உள்ளடக்கத்துக்குச் செல்

அறநூல் தந்த அறிவாளர்/திருக்குறள் அருளிய தெய்வப்புலவர்

விக்கிமூலம் இலிருந்து



2. திருக்குறள் அருளிய தெய்வப் புலவர்

உலகப் பொது மறை

தமிழில் தோன்றிய அறநூல்கள் பலவற்றிலும் தலைமை வாய்ந்தது திருக்குறள் என்னும் தெய்வ நூலே ஆகும். அந்நூல் உலகிலேயே தலைசிறந்த அறநூல் என்று உயர்வாகக் கொண்டாடப் பெறும் சிறப்புடையது. ஆதலின் 'உலகப் பொது மறை’ என்றே கற்றறிந்தோர் அந்நூலை உவந்து போற்றுவர். எந்த நாட்டினரும் ஏற்றுப் போற்றும் இனிய நீதிகளைச் சிறிய பாட்டுக்களால் அரிய முறையில் விளக்குவது அந்நூல்.

திருக்குறள் தமிழ் வேதம்

இரண்டு அடிகளுக்குக் குறைந்த பாடல், நம் இனிய தமிழ் மொழியில் இல்லை. ஆதலின் இரண்டு அடிகளால் ஆகிய சிறிய பாட்டைக் 'குறள்' என்று புலவர் குறித்தனர். அத்தகைய குறட்பாக்களால் ஆக்கப்பெற்ற அறநூலைக் 'குறள்' என்றே கூறினர். இந் நூலின் உயர்வை அறிந்த முன்னோர் திருக்குறள் என்று அடைமொழி கொடுத்துப் பாராட்டினர். இந்நூல் தமிழ் வேதம், என்று புலவர்களால் போற்றப்படும்.

குறளைக் குறிக்கும் பிற பெயர்கள்

இத்தகைய திருக்குறளைக் குறிக்கத் தமிழில் பல பெயர்கள் வழங்குகின்றன. இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளைப் பெற்றிருப்பதால் 'முப்பால்' என்று பெயர் பெற்றது, வடமொழி வேதத்துக்குப் பின்பு தோன்றிய தமிழ் வேதம் ஆதலின் 'உத்தர வேதம்' என்றும் உரைக்கப்படும். மருந்தைப் போல் மக்களை வாழ்விக்கும் திருந்திய உண்மைகளை உரைப்பதால் 'வாயுறை வாழ்த்து' என்றும் வழங்கப்படும். என்றும் பொய்க்காத உண்மைகளைப் புகல்வதால் 'பொய்யா மொழி' என்றும் போற்றப்படும். வள்ளுவர் தம் வாழ்க்கையின் பயனாக இந்நூலை இயற்றினார். ஆதலின் 'திருவள்ளுவப் பயன்' என்றும் குறிக்கப்படும்.

நூலும் நூலாசிரியரும்

தமிழ் இலக்கணத்தில் கருத்தா ஆகுபெயருக்கு எடுத்துக் காட்டாகத் 'திருவள்ளுவர் படித்தான்' என்ற தொடரே காட்டப்படும், அகத்தியம், தொல்காப்பியம் என்ற பெயர்கள் அந்நூல்களை இயற்றிய ஆசிரியர்களின் பெயர்களே. எனினும் அவை ஈறுதிரிந்த பெயர்களாகவே இருக்கின்றன. ஆசிரியர் பெயரை உள்ளவாறே கூறி, நூலை உணர்த்தும் இயல்பு அவற்றுக்கு இல்லை. ஆனால் திருவள்ளுவர் என்ற ஆசிரியரின் பெயர் சிறிதும் வேறுபடாது நின்று நூலைக் குறிப்பதைக் காண்கிறோம். ஆதலின், திருக்குறளைப் பற்றிப் பேசினாலும் ஆகுபெயர்ப் பொருளால் திருவள்ளுவரைப் பற்றிப் பேசிய தாகவே அமையும்.

