உள்ளடக்கத்துக்குச் செல்

அரசாண்ட ஆண்டி/ரிஷ்லு2

விக்கிமூலம் இலிருந்து

ரிஷ்லு, மன்னனுக்கு இந்த ஏற்பாடு செய்துதரக் கூடியவன் என்ற எண்ணம் பலமாக ஊரில் பரவி இருந்ததால், கதைகள் பல, அவன் காலத்திலும், பிற்காலத்திலும் கட்டிவிடப்பட்டன. நடிகை ஒருவளைச் சீமாட்டி வேடமிட்டு மன்னனைச் சொக்கச் செய்யும் ஏற்பாடு செய்தான் ரிஷ்லு, என்ற கதை போல், பலப் பல. இதனினும் மோசமான கதைகள் கட்டி விடப்பட்டன-மக்கள் அவைகளை விரும்பிக் கேட்டனர், சந்தேகமின்றி ஏற்றுக்கொண்டனர். டூமாஸ், ஹ்யூகோ எனும் கதாசிரியர்கள், ரிஷ்லுவைக் குறித்தும் அவன் கால நிகழ்ச்சிகளைப் பின்னியும் வகை வகையான கதைகள் தீட்டினர், அவைகளை வரலாற்றுச் சம்பவங்களுக்கு ஒப்ப மதிப்பளித்து மக்கள் வரவேற்றனர். ரிஷ்லுமீது மக்களின் வெறுப்புணர்ச்சி ஏறியவண்ணம் இருந்தது.

மேரியை ரிஷ்லு அடியோடு மறந்தே விட்டான்--அலட்சியப்படுத்தினான். அவள் சகாப்தம் முடிந்து விட்டது என்று தீர்மானித்தான். மன்னன், தன் சொற்கேட்டு ஆடும்போது, மேரியின் ஆதரவு ஏன்! மேரியோ, மன்னனைப் போல, ஒதுங்கி இருப்பவளல்ல, அதிகாரத்தில் ஆவல் உள்ளவள், எனவே அவளை அருகே இருக்க விடலாகாது!

பிரபுக்கள் பீதிகொண்டு ஒதுங்கிக் கொண்டனர்; மேரி விரட்டப்பட்டு விட்டாள்; மன்னனின் இளவல் தலையில் தட்டி உட்கார வைக்கப்பட்டான்; ஆன் காதலறியாது கண்ணீர் பொழிந்தபடி கிடந்தாள்!

அரச குடும்பத்தை இந்த நிலையில் வைத்துவிட்டு, ரிஷ்லு, தன் ஆதிக்கத்தை உச்சநிலைக்குக் கொண்டு சேர்த்தான்.

கத்தோலிக்கர்கள், ரிஷ்லுவின் உயர்வு கேட்டு, மகிழ்ந்தனர். இனிப் பிரான்சில் ஐரோப்பா முழுவதும் கத்தோலிக்க மார்க்கம் நல்ல நிலைமை பெறும் என்று நம்பினர். பேரவையில் ரிஷ்லு இடம் பெற்றதே கத்தோலிக்கரின் ஆதரவினால்தான். எனவே, ரிஷ்லு தங்கள் மார்க்கத்துக்கு அரண் அமைப்பான் என்று எண்ணினர். மதத்துறை அலுவலர்களே இனி, ஆட்சியிலே தங்களுக்கு ஆதிக்கம் சிறக்கும், செல்வாக்கு வளரும் என்று நம்பினர். ரிஷ்லுவின் மார்க்க ஏடு அவர்களை மகிழ்வடையச் செய்தது, ஆட்சியிலே இடம் கிடைத்து விட்டதால் இனி, ரிஷ்லு அந்த வாய்ப்பைக் கொண்டு, மார்க்கத்தை மேம்பாடடையச் செய்யவும், மதத் துறையினருக்கு, செல்வாக்கு மிகுந்திடச் செய்யவும் பாடுபடுவார் என்று எண்ணினர்.

அவர்களின் எண்ணம் பலிக்க வில்லை. ரிஷ்லு, பொதுவாக மார்க்கத்தை, சிறப்பாக கத்தோலிக்க மார்க்கத்தை மேன்மை அடையச் செய்ய வேண்டும், என்பதை நோக்கமாகக் கொண்டில்லை.ஜோசப் பாதிரியாருக்கு, ரிஷ்லுவுக்குக் கிடைத்த வாய்ப்புத் தரப்பட்டிருந்தால், முடிகிறதோ இல்லையோ, அந்த நோக்குடன் பணியாற்றி இருப்பார். ரிஷ்லு அப்படிப்பட்ட எண்ணம் படைத்தவரல்ல.

மார்க்கத் துறையில் இடம் பெற்று, புகழ் பெற்று, அதன் மூலம் ஆட்சித் துறையிலே ஆதிக்கம் பெற வேண்டும் என்பதுதான் ரிஷ்லுவின் திட்டம். ஒழ்வொரு சம்பவமும், ஆதிக்கம் பெற வழி கோலவேண்டும் என்பது ரிஷ்லுவின்எண்ணம். கலம் ஏறிச் செல்வது கடற் காட்சி காணவா! வேறு பொருள் நாடியோ, வேறு இடம் தேடியோ தானே! அதே போலத்தான், ரிஷ்லுவுக்கு, மார்க்கம் ஒரு கலம்--கருவி!

முதல் பேரவைக் கூட்டத்திலே ரிஷ்லு, மதத்துறையினர் சார்பில் முழக்கமிட்டார். உண்மை! ஆட்சியாளர்கள், மதத்துறையினருக்குத் தக்க இடமளிக்க வேண்டும், அவர்தம் துணையை நாடிப்பெற்று, ஆட்சியைப் புனிதப் படுத்தவேண்டும், என்றெல்லாம் பேசினார். மார்க்கத் துறையினர் மகிழ்ந்தனர், நிமிர்ந்து நடந்தனர்! அப்போது ரிஷ்லு, லூகான் நகர தேவாலய அதிபர்! இப்போது? ஈடு எதிர்ப்பற்ற முதலமைச்சர்!! இந்த வித்தியாசத்தை மற்றவர்கள் உணரவில்லை! ரிஷ்லு இதனை மறக்கவில்லை. ஜெபமாலை தாங்கும் கரம் இப்போது பிரான்சை ஆட்டிப்படைக்கும் கரமாகி விட்டது! ரிஷ்லுவின் கோபம், எவரையும் பிணமாக்கும், நேசம், செல்வத்தை, செல்வாக்கை பொழியச் செய்யும்! அன்று பேரவையிலே பண்டார ரிஷ்லு பேசியதை, இன்று பட்டத்தரசனைப் பதுமையாக்கி, அரசியல் ஆதிக்கம் நடாத்தும் முதலமைச்சர் ரிஷ்லுவுக்குக் கவனப்படுத்துவதா? என்ன மந்தமதி!! அவர்கள் கண்டார்களா, ரிஷ்லுவின் இத்தகைய மனப்போக்கை. அவர்கள் எண்ணிக் கொண்டது, ஒரு சிறந்த கொள்கைக்காக, உத்தம நோக்கத்துக்காக, ஏசுவுக்காக, அரசியல் ஆதிக்கத்தை ரிஷ்லு பயன் படுத்துவார் என்று!

ரிஷ்லு, கொள்கையை முன்னால் வைத்து, கோட்டையைப் பிடிக்க வில்லை. ஒரு முதலமைச்சரின் கொள்க 'காவி கமண்டலங்களைக்' கொலு மண்டபத்துக்குக் கொண்டுவந்து, பாதபூஜை செய்வதாகவா இருக்க முடியும்! மற்ற அமைச்சர்கள், கைகட்டி வாய்பொத்தி நிற்க, அதிகாரிகள் குற்றேவல் புரிய, நீதிமன்றங்கள் குறிப்பறிந்து தீர்ப்பளிக்க, படை வீரர்கள் பகைவர் மீது பாய, ஆட்சிபுரிவது! ஏன் இந்தப் பூஜாரிகளுக்கு இது புரியவில்லை என்று எண்ணினான் ரிஷ்லு--அவர்களின் கோபத்தை ஒரு பொருட்டாகவும் மதிக்க வில்லை.

அவர்களிள் கோபத்தை மட்டுமா அவர்களின் ‘கண் கண்ட தெய்வம்' போப்பாண்டவரின் கோபத்தையே பொருட்படுத்தவில்லை.

வெளிநாட்டு நடவடிக்கை ஒன்றின்போது, போப் விரும்பாத காரியத்தை ரிஷ்லு துணிந்து செய்தார். அவருடைய செல்வாக்கு நிரம்பிய இடத்தைப் படை கொண்டு தாக்கி, அவர் வசமிருந்த இடத்தை விடுவித்தார்! அந்தப்படையும், பிரான்சு நாட்டுடையது அல்ல, பிராடெஸ்ட்டென்டுக்காரருடையது! அந்தப் படையை ஏவியதுடன், அதற்குப் பண உதவிசெய்து, போர்மூட்டி வெற்றியும் கண்டார்- போப் வெகுண்டார், நமது ஆசியைக் கோரி நின்றவன் செயலா இது என்று பதைத்தார். கார்டினல் ரிஷ்லுவா இப்படிக் கத்தோலிக்க உலகத்தின் தலைவரைத் துச்சமாக எண்ணி எதிர்ப்பது என்று கேட்டார். ரிஷ்லு, கார்டினல் என்ற முறையில் போப்பாண்டவருக்கு அடக்கம். ஆனால், முதலமைச்சர் என்ற நிலையில் போப்பாண்டவர் குறுக்கிட்டாலும், அரசுக்காக, பிரான்சுக்காக, கடமையைச் செய்தாக வேண்டும், என்று பதிலளித்தார் ரிஷ்லு.

கத்தோலிக்கர்களைக் கசப்படையச்செய்ததால், பிராடெஸ்ட்டென்டுகளிடம் கண்ணியமாக நடந்து கொண்டார் போலும் என்று எண்ணிடத் தோன்றும். அப்படி ஒன்றுமில்லை. அவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல.

