உள்ளடக்கத்துக்குச் செல்

அறநூல் தந்த அறிவாளர்/நறுந்தொகை பாடிய நாவலர்

விக்கிமூலம் இலிருந்து

5. நறுந்தொகை பாடிய நாவலர்

அரசர் இருவர்

ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர்த் தென்பாண்டி நாட்டைச் சிற்றரசர்கள் இருவர் ஆண்டு வந்தனர். அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர் ஆவர். அவருள் மூத்தவர் வரதுங்கராமர்; இளையவர் அதிவீரராமர் இருவரும் சிறந்த தமிழ்ப் புலவர்கள். அவர்கள் காவலரும் பாவலருமாய் நாட்டையாண்ட நல்லோர் ஆவர். மூத்தவர் ஆகிய வரதுங்க ராமர் கரிவலம்வந்த நல்லூரில் இருந்து. அதைச் சூழ்ந்த நிலப்பகுதியை ஆண்டார். அதிவீரராமர் கொற்கை நகரிலிருந்து, அதைச்சார்ந்த நிலப்பகுதியை ஆண்டார். பின்னாளில் அதிவீரராமர் தென்காசியைத் தலைநகராகக் கொண்டார். இவரே தென்காசித் திருக்கோவிலைக் கட்டியவர்.

சிறப்புப் பெயர்கள்

அதிவீரராமர் பல சிறப்புப் பெயர்களைப் பெற்றவர். வல்லபன், பிள்ளைப்பாண்டியன், குலசேகரன், குணசேகர வழுதி, தமிழ் வளர்த்த தென்னவன் என்பன அவர் பெற்ற சிறப்புப் பெயர்கள் ஆகும். இவ்வரசர் தம்மைக் ‘கொற்கையாளி குலசேகரன்’ என்று கூறிக் கொள்கிறார். அதனால் இவர் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவர் என்பது புலனாகும்.

அசரும் ஆசிரியரும்

இவ்வரசர் நிரம்ப வழகிய தேசிகர் என்னும் தமிழ்ப் புல்வரிடம் தமிழ் நூல்களைப் பயின்றார். தேசிகர், இவரது அரசவைப் புலவராகவும் விளங்கினார். அவர் மிகவும் கருமையான திருமேனி உடையவர். ஆதலின், அதிவீராமர் ஒருநாள் தம் ஆசிரியரிடம் நீர் அண்டங் காக்கைக்குப் பிறந்தவரோ? என்று நகைச்சுவையாகக் கேட்டார். அது கேட்ட தேசிகர், ‘அரசே! தாங்கள் அன்றோ அண்டங் காக்கைக்குப் பிறந்தவர்? அவ்வாறு இருக்கப் புலவனாகிய என்னை அண்டங் காக்கைக்குப் பிறந்தவன் என்பது பொருந்துமோ?’ என்றார். அண்டங் காக்கை என்ற தொடர் ‘உலகைக் காத்தல்’ என்றும் பொருள் படும். உலகைக் காத்தற்குப் பிறந்தவர் அரசர் என்ற பொருள் தோன்றுமாறு கூறி, மன்னரை மகிழ்வித்தார். புலவரின் நுண்ணறிவைக் கண்ட மன்னர் அவருக்குப் பல பரிசுகளை வழங்கினார்.

மண்டையில் குட்டும் மன்னர்

அதிவீரராமர் தம்மிடம் பரிசு பெறுவதற்கு வரும் புலவர்களைப் பலவாறு சோதிப்பார். தக்க விடையளிக்க முடியாது தத்தளிக்கும் தமிழ்ப்புலவர் மண்டையில் ஓங்கிக் குட்டுவார். ‘நிறைந்த புலமை பெற்றுச் சிறந்த கவிதை பாடுக’ என்று அறிவுரை கூறி அனுப்புவார். ஆதலின் ‘குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இங்கில்லை’ என்னும் பழமொழி வழங்கி வருகின்றது.

