அயோத்தியா காண்ட ஆழ்கடல்/உரையாடல் திறன்

விக்கிமூலம் இலிருந்து



6. உரையாடல் திறன்

திருவள்ளுவர் திருக்குறளில் சொல் வன்மை என்னும் தலைப்பில், கேட்டார்ப் பிணிக்கும்படிப் பேசல் வேண்டும்; திறனான சொற்களைச் சொல்ல வேண்டும்; தம் சொல்லைப் பிறிதொரு சொல் வெல்லாதபடிப் பேசல் வேண்டும்; சோர்வு இன்றி அஞ்சாமல் உரையாடல் வேண்டும்; பிறர் கேட்டு விரைந்து ஒழுகும்படி நிரந்து இனிது பேசல் வேண்டும்- என்றெல்லாம் சொல் வன்மையுடன் உரையாடும் திறன் பற்றிக் கூறியுள்ளார். இத்தகைய திறமையான உரையாடல்கள் சிலவற்றைக் கம்பராமாயணம்- அயோத்தியா கா ண்டத்தில் காண்போம்:


மந்தரை சூழ்ச்சிப் படலம்

கூனியின் உரைத் திறன்

தனது உரைவன்மையால் எண்ணியது முடித்ததில் முதல் பரிசுக்கு உரியவள் மந்தரை என்னும் கூனியே யாவாள். தன் மகன் பரதனினும் இராமனையே மிகவும் பேணி வந்த கைகேயியின் மாற்ற முடியா மனத்தையும் கூனி மாற்றிவிட்டாள் அல்லவா?

134 - சுந்தர சண்முகனார்


உறங்கிய கைகேயியைக் கூனி எழுப்பிக் கூறுகிறாள். திங்களைப் (கிரகண காலத்தில்) பாம்பு பிடிப்பதற்குச் சிறிது முன்புகூடத் திங்கள் ஒளி வீசிக் கொண்டிருப்பது போன்று, உனக்குப் பெரிய துன்பம் நெருங்கியுள்ள இப்போதும் வருந்தாது உறங்கிக் கொண்டிருக்கிறாயே என்றாள்:


அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும் குணங் கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல் பிணங்கு வான் பேரிடர் பிணிக்க கண்ணவும் உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் (

53)


ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பெரிய சோம்பேறி ஒருவன் வீட்டின் முன் கட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பின் கட்டில் தீ பற்றிக் கொண்டதாம். சிலர் வந்து- பின் கட்டில் தீ பற்றிக் கொண்டது- விரைவில் எழுக என எழுப்பினராம். அதற்கு அவன், பின் கட்டு தானே எரிகிறது? முன் கட்டிற்குத் தீ பரவியதும் எழுப்புங்கள் என்று கூறித் தூங்கினானாம். கைகேயியும் துன்பம் வந்த போதும் தூங்கினாளாம்.

கோசலை மைந்தன் பரதன்

கோசலை பெரு வாழ்வு வாழப் போகிறாள்- அதை அறியாது கிடக்கிறாய் நீ- என்று கூனி கைகேயியிடம் கூறியபோது, கைகேயி பதில் உரைக்கிறாள். நீ என்னவோ, கோசலை வாழ்ந்து விடப் போகிறாள் என்கிறாயே- கோசலை வாழ்வுக்கு இப்போது மட்டும் யாது குறைவு? கோசலையின் கணவனோ, மன்னர்கட் கெல்லாம் மன்னன்- கோசலையின் மைந்தனோ, சொல்ல முடியாத அளவுக்குப் பெரும் புகழ் படைத்துள்ள பரதன்- எனவே, இந்த வாழ்வினும் கோசலைக்கு இன்னும் வேறு என்ன பெரிய வாழ்வு வேண்டியிருக்கிறது?- என்றாள் கைகேயி. அயோத்தியா காண்ட ஆழ் கடல் 135

அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆயிலை மன்னவர் மன்னனேல் கணவன்; மைந்தனேல் பன்னரும் பெரும்புகழ்ப் பரதன்; பார்தனில் என்னிதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள்

(57)

கைகேயி தன் மகனைக் கோசலையின் மகனாகக் கூறிக் கூனியின் முரண்பட்ட உணர்வை மாற்ற முயன்றுளாள்.

தொடர்ந்து கூனி பேசுகிறாள்: ஆடவர்கள் எள்ளி நகையாடவும் ஆண்மைக்கே மாசு உண்டாகவும் தாடகை என்னும் ஒரு பெண்ணைக் கொன்ற- முறை தவறிய (அந்தப் பையன்) இராமனுக்கு நாளை முடி சூட்டப் போகிறார்களாம்.

