அய்யன் திருவள்ளுவர்/மார்ட்டின் லூதர் கிங்
அமெரிக்கக் காந்தி..
மார்ட்டின் லூதர் கிங்
இரக்கம் குடி கொண்ட எந்த இருதயமும் இறப்புக்கு இரையாகி விடுகின்றது.
காலம், நீண்ட நெடியதோர் வரலாற்றைத் தீட்டி வருகின்றது.
கணக்கிறந்த பொன்னேடுகளாக, மேதினி போற்றும் மேதைகளிற் சிலர் - அவ்வப்போது அதற்குப் பாத்திரமாகி வருகின்றனர்.
மனசாட்சிக்கு எப்போதும் துரோகம் செய்யாதவர்கள், வசந்தக் காலக் குயிலின் ஒசையைப்போல, தங்களது கருத்துக்களை மிதந்து வரும் காற்றினிலே கலந்துவிடுகின்றனர். ஞானத்தின் திருப்பம், அந்தப் பெரிய மனிதர்களுடைய ஒழுக்கச் சீலத்திலே இருக்கின்றது.
எவனொருவன் தனது உயிரணுக்களைக் கவனமாகப் பாதுகாப்பது போல் - பிறரது உயிரணுக்களையும் பாதுகாக்கின்றானோ, அவன் உயரப் பறக்கின்ற சமாதானப் புறாவாக மாறுகின்றான்.
கரு நீல வானத்தில் நிலவு இருப்பதைக் கண்டிக்கவில்லை - மனித சாதி!
கருங்கடலில் முத்து இருப்பதை எவரும் எடுக்காமல் இருப்பதில்லை!
கருங் கூந்தலிலே அழகு தவழ்வதைக் கோபிக்கவில்லை - மனித சாதி!
கரிய மனிதனில் உயிர் இருப்பதை மட்டும் - ஏன் கோபிக் கின்றதோதெரியவில்லை?
ஒருவனுடைய உயிரை மற்றொருவன் எடுக்கும்போது மனிதன் தாழ்ந்து போகின்றான்.
ஏனெனில், கொலைகாரனுக்கு, அவனுடைய உயிரின் மதிப்பே அவனுக்குத் தெரியவில்லை என்பதுதான்!
சந்தனம், சந்தனத்தோடு கலக்கவேண்டுமே தவிர, அதே சந்தனம், வேறொரு சந்தனத்தை விழுங்குவதில்லை.
இயற்கையோடு பேசக் கற்றுக் கொண்ட மனிதன், தத்துவங்களைத் தன் தாய் மொழியில் வடிக்கின்றான்.
அந்தத் தத்துவங்கள், கோயிலுக்கு முன்னாலே வேதமாகப் படைக்கப்படுகின்றன.
படிக்கப் படிக்க இனிக்கின்ற எழுத்துக்கள் உலகத்தில் இருக்கின்றதென்றால் - கருணை நெஞ்சத்தோடு ஒருவன் எழுதியவைகளே அவை.
எவனொருவன், சுதந்திரமாகத் தனது மனசாட்சியைப் பேச அனுமதிக்கின்றானோ, அவனுக்குப் புகழ் ஒய்வு நேரத்தில் கால் அமுக்குகின்றது - சாமரம் வீசுகின்றது - தேரிலே குந்த வைத்து வடத்தை இழுக்கின்றது.
எவனொருவன், தன் மனசாட்சியைப் பொய்யானத் தோற்றத்தால் கட்டிப் போடுகின்றானோ, அவனை, அவனுடைய மரியாதையே மதிப்பதில்லை.
முழுமையான ஞானம் பெற்ற ஒரு சித்தாந்த வடிவம் கொண்ட ஒர் உத்தமனை உருவாக்குவதற்கு, மனிதன் சூரியனில் காய்ந்து - மழையில் நனைந்து - குளிரில் வாடி- மிகவும் வேதனைப்பட்ட பிறகுதான் - சின்மயத்தில் இரண்டறக் கலக்கக் கூடிய ஒரு மனிதனை, அது உலகுக்குப் படைக்கிறது.
