அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு கடல்!

விக்கிமூலம் இலிருந்து

6. அண்ணா ஒரு கடல்!


வானத்தின் பிரதிபலிப்பால் அது நீல நிறமாகி இருந்தது!

சிரித்துக்கொண்டு அதன் மீது விளையாடும் அலைகளால், அதனைக் கடலென்றே மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

தேங்கியிருக்கும் குட்டையும் - கடலும், பூமியில்தான் இருக்கின்றன. குட்டைக்கு அலைகள் இல்லை; கடலுக்கு அலைகளுண்டு. இதற்குக் காரணமென்ன?

நாட்டைத் திருத்துவதற்காக நல்லவர்களிலே சிலர், கசப்பான உண்மைகளை, அவ்வப்போது வெளியிடுவார்கள்.

வானம் போன்ற உயர்வு, அத்தகைய மனித மேதைகளைக் காதலிக்கும். கடலையொத்த ஆழமான உணர்ச்சி, அந்த வானத்தைத் தாவித் தாவிக் குதிக்கும்.

இவை விஞ்ஞான அடிப்படையிலே எழுந்த உண்மைகளாகும். இந்த உலகம், இளகி - இறுகும்போது - முன்பு, தேக்கி வைத்துக் கொண்ட முதல் சொத்து கடல்.

தரணி, இடைக்காலத்திலே யாரோ ஒரு மனிதனாலே, கண்டுபிடிக்கப்பட்ட ஜனநாயகத் தத்துவமல்ல; இயற்கையின் அடிப்படைத் தத்துவமாகும்.

இன்றைய ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட ஒரு கட்சி; நாட்டை ஆட்சி செய்கிறது.

சிறுபான்மைக் கட்சிகள்; எதிர்க்கட்சிகளாக இயங்கிச் சித்ரவதைக்கும் ஆளாகின்றன. இவை ஜனநாயகத்தின் பெயரால் நடக்கின்றன.

இயற்கையின் ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட கடல், உலகத்தை அடக்கி, ஆண்டு, ஆட்சிபுரியவில்லை.

எதிர்க்கட்சியைப் போலுள்ள பூமிதான், மக்களை ஆட்சி புரிகிறது. வளமாக வாழ வைக்கிறது.

சிறுபான்மைக்கு சிறப்பான தகுதியை வழங்கியதோடு - பெரும்பான்மை நின்றுவிடவில்லை.

'பூமியே!, நீ கொடுங்ககோலை ஏந்தினால், புரண்டுவரும் கடலலைக் கோள்களால், உன்னைப் புதைகுழிக்கு அனுப்புவேன், ஜாக்கிரதை'

கடல், தனது அலையோசையெனும் அபாய முழக்கங்களால், தலைவர்களைப் போல, அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றது.

இன்றைய ஜனநாயகமானாலும் - இயற்கையின் தத்துவ முறையானாலும் - இரண்டிலும், ஜனநாயக உள்ளம் தவழ்வதைப் பார்க்கின்றோம்.

அறிஞர் அண்ணாவின் உள்ளமும் - கடல் போன்றது!

இன்றைய ஜனநாயகத் தத்துவத்தை, அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஜனநாயகத் தத்துவத்திற்கும் ஆபத்தை உண்டாக்குவோர், அவர்கள் - எவரானாலும் சரி, தனது கடல்கோள் போன்ற எதிர்ப்பால், அவர் அந்த அபாயத்தை அழித்துவிடும் ஆற்றல் பெற்றவராவார்.

பெரும்பகுதி தண்ணீரை வைத்திருக்கும் கடல் நீரில், அறிஞர் அண்ணாவின் சீதளத் திரன் செறிந்த அறிவில், இயற்கையாகவே வெதவெப்பு இருக்கிறது.

