உள்ளடக்கத்துக்குச் செல்

அறியப்படாத தமிழகம்/தமிழ்

விக்கிமூலம் இலிருந்து

1. தமிழ்

தமிழ் என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. 'இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்' என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது.தமிழ் என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்ற பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.

முரசு கட்டிலில் உறங்கிய மோசிகீரனார் என்ற புலவர்க்கு வேந்தன் ஒருவன் கவரி வீசிய செய்தியினைப் புறநானூற்றுப் பாடலால் அறிகிறோம். கண் விழித்த புலவர் ‘அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்' என்கிறார். தமிழ் எனும் சொல் இங்கு மொழி, கவிதை என்பனவற்றையும் தாண்டி, பலகலைப் புலமை என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. 'தமிழ் கெழு கூடல்' (புறம்) என்ற விடத்திலும் ‘கலைப்புலமை' என்ற பொருளில் இது ஆளப்பட்டுள்ளது. கம்பன் ‘தமிழ் தழீஇய சாயலவர்' என்னும் இடத்து, தமிழ் என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.

தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் தமிழ் 'பாட்டு' என்னும் பொருளில் ஆளப்படுகிறது. 'ஞான சம்பந்தன் சொன்ன தமிழ் இவை பத்துமே','மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்' என்பன பாட்டுக்களாலான முப்பது எடுத்துக் காட்டுகளாகும். திருப்பாவையை ஆண்டாள் 'தமிழ் மாலை' என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும். சிவநெறி தமிழ்நாட்டில் பிறந்தது எனக் குறிக்க வந்த சேக்கிழார், 'அசைவில் செழும் தமிழ் வழக்கு' எனச் சைவத்தையும், ‘அயல் வழக்கு’ எனச் சமணத்தையும் குறிப்பிடுகிறார். சமணமும் சைவமும் தமிழ் மொழியினைத் தெய்வீக நிலை சார்ந்தனவாகக் கருதின.

ஆயும் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்(டு)
ஏயும் புவனிக்கு இயம்பிய அருந்தமிழ்

என்பது யாப்பருங்கலம். பாணினிக்கு வடமொழியையும், அதற்கிணையான தமிழ் மொழியைக் குறுமுனியான அகத்தி யர்க்கும் சிவபெருமான் அளித்தார் என்றும் சைவ இலக்கியங்கள் கூறும்.‘தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்' என்று கம்பரும் இக்கருத்தினை ஏற்றுப் பேசுகிறார்.

வடமொழி ஆதிக்கமும் தெலுங்கு மொழி ஆதிக்கமும் அரசியல் அறிந்த தமிழர்களால் உணரப்பட்ட இடைக்காலத்தில் தமிழ் தெய்வத்தன்மை உடையதாகவும் தாயாகவும் கருதப்பட்டது. 15ஆம் நூற்றாண்டில் வில்லிபாரதத்திற்கு வரந்தருவார் தந்த பாயிரமும் 17ஆம் நூற்றாண்டில் எழுந்த தமிழ்விடுதூதும் இதை உணர்த்தும். அதே காலத்தில் 'தலைப் பாவலர் தீஞ்சுவைக் கனியும் தண் தேன் நறையும் வடித்தெடுத்த சாரம் கனிந்தூற்றிருந்த பசுந்தமிழ்' முருகக் கடவுளின் திருவாயில் மணக்கிறது என்பர் குமரகுருபரர். 19ஆம் நூற்றாண்டில் மனோன்மணியம் சுந்தரனார் காலந்தொட்டுத் 'தமிழ்' அரசியல், சமூக, பண்பாட்டு அளவில் ஒரு மந்திரச் சொல்லாகவே தொழிற்படுகிறது.

‘தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே' என்று தமிழை முத்தி தரும் பொருளாகவும் தமிழ்விடுதூது குறிப்பிடுவது இங்கு உணரத்தகும். இந்த உணர்வினை உள் வாங்கிக்கொண்டு, சமூக நீதிக்குப் போராடிய பாரதிதாசன் தமிழைத் தாயாகவும் தெய்வமாகவும் போராட்டக் கருவியாகவும் கொண்டது தமிழ்நாடு அறிந்த செய்தி.

நாட்டார் வழக்காறுகளில் தமிழ் எனும் சொல், செம்மையாகப் பேசப்படும் மொழியினை உணர்த்துகிறது. மன்றங்களிலும் வழக்காடும் இடங்களிலும் பேசப்படும் மொழியினை அச்சொல் குறித்திருக்கிறது.

தங்கத் தமிழ் பேச உங்க
தாய் மாமன் வருவாங்க

என்பது தாலாட்டு.

தங்கத் தமிழ் அடியாம்
தாசில்தார் கச்சேரியாம்

என்பது ஒப்பாரிப் பாடல் வரி.

குழாயடி, கிணற்றடி என்பது போலத் தமிழடி என்பது ஊர் மன்றத்தைக் குறிக்கும்.

தமிழ், தமிழன் ஆகிய சொற்களை ஊர்ப் பெயராகவும் மக்கட் பெயராகவும் ஏராளமாக இட்டு வழங்கியிருக்கிறார்கள். நெல்லை மாவட்டம் ஆலங்குளத்துக்கருகில் 'தமிழூர் என்ற ஊரும், நாங்குநேரிக்கு அருகில் ‘தமிழாக்குறிச்சி’ என்ற ஊரும் அமைந்துள்ளன. அருப்புக்கோட்டைக்கருகில் 'தமிழ்ப் பாடி' என்ற ஊரும் உள்ளது. கல்வெட்டுக்களில் 'தமிழன்','தமிழ தரையன்' ஆகிய பெயர்களைப் பல இடங்களில் காண்கிறோம்.

முதலாம் ஆதித்த சோழன் தனது வெற்றிக்குதவிய படைத்தலைவன் ஒருவனுக்குச் 'செம்பியன் தமிழவேள்' என்ற பட்டங்கொடுத்தான். சில அதிகாரிகளும் தங்கள் பெயர்களில் தமிழை இணைத்துக்கொண்டனர். எடுத்துக்காட்டாக 'இருஞ்சோணாட்டு தமிழவேள் தென்னவன் திருச்சாத்தன்', 'அருந்தமிழ் கேசரிச் சோழப் பெரியான்', 'சாணாட்டு வேளான் தமிழப் பெற்றான்' ஆகியனவற்றைக் குறிப்பிடலாம் (கோயிலாங்குளம் சமணக் கோயில் கல்வெட்டு).

தண்ணீர்

தமிழ்நாடு நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்பமண்டலப் பகுதியைச் சேர்ந்ததாகும். எனவே நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுவது வியப்புக்குரியதல்ல. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என இரண்டு பண்புகள் நீருக்கு உண்டு. எனவே ‘தமிழ்’ என்னும் மொழிப் பெயருக்கு விளக்கம் தரவந்தவர்கள், 'இனிமையும், நீர்மையும் தமிழ் எனல் ஆகும்' எனக்குறிப்பிட்டனர். குளிர்ச்சியினை உடையது என்பதனால் நீரைத் ‘தண்ணீர்’ என்றே தமிழர்கள் வழங்கி வருகின்றனர். நீரினால் உடலைத் தூய்மை செய்வதனை குளிர்த்தல் (உடலைக் குளிர்ச்சி செய்தல்) என்றும் குறித்தனர். இது வெப்ப மண்டலத்து மக்களின் நீர் பற்றிய வெளிப்பாடு ஆகும்.

நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை ‘அமிழ்தம்' என்றே வள்ளுவர் குறிப்பிடுவார். நீர்நிலைகளுக்குத் தமிழர்கள் வழங்கிவந்த பெயர்கள் பல. சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம்' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி’ எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ‘ஏந்தல்’ என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.

மலைக்காடுகளில் உள்ள சுனைகளில் 'சூர்மகள்', ‘அரமகள்’ என்னும் அணங்குகள் (மோகினிகள்) வாழ்கின்றனர் என்பது பழைய நம்பிக்கை. அதுபோலவே தெய்வங்களின் இடப் பெயர்ச்சிக்கு நீர் ஓர் ஊடகமாக அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். விழாக்காலங்களில் சாமியாடுபவர்களின் தலையில் ஏற்படும் நீர் கரகத்துக்குள் சாமியின் அருளாற்றல் கலந்திருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

நிலத்துக்கும் நீருக்கும் உள்ள உறவு பிரிக்கமுடியாது. நீரின் சுவை அது பிறக்கும் நிலத்தால் அமையும். நிலத்தால் திரிந்துபோன நீரின் சுவையை மேம்படுத்தத் தமிழர்கள் நெல்லியினை ஒரு மருந்தாகப் பயன்படுத்தினர். கிணற்று நீர் உவராக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களைப் போட்டு வைப்பதும் ஊருணிக் கரைகளிலே நெல்லிமரங்களை நட்டு வைத்து அதற்கு 'நெல்லிக்காய் ஊருணி' என்று பெயரிடுவதுந் தமிழ் மக்களின் வழக்கம். நெல்லிக்காய் தின்று தண்ணீர் குடித்தால் இனிப்புச்சுவை தெரியும். இச்செய்தி சங்க இலக்கியத்தில் ஓர் உவமையாகவும் எடுத்தாளப்பட்டுள்ளது.

நீரின் தூய்மையினைப் பேணுவதிலும் தமிழர்கள் கருத்துச் செலுத்தியுள்ளனர். நீருக்குள் மனிதக் கழிவு இடுதல் பெரும் பாவமாகக் கருதப்படுகிறது. 'நீருக்குள் ஜலபானம் செய்த பாவத்தில் போகக்கடவாராகவும்' என்று ஆவணங்கள் இதனைக் குறிக்கின்றன. சங்கரன்கோயிலுக்கு வடக்கே பனையூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலில் இறைவனுக்கு அக்கோயிற் கல்வெட்டுக்களில் 'நன்னீர்த்துறையுடைய நாயனார்' என்ற பெயர் காணப்படுகிறது. இயற்கையின் பேராற்றலில் ஆரியர் நெருப்பினை முதன்மைப்படுத்தியது போலவே திராவிடர் நீரினை முதன்மைப்படுத்தினர். தெய்வ வழிபாட்டுச் சடங்குகளைப் போலவே தமிழர்களின் வீட்டுச் சடங்குகளிலும் நீர் சிறப்பிடம் பெறுகின்றது. செம்பு நீரில் அல்லது குவளை நீரின் மேல் பூக்களையோ, பூவிதழ்களையோ இட வழிபடுவது எல்லாச் சாதியாரிடமும் காணப்படும் பழக்கம். நெடுஞ்சாலைகளில் கோடைக் காலத்தில் நீர்ப் பந்தல் அமைப்பது ஒரு அறச்செயலாகக் கருதப்பட்டது. சோழர் காலத்துக் கல்வெட் டொன்று, தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் இறைத்துத் தருபவனுக்கும் அதற்குக் கலமிடும் குயவனுக்கும் தண்ணீர் ஊற்றித் தருபவனுக்கும் மானியமளித்த செய்தியினைக் குறிப்பிடுகிறது.

