அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு வானவில்!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

3. அண்ணா ஒரு வானவில்

நீலவான் நிர்மலமாக இருந்தது! முகிற் கூட்டங்கள் திடீரென்று அதை மூடிக்கொண்டன!

மின்னல் கீற்றுகள் மேகத்தின் முதுகில் வரி வரியாகச் சூடுகள் போட்டன!

மேகங்கள் துடித்து அலறின! கண்ணீர்த் துளிகளை உகுத்து உகுத்து; அவை கருத்து விட்டன!

நடுவானத்திலே நடைபெறும் - இந்த ரணகளப் போரைக் கண்டு, சூரியன் அச்சப்பட்டது!

ஒருவனை மற்றொருவன் உலகத்தில் அடித்துக் கொண்டு சாவதைச் சுயநலவாதி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல; அருணனும் இதை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

மனிதக் கூட்டத்தினிடையே நடந்தது கொண்டிருக்கும் சண்டையில் - நான்கு பேர் புகுந்து அமைதியை நிலைநாட்டுவதைப் போல - மழையும்; ஒரு கணம் அமைதியை நிலை நாட்டியது!

மழைத் தோளால் நெய்யப்பட்ட பனித்திரையைக் கதிரவனுடைய கூரீட்டிகள் ஊடுருவின!

அதன் விளைவு, வானவில் வண்ணங்காட்டி மேற்கில் சிரித்தது!

போருக்குப் பின்னே எழும் அமைதி போல; வான மண்டலப் போருக்குப் பின், வில் மட்டும்தான் தனியே நின்றது!

பயங்கரக் காட்டிலே வழி தவறி வந்துவிட்ட குழந்தை எவற்றைப் பார்த்தாலும் தனது பிஞ்சு விழிகளை உருட்டி உருட்டிப் பார்த்து மிரள்வதைப் போல, வானவில்லும் நீண்ட நெடு வானத்திலே காட்சியளித்து, உலகைக் கண்டு மிரண்டு நின்றது!

பசுமையான செடிகொடிகளையும், இதழ் விரித்த பூக்களின் அழகையும் பார்த்துச் சிரிக்கும் கள்ளங் கபடமற்ற குழவியைப் போல; வானவில்லும் உலகிலே நடைபெறும் மக்கட் கூட்டத்தின் திருவிளையாடல்களைக் கண்டு; தனது வண்ணத்தைக் காட்டிச் சிரித்தது!

அந்த வில் அமைதிக்காக வளைந்ததா? மற்றொரு அம்பைக் காற்றிலே மிதக்கவிட வளைந்ததா?

வினாக் குறியாக வில் விளங்கியது. இருப்பினும்; வானவில் வானவில்தானே!

மனிதன் மழலையினின்று வளர்ந்தவனன்றோ குழவி புத்தி, வாலிபத்தில் வடிவம் காட்டுவதும் இயல்புதான்!

வானவில்லைக் கண்டேன்! கைகொட்டி நகைக்கும் சிறுபிள்ளையானேன்!

எனது எண்ணங்கட்கு இறக்கைகள் முளைத்தன!

வானவில்லின் விளிம்புகளில் நின்றவாறே உலாவர ஆரம்பித்தேன்!

என்னுடைய ஒருமுனை வழியாக ஏறினேன்! அதன் உச்சியை அடைந்தேன்!

என்னுடைய எண்ணங்கள் எதையோ ஒன்றை அறிவதைப் போல எண்ணித் துடித்தன!

ஏதோ ஒன்றை நான் பெறுவதும், அதை இழக்கத் தயாராக இல்லாததும் போன்ற உள்ளுணர்வு எனக்கு ஏற்பட்டது!

தன்னம்பிக்கையை நான் தழுவிக் கொண்டேன். சோர்வோ - தளர்வோ என்னை நாட அச்சப்பட்டன!

வானவில்லின் விளிம்புகளில் நின்றவாறே, நான் வையத்தை நோக்கினேன்!

நான் உயரமானவன்! மிகமிக உயரமானவன்! உலகத்தை விட உயர்ந்தவன் - என்ற தற்பெருமை கொண்டேன்!

பூமியின் கரடுமுரடான முகத்தை கண்டேன், கிண்டல் செய்தேன்!

இவ்வாறு ஒரு நொடியில் நான் நினைத்தேன்! ஆனால் மறுநொடியில் ...!

வில் உடைந்தது! எந்தப் பூமியை நான் ஏளனம் செய்தேனோ, அதே பூமியிடம் நான் சரணாகதியடைந்தேன்

தலை குப்புற வீழ்ந்தேன்! கீழிருந்தவாறே வானை நோக்கினேன்!

வெற்றி பெற்றவனிடம், தோற்றவன் தனது தோல்வியை மறந்து; எரிச்சலால் ஏசுவதைப் போல, நானும் வானை ஏசினேன்!

என்னைச் சூழ்ந்து நின்றவர்கள், எனது அறியாமையைக் கண்டு இரங்கினார்கள்.

நான் மட்டும் என் குற்றத்தை மறந்தேன்.

ஆனாலும், 'முயற்சி திருவினையாக்கும்' என்ற குறள் - எனக்கு மீண்டும் புதுவலிவை ஊட்டியது!

ஏறிய தகுதி இறங்கிய பிறகு - ஒருவன் மனம் போனவாறு பேசுவது - மனித இயற்கை என்பதை; ஒருவாறு உணர்ந்தேன்.

வானவில்லை; மீண்டும் நான் அடைய முடியாதுதான். அதனால் - அதன் பெருமையை உணர்ந்தபடியே சிந்தித்தேன்!

தத்துவங்கள் பலவற்றைக் கொண்ட வானவில், என் அறிவின் தலைவனுக்கு ஈடாகுமோ என்று எண்ணினேன்!

என் எண்ணத்திற்கு வந்த கருத்து அலைகளிடையே நான் சிக்கித் தத்தளித்தேன்.

அவா ஒரு கானல் நீர்!

மாயம்!

நிலையற்றது!

தேவையில்லாதது!

கூடாதது!

நினைத்தாலே பாபமானது!

"உயரே போன ஒருவன்; என்றாவதோர் நாள் - கீழே இறங்கத்தானே வேண்டும்!”

"கீழே இறங்குபவன்; மேலே ஏன் ஏற வேண்டும்?”

"வானவில்லே அப்படித்தான்! நம்பக் கூடாது - அதை! நம்பி நலிந்தவர்களிலே நானும் ஒருவன்!"

தலைகீழாக விழுந்து அடிபட்ட பிறகு, நான் கொடுத்த தத்துவங்கள் அவை.

அவ்வாறெனில்; எனக்கு மட்டும் அவாவென்பதே அறவேயிலையோ?

ஆசை வெட்கமறியாதது; கவலை நேரத்தில் தலை காட்டாதது.

இன்பம் வருகிற நேரத்தில் - இரவுக்கும் பகலுக்கும்; வித்தியாசம் தெரியாதது.

இது வேறு விஷயம்தான் இருப்பினும், இப்போது நான் இவ்விஷயத்தில் துறவி.

இதயக் குமுறலை இவ்வாறு இயம்பி முடித்தேன்!

ஊதா மலர்!

தூரத்தில் ஊதாமலர் ஒன்று 'களுக்'கென்று என்னைப் பார்த்துச் சிரித்தது.

நகை வந்த திக்கை நோக்கினேன்

மனிதனில்லை அங்கே மலர் இருந்தது. மலரே! நகைத்தது நீயா? என்றேன். 

ஆம்! என்றது அந்த மலர். எதற்காகச் சிரித்தாய்? கேட்டேன்.