ஹ்யூஜீநாட் என்றழைக்கப்படும், பிராடெஸ்ட்டென்ட் மக்கள், பிரான்சில் ஒரு பகுதியில், மிக்க செல்வாக்குடன் வாழ்ந்து வந்தனர். அரசுக்குள் அரசுபோல், அவர்கள் தனிக் கோட்டைகள், தனிப் படைகள், தனி நகரஆட்சிகள் அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். ஒப்புக்கு, பிரான்சு மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர்.

இந்த நிலைமையை ரிஷ்லு எதிர்த்தார், பிராடெஸ்ட்டென்டுகளின் கோட்டை ஊரான லாரோகேல் என்னும் இடத்தை முற்றுகையிட்டுத் தாக்கி, சின்னபின்னமாக்கினார். அந்தப் போரின் போது கார்டினல் ரிஷ்லு இரத்த வெறிகொண்டலையும் ராணுவத் தலைவனாகக் காட்சி தந்தது கண்டு இவரா, அறநூற்களைப் படித்தவர், ஐயன் அடியாராக இருந்தவர், என்று எவரும் கேட்டிருப்பர்.

லாரோகேல் கோட்டை முற்றுகையின் போது, ஆங்கில அரசு பிராடெஸ்ட்டென்டுகளுக்குத் துணை புரிவதாக வாக்களித்தது--ஓரளவு உதவிபுரிந்தது--உதவிக்கு வந்த கப்பற்படையை ரிஷ்லு முறியடித்து, லாரோகேல் கோட்டையை வளைத்துக் கொண்டான். சொல்லொணாக் கஷ்டப்பட்டனர் பிராடெஸ்ட்டென்டுகள். பட்டினி ரிஷ்லுவின் படையைவிடக் கொடுமை விளைவித்தது. புல் பூண்டுகளும் கிடைக்கவில்லை, செருப்புத் தோலைக்கூட வேகவைத்துத்தின்றார்களாம்--அந்த வீரமக்கள் எலும்புந்தோலுமாயினர்--நோய் சூறையாடிற்று--முதியவர்கள் மாண்டனர், குழந்தைகள் இறந்தன, கொடுமையின் அளவு சொல்லுந்தரத்ததன்று. பணிவதன்றி வேறு வழி இல்லை, பணிந்தனர்--ரிஷ்லு; வெற்றிப்பவனி நடத்தினான் வீழ்ந்து பட்ட மக்களின் கோட்டை ஊரில்! கோட்டை இடித்துத் தள்ளப்பட்டது, கொடி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. உரிமை பறிக்கப்பட்டது-மார்க்கம் எப்படியோ இருக்கட்டும், தொழுகை உமது இஷ்டம்போல் செய்து கொள்ளுங்கள். ஆனால், படை, கொடி, கோட்டை என்று கனவிலும் எண்ணாதீர் என்று உத்தரவிட்டான் ரிஷ்லு. லாரோகேல் கோட்டையைப் பிடிக்க நடத்தப்பட்ட போரின் போது, ரிஷ்லுவின் இதயம், எவ்வளவு கொடுமைகளையும் துணிவுடன் கக்கக் கூடியது என்பது வெளிப்பட்டது.

கத்தோலிக்கரைக் கைகழுவிவிட்ட போதும் சரி, பிராடெஸ்ட்டென்டுகளைப் பதறப்பதற அடித்தழித்தபோதும் சரி, ரிஷ்லுவின் எண்ணம், மார்க்கக்கொள்கையின்பாற்பட்டதல்ல, ஆதிக்கம் ஒன்றுதான் குறிக்கோள். ரிஷ்லுவின் மொழியில் கூறுவதானால், எல்லா நடவடிக்கையும் அரசுக்காக! பிரான்சுக்காக!!

பொன் வேலைப்பாடுள்ள மங்கல நிற உடை, மார்பிலே நீல நிறக் கவசம், தலையிலே தொப்பி, தொப்பியில் பறவை இறகு, அலங்காரத்துக்கு; இடையே உடைவாள், கையிலே பிரம்பு--இது ரிஷ்லு, லாரோகேல் கோட்டைப் போரின் போது. கார்டினல் உடை, களத்துக்கு ஆகாது என்று கலைத்துவிட்டு, போர் வீரர்கள் மத்தியில், போர் வீரன் போலவே உலவினான். கார்டினல், கர்த்தரிடம் ஜெபம் செய்து அருள் பெற்று வெற்றியை நாடவில்லை--அது நடவாது என்பது ரிஷ்லுவுக்குத் தெரியும். களம் சென்று, இப்படித் தாக்குக, இப்புறம் பாய்க! என்று ராணுவ முறை கூறி வந்தான். வாலிபவயதில் ராணுவக் கல்லூரியில் கற்ற பாடங்களைப் பயன்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

லாரோகேல் போரிலே பெருமிதமான வெற்றி கிடைத்ததற்குக் காரணம், ரிஷ்லுவின் திட்டம் மட்டுமல்ல, பிரான்சுப் படையினர் காட்டிய வீரமும் ஒரு முக்கிய காரணம்; அந்த வீராவேசத்துக் காரணம், மன்னன் ஊட்டிய உற்சாகம். மன்னனுக்கு இந்தப் போரிலே உற்சாகம் அதிகமாக இருந்ததற்குக் காரணம், லாரோகேல் கோட்டையினருக்குத் துணை புரிய வந்த ஆங்கிலக் கப்பற்படைக்குத் தலைமை தாங்கி, பக்கிங்காம் பிரபு வந்தது! அதற்குக் காரணம், ஒரு அரண்மனைச் சம்பவம்!

ஒயில்மிக்கவன், பக்கிங்காம் பிரபு! ஆங்கிலநாட்டுச் சீமான், அரசனுடைய ஆதரவு நிரம்பப் பெற்றவன். அழகு கண்டால், ரசிகனாகிவிடுவான்--ரசிகனானதும், ரசாபாசம் நேரிடும்! களியாட்டத்தில் விருப்பமுடையவன். கண்டதும் காதல் கொள்பவன் மட்டுமல்ல, எந்தக் கட்டழகியும், தன்கண் தொட்டால் பணிந்துவிடுவாள் என்பதிலே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். அலங்காரமான உடை, ஆளை மயக்கும் பேச்சு, அளவற்ற துணிச்சல்.

லூயி மன்னனுடைய உடன் பிறந்தாள், ஹெனிரிட்டா, இங்கிலாந்து மன்னன் சார்லசுக்கு மனைவியானாள்.

ஹெனிரிட்டாவை, இங்கிலாந்து அழைத்துச் செல்லும் உயர்தனிக் கௌரவம், பக்கிங்காம் பிரபுவுக்குத் தரப்பட்டிருந்தது. பாரிஸ் வந்தான், அரண்மனையில் தங்கினான், மாடப்புறாவைக் கண்டான், மையல் கொண்டான். நிராகரிக்கப்பட்ட அழகி, நிம்மதியற்ற நங்கை, ஆன், அவன் கண்ணில் தட்டுப்பட்டுவிட்டாள்! போதாதா!! மன்னனோ அவளிடம் முகங்கொடுத்துப் பேசுவதில்லை, மங்கையோ வாடா மல்லிகை என மணம் வீச இருக்கிறாள். ஆரத்தழுவும் உரிமை கொண்டோன் அலட்சியப் படுத்திவிட்டான், ஆரணங்கு படரும் கொழுகொம்பற்ற கொடியெனத் துவள்கிறாள். கண்களிலே ஏக்கம் இருப்பதும், கவர்ச்சியை அதிகப்படுத்துவ தாகவே இருக்கிறது. பக்கிங்காம், தீர்மானித்து விட்டான், ஆன் அரசியை இன்பபுரி அழைத்துச் செல்வது என்று.


பச்சை மயில் பாங்குடன் உலவுகிறது--பார்த்து ரசிக்கும், நிலையிலும் மன்னன் இல்லை! வலைவீசத்துணிந்து விட்டான், பக்கிங்காம்.

தனியே ஒரு நாள், ஆன், அரண்மனைத் தோட்டத்திலே உலவிக்கொண்டிருந்தாள்--உல்லாச புருஷன் அங்கு சென்றான்--காதலைப் பொழிந்தான் பார்வையால், திடுக்கிட்ட மங்கையை நெருங்கினான், கரம்பற்றினான், இன்ப அணைப்பு; அவளுக்கு இதயத் துடிப்பு, எதிர்பாராச் சம்பவம், எனவே இளமங்கை, அலறிவிட்டாள்--தன்னை விடுவித்துக் கொண்டபடி. ஆன் அலறிய குரல் கேட்டு அணங்குகள் ஓடிவந்தனர்.

“ அரசியாரே! அலறினீர்களா”

"யார்? நானா! அலறினேனா!”

“குரல் கேட்டதே!”

“ஆமாம்--செல்வோம்”

எப்படிச் சொல்வாள் நடந்ததை--சாகசக் கள்ளன் சமயம் சரியில்லை, பழம் நழுவிவிட்டது, என்று எண்ணிச் சென்றான்.

நாட்டுக்கு அரசி! நாயகன் இளைஞன்! அரண்மனைத் தோட்டம்! அயல் நாட்டான்!--என்ன அக்ரமம்--இவ்வளவு துணிவு! என்கதி இதுதானா?- என்று ஆன் எண்ணாமலிருக்க முடியுமா. தனி அறைக்குள். மன அதிர்ச்சி குறையுமா! பயம்--பயத்தின் ஊடே கோபம்--இந்த இரு உணர்ச்சிகள் மட்டுந்தானா, இவைகளை விரட்டிய வண்ணம், ஆவல்!

எவ்வளவு துணிவு! என்ன அக்ரமம்.... என்று குமுறிய நெஞ்சம், மெள்ள மெள்ள, எவ்வளவு ஆவல்! என்னகாதல்!! என்று எண்ணலாயிற்று.

