏகமாம் வீடுபேறு இதுவேயாகும்.

தன்னிற்றானே தோன்றும் சிற்றின்ப துற்செயல் விருத்தியால் தேகம் கெட்டு சதாதுக்கத்தில் ஆழ்வதுபோல் தன்னிற்றானே தோன்றும் பேரின்ப நற்செயல் விருத்தியால் உண்மெய் உணர்ந்து சதானந்தத்தில் இருக்கின்றான். மனிதன் தனக்குள் அடைந்த இவ்வானந்த நிலைக்கே அமுதமென்றும், கேவலம் என்றும், பருவம் என்றும், வீடென்றும், சிவமென்றும், கைவல்யமென்றும், சித்தியென்றும், மீளாக் கதியென்றும், பரகதி என்றும், முத்தி என்றும், மோட்சம் என்றும், நிருவாணம் என்றும் வகுத்துள்ளார்கள்.

முன்கலை திவாகரம் - மோக்கத்தின் பெயர்

அமுதங் கேவலம் பருவம் வீடு / சிவங் கைவல்லியஞ் சித்தி மீளாகதி
பரகதி யோடுமெய் முத்தி பஞ்சமகதி / நிர்வாணா மோக்கமென நிகழ்த்தினரே.

இத்தியாதி ஞானபோதமாம் துக்கநிவர்த்திக்கும் சுகநிலையாம் நிருவாணத்திற்கும் புத்தபிரானருளிய முதநூலே ஆதாரமாகும்.

அதாவது:-

முன்கலை திவாகரம் - நூலின் பெயர்

பிடகத் தந்திரம் - நூலின் பெயரே.

புத்தபிரான் அருளிய பிடகத்தையே நூலென்று வகுத்துள்ளார்கள். அந்நூல் ஆதியில் போதிக்கப்பட்டதாதலின் அதனை முதநூலென்றும், ஆதிநூலென்றும் வழங்கிவந்தார்கள்.

பிடகமென்னும் மொழி தோன்றிய காரணம் யாதென்பீரேல், முப்பேத வாக்கியங்களாகும் செளபபாபஸ்ஸ அகரணம், குஸலஸ உபசம்பதா, ஸசித்த பரியோதாபனங், ஏதங் புத்தானசாசனம் என்னும் பாபஞ் செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்பவை, இத்தேசப் பிராகிருத பாஷையாகும் பாலி வரிவடிவாம் அட்சரங்களின்றி ஒலிவடிவ சுருதியாய் உலக சீர்திருத்த ஆதிபீட வாக்கியமாய் இருந்ததுகொண்டு அவைகளை பிடக வாக்கியங்கள் என்றும் கமலாசனன் வீற்றிருந்த கல்லால பீடத்திற்கு பீடிகை என்றும் வழங்கிவந்தார்கள்.

இத்தகைய ஆதிபீடமாகும் முதலாம் வேதத்தின் உட்பொருளின் நுட்பத்தையும், அதனந்தத்தையும் விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு உபநிடதவாக்கியங்கள் என்றும், வேத அந்த வாக்கியங்கள் என்றும் வழங்கலாயினர்.

இவ்வேதவாக்கியங்களையும், வேதாந்த வாக்கியங்களையும், ஆராய்ந்து அருள்பெறவேண்டியவர்கள் காட்டிற்கும், நாட்டிற்கும் மத்தியில் இந்திர வியாரங்களைக் கட்டுவித்து இல்லந்துறந்த மேன்மக்களாகும் அறஹத்துக்கள், பிராமணர், அந்தணரெனும் விவேகமிகுத்த ஞானிகளிடம் பொன்னிறவாடையும் கபோலமும் ஏந்தி சீலந்தாங்கி சித்திபெறல் வேண்டும்.

- 2:15: செப்டம்பர் 23, 1908 -

இந்திரவியாரமாகும் புத்தரங்கத்தில் சேர்ந்து மகடபாஷையில் சமணரென்றும், சகடபாஷையில் சிரமணரென்றும், திராவிடபாஷையில் தென்புலத்தார் என்றும், புலன் தென்பட்டவர்கள் என்றும், வழங்கும்படியான விசாரிணைப்புருஷர்கள் மகடபாஷையில் பஞ்சஸ்கந்தமென்றும், திராவிட, பாஷையில் ஐம்புலன் என்னும் படுத்தல், எழுதல், நடத்தல், அணிதல், துய்தலாம் ஐங்கூறினுள் நினைத்தல், மறத்தல், அறிதல், அன்பு, ஆசை, பயம், மரணம், நிறை, பொறை, ஓர்ப்பு, மையல், கடைப்பிடி, வெறுப்பு, விருப்பு, உவப்பு, இரக்கம், நாணம், பயம், முறிவு, அழுக்காறு, அருள், பீடை, இன்பம், துன்பம், இளமெய், முதுமெய், இகல், வெற்றி, பொய்ச்சாப்பு, ஊக்கம், மறம், மதம் எனும் முப்பத்திரண்டு செயலுடைத்தாய உருவகத்தை மகடபாஷையில் ஆன்மமென்றும், சகடபாஷையில் புருஷனென்றும், திராவிடபாஷையில் மனிதன் என்றும் வழங்கிவந்தார்கள்.

இத்தகைய ஒருமெய் உருவகம் ஒன்றாகத் தோற்றினும் செயலால் உண்மெய்யும், தோற்றத்தால் புறமெய்யுமாக உடலுயிர் இரண்டென வகுத்துள்ளார்கள்.

இவ்விரண்டினுள் உருவகத் தோற்றச் செயல்களாகும் தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல், யீதல் என்னும் இத்தொழிலாகுந் தோற்றத்தையே உயிருடல் இரண்டிற்கும் ஒத்தகுணமென்று வகுத்துள்ளார்கள்.

உயிரில்லா பொருட்குணமாகும் இருகோணம், முக்கோணம், வட்டம், சதுரமென்னும் வடிவங்களையும், துற்கந்தம், நற்கந்தம் என்னும் நாற்றங்களையும், வெண்மெய், கருமெய், செம்மெய், பொன்மெய், பசுமெய் என்னும் ஐவகை வருணங்களையும், கைப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு, என்னும் அறுசுவைகளையும், வெம்மெய், தண்மெய், மென்மெய், வன்மெய், நொய்மெய், சீர்மெய், இழிமெய் என்னும் எட்டு ஊறுதளையும் உயிரல் பொருட்குணமென வகுத்துள்ளார்கள்.

உடல் உயிர் என்னும் இரண்டினுள் உயிர் என்னும் செயலற்றவிடத்து உடல் அசையாமலும், உடல் தோற்றி அசையா இடத்து உயிரென்னும் பெயரற்றுப்போவதால் ஒற்றுமெய் நயத்தால் ஒன்றென்றும், வேற்றுமெய் நயத்தால் இரண்டென்றும் வழங்கிய உரூவக மனிதனை ஆன்மன் என்றும், புருஷன் என்றும் பொதுப்பெயரால் வழங்கி வந்தார்கள்.

பஞ்சஸ்கந்தங்களால் அமைந்துள்ள புருஷனுக்கே ஆன்மனென்றும், ஆத்துமனென்னும் பெயருண்டாயிற்று.

மனுட உருவக தோற்றம் உண்டாயவிடத்து ஆத்துமமென்னும் பெயருண்டாயதன்றி தோற்றமுண்டாகாவிடத்து ஆன்மமென்னும் பெயரில்லை.

இத்தகைய உடலுயிரென்பவற்றுள் தான் கற்றவைகளையும், கண்டவைகளையும் சிலகால் சென்று சிந்தித்தபோது கொடுக்குங் குணத்திற்கு உள்ளமென்றும், அவ்வுள்ளமே விரிதலும், மறைதலுமாகிய குணத்திற்கு மனமென்றும், அவ்வகையால் விரியும் மனதை சற்று தடுத்தாளும் குணத்திற்கு மதி என்றும், அம்மதியைப் பெருக்கி இஃது நன்கு தீதென்று தெளிந்து தேறுங்குணத்திற்கு அறிவென்றும், அவ்வறிவின் பெருக்கத்தால் உடலுயிர் இரண்டிற்கும் நிகழும் பிணிமூப்புச் சாக்காட்டினால் உண்டாகும் துக்கம், துக்கோற்பவம், துக்கோற்பவ காரணம், துக்க நிவாரணமாகும் நான்கு வாய்மெய்களை உணர்ந்து,

காக்கைபாடியம்

உடலுயிர்பொருத்தா லுள்ளந்தோன்றி / கடலுளவிரிவே மனமென வாய்ந்து

வடவிரிமனமாள் மதியெனப்பெருகி / திடம்பெரு வறிவாற் றேவராகினரே.

நல்வாய்மெய், நற்காட்சி, நல்லூற்றம், நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைபிடி, நல்லுள்ளமாம் அஷ்டாங்கமார்க்கத்தில் சென்று ஞானவாசிரியராகும் அறஹத்துவை அடுத்து உபநயனம் என்னும் உதவி விழியாம் ஞானக்கண் பெற்று ஊனக்கண்ணற்று உள்விழி பார்வையால் சுழிமுனைக் கனலேறி ஜாக்கிரத்தில் சுழுப்த்தியாயபோது தசநாதமுண்டாகிதானே தானே சுயம்பிரகாச உண்மெய்யனாகின்றான். இந்நிலையையே மெய்கண்டோனென்றும், மெய்யன் என்றும் கூறப்படும்.