நைடதம் பாடிய நாவலர்

நிடத நாட்டை ஆண்ட மன்னன் நளன் என்பவன். அவனுடைய வரலாற்றை வட மொழியில் ஹர்ஷகவி என்பார் காவியமாகப் பாடியுள்ளார். அந்நூல் ‘நைஷதம்’ எனப்படும். அதனையே அதிவீரராமர் தமிழில் ‘நைடதம்’ என்று மொழிபெயர்த்துப் பாடினார். அவர் தமிழ், வடமொழி ஆகிய இருமொழிகளிலும் பெரும்புலமை உடையவர். ஆதலின் வடமொழிக் காவியத்தின் சுவை குன்றாது தமிழில் பாடியுள்ளார். அந்நூலின் பெருமையை அறிந்த புலவர்கள் ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்று போற்றினர். புலவர்களின் அறியாமை

அ.த.அ.—4 நோயைப் போக்கும் அரிய மருந்தாக விளங்தகுது நைடதம் என்னும் காவியம் ஆகும்.

தம்பியின் நூல் கண்ட தமையனார்

நைடதம் பாடிய நாவலராகிய அதிவீரராமர், அதனைத் தம் தமையனாரிடம் அனுப்பினார். அந்நாலுக்குச் சாற்றுக்கவி பெற்று தருமாறும் தூதனிடம் கூறி அனுப்பினார். வரதுங்கராமர், வானவர் தலைவனாகிய இறைவன் புகழையே பாடுபவர். மானிடர் புகழைப் பாடச் சிறிதும் மனம் விரும்பாதவர். ஆதலின்; ‘இந்நூல் எதுபற்றியது?’ என்று தூதனிடம் வினவினார். ‘மாநிலம் ஆண்ட பெருமன்னனாகிய நளனைப் பற்றிய காவியம்’ என்று சொல்லக்கேட்டார். ‘இதனை அரசியாரிடம் கொடுத்துச் சாற்றுக்கவி பெற்றுச் செல்க’ என்று கட்டவாயிட்டார். அவ்வாறே நூலைக் கொண்டுவந்த துதனும் வரதுங்கர் மனைவியிடம் கொண்டு கொடுத்தான். அரசர் விருப்பத்தையும் அறிவித்தான்.

அரசியின் அரிய கருத்து

அரசரின் விருப்பினை அறிந்த அரசி நைடத நூலை ஆர்வமுடன் வாசித்தாள். ‘இந்நூல் வேட்டை நாயின் நடையைப் போன்றும், கரும்பினை அடியிலிருந்து கடித்துத் தின்னுவது போன்றும் அமைந்துள்ளது’ என்று ஓலையொன்றில் தன் கருத்தை எழுதினாள். அதனைத் தூதனிடம் கொடுத்து அனுப்பினாள். தமையனாரின் மனைவி எழுதியனுப்பிய ஓலையை அதிவீரராமர் கூர்ந்து நோக்கினார்.

“ஓகோ! முதலில் விரைந்து ஓடிப் பின்பு இளைத்து வருந்தும் வேட்டை நாயின் நடையைப் போன்று அல்லவா நம் நூல் அமைந்துள்ளதாம். கரும்பின் அடிப்பாகம் மிக்க சுவையுடையதாக இருக்கும். மேலே நுனிப் பாகத்தை நோக்கிக் கடித்துச் செல்லச் செல்லச் சுவை குன்றிப் போய்விடும். அதைப் போன்று நம் நூல் தொடக்கத்தில் மிக்க சுவையுடையதாக இருக்கிறது போலும்! பின்னால் செல்லச் செல்லச் சுவை குறைந்து விடுகிறது. போலும்! நன்றாக நம் நூலை மதிப்பிட்டு விட்டாள் மைத்துனி!. இருவரும் தமிழ்ப் புலவர் என்ற செருக்கால் அன்றோ இவ்வாறு எழுதி விடுத்தாள்! இன்றே தமையனாருடன் போருக்கு எழுவேன். அவரைப்போரில் எதிர்த்து வெற்றி கொள்ளுவேன்” என்று வீறுகொண்டு தம் தமையனார் வரதுங்கருடன் போரிடப் புறப்பட்டார்.



