அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/350-383
21. வீட்டிற்கோர் விருட்சம் வளர்த்தல் வேண்டும்
ஒவ்வோர் குடும்பத்தோரும் தங்கள் காதலினால் பிள்ளையைப் பெறல் வேண்டும், அதனை வளர்த்தல் வேண்டும், அதனால் சந்ததி பெருகி பலனடையவேண்டு மென்பதுபோல் ஒவ்வோர் மனையிலும் பலன் தரக்கூடிய விருட்சங்களை வைத்து வளர்த்து அதன் பலனை அடைதல் வேண்டும்.
அவற்றுள் பலா விருட்சமும், மா விருட்சமும், தெங்கு விருட்சமும் மிக்கப் பிரயோசனத்தைத் தரும். அதனையும் பெற்றப் பிள்ளைகளைப்போலவே பாதுகாத்தல்வேண்டும். சிலர் உடனுக்குடன் பலன் தரக்கூடிய வாழை, கத்திரி, வெண்டைமுதலிய விருட்சங்களை வளர்ப்பார்களன்றி நாள்சென்று பின்னுக்குப் பலன்தரக்கூடிய பெரு விருட்சங்களை வளர்ப்பது கிடையாது. காரணம், அப்போதைக் கப்போதே தாங்கள் சுகமனுபவித்துக் கொண்டால் போதும். பின் சந்ததியின் பலனைக் கருதுவது கிடையாது. மனிதனாகத் தோற்றிய ஒவ்வொருவரும் தங்கடங்கள் பின் சந்ததியோர் விருத்தியையும் அவர்கள் சுகத்தையுமே கருதல் வேண்டும். அத்தகையப் பொதுசுகத்தைக் கருதாது தன் சுகத்தையே கருதுவோர் குடும்பமும், மனையும், அவர்கள் வாழ்க்கையும் நாளுக்குநாள் க்ஷீணமடைந்துபோகும். அவர்கள் செயலைப் பின்பற்றியக் குடும்பமும் அதேகதியடையும். ஆதலின் மனுக்கள் சீரும் சிறப்பும் சுகமும் பெறவேண்டிய முயற்சிகளில் ஒவ்வொரு மனைகள் தோரும் விருட்சங்களை வைத்து வளர்ப்பதும் ஓர்சுகமாம்.
தேக சுகாதார விளக்கங்களில் வாயற்படி அருகிலேனும் புறக்கடை முதலிலேனும் ஓர்விருட்சம் பரவியிருக்குமாயின் அந்தக் கெட்ட நாற்றங்களையும் சாமளைப் புழுக்கூட்டங்களையும் தான் கிரகித்துக் கொண்டு அம்மனையில் வாழும் மநுக்களைக் கார்ப்பதுடன் காலந்தவிராது அதன் கனியையுங் காயையும் சருகையுந் தந்து காப்பாற்றும். அதிக வெய்யகாலத்தில் வெப்பத்தை தான் கிரகித்துக்கொண்டு மக்களை குளிரச்செய்யும். மனத்திலெழுவும் ஆயாசத்தையும் அசதியையும் போக்கும். தாங்கள் பெற்று வளர்த்தப் பிள்ளைகளேனும் தன்தன் பெண்சாதி பிள்ளைகளின் சுகத்தைப் பார்த்துக்கொண்டு பெற்று வளர்த்தோருக்கு யாதொருபலனையுந் தராதிருப்பதைப் பார்த்துவருகின்றோம். ஆனால் தங்கள் தங்கள் மனைகளில் வைத்து வளர்த்த விருட்சங்களின் பலனை தாங்களே அனுபவிப்பார்களென்பது அநுபவசித்தமாகும். “மனையுள் விருட்சமும் மக்கள் கல்வியும்மாறா சுகந்தரு” மென்னும் பழமொழிக்கிணங்க ஒவ்வொருவர் மனையிலும் சொற்ப துண்டு காலிபூமிகளிருந்தபோதினும் அதை வெறுமனேவிடாது ஓர்விருட்சத்தை வைத்து வளர்க்க வேண்டுகிறோம்.
- 4:2; சூன் 22, 1910 -