ஆடவர் நகையுற ஆண்மை மாசு உற
தாடகை எனும்பெயர்த் தையலாள் படக்
கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளை வாழ்வு இது எனச் சொல்லினாள்

(58)


கைகேயி மனம் மாறாததைக் கண்டு மேலும் கூனி கூறுகிறாள்: பைத்தியமே! நீயும் உன் மகனும் எப்படியாவது துன்புற்றுக் கொண்டு இருங்கள். ஆனால், உன் மாற்றாளாகிய கோசலையின் பணிப் பெண்கட்குப் பணிப் பெண்ணாய் நான் பணி செய்ய முடியாது. சீதையும் இராமனும் அரியணையில் அமர்ந்திருக்க, பரதன் கீழே கிடக்க வேண்டுமா?- என்றாள்.

வேதனைக் கூனி பின் வெகுண்டு நோக்கியே, பேதை நீ பித்தி நிற் பிறந்த சேயொடும்
மாதுயர் படுக; நான் நெடிது உன் மாற்றவள் தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன் என்றாள்

(62)

சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும்
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின்மகன் அவந்தனாய் வெறு நிலத்து இருக்க லானபோது உவந்தவாறு என் இதற்கு உறுதியாது என்றாள்

(63) 136 - சுந்தர சண்முகனார்

மேலும் கூனி :- பரதன் ஏழுநாள் பயணம் செய்து அடையக் கூடிய நெடுந்தொலைவில் உள்ள கேகய நாடு சென்றுள்ளான். இங்கே இராமனுக்கு நாளைக்கு முடிசூட்டு என்கின்றனர். இதைப் பரதனுக்கும் அறிவிக்க வேண்டுமல்லவா? அவனும் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமல்லவா? அவனுக்கு ஆள் அனுப்பினால், ஆள் போக ஏழு நாளாகும்; உடனே பரதன் புறப்படினும் அவன் வந்து சேர ஏழு நாள் ஆகும். பதினான்கு நாள்கள் கடந்த பின்னரே பரதனைக் காண முடியும். நிலைமை இவ்வாறிருக்க, இராமனுக்கு விரைந்து விரைந்து நாளைக்கு முடிசூட்டப் போகின்றார்களாம்- என்பதை உள்ளத்தில் கொண்டு கூனி கூறுகிறாள். நற்பேறு இல்லாத பரதனை, நெடுந்தொலைவில் உள்ள கேகய நாட்டிற்கு அரசன் ஆணையால் அனுப்பியதில் உள்ள சூழ்ச்சி இப்போதுதான் புரிகிறது- என்கிறாள்.

பாக்கியம் புரிந்திலாப் பரதன்தன்னைப் பண்டு ஆக்கிய பொலங் கழல் அரசன் ஆணையால் தேக்குயர் கல்லதர் கடிது சேணிடைப்
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்

(67)


என் மகள் கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்குப் பட்டம் சூட்டுவதென்றால், கைகேயியை உனக்கு மணம் முடித்துத் தருவேன் எனக் கேகயன் கேட்டபோது, அவ்வாறே செய்வதாகத் தயரதன் கூறியதாக ஒரு செய்தி உள்ளதால், பரதன் இங்கே இருப்பின் அவனுக்கு முடிசூட்ட வேண்டும் என வற்புறுத்தப் பட்டாலும் படலாம் என எண்ணிப் பரதனை நெடுந்தொலைவு அனுப்பிவிட்டதாகக் கூனி எண்ணிக் கூறியிருக்கிறாள்.

தயரதன் சூழ்ச்சியா?

பதினான்கு நாள் சென்றால்தான் பரதனைக் காண முடியும் என்ற நிலைமை இருக்க, இராமனுக்கே நாளைக்கே பட்டம் சூட்டுவதாகத் தயரதன் தெரிவித்த அயோத்தியா காண்ட ஆழ் கடல் 137

தற்கு உரிய காரணம் வா ன்மீகியால் அவரது இராமாயண நூலில் கூறப்பட்டுள்ளது. அதாவது:எனக்கு அகவை முதிர்ந்து விட்டது- உடல் தளர்ந்து விட்டது- இறுதி நேரும்போல் தெரிகிறது. கணியரும் (சோதிடரும்) உங்கட்கு நாள் முடியும் காலம் வந்து விட்டது என்று கூறுகின்றனர்- அதனால் நாளைக்கே இராமனுக்குப் பட்டம் கட்டிவிட வேண்டும் என்று தயரதன் அவையோரிடம் கூறினானாம். இந்தக் கருத்தமையக் கூறி வான்மீகி தயரதனை ஒரளவு பழியினின்றும் காக்க முற்பட்டிருக்கிறார். கம்பரோ, இத்தகைய (சாக்குப் போக்கு) சூழ்ச்சியான உரையைச் சொன்னதாகக் கூறாமல், உண்மை எது என்பதை நூலைப் படிப்பவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என, எந்தக் காரணமும் கூறாமல் விட்டுவிட்டார்.

