உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யன் திருவள்ளுவர்/விடுதலைக் குயில்

விக்கிமூலம் இலிருந்து




விடுதலைக் குயில் பாரதியார்

ங்கு கரை இல்லாமல் கரை புரண்டு ஓடிவரும் மங்காத தமிழுணர்வில், மக்களின் அணுவெல்லாம் தேனினிக்கச்செய்யும் தொண்டு - தெய்வத் திருத் தொண்டு!

கூனிக் குறுகி இருந்தவர் நெஞ்சம் பொதிகையாய் நிமிர்ந்து, வான் படைத்த புகழை வாரி எதிர்காலத்தின் முகத்தில் எறிய வேண்டும்.

விடுதலை உரிமைக்கு வேக்காடு ஏற்பட்ட நேரத்தில், அதைப் பூக்காடாக்கப் புறப்பட்டவர் விடுதலைக் குயில் பாரதியார்!

குன்றிய உயர்வு - கடமையாற்றக் கூசிய நெஞ்சம் - அடிமைத் தனத்தின் காலடியில் வீழ்கின்ற பொருட்கள்!

மங்கியதைத் துவக்கி, துவண்டதை நிறுத்தி, மாறியதைப் புதுப்பித்து, பூரணப் பொலிவோடு தோற்றம் அளிக்கும் பணியில் ஈடுபட்டவர் மா கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்!

தமிழ் படித்த புலமை என்பதாலே - தரித்திரம் அவரைத் தலைகீழாகக் புரட்டி எடுத்ததோ! - என்னவோ!

“காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் - கதவை இழுத்து சாத்தடி' என்பதைப் போல, காசு இல்லாதவன் அறிஞனாக இருந்தாலென்ன? கவிஞனாக இருந்தால் என்ன?

உற்றமும்-சுற்றமும், பாரதியாரைப் பார்த்தவுடனே தங்களது கதவுக்கு இரட்டைத் தாளைப் போட்டன.

வா என்று அவரை வரவேற்கும் கைகள் மிகக் குறைவாகவே இருந்தன.

சமுதாயம், பொருளாதாரத் துறையில் கவிஞனைக் கேவலமாக மதித்த கடை கெட்ட காலம் அது!

பாட்டெழுத ஆரம்பித்தவனை நோட்டம் சொன்னவர்கள் - தமிழ் நாட்டில் ஏராளம் பேர் இருந்தார்கள் - இருக்கிறார்கள்!

அவர்களுக்கு என்ன தெரியும்! - பாரதியாரது எட்டையபுரத்து வாழ்க்கையைப் பற்றி?

அவரது தந்தையார் கணக்கிலே வல்லவர் - வட நாட்டு திலகரின் தந்தையாரைப்போல !

திலகர்கூடக் கணக்கிலே எதிரியைத் திணறடிக்கும் திண்மை பெற்றவர்! பாரதியாருக்குக் கணக்கு என்றாலே எட்டிக்காய்!

அவர் தந்தை, கணக்கென்று வாயெடுத்தாலே போதும். உடனே பாரதியார், தந்தையின் சிந்தனை ஒட்டத்தைச் சிதறடிக்க, கணக்கு, பிணக்கு, மணக்கு, ஆமணக்கு என்பார்!

'ஏன் விழிக்கிறாய்? என்று, கோவைக் கண்ணோடு பாரதியார் தந்தை நெருப்புதறக் கேட்பார்.

உடனே, தாழ்ந்த குரலோடு, "விழி, கழி, சுழி, வழி, குழி, பழி, இழி, பிழி" என்று பாரதியார் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே பேசுவார்!

அவரை அடிப்பதா - அணைப்பதா என்று அவரது தந்தை திணறுவார்' சில வேளைகளில் அவர் போக்கு கண்டும் சிரித்தும் விடுவார்!

கவிதைக்குச் சொல்லடுக்குவது - பாரதியாரது இளமைக் காலப் பைத்தியம்! அறிவின் அலைச்சல்!

இந்த ஞானக் கிறுக்குதான். பிற்காலத்திலே அவரை விடுதலைக் குயில் பாரதியாராக மாற்றியது!

'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று அவர் எழுதிய பாடலுக்கு - அப்போது எவ்வளவு எதிர்ப்பு தெரியுமா?