அதன் விளைவுதான்; அண்ணா அவர்களால் குளுமையாகவும் பேசமுடிகிறது - அந்தக் குளிர்ச்சியிலே மெய்மறந்து போவார்களேயானால், செயல் தடைபடும் அல்லவா? அப்போது, வெதவெப்பால் அவர்களை எழுப்பியாக வேண்டிய கட்டத்திலும் அறிஞர் அண்ணா இருக்கிறார்:

கரையிட்டுத் தடுத்தால் கடல் உள்ளே வராது என்று - நல்லவர்களைச் சிறையிட்டுப் பழக்கப்பட்டவர்கள் - கடலுக்கு அருகாமையிலேயே, கரையாக இருக்கிறார்கள்!

கால வெள்ளத்தால், இதுவரை சக்தியிழக்காத கடலின் பயம், கரைகளுக்கு இருந்தே வருகிறது.

அறிஞர் அண்ணா ஒரு பெருங்கடல், அந்த ஊழி வெள்ளத்தை உப்புச் சிறையிட்டு ஒடுக்க, முனைந்தால் நீரின் நெருக்கத்தால் - கரையின் அணுக்கள் விலகியே நிற்கும். அதனைத்தான் கடற்கோள் என்கின்றோம்!

திராவிடரியக்கம், என்ற அலைக் கரங்களை வைத்திருக்கின்ற அண்ணா அவர்கள் - காங்கிரசின் பலமான கரையைத், தமிழகத்தில் விழுங்கியிருக்கின்றார்.

ஐந்தாண்டுத் திட்டங்களால், ஆழியை அடக்க முயல்பவன், வீறிட்டெழும் அலையின் வளைக் கரத்தால் எப்போதும் விழுங்கப்படுவான்.

உலகத்தின் பேரறிஞர்கள் - எப்போதும் இயற்கையின் திரட்சியாவார்கள். அவர்களின் மனோபல சக்தி, இயற்கையைச் சிறை பிடித்திருக்கிறது.

அறிஞர்கள் இயற்கையின் பகுதி என்று அறிந்த பிறகு, வெறும் பிரச்சினைகளால், உருவான அரசியல் கட்சிகளின் சட்டங்கள், அதனை ஒன்றும் செய்துவிட முடியாது.

கொந்தளிக்கும் கடலிலிருந்து மின்சாரத்தை எடுத்துக் கொள்ள முயற்சித்துக் கொள்ள வேண்டுமே தவிர, கரிக்கிறதே கடலென்று கருதி - கடல் மீது போர் தொடுக்கக் கூடாது!

அண்ணாவின் அறிவுரைகளிலிருந்து நாட்டுக்குரிய நல்லனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி, அவர் கட்சித் தலைவர் என்பதற்காகப் - புறக்கணிக்கக் கூடாது; அது புத்திசாலித்தனமுமன்று!

கடலைக் கூர்ந்து கவனித்தால், அதனுடைய ஆழம் அளப்பரிய தூரத்திலிருந்தாலும் - நீர்மட்டும், மக்கள் வாழும் நிலப்பகுதியோடு ஒன்றியிருப்பது தெரியும்.

ஆழ்ந்த அறிவுடையோர், எப்போதும் மக்களுடன் சரி சமமாகவே இருப்பார்கள். அந்தஸ்து - பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதைத் தவறாகக் கணக்கிட்டுக் கொண்டு, ஆழத்தை மேடென்று நினைத்து ஏறினால், அவர்களுடைய பயணம் பாதாளத்தை நோக்கித்தான் நடக்கும்!

அதோ அந்தக் கடல், அடிவானத்தின் உதட்டை, அனாதிக் காலந்தொட்டுச் சுவைத்துக் கொண்டிருக்கிறது.

எங்கு நோக்கினும் பரந்த விரிந்த நீர்த் தகடு, அமைதியோடு; தொடு வானத்தை தழுவிக் கொண்டிருக்கிறது.

இந்த மயக்கக் காட்சியிலிருந்து பாடம் பெற வேண்டியவர்கள், அதை மாயை' என்று கூறி, பதம் குலைந்து விடுகிறார்கள்.

எவ்வளவுதான் உயரமான நிலையிலே ஒருவன் இருந்தாலும் - அவன் கடலைப் போன்ற ஆழ்ந்த அறிவாளர்களிடத்தில் அடிவணங்கித்தான் ஆக வேண்டும் என்பது - அடிவானத்தின் தத்துவமாகும்.

