உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் அகராதி/E

விக்கிமூலம் இலிருந்து

E

ear - செவி: காது. ஐம்பொறிகளுள் ஒன்று. புறச்செவி, உட்செவி, நடுச்செவி என இது மூன்று வகைப்படும். செவிமடலும் செவிக்குழலும் புறச்செவியைச் சார்ந்தவை. இச்செவி ஒலி அலைகளை உட்செலுத்துகிறது.

eardrum - செவிப்பறை: நடுச்செவியின் சிறந்த பகுதி ஒலி அதிர்வுகள் செவி நரம்புகளுக்குச் செல்ல இது உதவுவது.

ear ossicles - செவிச் சிற்றெலும்புகள்: மூன்று சிறிய எலும்புகள். பா. еar (உயி)

earth - புவி: நிலவுலகு. கதிரவன் குடும்பக்கோள்கள் ஒன்பதில் ஒன்று. உயரின உயிர்வாழும் ஒரே கோள் இது ஒன்றே. கதிரவனிடமிருந்து மூன்றாவதாகவும், புதன் மற்றும் வெள்ளியை அடுத்துள்ளதாகவுமுள்ள ஐந்தாவது பெரிய கோள். கதிரவனிடமிருந்து 1.488 மில்லியன் கி.மீ. தொலைவிலுள்ளது. (பு.அறி)

earthing - புவி நாட்டல்: மின்கடத்தியை மண்ணுக்குள் செலுத்துதல். இது ஒரு கடத்தும் பொருள். (இய)

earth, motions of - புவி இயக்கங்கள்: இவை இரண்டு. ஒன்று சுற்றுதல் (ரொட்டேஷன்). புவி தன்னைத்தானே ஒரு சுற்று சுற்ற 23 மணி 56 நிமி. ஆகும். மற்றொன்று சுழலுதல் (ரெவல்யூஷன்). கதிரவனைப் புவி ஒரு சுற்று சுற்றி வர 365 நாட்கள் ஆகும். இவ்விரு இயக்கங்களும் ஏனைய எட்டுக் கோள்களுக்கு முண்டு. (பு.அறி)

ebonite - எபோனைட்: வல்கனைட் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்துக் கெட்டியாக்கிச் செய்யப்படும் கடினமான கரிய காப்புப் பொருள். (இய)

ebulliometer - (எபுலியோமீட்டர்) கொதிநிலைமானி: கரைசல்களின் தனிக்கொதிநிலையையும் வேறுபட்ட கொதிநிலையையும் நுண்மையாக அளக்கப் பயன்படுங்கருவி (வேதி)

ecad - சூழினம்: இஃது ஓர் உயிர்வகையின் தொகை அல்லது எண்ணிக்கை. ஒரே மரபணுத் தொகுதியும் ஆனால் வேறுபட்ட உருவியல் பண்புகளும் கொண்டது. இப்பண்புகள் குறிப்பிட்ட வளரிடத்தினால் உண்டானவை. இவை உடல் வேறுபாடுகளினால் ஏற்பட்டவை. ஆகவே, வளரிடம் மாறும்பொழுது இவையும் அவற்றிற்கேற்ப மாறுபவை. சுருங்கக் கூறின். இது ஒரு வளரிடவாழ்வி. பா. ecology.

eccentric - மையம் விலகிய: மையம் பிறழ்ந்த ஒ. concentric.

ecdysis - தோலுரித்தல்: பல்லி, பாம்பு, கரப்பான் முதலியவை தங்கள் தோலை உரிக்க வல்லவை. இதற்குச் சட்டை உரித்தல் என்றும் பெயர். (உயி)

ecdysone - தோலுரிதூண்டி: இது தோலுரிப்பதைத் துண்டும் கொழுப்புகள். வேதிப்பொருள். பூச்சிகளின் முன் மார்புச் சுரப்பிகளால் சுரக்கப்படுவது. (உயி)

ECG - ஈ.சி.ஜி: பா. electro cardiogram.

echnodermata - முட்தோலிகள்: ஆரச் சமச்சீரள்ள கடல் விலங்குகள். 5,000 வகைகள். உடற்சுவரில் சுண்ண ஊட்டமுள்ள தட்டுகள் வலுவூட்ட இருக்கும். குழாய்க் கால்களால் இயக்கம் நடைபெறும். எ-டு. நட்சத்திரமீன், கடல் அல்லி (உயி)

echo - எதிரொலி: சுவர், பாறை முதலிய பொருள்களில் ஒலி மறிக்கப்படும் பொழுது உண்டாகும் விளைவே எதிரொலி. இரண்டுக்குமிடையே உள்ள தாமதம் மறிக்கும் பரப்பில் தொலைவைக் காட்டும். (இய)

echo chamber - எதிரொலிக்கூடம்: வானொலி நிலையத்திலுள்ள எதிரொலிக்கும் அறை. பதிவு செய்யப்படும் ஒலியோடு உண்டாக்கப்படும் எதிரொலி விளைவுகள் சேர்க்கப்படுகின்றன. (இய)

echo location - எதிரொலியால் இடமறிதல்: வெளவால்கள், டால்பின்கள் ஆகியவை மீ ஒலிமூலம் பொருள்கள் இருக்குமிடத்தை அறிதல். (உயி)

echo sounder - எதிரொலிப்பான்: கப்பலுக்குக் கீழுள்ள நீரின் ஆழத்தைக் காணும் கருவி. கப்பலிலிருந்து ஒலி அலையைக் கடலடி நோக்கி அனுப்ப இயலும். அது கடலடியினால் மறித்துத் திரும்புவதற்குரிய நேரம் கணக்கிடப்படுகிறது. இது தொலைவைக் குறிக்கும். இந் நெறிமுறை சோனார் என்னும் கருவியில் பயன்படுவது. (இய)

eclipse - கோள் மறைவு: கிரகணம் ஒரு விண்பொருள் மற்றொரு விண்பொருளால் மறைக்கப்படுதல். இதில் மறைக்கும் பொருள் மறைக்கப்பட்ட பொருள், உற்றுநோக்குநிலை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமையும். எ-டு. திங்கள் மறைவு. கதிரவன் மறைவு. (இய)

eco-awareness - சூழ்நிலை விழிப்புணர்வு. (உயி)

eco-combating - சூழ்நிலைக் கொடுமை மல்லாடல். (உயி)

ecoconservation - சூழ்நிலைப் பாதுகாப்பு. (உயி)

ecofriendly materials - சூழ்நிலைத் தகைவுப் பொருள்கள்: சூழ்நிலை ஏற்புள்ள சேர்பொருளை உய்விடு பொருளில் சேர்த்தல். (உயி)

eco-friendly methods - சூழ்நிலைத் தகவு முறைகள்: களை எடுத்தல், காலத்தில் உழுதல், விதைக்கும் காலத்தை மாற்றுதல், போதிய பாசன ஏற்பாடு, வடிகால், உயிரியல் பூச்சிக் கொல்லிகள் முதலியவை. இம்முறைகள் நிலைப்புள்ள வேளாண்மைக்கு ஏற்றவை.

ecological imbalance - சூழ்நிலைச் சமநிலைக் குலைவு: சூழ் நிலையில் சமநிலை இல்லாமை. (உயி)

ecological rice farming - சூழ்நிலை நெல் பயிரிடுமுறை: இது சிக்கனமானது. சூழ்நிலைத் திட்பமுள்ளது. ஆற்றல் திறனுள்ளது.

ecological revolution - சூழ்நிலைப்புரட்சி: சூழ்நிலைப் பாதுகாப்பு முன்னேற்றம் புகழ் மிக்க பெண் உயிரியலார் ராசல் கார்சன் என்பார் தம் நூலான அமைதி இளவேனில் மூலம் இப்புரட்சியைத் தொடக்கி வைத்தவர்.

ecology - (இக்காலஜி) சூழ்நிலை இயல்: குழியல், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிற்கும் சூழ்நிலைக்குமிடையே உள்ள தொடர்புகளை இது ஆராய்கிறது. 1855இல் ரெய்டர் என்னும் விலங்கியலார் இச்சொல்லை உருவாக்கினார். இதற்கு இருவர் இலக்கணம் வகுத்துள்ளனர். உயிரினங்களுக்கும் சூழ்நிலைக்கு மிடையே உள்ள பரிமாற்றத் தொடர்பு - ஹெக்கல் சூழ்நிலைத் தொகுப்பின் அமைப்பு, அதன் வேலை ஆகியவை பற்றி அறிவதாகும் - ஓடம். இது தற்சூழ்நிலை இயல், தொகு சூழ்நிலை இயல் என இருவகைப்படும். பா. ecad. (உயி)

ecomap - சூழ்நிலைப்படம்: மாசுகளை விளக்கும் படம். ஆற்றல் செலுத்துகை ஒருங்கமைப்போடு தொடர்புடையது. (உயி)

ecomaterials - சூழ்தகவுப் பொருள்கள்: இவை மரபுப் பொருள்களை ஒத்தவை. சூழ் நிலையில் தாக்கம் உண்டாக்காதவை. வெப்பநிலை தடைப் பொருள்கள், இலேசான எடையுள்ள பொருள்கள், அரிமான எதிர்ப்புப் பொருள்கள் முதலியவை இதில் அடங்கும்.

ecorestoration - சூழ்நிலைமீட்பு: பழைய சூழ்நிலையைக் கொண்டுவரல்.

ecotechnology - சூழ்நிலைத் தொழில்நுட்பவியல்: (உயி)

ecoterrorism, combating - சூழ்நிலைக்கொடுமை: கொடுமைகளில் ஒருவகை, எதிரிநாட்டின் சூழ்நிலையைக் கெடுத்து, அந்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைமைகளை இன்னலுக்கு ஆளாக்கிப் பொருளாதாரத்தைச் சிதைத்தல். எ-டு. இராக்-குவைத் போரில் அங்குள்ள எண்ணெய் வயல்களுக்குத் தீயூட்டியமை. அறிவார்ந்த அரசுகள், உயர்குடி மக்கள் அறிவியலார் முதலியோர் இதற்குத் தீர்வு காண இயலும்.

ecoterrorism, kinds of - சூழ்நிலைக் கொடுமையின் வகைகள்: 1.கிச்சிலிக் காரணி வேளாண் அழிவுக் காரணி 2 எண்ணெய் மாசுபாடு எண்ணெய் வயல்களுக்குத் தீ வைத்தல் 3. அணு மாசுபாடு அணுக்கழிவுகள். 4. நுண்ணுயிர் மாசுபாடு நுண்ணுயிர்கள் மூலம் அழிவு.