அத்தகைய நிலவினும் குளிர்ந்த படைப்புதான் டாக்டர் மார்டின் லூதர் கிங் என்ற அமெரிக்க காந்தி!
அவரது தந்தையும், தனயனும், வாழ்க்கை முழுவதும் சீர்திருத்தத்திற்காகவே போராடியவர்கள்! அதனால், மார்ட்டின் லூதர் என்ற சொல்லைச் சேர்த்துச் சூட்டிக் கொண்டார்கள். அவ்வாறு பெற்ற பெயர்தான் மார்டின் லூதர்கிங் என்ற பெயர். அவருடைய வாழ்நாளின் அடையாளம் - கடிகாரம் காட்டிய மணித் துளியுமல்ல - காலண்டர் காட்டிய நாட் துளியுமல்ல!
மனித மூளையில் நினைவுச் சக்தி இருக்கின்ற வரையில், அவருடைய திருப்பெயர் எல்லோரா ஒவியம்போல் வண்ணம் கலையாமல் இருக்கின்றதென்றால், அதுவே மார்ட்டின் லூதர்கிங் அவர்களின் வாழ்நாள் அடையாளமாகும்.
பூண்டைவிடச் செடி உயரமானது! செடியைவிட மரம் உயரமானது. மரத்திற்குப் பக்கத்தில் மனிதன் ஒருவன்கூட உயரமாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொன்றும் தனது வேரைப் பூமியில் நட்டு, வானத்தைப் பார்த்தாக வேண்டும்.
மரத்தினுடைய உயரத்துக்குப் பக்கத்தில் ஒரு பூண்டினுடைய உயரம் குட்டையென்று பெயராலே வந்தாலும் கூட - இரண்டும் வானத்தைத்தான் பார்த்தாக வேண்டும்.
உலகத்தில், எல்லாம் நிமிர்ந்து நிற்கவே - வேரைப் பூமியில் வைத்தான் - உச்சியை ஆகாயத்தில் வைத்தான் இயற்கை யோன்!
ஆனால், மனிதன் மட்டும் தனக்கு அருகில் இருப்பவனை, வேரை வானத்தில் வைத்து - நுனியைப் பூமி நோக்கச் செல்ல விடுவானேயானால், இயற்கைக்கு விரோதமாக நினைக் கின்றான். நடக்கின்றான் என்றே பொருள்.
ஒரு நீக்ரோ, பாதாளத்தில் விழ வேண்டிய கல்லும் அல்லன்ஒரு வெள்ளைக்காரன் வானத்தில் பறக்க வேண்டிய புறாவுமல்லன்.
இதற்கு எடுத்துக்காட்டான சம்பவம் தான், அமெரிக்க மாண்ட் கோமரியில் நடைபெற்ற ரோசா பர்க் என்ற கறுப்பின பெண் கைது செய்யப்பட்ட வரலாறு!
கறுப்பு இன மக்கள் பேருந்திலே பயணம் செய்தனர்! வெள்ளையர் ஏறி உள்ளே வந்தார்கள்!
எழுங்கள்! அமர இடம் கொடுங்கள் வெள்ளையர்களுக்கு! கட்டளையிட்டான் ஒட்டுநன் - வெள்ளையன்.
வீராங்கனை ரோசா பர்க் மறுத்தாள் கைது செய்தது அவளை - வெள்ளை ஆட்சி!அபராதம் பத்து டாலர் என்றது சட்டம். இந்த நிகழ்ச்சி கறுப்பர் இனத்தை விழிக்க வைத்தது. அணி திரண்டு எதிர்த்தது கறுப்பர் இனம்.
இந்த கறுப்பர் சங்கத்துக்குத்தான் தலைவர் பொறுப்பை ஏற்றுப் போராடினார் மார்ட்டின் லூதர்கிங்!