காதிலே தேன் பாய்ந்தால்,ஈ, எறும்பெல்லாம் உள்ளே புகுந்து மொய்க்காதா? பிறகு அறுவை சிகிச்சைதானே செய்ய வேண்டும்?

ஞான ஆணவங்கள் சில, இப்படியும் இடித்துக் கேட்டன. இதற்கெலாம் பதில் கூற ஆரம்பித்தால்.அவரால் பாட்டெழுத முடியுமா?

பாரதியாரைப் பொறுத்தவரை, எழிலான புதுக் கருத்துக்கள் பூக்கின்ற செடிகளை - அவர், சிந்தனையிலே பாத்திக் கட்டி வளர்த்தவர்.

கவிதை மலர்கள் பூக்கும் பூந்தோட்டமாகத் திகழ்ந்தவர்!

புதுமை என்றால் போதும், பழமையிலே ஊறியவர்கள், பவனியே வந்தார்கள்- அவர் மீது போர் தொடுத்திட!

'எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் நிறை' என்று சமுதாயத்தை - அவர் எடை போட்டார்.

மலைக்குப் பக்கத்தில் மடு இருக்கும்போது, இறைவன் படைப்பில் ஏற்றத் தாழ்வு இயற்கை என்று - அவருக்கு எதிர்ப்பாட்டு பாட ஆரம்பித்தார்கள் - பலர்!

'ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்!' என்று, பாரதியார் குன்றேறி நின்று மீசையை முறுக்கிக் கொண்டே கூவிக் கூவிப் பாடினார்!

கோழையானால் கூடப் பரவாயில்லை, கொடுமையான கொள்கைகளைப் பெற்றிருந்தவரெல்லாம் - நெடுமலை போல நிமிர்ந்து அவரை எதிர்க்க ஆரம்பித்தார்கள்!

புதிய காற்றை மூக்கிலே இழுக்கின்ற மனிதா-

புதிய உணவைச் சுவைக்கின்ற மனிதா-

புதிய நாதத்தைக் கேட்க விரும்புகின்ற மனிதா -

புதிய உடைகளை உடுத்தி அழகு பார்க்கின்ற மனிதா

புது வாழ்வைத் தேட கால் கடுக்க ஓடுகின்ற மனிதா -

ஒரு புதிய கருத்தை - ஒரு புதிய திருப்பத்தை -

ஒரு புதிய உலகத்தை ஏற்றுக் கொள்ள - ஏனடா

மறுக்கின்றாய்? கேட்டார் பாரதியார் தனிமனிதனை-தமிழ்ச் சமுதாயத்தை!

எவரும் பதில் கூறாமல் நாணத் தீயால் சூடுபட்ட

ஊமையாக - ஆமையாக - நத்தையாக -

நகர்ந்து கொண்டே இருந்தார்கள்!

பழமையில் மனிதனுக்கு இனிமையென்றால், இறந்த காலத்தில் ஐக்கியமாகிவிட்ட ஒரு பிணத்தை - நாறுவதற்கு முன்னாலே ஏன் தூக்கிக் கொண்டு ஒடுகிறான் அவன்?

பழமை மீது உனக்குத் தணியாத காதல் இருப்பதில் தவறில்லை. ஆனால், உன் வீட்டைப் புதுப்பிக்கின்றாயே - ஏன்?

வீட்டைப் புதுப்பிக்க மனம் உடைய மனிதனே!

நாட்டைப் புதுப்பிக்க மறுப்பது நியாயமோ!

புதுமைக் கண் கண்டு அந்த நாட்டின் இலக்கியத்தை நோக்கல் புன்மையோ?-கேட்டார் பாரதியார் தலைப் பாகையை வரிந்து கட்டிக் கொண்டே!கேளாக் காதினராயினர் கேலி பேசியோர்!

தமிழ் இலக்கிய உலகில் "பாஞ்சாலி சபதம்" போன்ற புதிய முயற்சியில் ஈடுபட்ட அவரை, அன்றைய தினம் ஊக்குவிக்கத் தமிழகம் தவறி விட்டது.

தமிழனே - தமிழ்ச் சிந்தனைக்கு பகையானான். பிள்ளையே - தாய்க்குப் பகையானது! தனயனே அலட்சியக் குழி வெட்டினான் தனது தந்தைக்கு:

வானத்தில் எரியும் நெருப்புபோல - சுடர்வீசி நிற்கும் நாட்டுணர்வுக்கு, காற்றிலே கலந்த மோன கீதமாய், தூபமாய் - அமைந்தது பாரதியாருடைய தேசிய பாடல்கள் என்ற விடுதலை கீதங்கள்!