ecosystem - (எக்கோ சிஸ்டம்) சூழ்நிலைத் தொகுதி: சூழ்நிலைத் தொகுதி. ஓரிடத்தில் வாழும் உயிரிகளுக்கும் அவற்றின் இயல் குழ்நிலைகளுக்குமிடையே ஏற்படும் வினைத் தொகுதி. உயிருள்ளவை, உயிரற்றவை ஆகிய இரண்டும் இதில் ஒன்றை மற்றொன்று சார்ந்து சீராகச் செயற்படும் இயற்கைத் தொகுதி, செயற்கைத் தொகுதி என இஃது இரு வகைப்படும். (உயி)

ecotype - சூழ்நிலை வகை: சூழ்வகை. உடலியல் இனம். குறிப்பிட்ட வளரிடத்திலுள்ள ஓர் உயிர் வகையின் தொகை. இஃது உருவியல் நிலையிலும் உடலியல் நிலையிலும் வேறுபட்டிருக்கும். ஒ. biotype. (உயி)

eco-walking - சூழ்நிலைநடை: சூழ்நிலைப் பேணல்.

ectoblast - எக்டோபிளாஸ்ட் புறப்படல்: புறக்கோளம். இரு படைக் கோளத்தின் வெளிப்புற அடுக்கு. (உயி)

ectoderm - புறப்படை: கருவின் வெளிப்புற அடுக்கு தோல், தோல் சார் அமைப்புகள், நரம்பு மண்டலம், உணர் உறுப்புகள் ஆகியவற்றை இது உண்டாக்குகிறது. ஒ. endoderm. (உயி)

ectogenous - புறத்தே வாழும்: ஒம்புயிரின் உடலுக்கு வெளியே தனித்து வாழ வல்ல உயிரி. (உயி)

ectoparasite - புற ஒட்டுண்ணி: புறத்தே வாழும் ஒட்டுயிரி. ஒ. endoparasite. (உயி)

ectoplasm - புறக்கணியம்: வேறு பெயர்கள். கண்ணறைப் புறணி (செல் கார்டெக்ஸ்), கணிம இழுமம் (பிளாஸ்மா ஜெல்). கண்ணறைக் கணிமத்தின் இழுது போன்ற வடிவம். கணிமப் படலத்திற்குக் கீழுள்ளது. சீரான விறைப்புள்ளது. கணிம இழுமம் கணிமக் கரையமாக (பிளாஸ்மா சால்) மாறவல்லது. பா. endoplasm.

ectotherm - புறவெப்ப வாழ்வி: சூழ்நிலையிலிருந்து நேரடியாக வெப்பத்தைப் பெறும் தனி உயிர். பறவைகள், பாலூட்டிகள் தவிர, ஏனையவை இவ்வாறு வெப்பத்தைப் பெறுபவை. (உயி)

ectozoon - புறவாழ்வி: ஏனைய உயிரிகளின் மேல் வாழும் விலங்கு (உயி)

edaphic factors - மண் காரணிகள்: மண்ணின் இயற்பண்பும் வேதிப்பண்பும் உயிரியல் பண்பும். இவை ஒரு வாழிடத்தில் இன்றியமையாத இயைபுறுப்பாக அமைபவை. தாவரப் பரவலில் அவற்றிற்குள்ள செல்வாக்கே இதற்குக் காரணம். குறிப்பிடக் கூடிய மண் காரணிகளாவன. நீரடக்கம், பிஎச், கரிமப்பொருள், மண்நயம். (உயி)

eddy current - சுழிப்பு மின்னோட்டம்: மின்சுற்றில் தடை குறைவாக உள்ள பொழுது, அதில் மின்னோட்டம் அதிகமிருக்கும். இதனால் கம்பியும் மின்கலங்களும் சூடாகும். மின் கலங்கள் விரைவிலேயே தம் ஆற்றலை இழக்கும். இக்குறைபாடு வரம்பு மீறிய மின்னோட்டமாகும். இது தீவிபத்துக்கு வழிவகுக்கும். ஒ. short circuit. (இய)

EDI, Electronic Data Interchange - மின்னணுத் தகவல் இடைமாற்றம்: மிதஇமா, ஈடிஐ.

EEG - ஈ.ஈ.ஜி: பா. electro encephalogam. (உயி)

eel - விலாங்கு மீன்: நீண்டதும் நொய்ந்ததுமான எலும்பு மீன். செதில்கள் சிறுத்துத் தோலில் புதையுண்டுள்ளன. இடுப்புத் துடுப்புகள் இல்லை. நன்னீரிலும் கடல்நீரிலும் வாழ்வது. எ-டு. ஆன்குவில்லா (உயி)

eel spear - விலாங்கு ஈட்டி: விலாங்கைப் பிடிக்கப் பயன்படும் அகன்ற கவராயமுள்ள கருவி. (உயி)

eelworm - விலாங்குப்புழு: இழைப்புழு அல்லது வட்டப்புழு. பன்றிக்குடல், மனிதக்குடல் முதலியவற்றில் ஒட்டுண்ணியாக வாழ்வது. எ-டு. ஆஸ்காரிஸ் லம்பிரி காய்டிஸ் (நாக்குப்பூச்சி)

effector - இயக்குவாய், இயக்கி: தசை, சுரப்பி அல்லது உறுப்பில் முடியும் இயக்க அல்லது சுரப்பு நரம்புமுனை. (உயி)

efferent - அகல்: வெளிச்செல். 1. அகல் குருதிக் குழாய் மீன். 2. அகல்நரம்பு: மைய நரம்பு மண்டலத்திலிருந்து புறப் பகுதிக்குத் தூண்டலைக் கடத்துவது. ஒ. afferent.

effervescence - நுரைத்தெழல்: வேதிவினையினால் ஒரு நீர்மத்திலிருந்து வளிக்குமிழிகள் விடுபடுதல். பொங்கி எழல் என்றும் கூறலாம். எ-டு. சோடாநீர். (வேதி)

efficiency - பயனுறுதிறன்: 1. மிகக்குறைந்த உட்பாட்டிற்கு (இன்புட்) மிக அதிக வெளிப்பாட்டை (அவுட்புட்) உண்டாக்கும் ஒரு கருவியமைப்பின் திறன். விழுக்காடாகத் தெரிவிக்கப்படுவது. (இய) 2. திறன் வழி அமையும் செயல். (உயி)

efflorescence - பூத்தல்: 1. பூ உண்டாதல், 2. தூள் பூத்தல். படிகம் தன் நீரை இழப்பதனால் உப்பு உண்டாதல். (வேதி)

effluent - கழிவோட்டம்: தூய்மைப்படுத்தும் போது சாக்கடையிலிருந்து ஓடும் நீர். தொழிற்சாலைகளிலிருந்தும் கழிவு நீர் ஆறாக ஒடும். (உயி)

effusion - வளியோட்டம்: ஒரு சிறு துளை வழியே வளி மூலக் கூறுகள் செல்லுதல். (வேதி)

effusiometer - மூலக்கூறு எடைமானி: வளி மூலக்கூறு எடைகளை ஒப்பிடுங்கருவி. ஒரு துளை வழியாக வளி செல்லும்போது, அது எடுத்துக் கொள்ளும் சார்புக் காலத்தை உற்றுநோக்கி ஒப்பிடப்படுவது. (வேதி)

egestion - கழிவகற்றல்: செரிக்காப் பொருள்கள் உணவு வழியிலிருந்து வெளியேறல் (உயி)

egg - முட்டை: இயங்காப் பெண் பாலணு பாதுகாப்புறை உண்டு. சில விலங்குகளில் ஓடு எல்லா வற்றையும் மூடி இருக்கும். இதனுள்ளே மஞ்சள் கரு, வெண் கரு, உட்கரு ஆகிய மூன்றும் இருக்கும். பெண்ணின இனப்பெருக்க அணு. முட்டையணு (எக் செல்) எனப்படும். (உயி)

einstein - ஐன்ஸ்டீன்: ஒளி வேதி இயலில் பயன்படும் ஒளியாற்றல் அலகு. (வேதி)

Einstein equation - ஐன்ஸ்டீன் சமன்பாடு: பொருண்மை, ஆற்றல் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள தொடர்பைக் குறிக்கும் சமன்பாடு. 1905இல் ஐன்ஸ்டின் அறிவித்தது. E = mc3. E = ஆற்றல் அளவு. m - பொருண்மை c - ஒளி விரைவு. (இய)

einsteinium - ஐன்ஸ்டீனியம்: Es. கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய ஓரிமங்கள் (ஐசோடோப்புகள்) இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன. (வேதி)

Einstein number - ஐன்ஸ்டீன் எண்: காந்தப் பாய்ம இயக்கவியலில் பயன்படும் பருமனில்லா எண். இஃது ஒளி விரைவுக்கும் பாய்ம நேர் விரைவுக்குமுள்ள வீதத்திற்குச் சமம். (இய)

Einstein theory - ஐன்ஸ்டீன் கொள்கை: பா. relativity. (இய)

Einstein universe - ஐன்ஸ்டீன் விண்ணகம்: ஐன்ஸ்டீன் விண்ணக மாதிரி. இது நாற்பருமன் கொண்ட உருளை வடிவப்பரப்பு. இப்பரப்பு ஐம்பரும னுடை வெளியில் உள்ளது. இதுவே ஐன்ஸ்டீன் கண்ட விண்ணம். (இய)

ejaculation - விந்துப் பீச்சு: ஆணிலிருந்து முதிர்ந்த விந்துகள் வலிய வெளியேறுதல். (உயி)

ejaculatory duct - விந்துப் பீச்சு குழாய்: இது விந்து கொள்ளகத்தின் குழாய்க்கும் சிறுநீர் அகற்றிக்குமிடையிலுள்ள ஆண் பிறப்புறுப்புக் குழியின் பகுதி. விந்து வெளிச்செல்லுங் குழாய். (உயி)

elasticity - மீள்திறன்: மீட்சிப் பொருள்கள் குறிப்பிட்ட அளவுக்கு நீண்ட பின் தகைவு நீங்கும் பொழுது மீண்டும் பழைய நிலையை அடைதல், எ-டு. இழுத்துவிடும் ரப்பர் கயிறு. பா. Hooke's law. (இய)

elastin - நீளியன்: இணைப்புத் திசுக்களிலுள்ள நீளிழைப் புரதம். (உயி)

electric arc - மின்வில்: மின்னோட்டம் செல்லும்பொழுது, மின்வாய் களுக்கிடையே ஏற்படும் ஒளிர்வெளி. (இய)

electric chair - மின் நாற்காலி: குற்றவாளிகளை உட்கார வைத்து மின்சாரத்தைச் செலுத்திக் கொல்லும் நாற்காலி. அமெரிக்கா முதலிய நாடுகளிலுள்ளது. (இய)

electric bell - மின்மணி: இதில் மின்காந்தப் பயனுள்ளது. கவரகம் மின்சுற்றை மூடித்திறக்கும். இச்சுற்று மூடுவதும் திறப்பதுமாக இருப்பதால், கவரகம் முன்னும் பின்னும் செல்ல, அதன் குமிழ் கிண்ணத்தில் அடிக்கிறது. இப்பொழுது அதன் அதிர் ஒலி உண்டாகிறது. வீடுகளிலும், அலுவலகங்களிலும் அழைப்பு மணியாகப் பயன்படுகிறது. (இய)