மன்னனின் இளையன்


கூனி என்ன சொல்லியும் கைகேயி ஏற்கவில்லை. அகவையில் (வயதில்) மூத்தவன் இருக்க, அகவையில் இளையவன் ஆட்சி புரிதல் பொருந்தாது என்ற கைகேயிக்குக் கூனி சரியான பதிலடி (சொல்லடி) கொடுக்கிறாள்! அகவையில் மூத்தவன் இருக்கும்போது சிறியவன் நாடாளலாகாது எனில், அகவையில் மிகவும் பெரியவனான தயரதன் சாகாமல் உயிருடன் இருக்கும்போதே, அகவையில் சிறியவனான இராமன் நாடாள்வது பொருத்தமா? அங்ங்னமெனில், மூத்தவனான இராமனை விலக்கி, இளையவனான பரதன் அரசாள்வதில் தவறு என்ன! என்று காரசாரமாக விடுத்தாள் பதில்:

மூத்தவற்கு உரித்து அரசெனின் முறைமையின் உலகம்
காத்த மன்னனின் இளைய னன்றோ கடல் வண்ணன்?
ஏத்து நீள்முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால் மீத்தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ?

(77) 138 - சுந்தர சண்முகனார்

பழிபடப் பிறந்தாய்

மேலும் கூனி கூறுகிறாள்: பேதையே! சீதையின் தந்தையாகிய சனக மன்னன், உன் தந்தை நாட்டின் மேல் படையெடுத்து அழிக்காதிருப்பதற்குக் காரணம், உன் கணவனாகிய தயரதன் தடுப்பான் என்ற அச்சமே. இந்த நிலையில், தயரதன் இறந்தபின் பட்டத்தில் இருக்கப் போகிறவன் இராமன்; அந்த இராமனுடைய மாமனார் சனகன். பிற்காலத்தில் சனகன் உன் தந்தையின் கேகய நாட்டின் மேல் படை எடுத்தால், இராமன் தன் மாமனாகிய சனகனுக்குத் தானே துணை செய்வான்? அப்போது உன் தந்தையின் நிலை (கதி) என்ன? தன் குலம் அழியப் பழிபடப் பிறந்தவர்கள் உனக்குத் துணையாக இணையாக யாரும் இருக்க முடியாது. எனவே, பரதனுக்குப் பட்டம் கிடைக்க ஆவன செய்க- என்று தூண்டினாள்:

காதல் உன் பெருங் கணவனை அஞ்சி அக் கனிவாய்ச்
சீதை தந்தை உன் தாதையைத் தெறுகிலன்; இராமன்
மாதுலன் அவன்; நுந்தை வாழ்வு இனி உண்டோ? பேதை உன் துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்?

(82)

இவ்வாறு தன் சொல் திறமையால் கூனி கைகேயியின் நல்ல உள்ளத்தை நஞ்சாக்கி விட்டாள்.

கைகேயி சூழ்வினைப் படலம்

இயம்பினன் அரசன்

தயரதன் சொன்னதாக இராமனிடம் கைகேயி கூறுகிறாள்: உலகத்தைப் பரதன் ஆள வேண்டும் எனவும், நீ காடு சென்று தவம் புரிந்தும் நற்பயன் நல்கும் புனல்கள் ஆடியும் பதினான்கு ஆண்டு கழிந்தபின் வரவேண்டும் எனவும் அரசன் கூறினான்- என்று அரசன் ஆணையிட்டது போல் கூறினாள்: அயோத்தியா காண்ட ஆழ் கடல் 139

ஆழி சூழ் உலக மெல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற் கொண்டு
பூழிவெங் கானம் கண்ணிப் புண்ணியப் புனல்கள் ஆடி
ஏழிரண் டாண்டின்வா என்று இயம்பினன் அரசன் என்றாள்

(111)

மன்னன் இராமனைக் காட்டிற்கு அனுப்பவேண்டா என்று எவ்வளவு மன்றாடியும் கேளாமல் அவனை வலிய ஒத்துக் கொள்ளச் செய்த கைகேயி அரசன் ஆணை யிட்டது போலவும், தன் மேல் பழி இல்லாதது போலவும் (குடும்பங்களில் பெண்கள் சிலர் கூறுவது போல்) கூறினாள். இப்பாடலில் நீ போய்... வா' என்ற சொல் அமைப்பு இருப்பது சுவையாயிருக்கிறது. (சுவை இராமனுக்கு அன்று; பாடலைப் படிப்பவர்க்கு)

இன்றே போகின்றேன்

காட்டுக்குத் துரத்துகின்ற கைகேயியிடம் இராமன் கூறுகிறான்: அன்னையே! மன்னவன் கட்டளையிடா விடினும் காட்டிற்கு ஏகுமாறு நீங்கள் பணித்தால் தான் மறுப்பேனோ? மறுக்க மாட்டேனே. என் பின்னவனாகிய (தம்பியாகிய) பரதன் அரசச் செல்வம் பெற்றதை யான் பெற்றதாகவே கருதி மகிழ்கிறேன். தம்பிக்கு நாடு தந்து யான் காடு சென்று தவம் புரியும் இந்த வாய்ப்பினும்வேறு நல்ல வாய்ப்பு இருக்க முடியுமா? இந்த நல்ல பணியைத் தலைமேல் கொள்கின்றேன். காட்டிற்கு இன்றே இப்பொழுதே போகிறேன்; விடையும் பெற்றுக் கொண்டேன்- என்று கூறுகிறான்.

