அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/எண்ணச் சிதறல்கள்!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


4. எண்ணச் சிதறல்கள்!


சந்தனக் கலவையில் சமைத்த உருவம்!

வைரக் கல்லில் வடித்த விழி!

சிந்தனை வளத்தால் செழித்த முகம்!

தொடுவானுக் கிடையிலே இவ்வித அமைப்புடன் நின்றிருந்தான் ஒருவன்!

பொங்கும் கடலலையின் கரங்கள்; அவன் தாள்களைப் போய் வருடின!

வருடித் திரும்பிய அலைகளது சிரித்த சிரிப்புக்குக் கூற உவமையில்லை!

அந்தியின் திரைக்கு முன்னால் அந்த அழகு வடிவத்தானை, புள்ளினங்கள் வாழ்த்திப் பாடிய வண்ணமிருந்தன!

மரகதப் பச்சை இலைகள் தழைத்திருந்தன!

முப்பழக் கனிகள் கிளைகளில் பழுத்திருந்தன.

சித்திரப் பூந்தோட்டத்து இரத்தின மலர்கள் தேனை வடித்து நின்று சிரித்தன!

அந்த அழகுமிகு அற்புதச் சோலைக்குள் - அவன் பொற் காலமெனப் புகுந்தான்!

அவன் வருகையால் - அகமகிழ்ந்தனள் இயற்கை!

மணக்கோலம் பூண்ட பாவையைப்போலகளுக்கென்று சிரித்தது!

சிரிப்புகள் அனைத்தும் தெறித்தோடி - கடலின் சிப்பிக்குள் முத்தாய் உறங்கின.

அழகு புறப்பட்டு அறிவை வரவேற்றது! பழக நினைத்த ஞானம், அவர் பாதத்திலே விழுந்து பணிந்தது!

அந்த மனிதன், கல்லாமையின் எதிரி! கயமையின் பகைவன் குணக்குன்றில் ஏற்றிய விளக்கு! என்றெண்ணி வணங்கத் தலைப்பட்ட வாரணங்கள் எத்தனை? முகிலின் தோரணங்கள் எத்தனை?

ஒளியால் நிழல் தடுக்க மாட்டாத திங்கள், குடைபிடிக்க ஒடி வந்தான்.

இத்துணைச் சிறப்புக்கும் உருவாகி - தெளிவாகி - பொருளாகி, மருள் நீக்கும் மருந்தாகி - அருளாகி, நிற்கின்றான் அந்த மாமேதை!

பல்லோர் போற்றும் அவனை, அவனி நல்லோனென வாழ்த்துப் பாடிற்று!

உடன் பிறந்த பாசத்தால் உந்தப்பட்டோர் - அவரை அண்ணனென்றனர்!

கல்விப் பசிகொண்ட ஏழைகள், அறிஞர் என்று கழறினர்! கற்பனைக்குப் பொருள் தேடிக் காலமெலாம் காத்திருந்து, சொற்பல கிடைத்தாலும், சொர்ணச் சுரங்கமாய் - கவிதை யாக்கத் தலை குத்திக் கொள்ளும் சீத்தலைகள் - இல்லை யென்றால் கவிஞர்கள் - அவரைக் கவிதைக்கு மூலமென்றனர்!

அத்தகைய அண்ணனை நானென்ன நவின்று! அழைப்பது?

அன்னையின் அணைப்பறியேன். தந்தையின் இரக்கத்தை நான் என்றோ இற்றொழித்தேன்.

நீறொர்ந்த மீனென நிலச் சூட்டால் தவிக்கின்றேன்!

காரொர்ந்த கூழெனப் பார்த்திருந்தேன் - ககனத்தை!

வேரறுந்த பாட்டாக விளங்குகின்ற எனக்கெல்லாம்.

தாயாய் - தந்தையாய் - தனிப்பெரும் தெய்வமாய் - அவர் இருக்கின்றார்:

அவரின் தாயுள்ளம் எனக்காகி, இந்த சேயுள்ளம் விளங்குதற்கு - நாளெலாம் வேண்டுகின்றேன்.

நல்லுறக்க நாட்டினிலும், அவிழும் கனவெலாம், அவரே விளக்கானார்!

அந் நல்லோன் உளம் நினைந்து, நான் இவ்வாறு பாடிக் களிக்கின்றேன்.

மலர்

தாயே!

கலைஞர்களது கற்பனைத் திறனால், யானைத் தந்தத்தில் பொற் சிற்பமானவளே!

