உள்ளடக்கத்துக்குச் செல்

அறப்போர்/இன்பத் திராவிடத்தில் அந்நிய ஆதிக்கம் வளரவிடோம் !

விக்கிமூலம் இலிருந்து

இன்பத் திராவிடத்தில்
அந்நிய ஆதிக்கம் வளரவிடோம் !

அதற்காகத்தான் 'நாட்டு மொழியைக் காப்பாற்ற வீட்டுக்கோர் பிள்ளை தேவை' என்று கூவியழைக்கிறேன். வீட்டுக்கொரு பிள்ளை வேண்டும். அப் பிள்ளையைத் திருப்பியனுப்பக்கூடும் என்று நல்லுறுதி கூறக் கூட எங்களால் இயலாது. வெற்றிகிடைக்கும்வரை உயிரோடு இருந்தால் திரும்புவார்கள்; இன்றேல், தாலமுத்து, நடராஜனைப்போல் தம் கருத்தை மட்டும் விட்டுச் செல்வார்கள். இப்படிப்பட்ட தோழர்கள்தான் நமது போராட்டத்திற்குத் தேவை.

இந்திய உபகண்டத்திலேயே பெரியார் இராமசாமி ஒருவர்தான் வயது மூத்த அரசியல்வாதி. அரசியலில் ஒரு காலத்தில் அவருடைய சகாக்களாயிருந்த தோழர் காந்தியார் மறைந்தார்; அதற்கு முன்பே தாகூர் மறைந்தார்; இன்றுள்ள அரவிந்தகோஷ் இந்தப் பாபிகள் கண்களில் விழிப்பானேன் என்று ஆஸ்ரமத்திலேயே அஞ்ஞான வாசம் செய்கிறார்! எனவே, எஞ்சியுள்ள 70 வயது மூத்த ஒரே ஒரு பெரியார், ஹிந்தி எதிர்ப்பின் தலைவர் என்பதற்காகக் கைது செய்யப்படுவதைத் தமிழர்கள் காணட்டும்; ஓமாந்தூரார் ஆட்சியையும் காணட்டும்.

"இந்தத் தள்ளாத வயதில் அரசியல் லாபத்திற்காகவா சிறை செல்கிறார் பெரியார் ? அல்லது அவரைச் சார்ந்த எங்களுக்குப் பதவி வாங்கிக்கொடுக்கவா அவர் சிறை செல்கிறார்?" என்பவற்றைப் பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்கட்டும் ! அரசியல் பதவி வேண்டுமென்றால் கிளர்ச்சி நடத்தித்தானா பெறவேண்டும்? ஓமாந்தூராரை என் முதுகில் தட்டிக்கொடுக்கும்படி செய்தே என்னால் பதவிக்கு வந்துவிட முடியுமே! அது என்ன கஷ்டமா? ஓமாந்தூரார் சர்க்காரை---காங்கிரஸ் சர்க்காரை---வானளாவப் புகழ்ந்தாலே போதுமே! அதை எதிர்ப்பதில்லை என்ற உறுதி கொடுத்தால் போதுமே! பதவி தானே காலடியில் வந்து விழுமே! யார் இல்லை என்று கூற முடியும்? எங்கள் சகாக்களாயிருந்த சர். ஷண்முகமும், டாக்டர் அம்பேத்காரும் என்ன பாப மன்னிப்புச் செய்துகொண்டு காங்கிரஸ் சர்க்காரில் பதவி பெற்றார்கள்? அவர்களைப்போல் நடந்து சுலபத்தில் பதவி பெறும் வழி எங்களுக்குத் தெரியாதென்றா நினைத்துக்கொண்டீர்கள்? அல்லது எங்களுக்குத் திறமையில்லை, மந்திரி பதவி வகிக்கவோ அல்லது வெளி நாட்டுக்குத் தூதுவராகச் செல்லவோ என்றாவது உங்களால் கூற முடியுமா? எங்களுக்கு வகை தெரியாதா? வக்கில்லையா அல்லது வன்மை யில்லையா? இருந்தும் ஓமாந்தூரார் ஆட்சியிடம் தடியடி பட எங்களுக்குப் பித்தமா பிடித்திருக்கிறது? எங்களுக்குப் பித்தம் பிடித்திருந்தால், எங்கள் சித்தத்தில் இவ்வளவு தெளிவிருக்காதே! பித்தம் யாருக்குப் பிடித்திருக்கிறது? எங்களுக்கா, ஆட்சியாளருக்கா என்பதைப் பொதுமக்களே, நீங்களே சிந்தித் துப் பாருங்கள்!

தினசரி ஆலோசனை!