மன்னவன் பணியன்றாகின் நும்பணி மறுப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்

(114)

இராமனது உயரிய பண்பாட்டின் எவரெஸ்ட் கொடுமுடியை அறிவிக்கும் பாடலாகும் இது. இப்படியும் 140 ) சுந்தர சண்முகனார்

ஒரு பிள்ளை உலகில் இருக்க முடியுமா? அரசன் ஆணையிட வேண்டும் என்பதில்லையாம்- சிற்றன்னை ஆணையிட்டாலே போதுமாம். தம்பியின் நன்மை தனது நன்மையாம். இது பெரிய நன்மையாம். ஆணையைத் தலைமேல் ஏந்துகிறானாம். உடனேயே புறப்படு கின்றானாம். கைகேயி விடை கொடுக்கும் முன்பேதானாகவே விடைபெற்றுக் கொண்டானாம். எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்தாலும் தெவிட்டாதது இப்பாடல். இந்தப் பாடலுக்கு உள்ளுறைப் பொருள் ஒன்று கூறுவதும் உண்டு. 'மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ' என்பதற்கு, இது மன்னவன் பணி (அன்று) அல்ல; ஆனால் உன் பணிதான்- நான் மறுக்க மாட்டேன்- என்று பொருள் கூறுவதுண்டு. மேலும், 'என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது. அன்றோ என்பதற்கு, என் பின்னவன் பெற்ற செல்வம் என்பதும், நான் இப்போது பெற்றுள்ள மரவுரியணிந்த வாழ்க்கைதான்- என்றும் பொருள் கூறுவதுண்டு. பின்னால், பரதனும் பதினான்காண்டு காலம் மரவுரி பூண்டு நகருக்கு வெளியே நந்தியம் பதியில் தவக் கோலத்துடன், இராமனது பாதுகையை வைத்துக் கொண்டு வழிபடப் போகின்றவனே. இந்த உள்ளுறைப் பொருள் குறிப்பாய் இந்தப் பாடலுக்குள் அமைந்துள்ளது.


நகர் நீங்கு படலம்

காதல் திருமகன்

இராமனது எளிய தோற்றத்தைக் கண்ட கோசலை, முடிசூட்டற்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டதா என்று கேட்க, இராமன் கை குவித்து வணங்கிக் கூறுகிறான்: உன் அன்பிற்கு உரிய திருமகனும் குறைவில்லாத உயர் அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 141

பண்பாளனும் என் தம்பியும் ஆகிய பரதனே முடிசூடிக் கொள்ளப் போகிறான்- என்று கூறிக் கோசலையை ஒத்துக் கொள்ளச் செய்கிறான்:

மங்கை அம்மொழி கூறலும் மானவன்
செங்கை கூப்பி நின்காதல் திருமகன்
பங்கமில் குணத்து எம்பி பரதனே
துங்க மாமுடி சூடுகின்றான் என்றான்

(3)

இப்பாடலில் உள்ள காதல், திருமகன், பங்கம்இல் குணத்து எம்பி என்னும் சொற்கள் எண்ணத் தக்கன.

நின்னினும் நல்லன்

இராமன் இவ்வாறு நயமாக அறிவித்ததும், கோசலை இராமனுக்கு ஆறுதல் உண்டாக்கும் முறையில் நயமாக மொழிகிறாள்: மூத்தவன் இருக்க இளையவனுக்கு முடி சூட்டுதல் முறை இல்லை என்ற ஒன்றைத் தவிர, மற்றபடி, பரதன் உன்னிலும் மூன்று மடங்கு உயரிய நல்ல பண்பாளன்- முடிசூடிக் கொள்வதற்கு எவ்வகையிலும் குறைந்தவன் அல்லன்- என்று கூறினாள்:

முறைமை அன்று என்ப தொன்றுண்டு; மும்மையின் நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்; குறைவிலன் எனக் கூறினள் நால்வர்க்கும்
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்

(4)

பிள்ளைகள் நால்வரிடத்தும் குற்றம் இல்லாத அன்பு உடையவள்- வேற்றுமை பாராட்டாதவள்- என்று கோசலை இப்பாடலில் பாராட்டப் பெற்றுள்ளாள்.

