அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு குமிழி!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search12. அண்ணா ஒரு 'குமிழி'


வேக்காடு பிடித்த வானம் - உயர்ந்த காற்றால், நெளிந்து கொண்டிருந்தது!

வெப்பத்தின் விளைவு - தேங்கி நிற்கும் குட்டையை ஓங்கி அலையடிக்கும் ஆழியை - சுண்டவைக்கிறது!

விளைவு, எழினிகள் அங்கங்கே வானத்தில் கொத்துக் கொத்தாய்த் தொங்க ஆரம்பித்தன!

கரிய மேகங்கள் - வெண் மேகங்களோடு மோதின!

இடையிலே மின்னற் கீற்றுகள் சவுக்கால் அடிக்கப்பட்ட குதிரைகளைப் போல, மேகங்கள் திக்குக்கொன்றாய் ஓடின.

அந்த அடிகளைத் தாங்க முடியாத மேகங்கள் அழ ஆரம்பித்தன. அதுதான் மழை!

வானம் - தேம்பித் தேம்பி அழுதது! அதனை ஊமை மின்னல் என்று கூறுவார்கள் !

அதோ மின்னல்! அதன் தோற்றம், காதலின் முதல் பார்வையிலே வெளி வந்த ஒளி போல இல்லையா?

உடனே இருள்! அது கூம்பிய காதலின் வடிவமல்லவா?

பிறகு மழை, உடைந்த காதலின் உப்பு நீர் தானே அது?

இப்போது - ஊரே பெருக்கெடுத்தோடுகிறது! எங்கும் வெள்ளக்காடு அலை பரப்பி ஓடை வடிவெடுத்து, கால்வாய் வழியாக ஓடுகிறது - வெள்ளம்!

அந்த வெள்ளப் பெருக்கின் மீது, மேலும் மழைத் துளிகள் விழுந்துகொண்டே இருக்கின்றன!

ஜலதரங்க ஓசை! தண்ணிர்க் கொப்பளங்களாகத் தோன்றிச் சிரிக்கின்றன!

அக்கொப்பளங்கள் மீது வான் துளிகள் வீழ்ந்து உடைந்து, நீரோடு நீராகக் கலக்கின்றன!

தப்பித்தது ஒரு குமிழி! சுழற் பெருக்கோடு, ஓடையிலே குமிழி மிதந்து செல்கிறது!

தமிழன்னையே! தாயே! மலர்த்தேன் குட்டையிலே குளித்தெழுந்து வந்தவளே - நீ வாழ்க!

எத்தனையோ படைப்புக்களைப் படைத்த நீ உனது கைக்குக் கிடைத்தவன் நானா?

என்னைக் குமிழியாகப் படைத்தவளே! நீரின் மீது ஓடமாக ஓட்டி விட்டவளே!

தாய்ப் பாசம் என்னைத் தள்ள, உன் மடியை நோக்கி வரவேண்டிய என்னைக், கற்களிலே மோதி உடையவா படைத்தாய்?

எனது தோற்றத்தால், நீ பெறுகின்ற மகிழ்ச்சிதான் என்னம்மா?

அலையின் அழகில் ஆனந்தக் கூத்தாடும் தென்றல் தேரை, நீ ஓட்டி வந்த நாளில் - உனது தேரூறும் பாதையெலாம் நான் மணலாக இருந்தேன்!

அருள் பெற்ற காரணத்தால், எனக்க நீ அருளிய உருவம், குமிழியா அம்மா!

நிதானத்தைத் தவறாத மனிதன், நித்திரையில் நல்ல கனவைக் காண்கிறான்!

அவனின் ஆசைகள், பகலிலே பூத்துக் குலுங்குகின்றன!

தாயே! என்ன கனவு நான் காண்பேன்!

பயங்கரத்தின் தலை வாயிலிலே நான், பொடிப் பொடியாவதைப் போல, தினம் தினம் காண்கின்றேன்.

என் வாழ்நாள், மக்கிப் போன கயிற்றைப் போல இழை உரிந்துக் கிடக்கின்றது!