'இங்கே வா' என்றது; அந்த ஊதா மலர்.

நிலையிழந்த மனிதா! இயற்கைக்கு வாயில்லை பேச. ஆனால், அந்த இயற்கையை மாயமெனக் கூறுகிறாயே.

உன் நினைவுகளுக்குப் பதிலளிக்காததால், அவ்வாறு கூறுகிறாயா? இதை இயம்ப எத்தனை ஏடுகளைப் படித்தாய்?

அவாவின் சிறகுகள் அளவிலாத் தொலைவுவரை சிறகடித்துச் சேர்ந்து தொங்கும்போது, அவனியே மாயம் என்கிறாய்.

வானை நோக்கிக் கையேந்தி நிற்குமாறு உன்னைக் கூறியது யார்?

வானம் வழங்காவிட்டால்; அதை மாயமென்று உன்னைச் சொல்லச் சொன்னது யார்?

இட்டதைப் பெரிதென்பான் மனிதன்! இடாததை இழிவென்பான்? அஃது உனக்கும் உரிய நியதியோ!

சிறிது நேரத்திற்கு முன்பு வானவில்லை மாயம் என்று சீறினாயல்லவா?

வானவில்லில் இருக்கின்ற வண்ணங்களிலே ஒரு நிறம் நான்.

என் ஊதா மேனியைப் பார்! நான் மாயையா? தொட்டுப் பார்த்துக் கூறு.

அவாவைப் பற்றிக் கதைகளை அளந்தவனே, ஒழித்தாயா நீ - அவாவை?

அவாவை அழித்தான் சித்தார்த்தன். அவன் 'புத்த”னான கதை தெரியுமா உனக்கு?

காலையில் ஒருநாள்; கபிலவாஸ்துச் சோலையிலே; அவன் மன்னனாக இருந்தபோது வந்தான்.

மாலையிலே நான் காம்பொடிந்து செடிக்குக் கீழே விழுந்து கிடந்தேன்.

கண்டான் காவலன்! மருண்டான் எனைப் பார்த்து. சிந்தனை வளையம் சுழன்றது அவனுக்கு.

வாடிய மலருக்கு வாழ்வென்பது எது? வதங்குமா மலர்?

சிந்தித்தான் சித்தார்த்தன். முடிவு காண முனைந்தான்.

'போதி’யின் கீழே அமர்ந்தான். 'புத்தொளி' பிறந்தது. ஞானம் படர்ந்தது.

ஆசையின் அழுக்கு - இழுக்குகள்; அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தன.

சித்தார்த்தன் புத்தனானான்!

நான் மலர்! உயிரில் மிகச் சிறிய உயிர்!

கபிலவாஸ்துவின் காவல்னெங்கே? கருகிய மலரான நானெங்கே?

முடிவென்ன தெரியுமா? ஒரு மலர் மன்னன் மனதையே மாற்றிவிட்டது.

மாயை, மனதை மாற்றுமா? தெளிவைக் கொடுக்குமா? சித்தார்த்தனிடம் செல்வானேன்.

தென்னகத்தின் பேரறிஞரைக் கவனி. அமைதிக்கு அடைக்கலம் தந்து - அரசியலுக்குப் புத்துருவம் அளித்தவர்.

பொன்னாகப் பொதுவாழ்வைப் பொலிவுபடுத்தியவர்:

தன்னகத்தே கொண்டிருக்கிறார்; தன்னாலாக்கப்பட்ட எழிற்கொள்கைகளை.

அறிஞர் அண்ணாவின் தம்பிகளிடையே சென்று, உனது அண்ணன் ஒரு மாயை என்று அறைந்து பார்.

அறிவு வாதத்தில் அடியற்ற மரம் போல நீ வீழ்கிறாயா இல்லையா என்று பார்; என்றது அந்த ஊதா மலர்.

ஊரறிய உரைத்த ஊதா மலரின் தத்துவச் சிந்தனைகளை; தூர இருந்து மற்றொரு மலர் உற்றுக் கேட்டது.

செந்தூர மலர்தான் அது. விடுமா அவனை? 'என்னே தம்பி’ என்று பேசிடத் துவங்கியது.

ஊதா மலரைக் கண்டு - செந்தார மலர் - விலா நோகச் சிரித்தது! என்னே! தம்பி, "உலகே மாயம்! ஊதாவின் உரை கேட்டே இவ்வாறு ஒடிந்து விட்டாயே!”

நான் நவிலவிருக்கின்றவற்றைக் கேட்டால் என்னாவாய்,என்று அது நயமுடன் இடித்துரைத்தது!

செந்தூர மலர்!

சிரித்துக் கொண்டே செந்தூர மலர் தன் சிந்தனை வளையத்தைச் சுழல விட்டது!

முத்துக்கடல் தொட்டு மிளிரும் தொடு வானம்!

அதில் செக்கச் செவேலென்ற செந்தூர வடிவம்!

அப்போது திக்கை வெளுப்பாக்கத் தோன்றுகின்றக் கதிரவனைக் காணும் போது, அவ் வடிவத்தால் ஊற்றி மெழுகியிருக்கும் என் பெயர் தான் செந்தூர வண்ணம்.

அருணனை மாயமென்றறையும் நீ, அண்ணாவின் புறப்படையின் முன்பு உதயசூரியனை மாயை என்று உரைப்பாயோ!

இஃதே போல இனியும் வெளியே இயம்பாதே; என்று செந்துர மலர் செப்பக் கேட்டேன்!

என்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வர, நான்பட்ட பாடு எனக்கன்றோ தெரியும்!

<> <> <>

நீலக் குவளை மலர்!

ஓடை ஓரத்தில் ஓங்காரச் சிரிப்பொலியை; நொடியில் நான் கேட்டேன்!

மலர் சிரிப்பா இது! என்று வியப்பால் நிமிர்ந்து பார்த்தேன்!

மேடைப் பூங்காற்று மோதியந்த மலர் மீது; தாதை உலுக்கி விட்டுத் தாண்டிச் சென்றது.

அம் மலருக்குப் பெயர் அழகுத் தமிழ்ப்பாவை வந்து கொஞ்சுகின்ற நீலக்குவளை!

அழைத்தாயா குவளையே? என்று நான் அருகில் சென்றேன்!

எட்டாத தொலைவிலிருக்கும் இந்த வானத்தின்கண் ஒளிரும் நிறம் கருநீலம்.

ஆழ்கடலின் நிறமும் அதுவே!

வானத்தை மாயமெனில், வாரியினை மாயமெனில் ஞாலத்தில் எது உண்மை; நவில்வீர்!

கருநீலம் உள்ளதெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தாலும்: தொட்டுப் பார்த்தவரோ தொல்லுலகில் யாருமில்லை!

விசும்பை அளந்தறியோம்! ஆழியை அளந்தறியோம்!

அளவுக் கடங்காது! அள்ளவள்ளக் குறையாது!

களவதனை எவரும் செய்யார்! இந்தக் காட்சிக்குக் கருப்பொருளாய் வந்த கரு நீலம்; ஆழத்தின் இலக்கணமாகும்!

சிரம் பழுத்த தென்னாட்டுப் பேரறிஞன் அறிவாழத்தை; மரம் மட்டைகள் கணக்கிட்டு அறிந்திடுமோ!

உரமுள்ளோர் எத்தனை பேர் - அவரை நெருங்கினார்!

நின்றெரியும் அவரின் அறிவை உண்டு எத்தனையோ பேர் ஊர் போனார் என்று உனக்குத் தெரியாது?

கத்தும் கடல் குடித்தான் குறுமுனிவன் கன்னித் தமிழ் குடித்தார் - இந்தப் பேரறிஞர்!

