அறிவியல் அகராதி/W
walking aids -நடக்க உதவும் கருவிகள்: நுண் மின்னணுக் கருவிகள். உறுப்புக் குறைபாடு உடையவர்க்கு உதவியாக இருப்பவை. குருடர்க்கும் செவிடர்க்கும் இக்கருவிகள் உதவுவன. (தொழி) .
walking ferns -அரும்பு விடு பெரணிகள்: சில பெரணிகள் தங்கள் இலை முனையில் அரும்புகளை உண்டாக்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இலை வளைந்து முனை தரையைத் தொட்டதும், அது வேர்விட்டுப் புதிய தாவரமாக வளரும். இவ்வாறு உறுப்பு முறையில் இனப்பெருக்கம் செய்யும் பெரணிகள் வேர்விடு பெரணிகள் ஆகும். எ-டு. அடியாண்டம் வகை, பாலிபோடிய வகை. (உயி)
Wallace's line - வாலேஸ்கோடு: இந்தோனேசியாவில் பாலி தீவுகளுக்கும் லாம்போக் தீவுகளுக்கும் இடையிலுள்ள கற்பனை எல்லை, ஆஸ்ட்ரேலியத் திணை விலங்குகளையும் கீழ்த் திசை விலங்குகளையும் பிரிப்பது. தார்வின் தம் உயிர் மலர்ச்சிக் கொள்கையை உருவாக்கியதில் உதவியர் வாலேஸ் (1823-1913) என்பவர் வரைந்தது. (உயி)
wall pressure - சுவரழுத்தம்: கண்ணறைப் பொருள்களில் உண்டாக்கப்படும் விசை. இது கண்ணறையின் விறைப்பழுத்தத்திற்குச் (டர்கர் பிரஷர்) சமமாகவும் எதிராகவும் இருக்கும். (உயி)
Walter, Grey - கிரே வால்டர்: பிரிட்டானிய நரம்பியலார், ஒப்புத் தொடர்பியலார். 1950 வாக்கில் எந்திர ஆமைகள் பற்றி ஆராய்ச்சி செய்தவர். கணிப்பொறிக் கட்டுப்பாட்டில் ஆழி (சக்கரம்) பொருந்திய தொலை இயக்கிகளை சேமர்பேப்பர்ட் என்பவர் இயக்கினார். வால்டர் ஆராய்ச்சியை நினைவு கூரவும் சிறப்பிக்கவும் இக்கருவிகளுக்குக் கடலாமைகள் என்று பெயரிட்டார். (தொ.நு)
warm-blooded animals - மாறா வெப்ப நிலை விலங்குகள்: பழைய சொல் நேர்மொழி பெயர்ப்பான வெப்ப இரத்த விலங்குகள். சூழ்நிலைக்கேற்றவாறு மாறாமல், உடல் வெப்ப நிலை ஒரே சீராக இருக்கும் விலங்குகள். எ-டு பறவைகள், பாலூட்டிகள், பா. (உயி)
warning colouration - எச்சரிக்கை நிறம்: எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளச் சில விலங்குகள் தங்கள் உடல் உறுப்புகளில் பெற்றிருக்கும் நிறம், எ-டு. நல்ல பாம்பு, விரியன். பா. camouflage (உயி)
warning odour - எச்சரிக்கை மணம்: 1. எரிவளிகள் பாதுகாப்பிற்காகத் தனித்த மனம் அவற்றிற்கு அளிக்கப்படுதல், அவை தமக்கு என்று மனம் கொண்டவை அல்ல. 2. சில விலங்குகளும் பாதுகாப்பிற்காக இம்மணத்தை வீசுபவை. (பது)
wart - கரட்டு நீட்சி: சிறிய கரடு முரடான புறவளர்ச்சி தோலில் ஏற்படுதல். இந்நீட்சியை தாவரத்தில் காணலாம். (உயி)
washing soda - சலவைச்சோடா: சோடியம் கார்பனேட், பா. sodium carbonate. (வேதி)
wasps - குளவிகள்: பூச்சிகள், முதல் வயிற்றுவளையம் பின் மார்போடு சேர்ந்து முன்காலை (புரோபோடியம்) உண்டாக்குகிறது. ஒளி ஊடுருவக்கூடிய நான்கு சிறகுகள் உண்டு. பின்னிணை சிறியவை. பெண்களுக்குக் கொடுக்குண்டு. பெரும்பான்மை மற்ற பூச்சிகளின் மீது ஒட்டுண்ணிகளாக வாழ்பவை. (உயி) water - நீர் ஒளி ஊடுருவக் கூடியது. நிறமற்றது. மணமற்றது. சுவையற்றது. கொ.நி. 100 °செ. உ.நி. 0 °செ. அனைத்துக் கரைப்பான். நீரின்றி அமையாது உலகு. பயன்கள் பல. (வேதி).