ஒரு காலத்தில் இது ஆனையைக் கட்டி இழுத்தது! இப்போது ஓர் ஆட்டைக் கூட கட்ட முடியாமல், கூடியரோக நோயாளியின் உடலைப் போல எலும்புருகி, சதை தளர்ந்து அவிழ்ந்து கிடக்கிறது!

தாயே! இந்த நீர்க் குமிழித் தேகம் எனக்கு வேண்டாமம்மா!

வானிலிருந்து இறங்கும் ஒவ்வொரு மழைத் துளியும் - என்னைக் காயப்படுத்துகின்றன!

அந்தத் துளிகள், தன் காலால் என் தலையை உதைத்து உதைத்து மிதிப்பதைக் கண்டு, விளையாட்டுப் பிள்ளைகள் சிரிக்கிறார்கள் தாயே!

பயங்கரவாதி சிரிப்பது போல், கீற்றுவிடும் மின்னல் தீக்கோடு, என்னைச் சுண்ட வைத்து விடாதா?

வீசுகின்ற புயற் காற்றில், என் உடல், விளாம்பழத்தின் ஒட்டைப்போல் - விரிசல் விடாதா?

வாழைமரத்தில், குத்திவைத்த இரும்புக் காரைப்போல் - துருப்பிடித்துபோன என் எதிர் நாட்கள், வீரர்கள் கையில் இருக்கும் வாளைப் போல, பளபளப்பாகத் தோன்றும் நாள் எந்நாள்?

தத்துவ விளக்கத்திற்காக என்னைப் படைத்து விட்டு, நீ மேகக் குதிரை ஏறிப் போகின்றாய்! சோகப் பாதையில் நான், போய்க்கொண்டிருக்கிறேன்.

எனது வயல்கள், முட்டாள்களின் சிந்தனையைப் போல சாவியாகச் சாய்ந்து கிடக்கின்றன.

கதிர்மணிகளில் சப்பட்டை நெற்களே மிஞ்சியிருக்கின்றன. இந்த லட்சணத்தில், எனக்கு வண்ணம் தோய்த்த நீர்க் கமிழி உருவமா அம்மா!

அதோ, கரும் இருளில் பேய்க்காற்று என்னை அடித்துச் செல்கின்றது!

வழி காட்ட ஒரு மின்மினிப் பூச்சி கூட என்னுடன் வரவில்லையே!

பனித்துளிகளை உண்டு வாழும் வெட்டுக்கிளியின் இயற்கைப் படபடப்பைத் தவிர, வேறு குரலேதும் கேட்கவில்லையே!

நத்தையின் உதடுகள், கிளிஞ்சல்கள் மேல் போகும் போது ஏற்படுகின்ற சப்தத்தைத் தவிர, நான் எதையும் கேட்க முடியவில்லை!

கனவு கண்டு எழுந்த புறாக்களின் முனகலைத் தவிர - வேறு எந்த அசரீரியும் கேட்கவில்லையே!

தொட்டிலில் நீ பாடிய பாட்டை, நான் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்கின்றேன்!

அவை, கவனத்தின் கூடாரத்திற்கு வரவே, ஆண்டுகள் பல பிடிக்கும் போல் இருக்கிறதே!

உனது இனிமையான அன்பழைப்பை ஏற்றுக் கொள்ள என் செவிக் கதவுகள், திறந்தே இருக்கின்றன.

அவற்றில், அவலத்தின் ஆரவாரத்தைத் தவிர - வேறெதுவும் கேட்கவில்லை.

அம்மா! இதோ நான் உடற்குன்றி, இப்போது இரண்டு கற்களுக்கிடையே, நுழைகின்றேன்.

அக்கற்கள், எதேச்சாதிகாரத்தின் பிடியைப் போல், இறுக்கமாக என்னைப் பிடிக்கின்றன.

எனது சுதந்திர உணர்ச்சிக்கு, அவை விலங்குகளைப் பூட்டின போல் தோன்றுகிறது.

உண்மையிலேயே, நீ என்னைச் சுதந்திரமாகப் படைத் திருந்தால், பலி பீடத்தின் முன்னாலே நிற்க வைத்திருக்கும் ஆட்டைப் போல - ஏன் - என் உரிமை பெருமூச்சு விடவேண்டும்?