குறள் படித்த இந்த மூதறிஞன் விரல்; தொட்ட இடமெல்லாம் இலக்கியத்தின் விளக்கங்கள்!

அன்னோன் அறிவாழம் கண்டார் - யார்?

ஆழத்தின் நிறங்கண்டார், மவுனத்தில் தான் ஆழ்ந்தார்!

அன்னவரை நோக்கி ஓடிவிட்ட எதிரியின் உயிரெல்லாம்;

மீண்டும் திரும்பாமல் 

'மீளவழி தேறாமல்,

பூண்ட அன்புச் சிறைக்குள்ளே

பூட்டப்பட்டிருக்கும் வரலாற்றைக் கண்டாயா?

இத்துணையும் அறியாத நீ. கரு நீலம் மாயை என்றால், கை கொட்டி நகையாதோ தரணி!

அறிவை மாயம் என்போன் - 'அது' இலான் தம்பி ; அது இலான்!

ஆழத்தின் நிறங்காட்டும் கரு நீலம் மாயமில்லை என்பதை நீ உணர்ந்து, உன்னைத் தெளிவாக்கி நட என்று கூறி முடித்தது குவளை மலர்.

பைங் கூழ்!

இச்சித்தப் பொருள் யாவும் எட்டிச் சென்று விட்டதால் அவற்றை மாயை என்கிறான் மானிடன்!

பச்சைப் பைங்கூழ்கள் பார்த்த பின் கூட, இச் சரக்கை எப்படித்தான் நீ அவிழ்த்தாய்? இவ்வாறு வினாவெழுப்பிக் கிண்டல் குறும்பவிழ்த்து நகைத்தது நல்கூழ்!

இக்கரைக்கு அக்கரைப் பச்சையென்று, அறிவு திக்கற்ற மூளையெல்லாம் இயம்பிற்று.

அதைக் கேட்டு விட்டு, பச்சை நிறம் அழியும் என்கின்ற பசப்பு வார்த்தையினால், இச் செகத்தை ஏய்ப்பவர்கள் இருக்கின்றனர்!

அஃதே போல் நீயும் நினைத்து விட்டாயோ, தம்பி!

கடலிலே காய கல்பமுண்டு - கருமேகம், பெருநிலத்தால் காதலித்துப் பொழிகின்ற காதல் மழை; பருவமழை!

மேகத்திற்கும் - பூபாகத்திற்கும் ஏற்பட்ட திருமணத்தின் பயனாகக் கழனி கருவுற்றாள்.

நாற்று தவழ்ந்தது! நெல்லாய் வளர்ந்தது.

பச்சை நிறத்தோடு, பாயும் தென்றலுடன், கை கொட்டிச் சிரிப்பதைக் கண்டான் - ஏராளன்!

அன்னைத் தமிழ் நிலத்தில் - அழகுப் பழனத்தில் ஆடும் நெற்கதிர்களைப் பார்!

அவை அணிந்துள்ள ஆடை வண்ணத்தின் நிறம் பச்சை!

நெஞ்சிலே கை வைத்துச் சிந்தித்துப் பார்! வருடம் முழுவதும் வியர்வையைப் பிழிந்து விட்டு,களை பிடுங்கி, கண் விழித்துக் காத்துக் கழனியெல்லாம் பச்சை நிறங் கொண்டு, பரிணமிப்ப தொன்றாலே, அதை மாயை என்று சொல்வது அறிவாமோ!

அதை மடமையென நான் கூறல் வேண்டுமோ! என்றது பச்சைப் புல்வெளி!

ஆண்ட தமிழகத்திலே அளப்பரிய இலக்கியங்கள்!

பூண்ட தமிழ்க் கோலம் பூரிப்போம்!

காண்டல் கண்ணுக்கு இனிதென்றார். அதன் தொனியைக் கேட்டால் காதுக்குத் தேன் என்றார்.

இஃது உனதன்னை இருந்து ஆண்ட நிலம். அஃது இஞ்ஞான்று அவள் கையில் இல்லையடா!

வளத்தோடும் - வனப்போடும் வந்தோர் வாழ்கின்றனர்

செங்களத்தில் செந்நீர் மடை திறந்த இந்நாட்டு மறவரெலாம்; அடிமைத் தளை பூட்டி; ஆங்காங்கு கிடக்கின்றார்.

இந்த வளமிருந்தும்; ஈடற்றத் தமிழ் மகனே! நீ நொந்து நலிகின்றாய்!

ஏனப்பா, நிலை கெட்டாய்? என்று தெருதோறும் முழக்கம் செய்கின்ற அண்ணன் மனத்திரையில் கருகாதிருப்பது; கன்னித் தமிழ் வளமன்றோ!

அந்த வளத்தின் வண்ணங்காட்டல்; இந்தப் பச்சை நிறமன்றோ!

அந்நிலத்தின் சாயலினை; அனைவரின் அழகு தமிழ் உரையாடலிலே; தென்னகத்தின் வீதி தேறும், மன்றத்தின் முழுமை உள்ளங்கள் - இல்லங்கள்; பட்டி தொட்டிகளில் எல்லாம் பார்க்காமல் வந்து விட்டாயா! 

அந்தக் குறைபாட்டில் அழகு பச்சையை, அழியும் மாயை என்று நீ அறைந்தாயல்லவா என்றது? பச்சை!

மேலும் விளக்கம் தேவையோ என்று பச்சை நிறம் பரிவோடு கேட்டது!

ஆம். என்றான் அந்தத் தஞ்சாவூர் பொம்மை! அறிவுப் பசியால் அலைபவனல்லவா அவன்.

பச்சை மேலும் பேசிற்று! தம்பி, பாதை சரியாக இருக்குமானால், அந்தப் பாதையிலே போகின்ற வாகனங்களை, அறிவுறுத்தக் காட்டுகின்ற நிறம் கூட பச்சையல்லவா என்றது?

அது மட்டுமா? கற்களிலே மிகச் சிறந்த கல்லெனக் கூறுவது எது?

மண்ணகம் வாழ்த்துவது - மக்களெலாம் போற்றுவது -எது?

மரகதப் பச்சையன்றோ! அது பற்றிய விளக்கத்தை மேலும் கூறட்டுமா? கேள்!

மாதவி!

குறிஞ்சிப் பாட்டெனும் இலக்கியத்தில் பெரும் புலவர் கபிலர் "பைங்குருக்கத்தி' என்ற ஓர் கொடியைக் குறிப்பிட்டார்.

அக் குறுக்கத்தி, ஒரு கொடி அழகு தவழ, நெடிது நீண்டு வளரும்!

பற்றுக் கொம்பின்றி, அது தானே பற்றிப் படராத பான்மையது!

வேறு கோல் கொண்டு பந்தரிட்டு; அதன் மேல் குருக்கத்தியை ஊன்றி, ஆறு காட்ட வேண்டும்.

அப்போது தான்; அது நன்கு வளரும்! படரும்! தப்பாது தழைக்கும்!

இக் கொடி படரும் பந்தருக்கு;'சங்க காலத்தில் மாதவி'பந்தர், என்ற பெயருமுண்டு!

மாதவிக் கொடியின் நிறம்; கண்ணைக் கவரும் நல்ல பச்சை நிறமுடையது தம்பி!

நுணா என்றவோர் இலையை: நீ நுணுகிப் பார்த்திருக்கிறாயா?

அது போன்ற பச்சையாகவே இருக்கும் குருக்கத்தி இலை!

அந்தப் பச்சை இலையிலே பூக்கும் பூ; வெண்மை நிறம்!

மாதவிப் பூங்கொத்து என்பர் அதனை! அம்மலருக்குப் புறவிதழ்கள் ஐந்துண்டு!

