அறவோர் மு. வ/தண்டமிழ்ச் சான்றோர்

விக்கிமூலம் இலிருந்து

VI

தண்டமிழ்ச் சான்றோர்

டாக்டர் மு. வ.

எளிய குடும்பத்தில் பிறந்து, உழைப்பாலும் உண்மையாலும் உயரிய பண்பாட்டாலும் உலகத்தார் உள்ளத்திலெல்லாம் நிறைய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த பெருந்தகை டாக்டர் மு. வ. அவர்களாவர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காவலனாயும் பாவலனாயும் வாழ்ந்த கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய குல மன்னன், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்களால் இம் மண்ணுலகம் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டான். சிலர் பலருக்காக வாழ்வதனால் உலகின் இயக்கம் நடைபெற்றுக்கொண்டேயுளது. இம்முறையில் இந் நூற்றாண்டில் சீலமுற வாழ்ந்தவர் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. ஆவர். அவர்தம் அடியொற்றி, அவர்தம் வாழ்வு வழியில் மாறா நம்பிக்கை கொண்டு பெரு வாழ்வுதூய வாழ்வு - வாழ்ந்தவர் டாக்டர் மு. வ. அவர்கள் ஆவர்.

நவசக்தி அளித்த தமிழார்வம்

வடாற்காடு மாவட்டத்தில் வாலாசாவிற்கு அருகில் உள்ள வேலம் என்னும் சிற்றூரே நம் பேராசிரியர் அவர்களின் சொந்த ஊர். ஆயினும் இவர் பிறந்து வளர்ந்து பணியாற்றிய ஊர் திருப்பத்தூராகும். 1912 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 25 ஆம் நாள் பிறந்தவர் நம் பேராசிரியர். அவர்களின் தாயார் பெயர் அம்மாக் கண்ணு. தந்தையார் பெயர் முனிசாமி என்பது ஆகும். பிறவியிலேயே மெலிந்த உடம்பு. ஊரில் நல்ல செல்வாக்குப் படைத்த பெருந்தனக்காரரின் ஒரே மகன். செல்லங் கொடுத்துச் சீராட்டிப் போற்றி வளர்க்கப் பாட்டியார். இவ்வாறு இளமைப் பருவம் கழிகின்ற காலையில் 'நவசக்தி’ என்னும் வார ஏடு அவர் கண்ணிற் பட்டது. தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் நடத்திய அத் தமிழ் ஏடு, இவர் தம் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை உண்டு பண்ணிற்று எனலாம். அவ் வேட்டின் தமிழ் நடையில் இவர் நெஞ்சம் திளைத்தார்; கருத்துகளில் மூழ்கினார்; அழகு தமிழில் அகங்குளிர்ந்தார். விருந்துண்ட மகிழ்ச்சி இவருக்கு ஏற்பட்டது. விடாது அவ்வேட்டினை வாங்கிப் படிக்கும் பழக்கம் வந்து வாய்த்தது. அவ்வேட்டில் இடம் பெற்ற கட்டுரைகளில் மேற்கோளாக எடுத்தாளப் பெற்றிருந்த தமிழ்ப் பாடல்களை மனப் பாடம் செய்யத் தொடங்கினார். இதனால் தமிழார்வமும், நல்ல தமிழ் படிக்கும் பழக்கமும் இவரிடம் வந்து படிந்தன.

இவருக்கு அப்போது பதின்மூன்று வயது நடந்து கொண்டிருந்தது. வகுப்புத் தோழன் ஒருவன், எங்கும் கிடைக்காத நூலென்று - யாப்பிலக்கண நூலொன் றினை இவரிடம் காட்டினான். அந் நூலில் செய்யுள் இயற்றும் வகை கூறப்பட்டிருப்பதறிந்து களிப்புக் கொண்டார். ஏற்கெனவே செய்யுள் இயற்ற வேண்டும் என்று ஆர்வங்கொண்டிருந்த இவருக்கு அந் நூல் நல்ல விருந்தினை நல்கியது. யாப்பிலக்கணத்தை வரையறை செய்த அந்நூலே 'யாப்பருங்கலக் காரிகை' எனப்படுவது. அந் நூலினை அந்நண்பனிடம் கெஞ்சிக் கேட்டு, இரண்டு நாட்களுக்கென்று இரவலாகப் பெற்று, அதனை முழுவதுமாகப் படிசெய்துகொண்டு ஓசைப்படாமல் நூலைத் திரும்பத் தந்துவிட்டார். 'இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்பார்கள். அம்முறையில் இவர்க்கு யாப்பிலக்கணப் பயிற்சி இளமையிலேயே வாய்த்துவிட்டது. பிற்காலத்தில் பன்முறை இந் நூலினை இவர் சிறப்புத் தமிழ் பயிலும் மாணவர்க்கு வகுப்பறையில் கற்பிக்கும் நிலையும் நேர்ந்தது.