இம்மொழியையே பாலிபாஷையில் தானே தானே சுயம்பாதலை ததாகதரென்றும், மெய்யனை புத்தரென்றும், அழைக்கலாயினர்.

மெய்கண்டவுடன் பஞ்சஸ்கந்த விவகார ஆன்ம பற்றற்று புளியம்பழத்தின் ஓடுபோல் உடலுயிர் என்னும் பெயரற்று அநித்திய அனாத்தும் நிருவாணநிலை அடைகின்றான்.

தாயின் கருப்பையில் குழவி கட்டுப்பட்டிருக்குங்கால் அதன் மூச்சானது உள்ளுக்கே ஓடிக்கொண்டிருப்பது சுவாபம்.

- 2:16; செப்டம்பர் 30, 1908 -

தாயினது கருப்பையில் குழவி கட்டுப்பட்டிருக்குங்கால் அது முட்டுவதும், உலாவுவதும் சகலருக்கும் தெரிந்த விஷயம். அவ்வகை உலாவும் குழவிக்கு அதன் மூச்சானது உள்ளுக்கே ஓடிக்கொண்டிருப்பது இயல்பாம்.

அஃதெவ்வகையால் உள்ளுக்கே ஓடிக்கொண்டிருப்பது என்பீரேல் உந்தியாகும் கொப்புழை ஆதாரமாகக் கொண்டு இடதுபுற மார்பின் உள்ளுக்கே மேலேறி இருகண்களின் மத்திய நாசிமுனையைத்தாவி சிரசின் உச்சியைக் கடந்து பிடரிவழியில் இறங்கி வலது முதுகின்புறம் இழிந்து கொப்புழென்னும் உந்தியில் கலந்து நிற்கும்.

அந்நாடிக்கு குண்டலி என்றும் அதன் குழலுக்கு பிரம்மரந்தினம் என்றும் கூறப்படும்.

குண்டலி என்னும் பெயர் வாய்த்தக் காரணம் யாதென்பீரேல், குழவி கருப்பையில் அடங்கியிருக்குங்கால் உள்மார்பிற்கும், முதுகிற்கும் ஓடிக் கொண்டிருந்த மூச்சானது கருப்பையைவிட்டுக் குழவி வெளிவந்து விழுந்தவுடன் வாய்திறந்து கா - கூ என்று கூச்சலிடுங்கால் நாசியுந் திறந்து உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்த மூச்சு உள்ளுக்கும் வெளிக்கும் ஓடும்படி ஆரம்பித்துக்கொள்ளுகின்றது. அவ்வாரம்பத்தால் முன்பு உள்ளுக்கு ஓடும் வழி கொடுத்திருந்த நாடியானது குளிர்ச்சியால் மண்டலமிட்டு சுருண்ட பாம்புபோல் உந்தியினிடமாக வளைந்து அவ்வழியை அடைத்துவிடுகின்றது. கருப்பையில் நீண்டோடிக் கொண்டிருந்த நாடி குழவி வெளிவந்து விழுந்தவுடன் சுருண்டு அவ்வழி அடைந்தபடியால் அதற்கு குண்டலி நாடி என்று பெயரிட்டார்கள்.

அக்குழலுக்கு பிரம்மரந்தினமென்னும் பெயர் வந்த காரணம் யாதென்பீரேல், அக்குழலின் வழியே மூச்சை மறுபடியும் உள்ளுக்குத் திருப்பிக் கொண்டவனுக்கு மாளாப்பிறவி துக்கமற்று நிருவாணசுகம் உண்டாகிறபடியால் அதின் நற்செயலுக்காய் அக்குழலுக்கு பிரம்மரந்தினம் என்னும் பெயரை அளித்துள்ளார்கள்.

அப்பிரம்மரந்தினக் குழலுள்ள நாடி இடது மார்பிற்கும், வலது முதுகிற்கும் சுற்றி நிற்கின்றபடியால் அப்புலனைத் தெரிந்துக் கொள்ளும் உபநயனமாம் உள்விழி கண்டசாதனனென்று உலகோரறிந்து வேண்வுதவி புரிந்து வருவதற்காக மதாணி பூணுநூலென்னும் முப்புரி நூலை இடது மார்பிற்கும், வலது முதுகிற்குமாக அணைத்துக் கொள்ளும்படிச் செய்து அவனை இல்லறவாசிகளுக்குக் காண்பித்து இந்நூல் அணைந்த அடையாளம் பெற்றவன் ஐம்புலனடக்குந் தென்புலத்தானாதலின் நீங்கள் யாவரும் அவனுக்கு வேண்டிய உதவிபுரிந்து கடைத்தேறச் செய்ய வேண்டும்.

உங்கள் உதவியால் அவ்வொருவன் கடைத்தேறுவானாயின் உயர்ந்தோனால் உலகமும் கடைத்தேறும். ஆதலின் மதாணிப்பூநூல் மார்பிலணைந்துள்ள ஒவ்வொரு ஞானசாதகர்களுக்கும் புத்தசாங்க வியாரங்களுக்குச் சென்று இல்வாழ் மக்கள் வேண உதவி புரிந்து வந்தார்கள்.

மண்டலமிட்ட குண்டலநாடி அறிந்தோனென்று மக்கள் அறிந்து கொள்ளுமாறு மதாணி பூணூல் மார்பில் அணையும் ஓர் அடையாளம் இட்டுள்ளார்கள்.

இப்பூணுநூல் அடையாளம் ஞானசாதகர்க்கு புத்தபிரான் காலத்திலேயே அளித்துள்ளதாகும்.

பின்கலை நிகண்டு

காப்புக்கு முன்னெடுக்குங் / கடவுடான் மாலேயாகும்
பூப்புனை மலரின் செவ்வி / புனைபவ னாதவானும்
காப்பவ னாதலானுங் / கதிர்முடி கடகத்தோளில்
வாய்ப்பதா மதாணி பூணூல் / வரிசையிற் புனைதலானும்.

மணிமேகலை

புரிநூன் மார் பிற்றிரி புறவார்சடை
மரவுரியாடையன் விருட்சிகனென்போன்.

இத்தகையப் பூணுநூலுக்கு ஆதாரமாகும் குண்டலி என்றும், பிரம்மரந்தினம் என்றும் வழங்கும் நாடியின் மகத்துவத்தை அடியில் குறித்துள்ள பாடலால் காணலாம்.

சிவவாக்கியர்

உருதரித்த நாடிதன்னி லோடுகின்றவாயுவை
கருத்தினாலிருத்தியேகபாலமேற்றவல்லிரேல்

விருத்தர்களும் பாலராவர் மேனியுஞ்சிவந்திடும்
அருள்தரித்த நாதனாணை அம்மையாணை யுண்மெயே.

ஞானாசிரியரால் அருளப்பெற்ற உபநயனமென்னும் உதவி விழியாகும் ஞானக்கண் பெற்று புருவமத்திய சுழிமுனை நாடியை அழுத்தி சதா விழித்து சருவ பாசபந்தங்களையும் ஒழித்து நனவினில் சுழித்தியாகி தூங்காமல் தூங்குங்கால் தசநாடிகளின் தொழிலொடுங்கி குண்டலி நாடி நிமிர்ந்து தசநாதங்கள் தோன்றி கலங்கச்செய்யும் என்றும்,

தாயுமானவர்

ஆங்கார முள்ளடக்கி / ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமற்றூங்கி / சுகம்பெருவதெக்காலம்.

திரிமந்திரம்

அற்றார் பிறவி யவரிருகண்களை / வைத்தார் புருவத்திடையே நோக்கி
ஒத்தேயிருக்க வுலகெலாந் தெரியும் / எத்தாலுஞ்சாவில்லை இறையாவனாமே.

அகஸ்த்தியர் ஞானம்

விழித்து மிகுபார்த்திடவே பொறிதான்வீசும்
முச்சந்தி வீதியிலே தீபந்தோன்றும்
சுழித்தியிலே போகாமல் ஒருமனதாய் நின்றால்
சத்தமென்ற நாதவொலி காதிற் கேழ்க்கும்
இழுத்ததென்று நீகூடத் தொடர்ந்தாயானால்
எண்ணொண்ணா பிறப்பிறப்பு யெய்தும்பார்
அழுத்திமனக் கேசரத்தி னின்று மைந்தா
அப்பனே லலாடத்தில் தாங்குவாயே.

- 2:17: அக்டோபர் 7, 1908 -

பாம்பாட்டி சித்தர்

ஒங்காரக்கம்பத்தின் உச்சிமேலே / உள்ளும் புறம்பையும் அறியவேண்டும் ஆங்காரகோபத்தை யடக்கிவிட்டே / ஆனந்தவெள்ளத்தைத் தாங்கிக்கொண்டே போங்காலஞ்சாங்காலம் ரண்டு மறவே / புருவமைய சுழிமுனைதனிலே
தூங்காமற்றூங்கியே சுகம்பெறவே / தொந்தோம் தொந்தோ மென் றாடாய்பாம்பே.

அகஸ்தியர் பரிபாஷை

அமுதமிழியோகமது செய்யவென்றால்
அப்பனே கால்நீட்டி படுத்துக்கொண்டு
மமதையில்லாவலக்கையை முடி மேல்வைத்து
வழுத்துப்பூரணத்தை சுழிமுனையைமேவி
சமரசமா வாசியை நீ யிழுத்துக் கொண்டு
சமர்த்தாகக் கேசரத்தில் மனதைவைத்தே
அமதியொடு பராபரத்தை தரிசித்தேதான்
அப்பனே லலாடத்தில் தூங்குவாயே.

