அறவோர் மு. வ/சான்றோர் பெருந்தகை
1952ஆம் ஆண்டு சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் திடலில் ஐந்தாம் தமிழ் விழா நடைபெறுகிறது. ஒர் 'ஆட்டோகிராப்' (Autograph) நோட்டுடன் டாக்டர் மு. வ. அவர்களை அணுகுகின்றேன். அப்போது நான் 'இண்டர்மீடியட்' வகுப்பில் படிக்கும் மாணவன். பெயர், ஊர், படிப்பு முதலியவற்றைப் பற்றி அன்போடு விசாரிக்கிறார். உடல் நலங்காத்து உழைப்போடு படித்து முன்னுக்கு வர வேண்டுமென்று வாழ்த்தி 'ஆட்டோ கிராபி'ல் தம் கையெழுத்திட்டுத் தருகிறார்.
அன்று, இலங்கை அமைச்சர் திரு. சு. நடேசன் அவர்கள் தலைமையில் 'சங்க இலக்கியம்’ என்ற பொருள் பற்றிப் பேசுகிறார். பாமரர் உலகும் பண்டிதர் உலகும் ஒருங்கே மகிழும் வண்ணம் அவர் பேச்சு அனைவரையும் இழுக்கின்றது. மாணவர்கள் அவர் பேச்சில் மயக்கங் கொள்கிறார்கள். தலைவர் நடேசனார் 'தமிழ்நாட்டின் இலக்கிய நோபல் பரிசாளர்' என்று மு. வ. அவர்களை அவையோருக்கு அறிமுகப்படுத்துகிறார்.
ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து 1954ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அவரிடமே தமிழ் பயிலும் பேறு பெறும் மாணவன் ஆகும் வாய்ப்புப் பெறுவேன் என்று யான் கனவிலும் நினைக்கவில்லை.
அன்று தொடங்கிய தொடர்பு அவர் வாழ்நாளின் இறுதிவரை இடையறவு படாமல் நீடித்ததனை நான் என் வாழ்வின் மிகப் பெரிய பேறு என்று கருதுகின்றேன்.
ஆனால், அவர்கள் மறைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது 7.10.1974 திங்கள் அன்று மாலை 7 மணியளவில் மருத்துவரைப் பார்த்து 'எழுபது ஆண்டுகள்' வரை உயிருடன் இருப்பேன் என்று பாலசுப்பிரமணியனிடம் உறுதிமொழி (Assurance) தந்துள்ளேன். அதன்படி மருந்தில்லாமல் என் உடலை நானே இயற்கை மருத்துவ முறைப்படிக் காத்து ஆறேழு ஆண்டுகள் வாழ்வேன்' என்று அவர்கள் ஆணித்தரமாகக் கூறிய சொற்கள் இன்று என் நினைவை விட்டு நீங்காமல், இன்றும் என் காதுகளில் ஒலிப்பனபோல் இருப்பதனை எண்ணி எண்ணிக் கலங்குகின்றேன்.
1921ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 25ஆம் நாள் திருப்பத்துாரில் பிறந்தவர்கள். வாலாசாவை அடுத்த வேலம் இவர்தம் சொந்த ஊர். பள்ளியிறுதித் தேர்வை 1928ஆம் ஆண்டில் எழுதி நல்ல வெற்றி பெற்றார்கள். கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துத் தலைமையாசிரியர் திருவேங்கடத்தையங்கார் பாராட்டினைப் பெறுவது வழக்கம். பள்ளி நாட்களில் அவரே இவர் தரமும் தகுதியும் ஆற்றலும் அறிந்து பாராட்டி ஊக்குவித்து வந்தார்.
இவருடைய வீட்டில் இவரை, இவரை வளர்த்த பாட்டியார் 'திருவேங்கடம்’ என்ற பெயராலேயே அழைப்பார். பள்ளிப் பெயர் வரதராசன் என்றிருக்க, விட்டில் "திருவேங்கடம்” என்ற பெயராலே வழங்கப் பெற்றார். அந்த அன்புப் பாட்டியின் நினைவில் மலர்ந்ததே 'விடுதலையா' என்ற சிறுகதை.
