உள்ளடக்கத்துக்குச் செல்

அறவோர் மு. வ/வாழ்வியற் சிந்தனைகள்

விக்கிமூலம் இலிருந்து
VII

அறவோர் மு. வ. அவர்களின்

வாழ்வியற் சிந்தனைகள்

அறவோர் மு. வ. அவர்கள் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கிய சான்றோர் ஆவர். தமிழ்ச் சமுதாயத்தில் தோன்றிய நல்ல சிந்தனையாளர். தமிழினம் சிறக்க, தழைக்க அவர் பல சிந்தனைகளைச் சமுதாய மேம்பாட்டிற்கெனத் தந்துள்ளார். அவர்தம் கருத்துகளை உணர்ந்து தெளிந்தவர்கள் வாழ்க்கையில் வழக்குதல் இலராக வாழ்வர். குறிப்பாகக் குடும்ப வாழ்விற்கெனச் சீரிய சிந்தனைகளைத் தந்தவர் அறவோர் மு. வ. ஆவர். அவர்தம் சிந்தனைகளில் ஒரு சில இவண் சுட்டப்படுகின்றன.

★ வாழ்க்கையில் பிணக்கு வந்தபோதெல்லாம் அறிவு இருந்து பயன் இல்லை. அன்பு இருந்தால் நன்மை உண்டு.

★ கடவுளின் படைப்பை உள்ளபடியே மதித்து வாழ்வது தான் ஆத்திகம். கடவுளின் உருவத்தை மட்டும் வழிபடுவது ஆத்திகம் அல்ல; அவருடைய படைப்பில் உண்மைகளை உணர்ந்து மதித்து வாழ்வதே ஆத்திகம்.

★ தனிமனிதன் வாழ்க்கைக்கு உணவும் உறக்கமும் இருந்தால் போதும். மக்கள் பலர் கூடி வாழும் சமுதாய வாழ்க்கைக்கே அறம் கட்டாயம் வேண்டும். மக்கள் எல்லோரும் கூடி நடத்தும் அரசியலுக்கே அறம் சிறப்பாக வேண்டும். உடம்பின் நன்மைக்கு இரத்த ஓட்டம் எப்படிக் கட்டாயம் வேண்டுமோ, அதுபோல உலக நன்மைக்கு அறத்தின் அடிப்படை கட்டாயம் வேண்டும்.

★ எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், உடல் உணர்ச்சி உள்ள வரையில், கணவன் மனைவி அல்லாத ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகாமல் இருப்பது நல்லது.

★ ஆணின் வாழ்க்கை வெளியே பலரோடு பழகித் திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. சேற்றில் நடந்து வழுக்குவது போன்றது இது. பெண்ணின் வாழ்க்கை குடும்பத்தளவில் பெரும்பாலும் இருந்து கணவனோடும் மக்களோடும் பழகி அமையும் வாழ்க்கை. மனம் கெடுவதற்கும் வாய்ப்பு இல்லை; ஒழுக்கம் தவறுவதற்கும் வழி இல்லை. மணலில் நடப்பது போன்றது இது. ஆகையால் தவறி விழவே கூடாது. விழுந்தால். நொண்டியாக இருக்க வேண்டும். அல்லது நோயாளியாக இருக்க வேண்டும்.

★ கடவுள் எல்லா உயிர்களின் வாழ்வுக்கும் பொதுவான திட்டங்கள் வகுத்து, பொதுமையான ஆட்சி புரியும் ஒரு பெருஞ்சக்தி என்று உணரவேண்டும். கடவுள் எங்கும் என்றும் உள்ள பெருஞ்சக்தியாய் எல்லாப் பொருளுமாய், எல்லா உயிருமாய் விளங்குதலை எண்ண வேண்டும்.