திருவள்ளுவரின் பிற பெயர்கள்

இவ்வாறே திருவள்ளுவரைக் குறிக்கவும் பல பெயர்கள் வழங்குகின்றன. முதற்பாவலர், தெய்வப் புலவர், தேவர், நாயனார், நான்முகனார், மாதா நுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் ஆகிய பல பெயர்கள் அவரது அரிய தெய்வப் புலமை குறித்து வழங்குவன ஆகும். தமிழில் முதன்மையான பாடலாகிய குறட்பாவால் தமது நூலை ஆக்கியவர் திருவள்ளுவர். ஆதலின் முதற்பாவலர் என்று மொழியப் பெற்றார். தாயைப் போன்ற தண்ணருளால் உலகம் நல் வாழ்வைப் பெறுவதற்குத் திருக்குறளை அருளினார் அப்புலவர். ஆதலின் மாதாநுபங்கி என்று ஓதப் பெற்றார்.

குறளின் நறுமணம்

திருவள்ளுவரையும் அவரது திருக்குறளையும் பாராட்டாத புலவர்கள் இல்லை. தமிழ் மணம் எங்கெங்கே உண்டோ, அங்கெல்லாம் திருக்குறளின் நறுமணம் வீசிக் கொண்டே இருக்கும். குறள் மணம் கமழும் இடமெல்லாம் தமிழின் தனி மணம் கமழ்ந்து கொண்டே இருக்கும். தமிழ் வழங்காத பிற நாடுகளில் உள்ள அறிஞர்கள் திருக்குறளின் மொழி பெயர்ப்புக்களைப் படித்து இன்புறுகின்றனர். அங்கே தமிழ் மணம் ஏது? நாமோ தமிழை அறிந்து அதன் வாயிலாகத் திருக்குறளை அறிகின்றோம். அவர்கள் எல்லாரும் குறளின் பொருளை அறிந்து, அதன் வாயிலாகத் தமிழைப் பற்றித் தெரிந்து கொள்கின்றனர். இதனால் தமிழைக் காட்டிலும் திருக்குறள் உலகில் அதிகமாகப் பரவி இருப்பதை அறியலாம். இந்த உண்மையை அறிந்த கவிஞர் ஆகிய பாரதியார்,

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’

 என்று வாயாரப் புகழ்ந்தார். ஏறத்தாழ எண்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ள இந்நூல் உலக மக்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ளது அல்லவா?

திருக்குறளின் அமைப்பு

இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களைத் தெளிவாக விளக்கும் திறம் உடையது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. உலகிற்கு இன்றியமையாத உண்மைகளை நூற்றுமுப்பத்துமூன்று தலைப்புக்களில் சிறப்பாக விளக்குவது. அத்தலைப்புக்கள் அதிகாரங்கள் என்று கூறப்படும். அதிகாரம் ஒன்றிற்குப்பத்துக்குறட்பாக்களாக ஆயிரத்து முந்நூற்று முப்பது அரிய பாக்களைத் தன்பால் கொண்டு விளங்குவது. இல்லறவியல், துறவறவியல், அரசியல், அமைச்சியல், அங்கவியல், களவியல், கற்பியல் என்னும் முக்கியமான உட்பிரிவுகளைக் கொண்டு ஒளிர்வது. பாயிரம் என்னும் அடிப்படையின் மீது எழுப்பிய எழுநிலை மாடத்தைப் போன்று திகழும் திருக்குறள், தெய்வத் தமிழ் ஒளி வீசும் அறிவுத் திருமாளிகையாகும்.

வள்ளுவருக்கு அணிந்த பாமாலை

இத்தகைய திருக்குறளையும் இதனைப் பாடிய திருவள்ளுவரையும் பாராட்டுவதற்கே ஒரு நூல் தோன்றியது. அதுவே திருவள்ளுவ மாலை என்னும் பாமாலையாகும். இந்நூலில் உள்ள ஐம்பத்து மூன்று பாக்களும் தனித்தனி வெவ்வேறு புலவர்களால் பாடப் பெற்றவை. இங்ஙனம் ஒரு நூலைச் சிறப்பித்துப் பாடிய தனி நூல் வேறு எந்த நூலுக்கும் இல்லை. இது திருக்குறளுக்கு வாய்த்த ஒரு தனிப்பெருமை யாகும்.