தாயுமானவர்

தூங்கிவிழித் தென்பைலன் / தூங்காமல் தூங்கினிற்கும்
பாங்குகண்டா லன்றோ / பலன்காண்பேன் பைங்கிளியே.

நனவினில் கழுத்தியாகி நன்மகன் பேறுபெற்றான் என்னும் மனத்தின் கண் சொற்பக் களங்கமேனும் அணுகாவண்ணம் ஜாக்கிரா ஜாக்கிரத்தினின்று சாந்தம், யீகை, அன்பென்னுஞ் செயல்களே பெருகி ஜாக்கிரா சொற்பனத்திலும் அதுவாய் சதா உள்விழியாம் உபநயன பார்வையால் சுழிமுனையை விழித்துநோக்கி ஜாக்கிரா சுழித்தியடைந்தபோது தசநாதங்களும் எழுந்தடங்கி சுயம்பிரகாச உண்மெய்யனாகின்றான்.

அச்சுயம்பு ஒளியாம் தேயுவின் அகமே இராகத்துவேஷ மோகங்களால் சூடுகொண்டழிப்பது தவிர்ந்து சாந்தம், ஈகை, அன்பென்னும் பெருக்கத்தினால் தேயுவின் அகம் குளிர்ந்து தன்னை உணர்ந்து புளியம்பழம்போலும் ஓடுபோலும் பிரிந்து மனிதனென்னும் பெயரற்று குளிர்ந்த தேய்வகமாம் தெய்வமென்னும் ஏழாவது தோற்றப்பெயர் பெறுகின்றான். பூமியிலிருந்து புற்பூண்டுகள் தோன்றி புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோன்றி, புழுக்சீடாதிகளினின்று மட்சம், பட்சிகள் தோன்றி, மட்சம், பட்சிகளினின்று மிருகாதிகள் தோன்றி, மிருகாதிகளினின்று மக்களாம் மனுக்கள் தோன்றி, மனுக்களினின்று தேவர்களாகத் தோன்றும் ஏழாவது தோற்றத்து இயல்பு இதுவேயாகும்.

மனிதனுக்குள்ள தேயுவின் அக்கினியாம் துற்செயல்கள் யாவையும் அகற்றி நற்செயலாந் தேயு குளிர்ந்து சாந்தம் நிறைந்தவிடத்து தேவன் என்னும் பெயரும், சருவ சீவர்களின் மீதும் அன்பு பாராட்டி ஆதரிக்கும் குளிர்ந்த நிலை அடைந்தவிடத்து அந்தணனென்னும் பெயரும் பெறுகின்றான்.

சீவகசிந்தாமணி

ஊன்சுவைத் துடம்புவீக்கி / நரகத்திற் புகுதனன்றோ
யூனறினா துடம்புவாட்டித் / தேவரா யுரைதனன்றோ
யூன்றியிவ்விரண்டினுள்ளு / முறுதிநீ யுரைத்தி யேன்ன
வூன்றினா தொழிந்து புத்தே / ளாவதே யுறு தியேன்றான்.

திரிக்குறள்

அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ்
செந்தண மெய்ப்பூண்டொழுகலால்.

பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க்கடைபிடியுங்கள், உங்களிதயத்தை சுத்தி செய்யுங்கள் எனும் மும்மொழிகளே திரிபேதவாக்கியங்கள் என வழங்கும் அருமொழி மூன்றையும் சிரமேற்கொண்டு தங்களுக்குள் உள்ளப் பாபச்செயல்களையும், குணங்களையும் பற்றற அறுத்தும் இனிசேரும் பாபச்செயல்களையும், பாபகுணங்களையும் சேரவிடாமல் அகற்றியும், தங்களுக்குள் உள்ள நன்மெய்ச்செயல்களையும், நன்மெய்க் குணங்களையும், நாளுக்குநாள் விருத்தி செய்தும், இனிசேரும் நன்மெய்க்குணங்களையும், செயல்களையும் நாளுக்குநாள் சேர்த்தும், தங்களுள்ளமாம் இதயத்திலுள்ளக் களங்கங்களை அகற்றி நாளுக்குநாள் சுத்தி செய்துக் கொண்டும், இனி இதயத்துள் வந்தணுகும் களங்கங்களை அணுகவிடாமல் அகற்றிக்கொண்டும் வரும்படியான சாதனங்களையே இடைவிடாது சாதிப்பதினால் கண்ணினாற் பார்த்த வஸ்துக்களை மனம் நாடிச்செல்லுவதும், நாவினால் உருசித்த பதார்த்தங்களை மனம் நாடிச்செல்லுதலும், செவியால் இனிதாகக் கேட்ட வார்த்தையை மனம் நாடிச் செல்லுதலும், நாசியால் சுகந்த கந்தத்தை முகர்தவிடத்தை மனம் நாடிச்செல்லுதலும், தேகம் சுகித்தவிடத்தை மனம் நாடிச்செல்லுதலுமாகிய ஐம்புலச் செயல்களற்று பொறிவாயலில் ஐந்தவித்த பலனே வேதமொழியின் மார்க்கப்பலன்கள் எனப்படும்.

பேதவாக்கியங்களாகும் மூன்று அருமொழியின் பாதையில் நடந்து ஐயிந்திரியங்களை வென்று பெண்ணிச்சையற்று காமத்தை ஜெயிக்கின்றான்.

சீவகசிந்தாமணி

ஆசைஈயர்வமோ டையமின்றியே / யோசைபோயுல குண்ணநோற்றபி
னேசு பெண்ணொழித் திந்திரர்களாய்த் / தூயஞானமாய்த் துறக்கமெய்தினார்.

இத்தகைய பற்றுக்களற்று உபநயனமாம் உள்விழியால் புருவமத்திய சுழிமுனையை நாடிய நிலைக்கே வேதமுடிவு என்றும், வேத அந்தமென்றும் கூறப்படும்.

சுத்த இதயத்தினின்று தன்னைபார்க்குங்கால் உனது, எனது என்னும் பின்னபாசங்களற்று சருவ உயிர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்கவும் உயிர்களால் யாதொரு துன்பம் தனக்கணுகினும் அவற்றிற்கு பிரதி துன்பம் அளிக்காது காக்கும் குணத்திற்கு பிரம்மமென்று பெயர்.

பூமியை ஓர் மனிதன் கொத்திப் புழுதியாக்கி பண்ணியங்கலைக்கிய போதும் அஃது பெரும்பலனைக் கொடுத்து வருவதுபோல் மனிதனும் பலரால் துன்பப்படினும் அவர்களுக்கு நற்பலன் அளித்தே வருவானாயின் அந்த சிரேஷ்ட செயலுக்கு பிரமனென்னும் பெயரை அளித்திருக்கின்றார்கள்.

மச்சமுனியார் ஞானம்

நித்தமுநி சுத்தமதாய் நின்றுபார்த்தால்
நின்தேகம் பிரம்மமடா நீ தான் காண்பாய்
சுத்தமுடன் சோதிமனக் கண்ணாவந்த
சுருதிமுடிவானசுட ரொளியைக்கண்டால்

பத்தியுள்ள தேகமது சுத்தமாச்சி
பாலகனே யவமிருத்து பரந்துபோச்சு
வெத்தியுள்ள வஷ்டசித்துங் கைக்குள்ளாச்சு
வேதாந்தப்புருவமதை மேவிநில்லே.

மூன்று அருமொழிகளாம் பேதவாக்கியங்களின் பலனாகும் சுழிமுனையில் காணும் சுயஞ்சோதியாம் தோற்றத்திற்கே சுருதி முடிவென்றும், வேதமுடி என்றும், வேத அந்தமென்றும் கூறியுள்ளார்கள். இதுவே வேதாந்தமாகும்.

இத்தகைய சாதனமுற்றவனை யமகாதகனென்றும், காலகாலனென்றும், மரணத்தை ஜெயித்தோனென்றும் கூறியுள்ளார்கள்.

- 2:18; அக்டோபர் 14, 1908 -

பாம்பாட்டி சித்தர்

வேதப்பொரு ளின்னதென்றும் வேதங்கடந்த
மெய்ப்பொருளைக்கண்டு மனமேவிவிரும்பி
போதப்பொளின்னதென்று போதனைசெய்யும்
பூரணசற்குருதான் கண்டாடாய்பாம்பே.

திரிபேத வாக்கியங்களாகும் மூவருமொழியாம் பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க்கடை பிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் மும்மொழிகளுள் பாபஞ்செய்யாதிருங்கள் என்னும் ஓர் மொழியைக் கடைபிடித்தொழுகுவானாயினும் மரணத்தை ஜெயிப்பான்.

நன்மெய்க் கடைபிடியுங்கள் என்னும் ஓர் மொழியைக் கடைபிடித்து ஒழுகுவானாயினும் மரணத்தை ஜெயிப்பான்.

இதயத்தை சுத்திசெய்யுங்கோள் என்னும் ஓர் மொழியைக் கடைபிடித்து ஒழுகுவானாயினும் மரணத்தை ஜெயிப்பான்.

