உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் அகராதி/T

விக்கிமூலம் இலிருந்து

T

table salt - மேசையுப்பு, உணவுப்பு: பொதுஉப்பு. சோடியம் குளோரைடு, NaCl. (வேதி)

tachometer - விரைவுமானி: எந்திரங்கள், விசைப்படகுகள், வானவூர்திகள் முதலியவற்றின் விரைவை அளக்கப் பயன்படும் கருவி. பேருந்திலும் பொருத்தப்பட்டிருக்கும். (இய)

tactic movement - அமைவு இயக்கம்: பா. taxis.

tadpole - தலைப்பிரட்டை: தவளையின் இளம் உயிரி. தவளை வாழ்க்கை வரலாற்றில் முட்டைக்கு அடுத்துள்ள இயக்கப் பருவம்.

tail - வால்: உடலின் பின்னீட்சி. மலப்புழைக்குப் பின்னுள்ள பகுதி எல்லாத் தண்டுவட உயிரிகளிலும் உண்டு. ஆனால் தவளையிலும் மனிதனிடமும் மறைந்து விட்டது. (உயி)

talc - டால்க், தூள்: Mg2Si4O10. நீருள்ள மக்னீசியம் சிலிகேட்டு. மிக மென்மையானது. வெண்ணிறப் பொருள். வழவழப்பாக இருக்கும். நிரப்பியாகவும் பூசு பொருளாகவும் தூசு நீக்கு பொருளாகவும் பயன்படுதல். (வேதி)

tall oil - மர எண்ணெய்: மரக்கூழ் செய்வதில், ஒரு துணை விளைபொருளாகக் கிடைப்பது. பிசுபிசுப்பானது. சவர்க்காரம் செய்வதிலும் வண்ணக் குழைவு செய்வதிலும் பயன்படுதல். (உயி)

tangent galvanometer - டேன்ஜண்ட் மின்னோட்ட மானி: சிறிய நேர மின்னோட்டங்களை அளக்கப் பயன்படும் கருவி. (இய)

taming - தோல் பதனிடல்: கச்சா விலங்கு அதள்களைத் (ஹைட்ஸ்) தோலாக்குதல். (உயி)

tantalum - டாண்டலம்: மாறுநிலைத் தனிமம். எளிதில் வேலை செய்வதற்கேற்றது. அரிமானத்தைத் தடுப்பது நீராழித்தகடுகளிலும் அறுவையிலும் பல் மருத்துவத்திலும் பயன்படுவது. (வேதி)

tape recording - நாடா ஒலிப்பதிவு: நாடாவில் ஒலிப்பதிவு செய்யப்படுவது. போல்சன் என்பார் எஃகின் காந்தப் பண்புகளை ஒலிப்பதிவிற்காக முதன்முதலில் பயன்படுத்தினார். இது காந்த ஆற்றலைத் தேக்கி மீண்டும் விடவல்லது.

tapiaco - மரவள்ளிக்கிழங்கு: குச்சிக்கிழங்கு. மைதாமாவு தயாரிக்கப் பயன்படுவது. (உயி)

tap root - ஆணிவேர்: முதல் வேர். இரு விதையிலைத் தாவரங்களுக்குரியது. (உயி)

tapeworm - நாடாப்புழு: தட்டைப் புழு. ஓர் ஒட்டுண்ணியுமாகும். வாய்ப்பகுதிகளோ செரித்தல் மண்டலமோ இல்லை. முதுகெலும்பிகளின் குடல் சுவரில் ஒட்டி வாழ்வது. (உயி)

tar - தார்: நிலக்கரியைச் சிதைத்து வடிக்கக் கிடைப்பது. ஒட்டக் கூடிய கரும்பொருள். இஃது ஓர் அரும் பொருட்சுரங்கம். பென்சீன் முதலிய கரைப்பான்கள் செய்யவும் பினால் முதலிய நச்சுத் தடைகள் செய்யவும், ஆந்திரசீன் முதலிய சாயங்கள் செய்யவும், கரிப்பிசின் சாலை போடவும் பயன்படுகின்றன. (வேதி)

tarsal bones - கணுக்கால் எலும்புகள்: பா. tarsus. (உயி)

tarsus - கணுவம்: 1. முதுகெலும்பிகளின் கணுவெலும்புத் திரட்சி. 2. பூச்சி, சிலந்தி ஆகியவற்றின் காலிலுள்ள ஐந்தாம் கணு அல்லது புறக்கணு. (உயி)