திருக்குறள் கற்பக மலர்

திருக்குறள் கற்பக மரத்தில் மலர்ந்த பொற்புடைய தெய்வத் திருமலரைப் போன்றது; எக்காலத்திலும் தன் அழகு கெடாதது; நெடுங்காலம் கழிந்தாலும் நிலைபெற்று மலர்ந்திருப்பது; அரிய கருத்துக்களாகிய தேனைச் சொரியும் திறம் வாய்ந்தது என்று இறையனார் தம் பாடலில் பாராட்டியுள்ளார்.

திருக்குறள் தலைக்குத்து மருந்து

சங்கப் புலவருள் சாத்தனார் என்பவர் ஒருவர். அவர் சீத்தலை என்ற ஊரில் தோன்றியவர். மதுரையில் தானியங்களை விற்கும் வணிகராக விளங்கினார். அதனால் அப்புலவரை ‘மதுரைக் கூல வாணிகன் சித்தலைச்சாத்தனர்’ என்று அறிஞர் குறிப்பிடுவர். தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறுதற்கு வரும் நூல்களேயெல்லாம் முதன் முதல் பார்வையிட வேண்டியது அப்புலவரின் வேலை. குறைகள் நிறைந்த நூல்களே மிகுதியாகப் பார்த்தும் கேட்டும் அவருக்குத் தலைக்குத்து நோய் பெரிதும் வருத்தியது. அந்நோயால் துன்புற்ற சாத்தனர் திருக்குறள் நூலைக் கேட்ட அன்றே நோய் நீங்கப் பெற்றார். இவ்வுண்மையை அக்காலத்தில் செந்தமிழ்ப் புலவராகவும் சிறந்த மருத்துவராகவும் திகழ்ந்த மருத்துவன் தாமோதரனார் என்பார் விளக்கியுள்ளார்.

‘மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு’

என்பது அப்புலவரின் வாக்கு ஆகும்.

முப்பாலும் முப்புலவரும்

திருக்குறள் நினைப்பவர் சிங்தைக்கு இனிப்பது; கேட்பவர் செவிகட்கு இனிப்பது; ஒதுவார் வாய்க்கு இனிப்பது; தொடர்ந்து வரும் இருவினைப் பிணியை அறுக்கும் மருந்தாவது என்று கவுணியனார் இந்நூலைப் போற்றினார். திருக்குறளின்  நறுஞ்சுவைக்குத் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒப்பாகாது. அத்தெள்ளமுதை உண்டவர் தேவர்களே, ஆனால், திருக்குறள் என்னும் அமுதையோ உலக முழுதும் உண்டு மகிழும் என்று ஆலங்குடி வங்கனார் அகம் மகிழ்ந்து பாராட்டினார். இந்நூலில் எல்லாப் பொருளும் சொல்லப்பட்டுள்ளன. இதில் சொல்லப்படாத பொருள் எதுவுமே இல்லை என்று புகழ்ந்தார் மதுரைத் தமிழ் நாகனார்.

நத்தத்தனார் நல்லுரை

ஒருவன் திருக்குறளில் உள்ள ஆயிரத்து முந்நாற்று முப்பது அரிய குறட்பாக்களையும் ஒதி உணர்ந்தால் போதும்; அவன் வேறொரு நூலைக் கற்கவோ கேட்கவோ வேண்டாம்; அவன் வீறு பெற்ற தமிழ்ப் புலவனாக விளங்கலாம் என்று நத்தத்தனார் என்னும் நற்றமிழ்ப் புலவர் நயம்படக் கூறினார்.

பாணர் பாராட்டு

திருமால் தன் திருவடிகள் இரண்டால் மூவுலகையும் தாவி அளந்தான்; திருவள்ளுவரோ தாம் பாடிய குறள் வெண்பாவின் ஈரடிகளால் உலக மக்கள் உள்ளத்தையெல்லாம் ஆராய்ந்து அளந்தார். இவ்வாறு பரணர், திருவள்ளுவரைப் பாராட்டினார்.