இயற்கையல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். எனவே, அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்ப்பந்தல் அமைப்பதும் தமிழர்களின் வழக்கம்.

மொகஞ்சொதராவில் அகழ்வாய்வில் காணப்பட்ட படிக்கட்டுகளுடன்கூடிய குளம் நீர்ச்சடங்குகள் செய்வதற்குரிய இடமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நீராடுவதே ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருதப்பட்டதற்கு பரிபாடல், திருப்பாவை போன்ற இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன.

நீரை மையமிட்ட பழமொழிகளும் மரபுத் தொடர்களும் தமிழர்களிடத்தே உண்டு. 'நீரடித்து நீர் விலகாது', 'நீர்மேல் எழுத்து', 'தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்' என்பவை அவற்றுட்சில.

தமிழர் உணவு

ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர்தம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கூர்ந்துநோக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும்.

'சமைத்தல்' என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அடுப்பில் ஏற்றிச் சமைப்பது ‘அடுதல்' எனப்படும். சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை. தமிழர்களின் வீட்டு அமைப்பில் வீடு எந்தத் திசை நோக்கி அமைந்திருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் அமைக்கப்படுகிறது.

நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.

நகர்ப்புறமயமாதல், தொடர்புச் சாதனங்களின் விளம்பரத் தன்மை, பொருளியல் வளர்ச்சி, பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் தமிழர்களின் உணவு முறை மிகப்பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது. நிகழ்கால உணவுப் பழக்கவழக்கங்களில் உடல் நலம் குறித்த அக்கறையைவிடச் சுவை குறித்த பார்வையே ஆளுமை செலுத்துகிறது. எனவே இன்னும் சில மிச்சசொச்சங்களோடு இருக்கும் பழைய உணவுப் பழக்கங்களைத் தொகுத்துக் காணுவது நல்லது.

கிழங்கு வகைகளில் சிலவும் (பனங்கிழங்கு), புன்செய் தானிய வகைகளில் சிலவும் (சோளக் கதிர்), சிறு பறவை இறைச்சியும் ஏழை மக்களால் சுட்டு உண்ணப்படுகின்றன. கடினமான கிழங்குகளும் (சர்க்கரைவள்ளி, ஏழிலைக் கிழங்குகள்) நீரிலிட்டு அவிக்கப்படுகின்றன. அரைத்த அல்லது இடித்த மாவுப் பொருள்கள் நீராவியில் வேக வைக்கப்படுகின்றன (இடியாப்பம், இட்டிலி, கொழுக்கட்டை). இடித்த மாவுடன், சூடான இனிப்புப் பாகினைச் சேர்த்துக் கட்டி அரிசி, பொரி விளங்காய், பாசிப்பயற்று உருண்டை செய்யப்படுகின்றன. மாவுப் பொருள்களுடன் இனிப்புப்பாகு கூட்டி மீண்டும் எண்ணெயில் பொரித்து முந்திரிக்கொத்து, அதிரசம் (பாசிப் பருப்பு மா, அரிசி மா) ஆகியன செய்யப்படுகின்றன. மாவுப் பொருள்களுடன் உறைப்புச் சுவையுடைய மசாலா கூட்டி பஜ்ஜி, வடை செய்யப்படுகின்றன. புலவு அல்லது காய்கறிகளுடன் உறைப்பு மசாலா கூட்டி எண்ணெய் இட்டுத் தாளித்துக் குழம்பாகவோ அல்லது தொடுகறியாகவோ ஆக்குகிறார்கள். மாவுப் பொருள்களுடன் காய்கறிகள் சேர்த்து, எண்ணெய் தடவிச் சுடும் உணவு வகைகளில் அடை, தோசை ஆகியன அடங்கும். இலை (அடை) வடிவில் செய்யப்படுவதால் அது அடை எனப்பெயர் பெற்றது. வெந்த தானியத்துடன் வெல்லம், கருப்புக்கட்டி ஆகியன சேர்த்துத் திரவ வடிவில் ஆக்குவது பாயசம்.

சங்க இலக்கியத்தில் மிளகு, நெய், புளி, கீரை, இறைச்சி, கும்மாயம் பற்றிய உணவுக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பக்தி இயக்கத்தின் எழுச்சியோடு தமிழர் உணவு வகையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. லட்டு (இலட்டுவம்), எள்ளுருண்டை, அப்பம் போன்றவற்றைப் பெரியாழ்வார் தம் பாடலில் குறிப்பிடுகிறார். சோழர் காலக் கல்வெட்டுக்களில் சருக்கரைப் பொங்கல் (அக்கார வடிசில்), பணியாரம் ஆகிய உணவு வகைகள் பேசப்படுகின்றன. விசயநகர ஆட்சிக்காலக் கல்வெட்டுக்களில்தான் இட்டளி (இட்டிலி), தோசை, அதிரசம் போன்ற உணவு வகைக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. ஆனால் இவை கோயிற் பண்பாட்டைப் பிரதிபலிப்பதனால், பெருவாரியான மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களை அறிய இவற்றைப் போதிய சான்றுகளாகக் கொள்ளமுடியாது.

திடப் பொருள்களையும் இறைச்சிப் பொருள்களையும் அரைத்தும் துவைத்தும் நீர் குறைத்து ஆக்கப்படுவன துவையல் என்ற வகையில் அடங்கும். நீரிலே கரைத்த துவையல் இக் காலத்தில் ‘சட்டினி' என வழங்கப்படுகிறது. இறைச்சி சேர்த்த துவையல் 'கைமா' என்ற உருதுச் சொல்லால் வழங்கப்படுகிறது.

எளிய மக்கள் நிறைய நீரில் தானியங்களை வேகவைத்து உண்பது (நெல்லரிசி, குறு நொய் அரிசி, சோளம், கம்பம்புல், கேழ்வரகு, வரகரிசி) கஞ்சியாகும். கஞ்சியினை 'நீரடுபுற்கை' என்கிறார் திருவள்ளுவர் (நீர் + அடு + புல் + கை). கஞ்சியில் சேர்க்கப்படும் மற்றொரு பொருள் மோர்.

வற்றல் என்பது மழைக்காலத்திற்கு எனச் சேமிக்கப்பட்ட உணவாகும். காய்கறிகள் நிறையக் கிடைக்கும் காலத்தில் உப்புக் கலந்த மோரில் ஊறவைத்துப் பின்னர் வெயிலில் நீர் வற்றக் காயவைத்துச் சேமிப்பர். வெண்டை, மிளகாய், பாகல், சுண்டை, கொவ்வை, கொத்த வரை, கத்தரி, மணத்தக்காளி ஆகியன வற்றலுக்கு உரிய காய்கறிகள்.

காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே 'கறி' எனப் பின்னர் வழங்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.

பழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெய்யில் இட்ட பண்டங்கள் (குறிப்பாக வடை, பஜ்ஜி, மிக்சர், காரச்சேவு போன்றவை) அண்மைக் காலங்களிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய்யும் விசயநகர ஆட்சிக் காலத்திலேயே இங்கு அறிமுகமானது.

"லாலா மிட்டாய்க் கடை' என்பது புதுவகை உணவுகளைத் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்து வருகிறது. நாயக்க மன்னர்களின் காலத்தில் அவர்களால் தமிழ் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இந்தி பேசும் மக்கள் பிரிவினர் புதிய இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தினர். சருக்கரை, கோதுமை, நெய், கடலைமா ஆகியனவே இவற்றின் மூலப் பொருள்கள். சருக்கரைக்குப் பதிலாகக் கருப்புக்கட்டி சேர்த்து நாடார் சாதியினர் வைக்கும் இனிப்புக் கடையை மிட்டாய்க் கடை என்றே சொல்வார்கள். கிராமப்புறத்து மக்கள் இனிப்பு விற்கும் கடைகளை ‘அந்திக்கடை’ (மாலை நேரத்துக்கடை) என்றே வழங்கி வந்தனர். லாலா, மிட்டாய் என்பன முறையே இந்தி, உருதுச் சொற்களாகும்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர் வீட்டுச் சமையலில் எண்ணெயின் பங்கு பெருமளவு அதிகரித்திருக்கிறது. எண்ணெய்ச் சுவையினை இக்காலத் தமிழர்கள் பெரிதும் விரும்புவதால் அவித்தும், வேகவைத்தும், எண்ணெயைச் சேர்க்காமலும் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் வேகமாக மறைந்து வருகின்றன. பொருளாதாரச் சந்தையில் எண்ணெய் வணிகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வல்லரசு நாடுகளின் கருவிகள் பலதரப்பட்டவை. அவற்றின் பொருளியல் ஆயுதங்களாகக் காப்பியும், தேநீரும் அவற்றின் துணைப் பொருளான சருக்கரையும் இன்று எல்லா வீடுகளிலும் நுழைந்துவிட்டன.

உணவு என்பது இன்று ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கமன்று. இனிமை ததும்பும் சருக்கரையானது கியூபா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் வாழ்வுக்கான பற்றுக்கோடு. அமெரிக்கா போன்ற நாடுகளால் இச்சிறிய நாடுகள் ஒடுக்கப்படுவதற்கு அதே சருக்கரை ஒரு கொடுமையான பொருளாதார ஆயுதமாகவும் அமைகிறது. இந்த அரசியல் உண்மையை உணராத தமிழர்கள் உணவுப் பழக்கத்தில் உடல் நலத்தைக் கருதாது, நாவின் சுவையினையே சார்ந்து இருப்பது வீழ்ச்சிக்குரிய வழிகளில் ஒன்று.