tartaric acid - டார்டாரிகக் காடி; இயற்கையாகக் கிடைக்கும் கார்பாக்சிலிகக் காடிப்படிகம். சமையல் தூளிலும் உணவுப் பொருள்களிலும் பயன்படுவது. டார்டாரிலிருந்து பெறப்படுவது. (வேதி)

taste - சுவை: விரும்பத்தக்கதும் தகாததுமான உணவுகளை வேறு படுத்தியறியும் உயிரிகளின் வேதி உணர்வு, சுவையை உணர்வது சுவையரும்புகள். (உயி)

taste buds - சுவை அரும்புகள்: நாக்கிலுள்ள தசைப்படலத்தில் பல காம்புகள் உள்ளன. இவற்றிலுள்ள சுவையணுக்களின் திரட்சியே சுவையரும்புகள். நாக்கின் நுனி இனிப்பையும், அடி கசப்பையும், பக்கங்கள் புளிப்பையும் உணர்கின்றன. உப்பையும் துவர்ப்பையும் எல்லாச் சுவை யரும்புகளும் உணரும். ஒரு பொருள் நீர்மநிலையில் இருந்தாலே, அதன் சுவையினை நாக்கு உணர இயலும். (உயி)

taxidemy - பாடஞ் செய்தல்: உள்ளுறுப்புகள் நீங்கிய விலங்குகளின் தோல்களை முழுதுமாகவோ பகுதியாகவோ உள்ளே பஞ்சு போன்ற பொருளை அடைத்து முழு உருவம் கொடுத்தலுக்குப் பாடஞ் செய்தல் என்று பெயர். கீரியின் பாடம், உயிர் கீரிப்பிள்ளைப் போன்றே இருக்கும். விலங்குக் காட்சியகங்களில் இது போன்று பாடஞ் செய்த பொருள்கள் பல இருக்கும். விலங்குகளைப் பாடஞ் செய்தல் ஒரு கலையாகும். (உயி) taxis-அமைவுஇயக்கம்: தூண்டல் நோக்கி உயிரி முழுதும் அசைதல், எ-டு ஒளி அமைவியக்கம். (உயி)

taxon - டேக்சான்: அலகுச் சொல். வகைப்பாட்டின் அலகு. (உயி)

taxonomy - வகைப்பாட்டியல்: வேறு பெயர் முறைப்பாட்டியல். வகைப்படுத்தலின் நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் ஆராயுந்துறை. இதன் தந்தை ஸ்வீடன் நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளர் லின்னேயஸ் 1707 - 1778) ஆவார். இது தாவர வகைப்பாட்டியல், விலங்கு வகைப்பாட்டியல் என இரு வகைப்படும். பொதுவாக, ஓர் உயிரியின் உறுப்பமைவு, வேலை, வளர்ச்சி முதலியவற்றிலுள்ள ஒற்றுமை வேற்றுமை அடிப்படையில், அது வகைப்படுத்தப்படுகிறது. அவ்வாறு வகைப்படுத்துவதில்

  1. உலகம் (கிங்கடம்)
  2. பெரும்பிரிவு (பைலம்)
  3. வகுப்பு (கிளாஸ்)
  4. வரிசை (ஆர்டர் அல்லது பிரிவு டிவிஷன்)
  5. குடும்பம் (பேமிலி)
  6. பேரினம் (ஜெனஸ்)
  7. சிறப்பினம் (ஸ்பீஷிஸ்)

எனப் பல அலகுகள் உண்டு. இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது சிறப்பினமே. எல்லா முக்கிய உருவியல் பண்புகளிலும் ஒன்றை மற்றொன்று ஒத்தமையும் தனி உயிரிகளைக் கொண்டதே சிறப்பினம். ஓர் உயிரியை இனங் கண்டறிய, அதன் சிறப்பினப் பெயரே மிக இன்றியமையாதது. இன்று இத்துறை பல நிலைகளிலும் நன்கு வளர்ந்துள்ளது. (உயி)

tears - கண்ணீர்: கண்ணீர்ச் கரப்பியின் சுரப்பு. இதில் புரைத்தடுப்பியாக உள்ள லைசோசைம் என்னும் நொதியுள்ளது. (உயி)

tecnetium - டெக்னிடியம்: Tc. மாறு நிலைத்தனிமம். மாலிப்டினத்தை அல்லணுக்களால் தகர்க்கச் செயற்கையாகக் கிடைப்பது. யுரேனியத்தைப் பிளந்தும் பெறலாம். கதிரியக்கத் தன்மையுள்ளது. (வேதி)

