அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/372-383
43. எவ்வகையால் ஓர் குடும்பம் சுகவாழ்க்கைப்பெறும்! எவ்வகையால் ஓர் இராஜாங்கம் சுகவாட்சியையுறும்!
ஓர் குடும்பத் தலைவனுக்கு மனைவியாக வந்து சேரும்படியானவள் தனச்செல்வம் தானியச்செல்வம் குணச்செல்வமுடைய குலத்தில் பிறந்து விவேகமிகுந்தோர் சேர்க்கையில் வளர்ந்தவளாய் இருப்பாளாயின் தன் கணவனது குடும்பத்தையே தன் குடும்பமென்று எண்ணி மனைத்தொழில்களை நடாத்தி மாமன் மாதுலர்களுக்கு அன்புபொருந்த நடந்துவருவதுடன் தன் கணவனது வாய்சொற் கடவாமலும் தன் வாயற்படியில் நில்லாமலும் மிருது வார்த்தையையே பேசிக்கொண்டு கணவனை நாடிவரும் யாதார்த்த குருக்களுக்கும் அன்பாய நேயர்களுக்கும் யாதொரு தொழிலுஞ்செய்ய சக்தியற்ற ஆதுலர்களுக்கும் அன்னமளித்து தன்மாமன், மாதுலன் கணவன் முதலானவர்களுந் திருப்தியாகப் புசித்தபின் தானும் ஆனந்தமாகப் புசித்து தனது கணவன் குடும்பத்தோர் வரினும் தன் தாய்குடும்பத்தோர் வரினும் இருவரையும் சமமாக எண்ணி அவரவர் விருப்பிற்கிசைய தனது கணவன் உத்திரவு பெற்றளித்து தனது கணவனது சுகத்தையும் தன் கணவனது உரவின்முறையோரது சுகத்தையும் முதலாவது கருதி தன் உரவின்முறையோரது சுகத்தையும் மற்றும் ஏனையோர் சுகத்தையும் இரண்டாவதுமாகக் கருதி மனைச்சுத்தத்தை நோக்கித் தன் மனோசுத்தம் வாக்குசுத்தம் தேகசுத்தமுடைய வாழ்க்கையைப் பெறுவாள். இத்தகைய குலநலமும் குணநலமும் மிகுத்த வாழ்க்கையையுடையவள் குடும்பமே சுகவாழ்க்கையைப் பெறும்.
மற்றும் மோசத்தால் பணம் சம்பாதித்தும் குடிகெடுப்பால் பணம் சம்பாதித்தும் போஷிக்கப்பட்ட குணக்கேடான குடும்பத்திற் பிறந்து சீலமற்றவர் சேர்க்கையில் வளர்ந்தவளாய் இருப்பாளாயின் தன் கணவன் இல்லஞ் சேர்ந்தவுடன் தன் மாமி, மாதுலரை விரோதித்து, தன் கணவனையே தன் சொற் கடவாத மாயாமொழிகளால் மயக்கி, தன்னை பெற்றோர் குடும்பத்தையே போஷிக்கும் வழிதேடி, தனது கணவன் குடும்பத்தைத் தலைகாட்டாது விரட்டி தன் மனைத்தொழிலை நடத்த ஆரம்பிப்பாள். அத்தகைய குணக்கேட்டிற்கு அக்குடும்பத்தோர் இசையாவிடின் தன்கணவனையே அக்குடும்பத்தை விடுத்து அப்புறப்படுத்திக்கொள்ளும் வழியைத் தேடிவிடுவாள். அவ்வகை வழியைத் தேடியவள் வஞ்சினமும் பொறாமெ முதலிய துற்குணத்தையே பீடமாகக் கொண்டு வேறுமனை உண்டு செய்துக்கொள்ளுவதினால் தன் கணவன் ஏது சம்பாதனைப் பெறினும் அச்செல்வமானது வாழைப்பழத்தில் ஊசிநுழைவது போல் தங்களையும் அறியாது வரவுக்கு மிஞ்சிய செலவுண்டாகி தாங்களும் சீரழிவதுடன் மாறா துக்கத்திற்கு ஆளாகி அக்குடும்பமும் சீர்கெட்டுப்போம்.
ஆதலின் குடும்பியானவன் எக்காலும் பெண்வழி சேராது பொதுவாய தன்மவழி நடத்தலே குடும்பத்தின் சுகவாழ்க்கைக்கு அழகாம்.