இவ்வாறு, கருப்பான ஒன்று கட்டாயம் அவமதிக்கப்பட வேண்டிய ஒன்று என்றால், அழிக்கப்பட வேண்டியது என்றால், எத்தனை வெள்ளைக்காரர்கள் தங்களது கண்களிலுள்ள கருமணியை அழிக்கத் தயாராக இருக்கிறார்களோ?
சூரிய வெளிச்சத்தால் சுடர் விடுகின்ற மனித முகத்திற்குப் பொலிவைத் தருவது, கடுமையான இருளில் நொடிக்கு நொடி துடித்துக் கொண்டிருக்கின்ற இதயம்தான் ரத்தத்தைக் கொடுக்கின்றது.
இருளிலே வாடுகின்ற இதயம் இல்லாவிட்டால், வெளிச்சத்திலே இருக்கின்ற தேகம், அழகோடு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள முடியாது.
கருப்பையின் இருளிலே உதயமான வெள்ளைக்காரன் - எப்படி இருளை வெறுக்கின்றான்? நம்மாலே அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்த வினாக்கள் அத்தனையும் - மார்ட்டின் லூதர் கிங்கின் கேள்விகளாகும். சிந்தனைகளின் சுழற்சியாகும்!
என்றைய தினம் கிங் நீக்ரோ இனத்திற்குத் தொண்டாற்றப் புறப்பட்டாரோ, அன்றைய தினம் முதலே மரணம் அவரைப் பின் தொடர்ந்து கொண்டே வந்தது.
காற்றின் அழுத்தம் குறைந்த இடத்தில், காற்று எப்படி ஓடி வந்து அந்த இடத்தை நிரப்புகின்றதோ - அதனைப் போல, கறுப்பர்கள் என்ற காரணம் காட்டி அவர்கள் வேதனைப்படுகின்ற நேரத்தில், மார்ட்டின் லூதர் கிங் விரைந்தோடி வந்தார்.
அவர் இரக்கத்தின் சாட்சியாக, நின்றபோதெல்லாம் - அறியாமை இருளில், பண்பாடற்ற கருமையில் வாடியிருக்கின்ற அமெரிக்க வெள்ளைக்காரர்கள், அவரை எதிர்க்க ஆரம்பித்தார்கள். வெள்ளையர்கள் தோல் எவ்வளவு வெள்ளையாக இருக்கின்றதோ - அவ்வளவு வெள்ளையாக அவர்கள் மனம் இருப்பதில்லை. ஒரு வெள்ளைக்காரன் இசை வல்லுனனாக இருப்பானேயானால், அவன் கருதி மீட்டாமல் இசைக் கருவியை இயக்க முடியாது! ஆனால், அதே வெள்ளைக்காரன் ஒரு கருப்பனைப் பார்த்தவுடன், ஆதாரச் சுருதி கலைந்துபோன ஒரு யாழாகவே மிகக் கடுமையாகக் குரல் கொடுத்து - கருப்பனைத் தாக்க ஆரம்பிக்கிறான். பைபிள் வரிகளில் வருகின்ற கருணைக் கடல் மடைத் திவலைகள், அதே வெள்ளைக்காரனைப் புனலாட்டிச் சுத்தப் படுத்தியதாகத் தெரியவில்லை. இந்தக் கொடுமைகள், மார்ட்டின் லூதர் கிங்கின் இதயத்தில் கருந்தேளாகக் கொட்டின. அந்த வேதனையால் - குடைச்சலால் அவர் தன்னையே உணர்ந்து, தன்னையே பிறர்க்களித்தார்! தன்னிலே பிறரைக் கண்டு - பிறரிலே தன்னை வைத்தார்! அன்பாய், அருளாய், அருட் பிழம்பாய் அருள் மனமாய், நிர்மலமாய், நிதானமாய், தானமாய், தவமாய், இயேசு பெருமான், மாறியது