water bag - நீர்ப்பை: ஒட்டகத்தின் நீர்ப்பை. (உயி)
water barometer - நீர்ப்பளுமானி: இதில் பாதரசத்திற்குப் பதில், காற்றழுத்தத்தை அளக்க நீர் பயன்படுதல். (உயி)
water bugs - நீர்ப்பூச்சிகள்: குளங் குட்டைகளில் வாழ்பவை. பெரும்பான்மை பாசிகளையும் சில நீர்ப்பூச்சிகளின் இளம் உயிரிகளையும் உண்பவை. (உயி)
water gas - நீராவி வளி: எரி பொருள் வளி, கார்பன் மோனாக்சைடும் நீர் வளியும் சேர்ந்த கலவை. பழுத்த கல்கரியில் நீராவியைச் செலுத்த இவ்வளி கிடைக்கும். எரிபொருள். ஒ. producer gas. (வேதி)
water culture - நீர் வளர்ப்பு: தாவரங்களை நீரில் வளர்த்தல். பா. (உயி)
water holding capacity - நீர் கொள்திறன்: மண்நீரைத் தேக்கி வைக்கும் ஆற்றல். இது குறு மண்ணுக்கு அதிகம் (உயி)
water of crystallization - படிக(மாதல்) நீர்: பல படிகங்களில் வேதிமுறையில் நீர் சேர்ந்திருத்தல், வெப்பப்படுத்தல் மூலம் இதனை நீக்கலாம். படிகம் தன் பண்புகளை இழக்கும். (வேதி)
water pollution - நீரை மாசு படுத்துதல்: வேதிப்பொருள்கள், சாய்க்கடை நீர், கழுவுநீர் முதலியவை நீருடன் சேர்ந்து அதை மாசுபடுத்தல். இது வாழ்வு நலச்சிக்கல்களை உண்டாக்குவது. இதை உணர்த்தவே உலகத்துப் புரவு நாள் கொண்டாடப்படுகிறது. (உயி)
water potential - நீரழுத்தம்: தாவரத்திற்குத் தேவையான நீரின் ஆற்றல் அளவு. இஃது ஓர் அடிப்படை வெப்ப இயக்க விசையாகும். அதிக நீரழுத்தத்திலிருந்து குறைந்த நீரழுத்தத்திற்கு நீர் செல்வது. ஊடுபரவல், விறைப்பழுத்தம், மேற்பரப்பு விசை ஆகியவை இதற்கு உதவும் காரணிகள். (உயி)
water scorpion - நீர்த்தேள்: பூச்சி இன உயிரி. இரையுண்ணும் நீர்வாழி. முன்கால்கள் இரை பிடிக்கவும் பின் கால்கள் நடக்கவும், நீந்தவும் பயன்படுகின்றன. கடித்தால் வலி ஏற்படும். (உயி)
water stress - நீர் நெருக்கடி: வறட்சிநிலை. உயிர்ச்சூழலைப் பாதிப்பது, (உயி)
Watson-Crick model - வாட்சன் கிரிக் மாதிரி: டிஎன்ஏ வின் அமைப்பு மாதிரி. டிஎன்ஏ இரட்டைத் திருக்குச் சுருளில் உள்ளது என்று உறுதி செய்யப்பட்ட மாதிரி. அமெரிக்க உயிரியல் வேதிஇயலார் ஜேம்ஸ் வாட்சனும் (1928 - ) பிரிட்டிஷ் உயிரியல் வேதிய இயலார் பிரான்சிஸ் கிரிக்கும் (1916 - ) 1953இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உறுதிசெய்த மாதிரி. (உயி)
watt - வாட்: W. திறனின் எஸ்.ஐ அலகு. ஒரு வினாடிக்கு ஒரு ஜூல் என அது வரையறுக்கப்பட்டுள்ளது. மின்சாரச் சூழ்நிலையில், ஓர் ஓல்ட் மின்னழுத்த வேறுபாட்டில் ஒரு கடத்தி முனைகள் வைக்கப்படும்போது, அக்கடத்தியின் வழியாகச் செல்லும் ஓர் ஆம்பியர் மின்னோட்டம் ஏற்படுத்தும் ஆற்றல் மாற்ற அளவுக்கு அது இணையானது, ஜேம்ஸ் வாட்டின் (1736 - 1819) பெயரால் அமைந்தது. (இய)
watt hour - வாட் மணி: மின்னளவுகளில் பயன்படுத்தப்படும் ஆற்றல் அலகு. ஒரு மணிக்கு 3600 ஜூல்கள். ஒரு வாட்டு என்னும் அளவில் செலவாகும் ஆற்றலுக்குச் சமம், (இய)
Watt's Govemor - வாட்டின் ஆளி: இக்கருவி நீராவி எந்திரத்தில் அமைந்து, அதன் சுழல் விரைவைக் கட்டுப்படுத்துவது. பொதுவாக, ஆளி என்பது எல்லா எந்திரங்களிலும் அமைந்து, அவற்றின் விரைவை அடக்கி ஆள்வது. (இய)
wattmeter - வாட்டு மானி: மின் சுற்றுத் திறனை நேரடியாக வாட்டுகளில் அளக்கும் கருவி, (இய)
Wave - அலை: ஓர் ஊடகத்தில் ஏற்படும் ஒழுங்கான அலைக் கழிவு. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ஆற்றல் மாற்றம் ஏற்படுகிறது.
wave guide - அலைவழிகாட்டி: செறிவொடுங்கலில்லாமல் நுண்ணலை மின்காந்தக் கதிர் வீச்சு செல்லும் உட்குழிவான குழாய். (இய)
wave length - அலைநீளம்: அலையின் ஒரு முழுச்சுற்றின் முனைகளுக்கிடையே உள்ள தொலைவு. இது அலைவு விரைவோடும் அதன் அதிர்வெண்னோடும் தொடர்புடையது. C = v λ, λ - லேம்டா.
