அறநூல் தந்த அறிவாளர்/அறநெறி அருளிய குருபரர்

விக்கிமூலம் இலிருந்து

6. அறநெறி அருளிய குருபரர்

நெல்லையும் பொருகையும்

தென்பாண்டி நாட்டின் தலைநகரமாகத் திகழ்வது திருநெல்வேலி என்னும் நகரம் ஆகும். இதனை நெல்லை என்றும் சொல்லுவர். இந்நெல்லையைத் தலைநகரமாகக் கொண்டு விளங்குவது திருநெல்வேலி மாவட்டம். இம்மாவட்டத்தில் சிறந்த சிவத்தலங்களும் வைணவத் தலங்களும் உள்ளன. இதில்தான் தமிழ் முனிவன் வாழும் பொதிய மலை உள்ளது. அம்மலையிலிருந்து தோன்றிப் பெருகி வருவதே பொருநை என்னும் திருநதி ஆகும். இதனைத் தண்பொருநை என்றும், தாமிரவருணி என்றும் வழங்குவர். இந்த ஆறு, எப்போதும் தண்மை மாறாத நன்னீரை உடையது. ஆதலின் தண்பொருநை என்று பெயர் பெற்றது. இவ்வாற்று நீர் தாமிரச்சத்து உடையது. ஆதலின் தாமிரவருணி என்றும் பெயர் பெற்றது.

கைலாசமும் திருப்பதியும்

இத்தகைய தண்பொருரையாற்றின் கரையில் ஒன்பது. சிவத்தலங்கள் உள்ளன. அவற்றைப் போன்று ஒன்பது வைணவத்  தலங்களும்களும் உள்ளன. அச்சிவத்தலங்கள் ஒன்பதும் ‘நவகைலாசங்கள்’ என்று போற்றப்படும். வைணவத்தலங்கள் ஒன்பதும் ‘நவதிருப்பதிகள்’ என்று போற்றப்படும். இவற்றுள் கைலாசம் ஒன்றும், திருப்பதி மூன்றும் சேர்த்து சிறந்து விளங்கும் சீவைகுண்டம் ஆகும். சீவைகுண்டத்தின் வடபகுதி கைலாயம் என்றும், தென்பகுதி வைகுந்தம் என்றும் வழங்கப்படும். இத்தலம் திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும். நடுவே அமைந்துள்ளது. வைணவ அடியார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் அவதரித்த குருகூர் இத்தலத்தின் கீழ்த்திசையில் உள்ளது. இக்குருகூரை ஆழ்வார்திருநகரி என்றும் அழைப்பர்.

கோட்டைப் பிள்ளைமார்

கைலாயமும் திருப்பதியும் ஒருங்கு விளங்கும் சீவைகுண்டத்தில் சைவ வேளாளர்கள் சிறந்து வாழ்கின்றனர். கோட்டை கட்டிவாழும் பெருமை, அவ்வூர் வேளாளர்க்கு உண்டு. அவர்கள் ‘கோட்டைப் பிள்ளைமார்’ என்றே கொண்டாடப்படுவர். இன்றும் வேளாளர் வாழும் கோட்டை அவ்வூரில் உண்டு. அங்கு வாழும் பெண்கள் கோட்டையுள் இருந்து வெளியே வருவது இல்லை. ஆண்கள் மட்டுமே வெளியே வந்து போவார்கள், கோட்டையைச் சேர்ந்த ஆண்மக்களையன்றிப் பிறர் உள்ளே செல்லக் கூடாது, வெளியில் இருந்து பெண்மக்கள் எவரும் உள்ளே சென்று வரலாம். இத்தகைய கட்டுப்பாடு இன்றும் இருந்து வருகிறது.

