அறிவியல் அகராதி/K

விக்கிமூலம் இலிருந்து

K

kaleidoscope - பல்வண்ண நோக்கி: விளையாட்டுக் கருவி. நெசவாளர்களால் பயன்படுத்தப்படுவது. துண்டுமணிகள் ஆடிகளால் மறிக்கப்படுவதால், பலப் பல வண்ணங்கள் உண்டாகிக் கொண்டே இருக்கும். ஒரு கோணத்தில் அமைக்கப்பட்ட இரு சமதள ஆடிகள் பல உருக்களை உண்டாக்கும் என்பது நெறிமுறை. (இய)

kangaroo - கங்காரு: மதலைப்பை உடைய பெரிய ஆஸ்திரேலிய விலங்கு. நீண்ட வலுவான பின் கால்கள் உண்டு. இவை தாவிக் குதித்தோடப் பயன் படுபவை. தன் குட்டியைச் சுமந்து செல்ல அதற்கு வயிற்றுப் புறத்தில் பை இருக்கும். (உயி)

kangaroo mother - கங்காரு தாய்: 1990களில் டாக்டர் கெராட் ரே சனாப்ரியா என்பவரால் கங்காரு நடத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்ட அடையளிக்கும் துணுக்கம். குறை வளர்ச்சியுடன் பிறந்த குழந்தைகளைக் காக்க உதவுவது. (மரு)

kaolin - கேயோலின்: சீனக் களிமண், இயற்கை அலுமினியம் சிலிகேட்டு. வாய் வழி உட்கொள்ள நச்சுப் பொருள்களை உறிஞ்சும். ஆகவே, வயிற்றுப் போக்கு, குடல் அழற்சி, உணவு நச்சுக்கலப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுதல். (வேதி)

karyo - உட்கரு: உயிரணுவின் கரு. (உயி) ஒ. atomic nucleus

karyogamy - உட்கருக்கலப்பு: கலவி இனப்பெருக்கத்தின்போது, ஒவ்வொரு பெற்றோரிடமிருந்து வரும் இரு உட்கருக்கள் இணைதல். இதனால் கருவணு உட்கரு உண்டாதல். (உயி)

karyokinesis - உட்கருப்பிரிப்பு: உயிரணுப் பிரிவின்போது உட்கரு பிரிந்து பல சிக்கலான மாற்றங்களைப் பெறுதல். (உயி)

karyolymph - உட்கருநீர்: உட்கருக் கணியத்தின் வலைப் பின்னலிலுள்ள பதிபொருள். (உயி)

karyotype - உட்கருவகை: அளவு, வடிவம், பிரிநிறப்புரியின் எண்ணிக்கை ஆகியவற்றால் வரையறை செய்யப்படும் உட்கருப் பண்பு. (உயி)

Katers pendulum - கேட்டர் ஊசல்: ஹென்றிகேட்டர் (1777-1835) வடிவமைத்த அரிய ஊசல், தடையிலா வீழ்ச்சியின் முடுக்கத்தை அளக்கப் பயன்படுவது. (இய)

katharometer - கடத்துதிறனறி மானி: வெப்பங்கடத்தும் திறனை அளந்தறியப் பயன்படுங்கருவி. குறிப்பாக, வளி நிறவரைவியலில் கண்டறியும் கருவி. (இய)

k-band - கே வரிசை: வானொலி அதிர்வெண் வரிசை. எல்லை 10,900 - 36,000 மெகா ஹெர்ட்ஸ். (இய)

keel - படகல்லி: அவரையின் அல்லி. அவரை முதலிய பூக்களில் சமமற்ற 5 அல்லிகள் இருக்கும். இவற்றில் மிகப் பெரிய தனித்த அல்லி கொடியல்வி (ஸ்டாண்டர்ட் பெட்டல்). இது பக்கவாட்டில் காம்புள்ளவையும் சிறியவையுமான இரு அல்லிகளைத் தன்னகத்தே கொண்டி ருக்கும். இவற்றிற்குச் சிறகல்லிகள் (விங்பெட்டல்ஸ்) என்று பெயர். இவை மற்றும் இரு அல்லிகளைத் தம்முள் அடக்கி இருக்கும். இவை படகு வடிவத்தில் இருப்பதால் படகல்லிகள் (கீல்பெட்டல்ஸ்) என்று பெயர். (உயி)