Wavemeter - அலைமானி: வானொலி அதிர்வெண் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சின் அலைநீளத்தை அளக்குங்கருவி. (இய)
wave number - அலைஎண்: ஓர் அலகு நீளத்தின் ஓர் அலையின் சுற்றுகளின் எண்ணிக்கை (இய)
wave particle duality - அலை-துகள் இருமை: அலைகள் சுமந்து செல்லும் ஆற்றல் அணுவாகவும் துகளாகவும் இருக்கலாம் என்னும் இருநிலைக் கருத்து. (இய)
wave theory - அலைக்கொள்கை: ஒலி அலையாகச் செல்கிறது என்னுங் கொள்கை, (இய)
Wax - மெழுகு: கொழுப்பு வகையைச் சார்ந்தது. கரையாதது. குறைந்த வெப்பநிலையில் உருகு வது. உயிரியைப் பாதுகாக்கப் பயன்படுவது. எ.டு, வெண்மெழுகு. வத்திகள் செய்யவும் கட்டு வேலையிலும் காலணித் தொழிலிலும் பயன்படுவது. பா. bees wax. (வேதி)
w bond - டபிள்யூ அலைவரிசை: நுண் அதிர்வெண் அலைவரிசை, 56-100 ஜைகாஹெர்ட்ஸ் எல்லை வரையுள்ளது. (இய)
WBC, white blood corpuscie - டபிள்யூ.சி. வெள்ளைக்குருதி அணுக்கள்: குருதியிலுள்ள வெள்ளணுக்கள். (உயி)
weather - வானிலை: காற்றுவெளி நிலைமை. கதிரவன் ஒளி, வெப்பநிலை, மப்புநிலை, ஈரநிலை, காற்றழுத்தம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியது. (இய)
weather forecasting - வானிலை முன்னறிவிப்பு: அன்றாடம் வானிலை நிலையம் திரட்டும் வானிலைச் செய்திகளின் அடிப்படையில் அடுத்த நாள் வானிலை எவ்வாறு இருக்கும் என்று முன் கூட்டித் தெரிவித்தல், வானிலைச் செய்திகளை உலக அளவில் திரட்டச் செயற்கை நிலாக்கள் பேருதவி புரிகின்றன. (இய)
web - 1. விரலிடைத்தோல்: சில விலங்குகளின் விரல்களை இணைக்கும் மெல்லிய படலம். நீரில் நீந்தத் துடுப்புபோல் உதவுவது. எ-டு வாத்து, தவளை. (உயி) 2. இடையம்: இணையம் ஒ. net, internet
web page - இடையப்பக்கம்.
website - இடையத்தளம்: இணையவரி, மின்தளம்
weed - களை: தேவையில்லாத தாவரம், களைக்கொல்லி மூலம் போக்கலாம். வயல்களிலும் புஞ்சைப்பயிர்களிலும் களை எடுத்தல் இயற்கை முறையாகும். (உயி)