தாயுமானவர்

சந்ததமும் வேதமொழி யாது வொன்றை
பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால்
ஜகமீதிருந்தாலு மரணமுண்டென்பது ச
தா நிஷ்டர் நினைவதில்லை.

இடைகாட்டுசித்தர்

சாகாதிருப்பதற்குத் தான்கற்குங்கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கன் மனமே.

அகப்பேய்சித்தர்

பாவந்தீரவென்றால் அகப்பேய் / பற்றற தில்லுமடி
சாவதுமில்லையடி யகப்பேய் / சற்குரு போதநிலை.

ஒளவை ஞானக்குறள்

துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.

கடுவெளி சித்தர்

மெய்ஞ்ஞான பாதையிலேறு, சுத்த / வேதாந்த வெட்டவெளி தனைத்தேறு அஞ்ஞானமார்க்கத்தைத் தூறு, உன்னை / அண்டினோர்க் கானந்தமா அறங்கூறு.

பேதவாக்கிய மார்க்கத்தில் நடந்து பேத அந்தமாம் வேதாந்தத் தினிலைத்தவன் தன்னையறியும் உண்மெயுற்று திரிகாலங்களையும் உணர்ந்து பிரமமணமாம் நற்செயல்வீசி சருவசீவர்களுக்கும் உபகாரியாய் விளங்கி அறஹத்தென்றும், பிராமணனென்றும், அந்தணனென்றும், விவேகிகளால் அழைக்கப்பெற்று சருவசீவர்களுந் தேவனென்று வணங்கத்தக்க ஏழாவது தோற்றத்தில் இருந்து தனது சங்கத்தோர் யாவரையும் அழைத்து தான் பரிநிருவாணமடையும் காலத்தை விளக்கி புளியம் ஓடுபோலும், பழம்போலும் புழுக்களினின்று விட்டில் வெளிவருதல் போலும் பயிர அங்கமாம் தேகத்தினின்று அந்தர அங்கமாம் உண்மெயொளியாய் வெளிவந்துவிடுவான்.

தாயின் வயிற்றுநின்று பயிரங்கமாய் பிறந்த பிறப்பு ஒன்றும், பயிரங்கமாந் தேகத்தினின்று அந்தரங்கமாய் சோதிமயமாய்ப் பிறந்த பிறப்பொன்றும் ஆக இரு பிறப்பானது கொண்டு பிராமணர் அந்தணரென்னும் மகாஞானிகளை இரு பிறப்பாளர் என்று வழங்கிவந்தார்கள்.

இதுவே புத்தசங்க அறஹத்துக்களிடம் பெற்ற உபநயனத்தின் பயனும், சுருதி முடிவின் பயனும், வேத அந்தத்தின் பயனுமாகும்.

பட்டினத்தார்

நீற்றைப்புனைந்தென்ன நீராடப்போயென்ன நீ மனமே
மாற்றிப்பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக்கிடக்குது யெழுகோடி மந்திரம் என்னகண்டாய்
ஆற்றிற்கிடந்துந் துறைதெரியாமலலைகின்றயே.

நெஞ்சறி விளக்கம்

காட்டினில் மேவுகின்ற / கனபுழுவெல்லாம் பார்த்து
வேட்டுவ கெடுத்துவந்து / விரும்பிய கிருமிதன்னை
கூட்டினி லடைத்துவைத்து / குளவிதன் னுருவாய்செய்யும்
நாட்டினி நீதா நாகை / நாதரை வணங்கு நெஞ்சே.

இத்தகைய தேகத்திலிருப்பதை அறுவெறுத்து புறமெய் வேறு, அகமெய் வேறாகக் கழட்டிக் கொள்ளுவோர்களை ஜீவன் முத்தர்கள் என்று கூறப்படும். இஃதை அநுசரித்தே பட்டினத்தார் தனது சற்குருவாகும் புத்தபிரான் அரசனாகவிருந்து குருவாகத் தோன்றி விளக்கிய மகத்துவத்தைப் போதிக்கின்றார்.

பட்டினத்தார்

மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வான் குருவும்
கோனாகி யென்னை குடியேற்றுக்கொண்டனன் குற்றமில்லை
போனாலும் பேரிருந்தாலு நற் பேரிது பொய்ன்றுகா
ணானாலு மிந்த வுடம்போ டிருப்பதறுவெறுப்பே.

இத்தகைய அறஹத்துக்கள் ஆதியாகிய குருநாதனுக்கு சமதையாய் சம - ஆதி, சமாதியாகிப் புறமெய் அகற்றி உண்மெயொளியாய் அகண்டத்துலாவி நட்சேத்திரம் பெற்றிருக்கின்றார்கள்.

அகஸ்தியர் மாணாக்கனை சுழிமுனையாம் வேத அந்தத்தில் நிறுத்தி சாதனத்தை போதித்த பாடல்

பண்ணினால் ஜடம்போக தெத்தனைநாளாய்
பலவாகமெளனத்தை விரித்துச்செல்வேன்
ஒண்ணினால் மௌனத்தில் ரவியைப்பாரு
உறுகியுல்லோவகண்டத்தின் வெளியைக்காட்டும்
கண்ணினால் ஜடங்காணும் பிடிக்கப்பொய்யாம்
கற்பூர தீபம்போல் ஒளியாய் நிற்கும்
தண்ணினால் சாய்கையில்லை யகண்டமாவாய்
சச்சிதானந்தமென்ற தேகமாமே.

தேய்வக்கதி - இதுவே தெய்வகதி யென்னப்படும்.

சீவகசிந்தாமணி

திருவிற் பொற்குலாய தேர்ந்தார் / தேவர் தன் தண்மெய் செப்பிற்
சுருவத்துசென்று தோன்றார் / கானிலந் தோய்தல் செல்லா
குருவமே லெழுதலாகா / வொளியுமிழ்ந் திலங்குமேனி
பரிதியி னியன்றதொக்கும் / பன்மலர் கண்வாடா.

மச்சமுனியார் ஞானம்

கேட்டறிந்துக்கொள் வீடென்ன காடென்ன
கெட்டிப்பட்ட மெளனத்திலே நின்று
மாட்டறிந்துக்கொள் வஸ்துவை யுண்டுநீ
மனதைத்தாண்டி யறிவுக்குள்ளேச் செல்லப்
பூட்டறிந்துக்கொள் பொன்போலதேகமாம்
புத்தியோடு மகண்டத் துலாவலாம்
ஆட்டறிந்துக்கொள் கற்பூர தேகமாம்
அகண்ட சோதியும் சித்தியுமாச்சுமே.

ஒளவையார் ஞானக்குறள்

வெள்ளி பொன் மேனியதொக்கும் வினையகன் / உள்ளுடம்பினாய வொளி.

- 2:19; அக்டோபர் 21, 1908 -

புத்தசங்கத்தோருள் சமணநிலை கடந்து அறஹத்துக்கள் என்னும் அந்தணநிலை அடைந்து இருபிறப்புண்டாய் சுயம்பிரகாசமாய் அந்தரத்தில் உலாவுகின்றார்கள். இவர்களையே சீவன்முத்தர்கள் என்றும், சீவகர்கள் என்றும் கூறப்படும்.

சிலப்பதிகாரம்

தண்ணலம் பெருந்தவத் தாசீவகர்முன் / புண்ணியதானம் புரிந்தறங்கொள்ளவும்.

கீடாதிகளாம் புழுக்களானது ஓர் இலையால் தன்னைமூடி திரண்டுருண்டு சிலகால் தொங்கலாடி வெடித்து இறகுகளுண்டாகி பறந்து போவது போல் புத்த சங்கத்தைச் சேர்ந்த அறஹத்துக்களாகும் அந்தணர்கள் தாங்கள் இரு பிறப்படைய ஓர் திங்களிருக்குங்கால் சங்கத்தோர்களுக்கும், அத்தேசவரசனுக்குந் தெரிவித்து தங்கள் வியாரத்துக்கருகில் ஓர்கல் அறைக்கட்டி அதற்குத்தக்க சதுரரைக்கல் மூடியொன்று செய்வித்து கல்லறையில் சாம்பலையும், கற்பூரத்தையும் கொட்டி அமாவாசையிலேனும் பெளர்ணமியிலேனும் அறறத்துவானவர் அதில் உட்கார்ந்து சதுரக்கல்லால் மூடிவிடச் செய்து ஆதிக்குச்சமமாய் சுயம்பிரகாசமாக வெளிதோன்றி இருபிறப்பாளனாவர், இதுவே சம ஆதி, சாமாதி என்று கூறப்படும். புத்தராம் ஆதிக்குச் சமமான நிலையாம்.

இத்தகையச் சமாதியடைந்தவர் அரசனேயாயினும் அன்றேல் அரசவங்கத்துள் சேர்ந்த ஒருவராகவேனும் இருந்திருப்பாராயின் அவரது தன்மகன்மக்கிரியைகளுக்கு உரியவர்கள் யாவரும் பதினைந்தாநாள் மாலை வாகனமின்றி நடந்துவந்து கல்லறையணுகி அறஹத்தோ, அறஹத்தோ எனும் சப்தம் இட்டு அறையின்மேல் மூடியுள்ள கல்லை எடுப்பார்கள். அக்கால் அவருடைய சிரசின் உச்சிவெடித்து பீடங்கலையாமலுஞ் சிரங்கவிழாமலும் இருக்குமாயின் சகலரும் அறத்தோ எனும் பெருங்கூச்சலிட்டு ஆனந்தம் கொண்டாடி கற்பூரத்தாற் குழியை மூடி முன்சதுரக்கல்லால் அடைத்து பீடிகையை கட்டிவிட்டு கன்மத்தின் ஆதியாய தன்மகன்மமாகும் ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திரதானம் முதலியவை செய்வதுமன்றி வருடந்தோரும் அவர்பெயரால் அத்திதியன்று தன்மகன்ம அன்னதானஞ் செய்துவருவார்கள்.