உணர்வும் உப்பும்

'உப்புப் பெறாத வேலை' என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடுவார்கள் (உணர்ச்சியற்றவனை உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறாயா? என்றும் கேட்பார்கள்.) ஆனால் மனிதகுல வரலாற்றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல, உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவமுடையது தான். அப்போது தான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘சுவை' என்பதே முதற்பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பிற்கு 'வெள்ளுப்பு' என்று பெயர். பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது 'வெள்ளுப்பு.

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம்’ என்ற சொல் பிறந்தது என்பர். ஆங்கிலத்திலும் (Salary) என்ற சொல் (Salt) என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர்.

இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியாரிடத்தில் புது மணமகள் தன் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக்கொண்டே நுழைகிறாள். அதுபோலவே புதுமனை புகுவிழாக்களில் உறவினர்கள் அரிசியினையும் உப்பினையும் அன்பளிப்பாகக் கொண்டுவருவர். மதுரை மாவட்டக் கள்ளர்களில் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய்யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும் உப்பும் கொண்டுசெல்கின்றனர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. ‘தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது' என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்குமொழி.

நன்றி கெட்ட விதுரா - சிறிதும் நாணமற்ற விதுரா தின்ற உப்பினுக்கே - நாசம்

தேடுகின்ற விதுரா</poem>
என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி இந்த நம்பிக்கையைப் பதிவு செய்கிறான்.

பழந்தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் 'உமணர்' என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழ்க் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளையும் களத்திற்கு ‘அளம்' என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப்பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவளம் (கோ + அளம்) என்று வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார்கள். "ஜடாவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி சுந்தர பாண்டியன் காலத்தில் (கி.பி. 1268) அதும்பூர் என்னும் ஜனனாதப் பேரளம், செல்லூர் என்னும் அநபாய சோழப் பேரளம், இடையன்குழி என்னும் இராஜேந்திர சோழப் பேரளம், கூடலூர் என்னும் ராஜநாராயணப் பேரளம், திருநல்லூர் என்னும் கிடாரம் கொண்ட சோழப் பேரளம், வெண்ணாரிகன் சுழி என்னும் ஏழிசை மோகன் பேரளம், சூரைக் காமு என்னும் ஆளப்பிறந்தான் பேரளம் ஆகியவற்றிலிருந்து உப்பு விற்கையில் ஒரு உறை உப்புக்கு ஒரு உழக்கு உப்பு என்னும் விகிதத்தில் சேகரித்துத் திருவதிகை திரு வீரட்டானேஸ்வரர் கோயில் திருவமுதுபடிக்கும் கோயில் சீரமைப்பிற்கும் நிவந்தமாக அளிக்கப்பட்டிருக்கின்றன” என்று தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் எடுத்துக்காட்டுகிறார்.

போக்குவரத்து வசதிகள் பெருகாத காலத்தில் உப்பின் விலையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. 'நெல்லின் நேரே வெண்கல் உப்பு' என்று பெண் ஒருத்தி விலை கூறி உப்பு விற்பதனைச் சங்க இலக்கியத்தில் பார்க்கிறோம். சோழர் காலத்திலும் நெல்லின் விலையும் உப்பின் விலையும் அருகருகு இருந்தன என்று கல்வெட்டுக்களில் இருந்து தெரிகிறது. இன்றைய பொருளாதாரக் கணக்கில் உப்பின் விலை இப்போது உள்ளதை விட ஐந்து மடங்கு அதிகமாக இருந்ததாகக் கொள்ளலாம். உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்டதனால் 'மரவை' எனப்படும் மரச்சட்டியிலும் ‘கல்மரவை' எனப்படும் மாக்கல் சட்டியிலும் வீடுகளில் உப்பு இட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாக விளங்குகின்றன.

தமிழ்நாட்டின் சமூகப்படி நிலைகளை அடையாளம் காட்டும் பொருள்களில் ஒன்றாகவும் உப்பு விளங்கியுள்ளது. ஆக்கிய சோற்றோடு உப்பைச் சேர்த்து உண்பது ஒரு வழக்கமாகும். சாதிய ஒடுக்குமுறை கடுமையாக இருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியார், சோறு உலையில் இருக்கும்போதே அதில் உப்பையிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாகக் கருதப்பட்டதுபோலும்.

உப்பு வரிக்கு எதிராகக் காந்தியடிகள் சட்டமறுப்பைத் தொடங்கிய காரணம், உப்பு அனைத்து மக்களையும் (சாதி, சமயம், வர்க்கம் தாண்டி) பாதிக்கக்கூடியது என்பதுதான். உப்பிற்கு இருக்கும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் குறியீட்டுச் சிறப்பினையும் சுட்டி, ‘உப்புக்கு வரிபோடும் அரசு ஓர் அரசா' என்று கேள்வி எழுப்பி ஆங்கிலேய அரசு ஆளத்தகுதியற்றது என அதன் தகுதிப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது தேசிய இயக்கம்.

காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகமும், தண்டி யாத்திரையும் இந்திய அரசியல் வரலாற்றின் அழுத்தமான பக்கங்களாகும். தண்டி யாத்திரை நடந்த குசராத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு நிறுவனமான ‘கார்கில்' கம்பெனிக்கு மைய அரசு உப்புத் தயாரிக்க அனுமதி வழங்கியது. குசராத் மக்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் இந்த அனுமதியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ததும், இறுதியில் 'கார்கில்' நிறுவனம் பின்வாங்கியதும் இந்திய வரலாற்றின் வெப்பம் மிகுந்த பக்கங்களாகும்.

உணவும் நம்பிக்கையும் மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவும் நீரும் உலகின் எல்லா நாகரிகங்களிலும் தனித்த இடத்தைப் பெறுகின்றன. தமிழர் பண்பாட்டிலும் உணவு பல்வகையான நம்பிக்கைகளுக்குக் களனாக அமைந்திருக்கிறது.

உணவு சார்ந்த நம்பிக்கைகள் பலவகையாகும். நேரம், கிழமை, பருவகாலம், சடங்குகள், பயணம், விழாக்கள் ஆகியவை சார்ந்து உணவுசார் நம்பிக்கைகள் அமைகின்றன. விலக்கப்பட்டவை, விதிக்கப்பட்டவை என்ற இரு பெரும் பகுப்பில் இவற்றை அடக்கலாம்.

புலால் உண்ணும் சாதியாரும் குறிப்பிட்ட சில நாள்களில் புலால் உணவை விலக்குகின்றனர். வெள்ளி, செவ்வாய் ஆகிய நாள்களில் சிலர் புலால் உணவை விலக்குவர்; சிலர் சனிக் கிழமைகளில் மட்டும் விலக்குவர்; ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளிலும், புரட்டாசி மாதச் சனிக்கிழமைகளிலும் சிலர் தவிர்த்துவிடுவர். புரட்டாசி அல்லது கார்த்திகை மாதங்களில் முழுமையாகப் புலால் மறுப்பது சிலரது வழக்கம். ஊர்த் திருவிழாவிற்குக் காப்புக் கட்டிய அல்லது கொடியேற்றிய நாள் தொடங்கி விழா முடியும் வரை சிலர் புலால் விலக்குவர்.

அமாவாசை, பௌர்ணமி (கார்உவா, வெள்உவா) நாள்களில் பொதுவாகப் பெண்கள் புலால் உணவு விலக்கும் வழக்கம் உடையவர்கள். இம்மரபுகளை அடியொற்றித் தமிழ் கிறித்தவர்களும் 'லென்ட்' (lent) எனப்படும் நோன்புக் காலத்தில் புலால் உணவை அறவே விலக்குவது சில டங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நோன்புக்காலம் என்பது இயேசுநாதர் சிறைப்பட்டது முதல் உயிர்த்தெழுந்தது வரையிலான 40 நாள்களாகும். கிறித்தவ முதியவர் சிலர், இயேசுநாதர் சிலுவையில் மரித்தது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால் அந்த நாளில் புலால் விலக்கும் வழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். கத்தோலிக்க கிறித்தவர்களிடையேதான் பெரும்பாலும் இவ்வழக்கத்தைக் காணமுடிகிறது.

இரவில், 'உப்பு' என்ற சொல்லைச் சொல்லக் கூடாது. இரவிலே அடுத்த வீட்டாருக்கு மோர் கொடுத்தல் கூடாது. தவிர்க்க முடியாத நேரத்தில் சிறிது வெள்ளை உப்பினை அதற்கு மாற்றாக வாங்கிக்கொண்டு கொடுக்கலாம். புதுமனைக்கு உள்ளே மணமகள் முதலில் கொண்டுசெல்ல வேண்டிய பொருள் உப்புதான். இவை உப்பு குறித்த சில நம்பிக்கைகள். உப்பு, உறவுக்கும் செழிப்புக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. எனவே சில சாதியார் இறந்தார்க்குப் படைக்கும் உணவில் உப்புச் சேர்ப்பதில்லை.

விருந்தாளிகளுக்குப் படைக்கும் உணவில் பாகற்காய், பயறு வகைகள், அகத்திக்கீரை ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. இறப்பு நிகழ்ந்த வீடுகளில் அன்றும், மறுநாளும் உணவில் அகத்திக்கீரை சேர்ப்பர். அகத்திக்கீரையும் பயறு வகைகளும் இறப்போடும் இறந்தவர் உணவோடும் தொடர்புபடுத்தப்படுகின்றன. எனவே அவற்றை விருந்தாளிகளுக்குப் படைப்பதில்லை. தென் மாவட்டங்களில் ‘பயறு அவித்தல்' என்பது இறப்பைக் குறிக்கும். விழாக்காலங்களிலும் உணவில் பயறு வகைகள் (கடலை, தட்டை) பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன.

