அய்யன் திருவள்ளுவர்/பாவேந்தர் பாரதிதாசனார்

விக்கிமூலம் இலிருந்து



பாவேந்தர் பாரதிதாசனார்





நி
லை பெற்ற சிலையாகி, நெடும் புகழை
நிலை நிறுத்தி, அவை போன்ற
தமிழ் மக்கள் நெஞ்சங்களிலெல்லாம்
இடம் பெற்ற பாவேந்தே! புரட்சிக் கவியே!

நின் நாக்கு- ஞானத் தகடு!
நின் எழுதுகோல்- வைரக் கோல்!
நின் ஏடு - தமிழ்நாடு!

சந்தனத்தில் உளிபட்டு, சந்திரனில் வதனம் தீட்டி,
கரு நாவற் கனியெடுத்துக் கண்ணாக்கி,
தத்தும் கிளி நடையை - நடையாக்கி,
சங்கத்தைக் கண்டமாக்கி,
கவிதையிலே தமிழ்க் கன்னியை,
உருவாக்கிய கவி மா மன்னா!
தமிழர் தம் மொழி விளக்கே!
காலத்தின் அணுக்களிலே - நின்
கை வண்ணம் காணுதய்யா!

ஓடியத் தமிழ்க் குருதி
இடையிலே இறுகி,
பனிப் பாறையாகி,
சங்கை கெட்ட நிலையிலே,
சங்கங்களை வளர்த்தத் தமிழகம்,
பொங்கும் வாரிக்கு முன்னாலே -
புலம்பி நின்றது.

மின்னலை இழுத்து
மலை பிளக்கும் மேகம் போல்,

கன்னல் தமிழ் இழுத்து,
தமிழை நீர் - நிமிரவைக்கப்
பாட்டெழுதிய - குயில் புள்ளே!
வரலாறு மறவா வடிவமே!

நிலவைத் திறந்துவிட - வானம் வரும்!
மலரைத் திறந்துவிட - தென்றல் வரும்!
பகலைத் திறந்துவிட - பரிதி வரும்!
எமது உணர்வைத் திறந்துவிட - நீ வருவாய்

சாப்பறவை, இந்தியை,
சந்தனத் தமிழெடுத்து, தமிழ்த் தீயில்,
இந்தனமாக்கிய இலக்கியக் குரவ,
உன்னோடு நாள் போயிற்றா?
இனிவரும் நாளெல்லாம்
தமிழ் இல்லா நொடிச் சினையா?

பார்த்திருந்த ஓவியத்தை,
பதம் குலையச் செய்ததெல்லாம்,
காலமெனில் -
அக்காலம் எமக்கு வேண்டாம்!
நடப்பதற்கே தெரியாத குழந்தைகள் - நாங்கள்!
நல்ல தமிழ் நடை கற்பித்த நயமான -ஆசான் நீ!

இடையன் கோவெடுத்தால் - அது, குத்துக்கோல்!
மன்னன் கோலெடுத்தால் - செங்கோல்!
குருடன் கோலெடுத்தால் - வழிக்கோல்!
ஆனால், மக்களுக்காக நீரெடுத்தக் கோல் - 'பா'க் கோல்!

பாவேந்தே - நீர்
அடுக்கிய எழுத்துக்களில் இருந்த மிடுக்கென்ன
கொடுத்த உவமையில் இருந்த உணர்வென்ன !
இனி, யார் எமக்கு அது போலத்
தரப் போகிறீர்கள்? யார் இருக்கிறார்கள்?

தோகை விரித்த தொகைக் கூட்டம்,
வெட்டுக்கிளிபோல் துள்ளி வந்த
வீரச் சொற்கள்! விநோத விளக்கங்கள்!

அரிமா போல் அறையும் -
நின் அறை கூவல்கள்!
வேங்கைபோல் பாயும்
முன்னேற்றப் பாய்ச்சல்!
மதம் பொழியும் - தமிழ்த் திமிர் -
கவிதைச் செருக்கு!
இத்தனையும் உன்றன் ஒரு பாடலிலே
குடி புரியக் கண்டோம்!
இனி அந்த ஞான மதத்தை
யாரிடம் காண்போம் - ஐயா!

பொங்கும் தமிழ் உணர்வில்
பூரித்த தன்மானப் பூக்களைத்
தங்களது கவிதையெனும்
நறு மலர்த் தோட்டத்திலே கண்டோமே !