electric current - மின்னோட்டம்: மின்னழுத்த வேறுபாட்டால் உண்டாகும் மின்னணு ஓட்டம். இது ஒரு திசை மின்னோட்டம், இருதிசை மின்னோட்டம் என இரு வகைப்படும். இதற்கு ஒளிப் பலன் (மின்விளக்குகள்), வெப்பப்பலன் (மின்னடுப்பு), காந்தப்பலன் (மின்காந்தம்), வேதிப்பலன் (மின்னாற்பகுப்பு) ஆகியவை உண்டு. மீ மின்னோட்டம் (பீக் கரண்ட்) என்று ஒரு வகையுமுண்டு. மின்னோட்ட அலகு ஆம்பியர். (இய)

electric field - மின்புலம்: மின்னேற்றம் நுகரும் விசையுள்ள பகுதி. (இய)

electric flux - மின்பாயம்: காந்தப் புலத்தில் மின்பாய அடர்த்தி. உரிய பரப்பு ஆகிய இரண்டின் பெருக்கற்பலன். (இய)

electric flux density - மின்பாய அடர்த்தி: பா. electric displacement. (இய)

electricity - மின்சாரம்: நிலையாகவுள்ள அல்லது நகரும் மின்னேற்றங்களிலிருந்து உண்டாகும் விளைவு. (இய)

electric lighting - மின் ஒளியேற்றல்: மின்னோட்டங்களால் மின்வெளிச்சம் அளித்தல். மின் விளக்குகள் இதற்குப் பயன்படுதல். (இய)

electric motor - மின் உந்தி: மின்னாற்றலை எந்திர ஆற்றலாக மாற்றும் எந்திரம். (இய)

electric power - மின் திறன்: இது ஒரு மின்தொகுதியில் நடைபெறும் வேலையின் அளவைக் குறிக்கும். அலகு வாட். ஓர் ஓல்ட் மின்னழுத்தத்தில் ஒரு கூலும் மின்சாரத்தைச் செலுத்த ஒரு ஜூல் வேலை நடைபெறுகிறது. ஒரு வினாடிக்கு 1 ஜூல் வேலை 1 வாட் ஆகும்.

வாட் = ஓல்ட் X ஆம்பியர்

P = EC P- திறன்

E- மின்னழுத்தம்

C- மின்னோட்டம்

திறன் = வேலை/நேரம் (இய)

electric probe - மிந்துருவி: மின்னனுக்களின் அடர்த்தியை அளக்கும் கருவி. தவிர, இஃது அயனிகள், சுவர் அழுத்தங்கள், மின்னணு வெப்பநிலை, மீ வெப்பநிலையில் தேர்வு மின்னோட்டங்கள் ஆகியவற்றை அளக்கப் பயன்படுவது. (இய)

electric resistance - மின் தடை: கம்பிகளில் மின்னோட்டம் செல்லும்பொழுது அவை ஏற்படுத்தும் தடை கம்பிகளுக்கேற்ப வேறுபடும். கரி சிறந்த தடை. அலகு ஓம். ஓமின் விதிப்படி ஒரு கடத்தியின் இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஓர் ஓல்ட்டும் அதனுள் செலுத்தப்படும் மின்னோட்டம் ஓர் ஆம்பயிரும் என்றால், அதன் மின்தடை ஓர் ஓம்.


மின்தடை = மின்னழுத்தம்/ மின்னோட்டம்

R=E/C (இய)

electric spark - மின்பொறி: ஒரு தடுப்புப்பொருள் வழியாக மின்னிறக்கம் ஏற்படும்போது உண்டாகும் ஒளியும் ஒலியும். (இய)

electric spark plug - மின்பொறிக் கட்டை: மின்பொறியை உண்டாக்க அகக் கனற்சி எந்திரத்தில் இருப்பது. (இய)

electro-analysis, electrolysis - மின்னாற்பகுப்பு: பா. voltmeter. (இய)

electro-cardiogram ECG -இதய மின் வரையம்: இதயத் தசைகள் சுருங்கும் பொழுது மின்வேறுபாடுகளின் ஒளிப்படப்பதிவு. இதய நிலையைக் கண்டறிய எடுக்கப்படுவது. (இய)

electro chemical equivalent - மின்வேதி இணைமாற்று: ஒரு கூலும் மின்சாரத்தை மின்பகுளிக்கரைசல் வழியாகச் செலுத்தும் பொழுது, விடுபடும் தனிமத்தொகுதி அல்லது தனிமக் கிராம்களின் எண்ணிக்கை. அல்லது 1 ஆம்பியர் மின்னோட்டத்தில் 1 வினாடியில் மின்னாற் பகுப்பு மூலம் வெளியேறும் உலோகப் பொருண்மை. (இய)

electrochemistry - மின்வேதி இயல்: வேதி மாற்றங்களுக்கும் மின்சாரத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை ஆராயுந்துறை. (வேதி)

electrocution - மின்பாய்வு: மின்சாரம் உடலில் பாய்வதால் இறத்தல். (இய)

electrode - மின்வாய்: இது ஒரு கடத்தி. இதன் வழியாக மின்னோட்டம் மின்பகுகலத்தை அடையும். அல்லது வெளியேறும். வளியிறக்கு குழாய், வானொலித் திறப்பி (வால்வு) ஆகியவை மின்வாய்களே. நேர்க்குறிவாய் நேர்மின்வாய். எதிர்க்குறிவாய் எதிர்மின்வாய். (இய)

electro encephalogram, EEG - மூளை மின்வரையம்: மூமிவ. பெருமூளைப் புறணியின் நரம்பணுக்களால் உண்டாக்கப்படும் மின்னழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்தல். (இய)

electro extraction - மின்னாற் பிரிப்பு: ஓர் உலோகத்தை அதன் உப்புகளிலிருந்து பிரித்தல். அவ்வுப்புக்கரைசலின் வழியாக மின்சாரத்தைச் செலுத்திப் பகுப்பின் மூலம் உலோகத்தைப் பெறலாம். இது மின்னாற்பகுப்பு முறையே. (வேதி)

electrolytes - மின்பகுளிகள்: நீரில் கரைந்து நேரயனிகளையும், எதிரயனிகளையும் கொடுக்கவல்ல வேதிப்பொருள்கள். எ.டு. சோடியம் குளோரைடு. பா. catholyte. ஒ. non-electrolytes. (இய)

electromagnet - மின்காந்தம்: ஓர் ஆணியில் செப்புக்கம்பியை வரிச்சுற்றாகச் சுற்றுக. இரு புறங்களிலும் மின் கலத்தில் இணைப்பதற்கேற்றவாறு, கம்பி முனைகளை விடுக. இதுவே எளிய மின்காந்தம். இதன் வழியே மின்சாரத்தைச் செலுத்துக. மின்சாரம் இருக்கும் வரை ஆணியில் காந்தம் இருக்கும். கருவிகளுக்கேற்ப இதனமைப்பு வேறுபடும். மின்மணி, மின் பளுத்துக்கி முதலிய கருவிகளில் இது பயன்படுவது. (இய)

electromagnetic environment - மின்காந்தச் சூழல்: குறிப்பிட்ட பரப்பு அல்லது வெளியில் தோன்றும் வானொலி அதிர்வெண் புலங்கள். (இய)

electromagnetic induction - மின்காந்தத் தூண்டல்: 1831இல் இதனைக் கண்டறிந்தவர் மைக்கல் பாரடே. காந்தவிசைகளைக் கடத்தி ஒன்று வெட்டுகிற பொழுது, அக்கடத்தியில் மின்சாரம் உண்டாகிறது. இவ்வாறு மின்சாரத்தை உண்டாக்குவதற்கு மின்தூண்டல் என்று பெயர். இந்நெறிமுறை தூண்டுசுருள், மின்னியக்கி, மின் பிறப்பி முதலிய கருவிகளில் பயன்படுவது. இம்மின்சாரமே வாழ்க்கையில் அதிகம் பயன்படுவது. இக்கண்டுபிடிப்பு 19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு. (இய)

electromagnetic spectrum - மின்காந்த நிறமாலை: மின்காந்த கதிர்வீச்சின் அதிர்வெண்கள் அல்லது அலைநீளங்களின் மொத்த எல்லை. இதில் எக்ஸ் கதிர்கள், புற ஊதாக்கதிர்கள் ஒளிக்கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள், வானொலி அலைகள் ஆகியவை அடங்கும். (இய)

electromagnetic wave - மின் காந்த அலை: ஒரு மின்னேற்றத்திலிருந்து வெளிச்சென்று பரவும் அலைக்கழிவு. (இய)

electromagnetism - மின்காந்தவியல்: காந்தத்திற்கும் மின்சாரத்திற்குமுள்ள தொடர்பை ஆராயுந்துறை. (இய)

electromotive force - மின்னியக்கு விசை: ஒரு மின்கலத்தின் இரு முனைகளுக்கிடையே நிலவும் மின்னழுத்த வேறுபாடு, அலகு ஓல்ட் (இய) மின்னியக்குவிசை (ஓல்ட்) மின்னோட்டம் (ஆம்பியர்) மின்தடை (ஓம்) ஆகிய மூன்றிற்குமுள்ள தொடர்பு

C = E/R

C- மின்னோட்டம்

E- மின்னியக்குவிசை

R- தடை இய)

electron - மின்னனு: எதிர்மின்னேற்றமுள்ள ஓர் அடிப்படைத் துகள். எல்லா அணுக்களிலும் அணுக்கருவைச் சுற்றியுள்ளது. பா. atom. (இய)

electron dot formula - மின்னணுப் புள்ளி வாய்பாடு: வேதிப்பினைப்புகளின் போது, இணைதிறன் மின்னணுக்களே கலந்து கொள்கின்றன. ஆகவே, அணுக்களை எழுதும் போது குறியீட்டைச் சுற்றி இணைதிறன் மின்னணுக்களை மட்டும் புள்ளியிட்டுக் காட்டினால் போதும். அயனிச் சேர்மங்கள் தோன்றுவதை இவ்வகையில் காட்டுவதற்கே புள்ளி வாய்பாடு என்று பெயர். (வேதி)

electron gun - மின்னணுத் துப்பாக்கி: நிலையான மின்னணுக் கற்றையை உண்டாக்குங் கருவியமைப்பு. மின்னணு நுண்ணோக்கியிலும் தொலைக் காட்சியிலும் பயன்படுவது. (இய)

electronic clocks- மின்னணுக் கடிகாரங்கள்: இவை மிக நுண்ணிய அளவீடுகளைத் தருபவை. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அளவுகளை அடிப்படையாகக் கொண்ட மின்னியக்கக் கருவி. இதற்கு சீசியம் 133 என்னும் தனிமத்தின் அணு பயன்படுகிறது. இக்கடிகாரம் அமெரிக்காவிலுள்ள போல்டர் கொலரா டோ ஆய்வுக் கூடத்திலுள்ளது. இது 6000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு வினாடி இழக்கவோ கூடவோ செய்யும். (இய)

electronic commerce - மின்வணிகம்:

electronic gambit - மின் சதுரங்கம்:

electronic mail, EM - மின் அஞ்சல்: ஒரு விரைவு செய்தித் தொடர்புமுறை. கணிப்பொறி வழியே நடைபெறுவது. (தொ.நு)

electronics - மின்னணுவியல்: 1. மின்சுற்றுகள் பெருக்கத்தை ஆராயும் பயன்முறை அறிவியல், மிக விரைவாக வளர்ந்துள்ள தொழில் நுணுக்கவியல். வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறி அறிவியல் ஆகியவற்றின் உயிர்நாடி இது. 2. மின்னணுக் கருவிகள் பா. consumer electronics. (இய)

electron lens - மின்னணு வில்லை: மின்னணுக் கற்றைகளை குவிக்கும் கருவியமைப்பு. இவ்வில்லைகள் மின்புலங்களைப் பயன்படுத்துபவை. இப்புலங்கள் உலோக மின்வாய்கள் அல்லது காந்தப்புலங்களால் உண்டாக்கப்படுபவை. (இய)

electron microscope - மின்னணு நுண்ணோக்கி: மின்னணு வில்லைகள் குவிக்கும் மின்னணுக் கற்றையைப் பயன்படுத்திப் பெரிய உருவை உண்டாக்கும் கருவி. உருப்பெருக்கம் 2,00,000 தடவைகளுக்கும் மேல் இருக்கும்.