தொன்மையான பயிர் வகைகளில் ஒன்றான சுரையின் காயினைப் புலால் போன்றது எனக் கருதித் தமிழ்நாட்டு பிராமணர் முற்றிலுமாக விலக்கி விடுகின்றனர். புலால், மீன் ஆகியவற்றோடு சேர்க்கப்படும் காய்கறி இது. ஆதலால் இதனை விலக்குகின்றனர் போலும்.

போக்குவரத்து வசதி பெருகாத காலங்களில் பயணத்தின் போது இரண்டு அல்லது மூன்று பொழுதுக்குக் கட்டுச்சோறு கட்டிக் கொண்டுசெல்லும் வழக்கம் இருந்தது. காட்டுவழியில் உள்ள தெய்வங்களும் ஆவிகளும் கட்டுச்சோற்று உணவைத் தீண்டாமல் பாதுகாக்க, சோற்றின்மீது ஒரு அடுப்புக் கரித் துண்டினை உடன்வைத்துக் கட்டுவர்.

பெரும்பாலான சாதியார் விருந்தாளிகளுக்கு உணவு பரிமாறும்போது முதலில் உப்பினை வைப்பர். ஒன்றிரண்டு சாதிகளில் முதலில் சோற்றினை வைக்கும் வழக்கமுண்டு.

இவையேயன்றித் தெய்வங்களும் விழா நாள்களும் நோன்பு நாள்களும் வெவ்வேறு வகையான உணவுகளோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. மார்கழி மாதத்தின் திருவாதிரை நாள் சிவபெருமானுக்கு உரியதாகக் கருதப்படுகிறது. அந்நாளில் உளுந்து மாவினால் செய்த களி வீட்டு உணவில் சிறப்பிடம் பெறுகிறது. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி' என்பது தென் மாவட்டங்களில் பெருக வழங்கும் சொல்லடை. கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நாள் முருகனுக்கு உரிய திருநாள். அந்நாளில் கார்த்திகைப் பொரியும் இடித்த மாவினால் ஆன பிடிகொழுக்கட்டையும் விளக்கு முன் படைக்கப்படுகின்றன. பிள்ளையார் வழிபாட்டிற்கு உரிய கொழுக்கட்டை மோதகம் எனப்படும். அது அரைத்த மாவில் உள்ளே இனிப் பிட்டுச் செய்யப்படுவது.

மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியில் அரிசியை இடித்துச் செய்யும் உலர்ந்த அவல் சிறப்பான உணவாகக் கருதப்படுகிறது. தென் மாவட்டங்களிலும் கேரளத்திலும் சித்திரை முதல் நாள் திருநாளாகக் கருதப்படுகிறது. அந்த நாளுக்கு உரிய உணவு, ஊறவைத்து இனிப்பிட்ட அரிசி அவல். ஆடிமாதப் பதினெட்டாம் பெருக்கன்று உளுந்து முதலான பல புஞ்சைத் தானியங்களையும் திரித்து இனிப்புக் கூட்டிச் செய்த ஒரு வகைப் பாயாசம் சிறப்புச் சிற்றுணவாகக் கருதப்படுகின்றது. இதனைக் 'கும்மாணம்' என்பர். (இதுவே இலக்கியத்தில் ‘கும்மாயம்' எனப்படும்.) நயினார் நோன்பு எனப்படும் சித்திர குப்த நயினார் நோன்பு அன்று (சித்திரை முழு நிலவுக்கு மறுநாள்) காலை உணவில் எள் அல்லது எள்ளுப் பிண்ணாக்கு, கருப்புக் கட்டி ஆகியவை உணவோடு சேர்த்துப் பரிமாறப்படுகின்றன. அகத்திக்கீரையினையும் பயறு வகைகளையும்போல எள்ளும் இறப்போடும் இறப்புச் சடங்குகளோடும் தொடர்பு படுத்தப்பட்ட ஒரு தானியமாகும். இறந்த மனிதனின் பாவ புண்ணியக் கணக்குகளைப் பதிவு செய்து கடவுளிடம் ஒப்படைக்கும் பொறுப்புடையவர் சித்திரகுப்தன். எனவே இறப்போடு தொடர்புடைய எள்ளுப் பிண்ணாக்கு அவருக்கு உரிய நாளில் படைக்கப்படுகிறது.

ஆடி அறுதி எனப்படும் ஆடிமாதக் கடைசி நாளிலும் தைப்பொங்கலுக்கு மறுநாளான கரி நாளிலும் விருப்பத்துடன் புலால் உண்ணுவது தமிழர் வழக்கமாகும்.

மகப்பேற்றுத் தீட்டுக் கழிக்கும் நாளில் விளக்கு முன்னர்ப் படைக்கப்படும் உணவினை ஆண்கள் பார்ப்பதும் உண்பதும் கூடாது. இது சடங்கு சார்ந்த உணவாகும். இதனைப்போலவே 'ஒளவையார் நோன்பு' எனப் பெண்கள் மட்டும் கூடி நடத்தும் வழிபாட்டில் படைக்கும் அவித்த உணவு வகைகளும் ஆண்களின் பார்வையில் படக்கூடாது என்னும் நம்பிக்கை பெண்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

எண்ணெய்

தமிழர்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் இன்றியமையாது இடம்பெறும் பொருள்களில் ஒன்று எண்ணெய். வனஸ்பதி, சளம்பனை எண்ணெய் (பாமாயில்) ஆகியவை மிக அண்மைக் காலத்தில் தமிழர் சமையலில் செல்வாக்குப் பெற்றுள்ளன. பழந்தமிழர் பயன்படுத்திய எண்ணெய் வித்துக்கள் எள், ஆமணக்கு, வேம்பு, புன்னை, இலுப்பை ஆகியனவே. பின்னர் தேங்காயும், 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நிலக்கடலையும் எண்ணெய்வித்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

'எண்ணெய்' என்பது எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயை மட்டுமே முதலில் குறித்தது. பாலிலிருந்து பெறப்படும் நெய்யிலிருந்து வேறுபடுத்த, இதை 'எள் நெய்' என வழங்கினர். கிறித்துவின் சமகாலத்திலும் அதற்கு முன்னரும் பசுநெய், எருமை நெய், நல்லெண்ணெய் ஆகியவையே தமிழர் சமையலில் பயன்பட்டு வந்திருக்கின்றன. இவற்றுள் நல்லெண்ணெய் தலையில் தேய்த்துக்கொள்ளவும் பயன்பட்டது. ‘பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி' (புறம்) என வரும் தொடரால் தலையில் நல்லெண்ணெய் தேய்க்கும் வழக்கம் அக்காலம் தொட்டு வழக்கில் இருந்ததை அறிகிறோம். பனையும் எள்ளும் தமிழகத்தின் தொன்மையான புன்செய்க் காட்டுப் பயிர்கள். இவையிரண்டும் ஒரே நிலத்தில் பயிராவன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆமணக்கு வித்தினைச் செக்கிலிட்டு ஆட்டிப் பெறப்பட்ட விளக்கெண்ணையும், வேப்பெண்ணெயும் தலையில் தேய்த்துக் கொள்ளவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டன. புன்னை எண்ணெயும், விளக்கெண்ணெயும் விளக்கு எரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே ‘மணிலா' எனப்படும் நிலக்கடலை பயிரிடப்பட்டு, எண்ணெய் வித்தாகப் பயன்படுத்தப் பெற்றிருக்கிறது.

பக்தி இயக்கம் தோன்றிய காலத்தில் பார்ப்பனர் வீடுகளிலும் கோயில்களிலும் பாலிலிருந்து பெறப்பட்ட நெய் மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. சங்க இலக்கியத்தில்கூடப் பார்ப்பனர் வீடுகளில் மாதுளங்காயினை நெய்யிலே பொரித்த செய்தி கூறப்பட்டுள்ளது; பக்தி இயக்கக் காலத்தில் சாதியப் படிநிலைகள் கடுமையாக வகுக்கப்பட்ட போது, செக்கினைத் தொழிற் கருவியாகக் கொண்டு எண்ணெய் எடுக்கும் சாதியார் கீழ்ச்சாதியாகக் கருதப்பட்டனர். 13ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்கள் இவர்களைச் சக்கரப்பாடியார், சங்கரப்பாடியார் என்று குறிக்கின்றன. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் எழுந்த தாராசுரம் கோயிற் சிற்ப வரிசையில் கலியநாயனார் செக்காட்டும் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது.

இடைக்காலத்தில் எண்ணெய் அமங்கலப் பொருளாகக் கருதப்பட்டது. எண்ணெய் விற்போர் எதிரில் வருவது நல்ல சகுனம் இல்லை எனவும் கருதப்பட்டது. இக்காலத்தில் எண்ணெய் விற்கும் சாதியார், ‘செட்டியார்’ என்ற சாதிப் பெயரை இட்டுக்கொள்கின்றனர். அக்காலத்தில் அவர்களுக்குச் 'செக்கார்' என்றும் பெயருண்டு.

சோழ,பாண்டியப் பேரரசர்கள் காலத்தில் எண்ணெய் உற்பத்தி அரசால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. கல்லினால் ஆன மிகப் பழைய செக்குகள் எழுத்துக்களோடு கிடைத்துள்ளன. தருமபுரி மாவட்டக் கல்வெட்டு ஒன்றில் 'இறையமன் இட்ட செக்கு' என்ற தொடர் காணப்படுகிறது.

மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் ‘ஸ்ரீ வழுதி வளநாட்டு மிழலூர் அப்பனுழஞ் சுரபி நாட்டு நெல்வேளூர்ப் பொற்கொடி வீரர் பேரால் இட்ட செக்கு' என்ற கற்பொறிப்புடன் கூடிய ஒரு செக்கு கண்டுபிடிக்கப்பட்டு, இப்பொழுது மதுரைத் திருமலை நாயக்கர் மகாலில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து அரசியல் அதிகாரிகளே கல்செக்கு அமைக்கும் உரிமையினைப் பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. எளிய குடிகள் தம் தேவைக்கு மரச்செக்குகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். செக்கின் மீது இடப்பட்ட வரி ‘செக்கிறை’ என்னும் 'செக்காரப் பாட்டம்' என்றும் கல்வெட்டுக்களில் பலமுறை குறிப்பிடப்படுகிறது.