ஏறு போல நீ... "ஏடா தம்பி, எடடா பேனா”
என்று எமை எழுத ஏவிய போது,
வந்து விழுந்த உமது வாத வரிகளில் எல்லாம்
வரிப் புலியின் நடையைப் பார்த்தோமே !

வெல்லத் தமிழ் மட்டும் உம்முடைய
கவிதைகளில் வீச்சாக நிற்கவில்லை,
கொல்லும் தமிழ்வேல், வாள், ஈட்டிகளும்
ஓசை நயம் செய்தன ! ஓங்காரக் கூச்சலிட்டன.
மின்னல் வரிகளாக மின்னி மின்னி - எமக்கு
இருளில் நீர் காட்டிய வழியை -
எப்படி ஐயா மறப்போம்!

வேங்கையின் வாகார்ந்த உமது
வீர நடையிலே - கவிதைக் கர்ச்சனையிலே -
வெண்டைக் கவிதை எழுதிடும் சில
வெள்ளாடுகள் குறை கண்டன!
மேய்ந்த நுனிப் புல் மேடபுத்தி அவற்றுக்கு!

ஆத்திகத்திற்குப் பாதம் தூக்கும்
அந்த அடிமைகள் - உமை எதிர்த்து,
"இல்லை என்பான் யாராடா,

தில்லையைப் போய் பாரடா” என்று
ஆவர்த்தனமாடின!
'இல்லை என்பேன் நானடா,
அத் தில்லை கண்டு தானடா, என - நீர்
எதிரிடி குமுக்கமிட்டதைக் கண்டு,
'கவி'கள் எல்லாம் கிடைத்த கிளைகளை
இறுகப் பற்றித் தலைகீழாய்த் தொங்கி
ஊஞ்சலாடியதைத் தமிழ் நாடே
கண்டு விலா நோகச் சிரித்ததே !

'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற
விடுதலை முழக்கக் கவிதைகள் வீதியுலா வந்தன!

சமுதாய விரோதிகளை வீதியிலே நிறுத்த,
'கொலை வாளினை எடடா, மிகு -
கொடியோர் செயல் அறவே,
குகை வாழ் ஒரு புலியே உயர் - குணமேவிய தமிழா' - என்ற
வீர அணிவகுப்பு நடைப் பாடலைப் பாடி,
எமது நாடி நரம்புகட் கெலாம் நீர் முறுக்கேற்றியதை,
புரட்சிக் கவிஞரே, மறப்போமா யாம்?

அரசியல் விடுதலைக்குப் பாரதியார்
கவிதை எழுதினார்! சமுதாய விடுதலைக்கு
உம்மைப்போல் எழுதினவர் யார்? எவருளர்?
உதாரணத்துக்காக ஒரு விரலை மடக்க உண்டா ஆள்?
ஆயிரக் கணக்கான கவிதைகளால்
இராமயண இராமனைப் பாட
ஆயிரம் கவிஞர்கள் பிறந்தார்கள்.
இராவணன் மறத்தை, திறத்தை, மாண்பைப் பாட,
ஒரு கவிஞன் இன்றுவரைப் பிறந்தானா? -
முதன் முதலில், உம்மைத் தவிர!

'தென் திசையைப் பார்க்கின்றேன்
என் சொல்வேன் - என்றன்
சிந்தையெல்லாம் - தோள்களெல்லாம்
பூரிக்கு தடடா !
'குன்றெடுக்கும் பெருந்தோளான்,

கொடை கொடுக்கும் கையான்,
குள்ளநரிக் கூட்டத்தின் கூற்றம்.
என் தமிழர் மூதாதை.
என் தமிழர் பெருமான், இராவணன் காண் - -
என்ற ஓர் இனமானப் பாடலைப் பாடி
வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியைப் பெறச்
செய்த பாவலர் அல்லவா நீர்?

தன்னந்தனியராக, இந்திர சித்தனாக -
ஆத்திகத்தின் சூதுக் கவிதைக் களத்திலே -
சுயமரியாதை வாளேந்தி நின்றவர் யார்?
எம் புரட்சிக் கவிஞர் அன்றோ?
எதிரிகளுக்கு வேல் வடித்துக் கொடுத்த
இலக்கிய வீடணர்கள் முகத் திரையைக் கிழித்து,
வெற்றி வாகை சூடிய ஒர் இன மானக்
கவிஞரல்லவா நம் பாவேந்தர்?