இவ்வைந்து இதழ்களும் பசுமை நிறமாக இருப்பதால்: கபிலரெனும் கன்னித் தமிழ்ப் புலவர்; அதனை, "பைங்குருக் கத்தி" என்ற பெயரைச் சூட்டினார் போலும்!

அம் மலருக்கு ஐந்து அகவிதழ்களும் உண்டு.

அவ் விதழ்களில் ஒன்றே ஒன்று மட்டும் மஞ்சள் நிறமுடையதாம்!

மாதவிக் கொடியைக் கன்னட மொழியிலும் மாதவி என்றே அழைப்பர்!

ஒரிய மொழியில் அதனை 'மாதபி' என்றும், 'மாதபிளாதோ' என்றும் கூறுவர்!

தாவர நூலறிஞர்கள் அதனை ஆங்கிலத்தில் (MADA-BILOTA) 'மாட பிளோட்டா' என்று அழைக்கின்றனர்!

நல்ல பச்சை நிறங்கொண்ட அந்தத் தமிழ்க்கொடியின் பெயரைத்தான் ஆங்கிலத்திலும் வைத்துக் கொண்டனர்!

பச்சை நிறத்தின் பெருமையைப் பார்! பார் - அதனைப் பாராட்டி ஆராய்ச்சி புரியும் தகுதியைப் பெற்றுவிட்டது!

மாதவிப் பூங்கொத்துகள், அவை பூத்த சின்னாட்களில் உதிரும்! பொலிவிழந்து வாடும்!

இவ்வாறு பொலிவிழந்து நின்ற ஒரு மாதவிக்கொடியை: சிலப்பதிகாரக் கதாநாயகன் கோவலன் கண்டானாம்!

மாதவியைப் பிரிந்து, அவன் மனமுடைந்து நிற்கும் போது, அந்த மாதவிக் கொடியைப் பார்த்து, "நீயும் மாதவியைப் போல இருக்கிறாயே" என்று மனமுருகினானாம்!

சாதாரண மாதவிக்கொடி, தனது நிறத்தால், சாகாவரம் பெற்ற தமிழ் இலக்கியமாகி, உலக இலக்கியமாக உருவடைந்தது!

மாதவிக் கொடியின் இலையைப் போல்; மக்கள் மன்றத்திலே பச்சை நிறமாகிவிட்டார் பேரறிஞர் அண்ணா.

மக்கள் மனதை, நல்ல நிறமாக்கிட, வளத்தை ஊட்டுகிறார் - தனது அறிவுத்திறனால்,

அந்த மலரின் பசுமையான புறவிதழ்கள் ஐந்தைப் போல, அவரது புறத் தோற்றப் பண்புகள் காணப்படுகின்றன.

அதன் அகவிதழ்கள் ஐந்தை ஒப்ப அவரது ஐம்புலன்கள் பணியாற்றுகின்றன.

அவற்றுள் ஒரிதழ் மட்டும் மஞ்சள் நிறம்! இயற்கையின் படைப்பே படைப்பு அழகைப் படைக்க இயற்கை கலைஞனுக்கு ஈடு எவருளர்? தம்பி.

அதனாலன்றோ அம்மலர் கண்கவர் வனப்பு பெறுகிறது! மஞ்சள் நிற இதழைப் போல. அவர் சமுதாயச் சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார்!

அதனால்; அவர் பசுமையான சீர்திருத்தவாதியாக விளங்குகிறார்:

மாதவிப் பூ வெண்மை நிறமானதன்றோ! அந்தத் தமிழ் மகனின் உள்ளமும் மாதவிப் பூவைப்போன்றதே, என்பதனை மக்களறிந்து கொண்டனர்!

மனம் திறந்த மக்கள், மடைதிறந்த வெள்ளம் போல அவரைப் பின்பற்றி ஓடி வந்தனர்.

அப் பூவின் பத்து கேசரங்களும் பொன்னிறத் தாதை உகுத்து நிற்குமாம்!

அறிஞருள் அறிஞராக விளங்கும் அண்ணாவும் ; பொன் னிறத் தாதையொத்த தனது அறிவினை நமக்கு வழங்கினார்!

அம் மலரின் வண்ண தொசி எண் (chromo some Number) க்ரோமோசம் நம்பர் இன்றுவரை கண்டு கூறப்படவில்லை.

அது போலவே, அவரின் இதயபூர்வமான - உண்மையான - மக்கட்தொண்டு - இன்னும் சிலரால் உணர்ந்து உலகுக்கு உரைக்கப்படவில்லை!

காலம் அந்தச் சிலரது விழிகளைக் கட்டளையிட்டுத் திறந்தே தீரும் என்பது உறுதி!

தமிழகத்திலே தோன்றிய மாதவிக் கொடி, ஆங்கிலமறிந்த உலக ஆய்வாளர்களால்; ஆராயப்படுகிறது! போற்றப்படுகிறது!

அதுபோலவே, உலகம் ஆராய்ந்து போற்றும் நிலையை அவர் ஒர் நாள் பெறுவார்!

சாதாரண ஒரு மாதவிக் கொடி; இலக்கியத்தில் இடம் பெற்றுவிட்டதைப் போல; அவரும் உலக இலக்கியமாகத்தான் திகழப் போகிறார்!

பச்சை நிறம், வளத்தைக் காட்டும் வண்ணம்! அது, அவரது பண்பாட்டு வளத்தை அவனிக்கு அறிவித்தே தீரும்:

ஞாலம் அவர் புகழ் பின்னே ஓடிவரும் காலம், மிகத் தொலைவில் இல்லை தம்பி!

பச்சையை நீ மாயை என்றால்; பார் நம்புமா? பேதை மானிடனே! அது மட்டுமா?

வெற்றிலை போட்டறியாது! ஆனால், வாய் சிவந்திருக்கும்! கொவ்வைக் கனியருந்தும், கொஞ்சு மொழிகள் பேசிடும்! அந்த அஞ்சுகத்தின் நிறமும் கூடப் பச்சையன்றோ!

கண்ணின் கருமணிகள் குளிர - காட்சி பல வழங்கி; மண்ணில் தெரிகின்ற முதல் நிறமும் பச்சைதானே...!

பச்சைத் தழைகட்டி, பந்தலை உருவாக்கி, இருமனமும் ஒருமனமாய் இணைந்து பிணைகின்ற இன்பத் திருமணத்தில் காட்சி நல்குவதும் கவின் பச்சை!

இந்த இன்ப நிறத்தைப் போய் எத்திற மனங்கொண்டு மாயை என்கிறாய்?

தேர்ந்த அறிவாளன், தென்னவர் மன்னன் பார்க்கும் கற்பனை!

அவர் வழங்கிய அறிவாழமிக்கக் கருத்து மணம்; வாயுதிர்த்த வளமான பேச்சுக் கலை;

இவையனைத்தும் கொடுக்கும் அறிவொளியில் தமிழ் மக்கள் குடியிருக்கின்றனர்.

அந்த எண்ணச் சுடரனைத்தும் அறிவின் தொகுப்புகள்;

காலத்தை மீறி நிற்கும் சாகாவரம் பெற்றவை!

ஞாலத்தைத் தன் பக்கம் இழுக்கும் வளமான தத்துவங்கள்!

பச்சை என்றாலே வளத்தைச் சுட்டும் நிறமன்றோ!

சமுதாயம் சரிநிகர் சமமாக ஒழுகும் சரியானப் பாதைகளன்றோ அவை:

முற்றும் நீ அறிவாயே! பின் ஏன்; முனையொடிந்தக் கருத்தாலே, பச்சையை மாயை என்றாய்!