பிற்காலக் கல்வெட்டுக்களில் கோயில்களின் எண்ணெய்த் தேவைக்காகக் கோயில்களுக்கு இலுப்பைத் தோப்புகள் இருந்ததனை அறிகிறோம். புன்னைக்காய் எண்ணெயினை அடித் தளத்து மக்கள் நிறையப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அண்மைக்காலம் வரை மாட்டின் காம்புகளில் புன்னைக்காய் எண்ணெயே தடவப்பட்டுப் பால் கறக்கப்பட்டது.

தேங்காயிலிருந்து பெறப்படும் எண்ணெய் இரண்டு வகையாகத் தயாரிக்கப்படுகிறது. தேங்காயைப் பூவாகத் துருவி நீர் சேர்த்து அரைத்துப் பாலாக்கி அந்தப் பாலை அடுப்பி லிட்டுக் காய்ச்சி எடுக்கப்படுவது தேங்காய் நெய் ஆகும். இது மேல் சாதியினரின் வீடுகளில் வழக்கமாக இருந்தது. இதன் தயாரிப்புச் செலவும் அதிகம். தேங்காயை வெயிலில் இட்டுக் காயவைத்து, செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுப்பது மற்றொரு முறை. பக்தி இயக்கக் காலத்தில் தேங்காய் எண்ணெய் கூடக் கோயில்களில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சமையலுக்குப் பசு நெய்யும், விளக்கெரிக்கப் பசு நெய்யும், இலுப்பை எண்ணெயும் பயன்படுத்தியுள்ளனர்.

சமையலில் கடலை எண்ணெயைப் பயன்படுத்தும் வழக்கம் விசயநகரப் பேரரசு காலத்திலேயே ஏற்பட்டது எனக்கொள்ளலாம். இறந்தவர்களின் நினைவைக் கழிக்கும் வண்ணம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் இக்காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும். பழைய நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் இவ்வழக்கம் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

சோறு விற்றல்

சோறு, அவிழ்பதம் ஆகிய இரண்டு சொற்களும் பழைய இலக்கியங்களில் வழங்குகின்றன. இன்று நெல்லரிசிச் சோறு மட்டுமே சோறு என்ற பொருளில் வழங்கப்படுகிறது. ஆனால் புஞ்சை நிலத்தில் வாழும் மக்கள் கம்பு, சோளம், குதிரை வாலி ஆகிய தானியங்களைச் சமைத்து உண்ணும்போது கம்பஞ்சோறு, சோளச்சோறு, குதிரை வாலிச்சோறு என்றே கூறுகின்றனர். அதுவும் அன்றிக் கற்றாழையின் சதைப்பற்றினையும், பனை, தென்னை ஆகிய மரங்களில் திரட்சியில்லாத சதைப்பற்றினையும் 'சோறு' என்றே வழங்குவர்.

‘அரிசி' என்னும் சொல்லும் நெல் அரிசியை மட்டு மல்லாது, அவித்து உண்ணும் சிறிய தானியங்கள் அனைத்தையும் குறிக்கும். ‘அரி' என்னும் வேர்ச்சொல்லுக்குச் 'சிறிய' என்பதே பொருள் (அரி மணல், அரி நெல்லிக்காய்). வெள்ளைப் பூண்டின் சிறிய கீற்றுக்களையும் வெள்ளைப் பூண்டு அரிசி என்று பெண்கள் கூறும் வழக்கமுண்டு.

இன்று எல்லா ஊர்களிலும் உணவுவிற்கும் கடைகள் உள்ளன. சில ஊர்களில் குடிநீரும் விற்பனைப் பொருளாகி விட்டது. தமிழர் பண்பாட்டில், 'சோறும் நீரும் விற்பனைக்கு உரியவையல்ல' என்ற கருத்து இலக்கியங்களைக் கூர்ந்து நோக்கும்போது தெரிகிறது. வறியார்க்குச் சோறிடுதல் அறம் என்கிற கோட்பாடு மட்டுமே திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் ஊர் மடத்தில் (சாவடி) வழிச் செல்வோர் யாரும் உண்ணாமல் இரவில் படுத்திருந்தால் ஊர்க்காரர்கள் 'இரவுச்சோறு' கொடுக்கும் வழக்கம் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்திருக்கிறது. தங்கள் இடத்தில் இரவில் பசியோடு யாரும் உறங்கச் செல்வது தங்களுக்கு மானக்கேடு என்று கருதியுள்ளனர். சிறுகுடிக் கிழான் பண்ணன் வறியார்க்குச் சோறளித்த செய்தி சங்க இலக்கியத்தில் பேசப்படுகிறது. 'உயிர் மருந்து' எனச் சோற்றினை வருணிக்கும் மணிமேகலை வறியவர்க்கும் ஊன முற்றோர்க்கும் கைவிடப்பட்டவர்க்கும் நோயாளிக்கும் உணவளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் புகுந்த சமண சமயமும் நால்வகைக் கொடைகளில் (சோறு, மருந்து, கல்வி, அடைக்கலம்) உணவுக் கொடையையே முதலாவதாகப் பேசுகிறது. ‘அன்னதானம்’ செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். பக்தி இயக்கத்தின் எழுச்சியோடு கோயில்களில் அடியார்க்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது என்பதனை “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என வரும் அப்பர் தேவாரத்தால் அறியலாம்.

ஒன்பதாம் நூற்றாண்டு முதல் நெடுவழிகளில் அமைந்த தாவளங்களையும் (சத்திரங்களையும்) மடங்களையும் காண்கின்றோம். விசயநகர மன்னர் வருகைக்குப் பின்னர் கி.பி. 15ஆம் நூற்றாண்டு அளவில்தான் சத்திரங்களில் சோறு விற்கப்பட்ட குறிப்புக்களைக் பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் கோயில்களிலும் மடங்களிலும் 'சட்டிச் சோறு' வழங்கிய செய்தி குறிக்கப்படுகிறது. இவ்வழக்கம் 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நடைமுறையில் இருந்துள்ளது. அக்காலம் வரை சோறும் நீரும் மட்டுமே இந்த விற்பனை விதிவிலக்கைப் பெற்றிருக்கின்றன. சாலையோரக் கடைகளில் பிற உண்பண்டங்கள் விற்கப்பட்ட செய்தி சிலப்பதிகாரத்திலேயே பதிவாகி இருக்கிறது. இதுவன்றி, ‘பெருஞ்சோறு' என்னும் சொல்லும் இலக்கியங்களில் காணப்படுகிறது. இது அரசன் போருக்குச் செல்லுமுன் வீரர் அனைவரோடும் கூடி உண்டதைக் குறிக்கிறது. எனவே இது ஒரு போர்ச்சடங்கு நிகழ்ச்சியாகச் செய்யப்பட்டது எனத் தோன்றுகிறது. இந்த உணவு, ஊனும் சோறும் கலந்தது என்பதனை 'ஊன்துவை அடிசில்' என்று குறிக்கிறது பதிற்றுப் பத்து.

விசயநகரப் பேரரசு காலம் தொடங்கித் தமிழ்நாட்டுச் சத்திரங்களில் சோறு விற்கப்பட்டு, பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘ஹோட்டல்’ எனப்படும் உணவு விடுதிகள் தொடங்கப்பட்டன. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நகரங்களிலும், சிறு நகரங்களிலும் காசுக்குச் சோறு விற்கும் கடைகள் உண்டாயின. அப்பொழுதும்கூட, பிராமணரும் பிராமணரை அடுத்த மேல் சாதியினரும், முசுலிம்களும் தங்கள் தங்கள் சாதியினருக்கு மட்டுமே உரிய உணவகங்களை நடத்தி வந்திருக்கின்றனர். நாட்டு விடுதலைக்குப் பின்னரே பிறசாதியார் உணவகம் நடத்தும் தொழிலை மேற்கொள்ளத் தொடங்கினர். நாட்டு விடுதலைக்குப் பின்னரும் பிராமணர் மட்டும் உண்ணும் உணவகங்கள் இருந்தன. அவற்றை எதிர்த்துப் பெரியார் ஈ.வெ.ரா.வின் தொண்டர்கள் மறியல் செய்தபின் அவ்வழக்கம் கைவிடப்பட்டது நாமறிந்த செய்தியே.

பிச்சை

முகத்தில் சோகம் இழையோடப் பல்லைக் காட்டியும், தாழ் மொழிகளைச் சொல்லியும் கைவிரித்து நீட்டியும் பிச்சையெடுத்தல் மிகக் கேவலமான செயலாகத் தமிழ்ச் சமூக அமைப்பில் கருதப்பட்டது. 'கேட்க வாயில்லாத பசுவிற்குத் தண்ணீர் கேட்டுப் பிச்சையெடுப்பதும் கேவலமானது' என்கிறார் திருவள்ளுவர்.

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்

என்பது திருக்குறள். இன்றும்கூடப் 'பிச்சைக்காரப்பயல்', 'பிச்சையெடுக்கப் போ' என்ற தொடர்கள் வசையாகவேப் பயன்படுத்தப்படுகின்றன.

‘இரவலர்’ என்பது சங்க இலக்கியத்தில் ஏழையரான கலைஞர்களைக் குறிக்கவே வந்துள்ளது. ஏன் என்றால், எதுவும் இன்றிப் பிச்சையெடுத்தல் என்ற வழக்கம் தமிழ்நாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. சமண மதத்தின் துறவிகள் மூலமாகவே இவ்வழக்கம் பரவியிருக்க வேண்டும். சமண மதக் கருத்துக்களை அறிந்த திருவள்ளுவர்தான் 'பிட்சை' என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லாக 'இரத்தல்' என்பதைப் பயன்படுத்துகிறார். முற்றும் துறந்த துறவிகள் பசித்தபோது பிச்சையெடுப்பதைச் சமண மதம் அனுமதித்தது. இல்லறத்தார் அவர்களுக்குப் பிச்சையிடுவதைப் பெரும் பேறாகக் கருதவும் வைத்தது. பௌத்த மதத் துறவிகளும் பிச்சை ஏற்று வாழ்ந்தனர். கௌதம புத்தரும் பிச்சை ஏற்று உண்டிருக்கிறார்.