பதினாறு வயது முடிந்த நிலையில் அரசாங்கப் பணியினை ஏற்றார். திருப்பத்துார் தாலுக்கா அலுவலகத்தில் வரி வருவாய்த் துறையில் எழுத்தரானார். பின்னர் ’ஆப்காரி’த்துறை எழுத்தரானார். அந்தத் துறையில் அக்காலத்தில் லஞ்ச நடமாட்டம் உண்டு. ஆனால் அந்தத் தீமைக்குச் சற்றேனும் ஆளாகாத இவர்கள், கடமையுணர்வோடு பணிகளைத் திறம்பட ஆற்றிய காரணத்தினால் வேலைப்பளு மிகுதியாகத் தரப்பட்ட நிலையில் மூன்றாண்டுகளில் உடல்நலம் குன்றி இரத்த வாந்தி எடுத்துத் தம் பணியினை ராஜினாமா செய்துவிட்டுத் தம் சொந்த ஊரான வேலத்திற்குத் திரும்பினார்.
இவருக்கு இளமை நண்பர்கள் நால்வர் சிறப்பானவர்கள். ஒருவர் மளிகைக்கடை தாமோதர முதலியார், இரண்டாமவர் மண்டிக்கடைக் கணக்கர் குப்புசாமி முதலியார்: மூன்றாமவர் கவிநயம் கந்தசாமி முதலியார்; நான்காமவர் வேலூர் ஊரீசு கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்ற யோகசுந்தரம் ஆவர். இவர்களில் முதலாமவர் தாமோதர முதலியார் முதலில் காலமாகி விட்டார். மற்ற நண்பர்கள் மதுரையில் டாக்டர் மு. வ. அவர்கள் துணைவேந்தராக இருந்தபோது அங்குச் சென்று பத்து நாட்கள் தங்கியிருந்து, பள்ளிக்கூட இளமை நாட்களை நினைவு கூர்ந்து, அந்தக் காலத்திற்கே போய்விட்டவர்களைப் போல் வாழ்ந்தார்கள். தம் நண்பர்களிடம் பிரியாவிடை பெற்ற மு. வ. அவர்தம் குடும்பத்தினர்க்கும் வேட்டி, புடவை, பெட்டி, பை முதலான அன்பளிப்புகளை வழங்கி. பேருந்து வண்டி நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தார். ’பஸ்’ஸில் அமர்ந்ததும் நண்பர்கள் நீங்கள், துணைவேந்தர்; வேலை பல இருக்கும்; போய் வாருங்கள்’ என்று கூற, மு. வ. அவர்கள் சிரித்துக்கொண்டே, ’நான் வீட்டிற்குப் போய் விட்டால் நீங்கள் ஒருவேளை பேருந்து வண்டியை விட்டு என் பின்னாலேயே வீட்டிற்கு வந்து விடுவீர்கள். எனவே நான் உங்களை இருந்து ஏற்றி விட்டுச் செல்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே கேலி பேசினாராம், நண்பர்கள் சூழலில் குழந்தையாகிவிடும் மனத்தை இவரிடம் காணலாம்.
1931ஆம் ஆண்டில் வேலூர் நண்பர் திரு. யோக சுந்தரம் அவர்கள் மூலம் எல்லா நோய்களுக்கும் மருந்து’ எனும் அரிய இயற்கை மருத்துவ நூலை மு. வ. அவர்கள் கண்டார்கள். அந்நூல் இவர் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. பதினாறு வயதில் தொடங்கிய இயற்கை மருத்துவம் இவர் வாழ்நாள் இறுதிவரை நாற்பத்தாறு ஆண்டுகள் தொடர்ந்தது. தம் மக்கள் அரசும், நம்பியும், பாரியும் மருத்துவத்துறை உயர் பட்டங்கள் பெற்று, மருத்துவத்துறையில் உயர்ந்து நிற்கும் நிலையிலும் அலோபதி என்னும் ஆங்கில மருத்துவ முறையில் இறுதிவரை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார். தம் உடம்பிற்கு இயற்கை மருத்துவமே ஒத்துவரும் என்று உறுதியாக நம்பினார். அக்கூற்று எத்துணையளவு உண்மை என்பது அவர் இறுதிநாட்களில் 9.10.74 அன்று நேரடியாக விளங்கியது.
அரசியலில் காந்தியடிகள்பால் ஈடுபாடு கொண்டவர். கட்சி அரசியலை விரும்பாதவர். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய சர்வோதயத் தலைவர் செயப்பிரகாசர் அவர்களே இவருடைய ’அறமும் அரசியலும்’ எனும் நூற் கருத்துகளை இவரை மேடையில் வைத்துக்கொண்டே பாராட்டியிருக்கிறார். காந்தியத்தில் அழுத்தமான பற்றுடையவர் இவர்.