weevil - அந்துப்பூச்சி: 3000 வகைகள். அலகாகத் தலை நீண்டுள்ளது. அலகிலிருந்து உணரிகள் கிளம்புபவை. அலகின் முனையில் அசையும் வாய்ப்பகுதிகள் உண்டு. இலைகள் பூக்கள், தானியங்கள் முதலியவற்றை அழிப்பது. (உயி) weight - எடை: ஒரு பொருளின் மீது ஏற்படும் புவி ஈர்ப்புவிசையின் அளவு. இடத்திற்கிடம் மாறுபடுவது. காரணம் புவிஈர்ப்பு விசையின் அளவு மாறுவதே. ஒ, mass, weightlessness. (இய)
weightlessness - எடையின்மை: வானவெளி நிலைமை. எடையே இல்லாத நிலைமை, வாணவெளி யில் உண்டாவது. உடல் மிதக்கும். இதனைச் சுழி ஈர்ப்பு நிலைமை என்றும் கூறலாம். வானவெளி வீரர்கள் உணர்வது. வானவெளி உயிரியலில் ஒரு நோயாகக் கருதப்படுவது. பா. Zero gravity. ஒ. Weight (இய)
Weston cell, Cadmium cell - வெஸ்டன் மின்கலம், காட்மியம் மின்கலம்: ஒருவகை முதன்மை மின்கலம், திட்ட மின்கலமாகப் பயன்படுவது. 20 °செ. இல் 1.0186 ஓல்ட்டுகள் உள்ள நிலையான மின்னியக்குவிசையை உண்டாக்குவது. (இய)
welding - பற்றவைத்தல்: அதிக வெப்பநிலையில் உலோகத்துண்டுகளை இணைத்தல். இதற்கு மின் வெப்பம் பயன்படுதல், (வேதி)
whale - திமிங்கிலம்: நீரிலுள்ள விலங்குகளில் மிகப்பெரியது. மீன் போன்ற உருஉடையது. மீனன்று. பாலூட்டி. 30-32 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. 150 டன் எடையுள்ளது. முன்புறத்துறுப்புகள் நீந்துறுப்புகளாக (பிளிப்பர்ஸ்) மாறியுள்ளன. வழக்கமான உறை இல்லாத தோல், துணைத் தோலில் கொழுப்புண்டு. பார்வைக் கூர்மை இல்லை. மன உணர்வும் நலிந்தது. கூரிய செவியுணர்வு மிக்கது. நீரில் கீச்சிட்டுச் செல்வது. எதிரொலி மூலம் பொருள்களின் இருப்பிடத்தை நுட்பமாக அறிவது. மூச்சுவிட அடிக்கடி நீருக்கு மேல் வருவது. அதிகம் இது வேட்டையாடப்படுகிறது. இருப்பினும், இதனைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (உயி)
wheatstone bridge - வீட் ஸ்டோன் மின்சுற்று: ஒரு தடையின் மதிப்பை அளக்கப் பயன்படும் மின்சுற்று. (இய)
wheel and axle - உருளையும் அச்சும்: இது ஒரு சுழல்வகை நெம்புகோல்.
