அறவோர் மு. வ/'தங்கைக்கு'

விக்கிமூலம் இலிருந்து

"தங்கைக்கு"-ஓர் ஆய்வு

டாக்டர் மு. வ. அவர்கள் நல்ல தூய சிந்தனையாளர். அவர் எழுதிய நூல்களைப் படிப்போர் அவர் அந்நூல்களில் தந்துள்ள கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் புதிய சிந்தனைகளை அவர்கள் முன்வைப்பார். ஆரவாரமற்ற அமைதி நடை. நுணுகி ஆராயும் மனம். எளிய தூய அறவாழ்வையே எழுத்தில் வற்புறுத்தும் திறம். தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் துடிப்பு அவர் எழுத்துகளில் எங்கும் காணலாம். காந்திய நெறிகளைப் போற்றி நிற்கும் போக்கும், தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் தம் வாழ்வில், எழுத்தில் காட்டிய எளிமையும் பொதுமையும் இவர் வாழ்விலும் படிந்திருந்தன.

மொழி, எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவி (Language is the vehicle of thoughts). கடிதங்கள் வாயிலாக ஒருவர் தம் மனத்தில் முகிழ்க்கும் எண்ணங்களை மற்றவர்க்குப் புலப்படுத்தும் போக்கு தொன்று தொட்டே இருந்து வருவது ஆகும். நேரு, மறைமலையடிகளார், சீனிவாச சாஸ்திரி, அறிஞர் அண்ணா முதலானோர் மகளுக்கோ, தம்பிக்கோ என்று தாம் கூற வந்த கருத்துகளை அவர்களுக்குக் கூறுவது போன்று சமுதாயத்திற்கெனக் கடித இலக்கிய வாயிலாகப் புலப்படுத்தினர்.



கடித இலக்கியங்களாக டாக்டர் மு. வ. அவர்கள் படைத்த நூல்கள் மொத்தம் ஐந்தாகும். இத் துறையில் முதலாவதாக அவர் எழுதி வெளிவந்த நூல் 'அன்னைக்கு' என்பதாகும். இந்நூல் 1948 ஆம் ஆண்டு வெளிவந்தது: இந்நூலில் எட்டு மடல்கள் மலர்ந்துள்ளன. அடுத்து, 1949 ஆம் ஆண்டில் வெளிவந்த 'நண்பர்க்கு’ எனும் நூலில் ஒன்பது மடல்களும், 1949 ஆம் ஆண்டில் வெளிவந்த 'தம்பிக்கு' எனும் நூலில் எட்டு மடல்களும், 1950 ஆம் ஆண்டில் வெளிவந்த தங்கைக்கு: எனும் நூலில் எட்டு நூல்களும், அதே ஆண்டில் வெளிவந்த 'யான் கண்ட இலங்கை’ எனும் நூலில் ஐந்து மடல்களும் அமைந்துள்ளன.

டாக்டர் மு. வ. அவர்கள் தம் டாக்டர் பட்ட ஆய்வேட்டினை 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பித்தார்கள். அன்று சோர்வோடு வந்து வீட்டில் மாலையில் எந்த மின் விளக்குகளையும் போடாமல் ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்தம் வாழ்வில் விரும்பிப் பின் பற்றிய அண்ணல் காந்தியார் அவர்கள் டெல்லியில் ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் சுடப்பட்டு மறைவெய்தினார் என்பதனைக் கேட்டுத் திடுக்கிட்டார். இந்த நிகழ்ச்சி அவர் மனத்தில் ஆழப் பாய்ந்தது. அவர்தம் படிப்பறையில் (study Room), காந்தியார்_குண்டுபட்டு இறந்து பொது மக்கள் பார்வைக்கு அவர் திருவுடலம் வைக்கப்பட்டிருந்த நிலையில் செய்தித்தாளில் வெளிவந்த அப் படத்திற்குக் கண்ணாடிச் சட்டமிட்டு வைத்திருந்ததனைப் பார்த்த நான், திடுக்கீடு விளைவிக்கும் இப்படம் ஏன்?” என்று ஒருமுறை கேட்டேன். "அறம் வளர்த்த பொதுநலம் பேணிய நாட்டின் தந்தைக்கே இந்நிலை. எனவே, வாழ்வில் ஒவ்வொருவரும் அயராது தம் வாழ்நாளின் ஒவ்வொரு நாளிலும் கடமையுணர்வுடன் தாம் ஏற்ற பணிகளை இனிதேயாற்றி வரவேண்டும் என்பதனை அப்படம் தமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது." என்று மறுமொழி இறுத்தார்.

அதே ஆண்டில் கடித இலக்கியத் தொடர் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய நூல்களில் இதுகாறும் பத்து லட்சம் படிகளுக்குமேல் விற்பனையாகியுள்ள ‘திருக்குறள் தெளிவுரை’ யினையடுத்து, அதிகப்படிகள் விற்றுள்ளவை அவர் கடித இலக்கிய நூல்களே. இதனை அவரே குறிப்பிட்டு நான் கேட்டிருக்கிறேன். 'சின்னஞ்சிறு நூல்கள்; விலைமலிவு: திருமணத்திற்கு அன்பளிப்பாக வழங்க ஏற்ற நூல்கள்’ என்னுந்தகுதிகளும், அந்நூல்களில் இடம் பெற்றிருக்கும் நல்ல வாழ்வியற் கருத்துகளும் இந்நிலைக்குக் காரணங்களாக அமையலாம். மேலும் அவரின்கீழ் டாக்டர் பட்ட ஆய்வு செய்த மாணவர் கவிஞர் திரு. மா. செல்வராசன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக அண்மைக் கால வெளியீடான 'இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்' எனும் கருத்தரங்கக் கட்டுரை நூலின்கண் அமைந்துள்ள 'டாக்டர் மு. வ. வின் கடிதங்கள்’ எனும் தம் கட்டுரையொன்றில் ‘உலகளாவிய தலைசிறந்த சிந்தனையாளர் என மு. வ. வை உறுதிப்படுத்துகிற அதே நேரத்தில் தமிழினம், தமிழ்மொழி, தமிழ்நாடு என்ற மூன்று பெருமிதங்களையும் துறக்க விரும்பாதவர் அவர் என்பதையும் உரைத்தாக வேண்டும். அந்த உணர்ச்சிகள் இந்த ஐந்து நூல்களிலும் தலைசிறந்து விளங்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார். ஆம்; இது உண்மையே! இந் நூல்களைப் படிக்கும்பொழுது எவரும் 'நாம் தமிழர்; நம் மொழி தமிழ்: நம் தாயகம் தமிழ்நாடு' என்ற பெருமித உணர்ச்சியினைப் பெறுவர் என்பது திண்ணம்.

இனி, அவர் எழுதி 1950ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள 'தங்கைக்கு’ எனும் நூலே, அவர்தம் கடித இலக்கிய வரிசை நூல்களல் முடிமணியான நூலாகயான் கருதுவதனா முதலாவதாக என் ஆய்வினுக்கு அந்நூலினை எடுத்துக் கொள்ள முன்வந்தேன். அவர் எழுதிய நூல்களில் எந்நூலினை எவரொருவர் படிக்காமற் போனாலும், இந் நூலினைப் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறுவேன். திருமணம் ஆன ஒரு பெண், தன் வாழ்க்கையில் வழுக்கி விழாமல், தன் வாழ்வை வளப்படுத்தி வாழ வகைசெய்யும் முறையில் இந்நூல் அழகுற அமைந்து பொலிகின்றது.