கரையிலிருப்பவர்கள், தங்களுடைய செங்கோலை வைத்துக் கொண்டு, அடிவானுக்கும் - ஆழிக்கும், ஏற்பட்டத் தொடர்பை அலட்சியமாக நினைக்கும்பொழுது - அடுக்கடுக்காக வருகின்ற அலைப் புரட்சியை, சாதாரணமாக நினைக்கும்பொழுது - எத்தனையோ கோல்கள், அந்த அகண்ட அறிவுக் கடலின் ஆழத்தில் விழுந்து, முழுகிவிட்டிருப்பதையும் காண முடிகிறது.

எதேச்சாதிகாரிகள், தங்கள் ஆணவக் கோலைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள் - கிடைக்கவில்லை.

நான் கற்பனை செய்யவில்லை. இப்போது கடலின் அடிபாகத்தில் இருக்கிறேன். அங்கே அலைகள் இல்லை.

நீரின் அமைதி - அழுத்தமானப் பாறைகளைப் போல, மவுனம் சாதித்துக் கொண்டிருக்கின்றது.

நான் கடலின் உள்ளிருந்து, வானோக்கி, அண்ணாந்துப் பார்த்தேன். ஒரே ஒளிமயம், நீர் மட்டத்தில் இருந்தது. இப்போது நான் வியப்படைகிறேன்.

ஒரு முழுநிலவு, எனது காலடியில் இருந்தது: நான் வெளி உலகத்தில் பார்த்த நிலவைவிட இந்த நிலவு ஒழுங்காக வரையப்பட்டிருந்தது.

ஒரு தடவை, அறிஞர் அண்ணா அவர்களிடம் இந்தக் காட்சியைக் காண முடிந்தது.

தூய அன்போடு இருக்கும் அவரை, "என்னை உங்களது அறி வாழத்திற்கு அழைத்துப் போங்கள்’ என்று வேண்டி நின்றேன்.

தம்பி! நீ ஓர் எஃகு தோளன் - புரட்சிமனோபாவம் கொண்டவன். ஆழத்திற்கு வந்து என்னைப் போல ஒடுங்கி விடாதே’ என்றார்.

நான் இனிப்புக்காக அழும் குழந்தைகளைப் போல அழ ஆரம்பித்தேன். எனது அன்புப் பிடிவாதத்தை அவரால் மீற முடியவில்லை. இதயத்தின் தாள் திறந்தார். நான் அதனுள்ளே வேகமாக ஓடிவிட்டேன்.

அங்கே, நான் பார்த்த காட்சி, கற்றக் கல்வியனைத்தும் ஒரு முழுமை பெற்றிருந்தது. அவற்றை உணர ஆரம்பித்தேன். அதன் மென்மை, நிலவின் நிழலைவிட அழகாக இருந்தது!

வெளியிலே அவர் சீறும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந் தார் - கடலின் வேகமான அலைகளைப் போல. ஆனால் கடலடியில், மோன உருவோடு, சலனமற்றிருந்தார்!

அறிவின் மேற்பகுதி, எப்போதும் விடுதலைத் தலைவர்களுக்கு அலையாகவும் - தொண்டர்களுக்கு நிலவாக இருப்பதையும் - என்னால் அறுதியிட்டுக் கூற முடிந்தது.

நான், தலைதூக்கி வான்முகட்டை நோக்கினேன். அப்போது ஒரு சிப்பி, வான் துளியைக் கவர்ந்து கொண்டு - மூடிய வாயைத் திறக்காமல் - கடலின் அடிவயிற்றை நோக்கி வந்து கொண்டிருந்தது.

'சிப்பியே!’ என்றேன்.

‘ஆக்க வேலை அதிகமிருக்கிறது - பயணத்தைத் தடுக்காதே' என்று, அது கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

இதனை வாயால் கூறிற்று என்று நினைக்காதீர்கள் மவுனத்தால் கூறியபடியே போய்க் கொண்டிருந்தது.

அறுந்தப் பட்டத்தை நோக்கிச் சிறுவர்கள்'துரத்திக் கொண்டு போவதைப் போல - நீரில் அலைபாய்ந்து செல்லும், நான்; சிப்பியை நோக்கி, ஒட ஆரம்பித்தேன்.

