அறநூல் தந்த அறிவாளர்/தமிழ் வளர்த்த சமண் முனிவர்கள்
3. தமிழ் வளர்த்த சமண் முனிவர்கள்
கடைச் சங்க காலத்திற்குப் பின்னால் தமிழ் நாட்டில் சமண மதம் பரவத் தொடங்கியது. வட நாட்டிலிருந்து வந்த சமணர் பலர் தென்னாட்டில் குடியேறினர். அவர்கள் தம் மதத்தையும் தமிழ் நாட்டில் பரப்பி வந்தனர். தமிழ் நாட்டின் தலைநகரங்களில் பல சமணச் சங்கங்களை அமைத்தனர். அவற்றின் வாயிலாகத் தமிழர் இடையே சமண மதக் கொள்கைகளைப் பரப்பினர்.
அந்நாளில் வடநாட்டில் தொடர்ந்து பல்லாண்டுகளாகப் பாஞ்சம் வாட்டியது. அதனால் எண்ணாயிரம் சமணர் தென்னாட்டில் குடி புகுந்தனர். அவர்கள் மதுரையில் விளங்கிய பாண்டிய மன்னனைச் சரண் புகுந்தனர். அவனது ஆதரவைப் பெற்று, மதுரையைச் சூழ்ந்துள்ள மலைகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் அருந்தமிழை முனைந்து பயின்றனர். சில நாட்களில் தமிழ்ப் புலவர் களாய்ச் சிறந்து விளங்கினர். அதனால் பாண்டியன் அவையினை அணி செய்யும் புலவர்களாய்த் திகழ்ந்தனர். அரிய தமிழ் நூல்கள் பலவற்றை ஆக்கித் தமிழ்த்தாயை அலங்கரித்தனர். அவர்கள் தமிழுக்கு அருந்தொண்டு புரிந்தனர்.
இத்தகைய சமண முனிவர்களின் தொண்டால் விளைந்த பயனே நாலடியார் என்னும் நல்லற நூலாகும். இந்நூல் தோன்றியது குறித்து வரலாறு ஒன்று வழங்குகின்றது. பஞ்சத்தால் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த சமண முனிவர்கள் வட நாடு மழை பொழிந்து வளம் பெற்ற செய்தியைத் தெரிந்தனர். தங்கள் நாட்டிற்குச் செல்ல விரும்பிப் பாண்டிய மன்னனிடம் விடை வேண்டினர். கற்றவர்களும் நற்றவர்களும் ஆகிய அச்சமணப் பெரியார்களை மன்னன் பிரிவதற்கு மனம் வருந்தினான். பல ஆண்டுகளாகத் தனது அரசவையில் புலவர்களாக வீற்றிருந்த அம்முனிவர்களின் பிரிவு அரசனுக்குப் பெருங்கவலை அளித்தது.
‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்’
என்பார் திருவள்ளுவர். “புலவர்கள் உள்ளம் மகிழுமாறு கலந்து பழகுவார்கள். ‘மீண்டும் இவரை எப்போது காண்போம்?’ என்று எண்ணி இரங்குமாறு பிரிந்து செல்வார்கள். இது புலவர்களின் இயல்பாகும்” என்றார் அத்தெய்வப் புலவர்.
முனிவர்களைப் பிரிவதற்கு வருந்திய பாண்டியன் என்றும் பதில் பேசாது சென்று விட்டான். நாட்டுப் பற்று மிகுந்த அச்சமணர்களோ, அன்று இரவே தம் நாட்டிற்குப் புறப்பட்டனர். அவர்கள் புறப்படும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாட்டை ஏட்டில் எழுதினர். அவ்வேடுகளைத் தாம் தங்கியிருந்த இடத்திலேயே வைத்து மறைத்தனர். மறுநாள் காலையில் மன்னன் செய்தியைத் தெரிந்தான். சமணப் பெரியார்கள் தங்கியிருந்த இடங்களையெல்லாம், தானே நேரில் சென்று பார்வையிட்டான். ஒவ்வொருவர் தங்கியிருந்த இடத்திலும் ஒவ்வொரு பாடல் எழுதிய ஏடு இருக்கக் கண்டான். அவற்றையெல்லாம் எடுத்துப் புலவர்களை நோக்குமாறு பணித்தான். ஒவ்வொரு பாட்டும் வெவ்வேறு கருத்தை விளக்குவது என்று கண்டான். ஒன்றோடு ஒன்று பொருந்தாத கருத்துக்களுடன் அப்பாட்டுக்கள் இருத்தலை அறிந்தான்.