technique - நுட்பம்: நுணுக்கம். செய்து காட்டும் முறை. கையாளுந்திறன். ஒ. mechanism, (ப.து)

technology - தொழில்நுட்பவியல்: தொழில் நுணுக்கவியல். பயனுறு அறிவியல். வாழ்க்கைப் பயனை ஆராயுந்துறை. நுட்பம் பொருந்திய எத்துறையும் வாழ்க்கைக்குப் பயன்படுமானால், அது தொழில் நுட்பவியலே. பரந்தும் விரிந்துமுள்ள துறை. இது பல வகைப்படும்: தோல் தொழில்நுட்பவியல், தாள் தொழில்நுட்பவியல். (ப.து)

technology transfer - தொழில் நுட்பமாற்றுகை: ஒரு துறையில் உருவான கருத்துகளும் புனைவு களும் அத்துறையோடு தொடர்பில்லாத மற்றொரு துறையில் புதிய பொருள்களை உருவாக்கவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் பயன்படுதல். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. நுண் மின்னணுவியல் (மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்) இதிலுள்ள ஒருங்கிணைப்புச் சுற்று (இண்டகரேட்டட் சர்குயிட்) வாணிபம், பொழுதுபோக்கு, கல்வி, ஆராய்ச்சி, வானவெளி ஆராய்ச்சி முதலிய துறைகளில் வெற்றியளிக்கும் வகையில் பயன்படுவது. வளரும் நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் ஆகியவற்றிற்கு இது மிக இன்றியமையாதது. (ப.து)

teeth - பற்கள்: கடின வெண்ணிற உறுப்புகள். முதுகெலும்பிகளின் வாயில் அமைந்துள்ளவை. உணவை அரைக்கவும் பொருள்களைப் பற்றவும், கடிக்கவும், டோரிடவும் பயன்படுபவை. இவை வெட்டுப்பற்கள், கோரைப் பற்கள், கடைவாய் முன்பற்கள், கடைவாய்ப் பின்பற்கள் என நான்கு வகைப்படும். இவற்றில் சில மாற்றங்களும் உண்டு. பாம்பில் கோரைப்பல் நச்சுப் பல்லாகவும் யானையில் தந்தமாகவும் மாறியுள்ளது. (உயி)

telechirics-தொலை இடர்ப்பணி இயல்: பணியில் ஈடுபடுபவருக்கு எவ்வகை இடையூறுமின்றி. இடர்மிகு பணியினைத் தொலைக் கட்டுப்பாட்டுக் கருவிகள் வாயிலாக நிறைவேற்றப்படுவதை ஆராயுந்துறை, எ-டு. வானவெளிக்கப்பலைப் பழுது பார்த்தல், பா. robot (தொழி)

telecommunication - தொலைச் செய்தி்த் தொடர்பு: குறிகள், உருக்கள், ஒலிகள் ஆகியவற்றைச் செலுத்தும் அல்லது பெறும் முறை. இது ஒரு மின்காந்த முறை. எ-டு கம்பியிலாத் தந்தி, வானொலி, தொலைக்காட்சி. (உயி)

telecontrol - தொலைக்கட்டுப்பாடு: தொலைத்தொடர்பு மூலம் கருவியினால் நடைபெறும் கட்டுப்பாடு. வானவெளிச் செய்தித் தொடர்பில் பயன்படுவது. வானொலித் தொடர்பு வழியாகச் செயற்கை நிலாக்களைக் கட்டுப்படுத்தல். கோள்களில் இறங்கல். லூனிக்கு திங்களில் இறங்கியது. (தொழி)

telegraphy - தொலைவரைவியல்: எண், எழுத்து முதலியவற்றைக் குறியீடு செய்து அனுப்பும் தொலைத் தொடர்பு முறை. செய்தியைப் பதிவு செய்வது தொலை வரைவு. (இய)

telemeter - தொலைமானி: 1. இயற்பியல் அளவை அளக்குங் கருவி. எ-டு வெப்பநிலை, அழுத்தம். 2. தொலைவுகளை அளக்குங் கருவி, 3. ஒளிப்படப் பிடிப்பாளரின் எல்லைக்காணி. இய)

telemetering - தொலை அளவாக் கல்: இதில் செய்தித் தொடர்பு முறைகள் பயன்படுகின்றன. இவை அளவு முடிவுகளை ஒரு மையத்திற்குப் பதிவு செய்வதற்காகவும் பகுப்பதற்காகவும் அனுப்புபவை. பா. telemetry (தொநு)