தமிழால் கரு நனைந்தவர்கள் எல்லாம்
தமிழுக்கே பகையாகி
உமிழ்ந்த அவர்தம் கவிதைகளைக் கண்டு
உலகம் சிரித்தபோது,
"இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம்?
நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே !
செந்தமிழுக்குத் தீமை வந்த பின்னும்
இந்தத் தேகம் இருந்தொரு லாபமுண்டோ? -
என்று, உலக வரலாற்றிலேயே - முதன் முறையாக
மொழிப் போருக்குப் புறப்பாட்டு
நடைப் பாடலை எழுதி செங்களம் காண
தமிழ் மக்களை கட்சி பேதமின்றி அழைத்த,
முதல் புரட்சிக் கவிஞர் - பாரதிதாசனாரைத்
தவிர வேறு யார்? இந்த தமிழ்ப்பற்று
எக் கவிஞனுக்குக் கிட்டியது?

பூ கிள்ளும் நகத்தாலே - புலி உடம்பைக் கீறி,
சூடான இரத்தத்தில் - சந்தக் கவிதைகளை,
சித்திரக் கவிதைகளை, உருவகக் கவிதைகளை,

பனையோலைப் பள்ளத்தில்
படிக்குங்கால் கற்கண்டாகி, முக்கனிச் சாறாகி,
கேட்குங்கால், அவை பூச்செண்டாகி,
காதுகளிலே வீழ்ந்து - நின்று நிலைத்த தமிழகத்தில்,
தமிழுக்கும் - பண்பாட்டுக்கும் வந்தேறிய பகை -
ஆட்சித் தியிருடன் வழக்காட நினைத்தபோது,
பாவேந்தர் எப்படி'பா இயற்றினார் தெரியுமா?

கிழக்கைக் கீறி எழுந்த - செங்கதிர்போல -
எழுத்துக்களை எழுச்சியாக்கி,
அசையை அரிமாவாக்கி,
ஒலிக் குடும்பம் தனை ஒழுங்காக நிரவி,
பாட்டால் தன்னையே பரவ வைத்து,
பழங்காலம், நிகழ்காலம், எதிர்காலம்
என்ற காலக் கணக்கைக் கடந்து,
உடலில்லாமல்,போனாலும் உலவி,
உயிர்ப்பாய் நின்ற பழம் புலவர்களைப் போல -
புரட்சிப் பாடல்களை எழுதி, நமக்குப்
புத்துணர்வை ஊட்டியவர் பாவேந்தர்.

வெடிக்கும் எரிமலையை
வெங்காயத் தோல் போல் உரித்த,
நெடியால் - அந்த நொடிப் பொழுதில்
ஓரின எதிர்ப்பை அடி, முடி ஆடிட -
அதிர்ந்திட விழி நீரை வீழ்த்தும்
ஆற்றல் படைத்தவர் கவிக்கோ !

பிளந்த பூகம்பத்தைத் தனது பின்னி வரும்
சந்தத்தால் தைத்துப் பழக்கப்பட்ட
விந்தைக் கவிஞர் பாவேந்தர் !

புயற்காற்றை எடுத்து, அதற்கு
முயற் பொறுமை தந்து,
பாட்டு வயலிலே விளையாடவிட்டு
வேகவேடிக்கையைப் பார்த்த
புதுவை அரிமா அவர் !

காலையிலே கதிர் முளைக்கத் தவறி விட்டால்,
கனல் போர்த்திக் கிடக்கும் கவிதை ஒன்றைப்
பாவேந்தர் கட்டளையிட்டால் -
அது ககன பவனி வந்தால் - போதாதா?
கடும் கோடையைக் கொட்டிட !

கோல நிலா கொஞ்சம் காலம் கடந்து
வருவதாகத் தகவல் கிடைத்தால்,
சந்தனத்துச் சந்தத்தால் -
சந்திரனை உருவாக்கி
நிலா வருகின்ற வரையில்
நீ, நின்று - சந்தன ஒளி தா! என்று,
அம்புலிக்கே ஆணையிட்ட
கவிஞன் பாரதிதாசன் !

மேகம் முரண்பட்டு,
முத்து இறைத்தன போல்
கொட்டிக் கிடக்கும் மீன்கள்,
குறு விழி தன்னை மறைக்குமானால்,
பாவேந்தர்- தனது எழுத்துக்களை
வாரி வாரி இறைத்து, அவற்றை
விண் மீன்களாய் எரிய வைப்பார்.