★ ஆண்களில் ஐந்து சாதி உண்டு. மனைவியே தெய்வம் என்று சொன்னபடி கேட்டு அடங்கி நடப்பவர்கள் முதல் சாதி; குடும்பத்தில் பற்றும், தொழில் நிலையத்தில் தாமரையிலைத் தண்ணீர் போன்ற மனப்பான்மையும் உடையவர்கள் இரண்டாம் சாதி; மூன்றாம் சாதியினர் குடும்பத்தில் பற்றில்லாமல் வெளியே ஒருத்தியிடம் அல்லது சிலரிடம் காதல் கொள்ளுபவர்கள், திருமணம் செய்து கொள்ளாமலே உண்மையான பிரமசாரிகளாய் வாழ்பவர்கள். அடுத்த சாதியினர்; திருமணம் செய்து கொள்ளாமல் மனம் போன போக்கில் கண்ட பெண்களோடு உரிமை வாழ்க்கை நடத்துபவர்கள் ஐந்தாம் சாதி.

★ கணவனோடு வாழும் ஒருத்திக்குக் கணவனுடைய அன்பே முதன்மையானது; மக்கள் இரண்டாம் நிலையினர். கணவன் பெற்றோரும் தன் பெற்றோரும் மூன்றாம் நிலையினர்; நண்பரும் உறவினரும் நான்காம் நிலையினர்; புகழும் மதிப்பும் ஐந்தாம் நிலையின; கலையும் பொழுதுபோக்கும் ஆறாம் நிலையின; தெருவாரும் ஊராரும் ஏழாம் நிலையினர்; இப்படியே மற்றவற்றையும் மற்றவர்களையும் முறைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

★ அன்புக்காக விட்டுக்கொடுத்து இணங்கி நட, உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்காதே என்று நான் சொல்வேனேயானால், அது உனக்கும் உன்னைப் போன்ற பெண்களுக்கும் மட்டும் சொல்லும் அறிவுரை என்று எண்ணாதே. என்னுடன் பழகும் நண்பர்களான ஆண்கள் பலர்க்கு இதையே நான் சொல்லியிருக்கிறேன். 'ஒருவர் பொறை இருவர் நட்பு' என்னும் நாலடியாரின் பொன்மொழி இல்வாழ்க்கையின் மந்திரமாக விளங்கவேண்டும்; ஒரு வேளை கணவனும் இன்னொரு வேளை மனைவியுமாக விட்டுக் கொடுத்தால் தான் வாழ்க்கை எளிதாக நடக்கும்.

★ கொஞ்சம் போராடவேண்டும். பிறகு விட்டுக் கொடுக்கவேண்டும். அப்படி நடந்தால்தான் ஆண்களைத் திருத்தமுடியும். அளவுக்கு மேல் போராடவும் கூடாது; அளவுக்கு மேல் விட்டுக் கொடுக்கவும் கூடாது. எதிலும் அளவு தெரிந்து கொண்டு நடந்தால், வாழ்க்கை துன்பம் இல்லாமல் போய்விடும்.

★ ஒரு நாள் இரண்டு நாள் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து குலாவுகிற உறவுக்கு - விபசார நட்புக்கு-அழகு கட்டாயம் வேண்டும். ஆனால் வாழ்நாள் முழுதும் பழகும் வாழ்க்கைத்துணைக்கு அன்புதான் முதலில் வேண்டியது. அழகு இருந்தால் இருக்கட்டும். ஓவியக் கலைஞனுக்கு நுட்பமான செவியும் இருந்தால் இருந்து போகட்டும்; ஆனால் அதையே நாடித் தேர்ந்தெடுக்கக் கூடாது.

★ உள்ளதைக் கொண்டு மகிழவேண்டும். வியாபாரம் செல்வம் இவற்றில் மட்டும் அல்ல; மனைவியோடு வாழும் வாழ்க்கையிலும் இதுவேண்டும். மனைவியிடம் அளவுக்கு மேல் அன்பு பணிவு அடக்கம் ஒடுக்கம் அழகு ஆர்வம் எல்லாவற்றையும் எதிர்பார்த்தால் கடைசியில் ஏமாந்து வருந்த வேண்டி ஏற்படும்.

★ உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம். மனம் கவலையற்றிருப்பது இரண்டாம் இன்பம். உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்.