அடக்கு முறையால் அவரை அடக்கிட நினைத்தவர்கள் - சாக்காடு போகும்மட்டும் எதிர்க் கரம் தூக்கினார்கள். அதனால், தனது விடுதலை உழைப்புக்குத் தோழமை கிடைக்காதா என்று அவர் ஏங்கினார்!

விடுதலை வேட்கை மூலம் பைந்தமிழ்த் தேரை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு - பாரதியாருக்கு ஏற்பட்டது.

அன்று அலர்ந்த அழகுத் தமிழில் - தீவிர நாட்டுப் பற்றெனும் தமிழ்த்தேனை உண்ணும் வண்டானார் பாரதியார்!

அடிமை மடிமை என்ற ஊஞ்சலில் துயில் கொண்ட தேச பக்தர்களுக்கு- அவர், விழிப்புணர்ச்சியை ஊட்டிடும் விடுதலை முரசமானார்!

கற்பனைக் காட்டாற்றில் சொற்பயனை மிதக்கவிட்டு, சாதியைக் கழுத்தறுத்து, நீதியை நிலை நாட்டினார் பாரதி:

அவர் உள்ளுணர்ச்சியை ஊதியணைக்கப் புறப்பட்ட புயல் வெள்ளையன் சட்டத்திலேயிருந்து பிறந்தது!

கவிதையால் அறப்போர் ஆற்றத் தொடங்கிய அவரை - அடக்கு முறையெனும் மறப்போரால் வென்றிட முயன்றது ஆங்கில ஆட்சி!

ஆனாலும், அவரது பாட்டெழுதும் உணர்வு ஒட்டம் மட்டும் நின்றபாடில்லை, தளர்ந்த பாடில்லை. பாரதியார் நாடி ஏற்றுக் கொண்ட கொள்கை, குறிக்கொள், மக்கள் நெஞ்சமெனும் வெற்றித் திருநகரில் காலடி வைக்கின்ற வரையில், அவர் சொத்தையாக - சோடையாக - சோரம் போனவராக - சோர்வுடையவராக மாறாமலே பாடிப்பாடி போராடினார்!

அதனாலே, அவரது பாட்டுக்கள், மென்மேலும் நெய் பெய்யப்பட்ட நெருப்புப்போல - உணர்வுத் தீயை ஊர் ஊராகக் கொளுத்தின - பரப்பின!

அவரது கீதங்கள் - சிலருக்கு வழிகாட்டிகளாக அமைந்தன! தேச பக்த நல்வழியிலே தேக்கமற்று நடந்தார்கள் - மக்கள்!

பாரதியார் பாடல்கள், சிலருக்குச் செவியைக் கொடுத்தன. அவர்கள் - உணர்ச்சியைக் கேட்க ஆரம்பித்தார்கள்!

சிலருக்கு நாவைக் கொடுத்தன. அவர்கள்- தமிழ்ச்சுவையை வீரமாகச் சுவைக்க ஆரம்பித்தனர்.

சில கவிதைகள் - சிலருக்குப் புதிய பிறப்பையே தந்தன. அவர்கள் தங்களது பழைய பிறவியினையே மறந்தார்கள்!

ஆங்கில வேட்டாட்சிக் காட்டுத் தர்பார்

காலூன்றி இருந்த இந்தியாவை, விடுதலைக்கு

இலக்காக்க, அவர் மட்டுமல்ல, பாரதியின்

உயிர்த் தோழர்களான வ.உ.சிதம்பரம் பிள்ளை,

சுப்பிரமணிய சிவா, திரு.வி.க. மற்றும் பலரும் -

பால கங்காதரத் திலகர் பாதையிலே நடந்தார்கள்.

கப்பலோட்டிய - வெள்ளையனை எதிர்த்தார் வ.உ.சி.!

வெஞ்சிறை ஏகியே, கப்பிரமணிய சிவா -

தொழு நோயாளராக மாறினார்.

பாரதியார் கவிதைகளோ - தேசிய மறவர்களுக்குப்

படைக்கலன்களாகவே மாறின !

பாரதியார் எழுத்துக்கள், பாடல்கள் - தமிழ்நாடு முழுவதும் விடுதலை உணர்வுகளுக்குரிய வெடிகுண்டுகளாக உரு வெடுத்தன!

