அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/358-383

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

29. தன்முயற்சியில்லாத் தலைமகனுக்கும் தலைகணையில்லா
நித்திரைக்கும் சுகமுண்டோ

ஒருக்காலும் இல்லையென்பது துணிபு. சிலக் கடைச்சோம்பேறிகளுக்கும், சொன்னதைச்சொல்லுங் கிளிபோல் சொல்லித்திரியும் மந்தமதி யினருக்கும் அஃதோர் சுகமென விளங்கினும் விளங்கும். ஆயினும் விவேகிகள் அவற்றை சுகமென்று கருதவேமாட்டார்.

விவேகிகள் கருதும் சுகங்கள் யாதெனில், ஒருவர் சொல்லும் சொற்களையும் ஏற்கமாட்டார்கள். ஒருவரெழுதிவைத்துள்ளக் கட்டுக்கதைகளை உடனுக்குடன் நம்பமாட்டார்கள். அவிவேகிகளின் சொற்களை ஏற்கமாட்டார்கள். அவிவேக சங்கத்தை சேரமாட்டார்கள். அத்தகையத் தெளிவான விசாரிணையினின்று தாங்கள் யெடுத்து செய்யும் காரியத்தால் தங்களுக்கும் தங்களை அடுத்தோருக்கும் தங்கள் கிராமவாசிகளுக்கும் தங்கள் தேசத்தோருக்கும் பிரயோசனத்தை உண்டுசெய்யுமெனக் கண்டறிவார்களாயின் அக்காரியத்திற் பிரவேசிப்பார்கள். அக்காரியத்தால் தங்களுக்கும் தங்களை அடுத்தோருக்கும் யாதொரு பயனும் இல்லையென்றுணர்வார்களாயின் உடனுக்குடன் கட்டோடேவிட்டொழிப்பார்கள். இது தன்முயற்சியுள்ள தலைமக்கள் செயலாகும்.

தன்முயற்சியில்லாத் தலைவர்களும் பகுத்தறிவில்லாப் பேதைகளும் யாரெனில் அப்பா, இந்த சாணச் சாம்பலிருக்கின்றதே இஃது மிக்க மேலானது. இந்தச் சாம்பலிற் புரண்டெழுந்த கழுதையும் மோட்சம் போய்விட்டதென்று கூறுவானாயின் அவ்வார்த்தையை குருவார்த்தையென ஏற்று உச்சிமுதல் உள்ளங்கால்வரை சாம்பலைப் பூசிக்கொள்ளுவானன்றி அதன் காட்சியையும் அநுபவத்தையும் விசாரித்தறியமாட்டான்.

அதாவது, சாணச் சாம்பலில் என்ன மகத்துவமிருக்கின்றது, சாம்பலிற் புரண்ட கழுதை மோட்சத்திற்குப் போயிருக்குமாயின் நிதம் சுடுகாட்டுச் சாம்பலில் உலாவும் வெட்டியார்களெல்லோரும் மோட்சத்துக்குப் போயிருக்க வேண்டுமன்றோ. அத்தகைய எளிதான வழி மோட்சத்திற்கிருக்க நந்தனென்பவனை நெருப்பிலிட்டு சுட்டு (அதாவது ரோஸ்ட்டுபோட்டு) மோட்சத்திற்கு அனுப்புவானேன்.

அதனுடன் குப்பைகளிலுள்ள சாம்பலிற்புரளும் காகங்களும், நாய்களும் மோட்சம் பெற்றிருக்க வேண்டுமன்றோ. அத்தகைய மோட்சந்தான் எங்குளது. இடிந்துள்ள வீடுகளும் குட்டைச்சுவர்கள் எங்குளதோ அங்குதான் கழுதைகள் ஒண்டிநிற்பது சுவாபம். மோட்சத்தில் அவ்வகை இடிந்துள்ளக் குட்டிச்சுவருகளுண்டோவென்று கேட்கும்படியான பகுத்தறிவில்லாதவனானபடியால் விசாரிணையில் தன் முயற்சி அற்றவனென்றும் நித்திய சுகத்திற்கு யோக்கியதை இல்லாதவனென்றும் வகுத்திருக்கின்றார்கள்.

மற்றொருவன், அப்பா, இந்தக் கொட்டையைக் கட்டிக் கொள்ளுவாயாயின் சகல சம்பத்தும் பெற்று சுகமடைவாயென்று கூறுவானாயின் இக்கொட்டையின் மகத்துவத்தைக் கூறியவர் இக் கொட்டையை கழுத்திற் கட்டிக்கொண்டுதான் ஏதேனுஞ் சுகத்திலிருக்கின்றாரா. அவர்சுகிப்பதற்கு நம்மிடம் வந்து துட்டு கேட்கின்றாரா என்று கண்டறியான். நமக்கும் அவரது கதிதானென்று உணரமாட்டான்.

தன்னுடைய முயற்சியால் தனக்கோர் மகத்துவமில்லாமல் இக் கொட்டையால் மகத்துவமுண்டாமென்று கூறுவது என்ன மதியென்று பகுத்தறியவுமாட்டான், இத்தகைய பகுத்தறிவற்ற மக்களும் தன்முயற்சியற்று பிறர் முயற்சியை நாடும்பேதைகளும் சுகம்பெறமாட்டார்களென்றுணர்ந்த பெரியோர்கள் “தன் முயற்சியில்லாத் தலைமகனுக்கும், தலைகணையில்லா நித்திரைக்கும்” சுகமில்லையென வகுத்துவிட்டார்கள்.

- 4:17; அக்டோபர் 5, 1910 -