keel - படகுநீட்சி: பறவை, வெளவால் ஆகியவற்றின் மார்பெலும்பின் அடிப்பகுதியில் காணப்படும் மெலிந்த நீட்சி. (உயி)

keepers - காப்பிகள்: நிலையான காந்த முனைகளுக்கிடையே வைக்கப்படும் தேனிரும்புத் துண்டுகள். இவை காந்த ஆற்றல் நிலைத்திருக்கப் பயன்படுபவை. (இய)

kelvin - கெல்வின்: k வெப்ப இயக்கவியல் வெப்பநிலையின் எஸ்ஐ அடிப்படை அலகு சுழி கெல்வின் என்பது முழுச்சுழி ஆகும். (இய)

Kepler's laws - கெப்ளர் விதிகள்: 1. கோள்கள் யாவும் ஒரு குவியத்திலமைந்த நீள்வட்ட வழிகளில் கதிரவனை வலம் வருகின்றன. 2. கதிரவனையும் கோளையும் சேர்க்கும் ஆரக்கோடு, கதிரவனைக் கோள் சுற்றும்போது, சம அளவு நேரத்தில் சம அளவுப் பரப்பைக் கடக்கும். 3. கதிரவனைக் கோள் சுற்றிவரும் காலத்தின் (T) இருமடிப் பெருக்கமும் (T2) கதிரவனுக்கும் கோளுக்குமிடையே உள்ள தொலைவின் (d) மும்மடிப் பெருக்கமும் (d3) நேர்வீதத்தில் இருக்கும், அதாவது T2 ∝ d3 . இம்மூன்று விதிகளையும் கெப்ளர் (1571-1630) என்பார் 1610இல் வகுத்தார். ஐகோ பிரெகி (1546-1610) மேற்கொண்ட உற்றுநோக்கல்களின் அடிப்படையில் இவற்றைக் கெப்ளர் நிறுவினார். (இய)

kerosene - மண்ணெண்ணெய்: பண்படாப் பெட்ரோலியத்தைக் காய்ச்சி வடிக்கக் கிடைக்கும் பாரபின் அய்டிரோ கார்பன். நீர்ம எரிபொருள், கரைப்பான். (வேதி)

kidney disease gene - சிறுநீரக நோய் மரபணு: இது 9 ஆண்டு அரிய ஆராய்ச்சிக்குப் பின் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி சிறுநீரக நோயைப் போக்க உதவும். (உயி)

kidneys - சிறுநீரகங்கள்: அவரை விதை வடிவமுள்ள இருதட்டையான கழிவுச் சுரப்பிகள். முதுகெலும்பிகளில் காணப்படுபவை. நைட்ரஜன் (வெடிவளி) கழிவுள்ள சிறுநீரை வெளியேற்றுபவை. இவற்றிலிருந்து செல்லும் இரு சிறுநீர்க்குழல்கள் சிறுநீர்ப்பையை அடைகின்றன. சிறுநீர்ப்பை சிறுநீர் அகற்றியோடு தொடர்புடையது. இறுதியாகச் சிறுநீர் வெளியேறும் பகுதி சிறுநீர் அகற்றி. (உயி)

kilocycle - கிலோசைக்கிள்: அலகுச் சொல். ஒரு வினாடிக்கு 1000 சுற்றுகள். மின்காந்த அலை அதிர்வெண்ணின் அளவு. (இய)

kiloton bomb - கிலோடன் (பாம்): அணுக்கருக்குண்டு. இதன் வெடி திறன் 4 x 1012 ஜூல்களுக்குச் சமமானது. இது ஓர் அணுக் குண்டே. (இய)

kilovolt - கிலோஓல்ட்: அலகுச் சொல். மின் அழுத்த வேறுபாட்டின் அலகு. 1000 ஓல்ட்டுகள். (இய)

