உள்ளடக்கத்துக்குச் செல்

அரசியர் மூவர்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து



முன்னுரை

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ‘அரசியர் மூவர்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அந்நூலில் ‘கேகயன் மடந்தை’ என்ற தலைப்பில் கைகேயி பற்றி ஒரு கட்டுரை வரையப்பெற்றது. அன்று இருந்த என் மனநிலை, அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் அக்கட்டுரை அமைந்தது. ஏறத்தாழ அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முறையில் அப்பாத்திரப் படைப்பை ஆராய்ந்து எழுதியுள்ளேன். காலம் செல்லச் செல்ல, கம்பன் பாடல்களில் மனம் தோயத் தோய அப்பாடல்களில் வரும் சொற்கள் பல்வேறு நிலைகளில் பல்வேறு வகையாகப் பொருள் தந்து நிற்றலை உணர முடிந்தது. தெளிந்த ஆற்றில் நீரோட்டத்தின் கீழேயுள்ள மணல் மிக அண்மையில் இருப்பது போல் தோன்றினாலும் இறங்கிப் பார்க்கும்போது அதன் உண்மையான ஆழம் வெளிப்படுகிறது. இதை மனத்தில் கொண்டுதான் கவிஞனும் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி என்று பேசுகிறான்.

‘கேகயன் மடந்தை’ என்ற அந்தக் கட்டுரை கைகேயி பற்றிக் கவிஞன் கூறிய சொற்கள், பாத்திரங்கள் பேசிய சொற்கள், இறுதியாகக் கவிஞன் கூறும் சொற்கள் ஆகிய மூன்று நிலைகளில் ஆய்வு செய்து எழுதப்பெற்றது.

இந்த இடைக்காலத்தில் கவிஞன் சொற்களுக்கெல்லாம் மறைந்துள்ள புதிய பொருளுமுண்டு என்ற எண்ணம் உறுதிப்படலாயிற்று. அந்த அடிப்படையில் ஓடிய சிந்தனையின் வடிவந்தான் நாடக மயில் என்ற இப் புதிய கட்டுரை.

‘கேகயன் மடந்தை’யின் பின் இதனைப் பிற்சேர்க்கையாகச் சேர்த்துள்ளேன்.

கூனியை விளங்கிக்கொண்டால் ஒழியக் கைகேயியை நன்கு அறிய முடியாதென்பதால் கூனியைப் பற்றிய கட்டுரை முதற்கண் சூழ்ந்த தீவினையாக இடம் பெற்றுள்ளது. இப்புதிய கட்டுரையை இடையே சேர்க்காமல் முதலில் சேர்க்க வேண்டுமென்று முடிவுசெய்து அதற்கு ஏற்ற முறையில் அதனைச் செப்பம் செய்து தந்த திரு. தமிழப்பன் எம்.ஏ.எம்.பில், அவர்கட்கு நன்றி உரியதாகும்.

ஆசிரியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அரசியர்_மூவர்/முன்னுரை&oldid=1663952" இலிருந்து மீள்விக்கப்பட்டது