அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு நீர்வீழ்ச்சி!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


2. அண்ணா ஒரு நீர்வீழ்ச்சி!


நீங்கள் அவனைப் பார்த்தீரோ,

அவன் ஒரு நீர்வீழ்ச்சி,

அது ஒரு நீர்த்துளி,

தெய்வத்தின் ஈரத்தால் நெய்யப்பட்டது,

அதன் இழைகள், காலத்தை வெல்லும் பண்பாடுடையன,

நீர்வீழ்ச்சிக்கு மறுபெயர் அண்ணா.

அதோ அது; தாயகத்தின் மடிமீது விழுகிறது,

அதனுடைய சிதறலில், ஒளி போர் செய்கிறது!

இப்போது துளிகள் அத்தனையும் - வண்ணச் சொட்டுகள்,

நீருக்கு வேரில்லை! அது நகர்ந்து வந்த திக்கு, யாருக்கும் தெரியாது!

ஞானி, அதன் முடிவை சிந்திக்கிறான்!

அது மேலே இருக்கும்போது - பலத்தோடு வழிகிறது.

நில இதயத்தில் அது விழும்போது, பூ போல மென்மையாகிறது.

அதற்கு விரோதமாக எந்தப் பூக்களும் பூத்ததில்லை,

நீர்வீழ்ச்சி ஜீவராசிகளின் தாய்,

அது ஊறிய மண்ணில் எத்துணை குளுமை,

ஏழையின் கண்ணிலிருக்கின்ற இரக்கத்தையும் - தமிழ் மொழியிலிருக்கின்ற ஈரத்தையும் - நீர்வீழ்ச்சி; வென்று விடுகிறது,

பள்ளத்தாக்கில் அது விழுந்தாலும் - கடலுக்குக் குழந்தையாகி விடுகிறது,

கயவர்களும் அதைக் குடித்துத் தாகம் தீர்த்துக் கொண்டனர் - ஆனால், வென்றதில்லை.

மன ஊருக்குப் பக்கத்தில் - அது நீண்ட காலமாக விழுந்து கொண்டிருக்கிறது.

அது வற்றிவிடாதோ என்று, கோடைக்கால நெஞ்சங்கள் எதிர்ப்பார்த்தன.

அதுவா வற்றும்? எப்போது வானம் கண்ணைத் திறந்ததோ - அப்போதே அது மண்ணைத் தொட்டது.

தீர்த்தமென்று அதைத் தெய்வீகன் கூறுகிறான்.

திருத்தும் என்று பகுத்தறிவுவாதி கூறுகிறான்.

அறிவு மலையிலிருந்து விழுவது நீர்வீழ்ச்சி,

அதனுடைய இரைச்சல், எல்லா தேசத்தையும் செவிமடுக்கச் செய்தது.

வெட்கப்பட்ட நாடு வணங்கிக் கேட்டது.

ரோஷமற்றவன் காலைக் கழுவினான்.

அதோ அது; அவன் காலிலே நெருப்பாக இல்லை.

- நிலவாகக் குளிர்கிறது.

★ ★ ★

கர்வியை ஒரு நாள் -சந்தித்தது நீர்வீழ்ச்சி,

நீ, நீர்தானே என்று, கர்வி கேட்டான்.

ஆம், என்றது நீர்வீழ்ச்சி, 

கீழே விழுத்தவுடன் சிதறுகின்ற உனக்கு - மனிதன் மரியாதை கொடுத்தது தப்பு: என்று கேட்டான்.

நீர்வீழ்ச்சி பேசுகிறது:

நான் விழுந்தாலும் சிதறுகிறேன் - ஆனால் பதறவில்லை.

எவ்வளவு சிதறினாலும் மறுபடியும் மண்ணிலேயே ஒட்டிக் கொள்கிறேன்.

மண்ணுக்கும் எனக்கும் நீங்காத தொடர்பு.