வெற்றுக்கு நீயுரைத்தாய்; விளக்கம் நான் தந்துள்ளேன்.

விளங்கி நீ செல்வாய் என்று, முற்றிற்று, கூறிற்று, பச்சை,

மஞ்சள் சாமந்தி:

அஞ்சனந்தோய் விழியுடையாள்; மஞ்சள் நீராடி, அந்தி வேளையிலே

கொஞ்சும் தென்றலோடு; குழையும் கடையினை திருத்தி அமைத்தவாறு;

தளிர்நடை போடுதலொப்ப, செடியின் முடிமீது சிரித்து நின்ற மஞ்சள் சாமந்தி, கேலிச் சிரிப்பு சிரித்தது!

சிரிப்பொலி கேட்டுச் சிலிர்த்து நெருங்கினேன்!

மஞ்சள் சாமந்தியின் கவின்மிகு வண்ணத்தைக் கண்டேன்!

எனக்கு முன்னே எண்ணற்ற மலர்கள் விரவிய அறிவுரை மணங்களை நுகர்ந்தனையோ! என்றது!தேவைத் திணிப்பாலே ஏங்கி நின்று, அவா பூர்த்தியாக முடியாமல்; அவதிப்படும் மானிடனே!

தேங்கி நிற்கும்போது தெளிவற்றோர் கூறும் வாசகங்களைக் கூறிவிட்டாய் நீ!

வாழையடி வாழையாக வந்து போகும் கோழை மனம் உனக்கும்!

அறிவின்மை ஏழைக்கு அதிகமன்றோ!

தேவை முறியும் போது தெளிந்த அறிவுடையோரும்; ஆவலுக்கு அருள் தாரா அனைத்தையும் மாயை என்பர்!

அஃதைப் பின்பற்றி நீயும் அலறுகிறாய்!

மஞ்சள்; மங்கலத்தின் சின்னம்!

அவ் வண்ணமின்றிப் பொங்கும் இன்பத்தைத் தொடங்கியவர் எவருமில்லை!

முகடு மலையிடுக்கில் போய் மறையும் பகலவனின் ராஜ உடையின் பெயர் அந்தி!

அந்த நிறத்தைக் கூர்ந்து அறிந்தனையோ அஃதும் மஞ்சளே! நாகரிக உலகில், பிணியிருக்கும் இடத்தை நல்லோர்க்குக் காட்டுதற்கு, மருத்துவத் துறையினர் மஞ்சள் கொடி கட்டி, மருளைக் காட்டிடுவர்.

அஃதுமட்டுமா? முக்கடல் உடை உடுத்தி, முப்பால் குறளேந்தி,

திக்கெலாம் புகழ் மணம் பரப்பித் திருக்கோலம் பூண்டிருப்பது தென்னகத்து மண்!

அம் மண்ணின் தானைத் தலைவனாக - தனிப்பெரும் மன்னனாக - சூழ வலம் வந்த சுந்தர அறிவாளன்!

பைந்தமிழறிஞர்! பார்புகழும் பசுந்தமிழ் முதற்செல்வர்!

நைந்த மக்கட்கு நிம்மதி வழங்கியவர்!

கைதேர்ந்த அரசியல் பெரும் ஞானி!

அறிஞர் குல திலகம் அண்ணாவின் சமுதாயச் சீர்திருத்தம் துவஙுகு முன்பு காட்டிய நிறமும் - மஞ்சள் தானே!

எற்றுக்கு அவ்வண்ணமே தேர்ந்தெடுத்தார்?

பற்றியிருக்கும் இந்நாட்டு மூடநம்பிக்கைப் பிணியை சுட்டுதற்கு?

'மஞ்சள் பெட்டிக்கே மகத்துவம் மணக்குது மகாத்மா வாக்கியம்' என்று காங்கிரசார் தேர்தல் ஆலாபனை பாடியது, ஏன்?

அடிமை நோயைக் காட்டிட - அதனை அகற்றிட!

தேர்தல் வாயிலாக மக்களது வாக்குகளப் பெற்றிட! சுதந்திர தீயத்தை ஏற்றிடவன்றோ!

பிணியுள்ள இடத்திலேதான் மருத்துவப் பேரறிஞர்கள் தத்தமது பணியை தொடங்குவது வழக்கம்!

அண்ணனுடைய மஞ்சள் கொடியும் அது போன்றதன்றோ!

பண்புள்ளோர்; அன்னோனின் சேவையைத் தொழுது வனங்கினர்!

அஃதற்றோர்; நரம்பிலா நாவிற்கு வந்தவாறு பேசி ஆர்ப்பரித்தனர்.

நோயைத் தீர்ப்பது மட்டுமே கடனன்று அவருக்கு - உணர்ந்தார். இஃதை.

வாய்மைப் பொன்மொழியாலே; வடித்த மூலிகையின் சாரம்; பிழிந்தெடுத்தார்.

'சாகக் கிடக்கும் சமுதாயமே - சற்றே பிழைத்தெழு!’

என்று மருத்துவம் புரிந்தார்.

அன்னவரின் எச்சரிக்கை பதாகையென ஏற்றிய கொடியின் நிறம்; மஞ்சள் தம்பி - மஞ்சள்!”

இன்னல் இடர்பட்டு, இருந்த பொருள் இழந்தனர் மக்கள்.

கன்னல் வாழ்க்கையிலே கசப்பைத் தான் கண்டனர்.

மின்னல் வாழ்வென உன்னைப் போல, மக்களும் நினைத்து எண்ணிக் கிடந்தனர்! நைந்தனர் வாழ வழியின்றி!

அந் நிலை அகற்றிட மங்கல தொணி எழுப்பி; மஞ்சள் கொடி காட்டினார் ஒருவர்.

'பொங்கிடும் இன்பம் எங்கும் தங்குக' என்று சங்கே முழங்கு என்று சாற்றினார்.

விழி பெற்றனர் மக்கள்; அவர் தம் அறிவுரைகளைக் கேட்டு!

வழி பற்றி நடந்தனர். 'நல்ல சமயமடா இதை நழுவ விடுவாயோ!' என்று!

குழி விழுந்த கன்னத்தில் சிரிப்புக் குமிழுடைத்துச் சிரிக்கத் தொடங்கினர் மக்கள்.

வாழ்க்கை சிரித்தது! மனிதன் சிரித்தான்! தமிழகம் சிரித்தது! தலை நிமிர்ந்தது! தன்மானம் பெற்றது தமிழ் நாடெனப் பெயர் பெற்றது:

இத்துணைக்கும் காரணமாய் இருக்கும் மஞ்சளினை மாயையெனப் புகன்றாயே சிறுவனே!

மறுமுறையும் இவ்வாறு ஆய்ந்துரைக்காதே; என்று மங்கலமாய் கூறியது மஞ்சள் சாமந்தி மலர் !

சாமந்தி மலர் இவ்வாறு சாற்றிய உரை கேட்டேன். தெளிவடைந்த நான்; சிறிது தூரத்திற்கப்பால் சென்றேன்.

மற்றொரு மலர், 'விடுவேனோ மாயை மனிதனே உன்னை' - என்றது.

மீண்டும் மாயைப் பற்றிய மயக்கமா என்று மிரண்டேன்.

'எனது பெயர் என்ன தெரியுமா மனிதா?’ என்றது .

என்ன உன் பெயரென்று வெட்கம் தவழ்ந்த முகத்துடன் கேட்டேன்.

'வேங்கைப் பூ' என்றது.

வேங்கைப் பூவா? என்றேன் திகைப்போடு.

ஆம், வேங்கைப் பூதான் என்று கூறியது.

வேங்கைப் பூ!