இவ்வகையாய் இல்லத்தைவிட்டு சமாதி அறைவறையிலும் வாகனமின்றி நடந்துசெல்லுவதை நடப்பென்றும், அறையின்மீது மூடியுள்ளக் கல்லை எடுப்பதை கல்லெடுப்பென்றும் வழங்கப்படும்.

இத்தகையக் கல்லெடுப்பு சோதனையால் சிரசின் உச்சி வெடிக்காமல் முடிசாய்ந்து துஞ்சிகிடக்குமாயின் மைந்தனும் மக்களும் தங்கள் தந்தை சமாதி என்னும் மரணத்தை ஜெயித்த ஆனந்தத்திற்கு வராமல் இறந்தார் என்னும் இழிவுக்கு வந்தோம் என்று துக்கித்து கல்லறையை மூடிவிட்டு இல்லஞ்சேர்ந்து தங்கள் முடிகளைக் கழட்டி எறிந்துவிட்டு நமது தந்தை ஞானவீரனாகும் ஆண்பிள்ளையாகாமல் விழலாய்ச் சங்கஞ்சார்ந்த வீண்பிள்ளை ஆயினரென்று தங்கடங்கள் மீசைகளையுஞ் சிறைத்துவிட்டு துக்கத்திலிருப்பார்கள்.

ஞானவானாகாமல் யீனவான் ஆனாரென்னும் துக்கத்தை ஆற்றுதற்கு தங்கள் குடும்பத்தோர் யாவரும் வந்துசேர்ந்து உங்கள் தந்தை மரணத்தை ஜெயிக்காமல் பிறவி துக்கத்திற்கு ஆளாயினர் என்னும் கவலையால் முடியைக் கழட்டி எறிந்துவிட்டும், மீசையை சிறைத்துவிட்டும் இருப்பது சரியல்ல.

பதினாறாவது நாள் நாங்கள் யாவரும் கூடி உன் தந்தை தறித்த முடியை மறுபடியும் தறிக்கின்றோம் நீவிரதைத் தறித்துக் கொண்டு இராட்சியந்தாங்கி உன்மைந்தனுக்கு முடிசூட்டிவிட்டு புத்தசங்கஞ்சார்ந்து சமணநிலைக்கடந்து அறஹத்துவாகி மரணத்தை ஜெயித்து மகாபரிநிருவாணம் அடைவாயாக வென்று ஆசீரளித்துப் போவார்கள். இதுவே மரணமடைந்த இழிவுக்காய் மீசைசிறைத்து முடியை கழற்றியெறிந்து நீராடி இழிவுக்குப் போனோம் என்னும் கல்லெடுப்பு எனப்படும்.

இல்லறத்தோர்க்குள்ளும், துறவறத்தோர்க்குள்ளும் உண்டாகும் செயல்களில் இறந்தார் என்னும் இழிவையும், துறந்தார் என்னும் மகிழ்வையும் கொண்டாடி சகலருக்கும் ஞான உற்சாகத்தை உண்டாக்கிக் கொண்டு வந்தார்கள்.

அத்தகைய தன்மகன்ம உற்சாகங்களானது அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே என்பதற்கு இணங்க புத்தமார்க்க அரசர்கள் எவ்வகையில் நடந்துவந்தார்களோ அதனைப் பின்பற்றி அநுசரித்து வந்தக் குடிகள் தற்காலம் நூதனமாகத் தோன்றியுள்ள சிவமதம், விஷ்ணுமதம், பிரமமதம், ஆரிய மதங்களைத் தழுவிக் கொண்டபோதிலும் பூர்வ புத்தசங்க மந்திரவாதிகளின் தன்மகன்மங்களையே அனுசரித்து வருகின்றார்கள்.

புத்தசங்கத்தைச் சார்ந்த சமண முநிவர்களுள் உபநயனம் பெற்று வேத அந்தத்தில் நிலைத்து அறஹத்துக்களாம் அந்தணர்களாகி தேகத்தைக் கழற்றி இருபிறப்படையும் ஜீவன்முத்தர்களாம் சீவகர்களானோர் நீங்கலாக அஷ்டசித்தின் அந்தத்திற்கும், வேத அந்தத்திற்கும் மத்தியில் நிலைத்து தேகத்தை நீருடன் நீராய்கலத்தலும் நெருப்புடன் நெருப்பாய்க்கலத்தலும், காற்றுடன் காற்றாய் கலத்தலும், மண்ணுடன் மண்ணாய் கலத்தலும், விண்ணுடன் விண்ணாய் கலத்தலுமாகிய எண்பத்தொன்பது சித்துக்களும் விளையாடி அந்தரத்து உலாவுகின்றார்கள். இவர்களையே விதேகமுத்தர்கள் என்றும், சாரணர்கள் என்றும், சித்தர்கள் என்றும் கூறப்படும்.

பின்கலை நிகண்டு

நீரினில் பூவில் வானில் / நினைந்துழி யொதுங்குகின்ற
சாரண் ரெண்மராவர் / சமணரிற் சித்திபெற்றோர்.

மணிமேகலை

நிலத்திற்கலத்து நெடுவிசும்பேறிச் / சலத்திற்றிரியுமோர் சாரணன்றோன்றி.

சிலப்பதிகாரம்

இந்திரவியார மேழுடன்புக்காங் / கந்தரசாரிக ளாறைம்பதின்மர்.
அந்தர சாரிகள் மறைந்தனராற்று / இந்திரவியார மேழுடன் போகி.

சீவகசிந்தாமணி

இலங்கு குங்கும மார்பனேந்துசீர் / நலங்கொள் சாரணர் நாதன்கோயிலை
வலங்கொண்டார் மலர்ப்பிண்டி மாநிழற் / கலந்த கன்மிசைக் கண்டு வாழ்த்தினான்.

பாம்பாட்டிசித்தர்

வச்சிரத்திற் கோர்பழுது வாய்க்குமாயினும்
வல்லுடம்புக் கோர்குறைவு வாய்த்திடாது
மெய்ச்சசட முள்ளவெங்கள் வேதகுருவை
வேண்டித் துதித்துநின் றாடு பாம்பே.
மூண்டெறியு மக்கினிக்குண் மூழ்கிவருவோம்
முந்நீரி லிருப்பினு முழுகிநிற்போம்
தாண்டி வரு வெம்புலியைத் தடுத்தாளுவோம்
தார்வேந்தர் முன்புநின் றாடாய்பாம்போ.

- 2:20; அக்டோபர் 28, 1908 -

சீவக சிந்தாமணி

நலத்திரு மா மக ணயந்த தாமரை / நிலத்திருந் திருசுடர் நிமிர்ந்து செல்வபோ
லுலப்பருத் தவத்தினா லோங்கு சாரணர் / செலத்திரு விசும்பொளி சிறந்ததென்பவே.

சுருதி முடிவென்றும், மறைமுடி வென்றும், வேத அந்தமென்றும் வழங்கும் வேதாந்தத்திற்கும், அஷ்டசித்துக்களின் அந்தமாம் சித்தாந்தத்திற்கும் மத்தியில் தேகத்துடன் அந்தரத்துலாவுவோர்களே சித்தர்களென்றும், சாரணர்களென்றும் அழைக்கப் பெற்றார்கள்.

இதை யநுசரித்தே தாயுமானவர்சித்தர்களை தியானிக்குங்கால் ‘வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே’ என்றுங் கூறியுள்ளார்.

இத்தகைய வேதாந்திகளும் சித்தாந்திகளும் தற்கால முளரோவென்று உசாவுவாறுமுண்டு. அவர்கள் அந்தரத்தில் நட்சேத்திரம் பெற்று அகண்டத் துலாவுகினும் நமது அஞ்ஞானம் நிறைந்த ஊனக்கண்ணிற்குப் புலப்படாமல் இருக்கின்றார்கள். சாந்தம், ஈகை, அன்பெனும் காருண்ய முகத்தினின்று உபநயனமாம் உள்விழிப் பார்வையால் அவர்களைக் காணக் கூடும்.

தாயுமானவர்

ஞானசுகுணாகர முகங்கண்போதிலோ திலோ நவனாதசித்தர்களு முன்
னட்பினைவிரும்புவார் சுகர்வாமதேவர் முதன் ஞானிகளு முனை மெச்சுவார்.

இதயசுத்தத்தாலும், வேதாந்தமாம் உபநயன பார்வையாலும், காமனையும் வென்று மரணத்தை ஜெயித்து அறஹத்து, பிராமணர், அந்தணரென்னும் பெயர்பெற்று புளியம்பழம் போலும், ஓடுபோலும் தேகத்தினின்று மறுபிறப்படைகின்றவர்க ளெவரோ அவர்களே இருபிறப்பாளரென்னும் யதார்த்த பிராமண வேதாந்திகளாவர்.