விடியல், சற்றுக் களைப்பால் விழி மூடி,
தூக்கக் கலக்கத்தில் துவண்டு தூங்கி விட்டால்,
மேதினியின், மேன்மையான
காலைக் கபாடத்தைத் திறப்பது யார்?

நித்திரைச் சுகத்தில் - மோன உலகம் - சற்றே
நிம்மதியாகக் கிடக்குமானால்,
சத்தான காரியங்கள்
சமயத்தில் நடக்காதே - என்றஞ்சி,
வைகறை வரத் தவறுகின்ற
நேரத்திலே எல்லாம்,
கை-கறையுடைந்த தனது கவிதையால்
பாரைத் தட்டி எழுப்பும் திறனும் - உரனும்
பாவேந்தர் கவிதைக்கு இருந்ததை
பல நிகழ்வுகளிலே பார்த்திருக்கின்றோமே !

பாவேந்தர் கவிதையிலே -
இலக்கணப் பிழைகள் உள்ளன
என்று, அழுக்காற்றுப் பிறவிகள் சில,
புறம் பேசித் திரிந்தன.
எதிரிகள் விரித்த, அந்த வஞ்சக
இலக்கண வியூகச் சூதுக் களத்தை
பாரதிதாசன் கண்டார்.

இலக்கணப் பாசறை குவிந்த
கருவிகளாய் எழுச்சி பெற்றார்!
காய்வரும் இடத்தைக் கவிதையில் காட்டி,
கனிவரும் அசைக் கிளைகளைச் சுட்டி,
குற்றியலுகரம் புணரும் இடங்களில்
ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம்
இசையால் ஏற்பட்ட இன்னலல்ல
என்று கடாவி, விளக்கம் தந்தார்! -
வீழ்ந்தனர் விரோதிகள் -

மோனை முத்திரைகள் இல்லையே -
என்று மோதியவர்களின்
முகத்திலறைந்தாற்போல!
'காரிகை உமிழுமாறு
பெரும் புலவன் கபிலர் காட்டிய
கைவரிசைகளை
வேல்களாக்கி வீசிச்
சாய்த்தார் - சழக்கத்தை !

இலக்கணப் பாதையில் வழுக்கி விழாமல்,
எப்போதும் - எச்சரிக்கையோடும், விழிப்போடும்
எழுதும் முதிர்ந்த கவிஞரை, புரட்சி வித்தகரை
வேண்டுமென்றே குறை கூற முற்பட்டார்கள் - சிலர்!
காரணம், அவர் பெரியார் பாதையிலே நடந்து,
ஆதிக்கத்தை ஆணி வேரறச் சாய்க்கின்றாரே என்ற காழ்ப்பு!
அதனால்தான், அவர் கவிதையை எடுத்துக் கொண்டு,
இச்சொல் எதற்கு? அச்சொல் ஏனில்லை?
சமத்கிருதம் வருகின்ற நேரத்தில்
தற்பவம் தேவையா?”

என்று கேட்டு, அவர் பெயருக்கு
இழிவு தேடினார்கள் - அழுக்காறாளர்கள்!
அத்தனை பேரையும் பாவேந்தர்,
இலக்கணக் களத்தில்
தன்னத் தனியராக எதிர்த்தே நின்றார்!
எனவே, பாவேந்தர் பாரதிதாசனாரை
வெளிச்சம் என்று நினைத்து,
ஆத்திகத் தேசிய விட்டில்கள்
குவிந்து வந்து விழுந்தன!
ஒளிக்கத் தெரியாதச் சூட்டால்
அவர்களைச் சாம்பலாக்கி விட்டார்.

தமிழின் மொத்தத்தில் குத்தகை எடுத்தக்
கவிதைக் காப்பியங்கள் பலவற்றை,
அறிவுச் சமுதாயத்திற்கு
அறிமுகப் படுத்தியவர் பாவேந்தர்.