சிப்பி, கடல் பஞ்சின் குகையில் வந்து அடங்கியது. நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன்.

‘என்ன செய்து கொண்டிருக்கிறாய் சிப்பியே!’ என்று கேட்டேன்.

‘புதிய நீர்த்துளி விசும்பைவிட்டு நழுவிற்று; அதனைப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்துவிட்டேன்’ என்றது.

'இதற்கு மேலே என்ன செய்யப் போகிறாய்? என்றேன். நான் குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்து, இதனை நல்முத்தாக்கி வெளியே விடப் போகிறேன்' என்றது.

அறிஞர் அண்ணா அவர்களும், வானத்திலிருந்து நீர் விழுவதைப் போல - புதிய பிரச்னைகள் கீழ் நோக்கி விழுகிற நேரத்திலெல்லாம், சிப்பியாக நின்று - அதைக் கவர்ந்து விடுகிறார்.

மலரில் விழுந்த நீர்த்துளி, பனித்துளியின் உருவோடு தேனாகிறது. முத்துச் சிப்பியில் விழுந்த நீர்த்துளி, நீரைப்போல இளகி இல்லாமல், இறுகியிருக்கிறது. அதனைத்தான் நாம், முத்து என்கிறோம்.

இதழில் விழுந்தால் தேன் - சிப்பியில் விழுந்தால் முத்து.

சில அரசியல் தலைவர்கள், பிரச்சினைகளைத் தேனைப் போல ஆக்கி, எறும்பைப் போலுள்ள சாதாரண மனிதர்களிடம் கூடத் தெரிவித்து விடுகிறார்கள்.

அறிஞர் அண்ணா போன்றவர்கள்தான், சிப்பியை போல அந்தப் பிரச்னையை, அமைதியான இடத்தில் வைத்து - சிந்தித்து - அதே பிரச்னையைப் போல, திட்டத்தையும் தீட்டுகிறார்கள்.

வான், நீர்த்துளியாக இருந்தால், சிப்பியில் ஒரு முத்து தான் இருக்கும். அதாவது, தெளிவானப் பிரச்னைகளுக்கே, முத்தான திட்டங்களாகும்.

வயிற்றெரிச்சல் காரணமாகப் பிரச்னைகளைச் சிதறுகின்ற தன்மையில் பேசுகின்றவர்களுக்கு, அறிஞர் அண்ணாவின் சிப்பித் தன்மை அமைவதில்லை.

அவரை நோக்கி வருகின்ற பிரச்னைகளை அவர் தள்ளி விடுவதுமில்லை.

பக்கத்திலிருந்த சிப்பி, ஏற்கனவே அடிவயிற்றில் சுமந்திருந்த நீரை முத்தாக்கி, உலகுக்குப் பரிசளிக்கத் தன் கொடை உள்ளத்தைத் திறந்து கொண்டிருந்தது.

அப்பொழுது பொற்றுகளை - மணிக் குலத்தைக் கடல் முத்தைப், போயெடுக்க அடக்கிய மூச்செவரின் மூச்சு?, என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பாட்டைப் பாடிக் கொண்டே, இருவர் கீழே இறங்கி வந்தார்கள்.

முத்துக் குளிக்கும் அந்தத் தென்பாண்டி வீரர்கள் - சிப்பியை வரவேற்றனர். 'சென்று வருகிறேன் தோழா’ என்று கூறி, அவனின் உழைப்பால் பொலிவான, ஆண்டாண்டுக்காலம் தமிழ் மன்னன் தடந்தோளில் சிப்பி சென்று - சிரித்தபடியே குந்தியது.

என்னுடைய எண்ணங்கள்; அறிஞர் அண்ணாவை - முத்து ஈனும் சிப்பியாக - முத்துக் குளிப்போர் கையில் தவழும் - சிப்பியாக எண்ணின.

எவனொருவன், தலைவனின் இதயத்தில் உருவானத் திட்டங்களைக் காலம் பார்த்து - உனர்ந்து - அதனை ஏற்றுச் செயல்படுத்த நெருங்குகிறானோ - அவனே, நல்முத்தை அடைகிறான்.