electron mirror - மின்னணு ஆடி.

electronic newspaper - மின்செய்தித்தாள்: 1996இல் ஜப்பான் வெளியிட்டது.

electroplating - மின்முலாம் பூசுதல்: இது மின்னாற்பகுப்பு அடிப்படையில் நடைபெறுவது. ஓர் உலோகம் மற்றொரு உலோகத்தின் மீது படியுமாறு செய்யப்படுகிறது. மின்முறிகலத்தில் பொட்டாசியம் பொன் சேர்ந்த இரட்டைச் சயனைடு கரைசல் ஊற்றப்படுகிறது. இது மின்பகுளி, எதிர்மின்வாயில் செப்பு வளையல் தொங்கவிடப்படுகிறது. நேர்மின் வாயில் கரைய வேண்டிய பொன் தொங்க விடப்படுகிறது. மின்கற்றை மூடப் பொன் கரைந்து செம்பு வளையலில் படிந்து, அதைப் பொன் வளையல் போலாக்குகிறது. (இய)

electroscope - மின்னோட்டங்காட்டி: மின்னோட்டமானியின் எளிய அமைப்பு. மின்னோட்டத்தைக் கண்டறியவும், மின்னோட்டத்தால் உண்டாகும் காந்த பலனை அறியவும் மின்னோட்டத்திசை அறியவும் பயன்படுவது. (இய)

electrotherapy - நோய்மின் பண்டுவம்: மின்சாரம் மூலம் நோயைக் குணப்படுத்தல். (உயி)

element - தனிமம்: மூலகம். ஒரே அணு எடை கொண்ட அணுக்களால் முழுதுமான பொருள். பொதுவான வேதிமுறைகளால் எளிய பொருள்களாகச் சிதைக்க முடியாதது. இஃது உலோகம், அலோகம் என இருவகைப்படும். உலோகத்தில் நீர்ம நிலையில் இருப்பது பாதரசம். அலோகத்திலிருப்பது புரோமின். உலோகப் போலிகளும் (அண்டிமணி, சவ்வீரம்) வேற்றுருக்களும் (கரி, கந்தகம்) உண்டு. அலோகங்கள் பல (உயிர் வளி, நீர்வளி) வளிகள். நூற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் உள்ளன. (வேதி)

elements 101 - 103 - தனிமங்கள் 101-103: 101 சோவியத்து வேதி இயலார் மெண்டலிவ் பெயரில் அமைந்தது. இவரே முதன் முதலில் தனிமங்களை வகைப் படுத்தியவர். 102 No, 103 Lr. பா. new elements.

element 104 - தனிமம் 104: கதிர்த் தனிம வரிசையைப் பின் தொடரும் முதல் தனிமம். அணு எண் 104. இதனை உருசியாவும், அமெரிக்காவும் தொகுத்துள்ளன. இதன் ஓரிமம் அன்னில் குவாடியம். தனிமம் 105, 106 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அன்னில்பெண்டியம் (105) அன்னில் ஹெக்சியம் (106) என்பவையாகும். (வேதி)

elementary particle - மூலத்துகள்கள்: அடிப்படைத் துகள்கள். இவை பிரிக்க இயலாதவை. இவற்றிலிருந்து எல்லாப் பருப்பொருளும் உருவாகின்றன. எ-டு. எலக்ட்ரான், மீசான் (இய)

elements of an orbit - சுற்றுவழிக்கூறுகள்: ஒரு விண்பொருளின் வழியைக் குறிக்க ஆறு சுட்டளவுகள் உள்ளன. 1. ஏறு கணுவின் நெடுங்கோடு 2. சுற்று வழிச் சாய்வு 3. கதிரவன் உண்மை நிலை நெடுங்கோடு 4. பெரும் அரையச்சு 5. மையப் பிறழ்ச்சி 6. கதிரவன் அண்மை நிலையைக் கோள் கடக்கும் நாள். நிலாக்களிலும் இரட்டை விண்மீன் சுற்று வழிகளிலும் இக்கூறுகள் பயன்படுகின்றன. இவை செயற்கை நிலாக்களுக்கும் பொருந்தும். (வானி)

elephantiasis - யானைக்கால்: கொழுநீர் தடைப்படுவதால், காலிலும் கையிலும் வீக்கம் ஏற்படுவது. முதன்மையாகக் காலிலேயே இருக்கும் பைலேரியா என்னும் நூற்புழுவால் ஏற்படும் வெப்பமண்டல நோய். பா. anopheles, mosquitoes. (உயி)

eliminator - மின்கலம் நீக்கி: மின்கலம் இல்லாமல் ஒரு திசை மின்னோட்டத்தை அளக்குங் கருவி. இதில் ஒர் உலோக மின்திருத்தியைப் பயன்படுத்தி ஒருதிசை மின்னோட்டத்தைப் பெறலாம். படிகப் பெருக்கி வானொலிக்கு இது தேவை. (இய)

Elinvar - எலின்வார்: உலோகக் கலவை. நிக்கல் குரோமியம் சேர்ந்த எஃகுவின் வாணிபப் பெயர். சிறு அளவில் டங்ஸ்டனும் மாங்கனீசும் சேர்ந் திருக்கும். கடிகாரங்களுக்கு மயிரிழைச் சுருள்கள் செய்யப் பயன்படுவது. (இய)

ellipse - நீள்வட்டம்: கூம்பகம் (கண)

emasculation - மகரந்த நீக்கம்: பூந்தக நீக்கம். தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்க ஒரு பூவில் மகரந்தப்பைகளை நீக்குதல். (உயி)

embryo - வளர்கரு: கருவணுவிலிருந்து உண்டாகும் பலவணுப் பொருள். புதிய கால்வழியை உண்டாக்குவது. பல நுண்ணிய பகுதிகளைக் கொண்டது. (உயி)

embryogeny - கருத்தோற்றம்: விலங்குக் கருவளர்ச்சி நிலைகளை உள்ளடக்கியது. கருவாக்கம் என்று கூறலாம். (உயி)

embryosac - கருவுறை: உறையில் விதையுள்ள தாவரத்தின் பெருஞ்சிதல். இச்சிதலே பின் விதையாவது. (உயி)

emery - தேய்ப்புக்கல்: இயற்கையில் கிடைப்பதும் கடினமானதும் சிலிகான் அற்றதுமான பொருள். சாணை உருளைகளில் பயன்படுவது. (வேதி)

emigration - குடிபெயர்தல்: படிப்பு, தொழில் முதலிய காரணங்களுக்காக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மக்கள் செல்லுதல் (பு.அறி)

eminence - புடைப்பு: ஒர் உறுப்பில் ஏனைய பகுதிகளை விட உயர்ந்து காணப்படும் பகுதி. ஒ. process, prominence.

emissivity - கதிர்வீசுதிறன்: எண். அனைத்தும் சமநிலையில் இருக்கக் கரும்பொருள் ஒன்று வீசும் திறனுக்கு ஒப்பாக ஒரு பரப்பு வீசும் திறன். இதற்கு அலகில்லை. (இய)

emulsification - பால்மமாக்கல்: பா. emulsion. (வேதி)

emulsifier - பால்மமாக்கி: பால்மம் செய்யுங் கருவி. (வேதி)

emulsion - பால்மம்: ஒரு நீர்மத்தில் மற்றொரு நீர்மத்தின் கூழ்மத் துகள்கள் விரவி இருத்தலுக்குப் பால்மம் என்று பெயர். எ-டு. பால் (வேதி)

enamel - பற்சிப்பி: பல்லின் வெண்ணிறப் புறவுறை. பல்லைப் பாதுகாப்பது. (உயி)

enantiotropy - எதிர்வேற்றுருமை: ஒரு தனிமத்தின் வேறுபட்ட நிலைத்த அயல் வேற்றுருக்கள் வேறுபட்ட வெப்பநிலைகளில் அமைந்திருத்தல். எ-டு. கந்தகம் பா. (வேதி)

encephalitis - மூளையழற்சி: மூளைவீக்கம். நச்சியத்தினால் ஏற்படுவது. இதற்கு உறக்க நோய் என்றும் பெயர். உடல் ஊக்கமும் உளவூக்கமும் குறையும். (உயி)

encephalon - மூளை: முதுகெலும்பு விலங்குகளின் சிறந்த உறுப்பு. பா. brain.

encystment - கூடுறைதல்: உயிரியைச் சுற்றித் தோன்றும் கடின உறை. பாதுகாப்பளிப்பது, உயிரிகள் இனப்பெருக்கம் செய்ய அல்லது ஒவ்வாக் காலங்களைத் தவிர்க்கக் கடின உறை ஒன்று சுரந்து அதனுள் வாழ்தல். (உயி)

endemic - இடநோய்: 1 எல்லாக் காலங்களிலும் ஓரினத்தில் குறிப்பிட்ட இடங்களிலுள்ளது. 2. மனித இனத்தில் நிலையாகக் காணப்படுவது. ஒரு சிலரிடம் மட்டுமே மருத்துவ முறையில் கண்டறிய இயலும். (உயி)

endergonic - ஆற்றல் நாடுவினை: இது ஒரு வினைமுறை. ஆற்றலை உறிஞ்சுவது இதில் உடனிகழ்ச்சியாக அமையும். எ.டு. புரதத் தொகுப்பு. ஒ. exergonic.