ஏன்? வெள்ளைக்காரன் ஒருவனின் மனதை, எதிர்காலம் பக்குவப்படுத்தாதா என்ற ஆசையால்தானே! பாரச் சிலுவையில், ஆணி முளையிட, முள் முடி தரித்து, உயிர்வதைப் பட்டு, உயரிய கருத்தைச் சொல்லி ஊழிக்கே தலைவனாய் இருந்து இயேசு பெருமான் மறைந்து போனார். அத்தகைய கடுமையிலா ஒரு மனிதரைப் பின் தொடர்ந்து அவரின் சீரிய கருத்துக்களை - சிந்திய முத்துக்களை-வழங்கிய பவழத்தை - அளித்த நன்கொடையை - உலகுக்கு விளக்கிடும் பணியில் மார்டின் லூதர் கிங்கும் திகழ்ந்தார். அப்படிப்பட்ட அவரது நெஞ்சில், பலி பீடத்தின் முன்னால் கழுத்தறுக்கப்படும் ஆடு, கோழிகளைப் போல, நீக்ரோ மக்கள்
வேதனைப் படுவதைக் கண்டு தீராத துன்பம் அவருக்கு எழுந்தது. வானத்தைப் பார்த்து வழி என்ன என்று மார்ட்டின் லூதர் கிங் கேட்டார்! ஞானத்தைப் பார்த்து நியாம் எது என்று தனக்குத்தானே வினா தொடுத்தார். ஒழுக்கம் தவழும் திக்கை நோக்கி ஓடியோடி - இதற்கென்ன நீதி என்று கேட்டார். முடிவு, திருந்தாத மனித குலத்தைத் திருத்தும் பொருட்டு - அறப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். உலக உத்தமர் காந்தியடிகளின் அறப்போர் தத்துவத்தை - அகிம்சைக் கருத்தைத் தனது பொது வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார். அதனால் அவர் அமெரிக்க காந்தி என்ற புகழைப் பெற்றார்! அவருடைய அருளற அகிம்சைப் போராட்ட முறையால் விஞ்ஞான முரட்டுத்தனத்தில் இருப்பவரையும் மெய்ஞ்ஞான வழிக்குக் கொண்டு வர முடியும் என்று நம்பினார். சுழலும் மனமும் - சுழலும் துப்பாக்கியும் கொண்ட ஓர் அமெரிக்கன், அமைதியிலே பூக்கும் ஆனந்த மலராக என்றைய தினம் மலருவான் என்று - அவர் மனக்கோட்டை கட்டினார். மார்டின் லூதர் கிங் பேச ஆரம்பித்தால், சொலல்வல்லன் - சோர்விலன் என்பதை மெய்ப்பிப்பார். அவரது வாய் சிதறிய முத்துக்களைப் பொறுக்கி எடுக்க - ஆன்மிகச் சீர்திருத்த அறிவுடைய எவரும் வெட்கப்பட மாட்டார்கள்! அன்பிலே வேரோடி, அருளிலே கிளையிட்ட அவரது பேச்சுக்கள் - துன்பிலே இருந்த நீக்ரேர்க்களைத் தென்பிலே கொண்டு திணித்தன. அமெரிக்கக் கூன் முதுகுகள் அத்தனையும், அவரது சொற்பொழிவை, செயற்றிறனைக் கண்டு நிமிர்ந்தன. வெள்ளைக்காரனும் - கருப்பனும், தனது தாய்க் கருவிலே இருக்கும் போது, மாதம் பத்துதான்.
காதல் அனுபவம் ஒன்றுதான்!
கல்லறை இருளும் ஒன்றுதான்!
உயிரின் எடையும் ஒன்றுதான்!
இருப்பினும் என்னை, ஏன் அடிமை
என்று அவன் அழைக்கவேண்டும்?