மிகவும் துன்பத்தை ஏற்று நாட்டின் வளத்தை உயர்த்த மூச்சடக்கி முத்துக் குளித்தாலொழிய - சிப்பி கிட்டாது.

அதனைப்போல, ஆளும் கட்சிக்காரர்கள் அறிஞர்களைத் தேடிச் சென்றாலொழிய நாட்டின் எதிர்காலம் நன்கு அமையாது.

நாட்டின் பெருந்தலைவர்கள், தங்களின் உண்மையான கீர்த்தியை, நெருங்கி வருபவர்களுக்கே வழங்குகின்றனர்.

எவ்வளவுக்கெவ்வளவு, பொருள்களை அதனதன் தகுதிகளைப் பார்த்து நாம் நெருங்குகிறோமோ - அவ்வளவுக்கவ்வளவு, அப்பொருள்களின் பயன், நமக்கு மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கே கிட்டுகின்றது.

நான், கொஞ்ச துரம் அப்படியே கடலடியில் நடந்து சென்றேன். அங்கே கடற்செடிகள் இருந்தன. சங்குகள் பல வண்ணத்தில் காட்சியளித்தன.

கடல் செடி ஒன்றைப் பிடுங்கிக் கிள்ளிப் பார்த்தேன். அது மிகச் சுலபமாக என் கைக்கு வந்துவிட்டது. அதன் பசுமை, கடலின் கரிய நிறத்தைவிடக் கரும்பச்சையாக இருந்தது.

அதன் இலைகளின் மேலே, பஞ்சு போன்ற மென்மைச் சுணைகள் இருந்தன. இந்த இடத்தில் இது தழைப்பதற்கு அவசியம்தானா? என்று, எனது சராசரி மூளை கேட்க ஆரம்பித்தது.

அப்போது அந்தச் செடி, "நான் மீன்களின் இரையாகவே இங்கு இருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டது.

'மீன் குஞ்சு'கள், என்னுடைய தழையால் வளர்ந்து, அதன் பிறகுதான், அவை புலால் உண்ண ஆரம்பிக்கின்றன.

'இப்போது, என்னுடைய தண்டை உடைத்துப் பார், உனக்கொரு வியப்பான உணர்ச்சி தோன்றும்’ என்றது.

நான் அதன் தண்டை இரண்டாகப் பிளந்தேன். அதனுள்ளே அளவிடமுடியாத வெதவெதப்பு இருந்தது.

'இந்தச் சூடு, அந்தத் தண்டுக்குள் எப்படி வந்தது? உனக்குத் தெரியுமா?’ என்று, பேசிற்று,

‘வைதீகனாக இருந்தால் எல்லாம் கடவுள் செயல்’ என்பாய். உன்னைப் பார்த்தால் பகுத்தறிவுவாதி போல இருக்கிறாயே!” என்றது.

நான் விழித்தேன். 'ஒரு கரு வளர்வதற்கும் - அது வளர்ந்து உரு பெறுவதற்கும் - சூடும் குளுமையும் தேவை.

இப்போது நான் வளர்ந்திருக்கிறேன் என்றால், இந்தச் சூட்டாலும் - குளுமையாலும்தான்.

'இந்தச் சூடு எனக்கு எப்படி வந்தது என்றால், என் உடல் பூராவும் இருக்கின்ற செல் என்ற உயிர்ப்புச்சக்தி - சூரிய ஒளியால், சூடான நீரில் இருக்கின்ற, வெதவெதப்பை உறிஞ்சிவிடுகிறது.

அதன் விளைவுதான், நான் நீரால், சூழப்பட்டிருந்தாலும், எனது உடல் - எப்போதும், வெதவெதப்பாகவே இருக்கிறது’ என்றது.

அறிஞர் அண்ணா அவர்கள், நீரால் சூழப்பட்ட கடற் செடியைப் போல, பாதகம் விளைவிக்கின்றவர்களுக்கு மத்தியில் இருக்கின்றார்.