kilowatt hour - கிலோவாட்டுமணி: வாட்டு வினாடி என்பது மிகச் சிறிய அலகு. ஆகவே, வாட்டு மணி அலகாகக் கொள்ளப் பட்டுள்ளது. 1 வாட்டு மணி என்பது 1 வாட்டுத்திறனை 1 மணி நேரத்திற்குப் பயன்படுத்துவதாகும். இது சிறியதாக உள்ளதால் நடைமுறையில் கிலோ வாட்டு மணி பயன்படுகிறது. ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோ வாட்டு (1000 வாட்டுகள்) செலவழிந்தால் அது ஒரு கிலோ வாட்டுமணி. இதை யூனிட்டு என்றும் கூறலாம். (இய)

kilowatt meter - கிலோவாட்டு மானி: இது மின்னாற்றலை அளக்கும் கருவியமைப்பு. கிலோ வாட்டு அளவில் திறன் மட்டுமின்றி மின்னாற்றல் செலவிடப்படும் நேரமும் இதில் அளக்கப்படுகின்றன. kindling temperature - தூண்டு வெப்பநிலை: ஒரு பொருள் தீப்பற்றி எரியும் மிகக் குறைந்த வெப்பநிலை. (இய)

kindred - மரபுவரிசை: ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் கலப்புத் தொடர்பைக் காட்டும் படம். (உயி)

kinematics - பருப்பொருள் இயக்கவியல்: பொருள்களின் இயக்கத்தை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு. (இய)

kinescope - படக்குழாய், எதிர்மின் வாய்க் கதிர்க்குழாய்: தொலைக்காட்சிப் பெறுங் கருவியில் இருப்பது. (இய)

kinesis - தூண்டலியக்கம்: ஓர் உயிரி அல்லது உயிரணு தூண்டல் நோக்கி நகர்வது. இயக்கம், தூண்டல் செறிவைப் பொறுத்தது. எடுத்துக் காட்டாக, மரப்பேன் ஈரச்சூழலில் மெதுவாகவும் உலர் சூழலில் விரைவாகவும் செல்லும். (உயி)

kinetics - 1. விசை இயக்கவியல்: இயக்கத்தை உண்டாக்க அல்லது மாற்றவல்ல விசை வினையை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு. 2. வினை இயக்கவியல்: இயல்பு வேதி இயலின் ஒரு பிரிவு. வேதிவினைகளின் வீதங்களை அளப்பது பற்றி ஆராயுந்துறை. வெப்பநிலை, அழுத்தம் முதலிய வேறுபட்ட நிலைகளில் வினைவீதத்தை ஆராய்ந்து, வினைகளின் நுட்பத்தை உறுதி செய்தல். இதுவே வேதிவினை இயக்கவியலின் முதன்மையான நோக்கம். (வேதி)

kinetic theory - விசை இயக்கக் கொள்கை: கவுண்ட் ரம்போர்டு (1753-1874), ஜேம்ஸ் ஜூல் (1818-1889) மற்றும் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ் வெல் (1831-1879) ஆகிய மூவருஞ் சேர்ந்து உருவாக்கிய கொள்கை. பருப்பொருளின் இயற்பண்புகளை அதன் பகுதித் துகள்களின் இயக்கங்களைக் கொண்டு விளக்குவது. (இய)

kinetochore - இயக்கப்பற்றி: நிறப்புரியின் பகுதி; உட்கருப் பிரிவின்போது இதில் கதிரிழைகள் இணைதல். (உயி)

kingcrab - அரசநண்டு: உண்மை நண்டன்று. தொடக்க காலக் கணுக்காலி, புழுக்களையும் நத்தைகளையும் உணவாகக் கொள்வது. ஆழமற்ற நீர்நிலைகளில் வாழ்வது. (உயி)

kingdom - உயிரினம், உலகம்: இருவகைப்பாட்டுப் பிரிவுகள். ஒன்று தாவர இனம் (பிளாண்ட் கிங்டம்), மற்றொன்று விலங்கினம் (அனிமல் கிங்டம்). (உயி)

kinoplasm - இயக்கக்கணியம்: முன்கணியம். இழைகளாலானது போல் தோன்றி, உயிரணுப் பிரிவில் கதிரிழைகளைக் கொண்டது. விண்மீன் கதிர்களை (ஆஸ்ட்ரல் ரேஸ்) ஈர்ப்பது. (உயி)