உன்னை மூன்றாம் பிறையினிலே நான் காண்கிறேன்.

முழு நிலவில் - உன்னிடத்தில் களங்கம் இருப்பதாக என் உபதேசம் இயம்புகிறது.

எனவே, உவாவில் உன் இளஞ் சிரிப்பைக் காண்கின்றேன்.

அன்னாய், என்னை மலராகப் படைக்கும்போது, எதைக் கொண்டு செய்தாய்?

தோட்டத்திற்குள்ளே, எங்கே நீ என்னை ஒளித்து வைத்திருந்தாய்?

பூமியிலே போட்டுப் புழுதியிலே மூடினாயல்லவா என்னை? எனக்கு அப்போது நீ கொடுத்த ஆகாரம்தான் என்ன?

துறல் ஒரு நாள் துாறிற்று!

நிலத்தின் பிடிப்பிலிருந்து கொஞ்சம் நழுவினேன்!

நான் முளைத்து விட்டேன்! செடியாகி, நீண்ட காலமிருந்தேன்.

வைகறை கிழக்கில் முகிழ்த்தது!

இலைக்கு நடுவில் நான் சிறு துளியாக இருந்தேன்!

வேர் வழி எனக்கு உணவு தந்தாய்!

கார்வழி வளி தந்தாய்!

மொட்டானேன் நான் பட்டப் பகல் பறந்தது:

தட்ட நடு நிசியில் நீ வந்தாய்!

தொட்டாய்! தொட்ட இடத்தில் மணம் தந்தாய்!

கட்டுக் குலைந்தன இதழ்ச் சுருக்கம்!

பட்டுத் தெரித்தது சிரிப்பு: சிரித்துக் கொண்டே இருந்தேன்!

தென்றலாய் நீ என்னை முத்தமிட்டாய்!

சூறையால் பிறகு சுருண்டு விழுந்தேன்!

விழுந்த இடம் எது தெரியுமா? உன் மடிதானே மாதா!


இதிலிருந்து, களங்கமற்ற உள்ளங்கள் - உன் மடியில்தான் விழுந்து உறங்க முடிகிறதென்று, அறிய முடிகிறதல்லவா அம்மா?


வானவில்

தேனின் இனியவளே!

வானில் ஏன் என்னை வானவில்லாய் வரைந்தாய்?

வண்ணங்களை இந்த ஏழை வாங்கியது எங்கே?

எண்ணத்தின் விளைவா அவை! உன் எழுத்தின் திறமையா?

வளர்ந்த வானத்தில் கோட வைத்தாயே!

வாடிய பயிருக்கும் வாடுபவள் நீ, என்றார் வள்ளலார்!

சிரித்த வலியால் நான் வாடி வருந்தினேனம்மா!

முகிழ்த்த என் அழகை, நிலமிருந்த சிறார்க் குழு, கலையாதே வில்லே என்று கூறி - கையொலித்துச் சிரித்தது.

விலையில்லா அந்த விழாவிலே நீ கலந்து கொண்டாய்!

இடும்பையில் நானோ வானத்தில்! இன்பத்தில் நீயோ ஞாலத்தில்!

தாயே! உன் கைத்திறன் எனக்குப் புரிகிறது!

சீந்துவாரற்றுக் கிடந்த நீர்த்துளிகளை வான வில்லாய் விழாக்கோலம் காட்ட முடியும் என்ற தத்துவத்தை, என் வாயிலாக அறிவிக்கின்றாயா?

ஆம்பல்

பெற்றவளே!

நீரற்ற குளத்தில் ஆம்பலாக ஆக்கினாய் - என்னை:

நீண்ட நாள் வேர் செத்துக் கிடந்தேன்!

விண்கண் திறவாதோ! எழினி உடைந்து பொழியாதோ

என்றெலாம் ஏங்கியிருந்தேன்!

பெயல் துளியோடு இறங்கினாய்!

பேரின்பப் பூரிப்பால், அயலே நிற்காமல், அருகில் நின்றேன்.

உருகி நின்ற என் வேருக்கு உயிர்ப் பிச்சையளித்தாய்!

கேணி நிரம்பிற்று! நானும் தழைத்தேன்!

அம்மா! இல்லாதார் இருக்கின்ற இடமெலாம், துல்லிய இத்யத்தோடு துவானமாகி, கல்லியெறிந்தாய் இன்னலை!