பெரியாரின் அழைத்த குரலுக்குச் செவிமடுத்து அறப்போருக்குத் தயார் என்று தெரிவித்துக்கொண்ட தமிழ் நாட்டுப் பொது மக்களே! உங்களுக்கு எனது நன்றி. உங்கள் ஆதாவைக் கண்டுகொண்ட தமிழ் நாட்டின் முக்கிய ஏடாகிய 'தினசரி ' எழுதியுள்ளதைப் பாருங்கள். பெரியார் இராமசாமி தனது செல்வாக்கை இதற்குத்தானா பயன்படுத்தவேண்டும்?' என்று எழுதியிருக்கிறது. 'செல்வாக்கற்ற இராமசாமி' என்பது 'தினசரி' அலுவலகம் மட்டிலாவது செல்லரித்துப் போய் விட்டதற்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம்! 'வேறு பல நல்ல காரியங்களுண்டே! அவற்றிற்காகப் பயன்படுத்துவதுதானே' என்று அவர் ஆலோனை கூறியிருக்கிறார். அந்த ஆலோசனை நமக்குத் தெரியும். பெரியாருக்குள்ள செல்வாக்கை, உதாரணமாக, தோழர் சொக்கலிங்கம் அவர்களை மந்திரியாகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ கூட ஆக்கப் பயன்படுத்தலாம்! இன்னும் கொஞ்சம் சுயநலம் இருந்தால், தோழர் வரதாச்சாரியாரை மந்திரியாக ஆக்கிவைக்கக்கூடப் பயன்படுத்தலாம்.

செல்வாக்குப் பெற்றதேன்?

ஆனால், பெரியார் இராமசாமிக்கு இவையெல்லாம் முக்கியமல்லவே. அவர் செல்வாக்குப் பெற்றதே தமிழர்களை அவர்களது அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கிறேன் என்று உறுதி கூறியதன் மூலம்தானே. அதற்குத்தானே அதன் ஆரம்பம் முதல் தொண்டாற்றி வருகிறார். அப்படி இருக்க, தமிழர் நலன் கெட அவர் பார்த்திருக்க முடியுமா? இது தெரியாமற் போனதென்ன, சொக்கலிங்கனார் மூளைக்கு. 'மதுவிலக்குக்காக மறியல் நடத்தட்டுமே' என்கிறார். நடத்துவோம், இப்போராட்டம் முடிந்ததும் ஆனால், 'தினசரி' எழுதிய தலையங்கத்தை மட்டும் யாரும் மறந்துவிடாதீர்கள்! இழந்துவிடாதீர்கள்! நன்றாகப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் ! இந்தப் போராட்டம் ஏதாவது ஒரு வகையில் முடிந்து நாம் கள்ளுக்கடை மறியல் துவக்குவோமானால், அப்போது 'தினசரி' கட்டாயம் வேறு விதமாக எழுதும். அதை நீங்கள் பார்த்து உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். அத் தலையங்கத்தை ஏனோ சற்று அவசரப்பட்டு எழுதிவிட்டார் சொக்கலிங்கனார். அவர், சேலத்திற்கு முன்பு நம் கழகம் இருந்த நிலையை நினைத்துக்கொண்டு நாம் எங்கே மது விலக்கு மறியலில் ஈடுபடப்போகிறோம்?' என்று எழுதிவிட்டார். சேலத்திற்கப்புறம் நமது கழகம் புதிய உருவம் பெற்றிருப்பதை, புதிய உத்வேகம் பெற்றிருப்பதை 'தினசரி' ஆசிரியர் அறியார். அதனால்தான் அப்படி எழுதிவிட்டார். நாம் கள்ளுக்கடை மறியலைத் துவக்கி இருந்திருப்போம். ஆனால் அது தேவையில்லாது சட்ட ரீதியாக மது ஒழிப்பு நடந்துவிட்டது.

கள்ளுக் கடையும் மார்வாரிக் கடையும்

ஆனால் நாடார் கள்ளுக்கடை முன் மறியல் நடத்தும் போது, அதன் அருகில் ஷராப்புக்கடை மார்வாரி மெத்தையில் சாய்ந்துகொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பாலைவன தேசத்தவரான பிர்லாவும், டாடாவும், டால்மியாவும் இங்கு நம் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டிருப்பதை நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?

தொண்டைமண்டலப் பள்ளிமுன் துவக்கிய மறியல் எங்கு போய் நிற்கும் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயம் தொண்டைமண்டலப் பள்ளியோடு நிற்காது. ஹிந்திப் போராட்டம் நடக்கும்போது ஜெர்மன் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட படத்தை மாட்ட டால்மியா கம்பெனி சிமென்ட் பூசப்பட்ட சுவரில் டாடா கம்பெனி தயாரித்த ஆணியை அடிக்கும்போது நம் மனம் சும்மா இருக்குமா? அந்தச் சுவரில் அடிக்கும் ஒவ்வொரு டாடா கம்பெனி ஆணியும் நமது நெஞ்சில் அடிப்பதுபோல் இருக்குமே! அப்போதுதான் நமது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தன் முழு உருவத்தோடு காட்சியளிக்கும்!

கள்ளும், சாராயமும் சொற்ப நேரத்திற்கே, போதை உள்ளவரைக்குத்தான், நம் மனதை மயக்கி நிற்கும். ஆனால், வடநாட்டுக்கலாசாரமோ, வடநாட்டு ஆதிக்கமோ, நம்மை எப்போதும் பீடித்து நிற்குமே! எனவே, அதை முதலில் கவனிக்கிறோம்.