★ திருமணம் செய்யும்போது ஆணின் உடல் வளத்தையும் பெண்ணின் உடல் வளத்தையும் பார்க்க வேண்டியது கட்டாயம். மூளை உழைப்பு உழைத்து உடல் மெலிந்துள்ள குடும்பத்தில் ஆண் பிறந்து வளர்ந்தவன் என்றால் பெண்ணும் அப்படிப்பட்ட மூளை உழைப்பும் உடல் மெலிவும் உள்ள குடும்பத்திலேயே பார்ப்பது நல்லது. அதை விட்டு விட்டுக் கை கால்களால் தொழில் செய்து உரமான தசை நரம்புகளைப் பெற்ற குடும்பத்திலிருந்து அவனுக்குப் பெண்ணைக் கட்டினால், அவர்களின் உடல் உறவு அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அப்படியே மெலிந்த உடம்பு உடைய குடும்பத்துப் பெண்ணை வலிய உடம்பு உடைய உழைப்பாளிக் குடும்பத்து ஆணுக்குக் கொடுத்தாலும் தீமைக்கு இடமாகும். பெண் விரைவில் நோயாளி ஆவாள். இவை எல்லாவற்றையும் விடச் சிறந்தது ஒன்று உள்ளத்தின் பொருத்தமே. உள்ளத்தின் பொருத்தம் அமைந்து காதல் ஏற்பட்டிருந்தால். எந்தத் தொல்லையும் இல்லை. மெலிந்தவர், வலியவர், மூளை உழைப்பினர், கைகால் உழைப்பினர் என்று எந்த வேறுபாட்டையும் கடந்து அப்போது வாழமுடியும். ஆனாலும் கூடியவரையில் உடல் வளத்தையும் ஆராய்வது நல்லது.

★ இந்த உலகத்தில் கெட்டவர்கள் எதிலும் துணிந்து இறங்குகிறார்கள். நல்லவர்கள் நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள். அதனால்தான் உலகத்தில் தீமை தழைக்கிறது; நன்மை நலிகிறது.

★ வீட்டைத் துறப்பது, செல்வத்தை வழங்குவது, உயிரைக் கொடுப்பது இவைகளும் தியாகம்தான். ஆனால், அன்பானவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் தியாகம்தான் பெரிய தியாகம். அந்த விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மை இல்லாவிட்டால், கணவன் மனைவி கூடிவாழ முடியாது. எவ்வளவு அறிவு இருந்தாலும் போரும் பிணக்கும் வளருமே தவிர, அன்பும் அமைதியும் வளரமுடியாது அதனால் கணவனும் மனைவியும் கற்கவேண்டிய முதல் பாடம் விட்டுக் கொடுப்பதுதான். அதுவே கடைசிப் பாடமும் ஆகும்.

★ சிலர் பிறர்க்கு வரும் துன்பத்தைக் காணும்போது மெழுகுபோல் உருகி அழிகிறார்கள். சிலர் யாருடைய துன்பத்திற்கும் இரங்காமல் கல்போல் இருக்கிறார்கள். இருவகையாரும் வாழத் தகுந்தவர்கள் அல்ல. மெழுகு உருகி அழியும்; கல் உருகவே உருகாது. இரண்டும் பயன் இல்லை. உருகவும் வேண்டும். அழியாமல் உருப்படவும் வேண்டும். இரண்டு தன்மையும் உள்ள இரும்பு பொன் முதலியவைகளே பயன் மிகுந்தவை. இரும்பும் பொன்னும் போல் இருப்பவர்களே வாழ்க்கைக்குப் பயன்படுவார்கள்.

★ தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது என்றைக்கும் நல்லது. அதுவே முதன்மையான தவம். கவலை இல்லாமல் வாழ்வதற்கு அது ஒரு வழி. தேவையே இல்லாமல் மனிதன் வாழ முடியாது. தேவைகளைக் குறைத்து வாழலாம்.

★ பணம் என்றால் அதற்கு ஒரு தனி மதிப்பு. உலகத்தில் உள்ள வரையில், அதைச் சும்மா விடக்கூடாது. விட்டால், புத்தர், ஏசு, திருநாவுக்கரசர், காந்தி போல் அடியோடு விட்டுத் தொலைக்க வேண்டும். இல்லையானால் பணத்திற்கு நாம் அடிமையாகாமல், நமக்கு அதை அடிமை ஆக்கிக்கொண்டு ஆட்டிப்படைக்க வேண்டும்.