வறுமை காரணமாகப் பிச்சையேற்று உண்ணும் நிலைக்கு வந்த யாரும் அதைத் தாம் பிறந்து வளர்ந்த ஊரில் செய்வதில்லை. மரபுவழி வந்த 'மானம்' என்னும் சமூக மதிப்பீடே இதற்குக் காரணமாகும். ஒவ்வொரு ஊரிலும் முகமறியாத தூரத்து ஊரில் இருந்து வந்தவர்களே பிச்சையெடுப்பது வழக்கம். இவர்களைக் குறிக்கவே ‘பரதேசி’ (பிறதேசம் அல்லது பகுதியைச் சேர்ந்தவர்) என்ற சொல் உருவாகியது.

முதன்முதலாகப் பிச்சையெடுப்பதை நிறுவன ரீதியாகச் சமண மதமே அங்கீகரித்தது. அம்மதமே நால்வகைத் தானங்களில் ஒன்றாக அன்னதானத்தையும் ஆக்கியது. ஆடையில்லாத சமணத் துறவிகள் பிச்சைகேட்டு வரும்போது பெண்கள் கதவை அடைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடியுள்ளனர். 'காவிசேர்கண் மடவார் கண்டோடிக் கதவடைக்கும் கள்வ னானேன்' என்று திருநாவுக்கரசர் தாம் திகம்பர சமணராகப் பிச்சையெடுத்த வரலாற்றைப் பாடுகிறார்.

சமண மதத்தைச் சாய்த்தெழுந்த சைவ மதமும் 'பிச்சை' என்ற கோட்பாட்டைப் பின்னர் ஓரளவு ஏற்றுக்கொண்டது. சிவபெருமான் ஆடையின்றி, தாருகாவனத்தில் பிச்சையெடுக்கச் சென்றதாகக் கதைகள் புனையப்பட்டன. தமிழ் நாட்டு வைணவமும் பிற்காலத்தில் துறவிகள் பிச்சையெடுத்து உண்பதை அனுமதித்தது. நிர்வாணத்தை அங்கீகரிக்கவில்லை.) இராமாநுசர் போன்ற வைணவப் பெருந்துறவிகள் பிச்சையேற்று நின்றிருக்கின்றனர். சமண, பௌத்த மதத்துறவிகள் வெந்த உணவை பிச்சையேற்றிருக்கின்றனர். பிச்சையேற்பது ஆணாக இருந்தாலும் பிச்சையிடும் பணி பெண்களுக்கு உரியதாகவே அமைந்திருந்தது. மணிமேகலை காட்டும் ‘அமுதசுரபி' எனும் பாத்திரத்தில் ஆதிரை என்னும் பெண்ணே முதலில் சோற்றுப் பிச்சை இடுகிறாள். பெண்ணின் கையினால் பிச்சை பெறுவதால் பிச்சைக்கு ‘மாதுகரம்’ என்ற வடமொழிப் பெயரையும் இட்டு அழைத்தனர். ‘உடையவர் மாதுகரத்துக்கு எழுந்தருளினார்' என்பது வைணவ வழக்கு.

பழங்குடி மக்களிடத்தில் பிச்சை எடுக்கும் வழக்கம் இல்லை. சமத்துவமற்ற, நாகரிகமடைந்த (?) சமூகங்களில் மட்டுமே பிச்சை எடுக்கும் வழக்கம் தோன்றியிருக்கிறது. எல்லா வகையான உற்பத்தி உறவுகளிலிருந்தும் விலகிநின்ற துறவிகளுக்கு அது தேவையாக இருந்ததனால் சமயங்களின் வளர்ச்சியோடு பிச்சை எடுக்கும் வழக்கத்துக்குச் சமய அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ‘பிச்சை’ புகுந்த கதை இதுதான்!

தெங்கும் தேங்காயும்

தமிழ் நாட்டில் இன்று பரவலாகக் காணப்படும் மரங்களில் ஒன்று தெங்கு. கடற்கரைப் பகுதி தொடங்கி மலையடி வாரம்வரை தென்னந்தோப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன. மிக நீண்ட காலம் வாழும் பயிரினங்களில் இதுவும் ஒன்று. தென்னை மரத்தின் வயதைக் கணக்கிட அதன் உயரமும் கணுக்களும் அளவாகக் கொள்ளப்படுகின்றன.

தமிழர்களின் அன்றாட உணவிலும் தேங்காய் இடம் பெறுகிறது. கோயில் வழிபாடுகளில் அர்ச்சனைக்குரிய பொருள்களில் இது தவறாமல் இடம்பெறுகிறது. இஃதன்றிப் பிள்ளையார் கோயில்களிலும் சிறுதெய்வக் கோயில்களிலும் தேங்காயை விடலையாக எறிவதும் (உடைப்பதும்) நாள்தோறும் நடைபெறுவதாகும். நாட்டுப்புற வழிபாடுகளில் தென்னம்பாளை (தென்னம்பூரி) செழிப்பின் சின்னமாகத் தவறாது இடம்பெறுகிறது. உயிர்ப் பொருள்களின் விரைவான வளர்ச்சியைக் குறிக்க இன்றும் ‘கிணற்றடித் தென்னை'யைப் பேச்சு வழக்கில் உவமையாகக் கூறுவர். எனவே இதனைத் தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்த பயிரினம் எனலாம்.

பயிரியல் ஆராய்ச்சியாளர்கள் வங்கக் கடல் தீவுகளிலிருந்து கடல்வழியாகத் தென்னை தமிழ்நாட்டில் பரவி இருக்கலாம் எனக் கருதுகின்றனர். தென்தமிழ்நாட்டில் யாழ்ப்பாணம் தேங்காய் மிகச் சிறப்பாகப் பேசப்படுகின்றது. யாழ்ப்பாணம் தேங்காயின் மிகப்பெரிய ஓடுகளைப் பிச்சைக்காரர்கள் திருவோடாகப் பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பயிர் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் ஒன்றுகூட இல்லை என்பதுதான் மிகுந்த வியப்புக்குரியது. கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் எழுந்த பக்தி இலக்கியத்திலும் கோயில்களில் தேங்காய் உடைத்தல் பற்றிய குறிப்புக்களே இல்லை. ஆயினும் அக்காலத்தில் தமிழ்நாட்டில் தெங்கு நன்கு அறிமுகமாகியிருந்த பயிர்தான். முதலாம் நந்திவர்மனின் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தண்டந்தோட்டம் செப்பேடுகளில் “இம்மனை உள்ளிட்ட தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாராகவும்” என்ற செய்தி காணப்படுகிறது. ‘தெங்கு நின்ற நந்தவனம்' என்ற தொடரையும் முதன்முதலாக இக்காலத்திலே தான் காண்கிறோம். எனவே, அக்காலத்தில் தமிழ்நாட்டின் பழைய மரமான பனை போலவே தென்னையும் ஓலைக்கும் கள்ளுக்கும் சமையல் கூட்டுக்கும் விறகுக்குமான பயிரினமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. கி.பி. 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் கோயிலுக்குரிய படையல் பொருள்களில் ஒன்றாக வாழைப் பழம் பேசப்படுகிறது. ஆனால், கோயிலுக்குள் தேங்காய் படையல் பொருளாகக் கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. எனவே, பின்னர் வந்த விசயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்திலேயே தேங்காய் இறைவனுக்குரிய படையல் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது.

இன்று உள்ள நாட்டுத்தென்னை வகைகளுள் ஒன்றின் பெயர் ‘நக்கவாரி' என்பதாகும். நக்கவாரம் என்பது நிக்கோபார்த் தீவு. இது முதலாம் இராசேந்திரனால் வெற்றிகொள்ளப்பட்ட தாகும். ‘தேனமர் பொழில்சூழ் மாநக்கவாரம்’ என்பது அவனது மெய்க்கீர்த்தித் தொடர். நக்கவாரித் தென்னை அவனது படையெடுப்பின் விளைவாகத் தமிழ் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட வகையாக இருக்கலாம். (அதியமான் மரபினர் வெளிநாட்டிலிருந்து கரும்புப் பயிர்கொண்டு வந்ததைச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. சீனாப்புல், சீனாக்காரம், சீனாக் கற்கண்டு, சீனாப்பட்டு, சீனாப்பொம்மை, சீனாக் களிமண் என்பன போலப் பிறநாடுகளிலிருந்து ஏராளமான பொருள் வகைகளும், பயிர் வகைகளும் அறிமுகமாகியுள்ளன.)

தென்னை ஓலைகளைக்கொண்டு அழகுபடப் பந்தல் அமைக்கும் கலையும் வளர்ந்திருக்கிறது. மதுரைப் பெருநகரத்திற்குள் இவ்வகையான பந்தல் அமைத்தவர்கள் வாழ்ந்த தெரு 'தென்னோலைக்காரர் தெரு' என்ற பெயரில் இன்றும் விளங்குகிறது. தென்னைகள் நிறைந்த தஞ்சை மாவட்டத்தில் இன்னும் இக்கலை உயிருடன் விளங்குகிறது.

