அறிவியல் அகராதி
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.பேராசிரியர்
அ.கி.மூர்த்தி, எம்.ஏ., பி.டி.
31, சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600108.
முதல் பதிப்பு: 3 சூன், 2001
திருவள்ளுவர் ஆண்டு: 2032
விலை: ரு. 90.00
மணிவாசகர் வெளியீட்டு எண் : 829
பதிப்பாசிரியர்
முனைவர் ச.மெய்யப்பன்
டாக்டர் ச. மெய்யப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்.
தமிழகப் புலவர்குழுவின் துணைத் தலைவர்.
பல்கலைக்கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினர்.
பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்.
தமிழக அரசின் தமிழ்ச்சங்கப் பலகை - குறள்பீடத்தின் பொதுக்குழு உறுப்பினர்.
‘வள்ளுவம்’ இதழின் சிறப்பாசிரியர்.
பத்து நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.கிடைக்குமிடம் :
மணிவாசகர் நூலகம்
12 - B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
31, சிங்கர் தெரு,பாரிமுனை, சென்னை - 600 108.
110,வடக்கு ஆவணி மூலவீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28,நந்தி கோயில் தெரு. திருச்சி - 620 002.
தொலைபேசி :
சிதம்பரம் : 30069
சென்னை : 5361039
கோயமுத்துர் : 397155
மதுரை : 622853
திருச்சி : 706450
அச்சிட்டோர்: சக்கி ப்ராசஸ், சென்னை-81 போன்:5950331, 5956006
அறிவியல் கொடை
தமிழவேள்: ச. மெய்யப்பன்
நிறுவனர்: மெய்யப்பன் தமிழாய்வகம்
தமிழ்மொழி இலக்கிய வளம் செறிந்த மொழி. சொல்வளம் மிகுந்த மொழி காலந்தோறும் சொற்கள் பெருகித் தமிழ்ச் சொற் களஞ்சியம் மிக விரிந்துவிட்டது. மானுடவியல் சார்ந்த எந்தக் கருத்தையும் உரைப்பதற்கேற்ற சொற்கள் தமிழ்மொழி போல் வேறு எந்த மொழியிலும் இல்லை என உறுதி கூறலாம். வாழ்வியல் கருத்துக்களைத் திட்ட நுட்பத்துடன் எடுத்துச்சொல்ல எத்தனையோ சொற்கள் தமிழ்ச் சொற் களஞ்சியத்தில் பல்கிக் கிடக்கின்றன. அறிவியல் கருத்துக்களைக் கூறப் போதுமான சொற்கள் மெல்ல மெல்ல உருவாகி வருகின்றன.
உலக மொழியாகிய ஆங்கிலத்தில் பல்வேறு துறைகளுக்குப் பல்வகை அகராதிகள் பல்கியுள்ளன. காலந்தோறும் உருவாக்கப் பெறும் சொற்கள் சொற் களஞ்சியத்தில் சேர்ந்து அதன் சொற்களஞ்சியத்தை வளப்படுத்தியுள்ளன. ஆங்கிலத்தில் அறிவியல் துறைகளான இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் முதலிய துறைகளுக்குத் தனித்தனியே அகராதிகள் தோன்றிவிட்டன.
தமிழில் அறிவியல் என்னும் சொல்லே புது வழக்கு பல்லாண்டுகளாகப் பொது விஞ்ஞானம் என்றே சொல்லி வந்தோம்.
விடுதலைக்குப்பின் இந்திய மொழிகள் வீறுபெற்றன. கலைச் சொல்லாக்க முயற்சிகள் வீறு கொண்டன. அறிவியல் கல்வியின் வீச்சும் பன்மடங்காயிற்று அறிவியல் இதழ்களும் தோன்றின. அறிவியல் சொற்களின் பெருக்கமும் மும்மடங்காயிற்று. வானொலி, தொலைக்காட்சி, இதழ்கள் ஆகியவை நாளும் புதிய புதிய சொற்களைப் பரப்பி வருகின்றன.