உடனே, பாண்டியன் அவ்வேடுகளை எல்லாம் வையை ஆற்று வெள்ளத்தில் அள்ளி வீசுமாறு கட்டளையிட்டான். அவ்வாறு எறியப்பட்ட எண்ணாயிரம் ஏடுகளில் நானூறு ஏடுகள் மட்டும் வெள்ளத்தை எதிர்த்துக் கரை ஏறின. அவற்றைப் பதுமமனார் என்னும் பைந்தமிழ்ப் புலவரிடம் சேர்த்தான். அவர் அவ்வேடுகளை உற்று நோக்கினார். அவற்றில் உள்ள பாடல்கள் ஒன்றோடு ஒன்று தொடர் உடையனவாக இருத்தலைக் கண்டார் அவற்றை வகைப்படுத்தித் தொகுத்தார்
இவ்வாறு தொகுக்கப்பட்ட நூலில் உள்ளபாடல்கள் எல்லாம் நான்கு அடிகளையுடைய வெண்பாக்கள் ஆகும். ஆதலின், இந்நூலுக்கு ‘நாலடி நானூறு’ என்று பதுமனார் பெயர் சூட்டினார். அவர் விளக்கமான உரையும் வரைந்தார். ‘வேளாண் வேதம்’ என்று இந்நூலை வியந்து போற்றினார். ‘இதன்கண் உள்ள நானூறு பாடல்களும் வேத உண்மைகளாகும். வாழ்வுக்கு வழி வகுக்கும் மொழிகள் ஆகும்’ என்று பாராட்டினார்.
‘நானூறும் வேதமாம் நானூறும் நன்னூலாம்
நானூறும் கற்றற்கு நற்றுணையாம்’
என்பது அப்புலவரின் வாக்கு ஆகும்.
‘மன்னன் வழுதியர்கோன் வையைப்பேர் ஆற்றினிடை
எண்ணி இருநான் கோ(டு) ஆயிரவர்--நண்ணி
எழுதியிடும் ஏட்டுக்குள் ஏடெதிரே ஏறும்
பழுதில்லா நாலடியைப் பார்’
என்னும் பழைய பாடல், ‘நாலடி நானூறு’ என்னும் நூல் தோன்றிய வரலாற்றை விளக்கும்.
இந்நூல் திருக்குறளுக்கு ஒப்பாக வைத்து மதிக்கப்படுவது ஆகும். ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்று வழங்கும் பழமொழிகளில் நான்கு என்பது நாலடியாரைக் குறிப்பது ஆகும்; இரண்டு என்பது திருக்குறளைக் குறிப்பது ஆகும். இவை இரண்டும் தமிழ்ச் சொல்லுக்கு உறுதியைத் தருவன; தமிழ்ச் சொல்லின் அருமையினை
இவ்விரு நூல்களிலேயே காணலாம். இக்கருத்துக்களையெல்லாம் அப்பழமொழிகளால் அறிந்து மகிழலாம்.
நாலடியாரும் திருக்குறளைப் போன்றே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அறத்துப்பால் பதின்மூன்று அதிகாரங்களையும், பொருட்பால் இருபத்துநான்கு அதிகாரங்களையும், காமத்துப்பால் மூன்று அதிகாரங்களையும் கொண்டது. அறத்துப்பால் இல்லறவியல், துறவறவியல் என்று இரண்டு இயல்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. எனினும், துறவறவியலே முதலில் அமைந்துள்ளது. பொருட்பால் அரசியல், நட்பியல், இன்பவியல், துன்பவியல், பொதுவியல், பகையியல், பன்னெறியியல் என்று ஏழு இயல்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. காமத்துப்பால் இன்பதுன்பவியல், இன்பவியல் என்று இரண்டு இயல்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. பொருட்பாலில் வரும் இன்பவியலைத் தலையின்பவியல் என்பர். காமத்துப்பாலில் வருவதனைக் கடையின்பவியல் என்பர். அதிகாரம் ஒன்றிற்குப் பத்து வெண்பாக்கள் வீதம், நாற்பது
அதிகாரங்களும் நானூறு பாடல்களைக் கொண்டுள்ளன. அதனாலேயே ‘நாலடி நானூறு’ என்று பெயர் பெற்றது.