ஓர் இராஜாங்கம் சுக ஆட்சியில் நயமுறும்வழி யாதெனில் அரச அங்கங்களாகும் மந்திரவாதிகளென்னும் மதியூகிகள் தக்க விவேகமிகுத்தக் குடும்பத்தில் பிறந்தவர்களாகியும் தனச்செல்வம் தானியச்செல்வம் நிறைந்த பாக்கியத்தில் வளர்ந்தவர்களாகியும் ஒழுக்கம், சீவகாருண்யம், விவேகமிகுதியை நாடும் நேயர்களுடன் உலாவியவர்களாகியும் இருப்பார்களாயின் தங்கள் அரசருக்குண்டாய கீர்த்தியே தங்களுக்குண்டாயதென்றும், தங்கள் அரசருக்குண்டாய அபகீர்த்தியே தங்களுக்குண்டாய்தென்றுங் கருதி ராட்சியபாரத்தைத் தாங்களே சிரமேற்று அரசவங்கத்தினர்களென்று உழைக்கும் சேனாபதியர், புரோகிதர், தொழிற்றூதுவர், கர்மவிதிக்காரர், காப்பாளர், காரண குருக்கள், காரிய குருக்கள் மற்றும் வேண்டிய அதிகாரத் தொழிலாளர்கள் யாவரையும் ஆய்ந்து அரசாங்கத்துக்காரியாதிகளை நடாத்துவதுடன் தேசமக்கள் சீருக்கும் சிறப்புக்கும் வரும் பூமியின் விருத்தியையே முதலாவதாக கருதி உழுது பண்படுத்தும் உழைப்பாளிகளின் மீது முழுநோக்கம் வைத்து அவர்களது குறைவு நிறைவுகளையே சீர்திருத்தி பூமிக்களைப் பண்படுத்தும் வழிகளைத் தேடுவார்கள். பூமியின் உழைப்பாளிகளின் சுகச்சீரைமட்டிலும் மந்திரவாதிகள் முக்கியமாகக் கவனிப்பது யாதுக்கென்னில் பண்ணைபூமிகளின் வரப்புயர் நீருயரும், நீருயர பயிறுயரும், பயிறுயர குடியுயரும், குடியுயர கோனுயரும். பூமிகளின் தானியங்களானது விருத்தியடையக் குடிகள் யாவரும் சுகசீவிய வாழ்க்கையைப் பெறுவார்கள். குடிகள் எப்போது சுகவாழ்க்கையில் இருக்கின்றார்களோ அரசரும் அரச அங்கத்தினரும் அரசரது சகல காரியாதிகளும் சுகமாகவே நடைபெறும். குடிகளின் சுகத்தைக் கருதி அரசை ஆநந்தநிலை பெறச்செய்யும் மந்திரவாதிகள் பூமிக்கென்று உழைக்கும் பண்ணையாட்களின் சுகத்தையும் விருத்தியையுமே மிக்கக்கருதி நிற்பார்கள்.
இத்தகைய மேலாயக் கருத்தமைந்த மந்திரவாதிகள் அரசருக்கரசர் யுத்தம் நேரிடுங் கலகங்களிலும் மதியூகத்தால் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயங்களைக் கையாடி அரசை நிலை நிறுத்துவார்கள். இவைகள் யாவுங் குடிகளை அல்லலடையவிடாமலும் அரசர் அதிகவலையுறாமலும் இராட்சியபாரம் தாங்குதற்கேயாம். இத்தகையாய கருணையும் மதியும் வல்லபமும்பெற்ற மந்திரவாதிகளிருக்கும் இராஜாங்கமே சுகவாட்சியுற்று ஆனந்தநிலையில் நிற்கும்.
இவற்றிற்கு மாறாக குடியாலும் வஞ்சத்தாலும் சூதினாலும் பொய்யாலும் பொருளாசையுற்றலையும் சோம்பேறிகள் குடும்பத்திற் பிறந்து வேளை புசிப்பு வேளைக்கின்றி வளர்ந்து ஈவோர்கரத்தையும் நேயத்தையும் நாடித்திரிந்து சொற்பக்கல்வியிற் பயின்று நான் இந்த சாஸ்திரத்தில் வல்லவன், நான் அந்த சாஸ்திரத்தில் வல்லவனெனப் பகட்டித்திரிவோர்களைக்கொண்டு இராஜாங்க மந்திராலோசனை சங்கத்துக்காரியாதிகளை நடத்துவதாயின் அவர்கள் ஏதுகல்வியில் விருத்திப்பெற்றிருந்த போதினும் தாங்கள் பிறந்த குடியினது செயலும் வளர்ந்த வளப்பின் பழக்கமும் பொருளாசையால் செல்வர்களைப்பின் தொடர்ந்து திரிந்த அநுபவங்களும் அவர்களைவிடாது தொடர்ந்து நிற்றலால் அரசர்கள் எப்போது மாறுவார்களோ அப்போதே அரசபீடத்தை அபகரிக்கலாம் என்றும், குடிகள் எப்போது மாறுவார்களோ அப்போதே குடிகளைக் கெடுக்கலாமென்றும், தங்கள் சுயப்பிரயோசனத்திலேயே நின்று அரசருக்குங் குடிகளுக்கும் அதிக உழைப்பாளிகளைப்போல் அபிநயித்துத் திரிவார்களன்றி பூமிகளின் விருத்திகளையும் தேசவிருத்திகளையும் மக்கள் விருத்திகளையும் தங்கள் கனவிலேனுங் கருதமாட்டார்கள். அத்தகையச் செயல்களால் தேசமும் பாழடைந்து மக்களும் சீரழிந்து அரசனும் சுகமிழந்து அல்லல் அடைந்துவிடுவான். ஆதலின் இராஜாங்கம் சுகவாட்சியுற்று ஆனந்தம் பெறவேண்டுமாயின் நற்குடும்பத்திற் பிறந்து சிறந்த செல்வத்தில் வளர்ந்து சீவகாருண்யம் முதிர்ந்து பரந்த விவேகம் நிறைந்துள்ளவர்களை மந்திரவாதிகளாய் நியமித்து அவர்களது ஆலோசனைக்கு உட்பட்டு அரசை நடாத்துவதே இராஜாங்க சுகவாட்சிக்கு அழகையும் ஆறுதலையுந் தருமென்பது சத்தியம்.
- 6:41; மார்ச் 19, 1913 -