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்,1862-ம் ஆண்டிலேயே அடிமைகளுக்கு விடுதலை அளித்துப் பிரகடனம் செய்தார்.
1927-ம் ஆண்டில், ஆப்பிரிக்கக் கண்டத்தின் சியர்ராலி யோனில் என்ற ஊரில், அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
நீக்ரோ, இனத்தின் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட பிறகுமா நான் அடிமை? என்ன நியாயம் இது?
நான் ஏன் வெள்ளையனை, எசமான் என்று கை கூப்ப வேண்டும்? இது தன்னையறிந்த இதயம் தந்த பாடம்- கிங்குக்கு!
அதனால் அறப்போர்க் களம் கண்டார். வேகமான நீக்ரோ மக்கள் திரள் திரளாய் அவரைப் பின் தொடரலாயினர்.
வெற்றி பல கண்டார்! வெள்ளையனின் நிமிர்ந்த தலை, குனிய ஆரம்பித்தது. நீக்ரோ இனம் விழித்தது.
நிறவெறி, இனி நேரடிப் போராட்டத்தில் இயங்கத் தயக்கப்பட்டது- வெட்கப்பட்டது!
அதன் எதிரொலி, சதித்திட்டம் என்ற சிலந்திக் கூட்டைப் பின்ன ஆரம்பித்தது.
இது போன்ற சிலந்திக்கூடுகள் - முன்பொரு தடவை அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களாக இருந்த ஆபிரகாம் லிங்கனுக்கும் - இராபர்ட் கென்னடிக்கும் பின்னப்பட்டன.
இப்போது மார்டின் லூதர் கிங்குக்கும் அதே சிலந்தி வலை விரிக்கப்பட்டது.
நகர சுத்தித் தொழிலாளர்கள் நடத்தும் அறப்போரைத் தலைமையேற்று நடத்திய மார்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.அவர் சாவதற்குச் சில நொடிகளுக்கு முன்னால் கூட, தன்னைச் சந்திக்க வந்த பாதிரிமார்களை, 'தெய்வமப் பாசுரம் பாடுங்கள்' என்று இதயம் கனியக் கனியக் கேட்டுக் கொண்டார்.
ஆபிரகாம் விங்கன் இதயத்தைப் பிளந்த துப்பாக்கி - கென்னடியைச் சின்னா பின்னமாக்கிய துப்பாக்கி, அதோ, கிங்குக்கும் பின்னாலே நீட்டிக் கொண்டிருந்தது.
உலக சமாதானத்திற்காகவும் - எடுப்பாரற்ற பிள்ளகளாக இருப்பவர்களுக்காகவும் - எந்த நேரமும் சிந்திக்கும் சிந்தனைக் கூடமாக விளங்கும் - அவரது தலைப்பகுதியை நோக்கி, துப்பாக்கிக் குண்டுகள் ஓடி வந்தன.
உறுதியான லட்சியங்களால், கொள்கைகளால் உரமேறிய அவரது தலையை நம்பி - உன்மத்தன் ஒருவன் உருவிவிட்ட குண்டு மேலே செல்ல முடியாமல் தங்கி விடுகின்றது.
பசி தீர்க்கும் வாழைக் குலை
கீழே சாய்வதைப் போல,
பனி மலர் அவிழ்ந்த மணக்கும்
கருத்துடையான் மார்ட்டின் லூதர் கிங் என்ற
மனித நேய மேதை, நிலமிசை துவண்டு வீழ்ந்தார்.
நிலா நழுவிற்றோ!
நித்திலம் உதிர்ந்ததோ?
மான் ஒன்று கீழே மாய்ந்ததோ?
மாணிக்கம் சிதறிற்றோ?
தேன்குடம் சாய்ந்ததோ?
தென் பாங்கு சோர்ந்ததோ?
என்ற நிலையில், அமெரிக்கக் காந்தி என்று போற்றப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் மக்களை விட்டுக் காலத்தோடு கலந்தார்.