பிறந்த பேறு

மகன் காடேகப் போகிறான் என்பதை அறிந்து வருந்தும் அன்னை கோசலைக்கு இராமன் நயமொழி கூறி ஆறுதல் உண்டாக்குகிறான். அன்னையே! முடிசூடிக் கொள்ள இருப்பவனோ சிறந்த தம்பி. யான் முடி துறந்து 142 - சுந்தர சண்முகனார்

காடு ஏகுவதால், தந்தை சிறிதும் பொய்க்கவில்லை சொன்னபடி வரங்களை ஈந்து விட்டார்- மறந்தும் தவறு செய்யாதவர்- என்னும் நற்பெயர் தந்தைக்கு உண்டா கின்றதன்றோ? மற்றும், யான் காடு சென்று தவம் மேற்கொள்வதால் எனக்குச் சிறந்த நற்பயன் கிடைக்கும் இதனினும், யான் பிறந்ததனால் பெறக்கூடிய நற்பேறு யாதாய் இருக்க முடியும்?- என்று நயமொழி கூறி அன்னையைத் தேற்றுகிறான்:

சிறந்த தம்பி திருஉற, எந்தையை
மறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை
உறைந்து பேரும் உறுதி பெற்றேன்; இதின்
பிறந்து யான்பெறும் பேறு என்பது யாவதோ?

(16)

உறைந்து=வசித்து, பேரும்=திரும்பப் பெயர்ந்து வரும்.

பத்து நாலு பகல்

இராமன் காடு செல்வதற்கு வருந்தித் தன்னையும் உடன் அழைத்துக் கொண்டு போகும்படி வேண்டிய தாய் கோசலைக்கு இராமன் கூறுகிறான்: உலகில் மிகப் பலர் காட்டில் தவம் இயற்றிப் பெரிய நன்மைகள் பெற்றுள்ளனர். எனவே, நீ திகைக்க வேண்டா. பதினான்கு ஆண்டு என்பது என்னளவில் பதினான்கு நாள்களே. பதினான்கு ஆண்டு காலத்தைப் பதினான்கு நாள்கள் போலக் கழித்து வந்து விடுவேன்.- வருந்தற்க என்கிறான்.

சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தார் அன்றே! எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்து நாலு பகல் அலவோ என்றான்

(21)

உயிரை மாய்க்கும் வள்ளன்மை

இராமன் பிரிவுக்காக வருந்தும் தயரதனின் உரை மிகவும் உள்ளத்தை ஈர்க்க வல்லது. பெரிய நாட்டையும் அயோத்தியா காண்ட ஆழ் கடல் 143

அரசையும் கொள்ளக் கொள்ளக் குறையாத பல்வேறு செல்வங்களையும் இன்ன பிறவற்றையும் இராமன் கைகேயிக்குக் கொடுத்துவிட்டு பெரும் புகழ் பெற்ற அவனது வள்ளல் தன்மை என் உயிரை மாய்க்கப் பார்க்கிறதே!

அள்ளல் பள்ளப் புனல்சூழ் அகல் மாநிலமும் அரசும் கொள்ளக் குறையா நிதியின் குவையும் முதலா எவையும்
கள்ளக் கைகேசிக்கே உதவிப் புகழ்கைக் கொண்ட வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான்

(6.1)

ஒருவர்க்கு ஒன்று உதவுவதே மற்ற புகழ்ச் செயல் களினும் பெரிய புகழ்ச் செயலாகும்.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்(232).

ஈபவரின் புகழையே உலகம் உயர்த்திப் பேசும் என்னும் கருத்துடைய இந்தக் குறட்பா ஈண்டு எண்ணத் தக்கது. அதே நேரத்தில், புகழ் பெற்ற வள்ளல் தன்மை இன்னொருவரின் உயிரை மாய்ப்பது வருந்தத்தக்கது. இந்தச் செயலைத் தயரதனின் உரை வியக்கும்படி அறிவிக்கிறது.

ஒரு சொல் விளையாட்டு

ஜனகன் மகள் ஜானகி என்பது போல், கேகயன் மகள் கைகேயி. இந்தக் கைகேயி என்பது கைகேசி என இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே ஒரு சொல் விளையாட்டு நினைவைத் தூண்டுகிறது. கரிசலாங் கண்ணிக்குப் பொற்றலைக் கையாந்தகரை" என்னும் பெயர் உண்டு. (பொற்றலை = பொன்தலை), கேசி என்பது தலை முடியைக் குறிக்கிறது. கையாந்தகரை என்பதில் 'கை' என்பது உள்ளது; எனவே, கை-கேசி= என்னும் இரண்டையும் இணைத்துக் கரிசலாங் கண்ணிக்குக் கைகேசி' என்னும் மறைமுகப் பெயரை 144 ) சுந்தர சண்முகனார்

மருத்துவச் சித்தர்கள் சூட்டியுள்ளனர். இது ஒரு சொல் விளையாட்டாகும். தசரதனைத் தயரதன் என்பது போல் கைகேயி என்று கூறுவதல்லாமல் கைகேசி என்றும் கூறலாம். ஈண்டு சகரமும் யகரமும் ஒத்து ஒலிக்கின்றன.