பலாப் பழத்தின் முட்களைப் போல, சொறி பிடித்த கற்களுக்கு இடையே, இப்போது எனது உடல், தேய்ந்து தேய்ந்து, நழுவி நழுவிச் செல்கின்றது!

இருபதாண்டு காலக் கொடுங்கோல் ஆட்சி ஒன்றிடமிருந்து தப்பித்த மக்களைப்போல, அக்கற்களை விட்டு ஒருவாறு பிழைத்து நகர்ந்து வந்து விட்டேன்.

திடீரென்று உயரமானதோர் இடத்திலே இருந்து - தட தடவென்று சரிந்து, கீழே விழுந்தேன்.

ஒட்டகத்தின் மீதிருந்த அரசனொருவன், ஒட்டாண்டியான போது, எப்படித் தள்ளாடித் தள்ளாடி நடப்பானோ, அப்படி நடுங்கிக் கொண்டே இப்போது செல்கிறேன்.

ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களில், அதன் தொண்டர்களது உடம்பு, பட்ட அடி உதைகளால் படுகாயங்களாவதைப் போல், எனது உடம்பு கீழே விழுந்தபோது படுகாயங்களாகி விட்டன.

இருந்தாலும், எனது உடலை அந்தச் சரிவுகளால், அழிக்க முடியவில்லை . தாயே!

உனது சாகாவரம் பெற்ற இலக்கிய ஏடுகளில் ஒன்று, எனக்குக் கவனம் வருகிறது அம்மா!

சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன், "செந்நாய் சீறினாலும் - சிறுத்தைகள் உறுமினாலும் - கலங்கத் தேவையில்லை” என்பதே அது.

எனது பாதை, பள்ளங்களும் - மேடுகளும் நிறைந்தவை என்றாலும், விழும்போதுதான், மேடும் பள்ளமும் தெரிகிறது!

என் உடலின் மீதிருக்கும் வண்ணத்தைப் பார்த்து - நீ ரசிக்கிறாயா அம்மா!

அவற்றை நீ தானே, துரிகையால் தொட்டு எழுதினாய்?

அளவிட முடியாத உயரத்தைக் காட்டுகின்ற வண்ணம் - நீலம்.

அந்த நீலத்திற்கு, நீ கொடுத்த விமரிசனம் - 'திருக்குறள்' அல்லவா?

அதனால், என் உடல் முழுவதும் எழுதி வரைந்தாய்!

அதன் ரசனையில் நீ இருக்கும் போதே, நான் கீழ் - மேலாகவே, வாழ்க்கையை மாற்றிச் செல்கிறேனே!

தாயே! தர்மத்தின் திக்கில் இருப்பவளே! நீதியின் நிழலை விரவும் தருவே!

உனது கம்பீரமான தோற்றத்தை, நான் போகின்ற ஆற்றின் பாதையில், கண்டேன்! மெய்சிலிர்த்தேன்!

என் ஜீவயாழ், உன்னைப் பாடிக் கொண்டே செல்கின்றது!

அந்தப் பாட்டு...! உன் இலட்சியத்தின் மீது கட்டப்பட்டது!

விடுமுறை நாட்களில் ஓய்வு பெற வந்த சிறுவர்கள், என் அழகைப் பார்த்துச் சிரிக்கின்றனர்!

ஒரு தீராத விளையாட்டுப் பையன், தன் காகிதக் கப்பலை - என் மீது மோதினான்!

நான், கப்பலோடு சேர்ந்த வண்ணமாய் சோகமாகச் செல்கின்றேன்.

சிறுவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி! அதே நேரத்தில் எனக்கு எத்தனை அதிர்ச்சி! அப்போது ஒரு கவிஞன் இருந்தால் அது தானே கவர்ச்சி!

உன் அறிவின் ஆழம்போல, ஓர் ஆழமான இடத்தில் நான் மீண்டும் தலைக் குப்புற விழுந்தேன்!

என்னுடன் வந்தக் காகிதக் கப்பலும் கவிழ்ந்தது!