வளைந்து கொண்டே தேம்பி அழும் வானம், இனி நிமிர்ந்து நிற்க எத்தனை காலம் ஆகுமோ? உலக உத்தமர்கள் இப்படி அடிக்கடித் துப்பாக்கிக் குண்டுகளால் இறப்பதால்தான், வளைந்தது போன்ற இந்த வானம் இன்றுவரை நிமிராமல் போயிற்றோ?
பாசி பிடித்த சமுதாயம் - பதம் குலைந்த சோற்றைப் போல யாருக்கும் பயன்படாமல் போவதற்குக் காரணம் என்ன? மக்கள் தொண்டர்கள் பலியாவதால்தானோ?
அறிஞர்களைக் கொல்லுவதால், உத்தமர்கள் உயிர்களைப் பறிப்பதால் - நல்லவர்களை நசுக்குவதால்தான்! என்பது இப்போது புரிகிறது.
துப்பாக்கி ஏந்திய இந்தக் குணங்கெட்ட பாவிகள், குழந்தையிலே எப்படிச் சிரித்தார்கள்? எவ்வாறெல்லாம் நடித்தார்கள்?
அந்த மனித நேய துரோகிகள் பேசிய மொழியைக்கூட மழலை என்று கூறுகின்றார்களே சில மேதைகள்,
பிற்காலத்தில் கொலைகாரனாக மாறக்கூடியவன் -
ஆபிரகாம் லிங்கனைக் கொல்லக்கூடியவன் -
இராபர்ட் கென்னடியை வீழ்த்தக் கூடியவன் -
மார்டின் லூதர் கிங்கைச் சாகடிக்கக் கூடியவன் -
மகாத்மா காந்தியைச் சுட்டு மாய்க்கக் கூடியவன்-
இந்திரா காந்தியை துப்பாக்கியால் படுகொலை புரியக் கூடியவன் -
இராஜீவ் காந்தியை மனித வெடி குண்டால் குலைக்கக் கூடியவள் -
சிறு வயதில் வெட்டுக் கிளியைப் போலத்தான் தத்தித் தத்தி ஓடியிருப்பார்களோ! அடப் பாவிகளே!
அவரவர்கள் நடையழகைப் பார்த்து- அவரவர்களைப் பெற்ற தாய்ப் பால் சுரக்கப் பூரித்திருப்பாள் அல்லவா?
ஆனால், அவர்கள்தான் பிற்காலத்தில் அறிஞர்குலத் துரோகிகள்! அறிவின் கொலைகாரர்கள்! அவனியின் கரும் புள்ளிகளாக! - ஆனார்கள்! இல்லையா?
மாசு மருவற்ற அந்த இளம் பிஞ்சுகள், பிற்காலத்தில் கொலைகாரர்களாக மாறுவதை - எந்தக் காலத்தினோடு சேர்ப்பது? எந்த வினைகளில் ஏற்று மன்னிப்பது?
எந்தத் தெய்வத்திடம் போய் மாரடிப்பது? எந்தத் தத்துவம் இதற்குப் பதில்கூறும்?
அமெரிக்கக் குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லிங்கன் இருந்த இடத்தையாவது கென்னடி நிரப்பினார் - ஒருவாறு ஆறுதலுற்றோம்!
இராபர்ட் கென்னடி இருந்த இடத்தையாவது மார்ட்டின் லூதர் கிங் நிரப்பினார் - எப்படியோ தேறுதலுற்றோம்!
ஆனால், மக்கள் தொண்டன் கிங் இருந்த இடத்தை நிரப்ப - ஆள் யார்? உலகம் தேம்பி அழுகின்றது, விக்கி விதிர்ப் படைகின்றது.
அதனைப் போலவே, ஆபிரகாம் விங்கனைக் கொன்ற கொலைக்காரன் ஜான் வில்கியூஸ் பூத் இடத்தை கென்னடியைக் கொன்ற ஆஸ்வால்டு நிரப்பினான்!