எனது தலை பாரமாக இல்லை - அதனால், எனக்கு எப்போதும் மண்டை உடைவதில்லை.

கர்வியும் என்னை நீர் என்று, மரியாதையோடுதான் கூறுகிறான்.

காரணம் தெரியுமா? அவன் பினத்தைக் கடைசியில் கழுவுகிறவன் நான்.

கேள்வி கேட்ட கர்விக்குத் தாகம் எடுத்தது.

குறிப்பால் உணர்ந்த நீர்வீழ்ச்சி, 'என்னை'க் குடி என்றது.

அண்ணாவைக் குடித்தவன் தாகம் தணிக்கப்படுகிறான்.

அவனது களைப்பு தீர்க்கப்படுகிறது.

கரைகளற்ற நீர்வீழ்ச்சி கறைகளற்ற நீர்வீழ்ச்சி!

அது ஒரு நீர்த் தொங்கல்! தண்ணிர் விழுதுகள்! ஜலத்திரை!

விழும்போது அதற்கு அலைச் சுருக்கங்கள் இல்லை.

மனிதன் விழுந்தால்;எவ்வளவு சுருக்கங்கள் - முகத்தில்!

அதோ, நீர்வீழ்ச்சியின் பக்கம் - மந்தைகள் மேய்கின்றன,

அந்த சின்ன ஆட்டுக் குட்டிக்குக் கத்தக் கூடத் தெரியவில்லை.

பெரிய கடாவுக்கு அதனுடைய மழலை புரியவில்லை.

கத்தாதே என்று வளர்ந்த கடா கேட்கிறது.

ஜீவன் மழலைமொழி பேசும்போது, சப்தம் இப்படித்தான் வருமென்று நீர்வீழ்ச்சி சொல்கிறது.

இலக்கண அமைதியே இல்லையென்று கடா கேட்கிறது.

குழந்தை இலக்கியத்திற்கு என்னைப்போன்ற தாய்தான் இலக்கணம் - என்று நீர்விழ்ச்சி கூறுகிறது.

நீர்வீழ்ச்சியின் இந்த நேர்த்தியான உரையைக் கேட்ட முதல் கவிஞன் - வளரும் கவிஞனை வாழ்த்த ஆரம்பித்தான்.

அதோ முட்டையைப் பிளந்த பறவைப் பிஞ்சு ஒன்று, முதன் முதலாக நீர்வீழ்ச்சியைப் பார்க்கிறது.

அதன் மொழியில் தாயைப் பார்த்து; இது என்ன?' என்று கேட்கிறது.

அது ஒரு பாய்: என்று தாய் சொல்கிறது.

பாயவில்லையே என்று குஞ்சு கேட்கிறது.

கீழே பாய்கிறது என்று கூறியது தாய்!

கீழே பாய்வது, ஏன் மேலே பாயவில்லை என்று கேட்டது குஞ்சு!

கீழே இருக்கும் போது பாயலாம்,

வளர்ந்து மேலே போகும் போது பாயக்கூடாது.

அன்பின் மடியில் விழவேண்டும்.

இதுதான் நீர்வீழ்ச்சியின் இலக்கணம் என்றது தாய்.

அண்ணாவும் அப்படித்தான்! பெரியாரோடு இருக்கும் போது சிங்கமெனப் பாய்ந்தார்.

வளர்ந்து அவர் மேலே போனபோது, எல்லாருடைய மடியிலும் வீழ்ந்தார்.

நீர்வீழ்ச்சிக்கு நடுவிலே புகுந்தாலென்ன என்று கேட்டது குஞ்சு.

'மரணம் உன்னை விழுங்கும் ' என்றது தாய்.

அண்ணாவின் பேச்சு வீழ்ச்சிக்கு நடுவில் புகுந்தவர்கள் - மரணம்பட்ட வாய்போல மூடிக்கிடந்தார்கள்.