குமரகுருபரரின் பெற்றோர்

சீவைகுண்டத்தில் உள்ள கைலாசப் பகுதியில் சைவ வேளாளர்கள் சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் சண்முக சிகாமணிக் கவிராயர் என்பவரும் ஒருவர். அவர்தம் மனைவியார் ஆகிய சிவகாமியம்மையாருடன் இல்லறம் நடத்தி வந்தார். இவர்கள் இருவர்க்கும் பல்லாண்டுகளாகப் பிள்ளைப்பேறு வாய்க்கவில்லை. அதனைப் பெருங்குறையாக எண்ணி இருவரும் வருந்தினர். ‘ஒருவன் அடைய வேண்டிய செல்வங்களில் முதன்மையானது மக்கட் செல்வம்; அதனை ஒழிந்த பிற செல்வங்களை, யாம் சிறிதும் மதிப்ப தில்லை’ என்றார் திருவள்ளுவர்.

‘பெறுமவற்றுள் யாமறிவ தில்லை, அறிவறிந்த
மக்கட்பே நல்ல பிற’

என்பது பொய்யா மொழி அன்றோ!

மகப்பேறும் மனக்கவலையும்

கவிராயரும் அவர் மனைவியாரும் மகப்பேற்றின் பொருட்டுத் திருச்செந்தூர்ப் பெருமானை வழிபட்டனர். அப்பெருமானை உள் ளத்தில் நினைந்து அருந்தவங் கிடந்தனர். அத்தவத்தின் பயனாக முந்நூற்று ஐம்பது ஆண்டுகட்கு முன்னர் அவர்கட்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. பெற்றோர் அப்பிள்ளையைப் பெரிதும் பேணி வளர்த்தனர். அப்பிள்ளை ஐந்து ஆண்டுகள் கழிந்தும் பேசாதிருப்பதைக் கண்டு கவலை கொண்டனர். நாளடைவில் அப்பிள்ளை பேசலாம் என்று எதிர்பார்த்து இருந்தனர். பின்னர் அது மூங்கைப் பிள்ளை என்று எண்ணி மனம் நொந்தனர். அதனைத் திருச்செந்தூர்ப் பெருமானிடம் கொண்டுவிடக் கருதினர். அதனை அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்குப் புறப்பட்டனர். அப்போது பற்பல நல்ல சகுனங்கள் தோன்றின. அவற்றைக் கண்டு தாயும் தந்தையும் தெளிவு அடைந்தனர்.

முருகன் அருளால் மூங்கை நீங்குதல்

செந்திலம் பதியை அடைந்த பெற்றோர் முருகப்பெருமானை வழிபட்டனர். அங்கு இலை விபூதி பெற்றுப் பிள்ளையை இறைவனிடம் அடைக்கலமாகச் சேர்த்தனர். திருக்கோவிலில் உள்ள சண்முக விலாச மண்டபத்தில் தங்கினர். நாள்தோறும் கடலில் நீராடிப் பெரு மானை வழிபட்டு உண்ணா நோன்பினை மேற்கொண்டிருந்தனர். அங்ஙனம் நாற்பத்தொருநாள் அப்பெற்றோர் பாடு கிடந்தனர். அதன் பயனாகக் குழந்தை வாய் திறந்து பேசத் தொடங்கியது. முருகப்பெருமானே அப்பிள்ளையைத் தட்டி எழுப்பிக் “குமரகுருபரா!” என்று வாய் குளிர அழைத்தார். ‘நின் வாக்கிற்குத் தடை ஏற்படும் இடத்தில் நினக்குப் பரஞானம் கிடைக்கும்’ என்று சொல்லி அம் முருகப்பெருமானார் மறைந்தார். அவ்வோசை கேட்டு எழுந்த பிள்ளை, தன் பெற்றோரைத் தட்டி எழுப்பி அம்மா! அப்பா! என்று பெற்றோர் உளங்குளிர அழைத்தது. ‘கடலில் ஆடிக் கந்தனை வழிபடுவோம்! வாருங்கள்! வாருங்கள்!’ என்று வாய்திறந்து பேசியது. அதனைக் கண்டு வியப்படைந்து அளவில்லாத இன்ப வெள்ளத்தில் பெற்றோர் மூழ்கினர். முருகப்பெருமான் திருவருளை நினைந்து நினைந்து உள்ளம் உருகினர். அப்பெருமானை வழிபடுதற்குப் பிள்ளையுடன் புறப்பட்டனர். கடலில் நீராடி விசுவரூப தரிசனம் செய்தனர்.