அவருடைய உணர்ச்சிகள் - எதேச்சாதிகாரத்திற்கு அடங்காத அடங்காப் பிடாரிகளாக ஆவேச நடைபயின்றன. ஆறு உடைபட்ட வெள்ளமாக உருண்டோடின!

பாரதியாரின் சந்தக் கவிதைகள்-விந்தையானவை, மலடாக இருக்கின்ற மான உணர்ச்சியைக் கூட - அவை சூலாக்கிவிட்டன!

வ.உ.சியின் தேசிய உணர்ச்சி, சிவாவின் உயிர் மூச்சு எழுச்சி - பாரதியாரின் தமிழ் - மூன்றும் முப்பெரும் படைகளாக விளங்கி, நாடெங்கும் விடுதலைக் களத்திற்கு வீரர்களைத் திரட்டின.

உண்டு உறங்கிச்சாவதற்காக பிறக்காத மனிதன்-பின் எதற் காகப் பிறந்தான்? இவ் வினா ஒவ்வொருவரின் நெஞ்சையும் உலுக்கிக் குலுக்கியது.

இலட்சியத்தின் அடிப்படையில் - கொள்கை வழியில் நடக்க வேண்டிய மனிதன் - இயற்கையால் நிர்ப்பந்திக்கப் படுகிறான்.

அவனது உரிமைகள் - அவனுடைய பரம்பரைச் சொத்துக்கள் - மனித வாழ்க்கைக் குரிய சான்றேடுகள்!

உயிரின் மீது கையை வைக்கின்ற மரணம், உரிமையின் மீது கை வைக்கப் பயப்படுகின்றதே - ஏன்?

எங்கோ இருந்து ஆட்டுத் தோலுக்கு இடம் கேட்டு வந்த வெள்ளை வியாபாரிகள் - இங்குள்ள தமிழர்களை - இந்திய சோதரரர்களை - வீணர்களாக -விலங்குகளாக-நடத்துவதை எனது ஊனக் கண்ணால் பார்க்கின்றேன். ஆனால், எனது கண் அதைக் கண்டு வாளாவிருக்குமோ?

அவன் வணங்கும் மதக் கோட்பாட்டிற்கே, அவன் செயல்கள் ஒவ்வாததென்றால், என் இனக் கோட்பாடுகள் ஏங்குமோ அவற்றை?

எழுச்சியோடு எப்போதும் இணங்கி இருக்கும் ஒரு மனசாட்சி, ஒரு சர்வாதிகாரத்தைத் தாங்குமோ?

-என்று, கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டவர் பாரதியார்! அந்தச் சிந்தைகளிலே மிதந்து மிதந்து நொந்து களைத்துப்போனார்.

இவ்வினாக்கள் என்ற படைக்கலன்களால், உருவாக்கப்பட்ட அவரது கவிதைகள் வேகம் , வெள்ளையனைச் சற்று திரும்பிப் பார்க்க வைத்தது.

'கொக்கு பறக்குதடி பாப்பா' என்று பாடி விடுதலை உணர்ச்சியை நாடக அரங்கிலே உருவாக்கிய எஸ்.எஸ் விசுவநாதாசுக்குப் போட்டியாக, பாரதியார் கவிதைகள் மனோ வேகத்தை மக்களிடையே பீறிட்டெழச் செய்தன.

'சிறைச்சாலை என்ன செய்யும் - தேசாபிமானிகளை? என்று வினா தொடுத்துப் பாடிய எஸ். ஜி. கிட்டப்பா, கே.பி. கந்தராம்பாள் தேசிய உணர்ச்சிகளைவிட, வந்தே மாதரம் என்போம் என்ற பாரதியாரின் தமிழாக்கப் பாடல் - ஒரு தேசிய புரட்சிக்கே வித்திட்டது.

வெள்ளையனிடத்திலே இருந்த முப்படைகளின் சக்தியை விட, பாரதியார் கவிதைப் படைகளின் பலம் மிருகத்தனமான தேசாவேசமாக உருவெடுத்து, காட்டாற்று வெள்ளம் போல மக்களிடையே பெருக்கெடுத்தது.

பாரதியார் விடுதலை உணர்வு, ஆங்கில ஆட்சிக்குப் பயங்கரக் கூற்றாக மாறுவதைக் கண்ட வெள்ளையன், நாடு கடத்தினான் - பாரதியாரை !