எந்திரலாபம் = உருளையின் ஆரம்இருசின் ஆரம்
பா. winch. (இய)
whispering galleries - மென் குரல் மாடங்கள்: சில கட்டிடங்களில் கீழ்த்தளத்தில் சிறிய ஒலியை எழுப்பினாலும், அதன் எதிர் முனைகளில் அது பெரியதாகக் கேட்கும். நடுவில் இருப்பவர்கள் ஒன்றும் கேட்க இயலாது. முகட்டின் ஒரு பகுதி மறிக்கும் பரப்பாகிறது. ஒலி அலைகள் முக்கிய குவியங்களில் ஒன்று சேர்வதால், இத்தகைய கட்டிடங்கள் தாழ்குரல் பெருக்கு கூடங்கள் எனப் பெயர் பெறுகின்றன. எ-டு உரோம் நகர், தூய யோவான் ஆலயம், இலண்டன் தூயபால் ஆலயம், இந்தியாவில் கோல்கும்பஸ், (இய)
white arsenic - வெண்சவ்வீரம்: As2O3. ஆர்சனிக் மூவாக்சைடு. வெண்ணிறப் படிகம். வீறுள்ள நச்சு. 75% சவ்வீரம் உள்ளது. நச்சுத் தூண்டில்களில் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுவது. (வேதி)
white blood cell - குருதி வெள்ளணு: (உயி)
white lead - வெண்ணீயம்: Pb(OH)2 2PbCO3. காரீய (II) கார்பனேட்டு அய்டிராக்சைடு. மிக முக்கியமான காரகக் காரீய கார்பனேட்டு. மின்னாற் பகுப்பு முறையில் வாணிப அளவில் உற்பத்தி செய்யப்படுவது. வெள்ளை வண்ணக் குழைவிலும் இதன் நிறமி பயன்படுவது. (வேதி)
whooping cough - சுக்குவான்: குழந்தைகளுக்குரிய தொற்று நோய் இருமலும் முச்சிழுப்பும் அதிகமிருக்கும். இதற்குத் தற்பொழுது தடுப்பூசி உள்ளது. (உயி)
whooping crane - இரையும் நாரை: வட அமெரிக்கப் பறவை. அழியும் நிலையில் உள்ளது. இதன் கொம்பிரைச்சல் குறிப்பிடத்தக்கது. உயிரியலார் இதன் வகைகளைக் காப்பாற்ற முயன்று வருகின்றனர். (உயி)
wide angle lens - அகல்கோண வில்லை: இது குறுகிய குவியத் தொலைவுடைய ஒளிப்பட வில்லை. பார்வைக் கோணம் 80° க்கு மேல் இருக்கும். (இய)
wild life conservation - காட்டு விலங்கு பாதுகாப்பு: காடுகளில் வாழ்பவை காட்டு விலங்குகள். மனிதன் தன் வசதிக்காகவும் வாழ்வு நிலத்திற்காகவும் மேற்கொள்ளும் செயற்கை முறைகளால் இவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இவை அவ்வாறு அழியாமலிருக்க மேற்கொள்ளப்படும் தடுப்பு முயற்சியே காட்டு விலங்குப் பாதுகாப்பாகும். புலி, சிங்கம், மான், பறவை முதலிய 500க்கு மேற்பட்ட காட்டு விலங்குகள் இந்தியாவில் உள்ளன. இவற்றைக் காப்பதற்கென்று பல இடங்களில் புகலிடங்களும் பூங்காக்களும் உள்ளன. தமிழ் நாட்டில் முதுமலை, முண்டந்துறை, வேடந்தாங்கல் முதலிய இடங்களில் புகலிடங்கள் உள்ளன. இவை காட்டு விலங்குகளைக் காக்கும் முதன்மையான இடங்கள். (உயி)
