அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/351-383

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

22. கல்வி கைத்தொழில் பயிடுரிந்தொழில் வியாபாரத்தொழில்

இந்திய தேசத்தின் கல்வியை முதலாவதாராய்வோமாக. கலாசாலை களெனக் குறிப்பிட்டு ஆதியிற் கல்வியையூட்டி சிறுவர்களுக்கு விவேக விருத்தி செய்துவந்தவர்கள், சாதிபேதமற்ற திராவிடர்களாம் பௌத்தர்களேயாகும். மற்றொருவராலுங் கல்விவிருத்தி பெற்றது கிடையாது. அதற்குப் பகரமாய் பெளத்தர்களே கல்வி விருத்திக்கு மூலமென்பதை நாளது வரையில் கலாசாலைகளுக்கு பள்ளிக்கூடங்களென வழங்கும் பெயரே போதுஞ்சான்றாம். அதாவது, புத்தவிகாரமாங் கூடங்களுக்கு, திராவிட மொழியில் அறவோர் பள்ளியென்றும், அறப்பள்ளியென்றும், புத்தர் பள்ளியென்றும் வழங்கி வந்தவற்றை ஒவ்வோர் பெளத்த சரித்திர புத்தகங்களிலும் காணலாம். புத்தசங்கத்தோராம் சமண முநிவர்கள் வாசஞ்செய்திருந்த அறப்பள்ளிகளிலேயே, சிறுவர்களுக்குப் பாடங் கற்பித்துவந்ததுகொண்டு பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமென பூர்வத்திலும் வழங்கி நாளதுவரையிலும் வழங்கி வருகின்றார்கள். ஈதன்றி தற்காலம் இத்தேசத்தோர் கல்வி கற்று விவேகவிருத்தி பெற்று வரும் கலை நூற்களாம் இலக்கிய நூற்களும், வைத்திய நூற்களும் மக்கள் விவேக விருத்தி பெறவேண்டுமென்னுங் கருணை கொண்ட புத்தரங்கத்தோராகும் சமண முநிவர்களால் வரைந்துள்ளவைகளே அன்றி மற்றொருவராலும் வரைந்துள்ள விவேக விருத்தி நூற்கள் கிடையாது. ஆதலின் இத்தேசத்தோருக்குக் கல்வியைக் கற்பித்து நீதியின் விருத்தியையும் ஞானத்தின் விருத்தியையும் பெறச்செய்து குருவின் பக்தியிலும் இராஜ விசுவாசத்திலுங் குடிகளை நிலைக்கச்செய்து வந்தவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களாம் பௌத்தர்களேயாவர்.

இரண்டாவது, கைத்தொழில் விருத்தியை ஆலோசிப்போமாக. இத்தேச மெங்கும் புத்ததன்மம் பரவியிருந்த காலத்தில் கைத்தொழில் விருத்தி பெற்றோருக்கு வடமொழியில் சூஸ்திரரென்னும் பெயரை அளித்திருந்தார்கள். அதாவது, தங்கள் கைகளையுங் கால்களையும் ஓர் சூஸ்திரக் கருவிகளாகக்கொண்டு மரக்கருவி சூஸ்திரங்களையும், இரும்புக் கருவி சூஸ்திரங்களையும் விருத்திசெய்து அதனாதரவால் மாடமாளிகைகளையுங்கூட கோபுரங்களையுங்கட்டி பலவகைவருண சித்திரங்களால் கண்களிக்கச்செய்தவர்களும் அழியாத உலோகபாத்திரங்களை விருத்தி செய்தவர்களும் வஸ்திரங்களை நெய்து பலதேசங்களுக்கும் அனுப்பிக் கீர்த்திப் பெற்றவர்களும் சாதிபேதமற்ற திராவிடர்களாம் பௌத்தர்களே யாவர். அவைகளுக்குப் பகரமாய் தற்கால ஆர்ச்சலாஜிக்கல் சர்வேயர்களால் கண்டுபிடித்து வரும் புத்த வியாரக்கட்டிடங்களும் அவைகளுள் வரைந்திருக்கும் வருண பதுமெய்களும் பஞ்சலோகப் பாத்திரங்களும் சந்தன, தந்த பெட்டகங்களும் மேல் நாட்டிற்குச் சென்று கீர்த்திபெற்றுள்ள பட்டாடைகளும் தற்காலம் மகமதியர்களால் மஃமல்லென வழங்கிவருவதுமானவை திராவிட மல்லர்களால் நெசியப்பெற்று மேல் நாடுகளெங்கும் புகழப்பெற்ற சல்லா வஸ்திரங்களுமே போதுஞ் சான்றாம்.