கோடையில்கூட ஒடையில்
தண்ணீர் இருக்காது. ஆனால்,
புரட்சிக் கவியின் கவிதை ஓடையில்,
கோடை கூடக் கவிதை குடித்ததாக
உண்டு வரலாறு

பருவத்தில் பூக்கும் பூக்கள் உண்டு. ஆனால்,
பாவேந்தர் காலம் கடந்து எப்போதும்
பூக்கும் உவமைப் பூக்காடு!
சுதந்திரம் என்பதைப் பாரதி செய்தார்.
அந்தச் சுதந்திரத்தில் வாழும் மக்களைப்
படைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!

பொலிவற்ற கீழ் மேல் புரட்டுக்களை
நலிவு செய்வதில், அவர் பாண்டியன் வாள்!
ஒய்வெடுத்த வாழ்க்கையில் - ஒடுங்கும் மயிலாய்,
கைம்பெண் வாழ்வு கசந்து நிற்க,
நிலா முகத்தாளை வேர் பலா என்று கூறி,
பூரிக்கும் சுவை மகிழ்ச்சியால்
இளைஞர்களுக்கு

இன்பத்தை நினைவூட்டி, அதே
பூரிப்பால் கோரிக்கை எழுப்பிடத் தூண்டிய-
புதிய மறுமலர்ச்சி சமுதாயச் சிற்பி அவர் !

இளமையின் அந்தியில் இருக்கும் கிழத்திடம்,
கிளியை ஒப்படைப்பது திருமணமல்ல !
சடங்கின் சட்டத்தில் பெண்ணை மாட்டுதல்,
கண்ணை இழந்தவன் செயலென்று
சொன்னவர் புதுவைக் கவிஞர்!

வீழ்ச்சியுற்ற தமிழகம் எழுச்சி கொள்ள -
அதன் மடமையைப் பிளக்கும்
பாறை வெடிகுண்டானார்!
பிறமொழி ஆதிக்கம் சிறகெடுத்துப் பறந்தால்-
வேலென எழும்பிய அவருடைய
வெம்மைச் சொற்கள்-
வளைத்த வானத்தை
நிமிர்த்தும் வாக்கியங்கள்!
படுத்த நிலத்தை எழுப்பும் யாப்பு,

அன்புக்கு அவர் தந்த விளக்கம்-
அருளுக்கும் - அது பொருந்தும்.
நல்ல குடும்பத்தைச் சொல் விளக்கேற்றி,
கல்லாமை கழித்து, கல்வி நட்டு,
அறிவைத் திறக்கும் திறவுகோல்
புதுவைக் குயில்!

வந்துபோகும் நிலவல்ல - கவிஞரது பாடல்!
வரம்போடு வீசும் தென்றல்! - வெள்ளுவா பொழிவு! பாரதியாரைப் பற்றி, அவர்
பாடியதைப் போல எவரும்
இனி பாட முடியாது!
அவ்வளவு புகழாரங்களையும் -
புதுப்புதுச் சொற்களால் ஆட்சி செய்து,
ஆசானுக்கு ஆரமணிந்தவர்!

தமிழ்ப்பண்புகள் - சிந்தும் தேன்மலர்கள்-
அவர் எழுதிக் குவித்த நூல்கள்! -
காலமெலாம் நாறும் மனோ ரஞ்சிதங்கள்!

சந்தத்திற்கு அடிமையாகும் சந்தக் கவியா?
செந்தமிழுக்குப் பாரதிதாசனாரே சான்று!
உருகும் வெள்ளியை ஒழுங்காகச் சொல்லாக்கி,
பெருகும் தமிழுணர்வை, பொற்குழம்பை
வாரிப் பூசிச் சமைத்தக் கவிதைகள்
தமிழர்க்கு ஊன்று கோல்கள்.

"வாழும் வகை செய்யும் “பா”, மருந்து -
இருட்டுக்கு விளக்கு சமுதாயத்திற்கு நெறி! -
அவரது கவிதைகள்:
தமிழியக்கம் தலை தூக்கி நிமிர -
அமுதைக் கடந்து அள்ளித் தந்த சொற்கோ !
கனல் பட்டெரியும் கற்பூரம்போல், அவர் தமிழின் -
அனல் பட்டு எதிரிகள் தீய்ந்தனர்.

காற்றைக் கட்டளையிட்டு,
கடலை வேலை வாங்கி,
மலையைத் தொழச்செய்து,
தென்றலைக் கவரி வீசவைத்து,
அருவியை ஆராரோ பாடச் செய்த - அற்புதமான
இயற்கைக் கவிஞர் - புரட்சிக் கவிஞர்!

