அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு தொடுவான்!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search13. அண்ணா ஒரு தொடுவான்


தொடுவான் என்பது, பூமியின் மேல் உதடு!

தொடாதவான் - தொடுவானாக மாறுகிறது.

அண்ணாவின் முழுமையை யாரும் தொட்டது கிடையாது!

ஆனால், தொடுவான் பூமியைத் தொடுவது போல் தெரியும்!

அது கண்ணுக்கு மாயை அல்ல - கருத்துக்கு மாயை!

அண்ணா கண்ணுக்கு மாயை அல்ல! கருத்திலே அவர் ஒரு புதிர்! - தொடுவான், மின்னல் விளையாடும் திரை!

அண்ணா, எண்ணத்தை விளையாட வைக்கும் இறை!

அந்தி நேரத்தில், தொடுவானில் ஒரு பறவை பாடிக் கொண்டே செல்வதைக் கேட்டேன்.

அதன் சிறகுகளிலே பொருந்தியிருக்கும் இறகுகள் சொர்ணத்தாலானவை.

கூட்டை நோக்கி அது செல்கிறது.

குஞ்சுகள் கூட்டிலே இருந்து தாய்க்காகக் காத்துக் கிடக்கின்றன!

தொடுவான், வீடு திரும்பும் பறவைகளைத் தினந்தோறும் பார்க்கிறது.

அந்த பறவைகளின் இலட்சியத்தைப் பற்றி, அது தினந்தோறும் நினைக்கிறது.

வீடு திரும்பிய தாய்ப் பறவைகளை, கண்டு களிக்கும் குஞ்சுகளைத் - தொடுவான் பார்க்கிறது.

இவைகளின் வாழ்க்கைக்கு இரை எங்கே கிடைக்கிறது?

அற்பமான இரையைத் தின்றுவிட்டு, எவ்வளவு அழகாகப் பாடுகின்றன - தொடுவான் சிந்திக்கிறது.

முழுமையான வாழ்க்கையை, இந்தப் பறவைகளுக்கு யார் வரையறுக்கப் போகிறார்கள்?

இவ்வாறு தொடுவான் சிந்திக்கும் போது, அதன் முகம் சிவந்து விடுகிறது.

ஏழைகள்பால் அண்ணாவுக்கு, தொடுவானின் இரக்க குணம் எப்போதும் இருந்ததை நான் உணர்ந்தவன்!

ஒரு கவிஞன், எண்ண வெளிச்சத்தில் மறைந்திருந்து, தனியாகத் தன் ஆத்மாவோடு பாடிக்கொண்டு எழுத்துக்களைக் கவிதையாக்கத் துடித்துக் கொண்டிருப்பது போல் - அண்ணாவும் தினந்தோறும் நினைத்தார்.

அதோ தொடுவான் முகத்தில், புன்னகைக் கொடிகள் படர்ந்து மறைகின்றன.

நான் கவிஞனாக இருந்தால், அதனை மின்னலுக்கு உவமையாகக் கொடுப்பேன்.

நான் எழுத்தாளன் - நொந்துபோன நெஞ்சிலே விழுந்த கீறலாகவே கருதுகிறேன்.

அந்த சின்ன மின்னல் ஒளியில், பெரொளியைக் கண்டபோது, மண் புழுக்கள் கீரைப் பாத்திக்கு நடுவிலே, எட்டிப் பார்த்ததை, நான் கண்டேன்.

அண்ணாவின் சிறு சிறு எண்ணங்கள், என் போன்ற மண் புழுக்களுக்கு, அப்படித் தானே தெரியும்.

நான் உயர்ந்த குடும்பத்திலே பிறந்த ஒரு சீமாட்டியாக இருந்தால், எனது மாளிகையின் மேற்பரப்பில், அன்புக் காதலனிட்ட உயிர் முத்தங்களை, என் உதட்டிலே எப்படி விளையாடுகின்றன என்பதைத் தன்னந்தனியே நான், சிந்திப்பேன் அல்லவா?