ஓரிடத்திலே இருந்து வேறோர் இடத்திற்கு உடலை மாற்றச் சட்டத்தால் முடியும் ! ஆனால் - உணர்வை?

இலட்சிய உணர்வு, எந்தக் குறிக்கோளை நோக்கி பாய விரும்புகின்றதோ - அங்கேயே அது மொய்த்துக் கிடக்கும் என்பதை உணர மறந்தான் ஆங்கிலேயன்!

பாரதியாரது உணர்வுகள் - நாள்தோறும் விடுதலை பிரச்னைகளோடே விளையாடிக் கொண்டிருந்தன.

அடிமைப்பட்ட நம் மக்களுக்காக அவர் கொடுத்த அரிய செல்வங்கள், அவருடைய உழைப்பு, கடமை, நெஞ்சுரம், நேர்மையான லட்சியம், தன்னலமற்ற தேச பக்தி என்ற உணர்ச்சிகளேயாகும்.

“பாருக்குள்ளே நல்ல நாடு-இந்த பாரத நாடு" என்று, அவர் மீசையை முறுக்கிக் கொண்டு மறவனைப் போலப் பாடியபோது, கோழைகளும், ஏழைகளும் கொடி ஏந்தி ஓடோடி வந்தனர் - 'வந்தேமாதரம்' என்று!

பெருநெருப்புச் சுடரலைகளைக் கண்டு பயப்படும் மக்களைப் போல, பாரதியார் பாடிய கவிதைச் சிறு வரிகளைக் கண்டு கொதித்தான். கொந்தளித்தான் - வெள்ளையன்.

போராட்டங்களை ஒழித்து விடலாம்! - அறப்போர் மறியல் செய்வோரைத் தடுத்து விடலாம்:

ஆனால், உணர்ச்சியின் பிடரியைப் பிடித்துக் குலுக்கிக் கொப்பளித்து எழுதும் கவிஞனுடைய கவிதை வேகத்தை, சீற்றத்தை, புரட்சியை - யாரால் தடுக்க முடியும்?

காந்தியடிகளை மதித்தவர் பாரதி!"வாழ்க நீ எம்மான்" என்று பாராட்டும், வாழ்த்தும் கலந்து அவரைப் பாடிக் களித்தவர்.

அதே காந்தி, விதவை, மறுமண வாழ்வுக்கு மாறுபட்ட கருத்துடையவராக இருந்தபோது, கொந்தளித்து எழுந்த அதே பாரதி, "ஸ்ரீமான் காந்தி பிதற்றலுக்கு என்ன அர்த்தம்?” என்று ஆவேசமாகக் கேட்டார்:

சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்கு எதிரி போல காந்தி இருந்தாலும் தணல்பட்ட கந்தகம் போல் காய்ந்து பொறிந்து வெடித்தவர் பாரதியார்.

இத்தகைய மக்கள் கவிஞன் சில வேளைகளில் குயிலாகவும் பாடிக் கொண்டிருந்தார்:

சிலநேரங்களில் கந்தகக் கவிஞனாகவும் திகழ்ந்தார்; அவரது நாக்கும், வாக்கும் இரண்டுமே சமுதாய விடுதலை உண்மைக்காக, நன்மைக்காகவே உழைத்தன !

குயிலை வைத்துக் கொண்டு - அதன் இசையைக் கேட்பதைப் போல - தனக்கு எதிரியாக இருக்கும் கவிஞனை வைத்துக் கொண்டு - அவனது பாட்டைக் கேட்க முடியாது.

எங்கோ இருந்து காற்றிலே மிதந்து வருகின்ற இசை, நச்சுக் கருத்துகளை ஏந்தி வருமானால் - அதனைத் தடை செய்வது முடியாத செயல் அல்லவா?

எனவே, தேச பக்தி நாட்டுப் பாடல்களைப் பாடிடும் பாரதியைச் சட்டத்தால் ஓட ஓட விரட்டினான் வெள்ளையன். ஓடினார்! ஒடினார்! பாரதி ஒடியபடியே இருந்தார் - புதுவையை நோக்கி:

ஆங்கிலேயனை மீறி, விடுதலைப் பாதையில் ஏறுபோல நடக்கவே - பாரதியார், பிரெஞ்சு நாட்டின் அதிகாரத்திலுள்ள புதுவையை நோக்கி - புது வேகத்தோடு நடந்தார்:

அங்கே, வ.வெ.சு. ஐயர், அரவிந்தர், கனக சுப்புரத்தினம் என்ற பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோர் தொடர்பும் பாரதியாருக்கு ஏற்பட்டது.