திருக்குறள் உரையாசிரியர்கள்

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறள் நூலுக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே பத்து உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர்

‘தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பருதி, பரிமே லழகர், --திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்
                 வள்ளுவர் நூற்(கு)
எல்லையுரை செய்தார் இவர்.’

இப்பாட்டால் திருக்குறள் உரையாசிரியர்கள் பதின்மரையும் அறியலாம். இவர்கட்குப் பின்னால் தோன்றிய உரைகளும் பல உள்ளன. இங்கனம் ஒரே நூலுக்குப் பலர் உரை எழுதிய பெருமை, வேறு நூலுக்கு இல்லை. இவ்வுண்மையும் திருக்குறளின் பெருமையை விளக்குவது ஆகும்.

தமிழர் தவக்குறை

அறிவுக் களஞ்சியமாக விளங்கும் திருக்குறள் ஆகிய அறநூலைப் பாடியருளியவர் திருவள்ளுவர் ஆவார். இவரைத் ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ என்றே எல்லோரும் சொல்லுவர். இவரது உண்மை வரலாற்றை நாம் உணர முடியவில்லை. அது தமிழர் செய்த தவக்குறையே ஆகும். அவ்வாறே பழந்தமிழ்ப் புலவர்கள் பலருடைய வரலாறுகளும் தெரிய வழியில்லை. மேல் காட்டு அறிஞர்கள் தம் வரலாற்றைத் தாமே நூலாக வரைந்து கொடுக்கும் வழக்கம் உடையவர்கள். அவ்வழக்கம் நம் தமிழ்ப் புலவர்களிடம் அமையவில்லை. தம்மைப் பற்றிய வரலாற்றைத் தாமே வரைந்து வைப்பது பெருங்குற்றமாகும் என்று தமிழ்ப் புலவர்கள் எண்ணியிருக்க வேண்டும். அதனால் வந்த கேடே, திருவள்ளுவர் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள முடியவில்லை.

வள்ளுவரைப் பற்றிய கதைகள்

திருவள்ளுவரைப் பற்றி நம் காட்டில் எத்தனையோ கதைகள் வழங்கி வருகின்றன. அவற்றுள் எந்தக் கதைக்கும் எள்ளளவு ஆதாரமும் இல்லே. ஆனல் சில வரலாறுகள் அவருக்குப் பெருமை அளிப்பன; சில வரலாறுகள் மிக்க இழிவைத் தருவன. வள்ளுவர்பால் கொண்ட எல்லையற்ற அன்பின் காரணமாக நல்ல கதைகள் தோன்றியிருக்க வேண்டும். அவர்பால் கொண்ட பொறாமை காரணமாக இழிவைத் தரும் அழிவுக் கதைகளைச் சிலர் புனைந்திருக்க வேண்டும்.



கபிலரும் கபிலர் அகவலும்

'கபிலர் அகவல்' என்னும் சிறு நூலில் வள்ளுவரின் பிறப்பு வளர்ப்புச் செய்திகள் சொல்லப்படுகின்றன. அவை யெல்லாம் வள்ளுவருக்கு இழுக்கைத் தருவனவே ஆகும். அந்நூல் கபிலரால் பாடப் பெற்றது அன்று என்பதற்கு அதுவே தக்க சான்று. கபிலர். சங்க காலப் புலவர். அவர் பாரி என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பெற்றவர். அவருடைய பாடல்கள் புறநானூறு போன்ற சங்க நூல்களில் உள்ளன. அந்தப் பாடல்களின் நடைக்கும் 'கபிலர் அகவல்' பாடல் நடைக்கும் மிக்க ஏற்றத் தாழ்வு உண்டு. இச்செய்தி ஒன்றே கபிலர் அகவல், சங்கப் புலவர் கபிலரால் பாடப்பெற்றது இல்லை என்பதற்குத் தக்க சான்று ஆகும்.