★ படிப்பால் அறிவு வளருமே தவிர, ஒழுக்கம் வந்து விடாது. விளக்கு ஏற்றினால் வீட்டில் ஒளி பரவுமே தவிர, தூய்மை வந்துவிடாது; விளக்கின் வெளிச்சத்தால் தும்பும் தூசியும் அழுக்கும் போய்விடுவதில்லை. இருள்தான் போகும். அழுக்கும் துளசியும் இருப்பது விளக்கு ஏற்றினால் கண்ணுக்குத் தெரியும். விளக்குமாறு எடுத்துப் பெருக்கினால்தான் அவை போகும்.

★ பெண்கள் முன்னேற வேண்டும். பெண்கள் முன்னேறா விட்டால் நாடு இப்படியேதான் இருக்கும். பெண்களுக்குத்தான் படிப்பு வேண்டும். இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு ஆண்களுக்குப் பள்ளிக்கூடம் இல்லாமல் மூடிவிட்டாலும் குறை இருக்காது. எல்லாப் பெண்களும் படித்த காலத்தில்தான், இந்த நாட்டில் அறியாமை ஒழியும். பெண்களுக்கு நல்லறிவு வந்தால் தான் மூடநம்பிக்கை நாட்டை விட்டு ஒழியும். இல்லையானால் வீட்டுக்கொரு விவேகாநந்தர் பிறந்தாலும் இப்படியேதான் குருட்டு வாழ்க்கை நிலையாக இருக்கும்.

★ தமிழர்கள் உணர்ச்சி அளவில் ஊக்கம் மிகுந்தவர்கள்; வாய்ச்சொல் அளவில் வீரம் மிகுந்தவர்கள்; இந்த இரண்டும் மட்டும் பெற்றவர்களால் ஒரு நாடு முன்னேற்றம் அடைய முடியாது. கடமை ஒழுங்கு ஒன்று வேண்டும். இந்த ஒன்று மட்டும் இருந்து, மற்ற இரண்டும் இல்லாதிருந்தாலும் கவலையில்லாமல் தமிழ் நாடு எப்போதோ தலையெடுத்திருக்கும். நீ ஒரு தமிழன்; பழங்காலப் பிற்போக்குத் தமிழனாக இருந்து வாயால் மட்டும் விளங்காதே. உணர்வால் மட்டும் உயராதே. செயலாலே சீர்ப்படு.

★ மனம் பண்படுவதற்கு வழி என்ன? நமக்கு முன் பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களின் வரலாறுகளைப் படிக்கவேண்டும். அவர்கள் சொன்ன சொற்களை, அல்லது எழுதி வைத்த எழுத்துகளைத் திரும்பத் திரும்பப் படித்து உணரவேண்டும். கெட்ட காற்றிலும் நீரிலும் உள்ள நோய்க்கிருமிகள் நம் உடம்பில் புகாமல் ஊசி போட்டும் மருந்து உண்டும் காத்துக்கொள்வது போலவே, கெட்ட நூல்களிலும் கெட்ட கலைகளிலும் மனத்தின் பண்பாட்டுக்கு ஆகாத நோய்க் கருத்துகள் உள்ளன. அவை மனத்தில் புகாமல் காத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு காப்போமானால் கட்டாயம் குறிக்கோளை அடைய முடியும். உலகத்தையும் உடம்பையும் திருத்துவதை விட இவ்வாறு மனத்தைப் பண்படுத்துவதுதான் கருதியபடி கைகூடுவது என்பதை உணரவேண்டும்.

★ தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும், நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனிமேல் வல்லவர்களாகவும் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். நல்ல தன்மையோடு வல்லமையும் சேரப்பெற்று வாழ வேண்டும்.

★ இன்பத்திற்குத் துணையாக யாராலும் முடியும்; ஈ எறும்பாலும் முடியும்; துன்பத்திற்குத் துணையாக வல்லவர்களையே தேடவேண்டும். உறவானாலும், நட்பானாலும், காதலானாலும் இத்தகையோரையே தேட வேண்டும்.

★ வாழ்க்கையில் மனிதர்களின் தொடர்பு கசக்கும் நாள் வரும். ஆனால் உயர்ந்த புத்தகங்களின் கருத்துகள் என்றுமே கசப்பதில்லை.

★ விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்.