விதியின் பிழை

பரதன்மேல் சினங்கொண்டு போர் தொடுக்கத் துடித்த இலக்குமணனுக்கு இராமன் கூறுகிறான். ஆற்றில் தண்ணீர் இல்லாவிடின் அது அவ்வாற்றின் பிழை ஆகாது. அது போலவே, இப்போது நிகழ்ந்துள்ளது யார் பிழையாலும் அன்று. அதாவது:- மன்னன் பிழையும் அன்று நம்மை வளர்த்த தாயாகிய கைகேயியின் பிழையும் அன்று- அவள் மகனான பரதன் பிழையும் அன்று- இது விதியின் பிழை- எனவே, இதற்காக நாம் வெகுளலாகாது- என்கிறான்.

உலகியலில், எதையாவது இழந்து வருந்துபவர்கட்கு, இது விதியின் பிழை- இது நடந்தே தீரும்- எனவே வருந்தலாகாது என விதியின் தலைமேல் பழியைப் போட்டு ஆறுதல் கொள்ளச் செய்வது வழக்கம். அந்த உள்வழியை (உபாயத்தை) இராமனும் இங்கே பின்பற்றியுள்ளான்.

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்சொல் வெகுண்டது என்றான்

(129)

தன் குற்றம்

தயரதன் குற்றமும் இல்லை, கைகேயியின் குற்றமும் இல்லை, பரதனது குற்றமும் இல்லை, விதியின் பிழைஎன்று ஒரு போக்குக் காட்டிய இராமன், இது தன் குற்றம் அயோத்தியா காண்ட ஆழ் கடல் 145

என்று கூறியிருப்பது, உயர் பண்பாட்டின் பேரெல்லை யாகும்!

முன் கொற்ற மன்னன் முடிகொள்க எனக் கொள்ள முண்டது
என் குற்றம் அன்றோ இகல் மன்னன் குற்றம் யாதோ

(128)

தந்தை தயரதன் முடிசூடிக்கொள் என்றதும், நீங்கள் இருக்கும்போது நான் முடிசூடிக் கொள்வது ததாது என்று கூறித் தடுக்காதது என் குற்றம் அல்லவா- என்று கூறினான் இராமன்.

கதம் தீர்வது

மேலும் இராமன் இலக்குமணனுக்குச் சொல்கிறான்: தம்பி! உன் கதம் (சினம்) தீரவேண்டுமெனில், உன் அண்ணன் பரதனைப் போர் செய்து தொலைக்க வேண்டுமா? தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் தட்டிக் கழித்து வெல்ல வேண்டுமா?- என்கிறான்:

ஆன்றான் பகர்வான் பினும் ஐய இவ்வைய மையல் தோன்றா நெறிவாழ் துணைத் தம்முனைப் போர் தொலைத்தோ சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ
ஈன்றாளை வென்றோ இனி இக்கதம் தீர்வது என்றான்

(134).

முன்னம் முடி

இலக்குமணனைப் பெற்ற சுமித்திரை, இராமனுடன் காடேக உள்ள இலக்குமணனிடம் நயமாகக் கூறிய உரை சிறந்த அறிவுரையாகும். இலக்குமணா! காடுதான் உனக்கு அயோத்தி, இராமன் தான் தயரத மன்னன். சீதையே உனக்குத் தாய். இனிக் காலம் தாழ்க்காதே! அவர்களுடன் காடு செல்வாயாக. மேலும் சொல்கிறேன்: நீ இராமனிடம் தம்பி என்ற உறவு முறையில் நடந்து கொள்ளலாகாது; அடியவன் (தொண்டன்) என்ற முறை யில் இட்ட ஏவலைச் செய்ய வேண்டும். இராமன் அயோத்திக்குத் திரும்ப முடியும் எனில் அவனுடன் நீயும் அ. ஆ.-10 146 - சுந்தர சண்முகனார்

திரும்பி வா; இல்லையேல், இராமனுக்கு முன் நீ முடிந்திட வேண்டும்.

ஆகாதது அன்றால் உனக்கு, அவ்வனம் இவ்வயோத்தி,
மாகாதல் இராமன் அம்மன்னன்; வையம் ஈந்தும் போகா உயிர்த் தாயர் நம்பூங் குழல்சீதை என்றே ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் என்றாள்

(146)

பின்னும் பகர்வாள் மகனே இவன்பின் செல்; தம்பி என்னும்படி அன்று, அடியாரின் ஏவல் செய்தி, மண்ணும் நகர்க்கே இவன் வந்திடின் வா! அது அன்றேல்
முன்னம் முடி என்றனள் வார்விழி சோர நின்றாள்

(147)


சான்று நீ

காடு செல்லாமல் முடிசூட்டிக் கொள் என்று வற்புறுத்திய வசிட்ட முனிவனை நோக்கி இராமன் சொல்கின்றான். என் தந்தை இரண்டு வரங்களையும் ஒத்துக் கொண்டு தந்துள்ளார்- ஈன்ற தாயாகிய கைகேயி அவ்வரங்களின்படிக் காடு செல்லச் சொன்னாள். யானும் அவர்களின் கட்டளையைத் தலைமேற் கொண்டேன் இவற்றையெல்லாம் உடனிருந்து அறிந்த நீ இதற்கு நல்ல சான்று ஆவாய். எனவே, சான்றாகிய நீயே என்னைத் தடுக்கலாமா- என்று இராமன் வசிட்டனை மடக்கினான்.