அதிவீரராமர் படையெடுப்பு

அதிவீரராமர் நால்வகைப் படைகளுடனும் சென்றார். வரதுங்கர் வாழும் கல்லுரரின் எல்லையை அடைந்தார். ஆங்கொரு சோலையில் தங்கினார். தமது படையெடுப்பைத் தமையனருக்குத் தெரிவிக்குமாறு தூதன் ஒருவனே அனுப்பினார். அவன் திரும்புவதற்கு நீண்ட நேரம் ஆயிற்று. ஆதலின், தாமே நேரே சென்று தமையனாரைச் சக்திக்க நினைத்தார். நகருள் புகுந்து வரதுங்கர் அரண்மனையை அடைந்தார். தமையனார் சிவபூசை செய்து கொண்டிருப்பதாகச் செய்தி அறிந்தார். அவரது பூசையறையின் பக்கமாகவே சென்று வெளியே காத்திருந்தார்.

வரதுங்கரின் பாடல்

வரதுங்கள் நாள்தோறும் தமது பூசை முடிவில் சிவபெருமான்மீது சொந்தமாகவே ஒரு செந்தமிழ்க் கவி பாடி வழிபடுவார். வழக்கம்போல் அன்றும் ஒரு கவியைப் பாடி வழிபட்டார். 'சிவன் காதுகளில் சங்கையே குண்டலமாக அணிந்தவன். தென்திசையில் உள்ள கரிவலம்வந்த நல்லூரில் எழுந்தருளும் இறைவன். கங்கையைச் சடைமுடியில் தரித்தவன். இத்தகைய சிவபெருமான்மீதே புலவர்கள் எல்லோரும் கவி புனையவேண்டும். அவ்விதம் அல்லாமல் உலகில் பிறந்து இறக்கும் மக்களைப் பாடுவது, நரகில் விழுந்து அழுந்துவதற்கே.' இக்கருத்து அமைந்த பாடலை வரதுங்கர் பாடி வழிபட்டார்.

மன்னரின் மனமாற்றம்

சிவபூசை முடிவில் தமையனார் பாடிய அரிய பாடலை அதிவீரராமர் கேட்டார். அப்பாடலின் கருத்தில் தமது மனத்தைப் பறிகொடுத்தார்; உள்ளம் உருகினார். அவர் உடம்பு நடுங்கியது. தாம் செய்த பிழையை அறிந்து வருந்தினார். அங்கிருந்து பூசை அறைக்குள் ஓடோடிச் சென்றார். தமையனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். தம்மை மன்னிக்குமாறு தமையனாரைப் பன்முறை வேண்டினார். வரதுங்கரோ தம்பியின் செயலைக் கண்டு திகைத்தார். முன்பு நடந்த செய்திகளைப் பிறர் சொல்லக் கேட்டார். தம்பியின் உள்ளத்தை மாற்றிய வள்ளலாகிய இறைவன் அருளைப் பாராட்டினார். தம்பியைத் தம் கரங்களால் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டார்.

அரசியின் அறிவுரை

இவ்வேளையில் அங்கு வந்த வரதுங்கரின் மனைவி நிகழ்ந்ததை அறிந்தாள். அவள் தன் மைத்துனனுக்குச் சிறந்த அறிவுரை கூறினாள். 'அரசே! உடன்பிறப்பு என்பது உயர்ந்த தோள்வலி அல்லவா! அதனை இழக்கத்துணிந்தீரே! இராமனும் பரதனும் போன்ற உடன்பிறப்பு அல்லவா உலகில் உயர்வைத் தரும்! கதிரவன் மைந்தனாகிய சுக்கிரீவனையும், இலங்கை வேந்தனாகிய விபீஷணனையும், பாண்டவரில் ஒருவனாகிய பார்த்தனையும் உடன்பிறப்புக்கு எடுத்துக்காட்டாக, எண்ணாதீர்!' என்று அன்புடன் எடுத்துரைத்தாள்.

'செஞ்சுடரோன் மைந்தனையும் தென்னிலங்கை வேந்
பஞ்சவரில் பார்த்தனையும் பாராதே-விஞ்சு[தனையும்
விரதமே பூண்டிந்த மேதினியை ஆண்ட
பரதனையும் ராமனையும் பார்.'

என்ற இனிய பாட்டைப் பாடினாள். அண்ணியாரின் அறிவுரைபைக் கேட்ட அதிவீரராமர் அகமகிழ்ந்தார்.