★ காதல் வாழ்வில் இரண்டு உள்ளம் வேண்டும். ஒன்று அமைதி உள்ளம்; ஒன்று ஆற்றல் உள்ளம். அமைதி, ஆற்றல் பெறவேண்டும். ஆற்றல், அமைதி பெற வேண்டும்.

★ நாம் வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்கவேண்டும். ஒன்று, நம் உள்ளம். அது நன்றாக இருப்பதற்காகவே அறநெறியும் கடவுள் வழிபாடும் அமைந்தன. மற்றொன்று உடம்பு அது நன்றாக இருப்பதற்கு நல்ல உணவும் உடையும் தொழிலும் மருந்தும் வேண்டும்.

  • மூன்றாவது, சுற்றுப்புறம். அது நன்றாக இருப்பதற்கு முன்னோர்கள் சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தினார்கள். மூடநம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தினார்கள். உண்மையின் அடிப்படை இல்லாமையால் அவை உறுதியாக நிற்கவில்லை. இன்று சுற்றுப்புறமும், நன்றாக இல்லாத காரணத்தால்தான், பொதுவாக வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் இல்லை.
  • கணவனைத் திருத்த முடியவில்லையா? அதற்காக அவனிடம் செலுத்தவேண்டிய அன்பைக் குறைத்துக் கொள்ளாதே; அவனுக்குச் செய்யவேண்டிய கடமை களைக் கைவிடாதே, ஒருவனை மணந்து கொண்ட பிறகு அவனுடைய இன்ப துன்பமே உன் இன்ப துன்பம்; இன்ப துன்பம் மட்டும் அல்ல, ஆக்கமும் அழிவும் கூட இருவர்க்கும் பொதுவாகக் கருத வேண்டும்; கணவனுடைய அழிவில் நீயும் கலந்து அழிவதில் ஒரு மகிழ்ச்சிவேண்டும்.
  • யாராவது ஒரு பெரியவரிடத்திலாவது ஒரு சிறந்த புத்தகத்திலாவது நம்பிக்கை வைத்து மனத்தைக் கொடுத்திருக்கவேண்டும். அல்லது, ஒத்த உரிமை யோடு யாரிடமாவது திறந்த மனத்தோடு பழகியிருக்க வேண்டும்.
  • கடவுளுக்குப் பலகாரங்களை அடுக்கி வைத்து வழிபடுவது கூடாது என்றே சொல்லுவார். சிறுவர்கள் எந்தப் பொம்மையாவது வைத்துக்கொண்டு விளை யாடலாம்; ஆனால் புத்தர் சிலையை வைத்துக் கொண்டு விளையாட விடலாமா? இதைப் பார்த்துக் கொண்டிருக்க மனம் வருமா! அதுபோல் மனிதர் தம் நாக்கின் ஆசைக்காக எவ்வளவு தின்பண்டங்களையாவது செய்து தின்னட்டும்; ஆனால் கடவுளுக்குத் தேவை என்று படைத்துப் பூசை செய்வது, சமயத்தையே கீழ்நிலைக்குக் கொண்டு வரும் குற்றம் என்று சொல்வார். 
  • எல்லாரும் உலகத்தைத் திருத்த முயல்கிறார்கள். உள்ளத்தைத் திருத்த அவ்வளவு முயல்வது இல்லை. செய்ய முடிந்ததைச் செய்யாமல் முடியாததற்காக உழைத்துச் சலிப்பும் வெறுப்பும் அடைகிறார்கள்.
  • மனம் ஒரு பெரிய உலகம்; அந்த மன உலகில் அந்தியின் அழகும் உண்டு; காலையின் கவர்ச்சியும் உண்டு; நள்ளிரவின் குளிர் மயக்கமும் உண்டு: நண்பகலின் கொதிப்பும் உண்டு. அந்த மன உலகில் கருமுகில்களும் உண்டு; ஆழ்ந்த கடல்களும் உண்டு; அந்த மன உலகில் வெயில் பரப்பும் கதிரவனும் உண்டு; வெண்ணிலாப் பொழியும் திங்களும் உண்டு; வெப்பமும் உண்டு; தட்பமும் உண்டு; மழையும் உண்டு; பனியும் உண்டு; வளமும் உண்டு; வறட்சியும் உண்டு. அந்த மன உலகை அல்லவா காணவேண்டும்; ஆராயவேண்டும்; பாடவேண்டும்; பண்படுத்த வேண்டும்.
  • உடம்பில் அழுக்கு ஏற்படுகிறது; பிறகு குளிக்கிறோம். உள்ளமும் அப்படித்தான். தூய எண்ணங்களில் அடிக்கடி குளித்துக் கொண்டிருக்கவேண்டும்.