இனி, நூலின்கண் நுழைந்து, நூலுள் பொதுளும் நுண் மாண் நுழைபுலக் கருத்துகளைக் காண்போமாக.

நூலின் நோக்கம் - முன்னுரை - நூலின் அமைப்பு

'அன்புள்ள தங்கை’ என்று தொடங்கி, 'உன் அன்புள்ள அண்ணன் வளவன்’ என்று நூலில் அமைந்துள்ள எட்டு மடல்களும் முடிகின்றன. 80 பக்கங்கள் கொண்ட இந்நூல் முழுதும் 'வையத்துள் வாழ்வாங்கு வாழ' மகளிர் போற்றிப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் யாவை என்பது நன்கு உணர்த்தப்படுகின்றது. நேருக்கு நேர் நின்று உணர்ச்சியுடன் பேசிக் கொள்வது போன்று இக்கடிதங்கள் அமைந்துள்ளன.

இந்நூலில் இடம்பெறும் அல்லது குறிப்பிடப்பெறும் மாந்தர்

காந்தியடிகளும் கஸ்துரிபா அம்மையாரும் பலவிடங்களிலும் குறிப்பிடப் பெறுகிறார்கள். மற்றும் குறிப்பிடப்பெறுவோர் குயூரி அம்மையார், பக்கத்துத்தெரு வழக்கறிஞர் மகள் கனகா, எச். ஜி. வெல்ஸ்ஸின் மனைவி, நண்பர் அருளப்பர் நண்பர் முருகையா”, தேவசுந்தரி”, தேவசுந்தரியின் தமக்கை, ! நண்பரி அருளப்பரின் தம்பி”, நண்பன் ஒருவன்’, அண்ணிக்குத் தெரிந்த மனைவி முதலியவர்களோடு 'ஆ' என்று முதல் எழுத்தால் குறிக்கப்பெற்ற ஒரு பெண்ணும் இடம் பெறு இன்றனர். இவர்களன்றி அண்ணியும் ‘ பெரியம்மாவும் அடிக்கடி குறிப்பிடப்பெறுகின்றனர்.

பெண் எவ்வாறு இருக்க வேண்டும்!

“இளமையிலிருந்தே நீ அறிவும் திறமையும் அன்பும் பணிவும் உள்ள பெண்ணாக விளங்கியதைக் கண்டிருக்கிறேன். அல்லவா?”16

“பிறரிடம் கொள்ளும் விருப்பு வெறுப்புக்களில் பிடிவாதம் காட்டாதே. இதில் பிடிவாதம் பெருந்தீங்கு உண்டாக்கும். ’பெண்கள் பிடிவாதமானவர்கள்; நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார்கள்’ என்று பழிச்சொல் இருக்கிறது. அதை மாற்றிவிடு. அன்புக்காக விட்டுக்கொடுப்பவர்கள் பெண்கள் என்பதை உன் வாழ்வில் புலப்படுத்து.”17

காலத்திற்கேற்பப் புதிய நோக்கில் பெண்களைப் பார்த்து, பழமையிற் கொள்ள வேண்டியனவற்றைக் கொண்டு, புதுமையில் போற்றி நிற்க வேண்டுவனவற்றையும் டாக்டர் மு. வ. அவர்கள் விடாது குறிப்பிடுகின்றார் என்பதனை நூலின் பலவிடங்களிலும் காணலாம்,

இல்வாழ்க்கை

கணவன் மனைவியர் இணைந்து வாழும் இல்வாழ்க்கை குறித்து டாக்டர் மு. வ. அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

”இல்வாழ்க்கை என்பது முன்காலத்தில் ஒரே பொருளை விற்கும் வெல்ல மண்டிபோல் இருந்தது. நாகரிகம் பல வகையில் கடமைகளைப் பெருக்கியுள்ள இந்தக் காலத்து இல்வாழ்க்கை பலசரக்குக் கடைபோல் ஆகிவிட்டது. பல பொருள்களையும் கவனித்து விற்கும் திறமை இல்லா விட்டால் பலசரக்குக் கடையில் வாழ முடியுமா? நாம் பலருடைய வாழ்க்கையில் கலந்திருக்கிறோம். பலர் நம்முடைய வாழ்க்கையில் கலந்திருக்கிறார்கள். ஆகையால் கடமைகள் பலவாகிவிட்டன. இந்தக் காலத்தில் ஒரு இன்பத்தையோ ஒரு குறையையோ எண்ணித் தலை மேல் கை வைத்து உட்கார்ந்து விட்டால், யாரும் முன்னேற முடியாது. அவர்களை நம்பியவர்களும் கடைத்தேற முடியாது. நன்மை தீமை, இன்பம் துன்பம், குணம் குற்றம், நிறை குறை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு, எதற்கும் தயங்கி நிற்காமல் ஓடுகின்ற கடிகாரம் போல் கடமைகளை அஞ்சாமல் செய்கின்றவர்கள்தான் இந்தக் காலத்தில் தலைமைப் பதவிக்குத் தக்கவர்கள். குடும்பத் தலைவியும் இப்படி இருந்தால்தான் வாழ்வு நன்றாக நடக்கும். யாராவது தன்னைக் குறை கூறினார்கள் என்றால், அதையே எந்நேரமும் எண்ணிக்கொண்டிருப்பது, “யாராவது நோயால் வருந்துகிறார்கள் என்றால், எந்நேரமும் அவர்களையே நினைந்து உருகுவது; இவ்வாறு வாழ்வது கூடாது.”18 .

பிறர் உள்ளம் அறிந்து நடப்பது ஒர் அரிய கலை, பெண்ணுக்கு அது கட்டாயம் வேண்டும் என்று நான் எண்ணும்போது, அந்தக் கலையால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சிலர் நினைவுக்கு வருகிறார்கள்19”...... என்று கூறி,

“இந்த அறிவுரைக்கும் ஒர் எல்லை உண்டு, அதை மறந்துவிடாதே” என எச்சரித்துப் பின்வருமாறு கூறுகின்றார்:

”அதாவது, உள்ளம் அறிந்தொழுகும்போது, ஒரு துறையில் கணவன் விருப்பத்திற்கு முற்றிலும் இணங்கி நடப்பது குடும்பத்திற்குத் தீமையாக இருந்தால், அப்போது இந்த அறிவுரையைக் கடந்து வாழவேண்டும். கணவனுக்குக் கத்தரிக்காய் விருப்பம் என்றால், அதையே கறியாக்கலாம்; கத்தரிக்காய் வறுவல் விருப்பம் என்றால் அதை அவ்வாறே செய்யலாம். ஆனால் அதுவே அவருடைய உடல் நலத்திற்கு ஆகாததாக இருந்தால், அப்போதும் அதைச் செய்யலாமா? கூடாது. உணவைப்போலவே, மற்றத்துறைகளிலும் கணவனுக்கு இயைந்து நடப்பது நல்லது. ஆனால் குதிரைப் பந்தயம் அவருக்கு விருப்பமானதாக இருந்தால் என்ன செய்வது? கிண்டி விளையாட்டால் உள்ளதெல்லாம் இழந்து ஒட்டாண்டியாகிக் குடும்பம் அழிவதைவிட, அவருடைய மனத்தை மகிழ்விக்காமல் நின்று வெறுப்பைத் தேடிக் கொள்வதே நல்லது அல்லவா? அப்போதும் அவரைக் கிண்டிக்கு அனுப்பாதபடி அன்பால் அவர் மனத்தை மாற்றுதல் நல்லது; முடியாதபோது அவருடைய வெறுப்பை வரவேற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றுவது கடமை அல்லவா? இல்வாழ்க்கைக்காகப் பொறுமை; ஆனால் அந்தப் பொறுமையால் இல் வாழ்க்கை கெடுவதானால்-? உடம்புக்காக உணவு; அந்த உணவால் உடம்பு அழிவதானால், பட்டினியைப் போற்ற வேண்டாமா? "20