wild type - இயற்கை வகை: இயற்கை உயிர்த் தொகுதிகளில் கொடுக்கப்பட்ட ஒரு மரபணுவின் வடிவம். பொதுவாக எங்கும் காணப்படுவது. இயற்கை வகை இனை மாற்றுகள் (+) வழக்கமாக ஓங்குதிறன் கொண்டவை. இயல்பான புறமுத்திரையை உருவாக்குபவை. (உயி)
wilt - வாடல்நோய்: வாடுதலால் ஏற்படும் தாவர நோய், வேர் நோய்களின் முற்றிய நிலைகளில் உண்டாவது. (உயி)
wind - காற்று: மேற்பரப்புக்குச் சார்பான நிலையில் காற்றின் அசைவு. (இய)
winch - 1. உருளை. 2. இருசின் கிறங்கு. 3. உருளை எந்திரம். இழுக்கும் அல்லது இறைக்கும் பொறி. (இய)
window - சாளரம்: 1. புவிக்காற்று வெளியிலுள்ள திறப்புகளில் ஒன்று. புறவான வெளியிலிருந்து ஒளியும் வானொலி அலைகளும் இவற்றின் வழியே ஊடுருவிப் புவியை அடைபவை. 2. தனி விளைவுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய பகுதி. கணிப்பொறியில் காட்சி வெளிப்பாட்டகத்தில் உள்ளது 3. மென்பொருள். (இய)
wind mill - காற்றாலை: இதில் இயக்கு ஆற்றல் காற்று. தகட்டுத் தொகுதியாலான காற்றாடி சுற்றி, இயக்கத்தை அளிக்கும். நீர் இறைக்கப் பயன்ப்டுவது. பா. wind power' (இய)
wind pipe - மூச்சுக்குழல்: தொண்டையிலிருந்து நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றுக் குழாய். இரு கிளைகளாகப் பிரிந்து. ஒவ்வொரு கிளையும் ஒரு நுரையீரலைக் கொண்டிருப்பது. (உயி)
wind power - காற்றாற்றல்: வீசும் காற்றின் ஆற்றல் அதன் திசை விரைவின் மும்மடிக்கு நேர் வீதத்தில் இருக்கும். புவிமேற்பரப்பில் வீசும் காற்றின் மூலம் 10 MW ஆற்றல் விலையின்றிக் கிடைக்கிறது. தகுந்த கருவிகளைக் கொண்டு இவ்வாற்றலை எந்திர ஆற்றலாக்கலாம். இதற்குக் காற்றாடி எந்திரம் பொதுவாகப் பயன்படுவது. நீர் இறைக்கவும், தானியங்களை அரைக்கவும், மின் உற்பத்தி செய்யவும் காற்றாடிகள் பயன்படும். (இய)
winds - காற்றுகள்: வீசக்கூடிய பண்புடையவை. இவை வாணிபக் காற்றுகள் மேற்குக் காற்றுகள், முனைக்காற்றுகள், நிலக்காற்றுகள். கடல்காற்றுகள் எனப் பல்வகைப்படும். அரித்தல், கடத்தல், படியவைத்தல் ஆகிய மூன்றும் இவற்றின் வேலைகள். (பு.அறி)
wings - சிறகுகள்: தட்டையான படல அமைப்புகள், பறவைகள் பறக்க உதவுதல். பறவைகளின் முன்புறத் துறுப்புகள் சிறகுகளாகியுள்ளன. ஏனைய முதுகெலும்புகளின் முன்புறத்துறுப்புகளோடு தோற்ற ஒற்றுமை கொண்டவை. பூச்சிகளின் முன்புறத்துறுப்புகள் வேலை ஒற்றுமை உடையவை. (உயி)