என்ன தம்பி வேங்கைப் பூ என்றதும் வெலவெலத்துப் போய் விட்டாயா?

வேங்கை என்ற வார்த்தை என்னோடு சேர்ந்திருப்பதால், நான் - புலி போலப் பாய்வேனோ? என்று அஞ்சுகிறாயா?

என் பெயரைக் கேட்டதும்; பின் ஏன், உன் உடலெலாம் உதறுகிறது?

அட மாயை மனிதா! என் பெயரைக் கண்டே புத்தி பேதலித்து விட்டாயே.

என் பெயர் வேங்கைப் பூ'தான். எனது வரலாறு தெரியுமா உனக்கு?

கூறுகிறேன் கேள் என்றது. வேங்கை பூ. என்னடா ஒவ்வொரு பூவும் நமது 'அறிவைச் சோதிக்கின்றனவே என்று வியந்தான் மாயையை நம்பிய மனிதன் .

உனது வரலாறு என்ன? அதை உரை, கேட்கிறேன் என்றான் அவன்.

வேங்கைப் பூ தனது மேதா விலாசத்தைப் பூரிப்போடு புகன்றது.

தம்பி, தமிழ் இலக்கியங்கள் நீ படித்திருக்கிறாயா? அவற்றை நீ நாடியிருந்தால்; நான் உனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பேனே!

கன்னித் தமிழ் இலக்கியப் புலவர்கள், வேங்கை மரத்தைப் பற்றிப் பெருமையாகப் பாடியிருக்கின்றனர்.

நான் எங்கே விளைகிறேன் தெரியுமா? அது ஒரு பெரிய வரலாற்றுக்குரிய இடமாகும்.

மலைக் குன்றுகளின் சரிவுகளிலேயுள்ள கற்களைக் காட்டாறுகள் கூழாங்கற்களாய் கரைத்து வருவதைக் கண்டிருப்பாயே.

அந்த ஆறுகள்; அடவிகளின் இடுக்கிலே வளைந்து வளைந்து; பாம்புகளைப் போல சீறிப் பாய்ந்து வருவன:

பலவகை மர இனங்களை, அவ்வாறுகள் சந்திக்கும்! அவற்றின் மணங்களோடு அவை ஒடி வரும்.

சந்தன மரத்தின் மணவாழ்வைக் கூட, தன் தண்தோளிலே பல்லக்கெனச் சுமந்துவரும்.

அந்த ஆறுகளுக்கு முகத்துவாரமெனும் சாவுகள் உண்டு. அதையும் துச்சமென மதித்து; மரணத்தை மஞ்சமாக ஏற்று; காற்றைவிடக் கடுகி ஓடி வரும்.

அவை ஏன் அவ்வாறு ஓங்காரமிட்டும்; ஒசையற்றும்; ஒடி ஆடி - பாடியும் - அன்னமென வருகின்றன.

கதிர்களின் ஆணவ ஊடுருவல்கட்கு அடிமையாகிவிட்ட பூமியைக் குளுமைப் படுத்தவே வருகின்றன.

வெப்பமெனும் பகையை விரட்டுகிறேன் பார் என்று,

வானமெனும் அடலேறு மழையாக முழக்கமிடுகிறான்.

அந்த வான் முழக்கத்தை ஏற்று, மலைச்சரிவுகளிலே கூடுகின்றன.

கானகம் என்ற பகுதிகளிலே அவை பரந்த விரிந்து நதியாக உருப் பெறுகின்றன.

ஆணவக் குரல் கொடுத்து, பூமியில் அண்டும் கதிர்ப் பகைவனுக்குள் எரியும் உயிர் விளக்கை, ஊதியணைப்பவை இந்த ஆறுகள்தாம்.

பொங்கும் வளத்தை அங்கே வலிவுபடுத்திட, அவைப் பொலிவோடு பாய்கின்றன.

அந்த அடவியிலே, மலைச்சரிவுகளிலேதான்; வேங்கை மரங்கள். விளைகின்றன தம்பி; என்றது வேங்கை பூ.

அடேயப்பா, மரத்தின் கதையே இவ்வளவு சிறப்புப் பெற்றதா? மயக்கமாக இருக்கிறது. பூவே, உன் வரலாறு.

அடடே! இதற்குள்ளாகவா மயக்கமடித்து விழப் பார்க்கிறாய்? இன்னும் கேள்.

அந்தக் காடுகளிலே, மலைச் சரிவுகளிலே எத்தனையோ எழிலான மர வகைகள் விளைகின்றன.

அவைகட்கெல்லாம் என் போன்ற அருமையோ பெருமையோ ஏற்பட்டு விடுமா?

வெல்ல நினைத்து வேடிக்கைக் காட்டுகின்ற கழுகுக் கூட்டத்தின் கண்டத்தைக் கத்திரித்தால் எப்படியிருக்கும்?

இதுபோல; எண்ணற்ற எழில் மரங்களிடையே நான்தான் மிகமிக உயரமாக - மிகமிகப் பருமனாகக் காட்சியளிப்பேன்.

எல்லா மரங்களையும் வென்று, வெற்றிக்கொடியை நாட்டி; விண்மூட்ட விளங்கி நிற்பேன்.

எந்த மரமும் எனக்கு நிகராக இருக்க முடியாது - ஏன்? என் பெயர் வேங்கை மரமல்லவா? வேங்கை என்றால் - சாமான்யமான மிருகமா?

வீரத்தின் விளக்கமல்லவா நான்? - அதனால்தான் தோற்றத்திலேயே மற்ற மரங்களை வீழ்த்துகிறேன்.

என்னருகே உள்ள மரங்களெல்லாம், கண்டம் கத்தரிக்கப்பட்ட கழுகுகளைப் போலக் காட்சியளிக்கும்.

எனக்கு மட்டுமேன் அந்தச் சிறப்பு? பெருமை! வீரம்! தோற்றம்! பண்பு!

வீரத்தின் விளைநிலம் தமிழகம்! விவேகத்தின் பிறப்பிடம்! அமைதிக்கு வித்தகம்!

உலகச் சிறப்புக்கு உள்ள காரணங்கள் அனைத்தும் - உருவான இடமே தமிழ் நிலம்தானே!

அந்த நிலத்திலே தோன்றிய மரம் நானல்லவா? எனக்குரிய பெயரும் வேங்கைதானே!

எதிரியின் எலும்பைப் பொடியாக்கி, மாவாக்கி, வீரத் தாய் நிலத்திற்கு வீசும் தமிழர்களைப் போல - வியந்து நிற்கிறேன்.

மானம் என்ற பண்பைப் பெற்ற தமிழகத்தில்தானே, மானத்தால் பிறந்து மானத்தால் வளர்ந்து மானத்தால் சாகிறார்கள் தமிழர்கள்.

மோன நிலையிலே, முகிழ்த்த தத்துவத்தால் முளைத்த இனம் - தமிழ் இனம்.

ஞான ஒளியால்; ஞாலத்தில் உருவான வீர இனம்! தொல்புகழ் பூண்ட மரபு - தமிழர் திருக்குலம்.

அந்த மண்ணிலே பிறந்த மரமல்லவா நான்? எனக்கும் எங்கே போகும் அவை?

எனக்குப் பெயர் வேங்கையாற்றே. நானா கோழை போல் குனிந்து கிடப்பேன்?

அந்தத் தண்ணிரைப் பருகித் தானே என் உயிரணுக்கள் மூச்சு விடுகின்றன. எங்கே ஏகும் அந்த வீரப் பெரு மூச்சுக்கள்?

மறத்திற்கு இலக்கணமான புலியின் பெயரை, ஒரு மரத்திற்குச் சூட்டி, மறத்தின் மாண்பை, மேதினிக்குப் பரப்பிய நாடு; தமிழ்நாடு தானே, தம்பி!