அதன் மீது எழுதப்பட்ட எழுத்துக்கள் - நீரால் கரைந்தன. 

ஒரு காலத்தில், இந்த நாட்டின் மானம் எழுதப்பட்ட பத்திரமாக அது இருந்தது.

அதை எடுத்துச் சில சிறுவர்கள் கப்பல் செய்து விட்டுவிட்டனர்.

அந்த எழுத்துக்கள் நீரில் கரையும்போது, என் மானமும் கரைந்து கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.

தாயே! இதுவும் உன் திருவிளையாடலா?

தமிழர் மானத்தைக் கரைக்க ஓர் ஊழிப் பெருவெள்ளம் எப்போதும் படையெடுத்ததில்லை! எடுத்தால், அது - வென்றதுமில்லை, என்பதை நீ அறிவாயே - அம்மா!

தாயே! இப்போது ஒரு காய்ந்த இலையின் மீது, எறும்பு ஒன்று மிதந்து செல்கிறது. அதனுடைய முகத் தோற்றத்தைப் பார்க்கும்போது - உரிமை இழந்த - கடல் கடந்த தமிழர்களைப் போல, எனக்குப் புலனாகிறது.

அதோ அந்த இலை, இப்போது என்னருகே வருகிறது!

பளபளக்கும் என்னுடைய உடலைப் பவழமலை என்று நினைத்து, எறும்பு என்மீது ஏற ஆரம்பித்து விட்டது.

அதோ பாரம்மா, அந்த எறும்பு தனது தகுதி, திறனை அறியாமல், சரிந்து கீழே விழுந்து, நீரில் மூழ்கி எழுவதை! இஃது, சில பேதை மனிதர்களின் மன நிலையைப் போல - இல்லையா அம்மா?

தாயே! பொய்யானத் தோற்றத்தை, ஏன் அளித்தாய்?

வாழ வேண்டிய ஓர் உயிர், நீரில் மூழ்கிப் போய்விட்டதே!

"அழுக்காறு கொண்டார்க்கு அதுவே சாலும்", என்று உலக, ஆசான் வள்ளுவன் கூறினானே, அஃது, இந்த எறும்பைப் போன்ற மனிதர்களுக்குத்தானா?

மனித சகாப்தம் என்பதைக் காலம் ஒன்றால்தான் விளக்க முடியும்.

அந்த விளக்கத்தில் இருக்கின்ற ரகசியங்களைக் காலம் ஒன்றால்தான்; பிறகு பிறப்பவர்களுக்கு அறிவிக்க முடியும்.

அம்மா! உனது ரகசியத்தை அறிவதற்கு, நான் நெடுந்துரம் வந்திருக்கிறேன்.

நான் செல்லுகின்ற நீரோடையின் இரு மருங்கிலும் - வாளெடுத்தப் போர் வீரர்களைப்போல, நாணற் புற்கள் கரையில் முளைத்திருக்கின்றன.

இப்போது நான் மிகவும் களைத்து விட்டேன். ஒரு நாணற் புல்லின் அடியிலே நான் இளைப்பாறுகிறேன்.

அந்தப் புல்லின் தண்டின்மேல், ஒரு வானம்பாடி இசை ஓசை எழுப்பிற்று?

அதன் கண்டத்தில், அரசவையில் பாடுகின்ற வித்துவானின் குரல் தோற்றமளித்தது!

அதன் கவிதையில், பாவேந்தர் சுப்புரத்தினத்தின் புரட்சி யாப்பும் இருந்தது.

அதன் தாளத்தில், சுப்பிரமணிய பாரதியாரின் கும்மி இருந்தது.

அதன் இசையலையில், தாயே உன்னுடைய தேனமுதத் தாலாட்டும் இருந்தது;

அந்த வானம்பாடி பாடிய பாட்டுதான் - என்ன?

'வீணையோடும், சுரமண்டலத்தோடும், மத்தளத்தோடும் நடனத்தோடும் - யாழோடும் தீங்குழலோடும் - ஓசையுள்ள இசைத் தாளங்களோடும், உரிமையைப் பாடிக்கொண்டு வாருங்கள்' என்ற பொருள்தான்- அதன் டாட்டிலே ரீங்காரமிட்டது.