தெங்கும் பனையும் ஏறித் தொழில்செய்யும் சாதியாரை வட மாவட்டங்களில் ‘ஈழவர்' என்ற பெயரில் பல்லவர் செப்பேடு குறிப்பிடுகின்றது. இப்பிரிவினரே இன்று 'கிராமணி’ என அழைக்கப்படுகின்றனர். தென்னை வளம் மிகுந்த கேரளத்தில் தென்னைத் தொழில் செய்யும் பிரிவினர் இன்றளவும் ஈழவர் என்றே அழைக்கப்படுகின்றனர். (தென் மாவட்டங்களில் பனையும் பனைத்தொழிலுமே மிகுதி. பனைத் தொழிலாளர் ‘நாடார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்)

உரலும் உலக்கையும்

மனிதன் கல்லிலேதான் முதன் முதலாகப் பொருள்களைச் செய்யத் தொடங்குகின்றான். ஆராய்ச்சி அறிஞர்கள் அக்காலத்தைக் 'கற்காலம்' என்கிறார்கள். நினைவறியாக் காலத்தைச் சேர்ந்தது கற்கால நாகரிகம் என்றுதான் பெரும்பாலோர் கருதுகின்றனர். ஆனாலும்கூட அம்மி, உரல், ஆட்டுரல், திரிகை என்று கற்கால நாகரிகத்தின் சுவடுகள் நம்மிடையே இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கையினால் பற்றிக்கொள்ள ஒன்றும், அடிப்பகுதி ஒன்றுமாக இந்தக் கற்கருவிகள் எல்லாம் இரண்டு பொருள்களின்

சேர்க்கையாக அமைகின்றன. அம்மிக்கும் ஆட்டுரலுக்கும் கற்குழவிகள், திரிகைக்கு மூடியும் இரும்புக் கைப்பிடியும் இவை அரைப்புக் கருவிகள். உரலின் துணைக்கருவி உலக்கை. உலக்கை கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டது. இதன் அடிப்பகுதி இரும்புக் குப்பியால் ஆனது. மேற்பகுதியில் இரும்பினாலான பூண் கட்டப்பட்டிருக்கும். உலக்கையின் சராசரி நீளம் நான்கு அடியாகும். இது குற்றுக் கருவி. அவல் இடிப்பதற்கு இன்றளவும் உரலும் உலக்கையுமே பயன்படுகின்றன. எனவே, இது இடிப்புக் கருவியும் ஆகும். சில இடங்களில் உரலுக்கு மேலே தானியங்கள் சிதறாமல் இருக்க மூங்கிலாலோ, பிரம்பினாலோ வட்ட வடிவ மறைப்பினைச் செய்து உரலின்மீது அதற்கென வெட்டப்பட்ட காடியின்மீது வைக்கிறார்கள். அடிப்பகுதியும் மேற்பகுதியும் இல்லாத இதற்குக் ‘குந்தாணி' என்று பெயர். (காலும் தலையும் தெரியாமல் குண்டாகக் கனத்துத் தெரியும் பெண்களைக் குந்தாணி என்று கேலி செய்வதுண்டு.)

முல்லை நில வாழ்க்கையில் நெல்லும், புல்லுமான சிறிய வகைத் தானியங்களின் உறையினை நீக்குவதற்கு மனிதன் கண்டுபிடித்த கருவிதான் உரலும் உலக்கையும். பண்டைக் காலத் தொழில்நுட்பத்தின் எளிமையான வெளிப்பாடு உலக்கை.

தொடக்க காலத்தில் பாறைகளில் தானியங்களைக் குவித்து வைத்து மர உலக்கையால் குற்றியிருக்கிறார்கள். பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் மலைப்பகுதிக் கிராமங்களிலும் இப்படிப்பட்ட பாறைக் குழிகளையும் இவ்வழக்கத்தினையும்கூட இன்றும் காணமுடிகிறது.

வட்ட வட்டப் பாறையிலே
வரகரிசி தீட்டயிலே
ஆருதந்த சோமன் சேலை
ஆலவட்டம் போடுதடி

என்ற நாட்டார் பாடல் இதற்குச் சான்றாகும். நெல் வகைகளையும், புல் வகைகளையும் அரிசியாக்குவதைக் குற்றல், தீட்டல் என்ற இரண்டுவினைச் சொற்களால் குறிக்கின்றனர். குற்றிய தானியத்தை உமியும், தவிடும் நீங்கப் புடைத்துச் சலிப்பதைத் ‘தீட்டல்' என்ற சொல் குறிக்கின்றது போலும். குற்றித் தீட்டிய தானியத்தின் அளவும் நிறையும் குறைவதுண்டு. கல்வெட்டுக்களில் 'பத்தெட்டுக் குற்றல் அரிசி' என்பது போன்ற குறிப்புக்கள் வருகின்றன. பத்துப்படி அளவு அரிசியை மீண்டும் குற்றிய பின் எட்டுப்படி தரமான அரிசி கிடைக்கும் என்பது இதன் பொருள். இந்த அளவு கூடினால் சரியாகக் குற்றவில்லை என்றும், குறைந்தால் நெல் தரமானது இல்லை என்றும் கொள்ளப்படும். உமியும் தவிடுமாக இப்படிக் குறைகிற அளவிற்குப் 'பாடுவாசி' என்பது பெயர்.

கனமான நான்கு அடி நீள உலக்கையைக் கொண்டு கல்லுரலில் குற்றுதல் கடுமையான உடல் உழைப்பிற்கு உரிய தொழிலாகும். எனவே, குற்றும்போது பெண்கள் 'உஸ்', 'உஸ்' என்ற சத்தத்தை இசை ஒழுங்காகக் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக எழுப்புகின்றனர். சில பகுதிகளில் 'சும்மேலோ, சும் உலக்காய்' என்று சொல்கின்றனர். முற்காலத்தில் ஆண்கள் பாடும் படகுப் பாட்டுபோலப் பெண்கள் உலக்கைப் பாட்டு பாடியிருக்கிறார்கள். இதற்கு 'வள்ளைப் பாட்டு' என்று பெயர்.

மலைபடுகடாம், “தினை குறு மகளிர் இசைபடு வள்ளையும்" (342) வள்ளைப் பாட்டின் இனிமையினைக் குறிப்பிடுகிறது. வள்ளைப் பாட்டுக்களின் இலக்கியப் பெருமையை இளங்கோவடிகளும், மாணிக்கவாசகரும் நன்றாக உணர்ந்திருந்தனர். புகார் நகரத்துப் பெண்கள் கரும்பு உலக்கை கொண்டும், மதுரை நகரத்துப் பெண்கள் பவள உலக்கை கொண்டும், வஞ்சி நகரத்துப் பெண்கள் சந்தன உரலிலும் முத்துக்களைக் குற்றுவதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார் (சிலம்பு : வாழ்த்துக் காதை).

மணிவாசகரோ, 'திருப்பொற்சுண்ணம்' என்ற பகுதியில் சிவ பெருமான் நீராட வாசனைப் பொடியை உரலிலிட்டு இடிக்கும் பெண்கள் பாடுவதாகப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார்.

வள்ளைப் பாட்டுப் பாடும் பெண்கள் பாட்டின் நடுவில் தம் காதலன் பெயரையும் சேர்த்துப் பாடுவார்கள். அதைப் பிறர் கண்டுபிடித்துக் கேலி பேசுவர் அல்லது அலர் எழுப்புவர் எனக் குறுந்தொகைப் பாடல் நமக்குச் செய்தி தருகிறது (89).

அகன்ற வலிய காலை உடைய உரல் (பணைத்தாள் அன்ன பாவடி உரல் குறு 89), அவல் இடிக்கும் கரிய வயிரம் பாய்ந்த உலக்கை (பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை - குறு 38 ) என்று உரல் உலக்கையின் அமைப்புப் பற்றிய குறிப்புக்களும் நமக்குக் கிடைக்கின்றன. கருங்காழ் என்பதனால் உறுதியான கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட உலக்கையாகவும் இருக்கலாம்.

உரல், உலக்கை பற்றிய நம்பிக்கைகளும் தமிழ் மக்களுக்கு நிறையவே இருந்திருக்கின்றன. உலக்கையை எப்போதும் நட்டமாகவே சுவரில் சார்த்தி வைக்க வேண்டும். தரையில் கிடத்தக் கூடாது. பூப்பெய்திய பெண்ணை வீட்டின் ஒரு மூலையில் உட்காரவைத்து (இரும்புப்) பூண் கட்டிய உலக்கையினை அவளுக்குக் குறுக்காகக் கிடைவசத்தில் வைப்பார்கள். இது தீய ஆவிகளிடம் இருந்து அப்பெண்ணைக் காப்பதாக நம்புகிறார்கள். வாழ்வரசிப் (சுமங்கலி) பெண்கள் உரலின்மீது உட்காரக்கூடாது; விதவைப் பெண்களை உரலைக் குப்புறக் கவிழ்த்து அதில் உட்கார வைத்து நீராட்டித் தாலியைக் கழற்ற வேண்டும்.

பெருஞ்சமய நெறிகளுக்குள்ளும் உரல் பற்றிய நம்பிக்கைகள் உண்டு. கல்வெட்டுக் குறிப்புக்களிலிருந்து கோயில்களில் நெல்குற்றும் பணியை மிக வறிய நிலையில் இருந்த பெண்களே செய்திருக்கின்றனர் எனத் தெரியவருகிறது. இன்றளவும் கோயில்களில் மகப்பேற்று வயது கடந்த பெண்களே நெல் குற்றும் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். சிவ தீட்சை, வைணவ தீட்சை பெற்றவர்கள் இறக்கும்போது ‘தீட்சை இறக்குதல்' என்ற ஒரு சடங்கு நடைபெறுகிறது. உரலைக் குப்புறக் கவிழ்த்துப் போட்டு இறந்தவர் உடம்போடு நூலேணி இட்டு அவர் பெற்ற தீட்சையை உரல் வழியாகப் பூமிக்குள் இறக்கிவிடுவதாக நம்புகின்றனர்.

மசாலைப் பொடிகள் இடிக்கும் சிறிய உலக்கைக்குக் ‘கழுந்து' (உலக்கைக் கொழுந்து) என்று பெயர். இரண்டடி நீளமே உள்ள இதில் இரும்புப் பூணோ குப்பியோ இருக்காது; வடமொழி தெரியாததனால் 'உலக்கைக் கொழுந்து' என ஏசப்பட்ட ஒருவர் வஞ்சினத்துடன் வடமொழி கற்று ‘முசல கிசலயம்' (உலக்கைக் கொழுந்து) என்ற பெயரில் தத்துவ நூல் ஒன்று செய்ததாக வைணவ மரபுக் கதை ஒன்று கூறுகிறது.

கண்ணனுக்கு மூத்தவனாகக் கருதப்படும் பலராமன் தெய்வம் ஒரு கையில் உலக்கையினை ஏந்தியிருக்கிறது. இந்தத் தெய்வத்திற்கு வடமொழியில் வழங்கப்படும் பெயர்களில் முசலி என்பதும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் மிக அரிதாக வழங்கும் ‘முத்துலக்கையன்' என்ற பெயர் இத்தெய்வத்தையே குறிப்பதாகும்.

சிறுதெய்வங்களின் உணவு

தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. 'சிறு தெய்வம்' என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெயர் வழக்கு 'மேலோர் மரபு' சார்ந்ததாகும். வழிபடும் மக்களுக்கு இவை தெய்வங்களே.