நீர்வீழ்ச்சியின் தண்ணீரை; என் அலகில் - கொஞ்சம் தானே எடுக்க முடிகிறது; என்றது குஞ்சு.

அதையே உன்னால் ஜீரணம் செய்ய முடியுமா? என்றது தாய். மொத்தத்தையும் குடித்தால்தான் ஜீரணம் செய்ததாகப் பொருளா?

கொஞ்சம் குடித்தால் போதாதா என்றது குஞ்சு, அண்ணாவைக் கொஞ்சம் குடித்தவன் - அதிகம் குடித்தவனாக நினைக்கிறான்.

அதிகம் குடிக்க நினைத்தவன் - குடிக்காமலேயே வியந்து நின்றான்.

நீர்வீழ்ச்சி எங்கே இருந்து வருகிறது அம்மா; என்று குஞ்சு கேட்டது.

தெய்வத்தின் கையில் அன்பு என்ற செம்பு இருக்கிறது, அந்த செம்புக்குள் எட்டு குணங்கள் சேர்ந்த பரிமளங்கள் இருக்கின்றன.

தெய்வம் குழந்தையாக இருக்கும்போது, செம்பைப் போட்டு உடைத்தது.

உள்ளே இருந்த பரிமளங்கள் வழிந்தனவே, அவைதான் நீர்வீழ்ச்சி!

அப்படியானால், அந்தத் தெய்வத்தை எங்கே காணலாம்?

அன்பகத்திலும் அறிவகத்திலும் அதைப் பார்க்கலாம்.

நீர்வீழ்ச்சியை எப்போதாவது நீ பார்த்திருக்கிறாயா? என்று குஞ்சு கேட்டது.

கண்மூடிக் கடைசியாகப் போகும் போது நான் அதைப பார்த்தேன் - என்றது தாய்.

விழி திறந்து அது உலா வரும் போது பார்க்கவில்லையா? என்றது குஞ்சு.

அதன் பேச்சிலே மயங்கியதால், நான் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை, பார்க்கவில்லை என்றது தாய்.

கரடு முரடான பாறை, வழவழப்பான பிறகு நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கேட்டது.

நீர்வீழ்ச்சியே, எப்படி என்னை வழவழப்பாக ஆக்கினாய்?

முரட்டுத்தனத்தை மிருதுவாக்குவாதும், மீறி வருவதைத் தாக்காமல் தாவுவதும் - எனது வழக்கம் என்றது.

அறிஞர் அண்ணாவும் அரசியலில் முரடர்களை மிருதுவாக்கி, வழவழப்பாக்கிப் பக்குவப்படுத்தினார்.

குறுக்கே வந்த தடைகளைத் தாவிக் குதித்தார்!

நீர்வீழ்ச்சி இப்போது ஆழமான இடத்தில் விழுந்ததால் - தண்ணீர்ப் பூவை அங்கே மலர வைத்தது.

எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கின்ற நீர்ப்பள்ளம் - அங்கே ஆடிச் சிரிக்கும் மேடு தெறிக்கும். இது உண்மை!

அண்ணா மிகவும் ஆழமானவர் அதனால் சிரித்தார்:

வண்ணக் கதிர்களை - எண்ணச் சிதறல்கள் என்பார்கள்!

இப்போது வண்ணக் கதிர்கள் நீர்த்துளிகளின் நெருக்கத்தில் பாய்கின்றன.

நீர்த்துளி பறக்க ஆரம்பிக்கிறது.

நுணுகியச் சிதறல்கள், அருகிலிருக்கும் புற்கள் மீது படிகின்றன.

அத்தனையும் வைரத் தூசுகள்!

அவை தண்ணீர்ப் பிஞ்சுகள்!

பிஞ்சு, தாய் வீழ்ச்சியைப் பார்த்துச் சிரிக்கிறது!

ஓய்வெடுக்கவா சென்று விட்டாய்? என்று நீர்வீழ்ச்சி கேட்கிறது.