  • நம் நாட்டிலேயே கடமையுணர்ச்சி குறைவு. மேலே இருப்பவர்களுக்கு நடுநிலைமையுணர்ச்சி இல்லை. வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு தான் உண்டு. அதனால்தான், மனித சக்தி இவ்வளவு இருந்தும், இயற்கையின் துணை இவ்வளவு இருந்தும், மண்ணின் பரப்பு இவ்வளவு இருந்தும், இந்த நாடு முன்னேற முடியாமல் இருக்கிறது.
  • உலகம் பரந்த உலகம். எல்லோருக்கும் இங்கே இடம் உண்டு. அவரவர்கள் தங்களுக்குப் பொருத்தமான இடம் தேடிக் கொண்டு வாழ்வதே நல்லது. பறவை களும் விலங்குகளும் இப்படிப் பொருந்தாத இடத்தை விட்டு நீங்கும் உரிமை பெற்றிருப்பதால்தான் மகிழ்ச்சி
  • யாக வாழ்கின்றனர்; அவற்றிற்குத் துன்பம் வந்தாலும் விரைவில் மாறிவிடுகின்றது. மனிதன் நடத்தும் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவு; துன்பம் வந்தால் விரைவில் மாறுவதும் இல்லை; அதை மறக்காமல் நினைத்து நினைத்து வருந்துவதற்கு மூளையும் இருக்கிறது.
  • சாவு என்பது வாழ்வுக்குத் தேவையானது. சாவும் வாழ்வும் சேர்ந்தால் வட்டம். இது இல்லையானால் அது இல்லை. இலை பழுத்து வாடி உதிர்ந்தால்தான், தளிர் பசுமையாகத் தோன்றுகிறது. பழுப்பதும் துளிர்ப்பதும் போல்தான் சாவும் வாழ்வும்.
  • பொதுவாக, தமிழன் முதலில் தன்னை நினைக்கிறான்; தன்னையே நினைக்கிறான். பிறகுதான் சில வேளைகளில் மேற்போக்காக மொழியையும் நாட்டையும் நினைக்கிறான். இவ்வளவு தன்னலம் முதிர்ந்திருப்பதால்தான் மிகப் பழங்காலத்திலிருந்தே பண்பாடு மிக்க இனமாக விளங்கியிருந்தும் இன்று தாழ்வான நிலையில் கிடக்கிறது.
  • அறிவுரையால் பெரும்பாலோரின் மனத்தைத் திருத்தலாம் என்பது வீண் கனவு; அழும் குழந்தையை முத்தமிட்டு அமைதிப்படுத்த முயலும் தாயின் முயற்சி போன்ற வீண் கனவுதான். வாழ்வின் அடிப்படைத் தேவைகளைத் தந்து, தக்க சட்டமும் சூழ்நிலையும் ஏற்படுத்தினால்தான் பெரும்பாலோரைத் திருத்த முடியும்.
  • மனம் வானளாவ உயர வேண்டியதாக இருக்கலாம். ஆனால் தான் வேரூன்றிய மண்ணை மறந்து வாழ முடியாது; வானைப் புறக்கணித்துக் கிளைகளை உயர்த்தாமல் வாழவும் முடியாது. இந்த உண்மையை நன்கு உணர்ந்தவர் திருவள்ளுவர். அறநெறியும் வேண்டும், பொருள் வளமும் வேண்டும், இன்ப வாழ்வும் வேண்டும் என்று உணர்த்தும் நூல் திருக்குறள்.
  • குழந்தைகளுக்கு அறநூல்களைத் திணிப்பதைவிட, அறிவுரைகளைக் கூறுவதைவிட அவர்கள் பின்பற்றத் தக்க வழியில் நாம் வாழ்வதுதான் நல்லது. அறவுரைகளும் அறிவுரைகளும் வற்புறுத்தி ஊட்டும் உணவு போன்றவை. அவை நன்றாகச் செரிப்பதில்லை. பெரியோரின் நடக்கை அப்படி அல்ல; குழந்தை தாமே விரும்பி உண்ணும் பழம் போன்றது அது.
  • நன்மை தீமை இன்பம் துன்பம் குணம் குற்றம் நிறை குறை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, எதற்கும் தயங்கி நிற்காமல் ஒடுகின்ற கடிகாரம்போல் கடமைகளை அஞ்சாமல் செய்கின்றவர்கள்தான் இந்தக் காலத்தில் தலைமைப் பதவிக்குத் தக்கவர்கள். குடும்பத் தலைவியும் இப்படி இருந்தால்தான் வாழ்வு நன்றாக இருக்கும்.
  • எந்த விதிக்கும் விலக்கு உண்டு. விதிவிலக்கைப் பார்த்துவிட்டு நாம் எப்போதும் பின்பற்றக்கூடாது. அதுதான் நம் நாட்டில் எல்லோரும் செய்யும் தீங்கு. விதிவிலக்குக்கும் காரணம் உண்டு. அந்தக் காரணத்தை நாம் ஆராய்ந்து பார்க்கிறோமா?