உதயசூரியன் - மதிய சூரியனின் அருள் கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் பல கோடி ஏழை மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

அவர்களின் துன்பச் சூட்டை நன்குணர்ந்த அறிஞர் அண்ணா அவர்கள்; அந்தத் துன்பத்தை மட்டும் - தான் - உறிஞ்சி வைத்துக் கொண்டிருக்கிறார். காரணம், அவரும் அந்தக் குடும்பத்திலே பிறந்த ஒருவரல்லவா?

பல கோடி மக்களின் நலனுக்காகப் பாடுபட உலகில் தோன்றிய எந்தத் தலைவனும், துன்பச் சூட்டைத் தானே உறிஞ்சி, எப்படி - கடல் செடி, தனது குளுமையான இலைகளை மீன் குஞ்சுகளுக்கு இரையாக்கி விடுகின்றதோ, அப்படித் தன்னைப் பொதுமக்களுக்கு இரையாக்கிக் கொள்கின்றான்.

கடல் செடி, நீரின் சூட்டை உறிஞ்சுவதற்கும் - தன்னையே மீனுக்குத் தீனியாக மாற்றிக் கொள்வதற்கும் உருவானதைப் போல, அறிஞர் அண்ணா அவர்கள், தன்னைப் பொது மக்களுக்கு அர்ப்பணித்தும்- அவர்களது துன்ப வேக்காட்டைத் தானுறிஞ்சிக் கொண்டும் வாழ்கிறார்.

கடலடியில் இருந்த எனது கண்கள், கொஞ்சம் தொலைவில் தங்க மூலாம் பூசியத் தகடாக மின்னிக் கொண்டிருந்த ஒரு பனி மலையின் மீது பதிந்தன.

கடலின் மேற்பரப்பில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் திங்கள் - அந்தப் பனிமலை மீது தனது கவனத்தை, தன் கதிரை செலுத்திய காரணத்தால் - அந்தப் பனிமலை, தங்கக் குவியலாக எனக்குத் தெரிந்தது.

அதனின் உச்சி, கடலின் மேற்பரப்பில் இருக்கிறது. அடிவாரத்தில்தான் நான் இருக்கிறேன்.

அந்த மலை - உலகம் தோன்றியதற்குப் பிறகு - பல கோடி நூற்றாண்டு இடையறாது பெய்த மழையின் காரணத்தால் உருவான கடலில், எப்படி வந்திருக்க முடியும்?

அந்த மலை, கடல் தோன்றுவதற்கு முன்பே உருவானதா? அல்லது கணக்கிட முடியாத அளவிற்கு வெப்பத்தைக் குறைத்துக் கொண்ட குளிர் காலத்தால் - நீர் இறுகிப் போனதால், ஆனதா? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பனிமலையின் தோற்றம், அந்த அமைதியான கடலில் -

சூட்சமத்தால் தொங்கும் மணியைப் போல, ஆடிக் கொண்டிருக்கிறது.

அந்த மலையின் அருகே, "அக்டோபஸ்", போன்ற கடல் மிருகங்களும் - திமிங்கலம் - சுறா போன்ற கடல் வாழ் பிராணிகளும், சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன.

கடல் குதிரை போன்ற மிருகங்கள், அம்மலையின் மீது ஏறுவதும் - இறங்குவதுமாக இருக்கின்றன. அப்போது, நீர் மட்டத்தில் போய்க்கொண்டிருந்த கடல் கொள்ளைக்காரனுடைய கப்பல், அந்த மலை மீது மோதிச் சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டிருந்தது.

நடுக்கடலில் இதுபோன்ற ஒரு பயங்கர நிகழ்ச்சி நடந்திருந்தாலும் - ஒன்றும் நடக்காதது போலவே, கடல் அமைதி யோடும் - அடக்கத்தோடும் ஆடிக் கொண்டிருந்தது.

அறிஞர் அண்ணா அவர்கள் பனிமலையைப் போன்றவர். அவர், ஆழமான கடலில், ஒரு கண்டாமணியைப் போல இருந்தார்.