அத்தகைய மரத்திற்கு ஒர் ஆதி வரலாறு பெருமையோடு இருப்பதுதானே நியதி.

தமிழ்ப் புலவர்களும் - தமிழ் மக்களும்; காரணமில்லாமல் அதையும் புகழ்ந்து பாட - பேசமாட்டார்கள் அல்லவா? என்று கேட்டது வேங்கைப் பூ

பூவே, உனது பூர்வாங்கத்தைப் பூர்த்தி செய்து விட்டாயா? என்றான் - மாயையை நம்பிக் கொண்டிருந்தவன்.

தம்பி; தம்பி! நான் எங்கே கூறினேன்? என் வரலாற்றில் ஒரு பகுதி இது. மேலும் கேள் என்று பேசிற்று பூ!

வேங்கை மரத்தை வெள்ளையர்கள் டிரோகார்பஸ் மார்சூப்லுயம் (Pterocarpus Marsuplum) என்றழைக்கின்றனர். தமிழ் மக்கள்; எனது வளர்ச்சிக்கு ஏற்ப; பல பெயரிட்டு அழைக்கின்றனர்.

தமிழிலே சொற்பஞ்சமில்லை என்பதைத்தானே இது தரணிக்குக் காட்டுகிறது என்று நினைக்கிறாயா? அது உண்மைதான்.

'கருங்கால் வேங்கை , பாராரை வேங்கை, நெடுந்தாள் வேங்கை'என்ற பல பெயர்களுண்டு.

அந்த வேங்கை மரத்திலே பூக்கும் எனக்குத்தான் வேங்கைப் பூ' என்ற பெயர்.

நான் மஞ்சள் வண்ணமாக இருப்பேன். கொத்துக் கொத்தாக மலர்வேன்.

அழகிலே சிறந்த பூ வேங்கைப் பூ. காணக் காணக் கவர்ச்சி மிக்கப் பக.

வேங்கைப் பூவின் தாது; பொன் பொடியன்ன மின்னும்.

பூ, பூக்கத் தொடங்கும்போது, பெரும்பாலான அரும்புகள் ஒருங்கே மலரும்.

'அரும் பல மலர்ந்த கருங்கால் வேங்கை’ என்று; அதன் மலர்ச்சியை ஒரு புலவர் பாடினார்.

வேங்கைப் பூ மஞ்சள் நிறம்தான் என்று நான் கூறினால் - நீ நம்புவாயா?

அதற்கும் சில இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன தம்பி.

"பொன்னினர் வேங்கை தாய ஓங்குமலை அடுக்கத்து’’ என்று நற்றினை'யில் வரும் 28ம் பாடல் நவில்கிறது.

"பொன்னினர் வேங்கைப் பூஞ்சிலைச் செலி இயர்" என்று, அதே இலக்கியத்தின் 151ம் பாடலில் காணப்படுகிறது.

"பெருவரை வேங்கைப் பொன்மருள் நறுவி" என்று 'ஐங்குறுநூறு அறைகிறது.

"கருங்கால் வேங்கை மலரின் நாளும் பொன்னென விசுமந்து" என்று புறநானூறு புகல்கிறது.

பொன்நிறமான வேங்கைப்பூ நறுமணமிக்கது. பெண்கள் அதனைப் பெரிதும் விரும்பிக் கொய்யச் செல்வர்.

பறிக்கச் சென்ற பூவையர் அப்போது 'புலி புலி' என்று பூசல் புரிவர்!

வேங்கையெனும் சொல் 'புலி’ என்ற மிருகத்தையும் குறிக்குமல்லவா?

அதனாலே, அம்மங்கையர் அவ்வாறு பூசல் செய்வர். ஆனால், அதற்கும் காரணமுண்டு.

பூ மலர்ந்த வேங்கை மரம் புலியை ஒத்திருக்கும். அதனால் வேங்கை மரம் பூவினைப் 'புலிப்பூ என்பர் பாவையர்.

வேங்கை மரத்தில் புலி போன்ற வண்ணப் புள்ளிகளோடு பூ மலர்கின்றன.

'புலிப்பொறி வேங்கைப் பொன்னினர் கொய்து' 'ஐங்குறுநூறு' என்று இலக்கியம் கூறுகிறது.

'புலி உரி இரி அதற்கடுப்பக் கலி சிறந்த நாட்பூ வேங்கை நாள் மலர் உதிர்' என்று அகநானூறு செய்யுள் அறிவிக்கிறது.

‘கருங்கால் வேங்கை வீயுகு துறுகள், இரும்புலிக் குருளையிற்றோன்றும்' குறுந்தொகையில் காணப்படுகிறது.

வேங்கைப் பூ, புலியை ஒத்திருப்பதனையறிந்த வேல்விழியர், பூ பறிக்கும்போது, 'புலிபுலி'யென ஆரவாரிப்பர்.

இதனைத் தமிழ் இலக்கியங்கள் அழகாக இயம்புகின்றன.

“மன்ற வேங்கை மலர்தம் நோக்கி, ஏறாதிட்ட ஏமப்பூசல்” என்று 'குறுந்தொகை' நூலும்.

"தலைநாள் பூத்த பொன்னினர் வேங்கை, மலைமார் இடுஉம் ஏமப்பூசல்” என்று 'மலைபடுகடாம்' எனும் நூலும் கூறுகிறதே.

பாவையர் மட்டுமே வேங்கைப் பூவைக் கண்டு ஆரவாரமிடவில்லை. வேழமே அஞ்சி மருண்டுள்ளது.

வேழம் ஒன்று, ஒரு நாள் ஒரு வரிப்புலியோடு பொருதிற்றாம்.

அந்தப் புலியின் உகிரால் விளைந்த வடுக்களை எண்ணி, கரி வீர வருத்தம் கொண்டதாம்.

அதே அத்தி, பிறகு அதே நினைவுடன் துயில் கொண்டதாம்.

அப்போது கனவு ஒன்று கண்டது வாரணம். புலியின் தோற்றம் அக் கனவிலே வந்ததாம்.

உடனே வேழம் துயிலை நீக்கியது.அதே சினத்தோடு பொங்கி எழுந்தது.

கனவிலே வந்த புலியைக் காணவில்லை. எதிரே புதிதாய் பூத்து மலர்ந்த வேங்கை மரத்தை அந்த வேழம் கண்டதாம்.

அந்த மதத்தை வரிப் புலியென மயங்கி; அதன் ள்ழில் தோற்றத்தைக் “கை” யால் முறுக்கியது.

எழிலை வீழ்த்தியது. கழலால் துவைத்தது.

அம் மரம் போல் பிறிதோர் மரம் காணுங்கால்; களிறு நல்நோக்கு பாராது வெறுத்தே விலகிற்றாம்.

'கலித்தொகை'யிலே வரும் "கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு” என்ற 49-வது பாடல் இந்தக் கருத்தைக் கூறுகிறது.

களிறே வேங்கைப் பூ மலர்ச்சியைக் கண்டு புலியென நம்பிற்றென்றால், காரிகையர் ஏன் ஏமப் பூசலிடார் என்றது வேங்கைப் பூ.

முடிந்ததா பூவே, உன் முழு வரலாறு, என்று மாயை மனிதன் கேட்டான்.

இல்லை தம்பி, பூவின் சில பாகங்களைக் கூறினேன். பிற பகுதிகளையும் கூறுகிறேன் கேள் - என்றது. பூ

மாயை நிரம்பிய மனிதன், வேங்கைப் பூ புகன்ற, வரலாற்றைக் கேட்டு மயக்கமடைந்தான்.