endoblast - அகப்படல்: அகக்கோளம் இருபடைக் கோளத்தில் உட்புறவடுக்கு (உயி)

endocardium - இதய அகவுறை: உட்புறமாகக் கரையிடப்பட்டிருக்கும். இதயப்படலம். இது இடைப்படையிலிருந்து உண்டாவது. (உயி)

endocarp - அகவுறை உள்ளுறை: கனி உறைகளுள் ஒன்று. (உயி)

endocrine glands - அகச்சுரப்பிகள்: இவை நாளமில்லாச் சுரப்பிகள். மனித உடலிலுள்ளவை. தங்கள் சுரப்புகளை நேரடியாகக் குருதியில் சேர்ப்பவை.

endoderm - அகப்படை: வளர் கருவின் மூன்றடுக்குகளில் ஒன்று. மூன்றாவதாக உள்ளே இருப்பது. இதிலிருந்து தொண்டை, மூச்சு வழி, உணவு வழி, சிறுநீர்ப்பை, சிறுநீர் அகற்றி ஆகியவற்றின் புறப்படலம் உண்டாகிறது. பா. ectoderm. (உயி)

endodermis - அகத்தோல்: உட்தோல். தாவரத் தண்டுகளில் புறணியை மையத் திசுவிலிருந்து எல்லைப்படுத்தும் அணுவடுக்கு. தாவர வேரில் குழாய்த்திரளைச் சூழ்ந்துள்ள உருளை வடிவ அடுக்கு. (உயி)

endogamy - அகக்கலப்பு: ஒரே தாவரத்திலுள்ள இரு பூக்களுக்கிடையே நடைபெறும் மகரந்தச் சேர்க்கை, இரண்டும் பெண்ணாகவுள்ள சேயணுக்கள் சேர்தல். (உயி)

endogenous - அகத்தெழு: தரை கீழ் ஒரு விதை இலைத் தாவரங்களில் விதை முளைக்கும் பொழுது விதை இலை தரைக்கு மேல் வராதிருத்தல். எ-டு. நெல். பா. epigial. ஒ. exogenous. (உயி)

endolymph - அகக்கொழுநீர்: அக நிணநீர். உட்செவியிலுள்ள அரைவட்டக் குழல்களில் நிரம்பியுள்ள நீர் உடல் நிலைப்புக்குக் காரணம். (உயி)

endoparasite- அக ஒட்டுண்ணி: உள்ளே வாழும் ஒட்டுயிரி. எ-டு. நாடாப்புழு. (உயி)

endoplasm - அகக்கணியம்: வேறு பெயர் கணிமக் கரையம் (பிளாஸ்மா சால்). கணிம இழுமத்தினுள் (பிளாஸ்மா ஜெல்) அமைந்துள்ள அகக்கணியத்தின் கரைய வடிவம். தடையின்றி ஓடக்கூடியது. கண்ணறை உறுப்பிகளைக் (ஆர்கனேல்ஸ் கொண்டது. இழும கரைய மாற்றங்களால் (சால்ஜெல் கன்வெர்ஷன்ஸ்) அமீபா இயக்கம் நடைபெறுகிறது. ஒ. plasmagel. (உயி)

endoplasmic reticulum - அகக் கணிய வலைப்பின்னல்: தட்டையானதும் படலங்களால் வரையறுக்கப்பட்டதுமான தொகுதி. கண்ணறைக் கணியத்தின் வழியாக ஓடுவது. (உயி)

endopleura - அகவுறை: விதையின் உள்ளுறை. (உயி)

endoscopic - அகநோக்கு வளர்ச்சி: தாவர முளைக்கரு வளர்ச்சியில் கருவணுவின் முதல் பிரிவின் போது உண்டாகும் அகவணு உட்கருவாகவும் புறவணு தாங்கியாகவும் வளர்தல். எ-டு. அவரை. ஒ exoscopic. (உயி)

endoskeleton - அகச்சட்டகம்: அகக்கூடு. உடலினுள்ளே அமைந்த சட்டகம். தலை எலும்புக்கூடு. முதுகெலும்பு. புறத்துறுப்பு எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டது.பா. exoskeleton. (உயி)

endosmosis - அகஊடுபரவல்: அரைப்பரவல் படலத்தின் வழியாகக் கரைப்பான் வெளியிலிருந்து உயிரணுவின் உள்ளே செல்லுதல். (உயி)

endosperm - முளைசூழ்தசை: அகச்சூழ்திசை. (உயி)

endospore - அகச்சிதல்: உறையற்றது. சில நீலப்பசும் பாசிகளில் காணப்படுவது. (உயி)

endosulfan - C9H4Cl4O2S எண்டோசல்பன்: மாநிறப்படிகம். நீரில் கரையாது. சைலீனில் கரையும். பூச்சிக்கொல்லி (வேதி)

endotheca - அகமென்னுறை: ஆண்குறி உறையின் உட்சுவர். (உயி)

endothelium - அகமென்படலம்: குருதிக் குழாய்கள், கொழுநீர்க் குழாய்கள் ஆகியவற்றின் புறப்படலக் கரை. (உயி)

endotherm - அகவெப்பநிலை விலங்கு: சிதைமாற்றம் மூலம் தன் உடலினுள்ளேயே வெப்பத்தை உண்டாக்கித் தன்உடல் வெப்பநிலையினை நிலையாக வைத்துக் கொள்ளும் விலங்கு எ-டு. பறவை. (உயி)

endothermic reaction - அக வெப்பவினை: வெப்பம் அல்லது ஆற்றல் தேவைப்படும் வேதி வினை. எ-டு. புரதத் தொகுப்பு. (உயி)

endotoxins - அகநஞ்சுகள்: கண் ணறையில் காணப்படும் நச்சுப் பொருள்கள். பா. exotoxins. (உயி)

endrin - C6H8Cl6O எண்ட்ரின்: மிக நச்சுள்ள அய்டிரோ கார்பன். பூச்சிக்கொல்லிகளில் ஒன்று. நீரில் கரையாதது. ஆல்ககாலில் சிறிது கரையும். (வேதி)

energy - ஆற்றல்: ஒரு தொகுதியின் பண்பும் அதன் வேலை செய்யும் கொள்திறனுமாகும். ஆற்றலுக்கும் வேலைக்கும் ஒரே அலகு ஜூல் ஆகும். வேலை நடைபெற ஆற்றல் மாற்றம் தேவை.

ஆற்றல் இருவகைப்படும் 1. இயக்க ஆற்றல் 2. நிலையாற்றல் ஆற்றல் வடிவங்கள் பல. வேதியாற்றல், வெப்பஆற்றல், மின்னாற்றல், காந்த ஆற்றல். ஒர் ஆற்றல் மற்றோர் ஆற்றலாக மாற வல்லது. மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக அல்லது எந்திர ஆற்றலாக மாறவல்லது. (இய)

energy audit - ஆற்றல் தணிக்கை: ஆற்றல் பாதுகாப்புக்கு முதல்படி ஆற்றலை அறிவார்ந்த முறையில் பயன்படுத்த வழிவகுப்பது. (தொ.நு)

energy conservation - ஆற்றல் பாதுகாப்பு: ஆற்றல் வீணாகச் செலவழிப்பதைத் தடுப்பது. உரிய கட்டுப்பாட்டு அமைப்புகளை எந்திரங்களில் பயன்படுத்தி இதைச் செய்யலாம். (இய)

energy management - ஆற்றல் மேலாண்மை: மின்னாற்றலை சிக்கனமாக அறிவார்ந்த முறை யில் பயன்படுத்தல் (இய)

engine - எந்திரம்: ஒருவகை ஆற்றலை எந்திர ஆற்றலாக மாற்றும் கருவியமைப்பு. எ-டு. வெப்ப எந்திரம். (இய)

enterokinase - எண்டிரோகினேஸ்: முதுகெலும்பிகளின் குடல் நொதி. கணைய நீரின் செயலற்ற டிரிப்சினோஜனைச் செயலுள்ள டிரிப்சினாக மாற்றுவது. (உயி)

enteron - குடல்: 1. குழியுடலிகளின் உடற்குழி. 2. உயர்விலங்குகளின் உணவு வழி. (உயி)

enthalpy - உள்ளீட்டு வெப்பம்: H. ஒரு தொகுதியின் பருமன் (V). அழுத்தம் (P)ஆகிய இரண்டின் பெருக்குத் தொகையோடு அதன் உள்ளாற்றலை (U) சேர்க்க வரும் கூடுதல். H = U+PV. சுருக்கமாக இதனை ஒரு பொருளின் வெப்ப அடக்கம் எனலாம். ஒ. entropy. (வேதி)

entomologist - பூச்சி இயலார்: பூச்சிகளை ஆராய்பவர். (உயி)

entomology - பூச்சிஇயல்: பூச்சிகளை ஆராயுந்துரை. (உயி)

entomophagy - பூச்சியுண்ணல்: பூச்சிகளை உணவாகக் கொள்ளுதல். (உயி)

entomophily - பூச்சிக்கவர்ச்சி: பூச்சிகளினால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல். மல்லிகையிலும் தாமரையிலும் பூச்சிகளால் இச்சேர்க்கை நடைபெறுதல். (உயி)

entropy - மாற்றீட்டு வெப்பம்: மீள்மாற்றம் பெறும் ஒரு தொகுதியில் மாறுவெப்பமடைதலின் வரையறை இதுவே. உறிஞ்சப்பட்ட வெப்பத்தை, வெப்ப இயக்க வெப்பநிலையால் வகுத்துக் கிடைக்கும் ஈவாகும். ஒ. enthalpy.

entropy diagram - மாற்றீட்டு வெப்பப்படம்: மாற்றீட்டு வெப்ப மாற்றங்களைக் காட்டும் வரை படம். (வேதி)

environment - சூழ்நிலை: சூழியல், வேதிஇயல், இயற்பியல், உயிரியல் காரணிகளின் தொகுமொத்தம், இக்காரணிகளுக்கு ஒர் உயிரி உட்பட்டுள்ள நிலை. என்பது மனிதன் உட்படத் தாவரங்களையும் விலங்குகளையும் உள்ளடக்கியது. (உயி)

environmental degradation statistics - சூழ்நிலை இறக்கப் புள்ளி விவரங்கள்: 1. மொத்த நிலப்பரப்பில் 1990இல் காடுகள் 40%. 1994இல் 13%. 2. ஒவ்வோராண்டும் உலக வெப்ப மண்டலக் காடுகள் 17 மில்லி ஹெக்டேர்கள் என்னும் அளவில் அழிந்து வருகின்றன. 3. இந்தியக் காடுகள் ஒவ்வோராண்டும் 28% அளவுக்கு வெட்டப்படுகின்றன. 4. 21ஆம் நூற்றாண்டிற்குள் 60,000 சிறப்பினங்கள் (தாவரம், விலங்கு) அழியும். அதாவது உலக மொத்தத்தில் இது 4 இல் 1 பங்கு. (உயி)

environment friendly - சூழ்நிலை தகவுள்ள எ-டு. மண்புழு.

environment friendly technologies - சூழ்நிலை தகவுத் தொழில் நுட்பங்கள்: கலத்தின் படலத் தொழில்நுட்பம், குளோரின் காரத் தொழிற்சாலையில் பயன்படுவது. (10.8.1996).