புகழ்ச்சி வேண்டாதவர் மு. வ. திருக்குறளில் வரும் புகழ் என்ற அதிகாரத்தைத் திருவள்ளுவர் இன்று வாழ்ந்திருந்தால் எழுதியிருக்கமாட்டார் என்பார். அமெரிக்காவில் ஊஸ்டர் கல்லூரியில் தாம் கெளரவ டாக்டர் 'டி. லிட்.' பட்டம் பெற்றதனை அவருடன் நெருங்கியிருந்த ஒரு சிலரே அறிவர். புகழ்ச்சி ஒரு சில சமயங்களில் பகைமையினையும் சிலவிடங்களில் வளர்த்து விடும் என்று நம்பினார் இவர்.
இயற்கை மருத்துவ முறையினைத் தேர்ந்து, நலிவுற்றிருந்த தம் உடம்பை மாற்றி நலமடைந்தார். தாமே முயன்று படித்து 1934 ஆம் ஆண்டில் 'வித்துவான் - பிரிலிமினரி' தமிழ்த்தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தாம் படித்த திருப்பத்துார் உயர்பள்ளியில் தம் தமிழாசிரியர் முருகைய முதலியார் ஒய்வு பெற்ற பின் அவ்விடத்தில் தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார். 'ஆப்காரி குமாஸ்தா'வாக இருந்தபொழுது இலஞ்சம் வாங்காமல் நேர்மையாகத் தம் கடமையைச் செவ்வனே ஆற்றிய திறம் உணர்ந்த அக்காலத்தில் அவ்வூரில் அரசியல் செல்வாக்கும் பணச்செல்வாக்கும் பெற்றிருந்த 'ஆப்காரி கான்டிராக்டர்’ நாயுடு அவர்கள் முயற்சியால் இப்பணி இவருக்கு வாய்த்தது. இருபத்திரண்டு வயதில் தமிழாசிரியர் பணி தொடங்கினார் மு. வ.
1935 ஆம் ஆண்டு இவர் வாழ்வில் முக்கியமான ஆண்டு. இவ்வாண்டில் 'வித்துவான்-நிறைவிலை' (Final)த் தேர்வில் மாநிலத்திலேயே முதலாமவராக வந்து, திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றார். இவர் இத்தேர்வு எழுதுவதற்கு இரண்டு திங்களுக்கு முன்தான் 1935 பிப்ரவரியில் தைத்திங்களில்தான் இவர் தம் உறவுப்பெண் மாமன் மகளார் - நாங்கள் வணக்கத்தோடு போற்றும் இராதா அம்மாவைத் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்கு மாமனார் மாப்பிள்ளை உடைக்கென்று ஐம்பது ரூபாய் தர, முப்பது ரூபாயில் வேட்டி, சட்டை, மேல் துண்டு எடுத்துக்கொண்டு, மீதிப்பணத்தை மாமனாரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். திருமணம் வேலத்தில் நடந்தது. மருமகப்பிள்ளையிடம் மாமனாருக்குப் பேரன்பு. பின்னாளில் இவ்வன்பு இருவரிடையிலும் பெரிதும் வளர்ந்தது. மருமகப்பிள்ளை எழுத்துப் பணிக்குத் தடங்கல் வரக்கூடாது என்று, மருமகப்பிள்ளை வீட்டிற்கு வேண்டிய பொருள்களை வாங்கி வந்து போட்டு மு. வ. அவர்களின் குடும்பப் பொறுப்பினைக் குறைத்தவர் மாமனார். இவர் மாமனார் மெச்சிய மருகர். மருகரும் மாமனாரைப் பாராட்டிப் பலமுறை என்னிடம் பேசியிருக்கிறார்.
1939 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகச் சேர்ந்தார். B. O. L. முதல் வகுப்பில் தேறியிருந்த இவருக்கு அப்பணியினைத் தந்தவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புமிக்க முன்னாள் துணைவேந்தர் டாக்டர் இலட்சுமணசுவாமி அவர்கள் ஆவர். கல்வித்துறையில் இவர் மேன்மேலும் உயர அப் பெரியாரே ஊக்கமும் ஆக்கமும் தொடர்ந்து தந்தார். அவரைப் பல சமயங்களிலும் நன்றியோடு நினைத்து நெகிழ்ந்து அப்பா பேச நான் கேட்டிருக்கிறேன்.