ஆனால், ஊர் உடைமைகளைப் பொதுமக்களுக்கு விரோதமான சக்தியும் - கொடுங்கோலும் அபகரித்துக் கொண்டு வரும் அந்தக் கப்பல் கட்சிகளை; தனது புயல் வேகச் சக்தியால் மோதி, அவர் பொடி பொடியாக்கி வந்தார்.

இதிலிருந்து நான் பெற்ற பாடம் என்னவென்றால் - நிலம் தோன்றுவதற்கு முன்னாலேயே இருக்குமானால், அதை எதிர்க்கும் ஒரு பொய்ச் சக்தியும் இருக்குமானால், இவைகளின் போராட்டத்தை, நீதி எப்படி நியாயக் கண்கொண்டு பார்க்கிறதோ.

அதனைப்போல, பொதுமக்களது வாழ்க்கைக் கடலின் மத்தியில் - அவ்வாழ்க்கையின் மீதே ஊர்ந்து வருகின்ற கயவர்களை - உறுதியாக உடைத்தெறியும் ஆற்றல் பெற்றவர் அண்ணா அவர்கள் என்பதேயாகும்.

அறிஞர் அண்ணா அவர்களின் ஆழமான உள்ளத்தில், நீதியை - நேர்மையை - இழந்தவர்களைத் தட்டிக் கேட்கும் ஒரு நியாய புத்தியைப் பனிமலையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.

பனிமலைக்கு அடுத்து, வெகு தூரத்தில் கடலின் மேல் மட்டத்திற்கு வந்தேன். அங்கே பவழ மலைகள் காணப்பட்டதைக் கண்டேன்.

அத் தீவுகள், மிகக் குறுகிய அளவிலிருந்தாலும், அது - இந்த விரிந்த உலகத்திலிருக்கின்ற மக்கள் மதிக்கின்ற பவழத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறது.

பவழப் பூச்சிகள் உருவாக்கிய கூடுகள், இயற்கையின் பஞ்சபூதக் கட்டளையால் இறுகிவிடும்போதுதான், அவை நமக்குப் பவழங்களாக ஆகின்றன.

அந்தப் பவழங்களுக்கு மத்தியில், துளைகளை இட்டு, ஆரமாக்கிக் கொள்வதுதான் கலையறிந்தோர் செய்ய வேண்டிய பணியாகும்.

அறிஞர் அண்ணா அவர்கள் பவழப் பூச்சிகளின் கூண்டுகளைப் போல மிக விலையுயர்ந்தவராக இருந்தார்.

மிகச் சுலபமான இடக் கட்டத்திலும் - காலக் கட்டத்திலும் கிடைக்கக் கூடிய பொருளாக, அவர் இல்லை.

இயற்கையின் நெசவு வேலையால் ஆக்கப்பட்டவர், அவரை துன்பத்திற்கிடையில் கண்டுபிடிப்போருக்குத் தன்னுடைய பவழக் கூட்டையே ஒப்படைத்து விடுகிறார்.

பொதுவாகப் பவழக் கூடுகளைப் பெற விரும்புவோர்கள் - உயிரைப் பணயம் வைத்துக், கடற்பயணம் செல்ல வேண்டும்.

அண்ணாவின் அன்பு என்ற பவழத்தை அடைய விரும்புவோர்களும், தங்களுடைய உடைமைகளை இழந்து - சமுதாய நெரிச்சலினால் நொந்து போயிருக்கிறார்கள்.

தமிழர் தொடுத்த மொழிப் போராட்டத்தில், அண்ணாவின், திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தவர்கள், பவழக் கூட்டைத் தேடிச் சென்ற கடற்பயண வீரர்களைப் போல, தங்களது உயிரையே காணிக்கையாக்கி இருக்கிறார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள், உலக மக்கட்கு கடலைப் போன்று காட்சியளித்துக் கொண்டிருப்பதை எனது கடற்பயணத்தால் கண்டேன்.

நாள்தோறும், நான் கடற்காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகும் போது, கடலைக் காண்கின்றேன். அப்போது அறிஞர் அண்ணா எனது இதயத் திரை அரங்கிலே கல்லறையாகத் தோன்றுவதையும் காண்கின்றேன்.