மூன்றாவது, வியாபார விருத்தியை ஆலோசிப்போமாக. இந்தியதேச முழுவதும் புத்த தன்மம் பரவியிருந்த காலத்தில், ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறி வியாபாரஞ் செய்பவர்களுக்கு வடமொழியில் வைசியரென்றும், தென் மொழியில் வாணிபரென்றும், செட்டியென்றும், ரெட்டியென்றும், வியாபாரக் காரணப் பெயர்களைப் பெற்றிருந்தார்கள். அதாவது, பால், நெய் வியாபாரஞ்செய்வோரை கௌ வைசியரென்றும், தானிய வியாபாரஞ் செய்வோரை பூவைசியரென்றும், பொருட்களைக் கொடுத்து பணம் பெற்று வியாபாரஞ்செய்வோர்களை தனவைசியர்க ளென்றும், வடமொழியில் வழங்கியதுமன்றி தென் மொழியில் எண்ணெய், ஆமணக்கு நெய், தென்னெய் வியாபாரிகளை எண்ணெய் வாணியர், எண்ணெய் வாணிபரென்றும், சுங்கச்சாவடிகளில் உட்கார்ந்து சுங்கமாம் ஆயம் வாங்குவோர்களை தேச ஆயச்செட்டிகளென்றும் நாடுகளிலுள்ள கோட்டைக்குள்ளிருந்து வியாபாரஞ்செய்பவர்களுக்கு நாட்டுக்கோட்டைச் செட்டிகளென்றும், ஒரே இடத்திற்றங்கி நவரத்தின வியாபாரஞ் செய்வோர்களுக்கு ரெட்டிகளென்றும் பலதேசங்களுக்குச்சென்று பலசரக்கு வியாபாரம் செய்வோர்களுக்கு பரதரென்றும் வழங்கி வந்தார்கள். பூர்வ திராவிடர்கள் தற்கால சாதிபேதமென்னுங் குரோதச் செயலைப் பெற்றவர்களாயில்லாமல் சகல தேசங்களுக்குஞ் சென்று தங்கள் வியாபாரங்களை விருத்தி செய்துவந்ததுமன்றி புத்ததன்மமாம் நீதிநெறி ஒழுக்கங்களையும் பரவச்செய்து புத்த சங்கங்களையும் நாட்டியிருக்கின்றார்கள். இவற்றிற்கு ஆதாரமாகக் கொளம்போசுக்கு முன்பு அமெரிக்காவுக்கு திராவிடர்கள் சென்று புத்தரங்கத்தை நாட்டியுள்ள ஆதாரம் அவ்விடம் வழங்கிவரும் சாக்கையபுரம், கெளதமாலயம் என்னும் பெயர்களே போதுஞ் சான்றாம்.

நான்காவது, பயிரிடுதல் என்னும் வேளாளத்தொழிலை ஆலோசிப்போமாக. பூர்வகாலத்தில் சாதிபேதமற்ற திராவிடர்களே பூமியை உழுது சீர்திருத்தி பயிரிட்டு சருவ சீவராசிகளுக்கும் உபகாரிகளாகவும் உதவியாளராகவும் இருந்தபடியால், வேளாளரென்றும், காராளரென்றும், சீராளரென்றும், பூபாலரென்றும், பண்ணைக்காரரென்றும், வழங்கப்பெற்றிருந்தார்கள். சாதிபேதமற்ற திராவிடர்களே வேளாளரென்னுந் தொழிற்பெயர் பெற்று பூமியை உழுது, சீர்திருத்தி, தானியங்களை விளைவித்து, சகலருக்கும் உபகாரிகளாக விளங்கியவற்றை க்ஷ யாரால் இயற்றியுள்ள இராமாயண காவியத்திலும், ஏரெழுபதிலும் வரைந்துள்ள சடையன், சடையப்பன் என்பவன் சரித்திரத்தால் அறிந்துக்கொள்ளுவதுடன் தற்காலம் பூமியை உழுது பண்படுத்தி தானியங்களை விளைவித்து விருத்தி செய்வதற்காய் உழைத்து இரவும் பகலும் பாடுபடுகின்றவர்கள் யாரென்றுங் கண்ணாரக்கண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

ஆதலால் இந்திய தேசத்தின் பூர்வசீர்திருத்தக்காரர்களும், சீர்திருந்தியவர்களும் சாதிபேதமற்ற திராவிடர்களாகவே விளங்கி தற்காலத் தோன்றியுள்ள சாதிபேதத் தலைவர்களின் மித்திர பேதத்தாலும் சத்துரு நாசத்தாலும் பூர்வநிலை குலைந்து, நசிந்து இந்தியதேச சிறப்புமழிந்து பாழடைந்துவருங்காலத்தில் “காய்ந்துபோம் பயிறுக்குத் திதிமழைப் பெய்து” கார்த்ததுபோல் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி மறுபடியும் இந்திய தேசத்தை சீர்படுத்திவருவதினால் சாதிபேதமற்ற திராவிடர்களும் சொற்ப சீர்பெற்று வருகின்றார்கள்.

இத்தகைய பெருங்கருணை கொண்டு இந்தியாவையும் இந்தியர்களையும் சீர்திருத்தி செவ்வைசெய்ய முயன்று கைத்தொழிலையும், விவசாயத்தையும் விருத்தி செய்துவரும் பிரிட்டிஷ் துரைத்தனத்தார் கிருபாநோக்கம் வைத்து பூர்வத்தில் கைத்தொழிலிலும், விவசாயத்திலும் விருத்திப்பெற்ற உழைப்புள்ளக் கூட்டத்தார் யாரென்று கண்டறிந்து அக்கூட்டத்தில் வாசித்துள்ளவர்களையும் உழைப்பாளிகளையுமே தெரிந்துதெடுத்து கைத்தொழிற்சாலை, விவசாயசாலை இவைகளின் உத்தியோகஸ்தர்களாகவும் உழைப்பாளிகளாகவும் நியமிப்பார்களாயின் பிரிட்டிஷார் எடுத்துள்ள வித்தை, விவசாய முதலியது விருத்திப்பெற்று நாளுக்குநாள் சிறப்படைவதுடன் சாதிபேத சத்துருக்களால் நசுங்குண்ட ஏழைகளும் சுகம்பெற்று நன்றியறிதலாய் தங்கள் விருத்திக்காக இராஜாங்க விருத்தியை மென்மேலுங் கோரி இராஜவிசுவாசத்தில் நிலைத்து எங்கும் இராஜவிசுவாசத்தைப் பரவச்செய்வார்கள்.

- 4:3; சூன் 29, 1910 -