தலைபோகும் காரியமாயிற்றே, என்பது தெரியாதா--தகாத காரியம் என்பதும் தெரியாதா--தெரிந்தும், என் அவன் என்னைக் கரம்பிடித்திழுத்தான்! அவ்வளவு காதல்!! துணிந்து செய்தான்! அணைத்துக் கொண்டானே, என்னை--நான் விடுவித்துக்கொள்ளாதிருந்தால்?..... செச்சே! கெட்டவன், போக்கிரி, எதுவும் செய்வான் அவன். ஆமாம்! காதலால் தாக்கப்பட்டவர்களுக்குத் தான் கண் தெரியா தாமே!... அவன் அணைத்துக் கொண்டபோது என் உள்ளம் எவ்வளவு பதறிற்று--உடல் மட்டும் ஏனோ பதறவில்லை- ஏனோவா?- அவன்தான் ஆரத் தழுவிக்கொண்டானே! ஆன் அரசியின் உள்ளம் எதைத்தான் தள்ளும். கண்ணைத் திறந்தபடி இருந்தாலும் மூடினாலும், தனி அறையில் இருந்தாலும் சேடியருடன் இருந்தாலும், இசை கேட்டுப் பொழுது போக்கினாலும், வானத்தைக் கண்டு மகிழ முயற்சித்தாலும், அவனல்லவா வந்துவிடுகிறான்! ஆரத் தழுவுகிறான்!! ஆருயிரே! என்கிறான். இதுநாள் வரை கேட்டறியாத கீதம், உணர்ந்தறியாத இன்பம்! பொல்லாதவன், நல்ல உள்ளத்தைக் கெடுத்தேவிடுவான் போலிருக்கிறதே--எங்கே அவன் இப்போது--என்ன செய்கிறான்--மறுத்தேன் என்பதால் மருண்டோடி விட்டானா--அதே மலர்த்தோட்டத்திலே உலாவுகிறானா நான் வருவேன் என்றா--பேதை உள்ளம் என்னவெல்லாமோ எண்ணிற்று. அவன் வென்று விட்டான்--அவள் பணிந்துவிட்டாள். உள்ளம் பணிந்து விட்டது. உடனிருந்த தோழி அவள் உள்ளமறிந்து, பக்குவமாகப் பாகுமொழி பேசினாள். பிரபு அழைக்கப்பட்டான்--மஞ்சத்துக்கு! கொஞ்சு மொழி பேசினான்! அவள் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருக்கிறாள்--அவன் கீழே முழங்காற்படியிட்டபடி, மயக்கமொழி பேசுகிறான்! அவன் இருக்கும் இடத்தில் நிலையில் மன்னன் மட்டும் இருந்தால்! மன்னனா! அவனா என் மணாளன்? ரிஷ்லுவின் அடிமைக்கு ஒரு மங்கையின் உள்ளத்துக்கு இன்ப மூட்டும் பண்புமா இருக்கும். என்னைப் பட்டினி போட அல்லவா இந்த அரண்மனையில் சிறைவைத்தான்--இதோ வந்திருக்கிறான் வீரன், விடுதலை கிடைக்கும், விருந்து கிடைக்கும். ஆன் எண்ணாத எண்ணமில்லை.

விருந்து கிடைத்தது பிரபுவுக்கு! என்கிறார்கள்--இல்லை என்றும் கூறுகிறார்கள். பக்கிங்காம்-ஆன் காதலாட்டம் பற்றிய பேச்சு, அரண்மனையில் மட்டுமல்ல கடைவீதிகளிலே, பிரான்சிலே மட்டுமல்ல, உல்லாச உலகெங்கும் கிளம்பிற்று.

அந்தப் பக்கிங்காம், நூறு கப்பல்களுக்குத் தலைவனாக வருகிறான். லாரோகேல் கோட்டையினருக்குத் துணைபுரிய! பிரன்ச்சு மன்னன், அவனுடைய முயற்சியை முறியடிக்க வேண்டுமென்பதிலே அளவற்ற ஆர்வம் கொண்டதிலே ஆச்சரியம் என்ன!

பக்கிங்காம், காதலில் பெற்றிருந்த திறமையின் அளவுக்குப் போரிலே பெற்றிருந்து, லாரோகேல் கோட்டைப்போரில் பிரான்ச்சு மன்னனை முறியடித்திருந்தால்? ஏதேதோ நடை பெற்றிருக்கும். அலங்காரக் கப்பலொன்றிலே, அணங்குகள் ஆடிப் பாட, மகிழ்வோடு அவர் நடுவே ஆன் வீற்றிருக்க, பக்கிங்காம் காதல் பொழியும் கண்களுடன் அவளைக் கண்ட வண்ணம், இங்கிலாந்துக்குப் பயணமே செய்திருக்கக்கூடும். அந்நாள், அரச குடும்பங்களிலும், பிரபு குடும்பங்களிலும், இத்தகைய சுவைக்கு, அளவும், வகையுமா இருந்தது? கணக்கில்லை!!

பிராடஸ்டென்டுகளை எதிர்த்து நடத்தப்படும் போர் இது: புனிதப்போர்!--என்று பேசி, கத்தோலிக்கர் மனதில் கனலை மூட்டிவிட முடிந்தது ரிஷ்லுவால்! கத்தோலிக்கருக்கு நீ செய்த நன்மை என்ன? காட்டிய சலுகை யாது? என்று யாரும் கேட்கவில்லை. அவர்கள் பிராடஸ்டெண்டுகளை அழித்திடப் போரிடுவது ஐயன் அருளுக்குப் பாத்திரமாகும் வழி என்று கருதினர்; சீறிட்டுப் போரிடக்கிளம்பினர்; மடாலயங்கள் போர்ச் செலவுக்குப் பொருளை அள்ளிக் கொடுத்தன; இந்தப் புனிதப் போரிலே ஈடுபடுவோரின் பாவங்கள் துடைக்கப்பட்டுவிடும் என்று போப்பாண்டவரின் ஸ்ரீமுகம் பிறந்தது; ரிஷ்லு, களிப்புடன் களம் புகுந்து காரியத்தைக் கவனிக்கலானார், போர்வீரன் உடையில்!

கத்தோலிக்க மார்க்கப் போதகர், பிராடெஸ்டெண்டு தத்துவத்தைக் கண்டதுண்டமாக்கியவர், ரிஷ்லு, இவர் தொடுக்கும் இந்தப் புனிதப்போர், முதல் கட்டம். இதிலே கிடைக்கும் வெற்றி, வேறு பல வெற்றிகளுக்கு வழி செய்யும், ஐரோப்பாவில், பிராடெஸ்டெண்டு பூண்டே இல்லாது ஒழித்துக் கட்டப் போகிறார் என்று கத்தோலிக்கர் எண்ணிக் கொண்டனர்; ரிஷ்லு இதைக்கண்டு மகிழ்ச்சி கொண்டார்; மந்தமதியினர் அவருடைய உண்மையான நோக்கத்தைக் கண்டுகொள்ளவில்லை; கத்தோலிக்க மார்க்கரட்சகர், என்று அவர்கள் ரிஷ்லுவைக் கொண்டாடினர்; அவருடைய நோக்கம், கத்தோலிக்கரின் செல்வாக்கை வள த்திட பிராடெஸ்டென்டுகளை ஒழித்திட வேண்டும் என்பதல்ல, ஆட்சியைத் தான் முன்னின்று நடத்திச் செல்லும்போது, பிரான்சிலே ஒரு பகுதியினர், அடங்க மறுப்பதா! என்ன துணிவு! இவர்களை ஒழித்துக்கட்டா விட்டால், நம் மதிப்பு என்ன ஆவது!

இது ரிஷ்லுவின் எண்ணம். பதினைந்து திங்கள் முற்றுகை! உள்ளே ஒரு பொருளும் போகமுடியாது! பட்டினி போட்டுச் சாகடிக்கும் முறையிலே போர் இருந்தது! சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டனர்! தன்மானம், நிமிர்ந்து நிற்கச் சொல்லுகிறது. பசியோ, பணிந்து விடு! என்று தூண்டுகிறது! உள்ளே இப்படி அடைபட்டுச் சாவதைவிட. போரிலே, தாக்கி, தாக்குண்டு இறந்துபடுவது எவ்வளவோ மேலாக இருக்குமே என்று எண்ணினர் அந்த மக்கள். பழைய செருப்புத் தோலைக்கூட வேகவைத்துத் தின்றனராம், எலும்புந் தோலுமாகிப்போன நிலையில்! இந்த அவதி பற்றி, லூகான் ஆலய அதிகாரியாக இருந்த ரிஷ்லுவுக்குத் துளியேனும் இரக்கம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை! உள்ளே அல்லல் அதிகமாகி விட்டது, அவதிப்படுகிறார்கள் என்று 'சேதி' கிடைத்ததும், அவருடைய உள்ளம், சரி! பயல்கள் இன்னும் சில நாட்களில் பணிந்து விடுவார்கள்! நாம் மேலும் ஓர் வெற்றி பெறுவோம், நமது புகழொளி பரவும் என்று எண்ணி மகிழ்ந்தது.

ஆஸ்திரிய அரச குடும்பத்தின் செல்வாக்கைக் குலைக்கும் திட்டம் ரிஷ்லுவுக்கு உண்டு. இதற்காகச் சமர் நடத்தினான், வெற்றி கிடைத்தது. சவாய் பரம்பரைக்கும், ரிஷ்லுவின் போக்கினால் கஷ்டம், நஷ்டம். இவைகளின் பயனாக பிரன்ச்சு மக்களுக்கு ஏதேனும் நலன் கிடைத்ததா என்றால், இல்லை; ரிஷ்லுவின் கண்களுக்கு மக்கள் தெரியவுமில்லை.