'வினைச் சொற்களை' (Origin and development of verbs in Tamil)1944 ஆம் ஆண்டில் M. O. L. பட்டமும் 'பழந்தமிழ் இலக்கியங்களில் இயற்கை' (The treatment of Nature in Ancient Tamil Literature) என்ற பொருள் குறித்து ஆராய்ந்து 1948 ஆம் ஆண்டில் 'டாக்டர்’ பட்டமும் பெற்றார்கள். தமிழ்த்துறையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் 'டாக்டர்' பட்டம் பெற்ற பெருந்தகை இவரேயாவர்.
கல்லூரி நாட்களில் அப்பா அவர்கள் கணக்கற்ற மாணவர்களுக்குப் பொருளுதவி செய்திருக்கிறார்கள். கல்லூரிச் சம்பளம் கட்டாமையினால் ஒரு மாணவர் பெயர் நீக்கப்பட்டிருந்தால், அதனை அறிய வந்தால் அந்த மாணவரும் அதனை அறியாவகையில், சம்பளத்தைக் கல்லூரி அலுவலகத்தில் தாமே கட்டி விடுவார். இதனைப் பின்னர் அம்மாணவர் அறிந்து அவரிடம் சென்றால், பணத்தைத் திருப்பித் தரவேண்டுமே என்று கவலைப்படாமல் கல்வியைக் கவனி; வாய்ப்பு நேருமானால் திருப்பிக்கொடு; இன்றேல் அது குறித்துக் கவலைப்படாதே” என்பார். தேர்வுப் பணம் கட்ட முடியாத மாணவர்க்குத் தேர்வுப் பணம் கட்டுவார். நெடுந்தொலைவிலிருந்து கல்லூரிக்கு வரச் சைக்கிள் வசதி வேண்டும் எனும் நிலையுள்ள மாணவர்க்குச் 'சைக்கிள்' வாங்கித் தந்துள்ளார். இன்னும் இவ்வாறே பலப்பல கொடைகள். 'வலக்கை தருவது இடக்கைக்குத் தெரியக் கூடாது’ எனும் சொல்லிற்கு இயைய, விளம்பரம் இன்றி உதவி செய்வார். அப்பா அவர்கள் வீடு மாணவர் பலருக்கு உணவுச்சாலையாக இருந்தது; பள்ளியறை (இரு பொருளிலும் பயிலுமிடம் - உறங்குமிடம்)யாக இருந்தது. அன்பிற்குரிய அம்மா அவர்கள் இன்முகத் தோடு விருந்து படைப்பார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும். மாணவர்களும் அங்கு உண்டு. இயல்பிலேயே முரட்டுத் தன்மை வாய்ந்த பலரும் அங்குப் பக்குவம் பெற்று இன்று பண்பாட்டின் பாதுகாவலர்களாக ஒளிவிட்டு நிற்கிறார்கள்.
அப்பா அவர்கள் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் படுக்கையைவிட்டு எழுந்து விடுவார்கள். வேப்பங்குச்சியை (பின்னாளில் பிரஷ்) எடுத்து வாயில் வைத்துக் கொண்டு தோட்டமெல்லாம் உலாவிச் செடி கொடிகளைப் பார்த்து வருவார்கள். காலைக்கடன் முடித்துச் சிறிது நேரம் தியானத்தில் - வழிபாட்டில் நிற்பார்கள். இராம கிருட்டிணரும், விவேகானந்தரும், அன்னை சாரதா தேவியும் இவர்கள் நினைவில் நிற்பர். திருநாவுக்கரசர் திருத்தாண்டகப் பாடல்களும், நம்மாழ்வாரின் அகப்பொருட்பாடல்களும், தாயுமான தயாபரரின் பராபரக் கண்ணி, கிளிக்கண்ணிப் பாடல்களும், இராமலிங்க வள்ளலாரின் அருட்பாக்களும், இராமதீர்த்தரின் மணி மொழிகளும் இவர் வழிபாட்டிற்குரிய பாடல்களாகும்.
காப்பி குடிப்பதே இல்லை. குளிர் பானங்களும் குடிக்கமாட்டார்.