புதுவைக்கு வந்த பின்பு - புது வாழ்வா அவர் பெற்றார்? புதுப்புது திருப்பங்களைத் தமிழுக்கு உருவாக்கப் புதிய புதிய சிந்தனைகளெனும் தேரேறி உலா வந்தார்:

பாரதியார் கவிதா மண்டலத்தை அவர் புதிதாக உருவாக்கினார்! கனக கப்புரத்தினம் என்ற பாரதிதாசனை தனது வாரிசாகப் பிரகடனப் படுத்தினார்.

தனக்குப் பிறகு - தமிழுக்குப் புதிய மொழியுணர்வு என்ற ரத்த ஒட்டத்தைப் பாய்ச்சினார்! பாரதியார் கவிதா மண்டலத்தை 'கதேசமித்திரன் என்ற நாளேட்டிலே உருவாக்கினார்.

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்காக
'கலம்பகத்தில்' - புதிய முயற்சி - '
'இரட்டை மணி' மாலையில் - புதுப்பாங்கு
அந்தாதியில் - ஒரு புது திருப்பம் - 'பஃறொடையில்' - ஒரு புதுமெருகு!
உரைநடைக் கவிதை என்ற புதிய ஓர் உத்தி -

'பாஞ்சாலி சபதம்' என்ற புதுக் கருத்தைச் சுமந்து வந்த பழைய கருத்து - இவ்வாறெல்லாம் - சிந்தனைச் சிகரமேறி, கவிதைச் சீமானாக பன்முக வித்தகத்தோடு - அவர் தமிழ்த் தொண்டாற்றினார்.

எழுத்தில் - அரிமா குரலை எதிரொலித்து, "நெற்றி சுருக்கிடேல், நினைப்பதை முடி, நன்று கருது குன்றென நிமிர்ந்து நில்,” என்ற புதிய 'ஆத்தி சூடி'யை இளைஞருக்கு ஈந்து மறு ஒளவையாரானார்!

'முனையில் முகத்து நில்' என்று முழங்கி, முளைத்த வெள்ளைப் பகையைக் குலைத்து அழிக்க, விடுதலை அறம் பாடிய மறவராக விளங்கினார் - பாரதியார்!

புதுவை நகர் புகுந்தும், அவரது விடுதலை வேட்கை காய்ந்து புல்லாகவில்லை! உதிர்ந்த சருகாகவில்லை? பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து - அங்கேயும் நெருப்பை கக்கினார் - பாடலாக - போர் முரசாக!

வெள்ளையனுடைய வேகம், அதற்குப் பிறகு சற்றுத் தனிந்தது - பாரதியார் மீண்டும் சென்னை வந்தார்!

'சுதேசமித்திரன்' நாளேட்டில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்! எழுத்துலகில் கதிரவனாக நடமாடினார்! மக்களுக்குள்ள பொறுப்பைத் தூண்டி - ஏகாதிபத்தியத்தைக் காய்ந்தார்!

விடுதலை வானத்தில் அடிமைத் தளையை அறுத்தெறியக் கவிதை பாடிப் பறந்த விடுதலைக் குயிலை, திருவல்லிக்கேணி கோயில் வேழம் ஒன்று தூக்கிப் போட்டது!1921-ஆம் ஆண்டு - அவர் காலத்தோடு கலந்தார்!

வீரனின் வாள்போல வளைந்த மீசையும்,

ஒளி படைத்த கண்ணும், உணர்ச்சி கொண்ட நெஞ்சமும், நிமிர்ந்த உடலும், குனியாத கொள்கையும் கொண்ட சுப்பிரமணிய பாரதியார், காலமெல்லாம் வறுமையோடு போராடி, சகாப் புகழ்பெற்று, தமிழ்ச்சரித்திர நிகழ்ச்சிகளில் ஒரு வீர காவியத்தின் பொன்னேடாகப் புகழ் பூத்துப் பொலிந்து விட்டார்.

வாழ்க பாரதியார் தேசிய உணர்வுகள்
வளர்க அவரது தமிழ் உணர்ச்சிகள்!