ரிஷ்லுவின் நிலை உயர உயர, பகையும் வளரத்தான் செய்தது--ஒவ்வொரு பகையையும் பயங்கரமான முறையிலே முறியடித்துவந்தான். ஒற்றர்கள் அவனுக்குக் கண்கள், காதுகள்! எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்ற அச்சம்; எனவே ரிஷ்லு, ஆயுதம் தரித்த காவலாட்களின்றி வெளியே செல்வதில்லை. எந்த மாளிகையிலே பேசப்படும் விஷயமும், ரிஷ்லுவுக்கு எட்டிவிடும். எனவே, முன்னேற்பாடுகள் செய்வது எளிதாகவும் வெற்றிகரமாகவும் முடிந்தது. இவைகளுக்காகப் பெரும் செலவு--அரசாங்கப் பணத்திலிருந்து. அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற மந்திரச் சொல்லைக் கூறியபடி, மட்டற்ற கொடுமைகளைச் செய்துவந்த ரிஷ்லு, அரசனையும் மிஞ்சக்கூடிய செல்வம் சேகரித்துக் கொண்டான், ஏழை கோயிலுக்குப் பூஜாரியாக இருந்து வந்த ரிஷ்லுவிடம் ஏராளமான செல்வம், இணையற்ற மாளிகை, ஆடம்பரமான வண்டி வாகனங்கள், காலாட்படை குதிரைப்படை? பாடகர்கள்! பணியாட்கள்! உறவினர்களுக்கு உயர் பதவி தரக் கூசவில்லை. ஊரார் பார்த்து, இவ்வளவு செல்வம் எப்படிக் கிடைத்தது என்று கேட்பார்களே என்று எண்ணவுமில்லை. பொன் அவன் காலடியிலே வந்து வீழ்ந்தது! நாடோ, ஏழ்மைப் படுகுழியிலேயே இருந்தது.

பாரிஸ் நகரிலேயே நிகரற்ற அழகி என்று புகழப்பட்ட ஹாடிபோர்ட் என்பாளிடமானாலும், அவளிடம் மனத்தாங்கல் கொண்டபோது கிடைத்த பாயேடி என்பவளானாலும், எந்த மங்கையிடமும், மன்னன் பழகியது இந்த முறையிலேதான். ரிஷ்லுவுக்கு இதிலே மிகுந்த திருப்தி. கெண்டை விழிமாதரிடம் மன்னன் மற்றவர்கள் போலப் பழகிவிட்டால், ஆபத்தல்லவா!

மன்னன் சிரித்தால்; உடன் சிரிக்கவேண்டும், சோகமாக இருந்தால் சோகமடையவேண்டும், பேசுவதைக் கேட்டுக்கொள்ளவேண்டும், ஆர்வம் அதிகமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும்--இவ்வளவுதான் மன்னன் தன்னுடன் பழகிய பாவையரிடம் விரும்பியது.

இந்த ஹாடிபோர்ட், பாயேடி, எனும் இருவருமே, ரிஷ்லுவின் போக்கை உணர்ந்தனர்- வெறுத்தனர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே, ரிஷ்லுதான் வெறுப்பை மூட்டி விட்டான் என்று கண்டித்தனர். தங்களிடம் பழகுவதால், தாங்களே மன்னனிடம் மெள்ள மெள்ள உண்மையைச் சொல்லலாம், ஆன் நல்ல நிலைமைக்கு வரஉதவிபுரியலாம் என்று முயன்றனர், முடியவில்லை.

ஹாடிபோர்ட், ஆன் சார்பாக மன்னனிடம் பேசத் தொடங்கியதும், மன்னன் கோபங்கொண்டு, அவளை விட்டு விலகினான். பிறகு, ஜோசப் பாதிரியின் உறவினளான, அந்த மங்கை, ரிஷ்லுவுக்கு விரோதமாக மன்னனைத் திருப்ப முயற்சித்தாள். பலிக்கவில்லை. அந்த மங்கையைக்கொண்டு மன்னனைத் தங்கள் வலைக்குள் போடலாம் என்று சிலர் முயன்றபோது, அவள் அதற்கும் இடம் தராமல், கன்னிமாடம் சேர்ந்துவிட்டாள். அவள் கன்னி மாடம் சேர்ந்த பிறகு கூட, மன்னன் அங்கு சென்று, மணிக்கணக்காக அவளிடம் பேசிக்கொண்டிருப்பானாம். அந்தப் பாவை, ரிஷ்லுவின் பிடியிலிருந்து மன்னன் விடுபட வேண்டும் என்பதையே வலியுறுத்தி வந்தாளாம்-இதனால் வெறுப்படைந்த மன்னன், கன்னிமாடம் செல்வதையே நிறுத்திக் கொண்டானாம். ரிஷ்லுவுக்கு எதிராக எவரேனும் ஏதேனும் சொன்னாலும், கேட்பதற்கு மன்னன் விரும்புவதில்லை. அவ்வளவு பற்று ஏற்பட்டுவிட்டது. ரிஷ்லுவுக்கு இந்தத் துணை இருக்குமட்டும் மற்றவர்களைப் பற்றிக் கவலை என்ன! மேரி அம்மையை அறவே புறக்கணித்தான்--அம்மையின் மனதிலேயோ, பகை முழுவடிவெடுத்தது. சமயம் வரவில்லை.

ன்னன், ஒரு சமயம் நோய்வாய்ப்பட்டான்--ஆபத்தான நிலைமை--மருத்துவர்களே, கடினம் என்று கூறிவிட்டனர். மகன் மரணப் படுக்கையில், அன்னைக்கு அக மகிழ்ச்சி! மகனிடம் கொண்ட வெறுப்பாலா? அது காரணமல்ல. எவ்வளவு வெறுப்பு இருப்பினும், பாசம் விடுமா, மகனை இழக்கத் தாய் விரும்புவாளா? காரணம், வேறு. மன்னன் இறந்துவிட்டால், ரிஷ்லுவைச் தொலைத்துவிடலாம் என்ற எண்ணம், அகமகிழ்ச்சியைத் தந்தது. ரிஷ்லுவின் கொடுங்கோன்மைக்கு ஆளாகி அவதிப்பட்டவர்கள் அனைவருமே, இந்த நிலையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.

மன்னன் இறந்ததும், ரிஷ்லுவை வெட்டிப் போடுவதா, நாட்டைவிட்டு விரட்டுவதா?

ரிஷ்லு தொலைந்ததும், யாரார் எந்தெந்தப் பதவிவகிப்பது?

இவைகளெல்லாம் கூடப் பேசப்பட்டனவாம்.

ரிஷ்லுவுக்கும் உள்ளூரப் பயம்தான்.

மன்னனோ அனைவரையும் ஏமாற்றிவிட்டான்--பிழைத்துக்கொண்டான். ரிஷ்லு, மகிழ்ந்தான்--சதிபேசியவர்கள் மீது பாய்ந்தான்.

மற்றோர் சமயத்தில், மன்னனுக்கும் மேரிக்கும் மிகுந்த நேசம் இருந்தது--மன்னனுக்குச் சரியான தூபமிட்டு ரிஷ்லுவை விரட்டிவிடும்படி ஏவினார்கள் தாயார். தாயும் மகனும் பேசிக்கொண்டிருந்த தனி அறைக்குச் செல்லவும் ரிஷ்லுவுக்கு அனுமதி கிடையாது. ரிஷ்லுவுக்கு அச்சமாகிவிட்டது. எனினும், கடைசி நேரத்தில் மன்னன் ரிஷ்லுவைக் கைவிட மறுத்துவிட்டான். மேரி மனமுடைந்து, இனி நமது திட்டம் பலிக்காது என்று தெரிந்துகொண்டு ஓய்ந்தே போனாள்.

அவ்விதமான 'பிடி' இருந்தது ரிஷ்லுவுக்கு, மன்னனிடம்.

எந்த மங்கையின் விழியும் மொழியும் மன்னனுக்கு மது ஆகிவிடுவதில்லை, என்பது ரிஷ்லுக்கு தெரிந்திருந்தபோதிலும் இலேசாக அச்சம் தட்டியபடி இருந்தது.

முன்னம் இரு மங்கையர் மன்னன் மனதைக் கெடுக்க முயன்ற சம்பவம், இந்த அச்சத்தை வளர்த்தது. எனவே, மன்னனைப் பெண்களுடன் பழகவிடுவது, எப்போதாவது ஆபத்தாக முடிந்துவிடக்கூடும் என்று எண்ணினான் ரிஷ்லு, ஆனால் மன்னன், தனியனாக எப்படி இருப்பான்; சோர்வு தட்டுமே! பொழுது போக்க வேண்டுமே! அதற்கென்ன செய்வது?

பதினெட்டு வயது நிரம்பிய, பார்க்க இலட்சணமாக இருந்த பகட்டு வாலிபன் ஒருவன் கிடைத்தான் ரிஷ்லுவுக்கு. பெயர், சின்க் மார்ஸ். இந்த இளைஞனை அரண்மனை உடை அதிகாரியாக ரிஷ்லு நியமித்தான். மன்னனுடன் பழக சின்க்மார்ஸ், அமர்த்தப்பட்டான்.

தன்னைவிட வயதில் இளைஞன், சின்க் மார்ஸ், எனவே அவனிடம் தாராளமாகப் பேசவும், தன் எண்ணங்களைத் தைரியமாக எடுத்துச் சொல்லவும் மன்னனுக்கு முடிந்தது--அதிலே ஒரு இன்பம் கண்டான். பெண்களுடன் பழகுவது கூடக் கூச்சமாக இருக்கிறது, இவனுடன் பேசுவதும் பழகுவதும் மகிழ்ச்சி தருகிறது என்று நினைத்தான் மன்னன்.

சின்க்--மார்ஸ், ஒரு அசடன். ரிஷ்லுவிடமிருந்து மன்னனைப் பிரித்துவிட முடியும், மன்னனைத் தன் விருப்பப்படி ஆட்டிவைக்க முடியும் என்று எண்ணினான். சதிபுரிவோர், அவனைப் பயன்படுத்திக் கொண்டனர். மன்னனின் தம்பி, காஸ்டனும் உடந்தை.

அதுபோது, ரிஷ்லு, ஸ்பெயின் மீது போர் தொடுத்திருந்தான்.