இத்தியாதி சத்தியதன்மங்களையும் தெள்ளற விளக்கி உலக சீர்திருத்தத்திற்கு ஆதியாகவும் மக்களின் தெய்வத்தோற்றத்திற்கு ஆதியாகவும் மனவமைதியால் மரணத்தை ஜெயிக்கும் மார்க்கத்திற் காதியாகவும் சாந்த நிலையமைதியால் அந்தணர்களென்று பெயர்பெற்றவர்களுக்கு ஆதியாகவும் நல்லொழுக்கத்தில் உண்டாகும் சகல சித்துக்களினுட்பொருட் ஆதியாகவும் விளங்கி ஆதிதேவனென்றும், ஆதிகடவுளென்றும் ஆதிவேதமென்றும், ஆதிநாதனென்றும் ஆதிபிரமமென்றும், பெயர்பெற்றவர் ஜெகத்குருவாம் புத்த பிரானேயாகும்.

சக்கிரவர்த்தித் திருமகனாகும் சாக்கையமுனிவர் உலகெங்குஞ் சுற்றி பேரானந்த சத்திய தன்மத்தை ஊட்டி சீர்திருத்தியுமிருக்கின்றார்.

மணிமேகலை

எண்ணருஞ் சக்கரவான மெங்கணும் / அண்ணறைக் கதிர் விரிக்குங்காலை.

சிலப்பதிகாரம்

விரிகதிர்பரப்பி யுலகமுழுதாண்ட / வொருதனித் திகிரி யுரவோற்காணேன்.

சூளாமணி

தெருளாமெயால் வினவற்பாலதொன்றுண்டு
திருவடிகள் செம்பொனாரற சாரறறிந்தமேந்த
விருளாழிளேழுலகுஞ் சூழொளியின்மூழ்க
விமையாமதசெங்கண்ணி மொளிமணி னிமையோர் வந்தேத்த
வுருவாழியானு அழியாது. மொ மணி முடி மேற்குகைவைத்
தொருபாலில் வரவுலக நின்னுழையாதாக
வருளாழி முன்செல்லப்பின் செவ்வதென்னோ
வடிபடாதாய் ஈதாய் நின்ற வகன்ஞால முண்டோ

பின்கலை நிகண்டு

உலகெலா மிறைஞ்சி யேத்த / வுலகெலா முணர்ந்தமூர்த்தி

இவ்வகையாய் புத்தபிரான் உலகெங்குஞ் சுற்றி சத்தியதன்மத்தை மக்களுக்கு விளக்கினாரென்னும் சரித்திராதாரங்களுள்ளதன்றி அவரது நிஷ்டாசாதன உருவத்தைக் காட்டுஞ் சிலைகளும், அவர் சின்முத்திரை முதலிய பதினாறு முத்திரைகளைக் காட்டிய உருவச்சிலைகளும், நிருவாணமடைந்த அறப்பள்ளி உருவம் போன்ற சிலைகளும், உலகெங்குங் காணப்படுவதை அந்தந்த தேச மீயூஜியங்களிலும், ஆர்ச்சலாஜிகல் சர்வே புத்தகங்களாலும் தெரிந்துக் கொள்ளலாம்.

இருப்பிறப்பாளராகிய அந்தணர்கள் யாவருக்குத் தந்தையும் ஆதி அந்தணருமாக விளங்கிய வரும் புத்தபிரானேயாம்.

திரிக்குறள்

அறவாழியந்தணன்றாள் சேர்ந்தார்கல்லார் / பிறவாழி நீந்தலரிது.

சீவகசிந்தாமணி

திருமறுமார்பினை திலகமுக் குடையினை / யருமறை தாங்கிய வந்தணர் தாதையை
யருமறை தாங்கிய வந்தணர் தாதைதின் / னெரிபுரை மரைமல ரிணையடி தொழுதும்.

சாதிப்பைம் பொன்றன் னொளிவெனவித்தகைகுன்றா
நீதிச்செல்வம் மேன்மேணீந்தி நிறைவெய்தி
போதிச்செல்வம் பூண்டவரேத்தும் பொலிவின்னால்
ஆதிக்காலத் தந்தணன் காதன் மகனொத்தான்.

சருவ உயிர்களையும் தன்னுயிர்போல் கார்த்து சாந்தனிறைவால் ஆதியந்தணராகவும், அந்தணர்களுக்குத் தாதையாய துமன்றி உலக சீர்திருத்தக்காரருள் ஆதியாக விளங்கினவரும் புத்தபிரானோம்.

மணிமேகலை

ஆதிமுதல்வன் அறவாழியாள்வோன் / பாதபீடிகை பணிந்தனளேத்தி.

வீரசோழியம்

போதிநிழலிற் புநிதன் பொலங்கழல் / ஆதி யுலகிற்காம்.

சிலப்பதிகாரம்

கோதைதாழ் பிண்டி கொழுநிழலிருந்த / ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கி.

ஒவ்வோர் மக்களும் நான்குவாய்மெயுணர்ந்து நீதிநெறியின் ஒழுக்கங்களால் தீவினையை அகற்றினோர்கள் யாரோ அவர்களையே தேவர்கள் என்று அழைக்கப்படும்.

சீவகசிந்தாமணி

யாவராயினும் நால்வரைப்பின்னிடில் / தேவரென்பது தேறுமிவ்வையகங்
காவன்மன்னவர் காய்வன சிந்தியார் / நாவினும் முரையார் நவையஞ்சுவார்.

வேறு

கற்றவைம்பதங்கணீராக் / கருவினைக் கழுவப்பட்டு
மற்றவன் தேவனாகி / வானிடு சிலையிற்றோன்றி
யிற்றதனுடம்புமின்னா / விடரொழித்தினியனாகி
யுற்றவ னிலையுமெல்லா / மோதியி னுணர்ந்துகண்டான்.

இத்தகைய தேவராகவேண்டிய செயலுள் மனிதனென்னும் பெயருற்று ஏழாவது தோற்றமாகி ஆதிதேவனாக விளங்கியவரும், ஆதிதேவனெனப் போற்றப்பெற்றவரும் புத்தபிரானேயாம்.

பின்கலை நிகண்டு

தருமராசன் முன்னீந்திரன் சினன் பஞ்ச தாரைவிட்டே
அருள் சுரந்த வுணர்க்கூட்டுந் நதர்கதன் ஆதிதேவன்

- 2:21: நவம்பர் 4, 1908 -

தேகத்தால் உண்டாகுந் தீவினைகள் மூன்றும் வாக்கால் உண்டாகுந் தீவினைகள் நான்கும், மனதால் உண்டாகும் தீவினைகள் மூன்றையும் ஒழித்து சீலந்தாங்கி நிற்பவர்களே தேவர்கள் என்றும், மக்கள் என்றும், பிரமரென்றும் கூறியுள்ளவைகளில், ஆதியந்தணரென்றும், ஆதிதேவரென்றும் புத்தபிரானைக் கொண்டாடியது போலவே பிரமமென்றும் அவரையே துதித்திருக்கின்றார்கள்.

மணிமேகலை

சொல்லியபத்தின் றொகுதியுநீந்து
சீலத்தாங்கி தானந்தலைநின்று
மேவெனவகுத்த வொருமூன்றுதிரத்து
தேவரும் மக்களும் பிரமருமாகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயனுகர்வர்.

மருளுடைமாக்கள் மனமாசு கழுவும் / பிரம தருமனை பேணினராதி.

மக்களுள் நன்மெய்க்கடைபிடித் தொழுகுஞ் சாதனத்தால் கடவு ளென்னும் பெயரைப் பெறுகின்றார்கள்.

பின்கலை நிகண்டு

ககனம் விண்படை காடென்ப / கடவுடே முநிநன் மெய்ப்பேர்.

சீவகசிந்தாமணி

தணக்குறப்பறித்தபோதுந் / தானனை விடுத்தல்செல்லா
நிணப்புடை யுடம்பினாரை / யாதின நீங்கலாகு
மணப்புடை மாலைமார்ப / னொருசொலே யேதுவாக
கணைக்கவி வழித்தகண்ணார் / துறந்துபோய்க் கடவுளானான்.

இத்தகைய மக்களே கடவுளென்னும் பெயர் பெறும் பாகத்தில் ஆதி கடவுளாகப் போற்றப் பெற்றவரும் புத்தபிரானேயாம்.

சூளாமணி

ஆதியாங் கடவுளை யருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசையொதிங்கினை
போதியங் கிழவனை பூமிசை யொதிங்கிய
சேதியொன்செல்வநின் திருவடி வணங்கினம்.

மணிமேகலை

கடவுள் பீடிகை தொழுதனளேத்தி

சீவகசிந்தாமணி

காதிக்கண்ணறிந்து வென்ற / வுலகுணர் கடவுள் காலத்
தாதிக்கண் மரங்கள் போன்ற / வஞ்சொலீ ரிதனினுங்கள்
காதலிற் காணலுற்ற / விடமெலாங் காண்மினென்றா
திக்கணின்ற செங்கோ / னிலவுவீற்றிருந்த பூமான்.

இவைகளுக்கு முதலாதரவாகத் திருவள்ளுவ நாயனார் தானியற்றியுள்ள திரிக்குறள் பாயிரத்தில் கடவுள் வாழ்த்தென்று கூறி அப்பத்து பாடலிலும் புத்தபிரானையே சிந்தித்திருக்கின்றார்.