குருபரர் குட்டித் திருஞானசம்பந்தர்

பெற்றோருடன் முருகப்பெருமானை வழி போட்டு நின்ற குமரகுருபரர் உளம் உருகிப் பாடத் தொடங்கினார். துள்ளல் ஓசையுடைய வெள்ளைப் பாவால் உள்ளங் குளிரப் பாடி வழிபட்டார். அவர் தம் ஐந்தாண்டுப் பருவத்தில் வாய் திறந்து பேசத் தொடங்கியதும், அருள் செய்த முருகனுக்கே பாமாலை சூட்டினர். அதுவே ‘கந்தர் கலிவெண்பா’ என்னும் செந்தமிழ்ச் சிறுநூல் ஆகும். இச்சிறுநூல் திருவருள் நலம் வாய்ந்தது ஆகும். சிறுவர்கள் இதனை நாள்தோறும் ஓதுவதால் சிறந்த கல்வி நலம் பெறுவர்; அரிய தமிழ் அறிவைப் பெறுவர். இவ்வாறு ஐந்தாண்டுப் பருவத்தில் குமரகுருபரர் முருகன் திருவருளைப் பெற்றார். அதனால் தம் ஊமைத் தன்மை நீங்கி உயர்ந்த கலைஞானம் கைவரப் பெற்றார். முருகன் மீது பாமாலை தொடுக்கும் பைந்தமிழ்ப் புலமையும் பெற்றார். ஆதலின் இவரைக் ‘குட்டித் திருஞானசம்பந்தர்’ என்று சைவர்கள் கொண்டாடுவர்.

குட்டிக் கந்த புராணம்

இவர் முதன்முதல் பாடிய கந்தர் கலிவெண்பா மிகவும் அருமையானதொரு சிறுநூல் ஆகும். முருகப்பெருமான் வரலாற்றைக் கூறும் நூல் கந்த புராணம் எனப்படும். அது பத்தாயிரம் பாடல்களையுடைய மிகப் பெரிய நூல் ஆகும். அந்நால் கூறும் கதையினைக் கந்தர் கலிவெண்பா மிகவும் சுருக்கமாகக் கூறி விளக்குகிறது. ஆதலின் இதனைக் ‘குட்டிக் கந்த புராணம்’ என்று போற்றுவது உண்டு.

வைகுந்தத்தில் குமரகுகுருபரர்

இவ்வாறு முருகன் அருளால் வாய்திறந்து. பாடத் தொடங்கிய பிள்ளையுடன் பெற்றோர் தம் ஊரை உற்றனர். அவர் சுற்றத்தினர் எல்லோரும் செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தனர். செந்தில் கந்தவேள் கருணைத்திறத்தை வியந்து பாராட்டினர். குமரகுருபரர் ஆகிய குழந்தையைக் கண்டு உள்ளத்தில் குதூகலம் கொண்டனர். அவரை வாயார வாழ்த்திப் பெருமானை வணங்கிச் சென்றனர். சிலநாட் கழித்துக் குமரகுருபரர் தாம் பிறந்த ஊரில் எழுந்தருளும் சிவபெருமான் மீது ‘கயிலைக் கலம்பகம்’ என்னும் சிறு நூலைப் பாடினர்,