எப்போதும் என்ன மழையாக இருந்தாலும் குளிர்ந்த, நீரிலேயே குளிப்பார். காரில் பயணம் செல்லும்போது, காவிரி ஆற்றைக் கண்டால், காரிலிருந்து இறங்கிக் குளித்து விட்டே செல்வார். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் இரண்டாவது மாநாடு திருச்சியில் 1970-ல் நடைபெற்ற போது காவிரியாற்றுக்குக் காலை 5 மணிக்கே எழுந்து நண்பர் மாணவர் அணி ஒன்றனை அழைத்துச் சென்று குளித்து வந்ததனைப் பலரும் அறிவர். இதுபோன்றே இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்களின் நான்காவது மாநாடு 1972ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றபோது, காலையில் எழுந்து அப்பா அவர்கள் எங்களையெல்லாம் அழைத்துக் கொண்டு அரபிக்கடலுக்குச் சென்று குளித்து வந்ததனையும் இன்னும் நெஞ்சம் மறக்கவில்லை. திருச்சி நண்பர் இராசகோபாலன் வீட்டில் தங்கும்போதெல்லாம் காவிரி நீரில் குளித்து அகமகிழ். வதனை அம்மா அவர்கள் சொல்லிச் சொல்லி இன்றும். அகங்குழைவார்கள்.இருபது வயதில் தொடங்கிய காந்தியப் பற்று அப்பா அவர்களின் இறுதிநாள் வரை நிலைத்து நின்றது. நான்கு முழக் கதர் வேட்டியும், கைத்தறி வேட்டியுமே விரும்பி யணிவார். தலைமை சான்ற சிலர் வற்புறுத்தல் காரணமாக ஒரு சில காலமே வேறு உடை அப்பா அவர்கள் வாழ்வில் இடம் பெற்றிருந்தாலும், கல்லூரி நாட்களில் கீழே 'பி அன்ட் சி' (B & C) மில் வெள்ளை 'பேண்ட்'டும் (Pant), மேலே கதர்க்கோட்டும் அவர் உடைகளாக விளங்கின.
1961ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் - பேராசிரியர் பணியேற்ற பின் பெரும்பாலும் அவர் கீழ் உடை கருநிறம் வாய்ந்த மில் துணி 'பேண்ட் ' ஆகவும், மேலே கதர் முழுக்கை 'ஸ்லாக்' (Slack) ஆகவும் இருந்தது. அகாடெமிக் கவுன்சில், செனேட் முதலிய சில முக்கியமான கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது கோட் அணிவார். 'கோட்' ஒன்று எப்போதும் அலுவலக "நிலைப்பேழை” (பீரோவில்) இருக்கும்.
தம்மை ஆளாக்கிய பச்சையப்பர் கல்லூரியினை இவர் என்றும் மறந்ததில்லை. “பச்சையப்பர்". என்ற நூலும், பிற்காலத்தில் பச்சையப்பர் கல்லூரி வழியாகப் போகும் போதெல்லாம், கையால் வணங்கி விட்டு, நெஞ்சால் நினைந்து செல்லும் போக்கு இவர் நன்றியுணர்ச்சியினை நன்கு காட்டும்.
அப்பா எழுதிய நூல்கள் பல திறத்தன. நாவல், சிறு கதை, குழந்தை இலக்கியம், மொழிநூல், இலக்கிய ஆராய்ச்சி, கடிதங்கள் என்று பல துறை நூல்களை எழுதி யுள்ளார்கள். தொடக்கக் கால நூல்கள் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், பாவை, செந்தாமரை முதலியனவாகும். 'செந்தாமரை’க்கு முதலில் இட்ட பெயர் ‘முருங்கை மரம்’ என்பதாகும். பி. ஒ. எல். (ஆனர்ஸ்) முதல் அணி மாணவர் பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி அவர்களே 'செந்தாமரை' என்ற தலைப்பினைத் தந்தார்.
மற்றொரு குறிப்பிடத்தக்க செய்தி, இவர்கள் அணிந்துரை பெற்றது திரு. வி. க. அவர்கள் ஒருவரிடம் மட்டுமே. 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ எனும் நூலிற்குப் பெற்றார். அந்நூலினைப் புரட்சி நூல் எனப் பாராட்டுவர் தமிழ்த்தென்றல் திரு. வி. க.
பி. ஒ. எல். (ஆனர்ஸ்) படித்த முதலணி மாணவர் நால்வர். அந்நால்வரும் இவர்தம் நான்கு நாவல்களுக்கு முன்னுரை - அறிமுகவுரை எழுதியுள்ளனர். 'அல்லி' க்குத் திரு. ம. ரா. போ. குருசாமி அவர்களும், கரித்துண்டுக்குத். திரு சி. வேங்கடசாமி அவர்களும், 'அகல்விளக்கு' திரு கா. அ. ச. ரகுநாயகன் அவர்களும், 'நெஞ்சில் ஒரு முள்'ளுக்குத் திரு. இரா. சீனிவாசன் அவர்களும் முன்னுரை எழுதியுள்ளனர். நூலிற்குப் பாயிரம் மாணவர் தரலாம். எனும் நன்னூல் உரை. அப்பா அவர்கள் மாணவர்க்குத். தந்த அரிய வாய்ப்பால் விளக்கம் பெற்றது.