மக்களுள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறிகளை அவித்து காமனை வென்றார்கள் என்னும் பெண்ணிச்சையை ஒழித்தவர்களை ஐந்திரரென்றும், இந்திரரென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

சீவகசிந்தாமணி

ஆசையார்வ மோடைய மின்றியே / யோசைபோ யுலகுண்ண நோற்றபி
னேசுபெண்ணொழித் திந்திரர்களாய் / தூயஞானமாய்த் துறக்கமெய்தினார்.

மக்களுள் ஆதியாய் இந்திரியங்களை வென்ற வரும், ஐந்தவித்த வல்லபத்தால் ஆதி இந்திரரென்னும் பெயர்பெற்று அவர் ஞானவருள் பெற்ற தேவர்களால் வானவர் கோமானாகக் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரானேயாம்.

திரிக்குறள்

ஐந்தவித்தானாற்றவகல்வி சும்புளார்க்கோமான் / இந்திரனே சாலுங்கரி.

அருங்கலைச்செப்பு

இந்தியத்தை வென்றான் தொடர்பாட்டோடாரம்ப / முந்தி துறந்தான் முநி

மணிமேகலை

இந்திரரெனப்படு மிறைவகம்மிறைவன் / றந்தநூற் பிடகத் தாயாமுன்முதலா,

சீவகசிந்தாமணி

ஏத்தரிய பல்குணங்கட் கெல்லைவரம்பாகி / நீத்தவரு விந்திரவை நின்று தொழுதிமரர்
நாத்தழும்ப வேத்திதவ நங்கைவர் நண்னித் / தோத்திரங்களோதிதுகண்மாசு துணிக்கின்றார்.

சூளாமணி

மந்திர மாந்தர் மொழிதலும் வாணிடை / யந்தரம்வாழு மமரர் வழிபடுந்
தந்திரஞான்ற தவத்திற் சுரசனா / மிந்திர னன்னாற் கெடுத்துரைக்கின்றான்.

மநுக்களுள் காம, வெகுளி, மயக்கங்களாம் முக்குற்றங்களையும் அகற்றி அன்பை பெருக்கி இறவாநிலையாகும் நிருவாணத்தை அடைகின்றார்களோ அவர்களையே சிவனென்றும், மக்கள் கதியிற் சிறந்து தேவகதியாம் சிவகதி அடைந்தோரென்றுங் கூறியுள்ளார்கள்.

திருமூலநாயனார் - திரிமந்திரம்

அன்பும் சிவமும் இரண்டென்பரறிவிலார் / அன்பே சிவமாவதி யாருமறிகிலார்
அன்பே சிவமாவதி யாருமறிந்தபின் / அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே.

சிவயோகசாரம்

தானோவசத்தல்ல வென்றறிந்தாற் றாரணியி
லேனோபிழைத்திடுவானேழைதான் - றானே
யிறவாவதுணீகா ணிற்கவருளின்
மறவாதிரு சிவமாவை.

சீவகசிந்தாமணி

வலம்புரிந்துடம்புநீங்கா தகுந்தவ முயன்மின் யாருஞ்
சிவம்புரி நெறியைச்சேர செப்புமிப் பொருளுங்கேண்மிண்

காசிக்கலம்பகம்

வல்லாண்டகண்டத் தெம்மாதிப் பிரானவி முத்தத்திலே
சில்லாண்டிருந்து சிவமாய் செலுஞ் சில செந்துக்களே.

இத்தகைய அன்பின் மிகுதியால் ஆதிசிவனென்றும் சகலருக்கும் நிருவாணமார்க்கத்தை ஊட்டியவராதலால் சிவகதிநாயகன் என்றும் ஆதியில் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரானேயாம்.

அறநெறிச்சாரம்

அவன்கொலிவன்கொ வென்றையப்படாதே
சிவன்கண்ணேசெய் மின்கள்சிந்தை - சிவன்றானும்
நின்றுக்கால்சீக்கு நிழறிகழும் பிண்டிக்கீழ்
வென்றிச்சீர் முக்குடையான்வேந்து.

சீவகசிந்தாமணி

இன்பமற்றென்னும் பேரானெழுந்து புற்கற்றைத்தீற்றித்
துன்பத்தைச் சுரக்கு நான்கு கதியெனுந்தொழுவிற்சேர்த்து
நின்ற பற்றார்வநீக்கி திருபலன்பாதஞ்சேரி
னன்புவிற்றுண்டுபோகிச் சிவகதியடையலாமே

சூளாமணி

மணிமலர்ந்துமிழொளி வனப்புஞ்சந்தனத் / துணிமலர்ந்துமிழ்ந்தருந்தண்மெய்த்தோற்றமு
தணிமலர்நாற்றமு மென்னவன்னதா / லணிவரு சிவகதி யாவதின்பமே.

- 2:22: நவம்பர் 11, 1908 -

ஆசியாகண்ட முழுவதும் புத்ததன்மம் பரவியிருந்த காலத்தில் புத்த பிரானை சிவனென்றும் சிவகதி நாயகன் என்றும் கொண்டாடி வந்ததுமன்றி அவரையே மாலென்றும், திருமால் என்றும், செங்கணெடுமாலென்றும் சிந்தித்து வந்தார்கள்.

பாலிபாஷையில் மால் என்னும் மொழிக்கு வட்டம், சக்கிரவாளமென்னும் பொருளைக் குறித்திருக்கின்றார்கள்.

மணிமேகலையிற் கூறியுள்ளவாறு “எண்ணருஞ் சக்கிரவாளமெங்கணும் அண்ணலறக்கதிர் விரிக்குங்காலை” உலகெங்கும் சுற்றி தருமத்தை நிறப்பினவராதலின் நெடுமான் என்றும், ஞானவிழியால் சகலமும் உணர்ந்த செவ்வியக் கண்ணராதலின் செங்கணெடுமால் என்றும், பெருங்கூட்டங்களில் நிறைந்திருந்த ஒவ்வோர் மதுக்களுள்ளங்களிலுமுள்ள சங்கைகளை நிவர்த்தி செய்துவந்தவராதலின் சகலமும் உணர்ந்தார் என்றும், ஆயிரம் கண்ணனென்றும், தாமரைக் கண்ணனென்றும் வழங்கிவந்தார்கள்.

தேவர்களுக்குள் சிறந்தவராகவும், ஆதிதேவனாகவும் விளங்கியவர் புத்தபிரானாதலின் திருவள்ளுவ நாயனார் இயற்றியுள்ள திரிக்குறளுக்கு சாற்றுக்கவி கொடுத்துள்ள, கவிசாகரப் பெருந்தேவனார்.

பூவிற்கு தாமரையே பொன்னுக்கும் சம்புனத
மாவிற் கருமுனியா யானைக் - கமரரும்ப
றேவிற் திருமாவெனச் சிறந்ததென்பவே
பாவிற்கு வள்ளுவர் வெண்பா

எண்ணூற்காப்பு

நெடுமாற் றிருமருகா னித்தன் முதலாய் / கொடுமால் வினையகற்றுங் கோவே

பாலிபாஷையில் சக்கிரவாளம் எங்குமுலாவியவர் என்னும் பொருளையும் தமிழ் பாஷையில் மயக்கம் என்னும் பொருளையும் தழுவி மேற்குறித்த வெண்பாவை முடித்திருக்கின்றார்கள்.

ஒவ்வோர் நூற்களின் முகப்பிலுமுள்ள காப்பு செய்யுட்களில் புத்தபிரானாகும் மாலையே சிந்திக்கும்படியாய் சூத்திரமும் விதித்துள்ளார்கள்

பின்கலை நிகண்டு

காப்புக்கு முன்னெடுக்குங் / கடவுள்தான் மாலேயாகும்
பூப்புடை மலரின் செவ்வி / புனைபவ னாதலானும்
காப்பவ னாதலானுங் / கதிர்முடி கடகத்தோடு
வாய்ப்பதா மதாணி பூணூல் / வரிசையிற் புனைதலானும்.

ஞானவிழியாற் சகலமுமறியக் கூடியவர்களை செவ்வியக் கண்ண ரென்றும், செங்கண்ணார் என்றும் சமண முனிவர்கள் வகுத்திருக்கின்றார்கள்.

சூளாமணி

கருமாவை வெவ்வினைகள் காறளர நூறிக்
கடையிலாவிண் ஞானக்கதிர் விரித்தாயென்று
மருமாலைநன்னெறியை முன்பயந்தாயென்று
மடியே முன்னடி பரவுமா றறிவதல்லாற்
றிருமாலே தேனாரு மறவிந்த மேந்துந்
திருவணங்கு சேவடியாய் தேவாதிதேவ
பெருமானே நின்பெருமெய் நன்குணரமாட்டார்
பிணங்குவார் தம் மெய்வினைப் பிணக்கொழிக்கலாமே.

செங்கணெடு மாலை செறிந்திலங்குசோதித்
திருமுயங்குமூர்த்தியாய் செய்யதாமரையி
னங்கணடி வைத்தருளு மாதியா யாழி
யறவரசேயென்று நின்னடிபணிவதல்லா
லெங்கணிட றகலுமாறிந் நிலைமெய்யெய்தி
யிருளுலக நீக்கும் அருடருகநீயென்று
வெங்க ணிருளினையை யறவென்றாய் முன்னின்று
விண்ணப்பஞ்செய்யும் விழுத்தகமெயுண்டோ

சீவகசிந்தாமணி

மாட்டார்பூம் பிண்டிவளங்கெழுமுக்குடைக்கீழ்மாலே கண்டீர்
முட்டாத வின்பக் கதிதிறக்குந் தாளுடைய மூர்த்திபாதம்.