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் அறிவியலில் பத்துக்கு மேற்பட்ட துறைகளில் 100க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர். அ. சிதம்பரநாதன், கா. அப்பாத்துரையார் முதலியவர்களைக் கொண்டு உருவாக்கிய சொற்களஞ்சியத்திலும் பலநூறு அறிவியல் சொற்கள் பரவிக்கிடக்கின்றன. மேலே சொல்லிய நூல்களில் விரவிக் கிடக்கும் அறிவியல் சொற்கள் அனைத்தையும் அகர வரிசைப்படுத்தி அறிவியல் அகராதியை முதன் முதலில் வெளியிடுகிற பொறுப்பு மணிவாசகர் பதிப்பகத்திற்கு அமைந்தது.
மிகச் செவ்விய திட்டத்தில் பெரிய அளவில் இந்த அகராதியை உருவாக்கியுள்ளோம். ஆங்கிலத்தில் துறைதோறும் வந்துள்ள அகராதிகள் அனைத்தும் நன்கு பயன்படுத்தப் பட்டுள்ளன. அண்மைக் காலத்தில் புதிய வீச்சுப் பெற்றுள்ள வான்வெளிப் பயணம், லேசர் அறிவியல், கணிப்பொறி அறிவியல் முதலிய துறைகளைச் சார்ந்த புத்தம் புதிய சொற்களும் இதில் இடம் பெற்றுள்ளன. சொல்லின் பொருளும் விளக்கமும் வரையறையும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சிற்சில இடங்களில் கருத்துக்களுக்கு விரிவான விளக்கமும் புதிய புனைவுகளும் புனைவாளர்களும், புனைவுகள் தோன்றிய ஆண்டுகளும் படங்களும் தரப்பட்டுள்ளமை இவ்வகராதியின் தனிச் சிறப்பு
கலைச் சொல்லாக்கம் மிகக் கடினமான பணி அறிஞர்கள் பலர் பல்லாண்டு உழைத்துச் சொல்லாக்கங்களை உருவாக்கி உள்ளனர். அவற்றுள் வலுவுள்ளவை வாழ்வு பெற்றுவிட்டன. வலுவற்றவை வீழ்ந்துவிட்டன. நிலைத்த சொற்கள் அகராதியில் இடம் பெறுவது இயற்கை
அடிப்படை அறிவியலில் உள்ள அனைத்துச் சொற்களையும் வரிசைப்படுத்தித் துல்லியமான விளக்கங்களைச் சிறப்பாகத் தந்தவர் தொகுப்பாசிரியர் அ.கி.மூர்த்தி. இவர் 40 ஆண்டுகளாக அறிவியலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்திய அறிவியல் ஆசிரியர். பல அறிவியல் நூல்களை எழுதி விருதுகள் பல பெற்றவர். விண்ணியல், லேசர் அறிவியல், வெப்பநிலை அறிவியல், தொலையுணர் அறிவியல் முதலிய துறைகளில் ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் உருவாக்கியவர். இருமொழிப் புலமைமிக்கவர். விஞ்ஞானத்தின் நுட்பம் உணர்ந்த வித்தகர். அறிவியல் கல்வியில் ஆழங்கால் பட்டவர். இந்த அகராதியை உருவாக்கிய இவர்தம் நன்முயற்சிக்குத் தமிழ் கூறும் நல்உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. பெரிய பல்கலைக் கழகம் செய்யவேண்டிய பெரிய பணியினைத் தாம் ஒருவராகவே தனித்து நின்று செய்து சாதனை படைத்துள்ளார்.
அறிவியல் நூல்கள் இப்பொழுது மிகுதியாக எழுதப் பெறுகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் புலம் ஒரு தனித்துறையாக ஓங்கி வளர்ந்து வருகிறது. நாற்பதுகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிவியல் பாடங்களை முதல் முதல் தமிழ் மூலம் கற்பிக்கச் சிறந்த நூல்களை உருவாக்கியது. தொண்ணூறுகளில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்த முயற்சியில் வெற்றி நடைபோடுகிறது. தமிழ் வழிக் கல்வி இயக்கம் வேர் கொள்ளும் வேளையில் இந்தப் பெரு நூலை உருவாக்கியுள்ளோம்.