ஏன்றனன் எந்தை இவ்வரங்கள்; ஏவினாள் ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்;
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான் தோன்றிய கல்லறம் நிறுத்தத் தோன்றினான்

(164)

பிரிவினும் சுடுமோ?

உடன் வருவதாக வற்புறுத்திய சீதையை நோக்கி, மிகவும் வெப்பம் நிறைந்த காட்டு வழியில் உன் கால்கள் நடக்கமுடியாது என்ற இராமனை நோக்கிச் சீதை உரைக் கின்றாள்: என்னிடம் பரிவு இன்றி- மனத்திலே பற்று அயோத்தியா காண்ட ஆழ் கடல் 141

இன்றி என்னைத் தடுக்கின்றீர். உலகம் அழியும் ஊழிக் காலத்து ஞாயிறும் என்னைச் சுடமுடியாது; உமது பிரிவால் ஏற்படும் உள்ளத்து வெப்பத்தை விடக் காட்டு வழி வெப்பம் கொடியதோ- என்கிறாள்:

பரிவு இகந்த மனத்து ஒருபற்று இலாது
ஒருவு கின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டுகின்
பிரிவினும் சுடுமோ பெருங் காடு என்றாள்

(222)


ஈண்டு குறுந்தொகைப் பாடல் ஒன்று ஒப்பு நோக்கத் தக்கது. தலைவியை உடன் கொண்டு செல்ல ஒவ்வாத தலைவன், பாழூர் போன்று தோற்றமளிக்கும் ஓமை மரங்கள் நிறைந்த பாலைவனத்தில் தலைவியால் நடக்க முடியாது என்ற தலைவனிடம் தோழி கூறுகின்றாள்: உம்மைப் பிரிந்து மனையிலே தனித்துக் கிடக்கும் துன்பத்தைவிட, காட்டுவழி துன்பம் தரத்தக்கதோ என்கிறாள். இதனைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய குறுந்தொகைப் பாடலால் அறியலாம்.

ஊர் பாழ்த்தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

(124)

என்பது அந்தப் பாடல். தலைவனைப் பிரிந்திருத்தலினும் கொடிய துன்பம் வேறில்லை என்னும் கருத்தால் இவ்விரு பாடல்களும் ஒத்துள்ளன.

இது ஒன்றுமோ

உடல் வரலாகாது என்று கூறிய இராமனை நோக்கி, குயில் மொழிச் சீதை சீறிக் கொதிக்கிறாள். ஐய! இப்போது புரிகிறது உம் எண்ணம். உமக்கு உள்ள துன்பம் எல்லாம் நான் உடனிருக்கும் ஒன்று மட்டுமே யாகும். என்னை விட்டுப் பிரிந்தபின் உமக்கு எல்லாம் இன்பமாகும் போலும்: 148 - சுந்தர சண்முகனார்

கொற்றவன் அது கூறலும் கோகிலம்
செற்ற தன்ன குதலையள் சீறுவாள்
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமோ?
எற்றுறந்தபின் இன்பம் கொலாம் என்றாள்

(228)

எற்றுறந்தபின் என்பதை என் துறந்தபின் என்று பிரித்துப் பொருள் காணல் வேண்டும். சீதை தன் உரை வன்மையால் எண்ணியதை முடித்துக் கொண்டாள்.

உலகியலில் கூடச் சில நேரம் மனைவி கணவனை நோக்கி, நான் இருப்பது உங்கட்கு இடையூறாய் இருக்கிறது, நான் போய்விட்டால் நீங்கள் நிம்மதியாய் இருப்பீர்கள்- என்று கூறுவதைக் கேட்டிருக்கலாம்.

'ஆறு செல் படலம்'

ஈன்றவள் செய்கை

நீ தான் முடி சூடிக் கொள்ள வேண்டும் என வற்புறுத்திய முனிவர் முதலான அவையோர்க்குப் பரதன் ஆணித்தரமான பதில் இறுக்கிறான். மூன்று உலகிற்கும் முதல்வன் போன்ற இராமன் இருக்க, இளையவனாகிய என்னை முடி சூடிக்கொள்ளும்படிச் சான்றோர்கள் சொல்வது அறநெறி எனில், என்னை ஈன்ற கைகேயியின் செயலும் அறநெறி என்று சொன்னால் தவறு ஏது?

மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வனாய் முதல் தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல் சான்றவர் உரை செயத் தருமம் ஆயதேல்
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ?