பெண்ணின் வளர்ச்சிப் பெருமை

"ஒரு பெண் பெற்றோரின் மகளாக உள்ள வரையில் உரிமை மிகுந்தவளாக அரசிளங்குமரியாகவே வாழ்கிறாள். கணவனின் மனைவியாக வாழத் தொடங்கியதும் அரசியாகவும் அடிமையாகவும் மாறி மாறி வாழ்வதுபோல் விளங்குகிறாள். தான் பெற்ற மக்களின் தாயாக வாழும் போது எல்லா உரிமைகளையும் உதறிவிட்டு அன்புருவாக உயர்கிறாள். பிடிவாதம் செய்யும் ஒரு பெண்ண்மை இயற்கை இப்படி மாற்றி மாற்றித் தியாகத்தின் திருவுருவாகச் செய்கின்றது."21

பெண்ணின் படிப்படியான வாழ்வியல் வளர்ச்சியினை இவ்வாறு திறம்படக் குறிப்பிடுகின்றார்.

கற்பு பற்றிய கருத்து

"வாழ்நாள் வரை மாறாத அன்புடன் ஒரு நெறியாக வாழும் வாழ்க்கையைத் தான் முன்னோர்கள் கற்பு என்று சொன்னார்கள்".29 

‘திட்ப நுட்பம் செறிந்தன சூத்திரம்’ என்பர்.23 கற்பின் இலக்கணம் காட்டும் இத் தொடரினை 'நூற்பா' வாகக் கொள்ளலாமன்றோ?

முன்னோர் கண்ட நன்னெறி

இல்வாழ்க்கை இனிதே நடைபெறுதற்கு முன்னோர் வகுத்துச் சென்றுள்ள வாழ்வியல் அமைப்பினைப் பின் வருமாறு வகையுறப் போற்றியுள்ளார் டாக்டர் மு. வ. அவர்கள்.

‘அந்தக் கால நிலையை ஒட்டி இல்வாழ்க்கை சீராய் நடைபெறுவதற்காக முன்னோர் சில திட்டங்கள் அமைத்திருந்தனர். ஆண் உடல்வலி மிகுந்தவன்; ஆகையால் அவன் வெளியுலகில் அலைந்து பொருள் தேடுக என்று அமைத்தனர். பெண் உடல்வலி குறைந்தவள்; ஆக்க வேலையில் ஆர்வம் நிறைந்தவள்; ஆதலால் வீட்டிலிருந்து அமைதியைக் காத்து வருக என்று அமைத்தனர். அலைவுக்கு ஏற்றது ஆண் உடல், அமைதிக்கு உரியது பெண் உடல் என்று அவர்கள் வகுத்த முறை இயற்கையோடு இயைந்த முறையாக இருந்தது. அதற்கு ஏற்றவாறே ஆண் வயதில் மூத்தவனாக இருக்குமாறும் பெண் இளையவளாக இருக்குமாறும் ஏற்படுத்தினர். இந்த ஏற்பாட்டில் தவறு காண முடியாது. இன்றைக்கும் உலகில் பெரும்பான்மை யோர் இதையே போற்றி வருகின்றனர். 24

மேலும் அவர் குறிப்பிடுவதாவது :

"முன்னோர்களின் அறிவுரை என்ன? உரிமைப் பேச்சுப் பேசுவதில் பயன் என்ன?" 25

பிரிவு வேண்டும்

"நம் நாட்டில் திருமணமான தொடக்கத்தில் மனைவி கணவனோடு இருக்கக் கூடாது என்று பிரிக்கும் வழக்கம் ஒன்று இருந்து வருகிறது. அதுவும் இவ்வகையான நன்மைக்கே என்று எண்ணுகிறேன். அறிஞர் எச். ஜி. வெல்ஸ் வாழ்க்கையில் ஒரு குறிப்பு-அவரே எழுதிய குறிப்பு-ஒன்று என் நினைவுக்கு வருகிறது. அவருடைய இரண்டாம் மனைவி ஒருமுறை வாழ்க்கையில் மிகச் சலித்தபோது, கணவருக்குச் சொல்லி அனுமதி பெற்றுத் தனியே பிரிந்து சில வாரங்கள் வாழ்ந்தாராம். அப்போது சென்று தங்கியிருந்த இடத்தையும் கணவருக்குத் தெரிவிக்கவில்லையாம்”,26 என்று ஓர் அருமையான வாழ்வியல் நடப்பு உண்மையினைக் குறிப்பிட்டு, ’அன்போடு கடமையைச் செய்தல் முதலில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மனத்தின் பேயாட்டத்திற்கு இடம் இருக்காது. தவற வாய்ப்பு நேராது; நேர்ந்தாலும் விழிப்போடு தற்காப்புத் தேடிக் கொள்ளலாம்”,27 என்று கூறி, அன்பும் கடமையுணர்வும் வாழ்விற்குத் தேவை என வற்புறுத்துகின்றார்.

அறிவுரைகள்

வாழ்க்கை வெற்றி பெறுவதற்குக் கீழ்க்காணும் அறிவுரைகளை நூற்கண் ஆங்காங்கே பொதிந்து தந்துள்ளதனைக் காணலாம்:

”திருவள்ளுவரின் அறத்துப்பால் நெறி - அதாவது, காந்தியடிகளின் எளிய தூய நெறி; இதை நம்பினால் எவ்வளவோ தொல்லைகளை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம். தனி வாழ்க்கையைப் பொறுத்தமட்டில்தான் இதைச் சொல்கிறேன். நெறியை முழுவதுமாக நம்பாவிட்டாலும், ஆடம்பரமற்ற ஆணவமற்ற அமைதியான வாழ்க்கை நல்லது என்பதையாவது நம்புவார்களானால் போதும். ஆடம்பரம், ஆணவம், ஆரவாரம், இவைதான் இந்தக் காலத்து நாகரிகத்தின் உயிர் நாடிகள், தனி வாழ்க்கையில் மனம் பண்படுவதற்கு இவைகள் தடைகள் என்பது என் கருத்து.'’28

"தனக்கென்று மிகுதியாகப் புகழ் தேடிக் கொள்வது பொல்லாத தன்னலம்; தன்மானத்தைப் பெரிதாக எண்ணுதல் அதைவிடக் கொடிய தன்னலம். கணவன் மனைவி என்று இருவர் சேர்ந்து வாழத் தொடங்கிய பிறகு, தனியே புகழ் தேடுவதும் தனியே மானம் போற்றுவதும் தவறானவை."29