மெலியாத உள்ளம்

உயர்நிலைப் பள்ளியோடு இவர் படிப்பு முடிவுற்றது. தாலுக்கா அலுவலகத்தில் சேர்ந்தார். கடமையினைக் கண்ணுங் கருத்துமாகக் கவனித்து வந்தார். உயர் அலுவலர்கள் இவர்தம் வேலைத் திறனைக் கண்டு மகிழ்ந்தனர்; பாராட்டினர். ஆனால், அதே சமயத்தில் அளவிற்கு மீறிய வேலைச் சுமையால் இவர் உடல் நலிவுற்றது. எனவே, ஊர் திரும்பினார்; உடல் நலம் காத்தார். தமிழ் கற்றார்; புலவர் தேர்வு எழுதினார்; மாநில முதன்மை பெற்றார். ஆயிரம் ரூபாய்ப் பரிசும் வந்தெய்தியது. பி. ஓ. எல். தேர்விற்குத் தொடர்ந்து படித்தார். நன்முறையில் தேறினார். சென்னை, பச்சையப்பர் கல்லூரியில் தமிழ்ப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார்.

தாயினும் பரிவு

பச்சையப்பர் கல்லூரியே இவர் புலமையை வளர்த்தது; புகழைச் சேர்த்தது. இவர்தம் இனிய சொத்தாக மாணவச் செல்வங்கள் வாய்த்தனர். இவர் தம் வீடு விருந்தோம்பும் உணவுச் சாலையாக மாறிற்று. அருமை அம்மா அவர்கள் இன்முகத்தோடு பசியறிந்து, பெற்ற தாயினும் பரிந்து உணவு நல்கி, மாணவர் பலரைப் பெற்ற மைந்தரினும் பேணி வளர்த்தனர். வயிற்றுக்கு உணவுப் பொறுப்பு அம்மாவுடையதும், அதற்கு முன்னும் பின்னும் நெஞ்சத்திற்கு உணவு ஊட்டுவது நம் பேராசிரியருடையதுமாக ஆயிற்று. கல்லூரியில் ஏட்டுக் கல்வி பெற்ற மாணவர் சிலர், இவர் வீட்டில் வாழ்க்கைக் கல்வியை - கல்வியுணர்வை - பண்பாட்டுக் கல்வியைக் கற்றனர். அவ்வாறு கற்றவர்களில் பலர் இன்று வாழ்வில் பல்வேறு துறைகளில் புகழ் பூத்து விளங்குகிறார்கள்.

டாக்டர் மு.வ. அவர்கள் கடும் உழைப்பாளி. எந்நேரமும் அவர்கள் படித்துக்கொண்டோ அல்லது வருபவர்களிடம் சுருங்க - பெருக உரையாடிக்கொண்டோ இருப்பார்கள். சிந்தனையில் தனித்து மூழ்கிவிடுவார்கள். இதன் விளைவாக நூல்கள் எழுதத் தொடங்கினார்கள். 'செந்தாமரை' வெளி வந்தது. பின்னர், 'கள்ளோ காவியமோ' வெளிவந்தது. தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர் பலரை இவர் தம் நீங்காத வாசகர்களாக (Readers) இந் நூல்கள் ஆக்கின.

இரு கண்கள்

இதற்கிடையில் மொழியியல் ஆராய்ச்சி செய்து 'வினைச் சொற்கள்' பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையெழுதி எம். ஓ. எல். பட்டமும், இலக்கிய ஆராய்ச்சி மேற்கொண்டு 'பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' (The Treatment of Nature in Ancient Literature) என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையினை எழுதி 'டாக்டர்' (Ph.D.) பட்டமும் பெற்றார்.

சிறப்புகள் சேர்ந்தன

நூல்கள் பல்துறைகளிலும் பல்கிப் பெருகின. நாவல்கள் படிப்போர் நெஞ்சங்களைக் கவர்ந்தன. அதிகப் படிகள் விற்கும் நூல் இவருடையதே என்ற நிலை ஏறத்தாழப் பத்தாண்டுக்காலம் (1951 - 1960) நிலவியது. நாளும் நாளும் பட்டிதொட்டிகளிலும் இவருடைய நூல்களைப் படிப்போர் தொகை பெருகிற்று.

இந்திய விடுதலைப் போராட்ட நூற்றாண்டு விழா 1957-ல் நாடெங்கும் கொண்டாடப் பெற்றது. தமிழ் நாட்டு அரசாங்கம் - அப்போது அதன் பெயர் சென்னை அரசாங்கம் - முத்தமிழின் மூச்சான அறிஞர் பெருமக்களைப் பாராட்ட எண்ணி, இயற்றமிழுக்கு டாக்டர் மு. வ. அவர்களையும், இசைத் தமிழுக்குத் திருமதி. கே. பி. சுந்தராம்பாள் அவர்களையும், நாடகத் தமிழுக்குப் பம்மல் பி. சம்பந்த முதலியார் அவர்களையும் தேர்ந்தெடுத்துப் பாராட்டியது, இவர் எழுதிய 'அகல் விளக்கு' என்னும் நாவலுக்கு 1963 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி பரிசு ரூபாய் ஐயாயிரம் கிடைத்தது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசினைக் 'கள்ளோ காவியமோ?' 'கி. பி. 2000, மொழியியற் கட்டுரைகள்' முதலிய நூல்கள் பெற்றன.