enzyme - நொதி: இஃது ஒர் உயிரியல் வினைஊக்கி, தான் எவ்வகை மாற்றமுமடையாமல் தன்னுடன் சேருகின்ற பொருளை மாற்றம் அடையச் செய்யும். எ-டு. டயலின், அமிலேஸ்.

enzyme technology - நொதித் தொழில் நுட்பவியல்: தொழிற்சாலை முறைகளில் பிரிக்கப்பட்டதும், தூய்மையானதுமான நொதிகளின் பயனை ஆராயுந்துறை. (உயி),

enzymology - நொதியியல்: நொதிகளை அறிவியல் முறையில் ஆராயுத்துறை. (உயி)

eosin - ஈயாசின்: காடிச்சாயம் கண்ணறைக் கணியத்தை இளஞ்சிவப்பாகவும் செல்லுலோசைச் சிவப்பாகவும் மாற்றுவது. (உயி)

epiblast - மேற்படல்: மேற்கோளம் மேல்வளர்கருவின் வெளிப்புற அடுக்கு (உயி).

epicalyx - மேல்வட்டம்: உண்மை யான புல்லிவட்டத்திற்கு வெளியே உள்ள அடுக்கு பூவடிச் செதில்கள் அல்லது இலையடிச் செதில்களாலானது. எ-டு. செம்பருத்தி. (உயி)

epicarp - மேலுறை: பொதுவாகக் கனிகளின் வெளிப்புற உறை. எ-டு. மா. (உயி)

epicotyl - விதையிலை மேல்தண்டு: முளைக் கருவில் விதையிலைக்கும் இலைக்குமிடையே உள்ள பகுதி. எ-டு. அவரை விதை. ஒ. hypocotyl. (உயி)

epidemic - கொள்ளைநோய்: பெருமளவில் பரவி அழிவை உண்டாக்கும் நோய்: காலரா (கழிநோய்). (உயி)

epidemiology - கொள்ளை நோய் இயல்: கொள்ளை நோய்களை ஊக்குவிக்கும் காரணிகளை ஆராயுந்துறை. (உயி)

epidermis - மேல்தோல்: தாவரப் புறத்தோல், வெளிப்புறவடுக்கு. பாதுகாப்பளிப்பது (உயி)

epidiascope - மேல் இருநோக்கி: ஒருவகைப் படவீழ்த்தி. மேல்நோக்கியும் இருநோக்கியும் சேர்ந்தது. ஒளி ஊடுருவும் பொருள்களையும் (கண்ணாடி வில்லை. ஒளி ஊடுருவாப் பொருள்களையும் படங்கள், வரைபடங்கள். திரையில் வீழ்த்த வல்லது. (இய)

epigeal germination - விதையிலை மேல் முளைத்தல்: விதை இலைகள் மண்ணிற்கு மேல் இருக்குமாறு விதை முளைத்தல்: அவரை விதை. பா. hypogeal. (உயி)

epiglottis - குரல்வளை மூடி: குரல்வளையைப் பாதுகாக்கும் உறுப்பு. இம்மூடி குருத்தெலும்பாலானது. உணவு அல்லது நீர் செல்லும்பொழுது மட்டும் இது மூடி இருக்கும். (உயி)

epigynous - கீழ்ச்சூல்பைப்பூ: புல்லிகள், அல்லிகள், மகரந்தத் தாள்கள் ஆகியவை பூத்தளத்தின் உச்சியிலிருந்து கிளம்புதல். இவ்வாறு பூவின் மற்றப் பகுதிக்குக் கீழுள்ள சூல்பை கீழ்ச்சூல் பைப்பூ ஆகும். எ.டு. சூரியகாந்திப்பூ, பூசுனைப்பூ. (உயி)

epinasty - மேலெழுந்து வளைவு: ஒர் உறுப்பின் மேல் பகுதியில் ஏற்படும் மிகு வளர்ச்சியால் அது கீழ்நோக்கி வளைதல். (உயி)

epipetalous - அல்லிமேல் இணைந்த தாள்கள்: மகரந்தத் தாள்கள் அல்லிகளிலிருந்து வளர்தல், ஊமத்தம்பூ. (உயி)

epiphyllous - மேல் வளர் தாவரம்: தரையில் படியாமல் இலையின் மேலோ பிற தாவரத்தின் மீதோ வளருந் தாவரம்: மரத்தாழை. (உயி)

epiphysis -மேல்வளரி: வளரும் நீண்ட எலும்பின் முனை. எலும்புத் தண்டு அல்லது குறுக்கு வளரியிலிருந்து குருத்தெலும்பினால் அது பிரிக்கப்பட்டிருக்கும். (உயி)

epiphyte - மேல்தொற்றி: தன் உணவைத் தானே உருவாக்கிக் கொண்டு, இருப்பிடத்திற்காக மட்டும் பிற தாவரங்களில் வாழும் தாவரம். மரத்தாழை. (உயி)

episepalous -புல்லிமேல் இணைந்த தாள்கள்: மகரந்தத் தாள்கள் புல்லிகளிலிருந்து வளர்தல். (உயி)

epithelium - மேல் மென்படலம்: மூடுதிசு அல்லது கரையிடுந்திசு. தொண்டை, தோல், கண் முதலிய உறுப்புகளில் இருப்பது. (உயி)

epsom salt - எப்சம் உப்பு: பா. magnesium suiphate. (வேதி)

equation - சமன்பாடு: ஒன்று மற்றொன்றுக்குச் சமம் என்னும் கூற்று. குறிப்பாக, மூன்று அடிப்படை அறிவியல்களில் இது பயன்படுகிறது.

1. கணக்கு: 2-3 = 4x+2.

2. இயற்பியல்: E = mc2

3. வேதிஇயல்: Mg+O2→2MgO

equilibrium - சமநிலை: ஒரு பொருள் கீழே விழாத நிலை. இது மூன்று வகைப்படும். 1. உறுதிச் சமநிலை: இதில் புவி ஈர்ப்புப் புள்ளி தாழ்வாக இருக்கும். நிலைப்பு அதிகமாயிருப்பதால் சிறிது தூக்கிவிட்டாலும் தன் பழைய நிலைக்கு வரும். கூர் உருளை நேராக இருத்தல்.

2. உறுதியிலாச் சமநிலை: இதில் புவி ஈர்ப்புப் புள்ளி உயர்ந்திருக்கும். நிலைப்பில்லாததால் கூர்ப்பகுதியில் நிறுத்தப்படும் உருளை கீழே விழும்.

3. நடுநிலைச் சமநிலை: இதில் புவி ஈர்ப்பும் புள்ளி உயர்வதுமில்லை. தாழ்வதுமில்லை. பொருள் எந்நிலையிலும் நிலைப்புடன் இருக்கும். கூர் உருளை படுக்கை நிலையில் இருத்தல். (இய)

equilibrium, neutral - நடுநிலைச் சமநிலை: பா. equlibrium. (இய)

equilibrium, stable - உறுதிச்சமநிலை: பா. equilibrium. (இய)

equilibrium, unstable - உறுதியிலாச்சமநிலை பா.equilibrium(இய)

equivalent - சமஎடை: ஒரு வினையில் ஈடுபடும் தோராய அளவுள்ள பொருளோடு சேரும் மதிப்புக்குச் சமமான ஒரு பொருளின் அளவு. சமநீர் எடையால் இதனை விளக்கலாம். ஒரு பொருளின் சமநீர் எடை என்பது அதே வெப்ப ஏற்புத் திறன் கொண்ட நீரின் பொருண்மையாகும்.

E = ms கிராம். E = சம எடை. m- பொருண்மை s- வெப்ப எண். 2. இணைமாற்று: ஜூல் மாறிலி அல்லது வெப்ப எந்திர ஆற்றல் இணைமாற்று. (இய)

equivalent weight - சமான எடை: 1.008 பங்கு எடை அய்டிரசன் அல்லது 8 பங்கு எடை ஆக்சிஜன் அல்லது 34.45 பங்கு எடை குளோரின் ஆகியவற்றுடன் இணையும் அல்லது இடப்பெயர்ச்சி செய்யும் தனிமத்தின் எடை. எ-டு. 12 பங்கு எடை மக்னீசியம் 8 பங்கு எடை ஆக்ஸிஜனோடு கூடினால், மக்னீசியத்தின் சமான எடை 12. இந்த எடைக்கு அலகில்லை. அது வெறும் எண். (வேதி)

erbium - எர்பியம்: மென்மையான தனிமம். தகடாக்கலாம். உலோகவியல், கண்ணாடித் தொழில் ஆகியவற்றில் பயன்படுவது. (வேதி)

erepsin - எரிப்சின்: சிறுகுடல் நீரிலுள்ள நொதி, பெப்டோன்களையும் புரட்டீன்களையும் அமினோ காடியாக்குவது. (உயி)

erg - எர்க்: அலகுச்சொல் ஒரு டைன் விசை ஒரு பொருளின் மீது செயற்பட்டு, அதனை 1 செ.மீ. தொலைவு நகர்த்தும் போது நடைபெறும் வேலையின் அளவு. சார்பிலா அலகு. (இய)

ergonomics - பணச்சூழியல்: வேலை செய்வதற்கு எந்திரங்கள் மிக இணக்கமாக இருக்குமாறு செய்வதற்குரிய வழிவகைகளை ஆராயுந்துறை. போதிய வெளிச்சம், கருவியமைந்தமை முதலி யவை இதில் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. (இய)

ergosterol - எர்காஸ்டிரல்: கொழுப்புகளில் காணப்படும் ஸ்டெரால் தோலில் உள்ளது. புறஊதா ஒளியினால் வைட்டமின் டி யாக மாறுவது. (உயி)

erosion - அரிமானம்: இயற்கைக் காரணிகளால் நில மேற்பரப்பு தேய்தல், நீர், பனிக்கட்டி, காற்று, உயிரிகள், ஈர்ப்பு முதலியவை இயற்கைக் காரணிகள். (பு.அறி)

erythrocyte - குருதிச்சிவப்பணு: red blood corpuscle. (உயி)

escapement - விடுவிப்பி: கடிகாரத்தில் வில்சுருளிலிருந்து முள்ளுக்கு ஆற்றல் செல்வதைக் கட்டுப்படுத்தும் பகுதி. சமனாழி அல்லது ஊசல் அடிப்படையில் அமைந்திருக்கும் கருவியமைப்பு. (இய)

escape velocity - விடுபடு விரைவு: நிலவுலகிலிருந்து ஒரு பொருள் எந்தக் குறைந்த நேர்விரைவில் செலுத்தினால், அது நிலவுலகின் ஈர்ப்பைத் தாண்டி ஆழ்வான வெளிக்குச் செல்லுமோ அவ்விரைவு. திங்கள், செவ்வாய் முதலிய கோள்களுக்குச் செல்லும் நிலாக்கள் இவ்விரைவைப் பெற வேண்டும். இது ஒரு வினாடிக்கு 112 கி.மீ. (இய)

esophagus - உணவுக்குழல்: தொண்டையையும் இரைப்பை யையும் இணைப்பது. (உயி)

essential amino acids - பயனுறு அமினோகாடிகள்: போதிய அளவுகளில் ஒர் உயிரி தொகுக்க இயலாத அமினோ காடிகள். புரதத் தொகுப்பிற்கு இன்றியமையாதவை. எ-டு. அர்ஜினைன், லைசின். இவை எண்ணிக்கையில் 8. மொத்த அமினோ காடிகள் 20, இவற்றில் 12 பயனுறா அமினோ காடிகள். அதாவது, அவை உடலில் தொகுக்கப்படுபவை. (உயி)

essential element - பயனுறு தனிமம்: உயிரியின் இயல்பான வளர்ச்சிக்குத் தேவையான தனிமங்களுள் ஒன்று. எ-டு. கால்சியம், பாசுவரம். (உயி)

essential fatty acids - பயனுறு கொழுப்புக் காடிகள்: உணவில் இயல்பாக இருக்க வேண்டிய கொழுப்பு அமிலங்கள். எ-டு. லினோலிகக்காடி, லினோலியக்காடி.