"கணவன் புகழைக் கண்டு மகிழும் மனம் இல்லாத மனைவி, மனைவியின் மானத்தைத் தன் மானமாகக் கருதாத கணவன் - இவர்கள் சேர்ந்து வாழத் தகுதி உடையவர்களா? உடம்பு, பணம் இவற்றில் சுற்றத்தாரும் அயலாரும் தலையிடுவது குறைவு. ஆனால் புகழ் மானம் ஆகிய துறைகளில் எல்லாரும் (தாய்வீட்டார், மாமி வீட்டார், நண்பர்கள் உட்பட எல்லாரும்) தலையிட்டு அவரவர்கள் பங்குக்குத் தூபம் போட்டு இல்வாழ்க்கைக்குத் தீமை செய்வதை நீ எங்கும் பார்க்கலாம். இந்தத் தொல்லைகள் இல்லாமல் அமைதியாக வாழ வழி சொல்லட்டுமா? புகழ் மானம் ஆகியவற்றையும் ஆடம்பரப் பொருள்களாகக் கருதி ஒதுக்கி எளிய வாழ்க்கையை நாடு. ஒழியட்டும் அந்த மயக்க உணர்ச்சிகள்!" 30

எளிய வாழ்வின் ஏற்றம்

"எளிய வாழ்க்கை வாழ்வது சிறந்த அறம்"31 என்றும் , "பாவங்களில் பெரிய பாவம், குற்றங்களில் முதல் குற்றம் ஆடம்பர வாழ்க்கைதான்"32 என்றும் குறிப்பிடுகின்றார். "விபசாரம் கொள்ளை கொலையினும் ஆடம்பர வாழ்க்கை தீதென்பதனைக் காட்ட, விபசாரம் கொள்ளை கொலை முதலியன ஒரு சிலரைத்தான் அழிக்கின்றன. ஆனால் ஒரு சிலருடைய ஆடம்பர வாழ்க்கை எத்தனையோ ஏழை மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாழ்படுத்தி அல்லல் விளைக்கின்றது"33 என்கிறார்.

ஆசிரியர் கூற்று

சில விடங்களில் ஆசிரியர் தாமே நேர் நின்று அறவுரை பகர்கிறார்.

(அ) "ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல், உணவு உடை தொழில் கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளை எ ல்லோர்க்கும் அமைத்துத் தருதல் இவைகளைச் செய்யக் காலம் ஆனாலும் ஆகட்டும். போட்டிக்கும் பூசலுக்கும் குறைகளுக்கும் குற்றங்களுக்கும் வழி அமைத்துத் தருகின்ற இந்த ஆடம்பரங்களையாவது தடுக்கலாமே! இதற்கு ஒரு சட்டம் பிறப்பிக்க ஒருவர் துணிவாரானால், அவரைத்தான் நாட்டின் முதல் தொண்டர் என்று நான் போற்றுவேன்."34

(ஆ) "எந்த அளவிற்கு ஆடம்பர ஏணியில் ஏறி நிற்க முடியும் என்றுதான் பெண்கள் முயல்கின்றார்கள். ஆடம்பரப் போக்கு இல்லையானால், தங்களுக்கு உலகத்தில் மதிப்பு இல்லை என்று எண்ணும் தாழ்வு மனப்பான்மை பெண்கள் பலரிடம் இயல்பாக உள்ளது. இதுதான் உண்மையான பிற்போக்கு என்பது என் கருத்து."35

(இ) அழகைக் காக்கும் வழிகள்: முரட்டு உழைப்பும் முரட்டு உணவும் அழகுக்குப் பகை என்பதோடு, இயைபு இல்லாமல் உடல் பருத்து வளர்வதும் அழகுக்குப் பகை என்று கூறி, அதனைக் களைய "உழைப்பு இல்லாமல் இருக்கக்கூடாது, களைப்பு உண்டாகுமாறு உழைக்கக் கூடாது, தசைநார் திரட்சி பெறுமாறு வன்மையான பயிற்சிகள் செய்யக்கூடாது. குடலில் ஊறிப் புளிக்கும் நிலையை வளர்த்துக்கொள்ளலாகாது. மென்மையான சுவையுள்ள உணவுகளை அளவுபடுத்தி உண்ண வேண்டும். மந்தப் பொருள்களை மிகுதியாக உண்ணலாகாது"36 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியரின் உளநூல் நுட்பம்

ஆசிரியர் பிறர் உள்ளத்தினை ஊடுருவிக் காணும் நுட்பம் வாய்ந்தவர். நாவலாசிரியர் தாம் படைக்கும் கதை மாந்தர்தம் உள்ளத்து உணர்வுகளைத் தாமும் உற்றும் பெற்றும் நிற்க வேண்டும். தலைசிறந்த சிந்தனையாளரும், கல்வியாளரும், நாவலாசிரியருமான டாக்டர் மு. வ. அவர்கள் தம் வாழ்வில் குழந்தைகளோடு பேசி மகிழ்வதில், விளையாடுவதில் ஆர்வம் மிகக் காட்டியவர். தம் வாழ்நாளின் இறுதி நாட்களில் கூட இப்பண்பினைத் துறக்கவில்லை என்பதற்குச் சான்றுகள் பலவுண்டு. குழந்தை பற்றி எழுதும்பொழுது அவரும் குழந்தையாகிவிடுவார். 'குழந்தை' என்றே ஒரு நூலும் அவர் எழுதி உயிருப்பதும் இவ்வுண்மையினை உணர்த்தும். 'குழந்தை மொழி' என 'மொழி வரலாறு’ எனும் நூலில் அவர் அமைத்துள்ள ஒரு கட்டுரையினைக் காண்க.

பெண்கள் குழந்தைகளிடம் பழகும் முறையினைப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

"குழந்தைகளுக்கு அறநூல்களைத் திணிப்பதைவிட, அறிவுரைகளைக் கூறுவதைவிட, அவர்கள் பின்பற்றத் தக்க வழியில் நாம் வாழ்வதுதான் நல்லது என்று உளநூல் தெளிந்த அறிஞர்கள் கூறுவார்கள். அறவுரைகளும் அறிவுரைகளும் வற்புறுத்தி ஊட்டும் உணவு போன்றவை; அவை நன்றாகச் செரிப்பதில்லை. பெரியோரின் நடக்கை அப்படி அல்ல; குழந்தைகள் தாமே விரும்பி உண்ணும் பழம் போன்றது அது. அது எளிதில் உள்ளத்தில் பதிந்து விடும் என்பார்கள். ஆகவே, பெண்கள் குளிர்ந்த உள்ளத்தோடு மலர்ந்த முகத்தோடு இனிய சொற்களோடு குழந்தைகளிடம் பழகுவார்களானால், அதுவே குழந்தைகளுக்குக் கற்பிக்கும் சிறந்த கல்வியாகும். அதுவே பெரிய தொண்டு; எத்தனையோ பேரைத் திருத்தும் ஒப்பற்றதொண்டு; பத்திரிகைகளும் கட்சிகளும் புகழ வேண்டாத அரிய தொண்டு."37

காந்தியும் கஸ்தூரிபாவும் போற்றப்பெறல்

அ ண் ண ல் காந்தியடிகளாரிடத்தும், அன்னை கஸ்துாரிபா அவர்களிடத்தும் தாம் கொண்ட ஈடுபாட்டினை ஆசிரியர் பின்வரும் பகுதியால் புலப்படுத்துகின்றார்:

"காந்தியடிகள் இந்த நாட்டில் எவ்வளவு பெரிய போராட்டம் எத்தனை முறை நடத்தியிருக்கிறார்! வரலாற்றில் அதற்கு இணை இல்லை. ஆயினும் எவ்வளவு தெளிவும் துணிவும் அவருக்கு இருந்தன. சத்தியத்திற்காக அஹிம்ஸைக்காக நாட்டின் விடுதலையையும் பொருட்படுத்தாதிருக்கத் துணிந்த நெருக்கடிகள் பல; நாட்டின் விடுதலைக்காகத் தம் அமைதியையும் குடும்ப நன்மையையும் கைவிடத் துணிந்த நெருக்கடிகள் கண்டு, உடனுக்குடன் துணிந்து செயலாற்றிய வீரருள் வீரர் அவர்.”38

"நாம் குடும்பத்தோடு பூனாவுக்குப் போயிருந்தபோது ஆகாகான் அரண்மனையை அடுத்த பூங்காவில் கஸ்தூரிபாவின் சமாதியின் அருகே இருந்து உருகியது உன் நினைவில் இருக்கும். அப்போது அப்பா அம்மாவை நோக்கிச் சொன்ன சொற்கள் நினைவில் இருக்கின்றனவா? "இந்த அம்மாவின் கணவர் காந்தியடிகள் உலகத் தலைவர். கணவரின் வழியைக் கண்மூடிப் பின்பற்றிய உத்தமி இவர் இந்த அம்மாவைப் போல் எளிய வாழ்க்கை வாழ எந்தப் பெண்ணாலும் முடியாது. கணவர் உலகத் தலைவர். உலகத் தலைவரின் மனைவி, பருத்திப் புடைவையும் சங்கு வளையலும் தாலியும் தவிர, எந்த ஆடம்பரமும் அறியாமல் வாழ்ந்து விட்டு மறைந்தார்" என்று அப்போது அப்பா சொன்ன சொற்கள் இன்னும் என் செவியில் ஒலிக்கின்றன."39

திருவள்ளுவர் பெருமை

திருவள்ளுவரிடத்து டாக்டர் மு. வ. அவர்கள் காட்டிய பெருமதிப்பு அவர் எழுதிய "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்" எனும் நூலால் விளங்கும்.

"உலகமெல்லாம் போற்றும் மருத்துவர் ஒருவர் சொல்லும் அறிவுரை என்று தயங்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி உலகம் போற்றும் மருத்துவர் - மன நோய் மருத்துவர் - திருவள்ளுவர். அவர் சொல்கிறார்: ஒப்பு அல்லாதவர்களிடத்தும் தோற்றுப் போவதே சான்றோரின் தன்மை என்கிறார். அவருடைய அறிவுரையைக் கண்மூடித் தன்மையோடு ஏற்றுக் கொள்வதில் தீமை ஒன்றும் இல்லை. பல தலைமுறைகளாக உலகம் பின்பற்றி நன்மை கண்டு நற்சான்று அளித்துப் போற்றிய முறை அது. ஆகையால் முன்னும் பின்னும் எண்ணாமல் அந்த முறையைப் போற்றுவது நல்லது."40

மேலும், எண்பது பக்கங்கள் கொண்ட இந்நூலில் பின் வரும் ஏழு குறட்பாக்களின் முதல் அடி தக்க இடங்களில் எடுத்தாளப் பெற்றிருக்கக் காணலாம்.

'அன்பின் வழிவந்த கேண்மை'41
'ஊடலில் தோற்றவர் வென்றார்'42
'இளைதாக முள்மரம் கொல்க'43
'வேண்டாமை அன்ன விழுச்செல்வம்'44
'வேண்டின் உண்டாகத் துறக்க' 45
'செவிகைப்பச் சொற்பொறுக்கும்' 46
'யாகாவா ராயினும் நாகாக்க' 47

பழமொழிகளைக் கையாளல்

முன்னைப் பழமையையும் போற்றிப் பின்னைப் அபுதுமையையும் ஏற்றுக்கொண்டு வாழ்வு நடாத்தியவர் மு. வ. அவர்கள். தம் நூலில் பழமொழிகளைக் கையாண்டு தாம் கூறவந்த கருத்துகளை அரண் செய்துள்ளார். அவர் இந்நூலில் ஏழு திருக்குறள்களை எடுத்தாண்டுள்ளது போன்றே ஏழு பழமொழிகளை எடுத்தாண்டுள்ளார். அவை வருமாறு :

’புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும்’48

’பழகப் பழகப் பாலும் புளிக்கும் ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்’49

’பூசணிக்காய் போகுமிடம் புலம் தெரியாது

கடுகு போகுமிடத்திற்குத் தடிகொண்டு திரிந்தானாம்’50

’சுண்டைக்காய் கால் பணம் சுமைக் கூலி முக்கால் பணம்’51

’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’52

’பொறுத்தவர் பூமி ஆள்வர்’53

’கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’54

கண்ணகியின் நிறையும் குறையும்

இலக்கியமே வாழ்வெனக் கொண்ட மு. வ. அவர்கள் இளங்கோவடிகள் இயற்றிய சீர்சால் சிலப்பதிகாரக் காப்பியத்தில் நெஞ்சம் தோய்ந்து ஈடுபட்டவராவர். கண்ணகியின் நிறையினைப் பின்வருமாறு பாராட்டுகின்றார்:

நீ யார் மரபில் வந்தவள் என்று எண்ணிப் பார். கணவனுடைய தவறான வாழ்க்கையைக் கடிந்து கூறாமல், வெறுத்துப் பகைக்காமல், பல ஆண்டுகள் பொறுத்திருந்த கண்ணகியின் மரபில் வந்தவள் நீ. கண்ணகி சில நாட்கள் பொறுக்கவில்லை; சில ஆண்டுகள் பொறுக்கவில்லை; பல ஆண்டுகள் பொறுத்த பெருமனம் படைத்தவள். கணவன் தவற்றை அவள் மறக்கவில்லை; அஞ்சி அடங்கி விடவில்லை. பெருமனத்தோடு பொறுத்திருந்தாள். அதைக் கடிந்து கூறுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்திருந்தாள். கணவனே மனம் மாறி இரங்கும் நிலை வரும் வரையில் காத்திருந்தாள். அந்த நிலை வந்ததும், போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ எனக் கடிந்துரைத்தாள். இத்தகைய பெருமனம் இருந்த காரணத் தால்தான், ஒரு துறவியின் உள்ளத்தில் கோயில் கொள்ள முடிந்தது; அங்கிருந்து ஒரு காவியக் கோயிலில் வாழவும் முடிந்தது.”55

”மனித மனம் இப்படித் தியாகம் செய்பவர்களையே என்றும் விரும்பும். அது இயற்கை. எவ்வளவு உரிமை நாட்டம் உடையவனாக இருந்தாலும், ஒரு வியாபாரி தனக்கு இயைந்து நடப்பவனையே கணக்குப்பிள்ளையாக வைத்துக் கொள்ள விரும்புகிறான். எவ்வளவு முற்போக்கு உடையவனாக இருந்தாலும், ஒரு பத்திரிகை ஆசிரியன் தனக்காகத் தியாகம் செய்யக் கூடியவனையே துணையாசிரியனாக வைத்துக் கொள்ள விரும்புகிறான். எவ்வளவு சீர்திருத்தக்காரனாக இருந்தாலும், ஓர் அரசியல் தலைவன் தனக்காகச் சொந்தக் கொள்கைகளை விட்டுக் கொடுக்கக் கூடியவனையே தன் செயலாளனாக வைத்துக் கொள்ள விரும்புகிறான். இவ்வாறே ஒவ்வொரு துறையிலும் மனிதன் தனக்குத் துணையாக ஒருவனை நாடும்போது, கண்ணகி போன்ற மனம் உடையவனையே நாடுகின்றான். இந்த மனப்பான்மை என்றும் இருக்கும்; உலகம் எவ்வளவு மாறினாலும் அதன் பிறகும் இருக்கும். அதனால் அன்றும். கண்ணகியின் சிறப்பு எல்லோராலும் போற்றப்படும்.”56