துணைவேந்தரானார்

1939 தொடங்கி 1961 ஆம் ஆண்டு ஜூன் வரை பச்சையப்பர் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றிய டாக்டர் மு. வ. அவர்கள் 1961 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியரானார்கள். தமிழ். அன்பர்களின் - மாணவர்களின் இதய வேந்தராக விளங்கிய மு. வ. அவர்கள், 1971 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் முதல் நாள் தொடங்கி, மூன்றாண்டுக் காலம் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி வகித்தார். இவ்வாண்டு, மீண்டும் ஒரு முறை மூன்றாண்டுக் காலத்திற்கு அப்பதவி நீட்டிக்கப்பட்டது.

இறுதியில் அவர் வாழ்வு 10.10.1974 வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு முடிவெய்தியது.

அமெரிக்காவின் மதிப்பு

மேலை நாட்டுப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் 'இல்லினாய்ஸ்' (Illinois) பல்கலைக்கழகம் இவருக்குச் சிறப்பு டி. லிட் (D. Litt) பட்டம் வழங்கிப் பாராட்டியிருக்கிறது. தமிழ்ப் படித்த எவரும் இதுவரை பெறாத சிறப்பு இது.

சான்றாண்மைக்கு ஆழி

டாக்டர் மு. வ. அவர்கள் எளிமையும் தூய்மையும் தொண்டும் கனிவுங் கொண்டு இனிய புன்முறுவல் பூத்த முகத்துடன் காட்சியளிப்பார்கள். எந்தப் பதவி வகித்த நிலையிலும் செருக்கென்பது அவரிடம் ஒரு சிறிதும் காணப்படவில்லை. ஆடம்பரம் அவர் வாழ்வில் கால் கொள்ளவில்லை. எப்போதும் எவரையும் குறை தூற்றாத பண்பு, இயன்றவரை அனைவருக்கும் இயன்ற அளவு உதவுகின்ற மனப்பான்மை - இவை அவருடைய நீங்காப் பண்புகள்.

திருவள்ளுவர் கண்ட 'சான்றாண்மை’க்கு ஓர் உருவம்வடிவம் தந்தவர் இவர். சான்றாண்மைக்கு ஆழி என விளங்கிய இவர்கள் இயற்கை எய்திவிட்டார்கள்.

தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு என்று மூச்சு ஓயுமட்டும் வாழ்ந்த ஓர் ஒப்பற்ற பெருமகனார் அவர்.

மதுரைப் பல்கலைக்கழகம் பல்கிப் பெருக, அஞ்சல் வழிக் கல்வித் துறை இந்தியாவிலேயே முதலிடம் பெற உயர்த்தி நின்ற ஒருவர் இன்று நம்மிடையே இல்லை.

தமிழ் இசைச் சங்க நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொண்டு, பல ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தவர் இவர்.

சொற்பொழிவுகளுக்குச் செல்வதில் தயக்கங் காட்டிய இவர் நாடகங்களைப் பாராட்டிப் பேச ஒப்புக்கொண்ட நிலை, நாடகத் தமிழ் வளர்ச்சியில் இவர் காட்டிய அக்கறையினை உணர்த்தும்.

மு. வ. வின் சமயநெறி

'எல்லாரும் வாழ வேண்டும்' எனும் உயரிய மனம் இவருடையது.

திருநாவுக்கரசரிடமும், தாயுமானவரிடமும், இராம தீர்த்தரிடமும் தேர்ந்த மனம் ஆன்மீக நெறியில் திளைத்தது.

நீரில் உப்பு கரைவதுபோல, கற்பூரம் எரிந்து காற்றில் கலப்பதுபோல, உலக உயிர்கள் இறைவனோடு கலந்து விடவேண்டும் என்பது இவர் கோட்பாடு.

நெஞ்சகத்தையே கோயிலாகக் கொண்டு, இறைவன் அருளைச் சுகந்தமாகக்கொண்டு, அன்பையே மஞ்சன நீராக அபிடேகித்து, பராபரனைப் பூசை கொள்ள அழைத்த தாயுமானவர் வழி இவர் ஆன்மீக நெறி.

உலகம் சுற்றி வந்தாலும் செருக்கு தலையைச் சுற்றாத அடக்கம் இவர் இயல்பு.

சுருங்கச் சொன்னால்-

தமிழர் பண்பாட்டின் உயர்தனிக் காவலர் இவர்.

இவர் மறைந்துவிட்டாரா?

இல்லை! நம் நெஞ்சங்களில் வாழ்கிறார்.

டாக்டர் மு. வ. வின் திருப் பெயர் வாழ்க! அவருக்கு தம் வணக்கங்கள்.

-தமிழ் உறவு, அக்டோபர், 1974