பட்டி. தொட்டி யெல்லாம் பரவும் மறியல்

வடநாட்டு வியாபாரிகளின் கடைகளின் முன் நிச்சயம் நாம் மறியல் தொடங்குவோம். அது ‘தினசரி' ஆசிரியருக்குக் கொஞ்சமேனும் உதவியாயிருக்கக்கூடும். அவரை ஒரு வடநாட்டு கோயங்கா படுத்திய பாட்டை அவர் மறந்தாலும் நாம் மறந்துவிட முடியாது. அதே கோயங்காவிடம் ஒரு தென்னாட்டுச் சிவராமன் சிக்கிச் சீரழியும் பாட்டையும் நாங்கள் அறிந்தேயிருக்கிறோம்

தென்னாட்டவரின் மூளை வடநாட்டவருக்கு ஆட்பட்டு அழியவும், தென்னாட்டவரின் உழைப்பு பர்மாவிலும், மலேயாவிலும், தேயிலை, ரப்பர், காப்பித் தோட்டங்களில் பாழாய்ப் போகவும் நம்மால் பார்த்துக்கொண்டிருக்க மூடியாது.

எனவே, நம் போராட்டம் தொண்டைமண்டலப் பள்ளியிலிருந்து தங்கசாலை நெடுகச் செல்லும்; அங்கிருந்து சைனா பஜார் செல்லும்; மவுண்ட் ரோடு செல்லும்; கோவை செல்லும்; திருச்சி செல்லும்.

எங்கெங்கு ஒரு மார்வாரி, ஒரு குஜராத்தி, ஒரு மூல்தானியன் காணப்படுகிறானோ அங்கெல்லாம் போராட்டம் நடைபெறும். சர்க்காருக்குப் புத்தியிருந்தால் சமரசத்திற்கு வரட்டும். இன்றேல் நம்மாலானதை நாம் தொடர்ந்து நடத்திக்கொண்டு போவோம். சர்க்கார் கடுமையான நடவடிக்கை எடுக்க எடுக்க நமது போராட்டம் கல்வித் துறையை விட்டுப் பொருளாதாரத் துறையில் செல்லும். கல்வித் துறையில் போராட்டம் நடந்தால், நேருவும் பட்டேலும் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பார்கள்; சகித்துக்கொண்டிருக்கவும் முடியும். பொருளாதாரத் துறையில் போராட்டம் துவக்கப்பட்டாலோ அவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அப்போது கூப்பிடுவார்கள், நமது மந்திரிகளை. பிரத்தியேக விமானம் அனுப்பிவைப்பார்கள், உடனே வந்து போகும் படி. உடனே ஏதாவது சமரசம் செய்துகொள்ளும்படியும் கூறிவிடுவார்கள். அப்போதுதான் இந்த மந்திரி சபைக்கும் புத்தி வரும். ஆண்டை ஆணையிட்டாலொழிய ஆளமுடியாதவர்களாக ஆகிவிட்டனர், நமது மந்திரிகள், எடுத்ததற்கெல்லாம் டெல்லி செல்ல நேரிட்ட காரணத்தால்.

1948ல் தங்கசாலையில் துவங்கும் போர் விரைவில் பட்டி, தொட்டி பூராவும் பரவுவது நிச்சயம்!

போர் துவங்குகிற இந்த நேரத்தில்--மாண்பு மிக்க தமிழ் காக்கப் போர் துவங்கும் இந்த நேரத்தில்--நாம் ஓர் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும். போரை மிக மிக அமைதியாக நடத்த நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொண்டர்களுக்குப் பாராட்டு!

போராட்டத்தில் கலந்துகொள்ள முன் வந்துள்ள தோழர்களை நான் மனமாரப் பாராட்டுகிறேன்!

இப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்துபவர் பெரியார். இவர் காங்கிரஸிலிருந்து விலகியது காஞ்சிபுரத்தில். இந்த எதிர்ப்பில் முதலாவது சர்வாதிகாரியாக இருக்கும் வாய்ப்புப் பெற்ற நான் வசிக்குமிடம் காஞ்சிபுரம். எனவே காஞ்சிபுரத்திற்கும் காங்கிரஸிற்கும் ஏதோ பரம்பரைப் பகைமை இருந்து வருகிறது போலும்!

எனவே இந்தி மொழி, அதுவும் சிறு வயதுப் பிள்ளைகளுக்குக் கூடாது என்பதே இன்றைய போராட்டத்தின் கொள்கையேயன்றி, பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் அறவே போகக்கூடாதென்பதல்ல, இப்போது துவக்கியுள்ள போராட்டத்தின் லட்சியம். அவ்வித அரசியல் கபோதித்தனம் காங்கிரசாருக்குச் சொந்தமேயன்றி, இந் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான வகையில் பணியாற்ற முற்பட்டுள்ள வேறு எவருக்கும் இருக்க முடியாது.


விக்டரி பிரஸ், பாலக்கரை, திருச்சிராப்பள்ளி