கண்ணகியின் குறையோ என ஆயும் போக்கினைப். பின்வரும் வரிகளில் காணலாம்:

“ஆகையால் வாழ வழி நாடுகின்றவர்கள் எப்போதும், விதிவிலக்குகளை எடுத்துக்காட்டாகக் கொள்ளக்கூடாது. இதை எழுதும்போதே எனக்குச் சிலப்பதிகாரம் நினைவுக்கு வருகின்றது. அன்பும் இரக்கமும் அருளும் கொடையும் மிகுந்தவனாகிய கோவலனுடைய உள்ளம் இசையிலும் கூத்திலும் எவ்வளவு ஆர்வம் உடையதாக இருந்தது. இதைக் கண்ணகி உணர்ந்து அந்தக் கலைகளைத் தானும் கற்றிருந்தால், கணவனுடைய உள்ளம் கலையரசியாகிய இன்னொருத்தியை நாடாதவாறு தடுத்திருக்கக் கூடுமே என எண்ணுகிறேன்.”57

கருத்தை விளக்கும் திறன்

கூறவந்த கருத்தினைப் படிப்பவர் மனத்தில் பசுமரத் தாணியெனப் பதியும் வண்ணம் விளக்கமுற எடுத்து-மொழியும் உணர்த்தும் திறனில் இவர் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் ’தோழி’ போன்று காட்சி தருகின்றார். சான்றுக்குச் சில எடுத்துக்காட்டுகள்:

”புதிதாகப் பழகும்போது பெரும்பாலோர் நன்றாகப் பழகமுடியும். அதில் ஒன்றும் சிறப்பு இல்லை; திறமை இல்லை. புதிய மாணவர் ஒழுங்காக நடந்து கொள்வார். புதிய ஆசிரியர் பாடுபட்டுக் கற்றுக்கொடுப்பார். புதிய வியாபாரி நல்ல சரக்கு விற்பார். புதிய வேலைக்காரி நன்றாக உழைப்பாள். புதிய பால்காரன் நல்ல பால் தருவான். புதிய நட்பும் இனிமையாக விளங்கும். அதில் ஒரு சிறப்பும் இல்லை. இந்தப் புதுமையை எள்ளி நகையாடுவதுபோல் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருப்பது உனக்கு நன்கு தெரியும். புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும் என்னும் அந்தப் பழமொழி வேடிக்கையாக இருந்தாலும், கருத்து உடையதுதான். அதற்கு மாறாக, எவ்வளவு பழமை ஆனபோதிலும் சிறப்புக் குன்றாமல் ஒளிவிடும் வாழ்க்கைதான் நல்ல வாழ்க்கை என்று சொல்வேன். இக்காலத்துப் பலருடைய வாழ்க்கை பொன்முலாம் பூசிய பொருள்போல் தொடக்கத்தில் மட்டுமே நல்ல ஒளி வீசுகின்றது. பழமைப்பட்டுத் தேயத் தேய, ஒளி இழந்து மங்குகின்றது. உண்மையான பொன்னால் செய்யப்பட்ட பொருள் ஒருநாளும் அப்படி ஆகாது அல்லவா? பழகப் பழக, தேயத்தேய, அது குன்றா ஒளி வீசும் அல்லவா? அதுபோல் வாழும் வாழ்க்கையே . நல்லவர்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.”58

”உன்னைப் போன்ற ஒருத்தி வயலிலும் கரம்பிலும் காட்டிலும் மேட்டிலும் பகலெல்லாம் உழைக்கிறாள்; பொழுதுபோனதும் வீட்டுக்குத் திரும்பிச் சமைத்துத் தொல்லைப்படுகிறாள். கணவனுக்கும் மக்களுக்கும் உணவு இட்ட பிறகு எஞ்சியதை அரைவயிறு உண்கிறாள். கட்டுவதற்குப் போதுமான கந்தை இல்லை. எண்ணெய் தேடித் தலைவார நேரமும் இல்லை; காசும் இல்லை. கண்ணாடி எடுத்து முகத்தைப் பார்க்க வாய்ப்பு இல்லை. (திருமணம் ஆவதற்கு முந்திய நாழிகையில் உடைந்த கண்ணாடி ஒன்றை எடுத்துப் பார்த்து மகிழ்ந்திருப்பாள்.) அவளுக்கு எதிர்காலத்தைப் பற்றி எண்ணுவதற்கு வழி இல்லை; நிகழ்காலத்தில் எதையும் தாங்கிக்கொள்ளும் நிலை இருக்கின்றது. சுத்தம் சுகாதாரம் இவை எல்லாம் அவள் அறியாத புதுச் சொற்கள். கலை, கருத்து இவை எல்லாம் அவளுக்குக் கனவைவிட அப்பாற் பட்டவை. அவள் உன்னைப் போன்ற தமிழ்ப் பெண்தான்; பெண்தான்.”59

நினைத்துப்பார். நம் வீட்டில் பாத்திரங்களைத் துலக்கி வேலை செய்கிறாளே, அவளும் உன்னைப் போன்ற பெண்தான் உனக்குமேல் ஐந்து ஆறு வயது பெரியவளாக இருப்பாள். மாதம் ஏழு ரூபாய்ச் சம்பளத்திற்குத் தன் வீட்டைவிட்டு அயலார் வீட்டிற்கு வந்து உழைக்கிறாள். வைகறையில் துயிலெழுகிறாள். (வேறு எந்த நாகரிகப் பெண்களால் முடியும்?) சொந்த வீட்டு வேலைகள் சில வற்றைச் செய்கிறாள். தன் குழந்தைகள் எழுவதற்கு முன்பே, அவைகளுக்குத் தெரியாதபடி இங்கே வருகிறாள். இங்குள்ள வேலைகளைச் செய்கிறாள். ஏதாவது உணவு கிடைக்கும் என்று அவளுடைய குழந்தைகள் அவளைத் தேடிக் கொண்டு இங்கே வருகின்றன. நம் அம்மா கொடுக்கும் பழைய சோற்றையும் காந்திப் போனதையும் கெட்டுப் போனதையும் குழந்தைகளிடம் கொடுத்து, அவைகள் உண்பதை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டு தன் காய்ந்த வயிற்றுடன் குடிசைக்குத் திரும்புகிறாள்.”60