உடலிலேயோ புண்--சீழ் வடிந்து கொண்டிருந்தது--காய்ச்சல் குறையவில்லை--மருத்துவர் உடலிலிருந்து அடிக்கடி இரத்தத்தை வெளியிலே எடுத்த வண்ணம் இருந்தனர், நோயை குறைக்க. மரணப்பாதையிலே சென்றுகொண்டிருக்கும் நேரம். அந்த நேரத்திலும், தன் ஆதிக்கத்தைக் குலைக்க ஒரு சதி நடக்கிறது என்று தெரிந்ததும், ரிஷ்லு சீறும் புலியானான். சதியிலே சேர்ந்தவர்களெல்லாம் சாய்ந்திருக்கும்போது, அலங்காரப் பொம்மை போன்ற சின்க்-மார்ஸ் எம்மாத்திரம். அவன் தன் திட்டம் வெற்றியாகப் போகிறது என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தான், ரிஷ்லுவோ அவனைச் சிக்கவைக்கும் ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருந்தான்.

சின்க்-மார்ஸ், மன்னனுடன் உல்லாசமாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறான். ரிஷ்லுவின் ஆள். மன்னனைத் தனியே கண்டு, ரிஷ்லுதந்த கடிதத்தைக் கொடுத்தான்--மறுகணம், சின்க்-மார்ஸ் அவன் 'சகாக்களுடன்' கைது செய்யப்படுவதற்கு, மன்னன் உத்தரவு பிறப்பித்தான்.

ஸ்பெயின் நாட்டுடன் கூடிக்கொண்டு பிரான்சுக்குத் துரோகம் செய்ய, சின்க்=மார்சும் அவன் துணைவர்களும் திட்டமிட்டனர் என்பதை விளக்கும், கடிதம் ரிஷலுவால் மன்னனுக்கு அனுப்பப்பட்டது. சின்க்-மார்ஸ் கட்டிய மனக்கோட்டை தூள்தூளாயிற்று.

சின்க்-மார்சும் அவன் துணைவர்களும் தூக்கிலிடப் பட்டனர். ரிஷ்லுவுக்கு இதற்குமேல் ஆதிக்கம் செலுத்த உடல் இடம் தரவில்லை. எப்போதும் உடலைத் துளைத்துக்கொண்டிருந்த நோய், இப்போது உடலை அழுகவே செய்துவிட்டது. பிழைப்பது முடியாத காரியம் என்பது விளங்கிவிட்டது. நார்போன் எனும் நகர் சென்று, ரிஷ்லு, 'உயில்' எழுதிவைத்துவிட்டான், மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏறக்குறைய எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது என்ற திருப்தி இருந்தது ரிஷ்லுவுக்கு.

நெடுநாட்களாக ரிஷ்லுவுக்கு இருந்து வந்த பயம், லூயி மன்னனுக்கு குழந்தையே பிறக்காததால், மன்னனுக்குப் பிறகு, காஸ்டன் என்னும் இளவல் மன்னனாவானே, என்பது. இந்தப் பயம், ஒழிந்துவிட்டது. நீண்ட காலமாக ஒதுக்கி வைத்திருந்து ஆன் அரசியிடம், மன்னன் எப்படியோ சமாதானமானான். 1638-ல், ஒரு ஆண்மகவு பிறந்தது. அந்தச் 'சேதியை' முதலில் வந்து சொன்னவருக்கு, ரிஷ்லு வைரத்தால் செய்யப்பட்ட ரோஜாமலர் ஒன்று பரிசு தந்தானாம்.

மரணப் படுக்கையிலே ரிஷ்லு--மனக்கண்முன் என்ன தெரிகிறது! ஈடு எதிர்ப்பற்ற ஆதிக்கம் செலுத்திய காட்சிகள்.

எவர் பேச்சுக்கும் இணங்காமல், தன்னிடம் கட்டுப்பட்டுள்ள மன்னன்.

மேரி-முயன்று பார்த்துத் தோற்று, மனம் உடைந்து, அங்கும் இங்கும் அலைந்து மாண்டே போனாள்.

காஸ்டன்-மன்னன் தம்பி, இனித் தனக்கும் அரச பதவிக்கும் சம்பந்தம் இல்லை என்பது புரிந்துவிட்டதால், பெட்டியிலிட்ட பாம்புபோலாகிவிட்டான்.

எதிர்த்தவர்கள்? கல்லறையில்! ஜோசப் பாதிரியார்? நல்ல உழைப்பாளி. அவரும் மறைந்துவிட்டார்.

லூகான் நகர பழங் கட்டிடம், அதிலிருந்து புறப்பட்ட பயணம், பாரிஸ் போற்றும் மாளிகையிலே வந்து முடிந்தது.

ரிஷ்லுவின் வாழ்க்கையைப் பொறுத்தமட்டிலே. மகத்தான வெற்றி என்றுதான் கணக்கிட வேண்டும்.

போட்ட திட்டப்படி காரியம் நடந்தேறியது--ஒரு அரசை, தன் கரத்திலே வைத்து விருப்பப்படி விளையாட முடிந்தது.

பிரபுக்கள் கொட்டமடங்கிவிட்டது. வெளிநாடுகளிலேயும் புகழ் பேசப்படுகிறது. இவைகள் போதுமான சாதனைகள்தான் என்ற மனத்திருப்தி நிச்சயமாக ரிஷ்லுவுக்கு ஏற்பட்டிருக்கும்.

1642-ம் ஆண்டு, டிசம்பர் நாலாம் நாள்' ரிஷ்லு இறந்தான். அன்று மக்கள் மகிழ்ந்து பல்வேறு இடங்களில் 'சொக்கப்பானை' கொளுத்தினராம்!

போப்பாண்டவர் இதைக் கேள்விப்பட்டதும், "ஆண்டவன் ஒருவர் இருந்தால், கார்டினல் ரிஷ்லு அவரிடம் பதில் சொல்லித் தீரவேண்டும். ஆண்டவன் இல்லை என்றால், அவன் கீர்த்தியுடன் வாழ்ந்தான் என்றுதான் பொருள்படும்" என்று கூறினாராம். எதையும் திட்டப்படி செய்யும் பழக்கமுள்ள ரிஷ்லு, தனக்குப் பிறகு, தன் 'செல்வத்தை' யாரார் எப்படி எப்படிப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதையும், திட்டமாக எழுதிவைத்துவிட்டுத்தான் மரணத்தை நோக்கிப் பயணமானான்.

எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்பது, ரிஷ்லுவுக்கு இருந்துவந்த ஆவேசம்--அந்த ஆவேசத்தின்முன்பு எந்தப் பண்பும் தலைகாட்டவில்லை.

தன்னைச் சுற்றிலும் பகைவர்கள் இருக்கிறார்கள் எந்த நேரத்திலும் ஆபத்து வரக்கூடும் என்று எண்ணிக் கொண்டதால், யார் எதிர்ப்புக் குரல் கிளப்பினாலும், உடனே அவர்கள் மீது முழுப் பலத்துடன் பாய்ந்து தாக்கி அழுத்திவிடுவதில், காட்டு மிருகத்தின் குணத்தையும் திறத்தையும் ரிஷ்லு பெற்றிருந்தான்.

எத்தகைய சந்தர்ப்பத்தையும் நிகழ்ச்சியையும், தன் ஆதிக்க நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதிலே ரிஷ்லு காட்டிய ஆற்றல், வெகு சிலரிடமே காணமுடியும்.

ஆதிக்கம் தேடும்போது, ரிஷ்லு, இரை தேடும் புலி மோப்பம் பிடித்தும், இரை தொலைவில் தெரிந்ததும், பாய்ந்து தாக்கியும், இரத்தத்தைக் குடிக்கும் புலிபோல், ஆதிக்கம் பெற வழி காண்பதிலும், கண்ட வழியில் பாய்ந்து செல்வதிலும், புலிபோன்றிருந்தான் ரிஷ்லு.

இரை தேடி அலையும்போது, காட்டு மிரூகம். வேறு எதனையும் பொருட்படுத்தாதல்லவா--அதேகுணம் ரிஷ்லுவுக்கு இருந்தது.

ரிஷ்லு, சிறுவனாக இருந்தபோது, களைத்தும் இளைத்தும், இருமியும் நடுங்கிக்கொண்டும் இருந்தபோது, அன்புடன், அவனை வளர்த்த அருமைத் தாயார், பிணமாகி இருபத்தொரு நாட்களான பிறகே, ரிஷ்லு சவ அடக்கச் சடங்குக்குச் சென்றான். தாயார் இறந்துவிட்டார்கள், உடனே வருக!-- சேதி கிடைக்கிறது--பதறவில்லை, பதைக்கவில்லை, பெற்ற தாயைக் காண ஓடவில்லை. சவ அடக்கம் செய்யவேண்டும், உடன் வருக! என்று கடிதம் வருகிறது. செல்லவில்லை!! நாலு நாட்களாகக் காத்துக் கிடக்கிறோம், தாங்கள் வந்து தான் சவ அடக்கம் நடைபெற வேண்டும். இதற்கும் செல்லவில்லை. அவசரமான அலுவல்-இப்படி அப்படி அசைய முடியாது--தாய் இறந்தார்களா, தாங்கொணாத் துக்கம்தான், ஆனால் என் செய்வது, காரியம் இருக்கிறதே, முடிந்ததும் கடுகிச் செல்லலாம்--என்றுதான் எண்ணினான் ரிஷ்லு.

எப்படி மனம் இடங்கொடுத்தது என்றுதான் எவரும் கேட்பர். ரிஷ்லுவின் மனம் அப்படிப்பட்டது.

ஆட்சிக் குழுவிலே ரிஷ்லுவுக்குச் செயலாளர் பதவி தரப்பட்டது. அப்போதுதான் தாயார் இறந்த செய்திவந்தது. இருபத்தோரு நாள் கழித்தே ஊர் சென்று, சவ அடக்கம் செய்தான் ரிஷ்லு.

ஊர் என்ன எண்ணும், என்ன சொல்லும் என்பது பற்றிப் பயப்படுவதில்லை.