குமரகுருபரர் சமய வாதம்

சில ஆண்டுகட்குப் பின் குமரகுருபரர் திருநெல்வேலியை அடைந்தார். அங்குள்ள தருமை ஆதீனத் திருமடத்தில் தங்கினார். நெல்லையிலும் அதைச் சூழ்ந்த எல்லையிலும் கிறித்துவ சமயம் பரவுவதைத் தெரிந்தார். இத்தாலிய நாட்டிலிருந்து கிறித்துவப்பாதிரியார் ஒருவர் அப்பகுதியில் வந்து தங்கி இருப்பதை அறிந்தார். அவர் வீரமாமுனிவர் என்ற பெயருடன் கிறித்துவ சமயப்பணி செய்து வந்தார். அவர் தமிழ் காட்டு முனிவர்களைப் போல் கோலம் பூண்டு, தமிழர் உள்ளங்களைக் கவர்ந்து வந்தார். அவர் தமிழைப் பயின்று வீரத்துடன் சொற்பொழிவு ஆற்றினர். அதனால் மக்களைத் தம் சமயத்திற்கு இழுத்தார். அவரைச் சந்தித்துக் குமரகுருபரர் சமயவாதம் புரிந்தார்.

சைவம் காத்த தெய்வக்கவிஞர்

குமரகுருபரரது அறிவையும் ஆற்றலேயும் கண்டு வீரமாமுனிவர் அஞ்சினர். அவர் நெல்லை நகரைவிட்டு நீங்கினர். உடனே குமரகுருபரர் நெல்லேயில் இரு சைவ மடங்களே நிறுவினார். ஊரின் தென்பால் மெய்கண்டார் மடத்தை உண்டுபண்ணினார். வடபால் சேக்கிழார் மடத்தை அமைத்தார். இரண்டு மடங்களிலும் சைவ சமயச் சொற்பொழிவுகள் நடைபெறுமாறு செய்தார். மக்களுக்குச் சைவத்தின் பெருமை தெரியுமாறு அறிவுறுத்தினர். இச்செயலால் குமரகுருபரர் சைவம் காத்த தெய்வக் கவிஞர் ஆனார்.

குருபார் மதுரை அடைதல்

அதன் பின்னர்க் குமரகுருபார் பாண்டி நாட்டில் உள்ள சிவத்தலங்கள் பலவற்றையும் தரிசித்து மகிழ்ந்தார். முருகப்பெருமான் விளங்கும் திருப்பரங்குன்றத்தை அடைந்தார். அங்குள்ள திருமட்டம் ஒன்றில் தங்கினார். மதுரையில் விளங்கும் மீனாட்சியம்மை மீது பிள்ளைத்தமிழ் நூல் ஒன்றைப் பாடினார். இந்நூலை அவ்வம்மையின் சந்நிதியிலேயே அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பினார். கவிஞரின் விருப்பத்தை மீனாட்சியம்மை அறிந்தாள். அதனை நிறைவேற்றத் திருவுளம் கொண்டாள். மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் கனவில் தோன்றினாள். குமரகுருபரரின் பெருமையை அவருக்கு அறிவித்தாள். அவர் பாடியுள்ள நூலைத் தன் திருமுன்பு அரங்கேற்றுவதற்கு வேண்டுவன செய்க என்று அருள்புரிந்தாள். தாயின் இன்னருள் ஆணையைக் கேட்ட திருமலை நாயக்க மன்னர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். குமரகுருபரரை அழைத்து வருமாறு பல்லக்கை அனுப்பித் தாமும் எதிர்சென்று பெரு மகிழ்வுடனும் பணிவுடனும் வரவேற்கலானார். குமரகுருபரர் மதுரைமாநகருக்கு எழுந்தருளினார்.

.

பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம்

திருமலை நாயக்கர், மீனாட்சியம்மையின் திருமுன்பு நூலை அரங்கேற்றுவதற்கு வேண்டுவன செய்தார். நகரில் உள்ள புலவர்களும் கலைஞர்களும் ஒன்று கூடினர். குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் நூலை அரங்கேற்றத் தொடர்ங்கினார். அந்நூல் பத்துப் பருவங்களை உடையது, பருவத்துக்குப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்களைக் கொண்டது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் என்னும் பத்துப் பருவங்களில் ஆறாவதாக விளங்குவது வருகைப் பருவம். அப்பருவத்தின் ஒன்பதாவது பாடல் ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்’ என்று தொடங்குவது. அப்பாடலைக் குமரகுருபரர். இசையுடன் பாடினார். பத்தி வெள்ளம் கரை புரண்டு ஓடுமாறு சித்தம் உருகிப்பாடினார். அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லோரும் இன்ப வெள்ளத்தில் மூழ்கினர்.