Wollaston prism - வாலஸ்டைன் முப்பட்டகம்: இது முனைப்படு விளைவு கொண்ட கண்ணாடி. தலமுனைப்படு ஒளியைப் பெறப் பயன்படுதல். (இய)
womb - கருப்பை: பா. uterus. (உயி)
wood - கட்டை: குறிப்பாக மரங்களில் காணப்படும் கடின நரம்பமைப்பு. இரண்டாம் மரவியத்திலிருந்து சைலம், உண்டாவது. இரண்டாம் நிலை வளர்ச்சியுள்ள தாவரங்களில் மட்டுமே காணப்படும். எ-டு இருவிதையிலைத் தாவரங்கள். இதன் வகைகளாவன. 1. சாற்றுக் கட்டை சேப் உட்): இதில் மட்டுமே நீரும் ஊட்டப் பொருள்களும், கடத்தப்பெறும். இது இளங்கட்டை 2. வயிரக் கட்டை (ஹார்ட் உட்): பல பருவ வளர்ச்சியால் உண்டாவது. வேலை ஒன்றும் இல்லாதது. வாணிபச் சிறப்புடையது. மற்றும் வன்கட்டை, மென்கட்டை எனவும் இரு வகைப்படும். (உயி)
Wood's metal - உட் உலோகம்: ஓர் உலோகக்கலவை. பிஸ்மத் (50%) காரீயம் (25%), வெள்ளீயம் (12.5%) சேர்ந்த கலவை. உ.நி. 70 °செ. குறைந்த உருகுநிலையினால் தீப்பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுதல். (வேதி)
word-சொல்: கணிப்பொறி 32, 48, 64 என்று ஓர் அலகாகக் கொள்ளும் பிட்டுகளைக் கொண்டது. (இய)
word processing - சொல்செயல் முறையாக்கல்: கணிப்பொறி வழி அமைந்த முறை. இதில் தட்டச்சு செய்யப்பட்ட செய்தி உண்டாக்கப்படுகிறது. பதிப்பிக்கப்படுகிறது. இச்செயல்கள் அனைத்தும் இதில் நடைபெறுகின்றன. (இய)
word processor, WP - சொல்செயல் முறையாக்கி: கணிப்பொறி வழியமைந்த தட்டச்சுப் பொறி. இதில் எழுதிய செய்தி பிறப்பிக்கப்படுகிறது, சேமிக்கப்படுகிறது, பதிப்பிக்கப்படுகிறது, அச்சியற்றப்படுகிறது, செலுத்தப்படுகிறது. இதிலுள்ள ஐந்து முதன்மையான பகுதிகளாவன. 1. தட்டுப் பலகை: பதிப்புச் செய்தியை உள்விடுவது. 2. நுண்செயல் முறையாக்கி: பதிப்பு நடைமுறைகள் பற்றி முடிவுகள் செய்ய உதவுவது. 3. பார்வை வெளிப்பாட்டு அலகு (விடியூ): தட்டுப்பலகை பதிப்பிக்கும் கையாளும் பதிப்புச் செய்தியை வெளிக்காட்டுவது. 4. மென்தட்டு இயக்கி அல்லது காந்தக் குமிழி நினைவகம்: இதன் வாயிலாகக் கோவைகள் (ஃபைல்ஸ்) சேமித்துச் சேர்க்கப்படுகின்றன. 5. அச்சியற்றி: பதிப்புச் செய்தியின் நகலை உண்டாக்குவது. (இய)
work - வேலை: ஒரு விசை ஒரு பொருளின் மீது செயற்படும் காலை, அப்பொருள் அவ்விசையின் திசையில் நகருமானால் வேலை நடைபெறும். W = mas. w- வேலை, m- நிறை, a- முடுக்கம், s- தொலைவு. சார்பிலா அலகு எர்க்கு. புவிஈர்ப்பு சார்ந்த அலகு செண்டிமீட்டர் கிராம். நடைமுறை அலகு ஜூல். (இய)