இந்த இசையின் கூர்மையால், எனதுள்ளம் பொத்தலானது. அதிலே; அந்தக் கருத்துக்கள் குடித்தனம் செய்தன.

மலைகளில் சந்தனத்தை -

மேகத்தில் நீரை -

கடலில் முத்தை -

வானில் நிலவை

தேனில் சுவையை -

வயலில் ஆட்டத்தை -

புயலில் பேயாட்டத்தை - நெருப்பில் சூட்டை -

நிலவில் குளிர்ச்சியை

உண்டாக்கி, மகிழ்ந்து, ஓய்வெடுக்கும் தாயே.

உனது பெயரில் எனது ஜீவன் தாலாட்டுப் பாடுகிறது.

நீதி மன்றத்தில் நின்று அநீதியைக் கண்டிக்கின்றவளே, பள்ளியிலே இருந்து புதுப் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பவளே, விருந்திலே அறுசுவை படைப்பவளே! உன்னை நான் ஒன்று கேட்பேன்!

எனது பூர்வ காலத்தியச் சொத்து எல்லாம், நீ எழுதிவைத்தவைதான். அதையே, கேள்வி ரூபத்தில் உனக்கு அனுப்பி வைக்கிறேன்.

எனது உடலைப் பார்த்தாயா? வாழ்க்கையின் வெடிப்பும் - வறுமையின் கீறலும் - துன்ப வடுவும் - அதிலே, சோக ரேகைகளோடு பின்னிக் கிடக்கின்றன!

அக்கினித் தழலால் வெந்து போன என் மனம், உனது அருள் மருந்துக்காகக் காத்துக் கிடக்கின்றது.

இந்த நாட்டின் ஜீவநாடி என்று, உன்னைக் கூறுகிறார்கள். எந்தக் காலத்திலும், நீ - தூங்கி அறியாதக் கண்களை வைத்துக் கொண்டிருப்பவள்.

நோஞ்சானுக்கு நேசக்கரமும் - எதிரிக்கு வீரக்கரமும் நீட்டுபவள்.

இப்போது என் நிலை, பயங்கரமான அரசியல் முட்காட்டில் செல்லுபவனைப்போல் இருக்கிறது.

நான், மேற்கொண்டு எனது பயணத்தைத் தொடர்வதற்கு முன்னால், நீ வந்து என்னை அள்ளி எடுத்து, உன் இதயக் கடலிலே மிதக்கவிடு.

சிறுவர்களின் கோரிக்கைக்கும் - சூழ்நிலை என்ற சுழலுக்கும் - நான் பலியாகாமுன், உன் உள்ளக் கடலில் - என்னை உலாவவிடு.

தாயே! ஆடி மாதம் ஒருநாள்! உன்னுடைய பிறந்த நாள் வந்தது!

அப்போது உன் அழகைப் பார்க்கப் பொன்னிப் பெருக்கெடுத்து வரும்போது நானும் வந்தேன்.

கோவலனையும் - மாதவியையும் வெட்டிப் பிரித்த சில மஞ்சள் பூக்கள்; வரலாற்றிலே செய்த வஞ்சத்தை மறைத்துக் கொண்டு, அதே காவிரியில் மிதந்து சென்றன!

இந்தப் பூக்கள், சிலப்பதிகார இசை நாடகத்தால் - கெட்ட பெயர் பெற்ற பூக்கள் அல்ல.

அம்மா! உன் பிறந்த நாளுக்காகச் சூடப்பட்ட, தார் சரத்திலிருந்து உதிர்ந்து விழுந்தவை.

நீ, குஞ்சரத்தின் மீதேறி வந்தாய், உன்னைப் பார்த்து கை எடுக்காதவன் முடவன்தான், உன் அழகைப் பார்க்காதவன் குருடன்தான்!

கரிய மேகத்திற்குக் காலும் வாலும் வைத்தால், நீ ஏறி வந்த கரிய யானைபோல் இருக்கும்.