ஆஸ்வால்டு இடத்தை, மார்டின் லூதர் கிங்கைக் கொன்ற ஜேம்ஸ் எர்ல்ரே என்ற கயவனொருவன் நிரப்பினான் - இல்லையா?
நல்லவர்கள் இருந்த இடத்தை நிரப்புவதற்கு - நல்லவர்களும் வருகின்றனர். கெட்டவர்கள் இருந்த இடத்தை நிரப்ப - கெட்டவர்களும் வருகின்றனர்.
காலம் இந்த இரு பிரிவையும் கவனம் வைத்துக் கொண்டு தான் வருகின்றது. இதற்கு முடிவுதான் என்ன?
நல்லவர்களை நாசமாக்குவதற்குத் தீயவர்கள் வருவது இயல்பு - இயற்கை என்றால்.
இந்த உலகம், ஒரு பரிபூரண - களங்கமற்ற எல்லாம் வல்ல ஓர் இறைவனால் படைக்கப்பட்டது என்பது உண்மைதானா?
மார்டின் லூதர் கிங் இறப்பால் - கலங்கிய கண்களோடு - மனித நேய மாண்போடு - இதை நாம் எப்படி நம்புவது?
என்னுடைய உயர்ந்த சக்தி, பஞ்ச பூத வேரில் கட்டப்
பட்டிருப்பது உண்மையானால், அந்தச் சக்தியின் பெயரால் வெட்ட வெளியில் விரிவாக இருக்கின்ற இறைவனை, மாலையிலே மவுனமாக இருக்கின்ற இறைவனை - நான் ஒரு கேள்வி கேட்பேன் அதற்கு அவன் பதில் கூறியே ஆகவேண்டும் - அல்லவா? இல்லை என்றால் என்ன பணி பகுத்தறிவுக்கு - அல்லது ஆன்மிகத்துக்கு? மார்ட்டின் லூதர் கிங்கை இழந்து உலகம் மழையாகத் தேம்புகின்றது! மின்னலாக வெம்புகின்றது! - உத்தமர்கள் இறந்து கொண்டே போகின்றார்கள் என்பதால்! உதவாக்கரைகள் - ஊர் கெடுப்பவர்கள் -மோசடிக்காரர்கள் - திடீர்க் கோடீஸ்வரர்கள் உயிரோடு உலா வருகின்றார்கள்! ஜால்ரா தட்டிகளும் அதற்கு உண்டு! ஏன் தெரியுமா? எப்படியும் வாழலாம் என்ற இந்த ஈன மலக் குடலைக் கழுவும் கயமைச் சூழ்நிலையால் அல்லவா? சனியன் பூமியிலே இருக்கும் - சந்நிதானம் சாவுக்குப் பின்னாலே இருக்கும். முப்பத்தொன்பது வயதிலே உலகப் புகழை அள்ளிக் கொண்டு சென்று விட்ட பூத் இருந்த உலகத்தில், அவருக்கு எதிராக துப்பாக்கி நீட்டிய கயவனும் இருக்கின்றானே! இதுதானே, காலத்தின் மறம்? "முற்பகல் செயின் பிற்பகல் விளையும்' என்ற ஒளவை அறிவுரை பலித்து விட்டதே - பார்த்தீர்களா? மார்ட்டின் லூதர் கிங்கை 1968- ஆம் ஆண்டு அமெரிக்கா மெம்பீஸ் நகரில் ஜேம்ஸ் எர்ல் ரே என்பவன் கொலைக்காகத் துப்பாக்கியை தூக்கினான். 'வாளெடுத்தவன் வாளாலே சாவான்' என்ற இயேசு வாயுரைக்கு சான்றாவோமே என்பதைச் சிந்திக்கவே மறந்து விட்டானே! சாவு என்பது உத்தமர்களுக்கு அராஜகமாக வருகின்ற காரணத்தினால்தான், இந்த உலகம் பெருமை அடைகின்றது