ஆனால், நான் தொழிலாளிக்கு வாழ்க்கைப்பட்டவள்! எனக்கு அவரிட்ட முத்தம் வட்டியிலே மூழ்கிப்போய் விட்ட குத்து விளக்காகும்!

அந்த ஒளியை நினைத்து, நானும் பெருமூச்சு விடுகிறேன்.

அப்போது அந்த தொடுவான் மட்டும், அவ்வளவு அழகாக இருந்திராவிட்டால், இந்த நினைவு கூட வந்திருக்காது.

அண்ணா ஏழைகளின் வாழ்விலே இருக்கின்ற இன்பத்திற்காகவே, நிலத்தை நோக்கி வளைந்தவர்.

அப்போது ஏழைக் குப்பாயி போன்றவர்கள், பழங்காலச் சிந்தனையைத் தொடுவானால் திரும்பப் பெறுகின்றார்கள்.

தொடுவான் இல்லையென்றால், உலகத்தில் வாழும் கோழிக் குஞ்சுகளான மக்களுக்கு, வானம் போன்ற கூடை கிடைக்காது.

எனக்குக் கவிதா நோக்கம் உண்டு - ஆனால், யாப்பைக் கடைந்தெடுத்து உண்டவன் அல்ல!

வானத்தை, கோழிக் குஞ்சு கவிழ்க்கும் கூடை என்பதை விட, இப்படித்தான் கூற எனக்குத் தோன்றுகிறது.

தனியாக மிதக்கும் ஒரு நீர்க்குமிழியைப் போலத் தெரிகிறது.

நிலம் ஊழிப் பெரும்வெள்ளத்திலே மிதக்கின்ற இலை.

நான் குமிழிக்குள்ளே இருக்கின்ற ஜீவன்!

இலையைத் தொட்டுக் கொண்டிருக்கின்ற உதடுதான் - நான் உள்ளே பார்க்கின்ற தொடுவானம்.

அண்ணாவும் இப்படித்தான்!

உலக ஜீவன்களைப் போர்த்தியிருக்கும் நீர்க்குமிழி போன்றவர் - இல்லையென்றால் தொடுவான் போன்றவர்.

அவரின் வார்த்தைகளின் உட்பொருள் புரியாத போது- அவரைத் தொடுவான் என்று கூறுவதும் உண்டு.

வெட்ட வெளியில் மனிதன் நடக்கிறான். வானம் அவன் அருகில் இருப்பதைப் போலத் தொடுவானால் உணருகிறான்.

அவன் அதனை நோக்கி, தமிழன் விட்ட அம்பு போல், காற்றினால் - உடலைக் கிழித்து ஒடுகிறான்.

வானம் அவன் கைக்குக் கிட்டவில்லை.

சளைத்து - களைத்துக் கீழே விழுகிறான். வாழ்க்கையில் சலிப்பு - இந்த நேரத்தில், தொடுவான் தூரத்திலிருந்து சிரிக்கிறது.

என்னை, நோக்கி வந்தவன் பயணம் செய்கிறான். என்னை, மாயை என்று நினைத்து உட்கார்ந்தவன், மேற்கொண்டு நகர முடியாமல் நிற்கிறான்.

அண்ணாவின் வாழ்க்கையில், இவை நமது மடியில் தெறித்து விழுந்த முத்துக்களாகும்.

தொடுவான், மேகத்திலே தலையை சீவிக் கொண்டிருக்கிறது. அதன் கூந்தலிலே இருந்து நேற்று வைத்த முல்லை இதழ் - சிதறிக் கிழே விழுந்தது.

அதற்குப் பனித்துளி; என்று நான் தெரியாமல் பெயர் வைக்கிறேன்.