வாழ வகையற்றோர் வாழ்கின்ற இடமெலாம், ஒய்வின்றி நீயே ஒடுகின்றாய் என்பதை - இதிலிருந்து அறிந்தேன் நான்! இறகு

அன்பின் உருவே!

அழகின் ஆரம்பம் எனக்குத் தெரியாது.

உன்னைப் பார்த்தபோது முடிவு இப்படித்தான் இருக்குமென்று புரிகிறது.

உன்னாலானவைகள் ஆயிரங்கள் இருக்கலாம்! அதிலே நானும் ஒன்று:

என்னையேன் பறவைகளின் சிறகுகளிலே இறகாக்கினாய்?

மயிலின் இறகாக இருந்திருந்தால், புள்ளி நிறக் கொண்டு தென்றலுக்குக் கவரி வீசி, மகிழ்ந்திருப்பேன்!

கொக்கின் இறகாக என்னை ஆக்கி விட்டாயே! தாயே! அந்த கொக்கு ஒருநாள் வானத்தில் பறந்தது.

அது எவ்வாறெலாம் போனதோ, அவ்வாறெலாம் அதனைத் துக்கிக் கொண்டு நான் செல்ல வேண்டும்.

கொக்கு என்னைத் தன் விருப்பத்திற்கேற்ப ஆட்டி வைக்க எண்ணுகிறது!

அதற்கு நான் அடிமையா அம்மா?

இறகில்லா விட்டால் - சிறகு இல்லை!

சிறகு இல்லாவிட்டால் - கொக்கே இல்லையே!

ஆயிரம் இறகாலானது சிறகு!

இரண்டு சிறகாலானது கொக்கு!

சிறகைத்தான் கொக்கும் கவனிக்கிறது! இறகைப் பற்றி

இறகு ஒன்று உதிர்ந்தாலும் பரவாயில்லை, என்று - சிறகு நினைக்கிறது!

உதிர்ந்த இறகோ, சகதியில் அழுகிறது!

இறகு இருந்த இடத்தை, இன்னொன்று நிரப்ப முடியாதல்லவா?

இறகுகள் இவ்வாறு உதிர்ந்தால், பிறகு கொக்கு பறக்க முடியுமா அம்மா!

கர்வம் கூடாது தாயே, கொக்குக்கு!

நான் ஆட்டுவதாலேயே இறகாய் இருக்கின்றாய் என்றால், இழிந்த இடத்துக்கு என்னை அனுப்பாதே அம்மா!

ஒரு நாள் கொக்கு உயரே பறந்தது என் பக்கத்திலே இருந்த இறகு ஒன்று உதிர்ந்துவிட்டது:

அளவுக்கு மீறிய உயரத்தில் சென்றது கொக்கு!

உதிர்ந்த இறகை அது உதாசீனம் செய்துவிட்டது!

தருணம் பார்த்துக் கொண்டிருந்த புயல், உதிர்ந்த இறகு இருந்த இடத்திலே - நுழைய ஆரம்பித்து விட்டது.

இறகுகள் மேலும் சில உதிர ஆரம்பித்தன!

பறக்க முடியாமல் கொக்கு வானத்தில் தள்ளாடியது:

நான் அப்போது அந்தக் கொக்கைப் பார்த்து நவின்றேன் -

கொக்கே! உன்னை உயர ஏற்ற இறகுகள்தானே காரணம் - என்றேன்!

ஆமாம், என்று தலையசைத்தது கொக்கு!

அதற்கு நிலை தடுமாறும் போதுதான், என் நினைப்பே வருகிறது!

அதுபோல, ஒர் அமைப்புக்கே தொண்டர்கள்தாம் காரணமென்று என் மூலம் அறிவிக்கின்றாயா அம்மா?

கொக்கின் ஆரம்ப காலத்தில் முளைத்தது இறகு!

ஒர் அமைப்பின் ஆரம்ப காலத்திலிருப்போரும் தொண்டர்கள் தாமே!

கொக்கு, இறகின்றி பறக்காது! முடியாது!

ஒரமைப்பும் தொண்டர்களின்றி விளங்காது! செயல் படமுடியாது!

விசித்திரமானவள் நீ! என்னைக் கொண்டே அரசியலை விளக்குகின்றாயே!