ஊருக்கு, தன்னைப்பற்றித் தெரிவித்துக்கொள்ளும் விளம்பரப் பிரசாரத்தையும் திறம்பட நடத்திவந்தான்.

பேரவைக் கூட்டத்திலே முதன்முதல் பேசியதும், பலரும் பாராட்டினர்--ரிஷ்லு அவ்வளவுடன் திருப்தி அடையவில்லை, அந்தச் சொற்பொழிவை அச்சிட்டு, ஏராளமாக வழங்கிட ஏற்பாடு செய்தான். எதையும் அரைகுறையாக விட்டுவைப்பது, ரிஷ்லுவின் முறையல்ல. பிரன்ச்கெஜட் எனும் பிரசார இதழைத் துவக்கி, திறமையான ஆசிரியர் மூலம் நடத்தச்செய்து, அதன்மூலம், ரிஷ்லு, தன்னைப் பற்றியும் தன் ஆட்சி முறையைப்பற்றியும் பிரசாரம் செய்துவந்தான்.

காற்று இல்லை, வெளிச்சம் இல்லை, மலர் இல்லை, மகிழ்ச்சி இல்லை, வெள்ளிச் சாமான் இல்லை, பட்டு விரிப்பு இல்லை என்று ஆயாசப்படும் நிலையில், லூகான் நகர தேவாலய அதிபராக இருந்துவந்த ரிஷ்லு "அரசுக்காக! பிரான்சுக்காக" பணியாற்றிப் பெற்ற நிலை எப்படி இருந்தது! மன்னனுக்கு, தன் உயிலின்படி 1,50,000 பவுன் வைத்திருந்தான்! இதை, மன்னர், பண நெருக்கடியின்போது உபயோகித்துக்கொள்ள வேண்டும் என்ற குறிப்புடன். மன்னனுக்குப் பணம் தந்து விட்டுச் சாகும் நிலை இருந்தது ரிஷ்லுவுக்கு.

கார்டினல் அரண்மனை எனும் உயர்தர மாளிகை;வைரக்கற்கள் பதித்த தங்க ஆபரணம், வெள்ளிப் பேழைகள் ஆகியவைகளை மன்னனுக்குத் 'தானம்' தர முடிந்தது ரிஷ்லுவால்.

நெருங்கிய உறவினர்களுக்கு ஏராளமான நிலபுலமும், தோட்டமும் மாளிகையும்.

ஜெமீன்களும் இனாம்களும், பகிர்ந்தளித்தான்.

இலட்சக்கணக்கிலே பணம்குவிந்திருந்தது-அவைகளைத் தன் நெருங்கிய உறவினர்களுக்குப் பகிர்ந்தளித்தான்.

ரிஷ்லுவின் உயிலிலே குறிப்பிட்டிருக்கும் புள்ளி விவரத்தைக் கவனிக்கும்போது, பிரான்சிலே இருந்து வந்த எந்தப் பரம்பரைச் சீமானுக்கும் இல்லாத அளவு சொத்து சேர்ந்தது என்பது விளக்கமாகிறது.

மன்னன், ரிஷ்லுவுக்கு, கொழுத்த வருமானமுள்ள தேவாலயங்களையும் ஜெமீன்களையும் வழங்கி இருந்தான்.

கார்டினல் பதவி மூலம் கிடைத்த வருமானம் சாமான்யமானதல்ல.

நார்மண்டி பகுதியிலே ரிஷ்லுவுக்கு இருந்த பண்ணை மட்டும் ஆண்டுக்கு அரை இலட்சம் பவுன் வருமானம் அளித்தது. இதுபோல் வளமான பண்ணைகள், பிரான்சிலே பல்வேறு இடங்களில் ஐந்து இருந்தன.

மேலும், அன்றைய ஆட்சி முறையின்படி, அரசாங்கக் காரியத்துக்காக வசூலிக்கப்படும் எல்லா தொகையிலும், ரிஷ்லு, ஒரு பகுதி சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை இருந்தது. நமக்கு வேண்டாம் இது, என்று ரிஷ்லு கண்ணியம் பேசவில்லை! புகழ் எப்படிக் குவிந்ததோ, அதைவிட வேகமாகச் செல்வம் ரிஷ்லுவிடம் குவிந்தது.

வீடு வாசல் தோட்டம் துரவு என்னும் அசையாப் பொருள்களை நீக்கி, பணமாக மட்டும், உயிலின்படி, உறவினர்களுக்கும் ஊழியர்களுக்குமாக ரிஷ்லு தந்த தொகை ஏறக்குறைய முப்பது இலட்சம் பிரன்ச்சு பவுன் என்றால் ரிஷ்லுவிடம் குவிந்திருந்த செல்வத்தின் அளவு எவ்வளவு என்பது ஒருவாறு விளங்கும்.

ஒவ்வொரு அரசியல் குழப்பமும் இலாபகரமான பதவியைத் தந்த வண்ணமிருந்தது, ரிஷ்லுவுக்கு.

மன்னனுக்கு மகிழ்ச்சி ஏற்படும்போதெல்லாம், ரிஷ்லுவுக்கு புதுப் பண்ணைகள் கிடைக்கும்.

பல பதவிகள் ஒரே காலத்தில்--ஒவ்வொரு பதவிக்கும் தனித் தனி வருமானம்! செல்வம் குன்றெனக் குவியத் தானே செய்யும்.

இவ்வளவு பெரும் பொருளைச் சேகரித்த ரிஷ்லு, வாழ்க்கையிலே ஆடம்பரமற்று, செலவின்றி இருந்தானோ எனில், அதுவுமில்லை; மாளிகைகள் பொறாமைப்படும் செலவு.

பாதுகாப்புக்காக மட்டும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் நூறு பேருக்குமேல்--சம்பளத்துடன்.

பல்லக்கிலே சவாரி, பரிவாரம் சூழ!

மாளிகையிலே உயர்தரமான அலங்காரப் பொருள்கள்.

குதிரைக் கொட்டில்கள் இரண்டு, அவைகளில் உயர்தரமான குதிரைகள்.

மருத்துவர்கள், உடலை அவ்வப்போது கவனிக்க வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

நாட்டின் பிரபுக்களில் ரிஷ்லுவுக்கு வேண்டியவர்களுக்கு அடிக்கடி விருந்து வைபவம் நடத்திவைக்கப்படும்--செலவு தாராளமாக. ரிஷ்லுவுக்கு ஆடை அணிவிக்க மட்டும் ஐந்து ஆட்கள்.

குறிப்புத் தயாரிப்போர், கடிதம் எழுதித் தருவோர், ஆகியவர்கள் மூவர்--நல்ல சம்பளம்.

ஆண்டொன்றுக்கு ரிஷ்லுவின் வீட்டுச்செலவு மட்டும், இன்றைய பிரன்ச்சு நாணய முறைப்படி 36,96,000 பிராங்குகள், என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

ரிஷ்லுவைப் பேட்டி காண்பது மன்னனைக் காண்பதை விடக் கடினம் என்று கூறத் தக்க விதமான, ஆடம்பரம் இருந்து வந்தது.

காவலர்கள் ரிஷ்லுவைக் கண்ணிமைபோல் காத்து வந்தனர். பகலில் ரிஷ்லு, இருக்கும் அறையிலேயே ஆயுதம் தாங்கிய படை வீரர் காவலுக்கு இருப்பர். இரவில், பக்கத்தறையில் இருப்பர். துளி சத்தம் கேட்டாலும் எழுந்தோடி வரவேண்டும் என்று உத்தரவு. யாராவது ரிஷ்லுவைக் காணச் சென்றால், ஐந்து இடங்களில் படைவீரர்கள், வருபவர்களைச் சோதனையிட்ட பிறகே, ரிஷ்லு உள்ள அறைக்கு அழைத்துச் செல்வர், அங்கு, படைவீரர் காவலிருப்பர்.

கோலாகலமான வாழ்க்கைதான்--ஏராளமான செலவு--ஆடம்பரம்--எல்லாம், அரசுக்காக! பிரான்சுக்காக!

கார்டினல் ரிஷ்லு, குன்றெனக் குவிந்திருந்த செல்வத்தில் மன்னனுக்கும், உறவினருக்கும், அவனிடம் கைகட்டிக் காத்துக் கிடந்த ஊழியர்களுக்கும் தந்திருக்கிறானே தவிர, ஏதேனும் பொதுநலத் துறைக்கு, மக்கள் நலனுக்கு ஒதுக்கினானா என்றால், இல்லை ! மக்களுக்காகவா, ரிஷ்லு வாழ்ந்தான்! அரசுக்காக! பிரான்சுக்காக!!

உயிலிலே, ஒரு புள்ளி விவரம் அவனுடைய உள்ளக் கிடக்கையை எடுத்துக் காட்டுகிறது. 30.000 ஒரு சீமானுக்குத் தரும்படி, குறிப்பு இருக்கிறது--"அவருக்குப்பணமுடை என்பது எனக்குத் தெரியும், ஆகவே அவருக்கு இந்த உதவித் தொகையைத் தருக," என்று கூறப்பட்டிருக்கிறது. கனிவு, எந்தத் திக்குக்கு என்பது விளங்குகிறது.

அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற சொற்களைத் திறம்படப் பயன்படுத்தி, கொடுமைகளைக் கூசாமல் செய்து, ஆதிக்க வெறியனாய் வாழ்ந்து, பெரும் செல்வத்தைச் சேகரித்துக்கொண்ட ரிஷ்லுவின், வாழ்க்கை முறையை, ஆதிக்கத்தைத் தேடி அலைபவர்கள் திருவாசகமென்று இன்றும் எண்ணுகின்றனர்.

ஓயாத உழைப்பு, கூர்மையான புத்தி, அளவற்ற ஆற்றல் எந்தத் துறையிலும் இணையற்ற சமர்த்து என்று பாராட்டுகின்றனர்.