அந்தப் பனித்துளி, கடலோரத்திலே இருக்கின்ற கிளிஞ்சலில் ஒய்யாரமாகக் குந்துகிறது. இந்த உவமை எதற்கு?

மனிதர்கள் வானத்தின் வலிவால், அற்பமான இடத்தில் சிதறி விழுகிறார்கள்.

அவர்களை மேலே இருக்கிற சக்தி கூர்ந்து கவனிக்கிறது.

ஆட்டம் போட நினைத்தப் பனித்துளி: அறுந்து போகின்ற தறிநூலைப் போல் நைந்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்கிறது. இதற்காக இரக்கப்படுகிறவர்கள் யாருமில்லைல:

அதோ, தொடுவானத்தில் - அன்புக் கரங்கள் பனித் துளியின் தலையை வருடுகின்றன.

உன்னுடைய பிறப்பு இறப்பில் முடிவதில்லை.

என்னைப்போல நீ, மறுநாள் தோன்றுவாயென்று அதற்கு வாழ்த்துரை வழங்குகின்றது.

எளியவர்களுக்கு, இது போல்தான் அண்ணாவும் வாழ்த்துரை வழங்கினார்.

குகையில் நெளிந்து கொண்டிருக்கும் - இருட்டிலேயே வாழ்க்கை நடத்தும் - சிறிய பூச்சிகளாக மனிதன் வாழுகிறான்.

குகையின் இடுக்கில் பாய்ந்து வரும் சூரிய ஒளியை, அந்த பூச்சிகள் தாங்குகின்ற சக்தியற்றவைகளாக உள்ளன.

ஒளியிழை சிறிதளவு வந்தால் கூட பூச்சிகள் ஓடி ஒளிகின்றன.

மனிதன் இப்படித்தான் இன்று வாழ்கிறான் பாவம்!

நல்ல கருத்துக்களில் ஒர் அணுவைக் கூட அவனால் ஜீரணம் செய்ய முடியவில்லை.

அவனைத் தூக்கி விடுகின்ற சக்தி எங்கிருந்து வரும்? இந்த கேள்வியை, இன்று தத்துவம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

கந்தல் துணி வழியாகப் பிய்த்துக் கொண்டு வெளியே வரும் ஒளியைப்போல் - சிதறியிருக்கும் மேகத்தின் வழியாக, ஒளி தொடுவானிலிருந்து புறப்படுகிறது.

அதனைக் கண்டு எந்த மனிதனும் பயந்து ஒடுவதில்லை. ஆனால், கருத்தைக் கண்டு பயந்து ஒடுகிறான்.

அவன், குகையில் வாழும் பூச்சி!

தொடுவான் ஒளியிலே நனைபவன், உலகத்திலே வாழும் நல்ல மூச்சு!

அண்ணாவின் கருத்துக்கள், பல நேரத்தில் இப்படிச் சிதறி வெளியே தெறிக்கும்போது, பயந்த மனிதனும் உண்டு - பழகிய மனிதனும் உண்டு.

ஆகர்ஷண சக்திக்கு அப்பால், எந்த உலகமும் சுற்றுவதில்லை.

மனிதர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு உலகம்!

அவர்களும் ஈர்ப்பு சக்திகுள்ளேயே சுற்றுகிறார்கள்.

அவர்களுக்குள் சூரியன் உண்டு வெளுத்துப் போன நிலவும் உண்டு.

எண்ணெய் அற்ற அகல் விளக்கைப் போன்ற தாரகைகளும் உண்டு - அலைகின்ற மேகங்களும் அழுவதற்கென்றே உண்டு.

இந்த உலகங்கள் மரணக்குழியில் உருண்டு விடக் கூடாது என்பதற்காக, அகிலாண்டமாக அறிஞர்கள் பிறப்பதுண்டு.

அவர்கள், திசையற்ற இடத்திலே இருந்து பிறந்து, வழியற்ற பாதையிலே நடந்து, விழியற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள்.