நறுந்தொகைச் சிலநூல்

இம்மன்னர், சிறுவர்க்கு அறிவுரை புகட்ட விரும்பினார். சின்னஞ் சிறிய தொடர்களால் உயர்ந்த உண்மைகளை விளக்கினார். அத்தகைய எண்பத்திரண்டு தொடர்களை உடைய சிறுநூலே 'நறுந்தொகை' என்னும் அறநூல். இந்நூல் 'வெற்றி வேற்கை' என்றும் கூறப்படும். இது தமிழ் மணம் கமழும் அரிய கருத்துக்களைத் தொகுத்துக் காட்டும் சிறிய நூல் ஆகும். இந்நூலேக் கற்றுத் தம்குற்றங்களைக் களைவோர் குறைவின்றி வாழ்வார்கள்.

உள்ளங் கவர்ந்த பாடல்

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பான் கல்வியின் சிறப்பை ஒரு பாட்டால் விளக்கியுள்ளான். அப்பாடல் அதிவீரராமரது உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. ஆதலின், அதன் கருத்துக்களேச் சிறுவரும் அறிய வேண்டும் என்று விரும்பினார். எளிய சொற்களைக் கொண்ட தொடர்களால் அப்பாட்டைத் தம்நூலில் விளக்கினார்.

கல்விச் சிறப்பு

'ஆசிரியருக்குத் துன்பம் வந்த இடத்தில் அதனைப் போக்கத் துணை புரிய வேண்டும். மாணவன் தன்னால் இயன்ற பொருளை உதவ வேண்டும். பின் நின்று அவருக்கு வழிபாடு செய்ய வேண்டும். இம்முறையில் ஒருவன் ஆசிரியரிடம் கல்வி கற்றல் நன்மையைத் தரும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களில் கற்ற பிள்ளையிடமே தாய் மிக்கபற்றுக் கொள்வாள். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும்

மூத்தவனை எவரும் வருக என்று வரவேற்க பாட்டார். அவருள் கல்வி அறிவுடைய ஒருவனையே அரசனும் போற்றுவான். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு கலத்திலும் கற்றவனையே மற்றவர் வழிபடுவர்.' இதுவே அப்பாண்டியன் பாடற்கருத்து ஆகும்.

சிறுவர்க்கு அறிவுரை

கல்விச் சிறப்பைப் பற்றிய இக்கருத்துக்களை அதிவீரராமர் சிறுவர்க்கு அறிவுறுத்த விரும்பினார். நெடுஞ்செழியன் பாட்டிற்கு விளக்கம் செய்பவரைப் போன்று சிறுசிறு தொடர்களால் அக்கருத்துக்களை அறிவிக்கிறார்.

'கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.'
'கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
செல்வினுட் பிறந்த பதரா கும்மே.'
'நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றில னாயின் கீழிருப் பவனே.'
'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வரு கென்பர்.'
'அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்.'
'அச்சமுள் ளடக்கி அறிவகத் தில்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சமற் றேமாந் திருக்கை நன்றே.'

அதிவீரராமரின் அரிய புலமை

அதிவீரராமரின் சிறந்த புலமையை நறுந்தொகை நூல் ஒன்றே நன்றாக விளக்கும். இவர் ஏதேனும் ஒரு பொருளைச் சொல்ல நினைத்தால் கருத்துக்கள் வெள்ளம் போல் பெருகி வருகின்றன. 'எந்தப் பொருளும் தனது இயல்பில் என்றைக்கும் மாறாது;' இக்கருத்தை விளக்க முற்படும் அவர் உள்ளத்தில் எத்தனை உவமைகள் உதிக்கின்றன! அடுக்கடுக்காக வரும் அரிய கருத்துக்கள் அவரது ஆழமான அறிவைக் காட்டும். பசுவின் பாலை எவ்வளவு காய்ச்சினாலும் தன் சுவை குறைவதில்லை; பொன்னை நெருப்பில் இட்டு எவ்வளவு உருக்கினாலும் தன் ஒளி குன்றுவதில்லை; சந்தனத்தை எவ்வளவு அரைத்தாலும் தன்மணம் அறுவதில்லை; அகிலை எவ்வளவு புகைத்தாலும் தீய நாற்றம் எழுவதில்லை; சுடலை எவ்வளவு கலக்கினாலும் சேறு ஆவதில்லை! பேய்ச்சுரைக்காயைப் பாலில் இட்டுச் சமைத்தாலும் கசப்பு மாறுவதில்லை; உள்ளிக்குப் பல்வகை நறுமணத்தை ஊட்டினாலும் அது கமழ்வது இல்லை. இவ்வாறு தட்டுத் தடையின்றிக் கருத்துக்களைத் தந்து கொண்டிருக்கும் அவரது செந்தமிழ்ப் புலமை வியக்கத்தக்கது ஆகும்.