அங்கயற்கண்ணியின் அருள்விளையாட்டு

பத்தி வலையிற் படுபவளாகிய மீனாட்சியம்மையும் திருக்கோயில் அர்ச்சகரின் மகள் வடிவில் அங்கு ஓடோடியும் வந்தாள். அங்கிருந்த திருமலை நாயக்க மன்னர் மடியில் அமர்ந்தாள். குமரகுருபரரின் இன்னிசைப் பாடலை மனம் குளிரக் கேட்டு மகிழ்ந்தாள். மன்னரின் கழுத்தில் கிடந்த முத்தாரத்தைக் கழற்றினாள், அதனைக் குமரகுருபரர் கழுத்தில் அணிந்தாள், ‘சைவம் வாழத் தெய்வக் கவிஞனாய் வாழ்க’ என்று வாழ்த்தி மறைந்தாள்.

குருபாருக்குப் பொன் முழுக்கு

மீனாட்சியம்மையின் அருட்செயலைக் கண்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர். இதனைக் கண்ட மன்னர் அளவற்ற மகிழ்ச்சியும் இன்பமும் அடைந்தார். குமரகுருபரரின் பெருமையை அறிந்து வியந்தார். பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் சிறப்புடன் முடிந்தது. மன்னர், கவிஞராகிய குமரகுருபரரைத் தம் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அவரைப் பொன்னால் செய்த ஆசனத்தில் அமரச் செய்தார். பொன்னாலும் மணியாலும் அவர் திருமேனியை முழுக்காட்டினார். அவர் திருவடியில் வீரக்கழலைச் சாத்தினார். யானை, குதிரை, சிவிகை, குடை, கொடி முதலிய பல விருதுகளையும் அவருக்கு வழங்கினார். சில காலம் அவரைத் தம் மாளிகையில் தங்கிச் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

மன்னருக்குத் திருக்குறள் விளக்கம்

மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கிய குமரகுருபரர் அங்கேயே சில நாட்கள் தங்கினார். அந்நாளில் மீனாட்சியம்மைமீது குறம், இரட்டை மணிமாலை முதலிய நூல் களைப்பாடினார். அரச காரியங்களில் ஈடுபட்டிருந்த மன்னர் ஒரு நாள் காலந்தாழ்த்து உணவு கொள்வதைக் குமரகுருபரர் கண்டார். அப்போது மன்னரை நோக்கித் திருக்குறட் பாடல் ஒன்றைச் சொன்னார்.

‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’

என்பது அக்குறள். இதனைக் குமரகுருபரர் கூறியவுடன் அரசர். ‘பாட்டின் பொருள் என்ன? என்று கேட்டார். ‘கோடிக்கணக்கான செல்வத்தைத் தேடி வைத்தாலும் கடவுள் வகுத்த வழியில்தான் அதனை அனுபவிக்க முடியுமே அல்லாமல் தாம் விரும்பிய வாறு அனுபவிக்க ஒருவராலும் முடியாது என்று குமரகுருபரர் அதன் பொருளை விளக்கினார்.

அறநூல் பாடுவதற்கு அரசன் வேண்டுதல்

பாட்டின் பொருளைக் கேட்டுத் தெரிந்த திருமலைநாயக்கர், “இப்பாடல் எந்த நூலில் உள்ளது?' என்று வினவினார். குமரகுருபரர். இது ‘திருக்குறள் நூலில் உள்ள ஒரு குறள்’ என்றார். இதைப் போன்று அந்த நூலில் ஆயிரத்து முந்நூற்று முப்பது அரிய குறட்பாக்கள் உள்ளன என்றும் உரைத்தார். அப்படியானால் அந்த நூலின் கருத்துக்களைச் சுருக்கித் தாங்கள் ஒரு சிறு நூல் ஆக்கித் தந்தருள வேண்டும் என்று அரசர் வேண்டினார். அவ்வாறே செய்து முடிப்பதாகக் கூறினார் குமரகுருபரர். அன்றே ‘நீதிநெறி விளக்கம்’ என்ற அரிய அறநூலைப் பாடத் தொடங்கினார். சில நாட்களில் அதனை முடித்து அரசரிடம் கொடுத்தார்.