அதனால்தான், நான் இறகுகளை அடக்கமாக கவனமாக, சிறகுக்குள் மடக்கி ஒற்றுமையாக வைத்திருக்கிறேன் என்றது கொக்கு:

தாயே! அது உன் படைப்பல்லவா? அதற்குரிய தகுதி! திறன்! அறிவு! அத்தனையும் உன்னைவிட்டால் வேறு யாருக்கம்மா உண்டு? இருக்கிறது?

பூண்டு

இனியவளே! இன்பத்தின் அகராதியே!

ஒரு முறைதான் நான் உன்னைப் பார்த்தேன்!

எங்கே என்று கேட்கிறாயா; என்னை!

இருபாறைகட்கு இடையே, நான் பூண்டாக முளைத்து இருந்தபோது!

என்னைச் சுற்றிக் கூழாங்கற்கள் இருந்தன!

தினந்தோறும் ஒரு தவளை, நானிருக்கும் பக்கத்தில் வந்து அனலுக்கு ஒண்டும்.

அதை நீயும் தானே பார்த்தாய்!

பாறையிலே தேங்கியிருக்கும் நீரில் ஒரு நாள் - அது முட்டைகளை இட்டது!

தவளையை அதற்குப் பிறகு காணவில்லை!

வெயில் காய்ந்தது! பாறை நீர் வற்றியது!

எப்படியோ முட்டைகள் பாறையில் இடுக்கில் சென்றன! வசந்தமும் - கோடையும் மாறி மாறி வந்தன!

ஒருநாள் பாறை திடீரென்று வெடித்தது!

செத்துவிட்டேனோ, என்று அஞ்சினேன்.

காரணம்; என்மேல் சரிந்து அது வேறுபக்கம் விழுந்தது.

தாயே! இது என்ன சோதனை:

இறுகிய பாறை எப்படி இளகி வெடித்தது?

இப்போதுதான் புரிகிறதம்மா எனக்கு: தவளையைப் போல் நீரிலும் இல்லாமல், நிலத்திலும் இல்லாமல், நிலையற்றவர்கள் - கட்டுக் குலையாத ஒர் அமைப்பில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன்!

மன உறுதி படைத்தவராக மக்கள் இருக்க வேண்டும்! என்ற கருத்தையும் பெற்றேன்!

நிலையற்ற உள்ளம் படைத்தோர், தன்னல முட்டைகளை இடுவரேயானால், அன்பால் இறுகிய பாறை - தேரையின் உயிர்ப்பால் பிளக்கும்!

அப்பெரிய அமைப்பின் கீழ் பூண்டாக இருக்கும் பாமரர், நசுங்கி நலிய ஏற்படும் என்பதை, என் மூலம் உணர்த்துகிறாயா?

தாயே! நீ இருக்கும்போது நாங்கள் ஏன் நலியப் போகிறோம்!

உன் பார்வைதான் எம்மை அடிக்கடி மனிதனாக்கி வர அறிவுரையாக உதவுகிறதே!

எங்களுக்கு நீ எவ்வித குறை நிறைகளையும் வைக்கவில்லையே!

ஒன்றுபட்டு வாழ - உனது பாசமெனும் உணர்ச்சியை வேறு, ஊட்டி விட்டாயே அம்மா தாயே! எனது வாழ்நாளில் என்னை எத்தனை உருவங்களாக அமைத்தாலும்; உனது எண்ணத்தையே நான் எங்கும் எதிரொலிப்பேன்!

பாலைவனத்தில் சிறு மணலாக என்னை ஆக்கு! கோடியில் ஒருவனாகச் செய். உன் கை வண்ணத்தின் சிறு உருவம் நான்!

கடலோரத்தில் கிளிஞ்சலாக என்னை உலவ விடு.

உன் கலைத்திறனின் உருவமாகக் காட்சியளிப்பேன்.

மலையென என்னை ஆக்கு. உன் வான்புகழை ஏந்திக் கொண்டே இருப்பேன்.

நீ இயற்கையில் இளமையோடிருப்பவள்.

நான் உன் அமைதியில் பிறந்தவன்! மோனத்தில் கருவானவன்!

உன்னைப் பிரதிபலிக்க நான் எப்போதும் காத்திருக்கிறேன்.

தனிப்பட்டவனல்ல நான்; உனது ரத்தம் தாயே - ரத்தம்?

என்னைப் புகழ்வோரெல்லாம், உன்னைப் புகழ்கிறார்கள்?

நான் பெறும் வாழ்த்துக்கள் அத்தனையும்; உனக்களிக்கும் வாழ்த்துக்கள்!