உலகம், போட்டிப் பந்தய மேடை அல்ல-கூட்டுறவுச் சாலை, என்ற புனிதக் கோட்பாட்டை மதியாதார், இரும்புக் கரத்தினரை, ஈவு இரக்கமற்ற நெஞ்சினரை, அவர்களின் வெற்றிகண்டு, பாராட்டுவது, வாடிக்கையாகிவிட்டது.

மனிதனைச் சிங்கம் பிய்த்து எறிந்ததை, திராட்சைக் கொத்தைத் தின்றபடி இரசித்திடவில்லையா, ரோம் நாட்டு மமதையாளர்கள். பொது நோக்கு, பொது நலம், மக்கள் முன்னேற்றம் எனும் எதற்கும் பற்றுக் கொள்ளாது, சிறக்க வாழ வேண்டும், ஈடு எதிர்ப்பின்றி ஆட்சி செலுத்த வேண்டும், என்று முயன்று வெற்றிபெறுபவர்களைப் பாராட்டுவது, அது போன்றதேயாகும். மதத்துறைத் தலைவர்கள் உண்டு, அரசியல் துறைத் தலைவர்கள் இருக்கிறார்கள்--கார்டினல் ரிஷ்லு, மதத் துறையில் தலைமை பெறப் பணியாற்றியபடி இருந்து கொண்டே, அரசியல் துறையில் ஆதிக்கம் பெற்ற, ஒரு அபூர்வமான சர்வாதிகாரி.

பார்லிமெண்டுகளைப் பஜனை மடங்களாக்குவோர் உண்டு, பஜனை மடங்களில் பார்லிமெண்டு நடத்துவோர் உண்டு, இந்த ரிஷ்லு, பஜனை மடத்திலிருந்தபடியே பார்லிமெண்டுக்குத் தன்னைத் தயாரித்துக்கொண்டிருக்கும் தனி வழி கண்டறிந்து பயன் கண்டவன்.

மதத் துறையில் ஈடுபட்டு அதிலே மாசுகளைக் களைந்தெறிந்து, மாண்புகளைப் பெருகச்செய்து, அத்தகைய மார்க்கத்தின் மூலம் மக்கட் சமுதாயத்துக்கு உயர்வும் உய்யும் வழியும் கிடைத்திடச் செய்வதற்காகப் பணியாற்றிடும் பெருநோக்குடையார் பலர் உண்டு-பலர் பணியாற்றிப் பலன் காணாது பதறினர்.

சிலர், மதத்துறையிலே பெருமளவுக்குச் செல்வாக்குத் தேடிக் கொண்டு, அந்தச் செல்வாக்கைக் காட்டி அரசுகளைப் பணிய வைக்கவும், ஆட்டிப் படைக்கவும், முயன்றனர்--வெற்றியும் கண்டனர்.

சில அரசியல் தலைவர்கள், அந்தத் துறையிலே தமக்குக் கிடைத்த செல்வாக்கைக் கொண்டு மதத்துறையிலேயும் தமது ஆதிக்கம் நுழையும்படி செய்து வெற்றி பெற்றனர்.

கார்டினல் ரிஷ்லு, இதுபோன்ற வகையினரில் ஒருவராக வில்லை--அவன் கண்ட வழியே தனி!!

ஆதிக்கம் பெறுவதற்கு, மதத்துறையைச் சிலர்போல் ஏணியாக்கிக் கொள்ளவில்லை -அரசியல் ஆதிக்கம் பெறுமுன், மதத்துறையைச் சிறிது காலம் தங்குமிடமாகக் கொண்டான். மதத்துறையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றதால் அரசியல் துறையில் ஆதிக்கம் பெறலாம் என்பது பொதுவிதியானால், போப்பாண்டவரல்லவா பிரான்சு நாட்டை ஆட்டிப் படைத்திருக்க வேண்டும். கார்டினல் ரிஷ்லுவின் கைப்பிடியிலல்லவா, பிரான்சு சிக்கிற்று! போப்பிடமல்லவே!!

அம்மட்டோ! அந்தப் போப்பாண்டவரைக் கூட, ஒரு சம்பவத்தின்போது, இந்த ரிஷ்லு, 'உமது வேலையைப் பாரும்! என் துறையிலே தலையிட வேண்டாம்' என்று கூறிட முடிந்தது!!

அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற சொற்றொடர்--ரிஷ்லு காலத்தில். இன்று ரிஷ்லுக்களாகலாமா என்று மனப்பால் குடிக்கும் சிலரும் அடிக்கடி அரசுக்காக? நாட்டுக்காக! என்று பேசி, மக்களை மயக்கவும், உலகை ஏய்க்கவும், எதிர்ப்பை ஒடுக்கவும் முடியும் என்று நம்புகிறார்கள்.

நாட்டுக்காக என்று கூறிக்கொண்டே, எந்த அக்ரமம் செய்தாலும் மக்கள் சகித்துக் கொள்வார்கள், என்று எண்ணுவது ஏமாளித்தனம். ரிஷ்லுவால் முடிந்ததே! என்று கூறலாம்--மக்கள் பழிதீர்த்துக்கொண்டனர், காலம் பிடித்தது அதற்கு, எனினும் பழிதீர்த்துக் கொண்டனர்--ரிஷ்லுமீதல்ல, அவன் போற்றிவுந்து அரசின் மீது!!

அரசு பலமடைய வேண்டும் என்று பேசப்படும்போது ஆமாம் என்ற பதில் எளிதாகக் கிடைத்துவிடும்...ஆனால், எப்படி பலமடைவது என்ற கேள்வியும், எதற்காகப் பலமடைய வேண்டும் என்ற கேள்வியும், மக்கள் கேட்க ஆரம்பித்தால், ஆதிக்கவாதிகள் பதில் இறுக்க இயலாது.

அரசு, மக்களுக்கு நலம்தர ஒரு ஏற்பாடு என்ற இலட்சியத்தை மறந்து, நாட்டு மக்களின் உடைமை என்ற உண்மையை ஏற்காது, நாடு என்றால், அதிலே காணப்படும் விரல் விட்டு எண்ணத்தக்க பட்டுடை அணிந்த வீணர்கள் மட்டுமே என்று கருதி, அரசு என்றால், அவர்களின் வசதி கெடாதபடி மற்றவர்களைக் கண்காணித்து வருவதுதான் என்று தீர்மானித்து, ஆதிக்கம் புரிந்தவர்களால், அரசும் மேன்மையுறாது, நாடும் வளம் பெறாது.

ரிஷ்லுவுக்குத் தெரிந்த பிரான்சு, அங்கே செக்குமாடென உழைத்துக்கிடந்த பெரும்பான்மை மக்களல்ல.

மமதையால் மன்னனை எதிர்க்கக் கிளம்பும் சில பிரபுக்களும், வேற்று மார்க்கத்தவர் என்பதால் பிணங்கிக் கிடந்த சில பலரும், கீர்த்தி எனும் வெற்றுரைக்காக போர் மூட்டிவிடும் வெறியர் சிலரும்தான், ரிஷலுவுக்குத் தெரிந்தனர்.

அரண்மணை, மாளிகை, ஆலயம், இவற்றோடு நாடு முடிந்துவிடவில்லை, வயல் இருக்கிறது, வாய்க்கால் இருக்கிறது, பாதை இருக்கிறது, பள்ளம் இருக்கிறது, தொழில் இருக்கிறது, துயரம் இருக்கிறது, இங்கு, இலட்ச இலட்சமாக ஏழைகள் உள்ளனர், உழைத்த வண்ணம். உழைக்கிறார்கள் வாழ முடியவில்லை, சாவை வரவேற்கிறார்கள், நிம்மதி பெற, அதனினும் சிறந்து மார்க்கம் வேறு இல்லாததால் ! இந்தப் பிரான்சுக்கு அல்ல, ரிஷ்லு, முதலமைச்சரானது! அவனுடைய பிரான்சு, மன்னன், அவனைச் சுற்றி வட்டமிடும் வல்லூறுகள், அவனுக்கு விளையாட்டுக்காகப் பறந்திடும் பொன்வண்டுகள், இவைகள் உள்ள, அரண்மனை, மாளிகை, பூம்பொழில், இந்த ஏற்பாட்டைப் பாதுகாக்க அமைந்துள்ள பாசறை, நீதிமன்றம், சிறைக்கூடம் இவை!

பிரான்சு, பெருமூச்சுவிட்டது, ரிஷ்லுவின் செவியிலே விழவில்லை--கேட்க மறுத்துவிட்டான்.

பிரான்சிலே, ஐந்தில் ஒரு பகுதி நிலம்--வயல்--மன்னனுக்குச் சொந்த உடைமை.

மற்றோர் பங்கு மத அலுவலருக்கு, பிறிதோர் பங்கு பிரபுக்களுக்கு, மிச்சம் இருந்ததை பொது மக்களுக்கு என்று விட்டு வைத்தனர். பொதுவளம், பொதுநலம்,பொது அறம், எதுதான் தழைக்க முடியும்!

இந்த ஏற்பாடு சரியா, தவறா என்று ஆராய்வது கூடத் தேவையில்லை, என்று இருந்துகொண்டுதான் ரிஷ்லு, அரசுக்காக! நாட்டுக்காக ! என்று பல்லவி பாடி ஆதிக்கம் செலுத்தினான்.

பிரபுக்களின் கொட்டத்தை அடக்கும்போதுகூட, அவர்கள், மக்களை மாடுகளாக்கி, வாழ்கிறார்கள் என்பதற்காக அல்ல ! ரிஷ்லுவே பெரிய பெரிய பண்ணைகளுக்கு உரிமையாளராகிவிட்டானே! ஏழை உழவனின் வியர்வையும் கண்ணீரும் கலப்பது பற்றிக் கவலை ஏன் பிறக்கும்!

உழவன், பிரபுவிடம் அடிமைப்பட்டுக் கிடந்தான். கூப்பிட்டபோது ஓடி வேலை செய்யவேண்டும். கேட்ட வரியைத் தந்தாக வேண்டும். வரி, மட்டுமா? எதையும்!