அவர்களின் வேர், மூல விதையின் முனையிலே தங்கியிருக்கிறது.

அந்த விதைக்குள்ளே, கிளை - தழை - பூ - பிஞ்சு - கனி - அத்தனையுமுண்டு.

விதை விதைத்த பிறகுதான், இலை வெளியே வரும்.

விதையைப் பார்த்து, கதை இவ்வளவு தானா - என்று முடிவு கூறுபவன் முட்டாள்.

அண்ணா, விதையாக இருந்து - அவரே விருட்சமாக ஆனவர்.

வானமாக இருந்து - தொடுவானாக வளைந்தவர்.

வரியாக இருந்து வரலாறாக, முடிந்தவர்.

ஒளித்துளியாக இருந்து - ஒசையாக லயம் கலந்தவர்.

ஒளிக்கொழுந்தாக இருந்து - பிழம்பு நுனியின் வருடலாக நீண்டவர்.

துளியாக இருந்து பிரளயமாகப் புரண்டவர்.

இறைவனின் முதல் மூச்சான காற்றாக இருந்து - பூந் தோட்டத்திலே புகுந்து வரும் தென்றல் ராணியாகத் திகழ்ந்தவர்.

இருளைத் தினந்தோறும் குடித்தும், ஒளியாக இருக்கின்ற நிலவு இன்னும் வரவில்லை.

தோட்டத்தில் விழா நடத்துகின்ற பூக்கள் இன்னும் கூம்பவில்லை.

மன்னனின் அந்தப் புறச் சுவற்றுக்குப் பின்னால், இன்பத்தின் முணுமுணுப்பு இன்னும் துவங்கவில்லை.

ஏழையின் குழந்தை இன்னும் பசிக்காக அழவில்லை.

மின்மினிப் பூச்சிகள், தங்கள் தங்கள் சிங்காரத்தைக் காட்ட வயல் பக்கம் போகவில்லை.

இறந்து போனவன் கல்லறை மேல், மெழுகு வத்தியினுடைய நரம்பில் ஒளியை ஏற்ற, வெட்டியான் வரவில்லை. அப்போது தொடுவானம், மோன முத்திரையிட்டு வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இங்கு மங்குமாகச் சிதறியிருக்கின்ற புல் பூண்டுகள், தங்களுடைய சிறிய தலைகளை ஆட்டி, கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றன.

நிர்மலமான இந்த சூழ்நிலையில், திக்குத் தவறிய சில பறவைகள், கண்டபடி வானத்தில் மிதக்கின்றன:

அதோ தலைக்கு நேரே ஒரே ஒரு பருந்து மட்டும் கவலையற்ற சர்வாதிகாரியைப் போல், உயரத்தில் மிதக்கிறது.

தொடுவான் இதையும் பார்க்கிறது.

கீழே இருந்த பூண்டுச் செடியால் மேலே போக முடியவில்லை.

மேலே இருந்த ராஜாளியோ - பருந்தோ - கீழே வர முடியவில்லை.

தொடுவான் - பூண்டுக்கு மங்கிய ஒளியில் சிறுசிறு எறும்புகளை - அதன் பக்கத்திலிருக்கும் புற்றுகளைத் - தெளிவாகக் காட்டுகிறது.

மேலே இருக்கின்ற பருந்துக்கு கீழே, இயற்கை காட்டும் இரகசியம் புரியவில்லை.

அண்ணா, மேலே இருப்பவர்களுக்கு இரகசியங்களைக் கூறியதில்லை.

கீழே, புல்லாக - பூண்டாகக் கிடப்பவர்களுக்கு, நுணுக்கமான விஷயங்களை அறிவித்தவர்.

தொடுவானம், கடலின் மேல் கவிந்திருக்கும் போது, நீரே பொங்கி, மேலே இருந்து வழிவது போலத் தெரியும்.