  • இதுவரையில் தவறு செய்தவர்களைப் பிடித்து விடாமல் தண்டித்து வந்து என்ன பயன் கண்டோம்? குற்றங்கள் வளர்ந்து வருகின்றனவே தவிர, குறைய வில்லை. உடம்பில் உட்கார்ந்து கடித்த கொசுக்களாகப் பார்த்து அவைகளை வேட்டையாடி நசுக்கிப் பொசுக்கி விடுவதில் வல்லவர்களாக இருக்கிறோம். அதற்காகவே நீதிமன்றங்கள். சிறைக் கூடங்கள் எல்லாம் ஏற்படுத்தி ஏராளமாகச் செலவழித்து வருகிறோம். ஆனால் கொசுக்கள் வளர்வதற்கு இடம் தருகின்ற சாய்க்கடைகளையும் தேக்கங்களையும். ஒழித்துச் சீர்ப்படுத்துவதற்கு அதில் கால் பங்கு முயற்சியும் செய்வதில்லை.
  • தனிமனிதன் இன்புற வேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்க வேண்டும். சமுதாயம் பழங்காலத்துப் பெரிய தேர் போன்றது. அதை எல்லோரும். இழுக்கவேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் இன்பம் உண்டு. பலர் ஏறி உட்கார்ந்துகொண்டு இன்பம் உற, சிலர் இழுத்துச் செல்கின்ற தேர் அன்று இது. ஒவ்வொருவரும் தம் கடமையைக் குறைவில்லாமல் செய்ய, ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைப் பெறுமாறு அமைந்திருப்பதே நல்ல சமுதாயம் ஆகும்.
  • எப்படியும் நல்ல சமுதாயம் அமையவில்லையானால், அமைதியான வாழ்க்கை இல்லாமற் போகும். நூற்றுக்கு ஒருவர் இருவரை மட்டும் திருத்தி இனிப் பயன் விளையாது. பெரும்பாலோர் நெறியோடு வாழ்வதற்கு உரிய வழிவகைகளை அமைக்க வேண்டும். இரண்டில் ஒன்று நடக்க வேண்டும். ஒன்று, இன்றைய பெரிய ஊர்களும் பெரிய அமைப்புகளும் குறைந்து பழங்காலம் போல் மனச்சான்று விளங்கும் சிறிய ஊர்களும் சிறிய அமைப்புகளும் ஏற்படவேண்டும். அது. தான் காந்தியடிகளின் நெறி. மற்றொரு வழி, பழங்காலத்தில் நம்பிக்கையும் உறுதியும் ஊட்டியதாகிய சமயத்திற்கு ஒப்பாக இக்காலத்தில் வேறொன்று ஏற்படவேண்டும்; எல்லோருடைய நன்மைக்காகவும் எல்லோரும் சேர்ந்து செய்யும் சட்டத்தைக் கடவுளின் ஆணை போல் போற்ற வேண்டும்.
  • நூல்கள் எந்த மொழியில் இருப்பினும் இருக்க, கற்பித்தலும் கற்றலும் தாய்மொழியில் இருத்தல் கடமை என்ற தெளிவுதான் இன்று தமிழ்நாட்டு அறிஞர்க்கு, வேண்டும். ஒரு தலைமுறை வரையில் இந்த நிலைக்கு இடம் கொடுப்போமானால், அடுத்த தலைமுறையிலேயே அறிவியல் நூல்கள் பல, தாய்மொழியிலேயே இயற்றப்பட்டுவிடும். இந்தத் தலைமுறையில் தாய் மொழியில் சிந்தனை வளர இடம் கொடுப்போம். அடுத்த தலைமுறையில் நூல்கள் எழ வழிவகுத்தவர்களாவோம். இந்த நாட்டில் அறிவுக்குப் பஞ்சம் இல்லை. தொன்றுதொட்டு மூளை வளம் உள்ள நாடு இது. ஆதலின் நம்பிக்கை கொள்வோம்; துணிவோம்.
  • மனிதன் உடம்போடு வாழ வேண்டும்; மனத்தோடு வாழ வேண்டும். மின்சாரம் முதலிய சக்திகளைக் கண்டுபிடித்து வசதிகளைப் பெருக்குவது மட்டும் போதாது. நோய் குறைந்த உடம்பும், கவலை குறைந்த மனமும் பெறுவதற்கு வழிதேட வேண்டும்.
  • பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவைகளுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை; பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வம்பும் தும்பும் செய் கின்றது; பேச்சு வளர்கின்றது: பிணக்கும் முற்று கின்றது; அன்பான வாழ்க்கையிலும் திடீரென்று அன்பு முறிகின்றது.
  • அந்த மலர்கள் என்னோடு பேசுவனபோல் இருக்கின்றன. அவைகள் அப்படியே இருக்கட்டும். வாழ்க்கையைப் பற்றி அவைகள் என்னவோ சொல்கின்றன; உணர்த்துகின்றன.