work function - வரம்பாற்றல்: உலோகத்தில் பெர்மி நிலையில் உள்ள மின்னணுவை முடிவற்ற நிலைக்கு கொண்டு வரத்தேவைப்படும் குறைந்த அளவு ஆற்றல். (இய)
work hardening - வேலைக் கடினம்: குளிர்ச்சியில் உலோகங்களை வேலைக்குட்படுத்துவதால் அவற்றின் கடினம் உயர்தல். (வேதி)
work station - பணி (வேலை) நிலையம்: கணிப்புச் செயல்களுக்குரிய பணியாற்றுமிடம். நாற்காலி, சாய்வுமேசை, சேமிப்பு வசதிகள் முதலியவை கொண்டவை. (இய)
work space, working area - வரம்பிடம்: தட்டு அல்லது நாடாவில் அமைந்துள்ள நிகழ்ச்சிக்குரிய நினைவகப் பரப்பு. (இய)
working voltage - வரம்பு மின்னழுத்தம்: பெரும மின்னழுத்தம். ஒரு பகுதி, குறிப்பாக, மின்னேற்பி சேதமுறாமல் தாங்கக்கூடியது. (இய)
World Environment Day, WED - உலகச்சூழ்நிலை நாள்: 1992க்குப் பின் ஒவ்வொராண்டும் ஜூன் 5 சூழ்நிலையின் இன்றியமையாமை, அது பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை உணர்த்தக் கொண்டாடப்படுவது. (பு:அறி)
World Meteorological Day, WMD - உலக வானிலை நாள்: ஒவ்வோராண்டும் மார்ச் 23 கொண்டாடப்படுவது. இத்துறையின் முன்னேற்றத்தையும் பணியையும் மக்களுக்குத் தெரிவிக்க நடத்தப்படுவது. (பு:அறி)
Woulfe bottle - உல்ஃப் குப்பி: இரு கழுத்துடைய கண்ணாடிச் சீசா. நீர்மத்தின் வழியாக வளியைச் செலுத்தப் பயன்படுவது. (வேதி)
wrist watch computer - கைக்கடிகாரக் கணிப்பொறி: எண்சார் கைக்கடிகாரம். கணிப்பொறி வேலை. நேரங்காட்டல், அறிவித்தல், நாள்காட்டல் ஆகியவற்றைச் செய்வது. (இய)
wrist watch TV - கைக்கடிகாரத் தொலைக்காட்சி: கைக்கடிகாரத்தில் அமைக்கப்பெற்ற தொலைக்காட்சிப் பெறுவி. மின்கல அடுக்கு அடைப்பால் இயங்குவது (இய)
wounds - காயங்கள்: தோலிலோ தோலுக்குக் கீழோ ஏற்படுபவை. தாக்குதல், வெட்டுதல், கத்துதல் முதலியவற்றால் ஏற்படுபவை. வேதிப்பொருள்கள், குளிர், உராய்வு, வெப்பம் முதலியவற்றாலும் ஏற்படுபவை. இலேசான காயங்களுக்கு அயோடின் கரைசலைப் பூசவேண்டும். ஆழமான காயங்களாக இருந்தால் மருத்துவரையும் மருத்துவமனையையும் நாடுவது நல்லது. ஒ. bruises burns. (மரு)
wrought iron - தேனிரும்பு: தூய வணிக இரும்பு. கரி இல்லாதது. வார்ப்பிரும்பிலிருந்து பெறப்படுவது. தகடாக்கலாம். கம்பியாக்கலாம். சங்கிலிகள், கம்பி, ஆணிகள் முதலியவை செய்யப் பயன்படுதல். (வேதி)