ஆழமான அறிவிருப்பவர்களுக்கு, மேலே இருந்து அண்ணா வழிவதைப்போலத் தோன்றுவார்.

உயரமான ஒரு கொடிக் கம்பத்தின் மீது ஏறி நின்று, தொடு வானைப் பார்க்கும் போது, நிலத்திற்கும் தொடுவானத்திற்கும் மையத்தில், ஒரு கரிய கோடு ஒடும்.

அந்த இருள், இதுவரையிலும் உலகம் சந்திக்காத இருள். அந்த இருளுக்கு மேல், இதுவரை சந்திக்காத ஒரு வெள்ளி ரேகை இருப்பதையும் பார்க்கலாம்.

இது எதனால் வந்தது - என்று, விஞ்ஞானியும் விளக்க வில்லை - மெய்ஞானியும் கூறவில்லை.

நான் நினைக்கிறேன், அந்த இருள்தான் மூடநம்பிக்கைத், தலையை அழுத்துகின்ற அண்ணாவாகும்.

வறண்டுபோன ஒர் ஆறு! அதன்மீது தொடுவானத்தைப் பார்த்தேன்.

பரந்த மணல்வெளி, ஆற்றின் படுக்கையாக இருந்தது.

எல்லையற்ற பெரும்பயணத்திற்கு அது இயற்கையாகவே போடப்பட்ட பாதையாகவே விளங்கியது.

தொடுவானம் அந்த வரண்ட ஆற்றைப் பரிதாபமாகப் பார்க்கிறது.

மணலே, அருவியாக ஒடி வானத்தில் கலப்பதைப் போலத் தோன்றுகிறது.

நிலம் - நீராக மாறுகின்ற விசித்திரக் காட்சியை, இந்த இடத்திலேதான் பார்க்க முடியும்.

இதற்குப் பெயர் திணைமயக்கமாகும்!

வறண்டு போனவர்கள் - வதங்கிப் போனவர்கள் - சுரண்டப் பட்டவர்கள் - சுருங்கிப் போனவர்கள் - இருண்டவர்கள் - எழுந்திருக்க முடியாதவர்கள் - மிரண்டவர்கள் அனைவரையும் துன்பம் தின்றுவிட்டக் காரணத்தால், மீதியானவர்கள் எல்லாம், திணை மயக்கத்தால் தெரிகின்ற ஆற்றைப் போல தொடுவானை நோக்கி ஓடுகிறார்கள்.

அந்த தொடுவானம் தான் அறிஞர் அண்ணா.

உயர்ந்த மலை மீதிருந்து தொடுவானத்தைப் பார்த்தால் ஒரு பொட்டலத்தை துணியில் சுருட்டி வைத்ததுபோல், மலை உள்ளேயும் - தொடுவானம் கீழேயும் சுருண்டிருக்கும்.

அண்ணாவும் பெரிய மனிதர்களைத் தன்னுள்ளே சுருட்டிக் கொண்டவர்.

வெட்ட வெளியில், ஒரே ஒரு மலையிருந்து, அப்போது ஒரு வானவில் வந்திருக்குமானால், அந்த மலை ஒரு துலத்தில் கட்டப்பட்ட மணியைப் போலத் தொங்கும்.

அண்ணாவும் தன்னுடைய வானவில் சொல்லால் பெரிய மலைகளைத் தொங்க விட்டவர்.

தொடுவானைப் பிற்பகுதியாக வைத்து, முன்னே வரிசையாகத் தென்னை மரங்கள் இருக்குமானால். அவை நிழலுருவத்தில் நிற்கும்; நேர்த்தியாகத் தெரியும்.

அண்ணாவுக்கு முன்னால், இருண்டவனும் நேர்த்தியாகிறான். ஒளிவட்டமாகிறான்.

இது தொடுவான் செய்கின்ற ஜாலவித்தை!