telematics - தொலைநுட்பவியல்: தொலை நுணுக்கவியல் , தொலைச் செய்தித் தொடர்பு முறைகள். கணிப்பொறிகள் ஆகியவற்றின் பொருளாதாரச் சிறப்பையும் சமுதாயச் சிறப்பையும் ஆராயுந்துறை. இது ஒரு செய்தி நுட்பவியலே. (தொநு)

telephone - தொலைபேசி: இதில் மின்தூண்டல் நெறிமுறை பயன்படுகிறது. ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கேட்கக்கூடிய பேச்சைக் கொண்டு செல்வது. இதில் பேச்சைப் பெறுங்குழாய் பேசுங்குழாயாகவும் உள்ளது. இதில் ஒலி ஆற்றல் மின்னாற்றலாகி, மீண்டும் ஒலியாற்றலாகிறது. இது 1876 இல் அமெரிக்காவைச் சார்ந்த கிரகாம் பெல் (1847-1922) என்பவரால் புனையப்பட்டது. (இய)

teleprinter-தொலையச்சு: செய்திகளைத் தானே அச்சு இயற்றுங் கருவி. செய்திகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தொலை வரைவி மூலம் இதற்கு அனுப்பப்படுகின்றன. இரண்டு இடங்களிலும் தட்டச்சுபயன் படுத்தப்படுகிறது. இது ஒரு தொலைத் தொடர்பு முறை. (இய)

television - தொலைக்காட்சி: வானொலி அலைகள் வாயிலாக உருக்களைச் செலுத்துவதும் பெறுவதுமாகிய முறை. தொலைக்காட்சிப் புகைப்படப் பெட்டியிலுள்ள ஒளிமின்னோட்டத்திரையில் செலுத்தப்பட வேண்டிய காட்சி குவியுமாறு செய்யப் படுகிறது. இத்திரையை மின்னணுக்கற்றை அலகிடுகிறது. புகைப்படப் பெட்டி உண்டாக்கும் மின்னோட்டத்தின் செறிவு அலகிடப்படும் திரைப்பகுதியின் ஒளிர்வுக்கு ஏற்றவாறு அமைகிறது. இவ்வாறு உண்டாக்கப்பட்ட படக்குறியீடு ஊர்தி அலைக்குத் தகுந்தவாறு பண்பேற்றம் (மாடுலேஷன்) செய்யப் படுகிறது. தனித்த ஒலிக்குறியீட்டுடனும் பட வரிகளுக்கு இடையிலுள்ள குறுகிய வெளிகளில் செய்தி பொருந்துமாறும் அது செலுத்தப்படுகிறது. பெறும் அலை வாங்கியினால் ஏற்கப்படும் குறியீடுகள் உரிய பண்பிறக்கம் (டிமாடுலேஷன்) செய்யப்படுகிறது. இம்மாற்றம் செய்யப்பட்ட குறியீடு எதிர் மின் கதிர்க் குழாயிலுள்ள மின்னணுக் கற்றையைக் கட்டுப்படுத்துகிறது. இக்குழாயின் திரையில் படம் மீண்டும் சீரமைப்பு பெறுகிறது. இப்பொழுது நாம் காட்சியை ஒலியுடன் பார்க்கிறோம். தொலைக்காட்சி வண்ணக் காட்சி, கறுப்பு வெள்ளை கலந்த காட்சி என இருவகைப்படும். இக்காட்சியைப் புனைந்தவர் ஜான்லாகி பெயர்டு (1888-1946) என்பவராவார். (இய)

telewriter - தொலை எழுதி: இது தொலை எழுது முறையாகும். இதில் செலுத்து முனையில் உண்டாகும் எழுத்தசைவு பெறும் முனையிலும் எழுது கருவியின் ஒத்த அசைவை உண்டாக்குகிறது. (இய)

telex - தொலை அதிர்வச்சு: இது செவியுறு அதிர்வெண் கொண்ட தொலையச்சு முறை. தொலைபேசிக் கம்பிகளில் பயன்படுவதற்காக அமைக்கப்பட்டது. விரைவுச் செய்திகள் அரசு அலுவலகங்களுக்கு இதன் மூலம் அனுப்பப்படுகின்றன. (இய)

tellurium - டெல்லூரியம்: Te. நொறுங்கக்கூடிய உலோகப் போலி, வெள்ளிநிறம். இயற்கையாகவும் பிற உலோகங்களோடு சேர்ந்தும் உள்ளது. முதன்மையாகத் தன்மையைக் கூட்டும் பொருளாகக் கறுக்கா எஃகிலும் பிற உலோகங்களிலும் பயன்படுவது. வேதி)

telophase - முடிவுநிலை: உயிரணுப் பிரிவின் இறுதிநிலை.