பதினான்கு அழகுகள்

குறுந்தொகை நூலின் தொடக்கத்தில் அதிவீரராமர் பதினான்கு அழகுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு தொடரில் ஒவ்வோர் அழகை விளக்கும் அவர் அறிவுத்திறம் பாராட்டுவதற்கு உரியது. எளிய உரைநடையைப் போன்றே பாடல் தொடர்கள் அமைந்துள்ளன. 'கல்விக்கு அழகு கசடற மொழிதல். செல்வர்க்கு அழகு செழங்கிளை தாங்குதல். வேதியர்க்கு அழகு வேகமும் ஒழுக்கமும். மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை. வாணிகர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல். இவ்வாறு வரும் சிறுசிறு தொடர்கள் எவ்வளவு சிறந்த உன்மைகண விளக்குகின்றன!

பெரியரும் சிறியரும்

உருவால் பெரியவர் எல்வோரும் பெரியவர் ஆகார். உருவால் சிறியவர் எல்லோரும் சிறியவரும் ஆக மாட்டார். இக்கருத்துக்களை அதிவீரராமர் இரண்டு உவமைகளைக் கொண்டு விளக்கியுள்ளார். அக்கருத்துக்கள் சிறுவர் உள்ளத்திற்கு அரிய விருந்தாய் அமைவன ஆகும். பனம்பழத்தில் உள்ள விதை பருமன் ஆனது. அதை விதைத்தால் உண்டாகும் மரமோ வானை அளாவி வளர்கின்றது. அது கட்டுக் கட்டான மட்டைகளைக் கொண்டு நின்றாலும் அதன் நிழலில் ஒருவர் கூட ஒதுங்க முடியாது. அது போலவே உருவால் பெரியவர் எல்லோரும் பெரியவர் ஆகமாட்டார் என்று விளக்கினார்.

ஆலம் விதையின் அருமை

ஆலமரத்தில் தோன்றும் பழம் சிறிய தாகவே இருக்கும். அப்பழத்தினுள் இருக்கும் விதையோ மிகவும் சிறியது. அது மீன் முட்டையைக் காட்டிலும் நுண்ணிதாக இருக்கும். அவ்வளவு மிகச் சிறிய விதையிலிருந்து முளைத்து வரும் மரமோ மிகப் பெரியது. அந்த ஆலமரம் விழுதுகள் விட்டுப் படர்ந்து வளர்ந்து விட்டால் அது எவ்வளவு பேருக்குப் பயன்படும்! அரசன் ஒருவன் தன் நால்வகைப் படைகளுடனும் அதன் நிழலில் தங்கலாம். அவ்வளவு பெரிய மரமாகப் பரவிப் பெருகி வளரும் பண்புடையது. அது போலவே உருவால் சிறியவர் எல்லோரும் சிறியவர் அல்லர். அவர்கள் அறிவாலும் திறனாலும் பெரியவராக இருப்பர். ஆதலின் உருவைக்கண்டு ஒருவரை இகழக்கூடாது என்று அவர் விளக்குவது வியப்பைத் தருகிறது.

இவ்வாறு நறுந்தொகை நூல் உருவால் சிறியதாயினும் உயர்ந்த கருத்துக்களால் பெரியது. அதனைப் பாடிய அதிவீரராமர் மதிநுட்பம் பெரிதும் உடையவர் என்பதை இந்நூலால் அறியலாம். சிறுவர்க்குக் கூறிய செந்தமிழ் நூலாகத் தோன்றினாலும் பெரியோர்க்கும் உரிய விருந்தாகவும் இந்நூல் விளங்குகின்றது.