”நீ பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பில் படித்த போது தெருக்கோடியில் முறுக்கு வாங்கித் தின்றாயே, நினைவிருக்கிறதா? அந்தக் கிழவி நாளெல்லாம் அந்தச் சின்ன அழுக்குக் கூடையை வைத்துக் கொண்டு கிழிச்சல் கோணியின்மேல் உட்கார்ந்து பெரிய வியாபாரம்” தொடர்ந்து செய்கிறாள் அந்தக் காலம் முதல் இன்று வரையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறாள். கண் பார்வை மங்கிவிட்டதாம். ஆனால் தொழிலை விடமுடியவில்லை. ஏன், தெரியுமா? நாள் தோறும் எவ்வளவு விற்கிறாள். என்ன ஊதியம் கிடைக்கிறது, தெரியுமா? எண்ணிப் பார்த்திருக்கிறாயா? நரைத்துத் திரைத்துப் பழுத்த அந்த உடல் எங்காவது கட்டிலின்மேல் மெத்தென்ற படுக்கையில் படுத்துப் புரண்டு காலம் கழிக்காமல், வெயிலிலும் மழையிலும் காற்றிலும் பனியிலும் துன்பப்பட்டு, அரைமணி கால்மணிக்கு ஒரு முறை ஒரு சிறுவனுக்கோ சிறுமிக்கோ காலனா முறுக்கு விற்று, அதில் ஒரு பை ஊதியம் பெறப் பாடுபடுகின்றது! இவ்வாறு கிடைக்கும் சிறு ஊதியமான மூன்றனா நாலனா இல்லையானால் அந்த வற்றிய குடல் கஞ்சி இல்லாமல் பட்டினிகிடக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றதாம். தங்கியிருக்க நிழல் இல்லாமல், அடுப்பு மூட்ட இடம் இல்லாமல் மரத்தடியிலும் சாக்கடைக் கரைகளிலும் மானத்தோடு வாழும் தமிழ்ப் பெண்கள் எத்தனை பேர் தெரியுமா?”61

"ஆஸ்திரேலியாவைப் பற்றியும் அமெரிக்காவைப் பற்றியும் இமயமலையைப் பற்றியும் மிசிசிபியைப் பற்றியும் எக்ஸ்ரேயைப் பற்றியும் அணுக்குண்டைப் பற்றியும் அறியும் அறிவால் இவ்வாழ்க்கையைச் செம்மையாக நடத்த முடியாது என்றும், மனத்தைப் பற்றி அறிந்து ஒழுகினால்தான் சீராக நடத்த முடியும் என்றும் விளக்கினேன். மற்றப் பொருத்தங்களைவிட மனப் பொருத்தமே முதன்மையானது என்றேன்.”

"வீடு தீப்பற்றி எரியும்போது எதை முதலில் எடுத்துக் காக்க வேண்டும் என்ற அறிவு எல்லோர்க்கும் இயற்கையாக உள்ளது. கந்தலையும் குப்பையையும் துடைப்பத்தையும் முறத்தையும் அப்போது யாரும் எடுத்துச் செல்வதில்லை. பெட்டியையும் பேழையையும் முதலில் எடுத்துக் காக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியும் வாய்ப்பு இருந்தால் துணிமணிகளையும் உணவுப் பொருள்களையும் எடுக்கிறார்கள். சிறந்தது இது. ஆகையால் இதை முன்னே எடுக்க வேண்டும் என்று தெளிவு இயற்கையாக இருக்கிறது. சிறப்பு இல்லாதது இது. ஆகையால் எரிந்து போனால் போகட்டும் என்ற துணிவு மனப்பான்மையும் இருக்கிறது.

"இது புறத்தே நேரும் நெருக்கடி. அகத்தே - உள்ளத்தில் - நெருக்கடி நேரும்போது இவ்வாறு நடந்து கொள்ள வல்லவர்கள் எப்போதும் எந்தத் துறையிலும் வெற்றிபெற முடியும். எதை எதை விடாமல் போற்றுவது என்றும், எதை எதைக் கைவிடத் துணிவது என்றும் தெளிவாக உணர்ந்து நடக்கவேண்டும்.

தேர்வுக்குப் படிக்கும் மாணவன்,தேர்வு நெருக்கத்தில் பாடநூல்கள் முதன்மையானவை என்று உணர்ந்து மற்றவற்றைக் கைவிடத் துணியாவிட்டால் பயன் என்ன? கலையில் ஈடுபட்ட கலைஞன் தன் கலைத்துறைக்கு உரியவற்றைப் போற்றுவதோடு, நெருக்கடியில் மற்றவற்றை மறக்காவிட்டால் பயன் என்ன? நாட்டுத்தொண்டில் ஈடுபட்ட ஒருவன் நெருக்கடி நேரும்போது தன் மனைவி மக்களையும் எதிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் தள்ளிவைக்கத் துணியாவிட்டால் பயன் என்ன?"

படிக்க வேண்டிய நூல்கள்

பெண்கள் படிக்க வேண்டிய நூல்கள் என்று ஆசிரியர் குறிப்பிடும் நூல்கள் பின்வரும் அவர் கூற்றால் விளங்கும்:

“இளங்கோ எழுதிய கண்ணகியின் காவியத்தைப் படி: பல முறை படி; என்றும் படி. குயூரி அம்மையாரின் வரலாற்றையும் கஸ்தூரிபா காந்தியின் வரலாற்றையும் திரும்பத் திரும்பப் படி. இவை போன்றவற்றை மேன்மேலும் படித்துக் கொண்டிரு.

நடபுப் பற்றி நவில்வன

நட்பை எவ்வாறு நாடிப் பெற வேண்டும் என்பதனைப் பின்வரும் பகுதியில் டாக்டர் மு. வ. அவர்கள் விளக்குகின்றார்கள்.

"ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கிலப் புலவர் கண்டவரோடு எல்லாம் பழகிப் புதிய புதிய நட்புகளைப் பெருக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்."

நாசூக்கான திட்டல்

தாம் கூறவந்த கருத்தினை நாசூக்காக வெளிப்படுத்துதலில் டாக்டர் மு. வ. திறன் வாய்ந்தவர் என்பதனைப் பின்வரும் பகுதிகளில் காணலாம்:

"மானம் இழந்து வாழ்கின்ற பெண்களைப் பற்றி நான் குறிப்பிட வேண்டியதே இல்லை. பாத்திரம் துலக்கினாலும், முறுக்கு, வேர்க்கடலை விற்றாலும், பிச்சை எடுத்தாலும் வேறு என்ன செய்தாலும் சரி, மானத்தையும் விட்டுஒழுக்கமும் கெட்டு வாழத் தொடங்குகின்ற பெண்கள், முன் குறித்தவர்களைவிட ஒரு சிறிது நன்றாகவே வாழ்கிறார்கள்! எல்லாம் நம் சமுதாயப் பெருமை!

"திருவள்ளுவரின் அறத்தைப் பற்றியும் கண்ணகியின் தியாகத்தைப் பற்றியும் காந்தியடிகளின் வாய்மையைப் பற்றியும் கஸ்துரரிபாவின் உறுதியைப் பற்றியும் எளிய வாழ்வின் செம்மையைப் பற்றியும் இல்லறத்தின் அமைதியைப் பற்றியும் ஏழைகளின் முன்னேற்றத்தைப் பற்றியும் உலக ஒருமைப்பாட்டைப் பற்றியும் பேசும்போக்கு எங்கே உள்ளது? இவைகளை எல்லாம் சில ஆண்டுவிழா மேடைகளுக்கு என்றே ஒதுக்கிவிட்டார்கள் போல் தெரிகிறது.