அறநூலுக்கு அரசரின் பரிசு

அந்நூலில் அமைந்த கருத்துக்களை எல்லாம் குமரகுருபரர், அரசருக்கு விளக்கினார். உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் உயர்ந்த உண்மைகளைச் சிறியதொரு நூலால் விளக்கிய அவர் திறமையை அரசர் பாராட்டினார். ஆண்டு ஒன்றுக்கு இருபதினாயிரம் பொன் வருவாய் உடையது அரியநாயகிபுரம் என்னும் ஊர். அதனைக் குமரகுருபரருக்கு நன்கொடையாகக் கொடுத்தார். இத்தகைய பெரும் பரிசு ஒன்றைப் பெற்ற அருந்தமிழ் அறநூல் ‘நீதிநெறி விளக்கம்’ ஆகும். இதனை அறிஞர்கள் ‘குட்டித் திருக்குறள்’ என்று கொண்டாடுவர்.

குட்டித் திருக்குறள்

இந்நூலைப் பிற்காலத்தில் தோன்றிய அறநூல்களில் தலைசிறந்தது என்பர். இது நூற்றிரண்டு வெண்பாக்களைக் கொண்டு விளங்குவது. நடையாலும் பொருளாலும் சங்ககாலத்து அறநூல்களுக்கு ஒப்பாக எண்ணத்தக்கது. படிப்பதற்கு இனிமையும் பொருட், செறிவும் உடையது. இதன் சிறப்பை உணர்ந்த பலர், இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளனர். ‘குட்டித் திருக்குறள்’ என்ற பெயருக்கு ஏற்ப, இந்நூலில் திருக்குளின் கருத்துக்களும் தொடர்களும் செறிந்துள்ளன,

வாழ்த்தும் வளமும்

இந்நூல் கல்வி, செல்வம், உலகியல், அரசியல், தவம், மெய்யுணர்வு முதலிய சிறந்த பொருள்களின் இயல்டையும் பயனையும் இனிது விளக்குவது. அறத்தின் சிறப்பை அறிவதற்குக் கல்வி வேண்டும் அல்லவா? ஆதலின் அதன் பெருமையை முதலில் கூறியுள்ளார், நூலின் தொடக்கத்தில் எம்பிரான் மன்றத்தை வழுத்தினார், அந்த வாழ்த்துப் பாடலில் நிலையாமை பற்றிய கருத்துக்களைச் சுருக்கமாக விளக்கி விட்டார், இளமை நீர்க்குமிழியைப் போன்றது. செல்வம் நீரில் எழும் அலைகளைப் போன்றது. உடம்போ நீரில் எழுதிய எழுத்தைப் போன்றது. இவ்வாறு இருக்க, எம்பிரான் மன்றத்தை வாழ்த்தி வணங்காமல் இருப்பது எதனால்? அப்பெருமான் மன்றினை வணங்கித் திருவருள் பெற்று உய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.

இங்கனம் திருக்குறளின் சுருக்கமாக அமைந்த நீதிநெறி விளக்கம் அரியதோர் அறநூல் ஆகும். திருக்குறளில் உள்ள பல அதிகாரங்களின் கருத்துக்களை ஒரு பாடலில் விளக்கும் இந்நூலைக் ‘குட்டித் திருக்குறள்’ என்று குறிப்பது பொருத்தமே அன்றே! குறைந்த சொற்களில் நிறைந்த கருத்துக்களைக் கூறுவது குறள். அக்குறளையும் சுருக்கிக் கூறிய குமரகுருபரரின் கூரிய அறிவை எவ்வாறு போற்றுவது!