அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/371-383
42. வித்தியாவிருத்தியில் கண்டுபடிப்பது படிப்பா காணாது தன் பெண்டு பிள்ளைகளைமட்டிலுங் காப்பாற்ற படிப்பது படிப்பா
வித்தியாவிருத்தியில் கண்டு படிக்கும் படிப்பு யாதெனில்:- தான் கற்றவளவில் நின்று உலகத்தில் அங்கங்குள்ள தேசத்தோர் உலோகங்களைக் கொண்டும், மரங்களைக் கொண்டும், உபரச சத்துக்களைக் கொண்டும், பஞ்சுகளைக் கொண்டும், தானியங்களைக் கொண்டும், அனந்தமான வித்தைகளைக் கண்டுபிடித்து தாங்களுந் தங்கள் மக்களும் சுகசீவனத்தை அடைவதுடன் ஏழை மக்களும் அவர்களுடைய குடும்பங்களும் சுகசீவனம்பெற்று சுகவாழ்க்கையிலிருப்பதை நோக்கி தாங்களும் அத்தகைய வித்தைகளை விரும்பி அறிவை பெருக்கி எடுத்த வித்தையை முடிப்பதே கண்டுபடித்ததின் செயலும் அதன் பயனும் சகல மக்கள் விருத்திக்கும் ஆதாரமுமாக விளங்கும்.
அதாவது டிராம்வே என்னும் மின்சார வண்டியையும் அதன் விருத்தியையும் அதன் பயனையும் ஆலோசிப்போமாக. மின்சார வண்டியைக் கண்டுபிடித்தவன் B.A. M.A. L.T வாசித்தவனன்று. தனது சுயபாஷையை சீராகக் கற்று வித்தையில் விவேகத்தை வளர்த்து உலோகங்களைக் கொண்டும், மரங்களைக் கொண்டும் பண்டியை முடித்து உபாசங்களென்னும் மின்சாரங்களைச் சேர்த்து மாடு குதிரை ஏதுமின்றி உபரச சத்துக் களைக்கொண்டே இழுக்கவும் விடவுங்கொண்டு செய்துவிட்டபடியால் அதன் பயனால் தானுந் தனது குடும்பத்தோரும் சுகவாழ்க்கையைப் பெற்று வாழ்வதுடன் அதனை நடத்தும் பெருங்கூட்டத்தோர்களாகிய ஆட்களும் அவரவர்கள் பெண்டுபிள்ளைகளுங் குடும்பத்தோர்களும் சுகசீவனம்பெற்று சுகவாழ்க்கையில் இருக்கின்றார்கள். அதிற் சுகமாக ஏறிச்செல்லும் மக்களோ அனந்தம் அனந்தமாகும். இத்தகைய அரிய வித்தையைக் கண்டுபிடித்தவன் ஒரு மனிதனே. அவன் தான் கற்ற கல்வியினளவில் நின்று வித்தையில் விவேகத்தை வளர்த்து உலகமக்களுக்கோர் உபகாரியாகவும் விளங்குகின்றான். அவன் சாதித்துக் கண்டுபிடித்த சாதனம் உயர்ந்ததாக விளங்குகின்றபடியால் உலகமக்களில் அவனை ஓர் உயர்ந்த சாதியோன் என்றுங் கூறத்தகும். இதுவே வித்தியாவிருத்தியில் கண்டுபடித்த படிப்புமென்னப்படும்.
இவ்வரிய வண்டியைக் கொழும்பு தேசத்தோரும் இரங்கோன் தேசத்தோரும் விடும்படி ஆரம்பித்தபோது சிலர் கம்பனியாகச்சேர்ந்து இவ்வண்டியை எவ்விடங்களில் போட்டு நடத்தினால் வருமானம் அதிகம் கிடைக்குமென்றும் எந்தெந்த விதத்திற் செய்தால் செலவு குறைபடும் என்றும் எவ்வகையால் நடத்தினால் லாபம் அதிகரிக்குமென்றும் தங்கள் தங்கள் ஆலோசினைக்கு எட்டியவரையில் பேசி முடிவு செய்து வண்டியை நடத்தி லாபத்தை அடைந்து வருகின்றார்கள். நமது சென்னையில் இவ்வண்டியை நடத்தும்படி ஆரம்பித்தக் கம்பனியார்களோ கூட்டத்தைக்கூடி ஆலோசிக்கும்போதே டிக்கட்டுக் கலைக்ட்டர்களில் பறையர்களை வைக்கப்படாதென்னும் பேரறிவுள்ள ஆலோசனையை முந்தி பேச ஆரம்பித்தார்கள். இத்தகைய உலக்கை புத்தியுள்ளச் செய்கையால் எடுத்த நோக்கம் யாவும் சீரழிந்து சென்னையின் கம்பனியாருந் துலைந்து மேல்நாட்டாரே லாபமடைந்து வருகின்றார்கள். வித்தையை விரும்பாது சாதியை விரும்பும் உலக்கை புத்தியும் மாறாப்பொறாமெயுந் தீரா பற்கடிப்பு முள்ளோர் வாசஞ்செய்யுந் தேசமுஞ் சிறப்படையுமோ, தேச மக்களும் சீர்பெறுவர்களோ, தேசவித்தையும் விருத்திபெறுமோ, ஒருக்காலும் இல்லையென்று மொழி திண்ணம் திண்ணமேயாம்.