essential oil - பயனுறு எண்ணெய்: மணமுள்ள இயற்கை எண்ணெய், நாரத்தை எண்ணெய், கிராம்பு எண்ணெய், பூ எண்ணெய்கள். (உயி)

esterification - எஸ்தராக்குதல்: ஆல்ககாலுடன் காடி சேர்ந்து எஸ்தரும் நீரும் உண்டாகும் வினை. எ.டு. அசெட்டிகக் காடி எத்தில் ஆல்ககாலோடு வினையாற்றி எத்தைல் அசெட்டேட்டு எஸ்தரைக் கொடுக்கும். (வேதி)

ethane - C2H6, ஈத்தேன்: மீத்தேன் வரிசை அய்டிரோகார்பன். மூலக்கூறு அமைப்பு

ethanol - с2н5он எத்தனால்: வேறு பெயர் எத்தைல் ஆல்ககால். நிறமற்ற நீர்மம். நீரில் கரையக் கூடியது. கழிவுப் பாகை நொதிக்க வைத்துப் பெறலாம். ஈத்தேன்,எஸ்தர், குளோரபாம் முதலியவை தயாரிக்கலாம். பிசுமங்கள், வண்ணங்கள் முதலியவற்றிற்குக் கரைப்பானாகவும் பயன்படுவது. (வேதி).

ether - ஈதர்: C2H5OC2H3. மணமுள்ளதும் நிறமற்றதுமான ஒளிபுகும் நீர்மம். விலகல் எண் அதிகம். அடர் கந்தகக் காடியினால் எத்தனாலிலுள்ள நீரை நீக்கிப் பெறலாம். மயக்க மருந்து கரைப்பான். (வேதி)

ethion - எத்தியான்: C9H22O4P2S4. கரிம பாஸ்பேட் உப்பு, சிறிதே நீரில் கரையக்கூடியது. சைலீன், மண்ணெண்ணெய் முதலியவற்றோடு கலக்கும் பூச்சிக்கொல்லி. (வேதி)

ethmoid - சல்லடை எலும்பு: மூக்கெலும்பு. இதன் வழியே மணமறி நரம்பு செல்கிறது. (உயி)

ethology. நடத்தை இயல்: விலங்கு நடத்தை, சூழ்நிலைத் தகைவு முதலியவற்றை ஆராயுந்துறை. (உயி)

ethylalcohol - எத்தைல் ஆல்ககால்: பா. ethanol. (வேதி)

ethylene, ethene - எத்திலீன், எத்தீன்: C2H4. நிறமற்ற வளி, நீரில் அரிதாகக் கரையும். புகை கொண்ட ஒளிச்சுடருடன் காற்றில் எரியும் செயற்கையாகக் காய்களைப் பழுக்க வைக்கப் பயன்படுவது. (வேதி)

ethyne - எத்தைன்: C2H2. வேறு பெயர் அசெட்டிலின். கால்சியம் கார்பைடில் நீரைச் சேர்த்துப் பெறலாம். ஆக்சி அசெட்டிலின் சுடரிலும் செயற்கை ரப்பர் தயாரிப்பதிலும் பயன்படுதல். (வேதி)

etiolotion - வெளிறல்: 1. இருட்டில் வளரும் தாவரம் பச்சையம் இல்லாததால், வெண்ணிறமும் நீண்டதுமான கணுவிடைகளுடன் சிறிய மஞ்சள் நிற இலைகளோடு வளர்தல். 2. கதிரவன் ஒளி இல்லாததால் தோல் வெளுத்துப் போதல். (உயி) etiology - ஏதுவியல்: நோய்க் காரணங்களை ஆராயுந்துறை. (உயி)

etioplast - வெளிர்கணிகம்: இலைகள் முழு இருட்டில் வளர்வதால் உண்டாகும் மாறிய கணிகம். (உயி)

eubacteria - நற்குச்சியங்கள்: உண்மைக் குச்சியங்கள். கண்ணறைகள் கிளைக்கா. விறைப்பான கண்ணறைச் சுவர்கள் உண்டு. இயக்கத்திற்கு நீளிழைகளைக் கொண்டவை. (உயி)

euc(k}aryote - நல்லுயிரி: மரபணுப் பொருள் உட்கருப்படலத்தால் மூடப்பட்டுள்ள உயிரி. எல்லா உயர்விலங்குகளும் தாவரங்களும் உட்கருப்படல உயிரிகளே. ஓ. protaryote. (உயி)

eudiometer - தெள்ளளவுமானி: வேதிவினைகள் நடைபெறும் பொழுது, வளிப்பருமனில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியுங் கருவி. (வேதி)

eugenics - நல்லியல்: மாந்தனின் மரபுப் பண்புகளை மேம்படுத்துவதை ஆராயுந்துறை. (உயி)

euphilic - நற்கவர்ச்சிப் பூக்கள்: குறிப்பிட்ட பூச்சி வகையினால் மட்டுமே மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்கள். எ-டு. அத்தியில் குளவியினால் ஏற்படுதல். (உயி)

euploidy - மடங்கு நற்பண்மயம்: ஒர் உயிரணு தன் உட்கருவில் பன்மடங்கு நிறப்புரிகளைக் கொண்டிருப்பதால், அது ஒற்றைப்படை எண்ணின் பன்மடங்காக அமைகிறது. எடுத்துக்காட்டாக, ஒற்றைப்படை எண் 7 என்றால், பன்மநிலை 7, 14, 21, 28... என்று இருக்கும். வேறுபட்ட ஒவ்வொரு நிறப்புரி எண்களும் சமமாக இருக்கும். பா. aneuploidy.

europium - யூரப்பியம்: Eu. வெள்ளி நிறத் தனிமம். எட்ரியயூரப்பிய ஆக்சைடு கலவையில் முதன்மையாகப் பயன்படுவது. இந்த ஆக்சைடுகள் தொலைக்காட்சித் திரைகளில் சிவப்புப் பாசுவரமாகப் பயன்படுவது. (வேதி)

eustachian tube - நடுச்செவிக் குழாய்: தொண்டைப் பின்பகுதியோடு நடுச்செவியை இணைக்கும் குழாய். செவிப்பறைக்கு இரு புறங்களிலும் காற்றழுத்தத்தைச் சமன் செய்வது. பா. ear. (உயி).

eutectic mixture - நற்கலவை: உறைநிலை மாறாக் கலவை. இரு பொருள்கள் குறிப்பிட்ட விதத்தில் அமைந்திருப்பதால், அதே பொருளைக் கொண்ட மற்ற எந்தக்கலவையும் குறைந்த உருகு நிலையைக் கொண்டிராது. (வேதி).

euthenics - நன்னிலை இயல்: வாழ்நிலைகளை மேம்படுத்துவதை ஆராயுந்துறை. (உயி).

eutheria - நல்விலங்குகள்: குறிப்பிட்ட காலம் கருவுயிரை கருப்பையில் வைத்து நஞ்சுக் கொடி மூலம் ஊட்டமளித்துக் காக்கும் விலங்குகள். இதில் எல்லாப் பாலூட்டிகளும் அடங்கும். (உயி)

eutrophic - நல்வளம்: 1. கனிமவளம் கனிமங்களும் உப்பு மூலிகளும் மிகுதியாக இருத்தலை இவ்வளம் குறிக்கும். 2. ஊட்ட வளம் இதுதான் நிறைந்த நீர்நிலைகளைக் குறிக்கும். (உயி)

evaporation - ஆவியாதல்: இயற்கையாக உப்பளங்களில் நடைபெறுவது. செயற்கையாக ஒரு சீனக் கிண்ணத்தில் உப்புக் கரைசலை வெப்பப்படுத்த, அதிலுள்ள நீர் ஆவியாகிக் கிண்ணத்தில் உப்பு தங்கும். ஆக, இது ஒரு நீர்மக் கலவையின் பகுதிகளைப் பிரிக்கும் முறை. (வேதி)

evergreen - பசுமைமாறா: பசுமைமாறா மரங்கள் அல்லது காடுகள். பல வெப்ப மண்டலத் தாவரங்கள் குளிர்மண்டலக் குறுமரங்கள் இவற்றில் அடங்கும். (உயி)

evolution - உயிர்மலர்ச்சி: பரிமாணம், உள்ளது சிறத்தல், படிநிலை வளர்ச்சி. உலகில் உயிர் தோன்றிய முறை ஒரு பெரும் உயிரியல் சிக்கலாகும். இச்சிக்கலுக்குத் தீர்வு காண உருவான கொள்கையே உயிர் மலர்ச்சி

excess electron - மிகு மின்னணு: குறைக்கடத்தியில் அமைந்திருப்பது. மாசு ஒன்றினால் அளிக்கப்படுவது. சவ்வீரம், பாசுவரம் முதலியவை. மின்கடத்தும் திறனை உண்டாக்கக் குறைக் கடத்திகளில் சேர்க்கப்படும் மாசுகள். (இய)

excimer - கிளர்படிச் சேர்மம்: கிளர்வுள்ள இருபடி. கிளர்வுள்ளதும் கிளர்வற்றதுமான மூலக்கூறுகளின் சேர்க்கையினால் உண்டாவது. இம்முலக்கூறுகள் அடிநிலையில் பிரிந்திருக்கும். (இய)

excitation - கிளர்வாக்கல்: அணு, மூலக்கூறு, அணுக்கரு ஆகியவற்றின் ஆற்றலைக் கூட்டுதல். அடிநிலையிலிருந்து உயர்நிலைக்குச் செல்வதால், ஆற்றல் அதிகமாகும். (இய)

excitance - கிளர்திறன்: ஒரலகு பரப்பிலிருந்து உமிழப்படும் கதிர்வீச்சு ஓட்டம். (இய)

exciton - கிளரணு: ஒர் குறைக் கடத்தியினால் கிளர்நிலையிலுள்ள மின்னணு கடத்தலுக்கு ஆயத்தமாக இருப்பது. (இய)

excretion - கழிவு நீக்கம்: உடலிலிருந்து நைட்ரஜன் ஊட்டமுள்ள கழிவுகளை அகற்றுதல். இவை சிதைமாற்றத்தால் தோன்றுபவை. இவற்றைச் சிறுநீரகங்கள் வெளியேற்றுகின்றன. உயர்உயிரிகள் கழிவுக் குடலிலிருந்து அகற்றும் சாணி, மலம் முதலியவை செரிமானமாகாக் கழிவுகளாகும். (உயி)

excurrent - புறத்தே ஒடும்: இலைப்பரப்புக்கு அப்பாலும் செல்லும் நடுநரம்பு. (உயி)

exergonic - ஆற்றல்தருவினை: ஆற்றலை நல்கும் வேதிவினை. ஒ. endergonic. (வேதி)

exhaust valve - வெளியேற்றுத் திறப்பி: அகக்கனற்சி எந்திரத்தில் உருளைக்கு மேலுள்ளது. இதில் மூன்று வீச்சுகளிலும் இது மூடி. வெளியேற்று வீச்சில் எரிந்த வெடிகலவையின் கழிவுகளை வெளிச்செல்ல விடுவது. (இய)

exine - புறவுறை: சிதல் அல்லது மகரந்தத் தூளின் புறச்சுவர். ஒ. intine.