பிரபுவின் இயந்திரத்தில்தான் அவன் மாவு அரைத்துக் கொள்ளவேண்டும்.

அவருடைய பறவைகள் உழவன் வயலிலே புகுந்து கதிர்களைக் கொத்தும், அவன் அவைகளை விரட்டக் கூடாது.

அவர்கள் அமைத்த நீதி மன்றத்தில் உழவன், கைகட்டி நிற்க வேண்டும், அவர் சொல்வதுதான் சட்டம்!

உழவன், விளைந்ததை விற்றுத் தேவையானதைப் பெற்று வரலாம் என்று கிராமத்தை விட்டுக் கிளம்பி சந்தை கூடும் இடம் போவான், வழியிலே, சீமான்களின், சுங்கச்சாவடி இருக்கும், வரிகட்டினால்தான், போக அனுமதி.

இவ்வளவும் இவைகளின் விளைவாகவும் கொடுமைகள் மலிந்து கிடந்தன. அறிவாற்றல் படைத்த, எடுத்த செயலை முடித்தே தீருவதிலே வல்லமை பெற்ற ரிஷ்லு, என்ன செய்தான்? சிறு விரலையும் அசைக்க வில்லை.

மத அலுவலர்களின் போக்கோ-பிரபுக்கள் பயிற்சி பெறவேண்டிய கல்லூரியாக இருந்தது.

பட்டிக்காட்டு உழவன் விளைவதில் பத்திலோர் பாகத்தை 'காணிக்கையாகத்' தந்துவிடவேண்டும்-இந்தக் காணிக்கை பல கிராமங்களிலே சேகரம் செய்யப்பட்டு, ஒரு தேவாலய அதிபருக்கு போய்ச் சேரும். மதச்சடங்குகளின் போதெல்லாம், 'வரி' கட்டவேண்டும். முணுமுணுக்கக் கூடாது, கணக்குப் பார்த்தலாகாது, புண்யம் கிட்டாது. தேவாலயம் அருளாலயம், என்பன போன்ற திருப் பெயர்களைத் தாங்கிக் கொண்டிருந்த மத அமைப்புக்கு, தானமாகக் கிடைத்த நிலங்களிலிருந்து மட்டும் 100,000,000 பிரன்ச்சு பவுன் வருமானம் கிடைத்து வந்தது.

இந்தப் பெருந்தொகை, அஞ்ஞானத்தை விரட்ட, சன்மார்க்கத்தை நிலைநாட்ட, பயன்பட்டதா? கேட்பதே, பாபம்.

சீமான்களுக்கு, ஜெமீன்கள் பண்ணைகள் இருப்பது போல, இந்த அருளாலயங்களுக்கும் உண்டு. வருமானத்தை அவர்கள் களியாட்டத்திலே செலவிடுவர், அவர்களிடம் சிறு தொகை ஊதியம் பெற்றுக்கொண்டு, பூஜாரி, கர்த்தரின் பெருமையைக் கழனி ஆண்டிக்கு எடுத்துக் கூறிவருவான். புரட்சியின் போது தொகுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி, மத அமைப்புகளின் மொத்த ஆண்டு வருமானம் 170,000,000 என்று கணக்கிட்டனர்?

வரி தரமாட்டார்கள் மத அலுவலர்கள்! "எமது வாயைத் திறப்போமே தவிர கையைத் திறக்க மாட்டோம்" என்று ஒரு மத அலுவலர் கூறினார், ஒரு சமயத்தில். இன்னொருவர், "மக்கள் பொருள் தருகிறார்கள், பிரபுக்கள் வீரத்தைத் தருவர், நாங்கள் ஜெபம் தருகிறோம்" என்று கூறினாராம்.

பண நெருக்கடியின் போது ஒரு முறை, ரிஷ்லு முயன்று பார்த்தார், மதஅலுவலர்களிடமிருந்து வரிவசூலிக்க. பிடிவாதமாக மறுத்துவிட்டனர் எதிர்ப்பு வலுத்தது. இந்த ஆபத்தான வேலை வேண்டாமென்றோ, இனம் இனத்தைக் காக்கும் போக்கிலேயோ ரிஷ்லு, மேலால் வலியுறுத்த வில்லை. அவர்களாகத் தந்த 'தொகை’யை நன்றிகூறிப் பெற்றுக் கொள்வதுடன், அந்த அத்யாயத்தை முடித்துக் கொண்டான்.

ஐந்தாண்டுக்கு ஒரு முறை மத அலுவலர்கள், தாமாக, மனமுவந்து ஏதேனும் 'தொகை' தருவர், அரசர் அந்தத் தேவப் பிரசாதத்தை மதிப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிரபுக்களுக்குத் தனித்தனி தர்பார் இருந்தது--எனவே அவர்களும் அரசுக்கு வரி செலுத்த மாட்டார்கள்.

ஆக, அரசுக்கு வரி செலுத்தும் பெரும்பாரம், ஏழையின் முதுகிலே விழுந்தது.

அரசுக்காக! நாட்டுக்காக! என்று பாடிய ரிஷ்லுவுக்கு இந்த நிலைமைகளைத் திருத்த வேண்டும் என்றும் தோன்றவில்லை. அறிவும் ஆற்றலும், அரசனுக்குப் பொழுதுபோக்குத் தேடித்தர உதவிற்று, ஏழை அழுத கண்ணீரைத் துடைக்க அல்ல.

நீதிமன்றங்கள், பிரான்சில் பலரகம் !

அரச நீதி மன்றங்கள், பிரபுக்களின் நீதி மன்றங்கள், மத நீதி மன்றங்கள் என மூன்று வகை--இதற்குள் உட்பிரிவு வகைகள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதச் சட்டம்--எப்போது எந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் என்பது ஏழைக்கு விளங்கவே முடியாத புதிராக இருந்தது. இந்தப் புதிர், எண்ணற்ற வழக்கறிஞர்களுக்குக் கொழுத்த வேட்டை தந்து வந்தது. 860 வகையான சட்ட முறைகள் இருந்ததாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இவைகளில் எதனையும் மாற்ற, திருத்த, மக்களுக்கு உகந்ததாக்க ரிஷ்லு முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை.

அரசர், வரிவசூலிக்க பிரான்சு முழுவதுக்கும் மொத்தமாக அறுபது பேரை நியமிப்பார். அவர்கள் ஆறு ஆண்டுகள் அதிகாரம் புரிவர். மன்னனுக்கு முன்னதாகக் குறிப்பிட்ட தொகையைக் கட்டிவிடுவர். இப்படி வரி வசூலிக்கும் உரிமை ஏலத்தில் விடப்பட்டது; அகப்பட்ட வரையில் இலாபம் என்று அவர்கள் ஏழைகளைக் கசக்கி பிழிந்தனர். ரிஷ்லுவின் ஒளிவிடும் கண்களில் இந்த அக்ரமம் படவில்லை!

விருந்தொன்றின்போது, ஒவ்வொருவரும் பொழுது போக்குக்காக, கொள்ளை அடிப்பவர்களைப் பற்றி விதவிதமான கதைகள் கூறினார்களாம். அந்த விருந்திலே வால்டேர் இருந்தாராம். அவரையும் ஒரு கொள்ளைக்காரன் கதை கூறச் சொல்லி வற்புறுத்தினார்களாம், அவர், 'ஒரே ஒரு காலத்தில் வரி ஏல அதிகாரி ஒருவன், இருந்தான். அவ்வளவு தான்!" என்று கதையை முடித்துவிட்டாராம். கொள்ளை அடிப்பவர்கள் எல்லாரையும் மிஞ்சக்கூடிய கொள்ளைக்காரன் இந்த வரி ஏல அதிகாரி என்பதைச் சுவைபட வால்டேர் சொன்னார். ரிஷ்லு இது அக்ரமமுறை என்று உணரவில்லை.

எந்தத் துறையைக் கவனித்தாலும், அநீதி தாண்டவமாடிற்று, அக்ரமம் தலைவிரித்தாடிற்று, எதையும் திருத்த ரிஷ்லு முயலவில்லை. அரசுக்காக! பிரான்சுக்காக! என்று மட்டும் பேசினான். இவ்விதமான அநீதிகளை வைத்துக் கொண்டு, எந்த அரசுதான் நிலைக்க முடியும், எந்த நாடு பிழைக்க இயலும்! எனவேதான், புரட்சி கிளம்பிற்று--பிரான்சு, புடம் போட்ட தங்கமாவதற்கு! மக்களுக்காக அரசு! மக்களுக்காக பிரான்சு! என்ற முழக்கமிட்டானர், புரட்சிவீரர்கள்.

அறியாமல் செய்த ஒரு நன்மை உண்டு, ரிஷ்லுவால்!

கோட்டை கொத்தளங்களை அமைத்துக்கொண்டு, கொடிகட்டி ஆண்ட பிரபுக்களின் கொட்டத்தை அடக்கி அவர்களுடைய இராணுவ பலத்தை ஒடுக்கி விட்டான் ரிஷ்லு. மக்கள் பிரான்சிலே மாபெரும் புரட்சி செய்தபோது, அவர்களை எதிர்க்கும் சக்தியை, பிரபுக்கள் பெற முடியாதபடி இது, செய்தது.

எல்லா அதிகாரங்களையும் அரசனிடம் குவித்து வைத்ததும், புரட்சிக்கு மறைமுகமாக உதவி செய்தது.

மன்னனுடைய மணிமுடி ஒளிவிட வேண்டுமென்று, ஏழையின் இரத்தத்தை அபிஷேகம் செய்வித்து அரசாட்சி புரிந்தான் ரிஷ்லு, மக்கள்பதிலளிக்க நெடுங்காலம் பிடித்தது. அவர்கள் தந்த பதிலோ, பயங்கரமானது, மன்னனின் தலையை வெட்டிக்காட்டி, முழக்கமிட்டனர். மக்களுக்காக பிரான்சுக்காக!! என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=அரசாண்ட_ஆண்டி/ரிஷ்லு2&oldid=1583418" இலிருந்து மீள்விக்கப்பட்டது