பாவேந்தர் புகழை - நாவேந்தர் ஒருவர்
சிலையாக்கி, இனம் மறவா வடிவமாக்கி,
அலையாடும் கடலோரம்
அழகாக வைத்தவர் அறிஞர் அண்ணா !

மூச்சுள்ள வரையிலும்
முத்தமிழைப் பாடினார் பாரதிதாசன்! அந்த
மூச்சைத் தன் மூச்சாகக் கொண்டு,
கவிப் பெருமையைப் புவி போற்ற
நிலைநாட்டிய, அந்த
அறிஞர் குல அறிஞரை - நம்மால்
நினையாமல் இருக்க முடியவில்லை.

சிந்துக்குத் தந்தையே!
சிங்காரச் சந்தமே !
நீர் தந்த தெங்கிள
நீர் சுவைப் பாடல்கள்
எமைவிட்டுப் போனாலும்,
உமை விட்டு நீங்காத
உள்ளங்கள் கோடி உண்டு!

பாவேந்தே ! உம்மால் உருவானோம் -
தமிழ் உணர்வு பெற !
உமை நினைத்து உருகுகின்றோம் -
கண்ணாரம் சுழலக் - கழல !
குயில் பாடும் இடத்தில் -
கோழிகளும் வந்ததுண்டோ ! தமிழ் பாடும் உமது இடத்தில்
தமிழ்த் துரோகிகளும் வரலாமோ!
விபத்துக்கு இதை விட ஒரு
விளக்கம் தேவையா?

உருண்ட சந்திரனின் உருவத் திரள் கண்டு-
மருண்ட மனிதர்கள், பாவேந்தர் காலத்திலேயே
நடமாடிய வடமொழி வருடிகள்!
எட்டிக் கொட்டையிலே இறக்கிய சாறு
அவர்களது பேச்சுக்கள் - எண்ணங்கள்!

அந்தக் கந்தல் துணிகள் எல்லாம், இன்று -
கன்னித் தமிழுக்கு நானென்று,
அரசியல் பேன் பிடித்த
தலைகளுடன் பேசுகின்றனவே - ஐயா !

பாரதிதாசனே !
‘பா’ திறத்து ஆசானே !
சீர்பூத்த தமிழே !
தமிழ்க் கரும்பே !
கவிதைத் தேனே !
இலக்கியப் பாகே !
கவிஞர் குலத் தலைவா !

கூர் பூத்த பாடல் மொட்டே !
தமிழ் மலர்க் கையே !
பேர் பூத்த புகழே !
தமிழ்ப் பேழையே !
உனது வாழ்நாள்
பரிதியில் எழுதப்பட்ட
ஒளிர்க்கற்றை !

நீர் வடித்த நெருப்புக் கவிதைகளை
உலகத்தின் இருப்பாக வைத்துள்ளீர்!
ஆண்டுகள் வரும்!
ஒவ்வொரு ஆண்டும்
உமை நினைந்து ஒடும் !
நகரும் அந்த நாட்களில் - எங்கள்
தமிழ் நெஞ்சங்கள் -
உம் நினைவோடு நகரும்.

ஐயா! கவிஞ்ரய்யா !, நீர் -
ஒரே தடவையாகப் பிறந்தவர்!
அதனால் ஒரே தடவையாக இறந்தவர்:
தமிழ்த் துரோகிகள் சிலர்,
இங்கே பல முறைகள் இறந்து - பிறந்து
கொள்ளிச் சட்டிக்குப் பின்னாலே
பல தடவை போகிறார்கள்!

அவர்களை எல்லாம் நினைக்கும்போது,
பாவேந்தர் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டாமோ!
காலத்தின் அவசரத்தால்
கரை கடந்து சென்று விட்டாரே !
காட்டிய கோலம் போதுமென்று,
பூட்டிய சிறைக்குள் போய் ஒடுங்கி விட்டாரோ !

இந்த நாளில், உமை நினைந்து
நினைந்துக் கூவியழ, -
எனது கட்டுரை ஒன்றால்தான் முடியும்!
எனது கண்ணிர் அருவி யாகின்றது!
இயற்கையின் செறிவெல்லாம்
இனிதாக நிறைந்தவரே !
‘பா’ புரட்சிக்குப் பர பிரம்மமே !
கெஞ்சுகின்ற என் நெஞ்சப் புலம்பலுக்கு,
எதோ ஒரு கவிதைக் கொடு!