தொடுவானைத் தொட்டப்படி ஒரு ஜீவநதி வருமானால் - அது, பூமியின் தலையில் கட்டப்பட்ட, கூந்தல் நாடாவாகத் தெரியும்.

அண்ணாவை தொட்டபடி எவனாவது வருவானானால் - அவன், தலைக்கு அழகாக இருக்கும் பட்டு நாடாவாகத்தான் தெரிகிறான்.

தொடுவானை ஒட்டி, ஒர் ஒளி இருக்குமானால், அது வானத்திற்கு, நிலத்திலே வைக்கப்பட்ட கண்ணாடியாகத் தெரியும்.

அண்ணாவுக்கு அருகில், அற்ப அலைகளால் துள்ளாத ஏரியைப்போல - ஒருவன் இருப்பானேயானால், அவன் முகம் காட்டும் கண்ணடியாக விளங்குவான்.

தொடுவானை எட்டி ஒரு பரந்து விரிந்த வயலிருக்குமானால், அது நிலா மங்கைக்கு கரைத்து வைக்கப்பட்ட, மரகதப் பாலாகத் தெரியும்.

அதைப்போல, அண்ணாவின் பக்கத்தில் வயலாக விரிந்தவன், குளிர்ந்த குணத்துக்கு கரைத்து வைக்கப்பட்ட அமுதாகத் தெரிவான்.

தொடுவானுக்கு அருகில், ஒரே ஒர் ஒற்றைத் தென்னை மரம் இருக்குமானால், அண்ணாவுக்கு முன்னால் வெட்ட வெளியில் தனியாக இருப்பவன் விளம்பரமில்லாத நிமிர்ந்த தம்பியாகவே மாறுகிறான்.

நசுக்கினாலும் நசுங்காத நாகரீகம் போல. துரத்தி வந்தாலும் கைக்குக் கிட்டாத பேரொளிபோல்

பூர்த்தியாக்கப்பட்ட மூலதனம் போல -

என்றும் விழித்திருக்கின்ற விழியைப் போல்

திக்குகளுக்குப் பூராவும் விரைந்திருக்கின்ற தொடுவானம்

எளிய அல்லிக்கும் இறக்கும் காளானுக்கும்

நகரும் புழுக்களுக்கும்

ஊறும் எறும்புகளுக்கும்

இறவாத சக்தி, இதுவென்று காட்டிக் கொண்டு, இருக்கின்றது.

அதனுடைய இருதயத்தில், கோடிக் கணக்கான நனவுகளும் கவிழாத கனவுகளும் தினந்தோறும் வருகின்றன.

தொடுவான், நட்சத்திரத்தின் கூடாரமட்டுமல்ல!

நகர்ந்து நெளிகின்ற ஜீவன்களுக்கு முக்காடாகவும் இருக்கிறது.

அதோ இரவு...! அதன் மீது நடக்கிறது!

அதனை விடிந்த பிறகுதான் தேடவேண்டும்.


கண் போன்ற தமிழ்!


நம்முடைய மொழியை நாம் கண் போல் காத்து வருகிறோம். அந்தக் கண்ணில் சிறு துரும்பு பட்டாலும் எரிச்சல் காணத்தான் செய்யும். அதனால் உடல்கூட எரிச்சல் காணுவது போல் இருக்கும்.

அந்த நேரத்தில் யாரேனும் ஏதாவது கேட்டால் எரிந்து விழுவோம். நம் கண்கள் கோபத்தில் மேலும் சிவந்து விடும். இது பட்டவர்களுக்குத் தெரியும்.

கண்ணுக்கு மையிடுவது போல, பிற மொழிகளைப் பயன்படுத்த வேண்டும். மை அதிகமானால் கண்ணை எப்படி அரித்து விடுகிறதோ, அதுபோல பிற மொழிகள் அதிகம் கலப்பதும் நம் மொழிக்கு ஆபத்தான நிலைய உண்டாக்கும்.


- அறிஞர் அண்ணா