Kipp's apparatus - கிப்பின் கருவி: இது மூன்று குமிழ்களைக் கொண்டது. மேல்குமிழ் (முதல் குமிழ்). நடுக்குமிழ் (இரண்டாங் குமிழ்). அடிக்குமிழ் (பின்குமிழ்) என மூன்று வகைப்படும். முதல் குமிழ் இரண்டாங்குமிழ் வழியாக நேரடியாக மூன்றாங் குமிழோடு தொடர்புடையது. முதல் குமிழில் காடி ஊற்றப்படுகிறது. இரண்டாங்குமிழில் வேதிப் பொருள் உள்ளது. மூன்றாங் குமிழில் காடி தங்கும். இது வெளியேறவும் திருகடைப்பு உள்ளது. (வேதி)

Kirchoffs laws - கிர்காப்பு விதிகள்: 1. பல்வேறு கடத்திகள் இணையும் ஒரு சந்தியில், பாயும் மின்னோட்டங்களின் எண்ணியல் கூட்டுத் தொகை சுழி. 2. ஒரு மூடிய வலைச் சுற்றிலுள்ள கடத்திகளின் மின்னோட்டம், மின்தடை ஆகியவற்றின் பெருக்கற் பலன்களின் எண்ணியல் கூட்டுத்தொகை, அம்மின்சுற்றில் உள்ள மின்னியக்குவிசைகளின் எண்ணியல் கூட்டுத்தொகைக்குச் சமம். (இய)

kiwi - கிவி: நியூசிலாந்து பறவை. பறக்க இயலாதது. அந்நாட்டின் இலச்சினை. வால் இல்லை. வளர்ச்சியடையாச் சிறகுகள். சாம்பல் நிற மாநிறம், கூச்சமுள்ளது. நீண்டமூக்கு. மயிர் போன்ற இறகுகள். பகலில் உறங்கி, இரவில் இரை தேடுவது. (உயி)

Kjeldahl's flask - ஜெல்டால் குடுவை: நீண்ட கழுத்துடையது. வட்ட அடி கொண்டது. ஜெல்டால் முறையில் வெடிவளியினை மதிப்பீடு செய்யப் பயன்படுதல். இம்முறை பருமனறி பகுப்பாகும். (வேதி)

Klinfelter's syndrome - கிலின்பெல்டர் நோய்க்குறியம்: மனிதப் பிறவிகளிடத்துக் காணப்படும் நிறப்புரிப் பிறழ்ச்சி. ஒருவர் இரண்டு x நிறப்புரிகளையும் ஒரு y நிறப்புரியையும் (xxy) பெற்றி ருத்தல், அதாவது புற முத்திரை நிலையில் நோக்க, ஆண்களானால் மலடு. இரண்டாம் நிலைப் பண்புகளை வெளிப் படுத்தலாம். (உயி)

kinostat - சாய்சுழலி: சுழலுங்கருவி. நேரடித் தூண்டல் இல்லாத நிலையில், தாவர வளர்ச்சியினை ஆராயப் பயன்படுங் கருவி. (உயி)

klystron - கிளெய்ஸ்ட்டிரான்: நேர்விரைவு மாறுதல் மூலம் நுண்ணலைப் பகுதியில், மின் காந்தக் கதிர்வீச்சைப் பெருக்கும் அல்லது பிறப்பிக்கும் மின்னணுக் குழாய். (இய)

knee jerk - முழங்கால் உதறல்: இது ஒரு மறிவினை. முழங்கால் மூட்டுத்தசை நாணைத் தட்டுவதால், நாத்தலைத்தசை (குவாட்ரிசெப்1 எக்ஸ்டென்சார்) உண்டாக்கும் மறிவினை. (உயி)

knot - நாட்: அலகுச்சொல். விரைவின் அலகு. ஒரு நாட்டுக் கல் தொலைவு அல்லது மணிக்கு 1.852 கி.மீ. (இய)