என்னே! மானிடர் கூட்டத்தின் பிரதிநிதியே. பூ உரைப்பது புனைந்துரையோ என்று மயங்குகிறாயா?

தெளிவில்லாத நெஞ்சமே! நீ தெளிவடையத்தான் தெள்ளு தமிழிலக்கிய வரலாற்றின் ஆதாரங்களைக் கூறுகின்றேன்.

பிறகு, ஏன், உன் பிஞ்சு நெஞ்சு பேதலிக்கிறது? பிறவும் சொல்கிறேன் கேள், என்று மேலும் பேச ஆரம்பித்தது.

நான் வேங்கை மரத்தில் மலர்ந்ததை அறிந்த சுரும்பினங்கள், வேங்கை மலர்ந்ததாக எண்ணிப் புலியைச் சூழ்ந்து, அதன் முகத்தையும் உடலையும், சுற்றிச் சுற்றி வலம்வர ஆரம்பித்தன. "கலித்தொகை என்ற இலக்கியத்தின் 46-வது பாடலைப் படித்துப் பார். உண்மையை உணருவாய்!

அது மட்டுமா? சில புலவர்கள், வேங்கைப் பூவாகிய என்னை - நெருப்புத் துண்டிற்கும் உவமையாக்கிக் கூறியுள்ளனர்.

'எரிமருள் வேங்கை இருந்த தோகை' என்று 'ஐங்குறு நூறு' அதை விளக்கி நிற்கின்றன.

‘எருவை நந்தொடு எரிஇணர் வேங்கை' என்ற 'பரிபாடலு'ம் கூறுகின்றது.

'நான் வேங்கை மரத்திலிருந்து உதிரும்போது என் காட்சி எப்படி இருக்குமென்று நீ பார்த்திருக்கிறாயா?'

எவ்வாறு நீ நோக்கியிருப்பாய் என் எழிற் காட்சிதனை? 'அகநானூற்றி'ல் வரும் 202ம் பாடலைப் படி உனக்கு அவகாசமிருந்தால்!

கொல்லன் - இரும்பைப் பழுக்கக் காய்ச்சித் தனது உலைக் களத்தில் அடிக்கிறான்.

இரும்புத் துகள்கள் ஒளிர்ந்து, சிதறிப் பறந்து, அவ்வமயம் விழுகின்றன.

இவ் விரும்புத் துகள்கள் உதிர்வது, வேங்கைப் பூ உதிர்வதைப் போல, இருக்கிறதாம்.

வண்ணவுவமையும் தொழிலுமையும் எப்படி கூறப்பட்டிருக்கிறது பார்த்தாயா? "கொல்லன், எரி பொன் பிதிரின் சிறுபல, தாஅய்,

வேங்கை விபுகும் ஒங்கு மலைக்காட்சி" என்று வரும் 'நற்றிணை'ப் பாடல் கூறுகிறது.

காந்தட் பூவைக் காட்டிலும் என்னிடத்தில் இருபது மகரந்தப் பைகள் (Arters) உண்டு.

எனவே, என்னிடத்தில் (Poller) தாது அதிகம் இருக்கும். இப் பூந்தாது பொன் போன்ற நிறமுடையது.

இந்தத் தாதைக் கண்டதும்; வண்டினம் கூட்டம் கூட்டமாக என்னைச் சூழும்; வட்டமிடும். ஏன்? - உண்ண - உவகையுற! சில நேரங்களில் வண்டுகள் என் மீது தங்களுடைய வாயை வைத்ததும். நான் அகமலர மலர்வதுமுண்டு.

வேங்கைப் பூ அதிகம் மலர்ந்த மரத்தில் மஞ்ஞைகள் வந்து கூடி மகிழும். ஏன் தெரியும்?

மயில்கள், வேங்கை மரத்தில் வந்தமர்ந்து, தங்களது தோகைகளை விரித்து ஆடிக் கொண்டிருக்குமாம்.

அவ் வமயம் எனது பூந் தாதுக்கள் - அம்மஞ்ஞைகளின் தோகைகளில் சொட்டும்.

அதனால் மயில்களது அழகுத் தோகைகள், அழகுக்கு அழகு பெறும் காட்சியாக இருக்குமாம்.

'பொன்னின் அன்ன பூஞ்சினை தழிஇ தமழ்தாது ஆடிய கவின் பெறு தோகை' என்று நற்றிணை 598 வது பாடல் கூறகிறது.

இத்துணைச் சிறப்பு பெற்ற வேங்கை மரம், தமிழகத்தில் மட்டுமே தனிச் சிறப்புடன் வளர்கிறது.

மாயையை நம்பும் மனிதா இஃதுதான் எனது வரலாறு - போதுமா விளக்கம்?

வேங்கைப் பூவே, உனது வரலாறு வேடிக்கை வேடிக்கை: என்றான் - மாயை மனிதன்! நீ கூறியதைக் கேட்டேன். ஆனால், அஃது ஒரு கதையாகவே இருக்கிறது!

ஆனால், நேரில் உன்னைப் பார்க்க முடியவில்லையே என்றான்!

கானகமும்; மலையையும் நோக்கி ஓடிவந்து என்னை நீ காண முடியாது தான்!

அந்தோ பரிதாபம்! பரிதாபம்! ஆனால், உன் அருகிலேயே ஒர் அறிஞர் இருந்தார்!

நீ இருக்கும் இடத்திலேயே அவரும் உன்னுடன் நீக்கமற வாழ்ந்தார்!

அவரிடத்தே நான் கலந்திருக்கிறேன்! அதையும் கூறட்டுமா உனக்கு!

அப்படியா யார் அவர்? எங்கே கூறு என்று கேட்டான் அவன் பூ, கூற முற்பட்டு பேச ஆரம்பித்தது!

வேங்கை மரத்தின் வீரக் கதையை கேட்டாயல்லவா?

அந்த மரம், வீரம் விளைந்த தமிழ் நிலத்திலே தோன்றிய மரம்!

வேங்கை மரத்தைப் போல நீண்டு வளர்ந்து, விண்முட்டும் வியப்போடு விளங்கும் திராவிடரியக்கத்தை, தென்னவர் கோமான் அறிஞர் அண்ணா வளர்த்துள்ளார்.

வேங்கை வளரும் இடம் கானகமும், மலைச்சரிவுகளும் தானே! ஆனால், அண்ணாவின் தலைமையிலே துவங்கிய இயக்கம்: வீரம் விளைந்த தமிழ் நிலத்திலே தோன்றியது என்பதை மட்டும் மறந்து விடாதே! தம்பி!

அவரது கட்சி ஒன்றுதானே "வேங்கை"யைப் போல வீரம் பொருந்தியப் பாசறையாக விளங்கியது!

அந்தக் கட்சியின் விரத் திருவுருவமாக - தன்னேரிலாத வழிகாட்டியாக - அண்ணா காட்சியளித்தார்....! வேங்கை மரத்திலே காட்சிதரும் பூவைப் போல!

வேங்கை பூ உதிர்ந்து, இதழ்களிழந்து, மடிந்து மண்ணோடு மண்ணாகி விடுமே என்று கருதுகிறாயா?

மனித வாழ்க்கையின் தத்துவமே அது தானே! அதற்கு அண்ணா மட்டும் விதி விலக்காகிட முடியுமா?

அல்லது அமிழ்தம் உண்டு விட்ட அமரர் குலமா அவர்? இல்லையயே! சாதாரண மனித இனம் தானே!"

எனவே, பிறப்பன - இறப்பன உலகத்தின் பழக்க வழக்கங்களிலே, ஒன்றாகவிட்டத் தத்துவம்! அதற்காக கவலைப்படாதே!