கபிலர் அகவல் காட்டும் கதை

திருவள்ளுவர், பகவன் என்ற அந்தணனுக்கும், ஆதி என்ற புலைப்பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தார் என்று கபிலர் அகவல் கூறுகிறது. மேலும் அப் பகவன், தனக்கு அப் புலைப் பெண் வயிற்றில் பிறந்த குழந்தைகளைப் பிறந்த இடத்திலேயே பிறந்த அன்றே விட்டுச் சென்றான்; மகவு ஈன்ற தாயை, ஈன்ற அப்பொழுதே அவ்விடத்தினின்றும் அழைத்துச் சென்றான்; அத்தாயாகிய புலைகளும் விலைமகளைப் போல் பெற்ற பிள்ளையிடம் சற்றும் அன்பின்றி விட்டு அகன்றாள். இவ்வாறு கூறும் கட்டுக்கதையின் போக்கை என்ன வென்று சொல்வது! இவையெல்லாம் பிற்காலத்தவர் புனைந்து வைத்த பொய்க்கதை என்றே கொள்ள வேண்டும்.

கொக்கென்று நினைத்தனையோ, கொங்கணவா?

திருவள்ளுவர் வாசுகி என்னும் பெண்ணை மணம் புரிந்து இல்லற வாழ்வை நடத்தினார் என்பர். ஒரு நாள் வாசுகி தன் கணவருக்கு உணவு படைத்து கொண்டிருந்தாள். அப்போது வீட்டு வாயிலில் பிச்சைக்காரன் ஒருவன் 'அம்மா! சோறிடுக!' என்று கூவி நின்றான். கணவருக்குப் பணி செய்து கொண்டிருந்த வாசுகி சிறிது காலந் தாழ்த்து, உணவை எடுத்துக் கொண்டு வாயிலுக்கு வந்தாள். அங்கு நின்ற பிச்சைக்காரன் பெருங்கோபத்துடன் வாசுகியை நிமிர்ந்து நோக்கினான். அதைக்கண்ட வாசுகி, 'கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா?' என்று வினவினாள்.

வாசுகியின் கற்பு வல்லமை

வாசுகியின் சொற்களைக் கேட்ட பிச்சைக்காரன் பெரிதும் வியந்தான். “என்ன வியப்பு! கொங்கணன் என்னும் நம் பெயரை எவரும் அறியாரே! காட்டின் இடையே நம்தலையில் எச்சமிட்ட கொக்கை ஏறெடுத்துப் பார்த்தோம். அது எரிந்து சாம்பல் ஆயிற்று. அச்செய்தியை நாட்டில் எவரும் அறியார். ஆனால் இப்பெண் வீட்டில் இருந்த வண்ணம் எங்ஙனம் தெரிந்து வினவினாள்? இவள் தனது கற்பின் வல்லமையால் உணர்த்து ஓதியிருக்க வேண்டும்! இன்னும் இங்கு நின்றால் நம்மையும் தனது கற்பால் எரித்து விடக்கூடும்" என்று அஞ்சி நெஞ்சம் பதறினான். உடனே தான் வாழ்ந்த காட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

இவ்வரலாறு, வள்ளுவரது வாழ்க்கைச் சிறப்பையும், வாசுகியின் கற்பு மாண்பையும் விளக்குவது அன்றோ? இதைப் போன்ற பல வரலாறுகள் திருவள்ளுவருக்கு உலகத்தார் தந்த பெருமைக்குச் சின்னமாகத் திகழ்கின்றன.

அரசரின் அணுக்கச் செயலாளர்

தமிழ் நாட்டு அரசர்களிடம் அணுக்கச் செயலாளராகப்பணி புரிந்தவர்கள் 'வள்ளுவர்' என்று பெயர் பெற்றனர். அவர்கள் அமைச்சரைக் காட்டிலும் சிறந்தவர் ஆவர். 

வயதாலும் அறிவாலும் முதிர்ந்தவரே வள்ளுவத் தொழிலை ஏற்பார்கள். வள்ளுவர் வீதியின் வழியே செல்லும்போது, அவரைச் சுற்றிச் சேனைகள் அணிவகுத்துச் செல்லும். மெய்க்காப்பாளர்கள் பலர் சூழ்ந்து செல்லுவர். வள்ளுவரைச் சுற்றிக் காத்துச் செல்லும் சேனை 'செல்வச்சேனை' என்று சிறப்பிக்கப்படும். அப்படையில் பணிபுரியும் வீரர்கட்கு அதிக ஊதியம் உண்டு.