Kohlrausch's law - கோல்ராச்சு விதி: அயனிவயமாதல் நிறைவுறும்போது அயனிகளின் கடத்தும் திறன்களின் கூட்டுத் தொகைக்கு மின் பகுளியின் (எலக்ட்ரோலைட்) கடத்தும் திறன் இணையானது. இந்நிகழ்ச்சி ஒருபொருள் சிதையும் பொழுது ஏற்படுவது. (இய)

koala - கோலா: மரத்தில் வாழும் ஆஸ்திரேலிய விலங்கு. மதலைப் பை கொண்டது. 1 மீட்டர் நீளமுள்ளது. அடர்ந்த மாநிற முடி கொண்டது. (உயி)

kovar - கோவர்: உலோகக் கலவை. கோபால்டும் இரும்பும் நிக்கலும் சேர்ந்தது. கண்ணாடி போன்று பெருகெண் கொண்டது. வெப்பத் திறப்பிகளிலும் படிகப் பெருக்கிகளிலும் பயன்படல். (வேதி)

krait - கட்டுவிரியன்: இந்தியப் பாறைப்பாம்பு, கொடிய நஞ்சுள்ளது. வயிற்றுச் செதில்கள் பெரியவை. வால் உருண்டிருக்கும். (உயி)

Kreb's cycle - கிரப்ஸ் சுழற்சி: கிரப்ஸ் (1900-81) பெயரால் அமைந்தது. சிக்கல் வாய்ந்த நொதிவினைச் சுழற்சி. இரு கரி அசிடைல் அலகுகள் இதில் உயிர்வளி ஏற்றம் அடைவதால், கரி இரு ஆக்சைடும் நீரும் உண்டாதல். வேறு பெயர்கள் நாரத்தைக்காடிச் சுழற்சி, முக்கார்பாக்சாலிகக் காடிச் சுழற்சி. (உயி)

Krishnaswamy Alladi - புகழ் பெற்ற வழக்குரைஞர் அல்லாடியின் மகனார். சிறந்த கணித அறிஞர்.

Kroll process - கிரால் முறை: மெக்னீசியம், சோடியம், கால்சியம் ஆகியவற்றால் உலோக ஏலைடுகளை ஒடுக்கும் முறை. (வேதி)

kryptol - கிரிப்டால்: கிராபைட், களிமண், குருந்தக்கல் ஆகியவை சேர்ந்த கலவை. மின் உலைகளில் மின்தடையாகப் பயன்படுதல். (வேதி)

krypton - கிரிப்டான்: Kr ஒரணு அரியவளி. நிறமற்றது, மணமற்றது. 1898 இல் இராம்சே கண்டறிந்தது. மின்குமிழ்களிலும் ஒளிர்விளக்குகளிலும் பயன்படுவது. (வேதி)

Kundt effect - குண்ட் விளைவு: முனைப்படுதலுக் குட்படுத்திய ஒளியின் அதிர்வுத்தலச்சுழற்சி பற்றி ஆராய்வது. ஒளிக்கதிரின் திசையில் பகுதி பெற்றிருக்கும் காந்தப்புலத்தில், ஓரகத் தனிமப் பண்புள்ள (ஐசோட்ராபிக்) ஒளி ஊடுருவு ஊடகத்தில், இந்த ஒளி செல்லும்போது ஆய்வு நடைபெறுவது. (இய)

Kundt's tube - குண்ட் குழாய்: ஆகஸ்ட்டு குண்ட் என்பவர் பெயரால் (1939-94) 1966இல் அமைந்த கருவி. ஒலியின் விரைவை அளக்கப் பயன் படுவது. (இய)

Kupfer nickel - கூஃபர் நிக்கல்: இயற்கை நிக்கல் அர்சனைடு (NiAs). நிக்கலின் முக்கிய தாது. (வேதி)

kymograph - அலைவரைவி: குருதித்துடிப்பு, இதயத்துடிப்பு, நுரையீரல் இயக்கம் முதலியவற்றின் இயக்கங்களைப் பதிவு செய்யும் கருவி. (உயி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/K&oldid=1040351" இலிருந்து மீள்விக்கப்பட்டது