சிறுதெய்வங்கள் எனச் சுட்டப்படுவனவற்றின் அடிப்படையான அடையாளங்கள் அவற்றைப் பிராமணர் பூசிப்பதில்லை என்பதும், அவை இரத்தப் பலி பெறுவன என்பதும் தாம். 'பலி' என்பது வடமொழிச் சொல். படைக்கப்படுதல் என்பது அதன் பொருள். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறுதெய்வங்கள் உள்ளன. சிறு தெய்வக் கோயில் இல்லாத கிராமமே இல்லை எனலாம். இவற்றில் செம்பாதிக்குமேல் தாய்த் தெய்வங்கள்.

சிறுதெய்வக் கோயில்களில் பெண் தெய்வங்களின் (அம்மன்) கோயில்கள் பெரும்பாலும் வடக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. ஆண் தெய்வங்களின் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இத்தெய்வங்கள் பெரும்பாலும் சினங்கொண்ட (உக்கிர) நிலையில்தான் அமைந்திருக்கின்றன. எனவே இவற்றை அமைதிப்படுத்த இரத்தப் பலி தருவது மரபாக இருந்து வருகிறது.

பிராமணர், சைவ வேளாளர் தவிர்ந்த எல்லாத் தமிழ்ச் சாதியார் குடும்பங்களும் ஏதேனும் ஒரு சிறுதெய்வ வழிபாட்டில் தொடர்பு உடையவையே. எனவே, சிறுதெய்வ வழிபாட்டிற்குரிய மக்கள் அனைவரும் புலால் உண்ணும் சாதியினரே. எனவே, இரத்தப் பலி இக்கோயில்களில் தவறாது இடம்பெறுகிறது.

மேற்கூரையுடைய சிறுதெய்வக் கோயில்களில் மட்டும் கல்லினாலான சிறிய பலிபீடங்கள் உள்ளன. இக்கோயில்களில் ஆட்டுக்கடா, சேவல், எருமைக்கடா, பன்றி ஆகியவை பலியிடப் படுகின்றன. விதிவிலக்காக ஒரு சில கோயில்களில் பெண் ஆடு பலியிடப்படுகிறது. இதுவல்லாமல் ஆட்டுக்கடா, ஆண் பன்றி, எருமைக் கடா, சேவல் என ஆண் மிருகங்களும் பறவைகளுமே பலியிடப்படுகின்றன.

பெரும்பாலான கோயில்களில் ஆட்டுக்கடாயின் தலை அறுக்கப்பட்டுப் பலிபீடத்தின்மீது வைக்கப்படுகிறது. சில இடங்களில் ஆட்டின் கால்களில் ஒன்று அறுக்கப்பட்டு ஆட்டின் வாயில் அதைக் கவ்வுமாறு கொடுத்துப் பலிபீடத்தில் வைப்பர். சேவலைப் பலியிடும்போது அவ்வாறு செய்வதில்லை. மாறாகச் சேவலின் தலையில்லா உடம்பினை ஒரு குச்சியில் செருகி, தெய்வத்தின் முன் வைக்கின்றனர். பன்றி வளர்க்கும் சாதியாரே பெரும்பாலும் பன்றியைப் பலியிடுகின்றனர்.

தென் மாவட்டங்களில் உக்கிரம் மிகுந்த பெண் தெய்வங்களுக்கு இரத்தப் பலியிடும் முறை சற்று அச்சம் தருவதாக அமைகின்றது. நிறைசினையாக உள்ள ஒரு ஆட்டைக் கொண்டுவந்து பெண் தெய்வத்தின் முன் நிறுத்துவர். வேல் போன்ற ஒரு கருவியினால் ஆட்டின் வயிற்றைக் குத்திக் கிழித்து அதன் உள்ளே இருக்கும் குட்டியை எடுத்துப் பலி பீடத்தின்மீது வைக்கின்றனர். குத்திக் கிழிப்பதனால் பெண்ணாடும் இறந்துவிடும்; குட்டியும் இறந்துவிடும். இவ்வாறு பலியிடுவதைச் ‘சூலாடு குத்துதல்' என்பர். குற்றுயிராகப் பலிபீடத்தின் மீது இளங்குட்டியை வைத்தலை 'துவளக்குட்டி கொடுத்தல்’ என்பர் (துவளும் குட்டி' என்பதே துவளக் குட்டியாயிருத்தல் வேண்டும்.) சூலாடு குத்துவதற்கு பெண்களையும் குழந்தைகளையும் அவ்விடத்தில் அப்புறப்படுத்திவிடுவர்.


பன்றியைப் பலிகொடுக்கும்போது,சில இடங்களில் தலையை வெட்டாமல் பன்றியை மல்லாக்கக் கிடத்தி அதன் மார்பைப் பிளந்து இதயத்தை எடுத்துப் பலிபீடத்தின்மீது வைக்கும் வழக்கம் உள்ளது. சில இடங்களில் சாமியாடிகள் பலியிடப் பெறும் விலங்குகளின் இரத்தத்தைக் குடிப்பதுண்டு. அவ்வாறு இரத்தம் குடிக்காத கோயில்களில் தெய்வத்தின் முன் படைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்களின்மீது அந்த இரத்தம் தெளிக்கப்படும்.

சினம்மிகுந்த ஆண்தெய்வக் கோயில்களில் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி இருட்டில் சென்று சாமியாடுபவர் சோற்றுத் திரளைகளை ஆகாயத்தில் எறிகிறார். அவ்வாறு வீசி எறிய சாமியாடி கைகளை உயர்த்தும்போதே இருட்டில் மேலிருந்து வந்து தெய்வங்கள் அள்ளிக்கொண்டு போய்விடுகின்றன என்பது நம்பிக்கை. தெய்வங்களின் ‘அருளாட்சி எல்லைக்கு' உட்பட்ட பகுதிகளிலேயே சாமியாடி ஊர்வலம் வருகிறார். அவ்வாறு வரும்போது சந்திகளில் ஆகாயத்தை நோக்கி முட்டை எறிவதும் உண்டு.

நிலத் தொழிலாளர்கள் வணங்கும் சிறுதெய்வங்களில் ஊறவைத்த அரிசியினையும் முளைகட்டிய பயறு வகைகளையும் படையலாகப் பெறுகின்றன. இவ்வகையான தெய்வங்கள் சமைத்த உணவினைப் படையலாகப் பெறுவதில்லை. இவை உணவு சேகரிப்புச் சமூகத்தில் பிறந்த தெய்வங்களாக இருக்க வேண்டும்.

ஊர்த் தெய்வங்களுக்கோ, சாதித் தெய்வங்களுக்கோ, தெய்வங்களுக்கோ நடைபெறும் திருவிழாக்களில் பொங்கலிடும் மரபும் உண்டு. அனைவரும் ஒரே நேரத்தில் பொங்கலிடுகின்றனர். எரிபொருளாகப் பனை ஓலைகளை மட்டும் பயன்படுத்தும் வழக்கமே பரவலாகக் காணப்படுகிறது. பொங்கல் படையலும் இரத்தப் பலியும் சில கோயில்களில் சேர்ந்தே தரப்படுகின்றன. அவ்வகையான கோயில்களில் பலியிடப்படும் விலங்கின் இரத்தத்தைப் படைக்கப்படும் உணவின்மீது தெளிப்பது வழக்கமாக இருக்கிறது. பொங்கலையும் இரத்தப் பலியையும் தனியாக நடத்தும் கோயில்களில் பொங்கல் படையலைச் ‘சைவப் படைப்பு', 'ஆசாரப் படைப்பு’, ‘சுத்தப் படைப்பு' என்று அழைக்கின்றனர். இரத்தப் பலியோடு கூடிய படைப்பு 'மாமிசப் படைப்பு' என்று அழைக்கப்படுகிறது.

ஒரு கோயில் வளாகத்தில் பல சிறுதெய்வங்கள் இருக்கும் போது ஐயனார் போன்ற ஒன்றிரண்டு தெய்வங்கள் இரத்தப் பலி பெறாத சுத்தமுகத் தெய்வமாக இருக்கும். இரத்தப் பலி தரும்போது அத்தெய்வங்களின் சந்நிதியைத் திரையிட்டு மறைத்துவிடுவது வழக்கம்.

குமரி மாவட்டத்தில் சிறுதெய்வக் கோயில் திருவிழாக்கள் சிலவற்றை 'ஊட்டுக் கொடுத்தல்' (உணவு கொடுத்தல்) என்றே கூறுகின்றனர். பொதுவாக, இரத்தப் பலி கொடுப்பது திருவிழாவின் முடிவு நிகழ்ச்சியாகவே அமைகின்றது.

தாய்த் தெய்வங்கள் தம் மக்களைக் காக்க, அரக்க வடிவிலான தீமையை ஆயுதந்தாங்கிப் போரிட்டு அழிக்கின்றன. விசயதசமி எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறைப் பத்தாம் நாளில் எருமைத் தலை அரக்கனைத் தாய்த் தெய்வம் போரிட்டு அழிக்கின்றது. இச்சடங்கு ஒரு பாவனையாக, பெரும்பாலும் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி அமைந்த ஒரு திடலில் நடக்கிறது. இந்தப் போர் நிகழ்ச்சி முடிந்தவுடன் போரிட்ட களைப்புத் தீரத் தாய்த் தெய்வத்திற்கு உழுந்தஞ் சுண்டலும் பானக்காரமும் படைக்கப்படும். தென் மாவட்டங்களில் ஒன்றிரண்டு கோயில்களில் மட்டுமே இது காணப்படுகிறது. பானக்காரம் என்பது புளியும் கருப்புக் கட்டியும் நீரில் கரைத்து ஆக்கப்பட்ட நீர் உணவு. அக்காலத்துப் போர்க்களத்தில் களைப்படைந்த வீரர்களுக்குத் தரப்பட்ட உணவாக இது இருந்திருக்கலாம்.

சிறுதெய்வ வழிபாட்டின் பல கூறுகள் தமிழர்களின் போர் நெறிகளோடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன. உழுந்தும் பானக்காரமும் கூட அப்படி வந்த உணவுப் பழக்கம் என்றே கொள்ள முடிகிறது.