வெறும் வாய்ச்சொல் வீரராக வாழாமல் 21-ம் நூற்றாண்டிற்குத் தமிழை எடுத்துச் செல்லும் சீரிய முயற்சியில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டு இந்தப் பெரிய செயலைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளோம்.முன்னுரை
துறை போகிய அறிவே அறிவியல். இதன் துறைகள் பல. அவற்றில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணக்கு ஆகியவை அடிப்படைத் துறைகள் மருத்துவம், தொழில் நுட்பம் முதலியவை பயன்படு துறைகள் இத்துறைகளின் இன்றியமையாச் சொற்கள் அனைத்தும் இவ்வகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கணினிஇயல், வானவெளி அறிவியல், தொலையறிவியல் முதலிய துறைகளின் சொற்களும் விடாது சேர்க்கப்பட்டுள்ளன.
கலைச் சொற்களைக் கையாள்வதில் வழக்குச் சொற்களுக்கும் இலக்கியச் சொற்களுக்கும் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. (எ-டு) அடர்த்தி, கோள். வழக்கேறும் சொற்களும் அவ்வாறே முதலிடம் பெறுகின்றன (எ-டு) கண்ணறை. எக்கி, எளிய புதுச்சொற்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. (எ-டு வானவலவர், வானவெளிவலவர். அலகு, குறியீடுகள் இடுபெயர் முதலியவை அனைத்துலகும் பயன்படுத்துபவை. ஆகவே, அவை அப்படியே எழுத்துப் பெயர்ப்பாகவே கொள்ளப்பட்டுள்ளன. (எ-டு.) ஓம், ஆம்பியர் ஆக்சைடு, சல்பைடு.
அறிவியலில் நாளும் வழங்கப்படும் சொற்கள் அனைத்தும் வாசகர்களுக்குப் பயன்படத்தக்க வகையில், இவ்வகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்ட சொற்கள் 20,000க்கு மேல் உள்ளன.
ஒரே தொகுதியில் இச்சொற்கள் அனைத்தையும் பார்க்கக் கூடிய முதல் அகராதி இதுவே. ஒரு மொழிக்கு வளம் தருவது சொற்களே. அதுவும் வளரும் மொழிக்குப் பயன்படும் அறிவியற் சொற்களே செல்வம். அனைத்து அறிவியல் சொற்களையும் அரிதின் தொகுத்து துல்லியமான பொருள் விளக்கம் தருகிறது. இந்நூல், தூய தமிழில் விளக்கம் கூறுவது இதன் தனிச்சிறப்பு. பொது அறிவுக் களஞ்சியமாக அமையுமாறு தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகராதியின் மற்றொரு தனிச் சிறப்பு மற்றும் எளிமை, தெளிவு, சுருக்கம் ஆகியவையும் இதன் சிறப்புகள்.
நேற்று, இன்று, நாளை என்னும் முக்காலத்துக்குரிய அனைத்துச் செய்திகளும் பதிவுகள் மூலம் இதில் இடம் பெறுகின்றன.
அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இவ்வகராதியைத் தொகுக்கப் பணித்த பதிப்புச் செம்மல் தமிழவேள் ச. மெய்யப்பன் அவர்கட்கும். அவர்தம் அருமை மகனார் திரு. மீனாட்சி சோமசுந்தரம் அவர்கட்கும் இவ்விருவருக்கும் உறுதுணையாக இருக்கும் பதிப்பக மேலாளர் திரு. இரா. குருமூர்த்தி அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றி.
நல்ல முறையில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வகராதியை அனைவரும் பயன்படுத்துவார்களாக
‘மெய்ப்பொருள் காண்ப தறிவு’
அ. கி. மூர்த்தி
சென்னை-94,
சுருக்கங்கள்
இத - இதழியல்
இய - இயற்பியல்
உண - உணவியல்
உயி - உயிரியல்
ஒ - ஒப்பிடுக
க. உள - கல்வி உளவியல்
கண - கணக்கு
ச. அறி - சமூக அறிவியல்
தொ. நு - தொழில் நுட்பவியல்
ப. து - பல்துறை
பா.- பார்க்க
பு. அறி - புவி அறிவியல்
மரு - மருத்துவம்
மெய் - மெய்யறிவியல்
வா. அறி - வானவெளி அறிவியல்
வானி - வானியல்
வேதி - வேதிஇயல்
உள்ளடக்கம்