என்பதை ஒருவாறு உணர்கிறோம். மாமனிதர் மார்ட்டின் லூதர் கிங், நெஞ்சிருக்கும் வரை - நெஞ்சிலே நினைவிருக்கும் வரை - நினைவிலே நேர்மைக் கரு இருக்கின்ற வரை அவர் இருப்பார். மனிதாபிமானி கென்னடிக்காக ஒருமுறை அழுது புலம்பிய அமெரிக்கா, மார்ட்டின் லூதர் கிங்குக்காகவும் அழுது கண்ணிர் சிந்திக் கொண்டிருக்கிறது. இது காலத்தின் பரிணாமக் கோலம். "தீமையை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சியை இயேசுவிடமிருந்து கற்றேன்" என்று மனம் திறந்து கூறிய மார்ட்டின் லூதர் கிங் என்ற அந்த அகிம்சை நிலா - அமெரிக்க 'வெள்ளுவா' மண்ணிலே சாய்ந்து, சாய்ந்து விட்டது. மார்ட்டின் லூதர் கிங், நீக்ரோ மக்கள் உரிமைக்காக பதினான்கு முறை சிறை சென்றவர் - தியாகத்தின் வைரத்திற்கு வேறு என்ன வேண்டும் சான்று? ஒருமுறை மார்பில் கத்திக்குத்துக் காயத்தை கிங் ஏந்தினார். மூன்றுமுறை - படுகாயங்களோடு தாக்கப் பட்டும் பிழைத்துக் கொண்டார். மார்டின் லூதர் கிங் குடியிருந்து வாழ்ந்த வீடு - கோயில், மூன்று முறை குண்டுகள் வீச்சுக்கு இலக்காகியது என்றால் - அவரது, இன, சமத்துவ, இயக்கம் அங்கே எப்படி வலிமையோடு வேரூன்றியிருந்தது என்பதையே உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றது! அண்ணல் காந்தியடிகளின் அடியொற்றி நடந்து, அமெரிக்க நீக்ரோக்களுக்கு இன, சமத்துவம் கிடைக்கப் போராடிய இந்தச் சமாதானப் புறா, உலகின் தலை சிறந்த நோபல் பரிசையும் பெற்றது! "எனது உயிர் போவதன் மூலம் - ஒரு நாட்டின் ஆன்மா காப்பாற்றப்படுமானால், மரணத்தைக் காட்டிலும் நான் விரும்புவது வேறொன்றுமில்லை என்று கூறிய அந்த மனிதாபிமானி கிங் மறைந்தார்! சாகாப் புகழ் எய்திவிட்ட அந்தச் சரித்திர வீரனுக்கு இனமான
எழுச்சி இயக்கத் தலைவனுக்கு -நாம் தலை வணங்குவோமாக! ஏன் தெரியுமா? உலகிலே இனமான விடுதலை எழுச்சிக்காக போராடிடும், இன இயக்கம் இரண்டு உள அதற்காக! ஒன்று, தமிழகத்திலே உள்ள திராவிடர் இன இயக்க எழுச்சி, அதாவது, டிரவிடியன் மூவ்மெண்ட். மற்றொன்று அமெரிக்காவிலே இயங்கும் மார்டின் லூதர் கிங்கின் கறுப்பர் இன இயக்கம்! அதாவது, நீக்ரோ மூவ்மெண்ட். மக்கள் உரிமைக்காக, உலக அமைதிக்காகப் போராடிய அந்த மாவீரனை அளித்த நீக்ரோ இனத்தை - வாழ்த்துவோமாக!
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு"(குறள்)
-என்ற, அய்யன் திருவள்ளுவர் பெருமான் வாழ்க்கைப் புகழ் தத்துவ இலக்கண மாண்பை அருமையோடு பின்பற்றிப் பெருமையோடு வாழ்வோமாக!