எண்பதிற்கு மேலும் நூல்களை எழுதிக் குவித்த அப்பா அவர்கள், தொடக்க நாளில் அம்மா அவர்களின் நகைகளை அடகு வைத்தே நூல்களை வெளிக் கொணர்ந்தார்கள் என்பதனைப் பாரி நிலைய உரிமையாளர் சீர்சால் செல்லப்பா அவர்கள் கண்ணீருடன் நினைவு கூர்கிறார்கள்.
புதிதாக மணமான பலருக்கும் வழிகாட்டும் ஆண் பெண் மனப்போராட்டங்களை விளக்கி நிற்கும் 'கள்ளோ காவியமோ' அச்சிடப்பட முடியாமல் ஒரு பதிப்பகத்தில் பல நாள் முடங்கிக் கிடந்தது. பதிப்பாளர் ஆணை பெற்றுத் தாமே முயன்று தேடிக் கையெழுத்துப்படியைக் கொண்டு வந்து, பெண்ணாடம் புதுமைப் பிரசுரத்தின் மூலம் முதலில் வெளியிட்டார்.
சென்னை அரசாங்கப் பரிசினை இவர்தம் ’ஒவச் செய்தி’, ’அரசியல் அலைகள்’, ‘கள்ளோ காவியமோ” ஆகிய மூன்று நூல்களும் பெற்றன.
’திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’, `மொழி நூல்’, ‘விடுதலையா’ ஆகிய மூன்று நூல்களும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டினைப் பெற்றன. 1962ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமிப் பரிசான ரூபாய் ஐயாயிரத்தினை இவர் தம் ’அகல் விளக்கு’ பெற்றது.
இவர் தொடக்க நாளில் எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை’ இதுவரை பல லட்சம் படிகளுக்குமேல் விற்று எல்லாக் காலப் பதிவினை (All time record) ஏற்படுத்தியுள்ளது. ’தமிழ் இலக்கிய வரலாறு’, ’நல்வாழ்வு’ ஆகிய இரண்டும் அண்மைக் காலத்தில் வெளிவந்தன.
இவர்தம் நூல்களிற் காணும் சிறந்த கருத்துகள் சில: ’நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்கவேண்டும் அல்லவா? நன்மை வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு’ (தம்பிக்கு)
’அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கி நட, உரிமைக்காகப் போராடிக் காலங் கழிக்காதே’ (தங்கைக்கு)’
’இன்பத்திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்க வல்லவரைத் தேடு. உறவானாலும் நட்பானாலும் காதலானாலும் இப்படித்தான தேடவேண்டும்’ (அல்லி)இவர் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகும் வழக்கம் உடையவர் இல்லை. குழந்தைகளுக்குக் காது குத்துதல், மொட்டையடித்தல் முதலான சடங்குகளை விரும்புவதில்லை. திருமணம், சாவு தவிரக் காதுகுத்தல், மொட்டையடித்தல், கருவளர் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு வீட்டினர் செல்வதை விரும்புவதில்லை. சோப்புப் போட்டுக் குளிப்பதில்லை. ராகுகாலம், எமகண்டம் பார்ப்பதில்லை. சகுனங்களில் நம்பிக்கை கொள்வதில்லை.
எல்லோரும் இனிதே பாராட்டும் பண்பாளர் அப்பா அவர்கள். அவர்கள் பொன்னுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த, எல்லாக் கட்சியினைச் சேர்ந்த பெருந்தலைவர்களும், கல்வியாளர்களும், எழுத்தாளர்களும், மாணவ ஆசிரியருலகினரும் ஆட்சியாளரும் ஒருங்கு வந்திருந்ததே. அவர்களின் வாழ்வினை வகையுறக் காட்டும்.
எழுபது ஆண்டுகள் வாழ்வேன் என்று கூறிய அப்பா இன்று இல்லை. அவர்கள் அனைவர் நெஞ்சிலும் நினைவிலும் நிறைந்து இன்று வழிகாட்டுகிறார்கள்.