சி. பா.

தேசிங்கு ஆண்ட - செஞ்சியில் பிறந்தவர் (3 - 5 - 1935) இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண்டாச்சிபுரமும் திரு வண்ணாமலையும் இந்த இலக்கியப் பொழில் கற்ற இ ட ங் கள். பைந்தமிழ் வளர்க்கும் பச்சையப்பன் கல்லூரிப் பாசறை மறவருள் ஒருவர். அன்னைத் தமிழில் பி.ஏ. ஆனர்சு, அங்கு! முதல் வகுப்பில் தேறிய முதல்வர். “குறுந்தொகை” பற்றிய ஆய்வுரைக்கு 1963ல் எம். லிட்., பட்டமும், “சேர நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்” பற்றிய ஆய்வுரைக்கு 1970ல் டாக்டர் (பிஎச்.டி) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள், நல்ல நடைகொண்ட இந்த நாகரிகர் பேர் சொல்ல நாளும் மாணவர் படை உண்டு நாட்டில்! சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் பேராசியராகத் துறைத் தலைவராகச் சிறந்திருக்கிறார். முன்னுள் தமிழக ஆளுந்ருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், இந்த முற்றிய புலமையாளர்!

இருபது நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந் திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், 'தமிழ் இல்க்கிய வரலாறு’ ஒன்றே சான்று! அண்மையில் வந்துள்ள அணிகலன் பெருந்தகை மு.வ. 'ஆங்கிலத்தில் ஒரு நூல். சங்ககால மகளிர் நிலை பற்றிய ஆராய்ச்சி இலக்கிய அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உருபா-முதல் பரிசைப் பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்கள் : புலவரேறு (குன்றக்குடி ஆதீன்ம்) செஞ்சொற்புலவர் (தமிழ் நாட்டு நல்வழி நிலையம்), சங்க நூற்செல்வர் (தொண்டை மண்டல ஆதீனம்), சங்கத் தமிழ்ச் செல்வர் (தருமை ஆதீனம்).

பெருந்தகை மு.வ.வின் செல்லப்பிள்ளை சி.பா. அவர் புகழ் பாடும் அந்தமிழ்த் தும்பி; அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி! எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி!

சி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி. இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடு படு!

-மா. செ.