சென்னையில் டிராம்வே கம்பனியெனக் கூடி பறையர்களை டிக்கட்டு கலைக்ட்டர்களில் வைக்கப்படாதென சாதி கட்டுப்பாட்டைப் பேராலோசினையாகக் கொண்டு வந்தவர்களுள் பார்ப்பாரென்போர்களே தங்கள் தோள்களில் தோல்பைகளைப் போட்டுக்கொண்டு தோட்டிச்சி வந்து வண்டியிலேறினாலும் அம்மா துட்டுகொடு. சக்கிலி வந்து வண்டியிலேறினாலும் ஐயா துட்டுகொடு, இவர்கள் பொறாமெ கொண்டுள்ள பறைச்சி வந்து வண்டியிலேறினாலும் அம்மா துட்டுகொடுமென்று வாங்கி டிக்கட்டுகொடுக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். அதனால் இவர்களது சாதிக்கட்டுப்பாட்டின் ஆலோசினையும் எத்தகைத்தென்பதை விவேகிகளே தெரிந்துக்கொள்ள வேண்டியதாக்கும்.
மற்றுங் கண்டுபடிக்கா படிப்பு யாதென்னிலோ நாவலர், பாவலர், சாஸ்திரிகள் என வெளிதோன்றுகிறவர்களும் B.A M.A பட்டம் பெற்றவர்களும் படித்துக்கொண்ட படிப்பினால் தாங்களுந் தங்கள் பெண்பிள்ளைகள் மட்டிலும் பிழைக்கும் வழியேயன்றி ஏனைய மக்கள் விருத்திக்கு ஏதுவழியும் இல்லாதபடியால் இதனைக் காணாபடிப்பென்றும் ஏனையோர் விருத்திக்கு ஏதுமற்றப் படிப்பென்றுமே கூறவேண்டியதாகின்றது.
இத்தகைய பயனற்ற படிப்பை உய்த்துணராது தேசமக்கள் யாவரும் வித்தியாவிருத்தியையும், விவசாயவிருத்தியையும் விட்டொழித்து எல்லவரும் B.A M.A பட்டம் பெறவேண்டுமென்னும் முயற்சியில் குதூகலித்துநிற்கின்றார்கள். இக்கண்டுபடிக்கா படிப்பால் ஐயா B.A பட்டம் பெற்றவர் பொடிகடை போட்டுக்கொண்டார், ஐயா B.A பட்டம் பெற்றவர் கன்டிராக்ட் வேலைக்கு மேஸ்திரியாக இருக்கின்றார், ஐயா B.A பட்டம் பெற்றவர் காப்பிஷாப்பு வைத்துக்கொண்டார். ஐயா B.A பட்டம் பெற்று சுதேசிகடை வைத்துக் கொண்டார். ஐயா B.A பட்டம் பெற்று இன்ஷூவரென்ஸ் கம்பெனிக்கு ஏஜெண்டாகத் திரிகின்றார்களென்பதில் உத்தியோகங்கள் கிடைத்தவர்கள் மட்டிலும் தங்கள் பெண்சாதிகளுடன் சுகிப்பதும், கிடையாதோர் தங்கள் பெண்சாதி பிள்ளைகளுக்கும் சுகமின்றி ஊரூராய் அலைவதுமே பெரும்பயனாக விளங்குகிறபடியால் கண்டுபடிக்கும் படிப்பையே கருத்திலூன்றி நமது தேசத்தில் வித்தியா விருத்தியையும், விவசாய விருத்தியையும் பெருக்கி தேச மக்களின் விவேகத்தை வளரச் செய்வார்களென்று நம்புகிறோம்.
- 6:26; டிசம்பர் 4, 1912 -