வண்ணப்பற்களைக் காட்டித் தண்ணீர்ப் பிஞ்சு தலையாட்டுகிறது!

பிரவாகத்தில் கலந்துவிடு - இல்லையென்றால்; உனது சிறிய உடலை எறும்பு கூடச் சிதைத்து விடும் - என்றது நீர்வீழ்ச்சி!

அண்ணா கூடத் தம்பிகளை-அறிவுப் பிரவாகத்தில் கலக்கச் சொன்னார்.

கிடைத்த ஒளியில் பிரகாசிப்பதைவிட - கிடைக்கப் போகும் ஒளிக்காக வாழ்க்கையை அமைப்பதே; அண்ணாவின் கொள்கை.

விழுந்து விட்டோமே என்று; நீர்வீழ்ச்சி, மலையுச்சியைப் பார்க்கிறது.

நீ, இன்னும் விழுந்து விடவில்லை! வழிந்து கொண்டிருக்கிறாய் - என்று; உச்சி உரைத்தது:

நான் அவ்வளவு நெடியவனா? நீர்வீழ்ச்சி கேட்கிறது!

இறவாது வடிபவன் நீ; என்று உச்சி கூறியது

என்னுடைய முடிவு எப்போது? நீர்வீழ்ச்சி கேட்கிறது!

உன்னுடைய தொடக்கமே எனக்குத் தெரியாதே - மலையுச்சி சொல்லிற்று.

தொடங்கியது முடியத்தானே வேண்டும்! நீர்வீழ்ச்சி கேட்கிறது.

எது முடிகிறதோ அது தொடங்கும் என்றது உச்சி!

ஆகவே, நீ முடியவில்லை - உனக்குத் தொடக்கமில்லை.

அப்படியானால் நான் யார்? நீர்வீழ்ச்சி கேட்டது.

அருள் முளைக்கும் வேருக்கும் ஆணிவேர் நீ!

பொருள்புரிய வைக்கின்ற புதியதோர் தத்துவம் நீ!

ஒளியிருந்த முட்டைக்குள்,

உருவாகி நின்ற கருவுக்குள்

நித்தியத் தீனியாகி,

நிர்மல வெளியாகி,

நின்ற சக்திக்கு

நீ தானே முதல்வித்து!

புரியவில்லையே! கேட்டது நீர்வீழ்ச்சி!

நிமிர்ந்த பொருளிலெல்லாம் நீயாகி இருக்கின்றாய்.

நின்ற பொருளுக்கும் நீயாகி நிற்கின்றாய்!

நிற்காத பொருளுக்கும் நீ ஆகி நிற்கின்றாய்.

உன்னைப் படைத்தவன் நீ! உன்னில் இருப்பவன் நீ!

புரியவில்லையே! மீண்டும் நீர்வீழ்ச்சி கேட்டது.

இன்னுமா புரியவில்லை!

அறிவு ஒரு குளுமையான அந்தி!

இரவுக்கும் - பகலுக்கும் இடையிலே இருக்கின்ற குழந்தை அது!

அந்தியைப் போல, குளிர்கின்ற அறிவு நீ! ஒளியில் அந்தி!

ஒலியில் யாழ்!

காற்றில் தென்றல்!

ஆகாயத்தில் அண்டம்!

நெருப்பில் இளஞ் சூடு!

நிலத்தில் மருதம்:

நீரில் நீர்வீழ்ச்சி!

சந்தேகம் தீர்ந்ததா?

மலை கூறி முடித்தது!

அதோ நீர்வீழ்ச்சி!

எல்லையற்ற கடலை நோக்கிக் கலந்தது!

கடல் தன் உப்புக் கண்ணிரால் - அதனை; ஏந்திக் கொண்டது.

நீர்வீழ்ச்சி தொடங்கியது தெரியாமல் தவிக்கின்றேன்!

அது முடிந்ததையும் தெரியாமல் முடிக்கின்றேன்.