(14)

எனக்கு முடி சூட்ட முயன்ற கைகேயியின் செயல் எவ்வாறு முறையில்லையோ- அவ்வாறே நீங்கள் என்னை வற்புறுத்துவதும் முறையன்று- என்கிறான். அயோத்தியா காண்ட ஆழ் கடல் 149


'
திருவடி சூட்டு படலம்'

யான் தந்தனென்

இராமன் பரதனை நோக்கி, தாய் தந்தையர் ஆணைப்படி அரசு நின்னதே! நீ ஆள்க- என்று கூறிய இராமனிடம் பரதன் கூறுகிறான். ஐயனே- சரி- அரசு எனதேயாகுக! யான் உனக்கு என் அரசைத் தருகிறேன் நீயே ஆள்க. ஏனெனில், இந்த உலகம் மூன்றிலும் உனக்கு ஒப்பு நீயே. மற்றும் என்னிலும் மூத்துளாய்; எனவே ஏற்றருள்க- என்கிறான்:

முன்னர் வந்து உதித்து உலகம் முன்றினும்
நின்னை ஒப்பிலா நீ பிறந்த பார்
என்னது ஆகில், யான் இன்று தந்தனென்;
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா

(112)

இன்றொடு ஏறுமோ

பரதனே! நீ அரசை என்னிடம் அளித்தல் முறை யாகாது. யான் பதினான்கு ஆண்டுகள் காட்டில் தங்குவதாக அரசர் ஆணைப்படி ஏற்றுக் கொண்டுள்ளேன். அதன் பின்னரே யான் அரசு ஏற்கமுடியும். நீயோ இன்றே ஆட்சியை ஏற்கச் சொல்கிறாய். இன்று ஒரு நாள் பதினான்கு ஆண்டுகள் ஆகுமோ?- ஒரு நாள் கழிந்தால் பதினான்கு ஆண்டுகள் கழிந்ததாகுமோ?

பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால் அது முறைமையோ வசைக்கு அசைந்த எந்தையார் அருள அன்று நான்
இசைந்த ஆண்டெலாம் இன்றொடு ஏறுமோ

(114)

மேலும் இராமன் மொழிகிறான் பரதனுக்கு-பெரியவராகிய நம் தந்தை மன்னவர் இருக்கும்போதே எனக்கு அரசைத் தந்தார். நான் அதை முதலில் ஏற்றுக் கொண்டது எதற்காக எனில், பெரியவர் சொல்வதை 150 ) சுந்தர சண்முகனார்

மறுக்கக்கூடாது என்ற மதிப்போடு கூடிய அச்சத்தினாலே யாகும். அது போலவே, உன்னைக் காட்டிலும் பெரியவனாகிய யான் சொல்கிறேன்- நீ என் ஆணையை மறுக்கலாமோ? சொன்னதைச் செய்! வருந்தாதேஎ ன்பது இராமனது திறமையான உரையாகும்.

மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி;
அன்னது கினைந்தும் நீ என் ஆணையை மறுக்க லாமோ
சொன்னது செய்தி ஐய! துயர் உழந்து அயரல் என்றான்

(117)

எனது ஆணை

வசிட்ட முனிவனும் பரதனை நோக்கி அரசு ஏற்கும்படி நெருக்கி வற்புறுத்துகிறான். பரதனே! ஐம்பெருங் குரவர்கட்குள் உயர்ந்த குரவர், இம்மை நலனும் மறுமை நலமும் எய்தும்படிப் பலவிதக் கலைகளையும் பயிற்று வித்தவரேயாவார். இதன்படி, யான், உன்னை மாணாக்கனாக ஏற்றுப் பல்வேறு கலைகளையும் பயிற்றுவித்த பெரிய குரவனாவேன். எனவே, என் சொல்லை நீ தட்டாமல்- என் ஆணையை ஏற்று, உனக்குரிய அரசை ஒப்புக்கொண்டு ஆண்டே தீர வேண்டும்- என வற்புறுத்தினான்.

இதஇயல் இயற்றிய குரவர் யாரினும்
மத இயல் களிற்றினாய் மறுஇல் விஞ்சைகள் பதவிய இருமையும் பயக்கப் பண்பினால்
உதவிய ஒருவனே உயரும் என்பரால்

(123)

என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள் ஒன்றலாதன பல உதவிற்று உண்மையால்,
அன்று எனாது, இன்று எனது ஆணை, ஐயநீ
நன்று போந்து அளி உனக்கு உரியநாடு என்றான்

(124)

இவ்வாறு பலரும் எடுத்துரைக்க, அரசு ஏற்கப் பரதன் உடன்பட்டான். அயோத்தியா காண்ட ஆழ் கடல் 151

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் கிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்

(648)


என்னும் திருக்குறளின் கருத்து, பரதன் அளவில் உண்மையானதை எண்ணுங்கால் உவகை பூக்கின்றது. இப்பகுதியில் உள்ள எல்லாமே முத்தான உரையாடல்களாம்.