இந்நூல் சிறந்த உவமைகள், உலக நடைமுறைகள், பழமொழிகள், பண்டைக் கதைகள் ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு உறுதிப் பொருள்களை விளக்குகிறது. அழகும், சுவையும் பொருந்த அறங்களைத் திறம்பட விளக்குவது இந்நூலின் சிறந்த பண்பு ஆகும். பழைய நூற்கருத்துக்களில் பொருத்தமானவற்றை இந்நூல் எடுத்தாளும், பொருத்தம் இல்லாதவற்றை மறுத்து உரைக்கும். இந்நூலின் சிறப்பை உணர்ந்த டாக்டர் ஜீ. யூ. போப்பையர், குப்புசாமி முதலியார், அனவரத விநாயகம் பிள்ளை ஆகியோர் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளனர்.
மேன்மக்கள், பிறர் தம்மை இகழ்ந்து பேசினால் அதனைப் பொறுத்துக் கொள்வர். அதற்காகச் சினங் கொண்டு மீண்டும் அவரை இகழ்ந்து பேச மாட்டார். இப்பொருளைச் சிறந்த ஓர் உவமையால் சமண முனிவர் ஒருவர் விளக்குவது மிகவும் நயமாக உள்ளது. ‘கோபங் கொண்ட நாய் ஒருவனைக் கவ்விக் கடித்தது. அதற்காக அவன் மீண்டும். நாயைக் கடிப்பது இல்லை யல்லவா? அது போலவே, மேன்மக்கள் தம்மை இகழ்ந்த வரைத் தாமும் திரும்ப இகழ்ந்து பேசும் இயல்பினர் அல்லர்.’ இங்ஙனம் ஒரு பொருளை எளிதான உவமையைக் கொண்டு விளக்கும் திறம் நாலடியாரில் காணும் நயமாகும்.
‘கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை—---நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்புவோ?
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு!’
இப்பாடல் பொருள் எவ்வளவு அழகுற விளக்கப்படுகிறது!
’மந்தையில் மாடுகள் கூட்டமாக நின்று மேய்கின்றன. அவற்றுள் கன்றையீன்ற பசுக்களும் நின்றன. தாய்ப் பசுவைத் தேடிக் கதறிய கன்று ஒன்றை அக்கூட்டத்துள் ஓட்டினால், அக்கன்று தன் தாய்ப் பசுவைத் தேடிக் கண்டு கொள்ளும். அதைப் போலவே ஒருவன் முற்பிறவியில் செய்த வினை, மறு பிறவியில் அவனை நாடி அடைந்து விடும்' என்கிறார் ஒரு சமண முனிவர்.
‘தேவர்கள் வாழும் வானுலக வாழ்வு இன்பந் தருவதே, கூர்மையான நல்லறிவு கொண்டவர்கள், கேள்வி அறிவு நிரம்பியவர்கள் ஆகியோர் கூடியிருந்து உரையாடி மகிழ்வதால் அடையும் இன்பமே அவ்வானுலக இன்பத்தினும் மேலானது’ என்கிறார் ஒரு சமண முனிவர். ஒருவனுக்கு அமைய வேண்டிய நல்ல பண்புகளைப் பற்றிச் சொல்லுகிறார் ஒரு சமண முனிவர். ‘பிறர் பேசும் இரகசியங்களைக் கேட்பதில் செவிடனாக இருக்க வேண்டும். அயலான் மனைவியைக் காண்பதில் குருடனாக இருக்க வேண்டும். பிறர் மீது புறங்கூறுவதில் ஊமையாக இருக்கவேண்டும். இத்தகைய நல்லொழுக்கங்களை உடையவனுக்கு எந்த அறத்தையும் எடுத்துரைக்க வேண்டுவது இல்லை’ என்கிறார் அச்சமண முனிவர்.
‘பிறர் மறை மின்கட் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இற்கட் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு’
என்பது அம்முனிவரின் அரிய பாடல் ஆகும்.
இங்ஙனம் நானூறு பாடல்களும் நானூறு அறங்களை நயம்படவும் திறம்படவும் விளக்குகின்றன. இத்தகைய நாலடிப் பாக்களைக் கொண்ட நூலை, நம் முன்னோர் ‘நாலடியார்’ என்று ‘ஆர்’விகுதி கொடுத்துப் பாராட்டினர்.