அந்த மேகங்கள், அப்போது ஒன்றும்கூட இல்லாத காரணத்தால் - வானம் மனப் பெண்ணுக்காக விரிக்கப்பட்ட பாயைப் போல் இருந்தது.

உன் அழகை, அங்கே வந்து பார்க்கலாம் என்று, ஓடோடி வந்தேன். அதற்காக நட்டாற்றைவிட்டு கரைக்கே வந்தேன்.

என் தாயின் அழகில் இந்த உலகம் பூந்தாதிலே மயங்கிக் கிடக்கும் வண்டுகளைப் போல், மயங்கிக் கிடப்பதைக் கண்டேன்.

அந்த காட்சியைக் கண்ணாரக் கண்ட நான், ஒரு கணம் மெய் மறந்தேன்!

உன் தமிழ்ப் பற்றை மட்டும், அப்போது ஒருவன் பாட்டாகப் பாடினான்.

உனது நாட்டுப் பற்றை, ஒருத்தி நாடகமாடினாள்.

உனது அரசியல் பண்பைப் பற்றி, ஒருவன் கவிதை யார்த்தான்!

உனது உறவைப்பற்றி ஒருவன் உருகினான்! அன்பின் உருவாகி, ஆனந்தக் கண்ணிரைச் சொரிந்தான்!

அந்த புகழ் நெரிசலில் - உன்னை எப்படியம்மா, நான் வெளியே வந்து பார்ப்பது?

ஒரே மனத்திரள்: தேனடையில் மொய்த்துக் கொண்டிருக்கும் தேனிக்கள் போல, நானும் நெருங்கிக் கிடந்தேன்.

எப்படியாவது உன்னைப் பார்க்கவேண்டும் என்பதற்காகத் துணி துவைக்கும் தொழிலாளியின் கல்லருகே, வந்தேன்.

அப்போது நீ, வாய் திறந்தாய், கொட்டின முத்துக்கள்! சிதறின. வைரங்கள்! எல்லாம் மரகதக் குப்பைகள்! மரகதக் குப்பைகள்!!

ஒவ்வொரு கற்களும் . ஒவ்வொரு பொருள் வண்ணத்தைக் காட்டி ஒளிர்ந்தன!

வந்தவன் ஒவ்வொருவனும், அந்த விலை மதிக்க முடியாத மணிகளை - மனக் கூடையில் - வாரிக்கொண்டு போனார்கள்!

எஞ்சியிருப்பது ஒரே ஒரு முத்து. அந்த முத்தை நாடி நான், நெருங்க ஆரம்பித்தேன். அது என்னருகிலேயே இருந்தது!

அந்த முத்திலே, கண்ணியம் - கடமை - கட்டுப்பாடு என்ற சொல்லோவியங்கள் எழுதப்பட்டிருந்தன.

குமிழி உருவம் எடுத்தாலும் பரவாயில்லை. ஆனாலும், உன் பேரழகையும், புகழ் உரைகளையும், மக்கள் இதயமாரப் பேசி ரசித்து புகழ் பாடுவதை இந்த அஃறினை உருவத்திலே கானும் பேறு பெற்றேனே! அது ஒன்றை - இப்பிறவி பெற்றதின் பேறாகக் கருதினேன்.


நல்ல குடிமகனாக

உருவாக்குக


ஏழ்மை நிலையிலும், பெற்றோர்கள் எவ்வளவோ இன்னல்களையும், இடுக்கண்களையும், இழப்புகளையும் தாங்கிக் கொண்டு நம்மைப் படிக்க வைக்கிறார்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன், நல்ல முறையில் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு இந்த நேரத்தில் ஒன்று கூறிக் கொள்வேன். எவ்வளவோ ஏழ்மையிலும் - துன்பத்திலும் பிள்ளைகள் நம்மிடம் படிக்க வருகிறார்கள். அவர்களின் ஏழ்மையையும், அறியாமையையும், போக்கும் விதத்தில், சீரிய முறையில் பாடங்களைக் கற்பித்து, நல்ல குடிமகனாக உருவாக்க வேண்டும்.

-அறிஞர் அண்ணா