மனைவி போற்ற வேண்டிய நெறிகள்

இல்வாழ்க்கையில் நிறைந்த பயனான வெற்றி காண்பதற்கு மனைவி ஒருத்தி கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளாக டாக்டர். மு. வ. அவர்கள் வற்புறுத்தும் கருத்துகள் பின்வருமாறு:

"கணவனோடு வாழும் ஒருத்திக்குக் கணவனுடைய அன்பே முதன்மையானது; மக்கள் இரண்டாம் நிலையினர்; கணவன் பெற்றோரும் தன் பெற்றோரும் மூன்றாம் நிலையினர்; நண்பரும் உறவினரும் நான்காம் நிலையினர்; புகழும் மதிப்பும் ஐந்தாம் நிலையின; கலையும் பொழுது போக்கும் ஆறாம் நிலையின; தெருவாரும் ஊராரும் ஏழாம் நிலையினர்; இப்படியே மற்றவற்றையும் மற்றவர்களையும் முறைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

"அன்புக்காக விட்டுக்கொடுத்து இணங்கி நட, உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்காதே என்று நான் சொல்வேனானால், அது உனக்கும் உன்னைப் போன்ற பெண்களுக்கும் மட்டும் சொல்லும் அறிவுரை என்று எண்ணாதே. என்னுடன் பழகும் நண்பர்களான ஆண்கள் பலர்க்கு இதையே நான் சொல்லியிருக்கிறேன். 'ஒருவர் பொறை இருவர் நட்பு' என்னும் நாலடியாரின் பொன்மொழி இல்வாழ்க்கையின் மந்திரமாக விளங்க வேண்டும்; ஒருவேளை கணவனும் இன்னொரு வேளை மனைவியுமாக விட்டுக்கொடுத்தால்தான் வாழ்க்கை எளிதாக நடக்கும்.’

"ஆகையால், உலகப் படைப்பை மட்டும் அறிதலும், உலக வரலாற்றை மட்டும் படித்தலும், காவியங்களை மட்டும் கற்றலும், கடவுளை மட்டும் பூசித்தலும் இருந்து விட்டால் பரந்த நோக்கம் வந்துவிடாது. ஏழைகளின் முன்னேற்றத்தை எண்ண வேண்டும்; சுற்றுப்புறம் சீர்பெற வழிகோல வேண்டும்; ஆடம்பர மோகத்தை அகற்றவேண்டும்; தம் குறையைத் தாமே உணர வேண்டும்; மேற் சொன்னவற்றோடு இந்த நான்கும் பொருந்தினால்தான் குறுகிய நோக்கம் ஒழிந்து உயர்ந்த வாழ்வு அமையும். விவேகாநந்தரின் வாழ்வையும் ஆராய்ந்து பார்."

அவல ஓவியங்கள்

கிராமத்தில் பெண்ணையும், வேலைக்காரியையும், ! முறுக்கு விற்கும் கிழவியையும் படம் பிடித்துக்காட்டி, நம் நெஞ்சில் இரக்கம் தோன்ற வைக்கிறார்.

நடைச்சிறப்பு

டாக்டர் மு. வ. அவர்கள் கையாளும் நடை எளிமையானது; இனிமையானது; சிக்கலற்றது; துரய்மையும் தெளிவுங் கொண்டது; திட்பமும் நுட்பமும் செறிந்திலங்குவது. இதனை இக் கட்டுரையில் மேற்கோளாகக் கையாண்டிருக்கும் பகுதிகள் கொண்டே அறியலாம்.

'நினைத்ததை எழுதாமல் நினைத்து எழுதியவர்' என்று முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தம் இரங்கல் உரையில் குறிப்பிட்டது இங்குக் கருதத்தக்கது.

"உங்கள் அன்பான இல்வாழ்க்கை வளர்பிறைபோல் வளரவேண்டும் என்று விரும்புகின்றேன். அது என் வாழ்த்துதலில் இல்லை; நீங்கள் வாழும் முறையில் இருக்கிறது."

"பசி எடுக்கின்ற வயிறு உள்ளவர்கள்தான் வயிறாரச் சாப்பிட முடியும். அடங்கி நடக்கின்றவர்கள்தான் உரிமையின் நன்மையை அனுபவிக்க முடியும்."

"அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கி நட, உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்காதே."

"ஆடம்பரம், ஆணவம், ஆரவாரம் இவைதான் இந்தக் காலத்து நாகரிகத்தின் உயிர்நாடிகள். தனி வாழ்க்கையில் மனம் பண்படுவதற்கு இவைகள் தடைகள் என்பது என் கருத்து."

"அம்மா! நீ கணவனுடைய மனம் அறிந்து நடந்து கொள்வதில் வல்லவளாக இருக்க வேண்டும். மனம்தான் வாழ்க்கை. மனம் அறிந்து மகிழ்விக்கத் தெரியாத பெண்கள், அழகு பண்பு திறமை எல்லாம் இருந்தும் வாழ்க்கையில் ஏமாந்து துன்புறுகிறார்கள். அழகும் பண்பும் திறமையும் குறைவாக இருந்தாலும், மனம் அறிந்து நடக்கத் தெரிந்த பெண்கள் வெற்றி பெறுகிறார்கள்.

டாக்டர் மு. வ. அவர்கள், 'கருத்துகளே ஆற்றல்மிக்க படைக்கலன்கள்’ என்று எண்ணியதனை இந்தப் பகுதிகள் உணர்த்தும்.

சுருங்கச் சொன்னால் டாக்டர் மு. வ. அவர்களின் 'தங்கைக்கு' திருவள்ளுவர் காட்டும் இல்வாழ்க்கைச் சிறப்பினை உணர்த்தவந்த ஒப்பற்ற உயரிய நூல் எனலாம்.

அடிக்குறிப்புகள்

1. பக். 263.
2. பக். 7, 34, 75, 76 & 78.
3. பக். 7.
4. பக். 13.
5. பக். 17.
6. பக். 17.
7. பக். 31.
8. பக். 31, 32.
9. பக். 48.
10. பக். 62.
11. பக். 68.
12. பக். 79, 80.
13. பக். 41.
14. பக். 55, 56, 79.
15. பக். 54.
16. பக். 5.
17. பக். 26.
18. பக். 54, 55.
19. பக். 65.
20. பக். 65, 66.
21. பக். 50.
22. பக். 23.
23. பக். 18.
24. பக். 22.

25. பக்.23,24.
26. பக்.16,17.
27. பக். 17.
28. பக்.32,33.
29. பக்.33.
30. பக்.33,34.
31. பக்.34.
32. பக்.35,36.
33. பக்.40.
34. பக்.37.
35. பக்.38.
36. பக்.40.
37. பக்.59.
38. பக்.75.
39. பக்.34.
40. பக்..27.
41. பக்.8,9.
42. பக்.19.
43. பக்.26.
44. பக்.34.
45. பக்.38.
46. பக்.65.
47. பக்.67.
48. பக்.67.
49. பக்.15.
50. பக்.52.
51. பக்.52.
52. பக்.55.
53. பக்.65.
54. பக்.74.
55. பக்.28.
56. பக்.29.

57. பக். 63.
58. பக். 7,8.
59. பக். 43.
60. பக். 44,45.
61. பக். 45.
62. பக். 69.
63. பக். 73.
64. பக். 7.
65. பக். 71.
66. பக். 46.
67. பக். 76.
68. பக். 74.
69. பக். 12,13.
70. பக். 79.
71. பக். 43.
72. பக். 44;45.
73. பக். 45.
74. பக். 7.
75. பக். 11.
76. பக். 12.
77. பக்.32,33.
78. பக்.38.
79. பக். 61;62.
80. பக். 43.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறவோர்_மு._வ/%27தங்கைக்கு%27&oldid=1239024" இலிருந்து மீள்விக்கப்பட்டது