வள்ளுவரின் கடமைகள்

நாம் நம் வீட்டில் நடைபெறும் திருமணத்திற்கு ஊரழைக்க வேலைக்காரனை அனுப்புவோமா? அது முறையாகுமா? நாம் நேரே சென்று அழைப்போம்; அல்லது நம்முடன் நெருங்கிய உறவினரைப் போகச் சொல்லுவோம். அரசன் மகளுக்கோ அல்லது மகனுக்கோ திருமணம் என்றால் அரசன் தான் ஊரமைக்க வேண்டும். ஆனால் அந்த அரசனுக்குப் பதிலாக அவனுக்கு ஒப்பான சிறப்புடைய வள்ளுவர் சென்று ஊரழைப்பார். அரசன் கூறும் செய்திகளை மூன்று சிறந்த நாட்களில் குடிமக்களுக்கு அறிவிக்கும் கடமை வள்ளுவருக்கு உண்டு. அரசன் நடத்தும் திருநாள், திருமண நாள், போர்  தொடங்கும் படை நாள் ஆகிய மூன்று நாட்களிலும் அரசன் சார்பாக வள்ளுவர் அச்செய்திகளை மக்களுக்கு அறிவிப்பார். அமைச்சரைக் காட்டிலும் மேன்மை வாய்ந்த வள்ளுவர் அறிவித்தால்தான் மக்களும் ஒப்புக் கொள்ளுவர்.

வள்ளுவர் கோலமும் பணியும்

வள்ளுவர் அவ்வாறு அரசன் ஆணையை அறிவிக்கச் செல்லும் போது பட்டத்து யானையின் மேல் அமர்ந்து கொள்வார். வெண்பட்டு உடுத்தி, வெண் சந்தனம் பூசி, வெள்ளை மாலை அணிந்து கொண்டு யானையின் மேல் விளங்குவார். அந்த யானை செல்லும் போது, அவரைச் சுற்றிப் படைகள் அணி வகுத்துச் செல்லும். அவர் யானையின் பிடரியில் வைத்த வீர முரசினை முழக்கிக் கொண்டு மக்களுக்குச் செய்தியை அறிவிப்பார். அம்முரசிற்கு வழிபாடு செய்த பிறகே, அது யானையின் மேல் ஏற்றப்படும். வள்ளுவர் முழக்கும் முரசில் வெற்றித் தெய்வம் வீற்றிருப்பதாக எண்ணுவர்.

அரசுக்கு அச்சாணி

இத்தகைய சிறப்பு வாய்ந்த வள்ளுவர் மரபில் தோன்றியவரே திருக்குறளை இயற்றியறிய ஆசிரியர் ஆகிய திருவள்ளுவர். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஒருவனுக்கு உற்ற ஆட்சித் துணைவராய் அவர் விளங்கினார். அவனது அரசியலாகிய பெருந்தேருக்கு அச்சாணி போன்று அருந்தொண்டு புரிந்தார். அதனாலேயே ஒரு புலவர், 'செந்நாப் போதார் புனற் கூடற்கு அச்சு' என்று போற்றினார்.

திருக்குறள் இலக்கிய உப்பு

இவர் இயற்றிய திருக்குறள் 'அறநூல்' என்றே புலவர்களால் போற்றப்படும். தமிழில் தோன்றிய அறநூல்கள் எல்லாவற்றிலும் தலைமை வாய்ந்தது திருக்குறளே. இந்நூல் தோன்றிய பின்பு தமிழில் எழுந்த நூல்களில் எல்லாம் இதன் மணம் வீசுகின்றது. ஆதலின் இலக்கியமாகிய உணவுக்குச் சுவை தரும் உப்பு, திருக்குறள் என்பர். இதனை உலகிலேயே தலைசிறந்த நூல் என்று புலவர்கள் போற்றுவர்.