exobiology - புறவெளி உயிரியல்: புவிக்கு அப்பாலுள்ள கோள் உயிர்களை ஆராயுந்துறை. வான வெளி அறிவியல் என்னும் பரந்த புதிய அறிவியலோடு தொடர்புடையது. (இய)

exocarp - புறவெளியுறை: வெளிப்புற உறை. (உயி)

exocrine glands - புறச்சுரப்பிகள்: இவை நாளமுள்ள சுரப்பிகள். இவை தங்கள் சுரப்புகளைக் குழாய் மூலம் குடலில் செலுத்துகின்றன. எ-டு. உமிழ்நீர்ச்சுரப்பி, இரைப்பை நீர்ச்சுரப்பி. ஒ. exocrine glands. (உயி)

exodermis - வெளித்தோல்: சில தாவரங்களில் புறத்தோலுக்குக் கீழமைந்துள்ள கண்ணறையடுக்கு. எ-டு. ஆடுதீண்டாப் பாளை. (உயி)

exogamy - வெளிக்கலப்பு: நெருக்கமான உறவிலாப் பாலணுக்கள் சேர்தல். (உயி)

exogenous - வெளியெழு: தரை மேல் ஒரு விதையிலைத் தாவரங்களில் விதை முளைக்கும் பொழுது விதையிலை தரைக்கு மேல் இருக்குமாறு முளைத்தல் எ.டு. அவரை விதை. பா. hypogeal. ஓ. endogenous. (உயி)

exon - வெளியன்: பல நியூக்ளியோடைடு வரிசை. குறிப்பிட்ட புரதத்தை உண்டாக்கக் காரணமாக இருப்பது (உயி)

exoscopic - வெளிநோக்கு: தாவரக் கருவின் வளர்ச்சி வகையைக் குறிப்பது. இதில் கருப்பயிரின் முனை கருவணுவின் முதல் பிரிவினால் தோன்றும் வெளிப்புறக்கண்ணறையிலிருந்து வளர்வது. சில பெரணித் தாவரங்களில் காணப்படுவது. ஒ. endocrine glands. (உயி)

exoskeleton - வெளிக்கூடு, சட்டகம்: புறப்படையினால் சுரக்கப்படுவது. விலங்கிற்குப் பாதுகாப்புறையாகவுள்ளது. எ-டு. நண்டு, ஆமை. ஒ. endoskeleton. (உயி)

exosmosis - வெளிஊடுபரவல்: ஊடுபரவல் படலம் வழியாகக் கரைப்பானாகியுள்ள மூலக்கூறுகள் அணுவின் உள்ளிருந்து வெளியே செல்லுதல். ஒ. endosmosis. (உயி)

exothermic process - வெளி வெப்பமுறை: ஆற்றல் வெளி வெப்பமாக இவ்வேதி வினையில் வெளியேறுவது. ஒ. endothermic. (இய) expansivity - விரிவெண்: விரிவுத்திறன். வெப்பப் பெருக்கத்திற்கு ஒரு பொருள் உட்படும் நிலையின் அளவு. இது நீள் விரிவெண், கனவிரிவெண் எனப்பல வகைப்படும். (இய)

expiration - வெளிமூச்சு: இதனைப் புறமூச்சு எனலாம். இதில் ஆக்ஸிஜன் குறைந்த காற்றும் நீராவியும் நுரையீரல்களிலிருந்து வெளியேறுபவை. ஆகவே, இது கழிவகற்றும் செயலாகும். ஒ. inspiration. (உயி)

Explorer - எக்ஸ்புளோரர்: ஆராய்வி, 1958இல் அமெரிக்கா முதன்முதலில் ஏவிய செயற்கை நிலா. (இய)

explosion - வெடித்தல்: விரைவான எரிதலால் உண்டாகும் வளிகள் பெருகும்பொழுது ஏற்படும் உடன்வெடிப்பு கடுமையாக இருக்கும். சிறிய இடத்தில் வளிகளை அடைத்துப் பற்ற வைக்கும் பொழுது, அவை பெருகி வலுவான விசையை உண்டாக்க வல்லவை. இவ்விசை யினாலேயே வெடித்தல் ஏற்படுதல். எ-டு. சீனிவெடி வெடித்தல். (வேதி)

explosives - வெடிமருந்துகள்: விரைவான வேதி வினைக்குட்பட்டு வெப்பத்தையும் அதிக அழுத்தத்தையும் உண்டாக்கும் பொருள்கள். உண்டாக்கும் வளியின் பருமன் வெடிக்கும் மூலப்பொருளின் பருமனை விட அதிகம். எ-டு. துப்பாக்கித்தூள், செல்லுலோஸ், நைட்ரேட், நைட்ரோகிளிசரின், டி.என்.டி. ஆர்.டி.எக்ஸ் (வேதி)

expression - கோவை: குறிகள் எண்கள் முதலியவற்றைக் கொண்ட தொகுதி. எ-டு.

a- முடுக்கம் V-நேர்விரைவு U-தொடக்க நேர்விரைவு. t- வினாடி. (இய)

extensometer - விரிவுமானி: ஒரு பொருளில் தகைவை ஏற்படுத்தி, அது உண்டாக்கும் விரிவை அளக்கப் பயன்படுங் கருவி. (இய)

extensors - நீட்டுத்தசைகள்: உடலின் எப்பகுதியையும் விரிக்க அல்லது நீட்டப் பயன்படுந்தசை. எ-டு முத்தலைத்தசை. (உயி)

external combustion engine - புறக்கனற்சி எந்திரம்: நீராவி எந்திரமாகும். இதில் எரி பொருள் (நிலக்கரி) வெளியில் தீயெரிபெட்டியில் எரிகிறது. இதில் இரு நிலைகளில் இரு குழாய்கள் வழியாக நீராவி மாறி மாறிச் செல்வதால், தண்டு முன்னும் பின்னும் இயங்க, அதனோடு இணைக்கப்பட்ட உருளையும் இயங்குவதால், எந்திரமும் இயங்கத் தொடங்கும். இதில் நீராவி ஆற்றல் எந்திர ஆற்றலாகிறது. ஒ. internal combusion engine.(இய) exteroceptor - புறப்பெறுவாய்: புறத் தூண்டல்களைப் பெறும் புலனுறுப்பு. எ-டு. கண், செவி. (உயி)

extracellular - கண்ணறை புறத்தே: கண்ணறைக்கு வெளியே உண்டாகும் பொருள். (உயி)

extraction - பிரித்தல்: 1. தாதுவிலிருந்து உலோகத்தை நீக்குதல். 2. கலவையிலிருந்து கரைதிறன் மூலம் ஒரு பகுதியைப் பிரித்தல். (வேதி)

extrorse - புறநோக்கு மகரந்தப்பை: மகரந்தப்பையின் முகம் வெளி நோக்கி அமைந்திருத்தல். எ-டு. அல்லி. ஒ. introrse. (உயி)

eye - கண்: ஐம்பொறிகளில் ஒன்று. அறிவு பெறும் வாயில். புற அமைப்பில் இது விழிக்கோளம், கண்ணிமை, கண் மயிர் ஆகிய பகுதிகளைக் கொண்டது. விழிக்கோளம் விழிக்குழியில் பொருந்தியுள்ளது.

eye accommodation - கண் தக அமைதல்: பொருள்களின் தொலைவிற்கேற்ப விழிவில்லையின் பருமன் கூடிக் குறையும். சிறப்பாக, அருகிலுள்ள பொருள்களின் பிம்பம் விழித் திரையில் விழக் குவியத் தொலைவு குறையுமாறு விழிவில்லையின் பருமன் அதிகமாவதற்குக் கண் தக அமைதல் என்று பெயர். இதற்கு குற்றிழைத்தசை உதவுகிறது.

eye piece - கண்ணருகு வில்லை: ஒளிக்கருவியில் கண்ணுக்கு அருகிலுள்ள வில்லை. பொருளருகு வில்லை. உண்டாக்கும் பிம்பத்தைப் பெருக்கிக் காட்டுவது. (இய)

eyespot - பார்வைப் புள்ளி: 1. நீந்தும் சில ஒற்றைக் கண்ணறைப் பாசிகளிலும் தாவர இனப்பெருக்கக் கண்ணறைகளிலும் காணப்படும் பகுதி. ஒளிநோக்கிச் செல்ல உதவுவது. எ-டு. கிளாமிடமோனாஸ் 2. இழுது மீன். தட்டைப் புழுக்க்ள் முதலிய கீழின உயிரிகளில் காணப்படும் நிறமிப் புள்ளி. எ-டு. கல்லீரல் புழுவின் இளரி. பா. stigma. (உயி)

eye-stalk - கண்காம்பு: ஒட்டுடல்களின் தலையிலுள்ளது. இதில் கண் உள்ளது. எ-டு. நண்டு. (உயி)

eye strain - கண் அயற்சி: கண் களைப்பு. கண் உறுத்தலால் ஏற்படுவது. (மரு)

eye string - கண்ணிழை: இது ஒரு தசை, கண்ணிமையை உயர்த்துவது. (உயி)

eye wash - 1. கண் கரைசல்: நீர்ம வடிவக் கண்கழுவு மருந்து. 2. கண் துடைப்பு: ஏமாற்றுதல். (ப.து)

eyetooth - கோரைப்பல்: தாடையிலுள்ள பல், வெட்டுப்பற்களுக்கு அடுத்துள்ளது. பா. carine tooth. (உயி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/E&oldid=1039051" இலிருந்து மீள்விக்கப்பட்டது