பின்கலை நிகண்டு

எண்ணிற் கண்ணுடையோன் வாமன் / யேற்ற புண்ணியத்தின் மூர்த்தி.

திரிக்குறள்

தாம்வீழ்வார் மென்றோட்டுயிலினினிதுகோ / றாமரைக்கண்ணோண் விழாக்கோல்கொள்கென.

மணிமேகலை

மாயிருஞாலத் தரகதலை யீண்டு / மாயிரங்கண்ணோன் விழாக்கோல்கொள்கென.

வீரசோழியம்

புத்தன் காரணப்பெயர் - கண்ணன் காரியப்பெயர் புத்தன், கண்ணனை உய்வித்தான்

என்புழிக் கருத்தா , கிரியைக்குக்கா / ரணமாய்நிற்றலிற் கார்ன கருத்தாவாயிற்று.

இத்தகைய மாலென்றும், திருமாலென்றும், செங்கநெடுமாலென்றும் வழங்கிய புத்தபிரானே உலகெங்கும் சுற்றி தன்ம சக்கிரமாம் அறவாழியை உருட்டி சங்கங்களை நிறப்பிவந்தபடியால் அவரையே உலகளந்தோனென்றும், சங்கசக்கிரத்தானென்றும் வழங்கிவந்தார்கள்.

சீவகசிந்தாமணி

ஒங்குமால்வரை வரையாடுழக்கவி / னுடைந்துகு பெருந்தேன்
றாங்குசந்தனத் தளரத்தழுவி / வீழ்வனதகைசா
லாங்கண்மா லுலகளந்தா / னாழி சங்கமோடேந்தி
தேங்கொண்மார்பிடைத் திளைக்குஞ் / செம்பொனார மொத்தனவே.

- 2:23, நவம்பர் 18, 1908 -

சங்கசக்கிரத்தான், அறவாழியான், உலகளந்தானென்றும் புத்தபிரானைக் கொண்டாடியதுமன்றி சகல மக்களினிதயங்களில் எண்ணும் எண்ணங்களை அறிந்து சொல்லுவதும் பலதேச சங்கதிகளை உள்ளுக்குள் அறிந்து போதிப்பதுமாகிய கியான திருஷ்டியின் செயலைக் கொண்டு உலகத்தையே உண்டு உமிழ்கின்றவர் என்றும் உலகுண்டோனென்றும் கொண்டாடி வந்தார்கள்.

சீவகசிந்தாமணி

முழங்குகடநெற்றி / முளைத்தெழுந்த சுடரேபோ
லழுங்கல் வினையலற நிமிர்ந் / தாங்குலக மூன்றும்
விழுங்கில் யுமிழாது குணம் / வித்தியிருந்தோய் நின்
னிழுங்கில் குணச் சேவடிக / ளேத்தித் தொழுதும் யாம்.

கடவுளென்றும், பிரமமென்றும், சிவனென்றும், தேவனென்றும், திருமாலென்றும், புத்தபிரானையே கொண்டாடி வந்ததுமன்றி சுவாமி சாமியென்றும் அவரையே சிந்தித்து வந்தார்கள்.

சீவகசிந்தாமணி

பான்மிடை யமிர்தம்போன்று / பருகலாம் பயத்தலாகி
வானிடை முழக்கிற் கூறி / வாலற வமுதமூட்டித்
தேனுடை மலர்கள் சிந்தித் / திசைதொழச் சென்றபின்னாட்
டானுடை யுகலங்கொள்ளர் / சாமி நாட் சார்ந்ததன்றே.

கமல சூத்திரத்தில் சகஸ்திரநாம பகவனென்றும், மணிமேகலையில் ஆயிரநாமத்தாழியன் திருவடி, என்றும் கொண்டாடப்பெற்ற புத்தபிரானுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட நாமங்கள் அளித்து ஆனந்தங்கொண்டாடியக் காரணங்கள் யாதென்பீரேல்:-

பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு துன்பங்களையும் தன்னிற்றானே ஓதாமல் உணர்ந்து மறுபிறவிக்கு ஆளாகாமலும், பிணியினும் உபத்திரவந் தோன்றாமலும், மூப்பென்னும் தளர்ச்சியும், நரை திறையும் தோன்றாமலும், மரணத்தில் உண்டாகும் பஞ்ச அவஸ்தைகட்கு உட்படாமலும், தனது அதி தீவரபக்குவத்தால் காமனையும் காலனையும் செயித்து நிருவாணத்தைத் தானடைந்ததுமன்றி ஏனைய மக்களையும் ஈடேற்றுவான் வேண்டி உலகெங்கும் கற்றி சத்தியதன்மத்தை ஊட்டித் தன்னைப்போல் மற்ற மக்களும் காமனையும் காலனையும் வென்று நிருவாணம் அடையும்படிச் செய்தபடியால் அப்பேரின்பத்தை அநுபவித்தவர்களும், நித்தியானந்தத்தைக் கொண்டவர்களும், சித்தின் நிலையைக் கண்டவர்களும், தங்களுக்குள் எழும் ஆனந்தக் கிளர்ச்சியால் ஜெகத்குருவை அனந்தானந்தப் பெயர்களால் அழைக்கலானார்கள்.

மணிமேகலை

பிறப்பே பிணியை மூப்பே சாவென / மொழிந்திடு துன்பமெனவிலை.
மாரனைவெல்லும் வீரனின்னடி. / காமற்கடந்த யேமமாயோர்.

சூளாமணி

காமனைக்கடிந்தனை காலனைக் காய்ந்தனை / தேமலர் மாரியை திருமறு மார்பனை தேமலர் மாரியை திருமறு மார்பனை / மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம்.

சீவகசிந்தாமணி

சுறவுக்கொடிக்கடவுளொடு காலற்றொலைத்தோயெம்
பிறவியறுகென்று பிறசிந்தையிராகி
நறவுமலர் வேய்ந்து நறுஞ்சாந்து நிலமெழுகித்
துறவுநெறிக் கடவுளடி தூமமொடு தொழுதார்.

புத்தபிரான் காமனையும் காலனையும் செயித்து நிருவாணமடைந் ததுமன்றி மற்றவர்களது மரணதுக்கத்தையும் செயிக்கும் தன்மத்தை ஊட்டியிருக்கின்றார்.

மணிமேகலை

சாதுயர்நீக்கிய தலைவன் றவமுனி / சங்க தருமன் றாமெனக் கருளிய

சீவகசிந்தாமணி

கோதையுங் குழலும் பொங்கக் / குவிமுலைக் குழாங்கன்மாலைப்
போதுகப் பொருது நாணும் / பொருகடன் முந்து மூழ்க
காதலுங் களிப்பு மிக்குங் / கங்குலும் பகலும் விள்ளார்
சாதலும் பிறப்பு மில்லாத் / தண்மெய்பெற்றவர்களொத்தார்.

யமகாதகன் என்றும், இயமனை வென்றோன் என்றும், மரணத்தை ஜெயித்தோன் என்றும் கொண்டாடப்பெற்ற புத்தபிரானையும் அவரோதியுள்ள முதநூலாகும் சத்தியதன்மத்தையும் உணர்ந்தவர்கள் எவரோ அவரே பிறவியை அறுத்து மரணத்தை ஜெயித்து நிருவாணமடைவார்கள் என்று மகாஞானிகளும், சித்தர்களும் வற்புறுத்திக் கூறியிருக்கின்றார்கள்.

சித்தாந்தக்கொத்து

அருணெறியாற் பாரமிதை யாறைந்துமுடனக்கிப்
பொருள் முழுதும் போதிநிழ னன்குணர்ந்த முநிவரன்ற
னருள்மொழியா நல்வாய்மெய யறிந்தவரே பிறப்பறுப்பார்
மருணெறியாற் பிறநூலு மயக்கறுக்குமாறுளதோ.

இடைக்காட்டு சித்தர்

ஆதிபகவனையே பசுவேயன்பாய்துதிப்பாயேல்
சோதி பரகதிதான் பசுவே சொந்தமதாகாதோ.

வீரசோழிய உதாரணச் செய்யுள்

தோடாரிலங்கு மலர்கோதிவண்டு வரிபாடு நீடு துணர்சேர்
வாடாதபோதி நெறிநீழன்மேய வரதன்பயந்த வறநூல்
கோடாதசீல விதமேலிவாய்மெய் குணனாக நாளுமுயல்வார்
வீடாதாவின்ப நெறிசேர்வர்துன்ப வினைசேர்த நாளுமிலரே.

சீவகசிந்தாமணி

வீங்கோதவண்ணன் விரைத்தும்புபூம்பிண்டித்
தேங்கோதமுக்குடைக்கீழ் தேவர்பெருமானைத்
தேவர்பெருமானைத் தேனார்மலர்சிதறி
நாவினவிற் பாதாம் வீட்டுலகநண்ணாரே.

இத்தகைய பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு துன்பத்திற்கு ஆளாகாது மரணத்தை ஜெயித்த யமகாதகன் எவனோ அவனையே யதார்த்தபிராமணன் எனப்படும்.

ஆதியந்தண அறவாழியான் துணை
முற்றும்.

- 2:24; நவம்பர் 25, 1908 -