Telstar - டெல்ஸ்டார்: தொலைமீன் என்று பொருள்படும். வானவெளிச் செய்தித் தொடர்புநிலா. அயல்நாட்டுச் செய்தித் தொடர்புக்காக 1962 ஜூலை 10இல் அமெரிக்கா ஏவியது. (வா.அ)

temperature - வெப்பநிலை: ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது சூட்டின் அளவு. வெப்பநிலைமானியால் அளக்கப்படுவது. செண்டிகிரெடிலும் (செ) பாரன்கீட்டிலும் (எஃப்) குறிக்கப் பெறுவது. (இய)

temperature coefficient - வெப்பநிலை எண்: இது ஒரு மாறா எண். ஒர் இயற்பியல் பண்பு, வெப்ப நிலைக்கேற்ப எவ்வாறு மாறுகிறது என்பதை உறுதிசெய்வது. (இய)

temperature scale - வெப்பநிலை அளவுகோல்: வெப்பநிலையை அளக்கும் செய்முறை அளவு. நிலையான வெப்பநிலைகளால் உறுதி செய்யப்படுவது. எ-டு செண்டிகிரேடில் மேல் திட்ட வரை 100°. நீரின் கொதிநிலை. கீழ்த்திட்ட வரை 0°. பனிக் கட்டியின் உருகுநிலை அல்லது நீரின் உறைநிலை. (இய)

tempering - தோய்த்தல்: எஃகைப் பதப்படுத்தும் முறை. இதில் உறுதியான எஃகு செஞ்சூட்டிற்குக் கீழ் வெப்பப்படுத்தப்படுகிறது. பின் மெதுவாகக் குளிர வைக்கப்படுகிறது. இப்பொழுது கிடைக்கும் பொருள் அதிகக் கடினம் இல்லாததாகவும் உடையும் தன்மையில்லாததாகவும் இருக்கும். (வேதி)

temple - பொட்டு: கன்ன எலும்புக்கு மேலும் காதுக்கருகிலும் நெற்றியின் இரு பக்கத்திலுமுள்ள தட்டைப் பகுதி. (உயி)

tendinous cords, chordae tendineae - நாண்வடங்கள்: இணைப்புத் திசுவின் விறைப்பான புரிகள். இதய இட வல கீழறைகளின் சுவர்களிலுள்ள தசைகளுக்கு ஈரிதழ் திறப்பி, மூவிதழ் திறப்பி ஆகியவற்றின் கீழ்ப்பக்கங்களிலிருந்து இப் புரிகள் செல்பவை. கீழறை சுருங்கும் பொழுது குருதி மேலறைக்கு வராமல் பார்த்துக் கொள்பவை. (உயி)

tendon - நாண்: தசையை எலும்போடு இணைக்குங் கயிறு. வெண்ணிற நார்த்தன்மையுள்ள இணைப்புத்திசு இழைகளாலானது. (உயி) .

tendrils - பற்றுக்கம்பிகள்: மெல்லிய கம்பிச்சுருள் போன்ற பகுதிகள், தொடுஉணர்ச்சி மிக்கவை. பற்றுதலாகிய சிறப்பு வேலையைச் செய்ய, இலையின் மாறிய பகுதிகள், பிரண்டையில் நுனி மொட்டும், பாசி புளோராவில் கோண மொட்டும், பட்டாணியில் இலையும், கிளிமேடிசில் இலைக்காம்பும் பற்றுக் கம்பிகளாகியுள்ளன. (உயி)

tentacle-உணர்விரல்: 1. மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சி உடைய உறுப்பு. உணரவும் பற்றிப்பிடிக்கவும் சில முதுகெலும்பிலிகளில் உள்ளது. எ-டு நீரி (அய்ட்ரா) 2. பூச்சி பிடிக்கும் நீட்சி, சுரப்பி முனையுள்ளது. எ-டு. கதிரவன், மின்மினி. இது ஒரு பூச்சியுண்ணுந் தாவரம். (உயி)

terbium - டெர்பியம்: Tb. மென்மையான வெள்ளிநிறத் தனிமம். ஏனைய இலாந்தனாய்டுகளுடன் சேர்ந்துள்ள திண்ம நிலைக் கருவிகளில் மாசு பொருளாகப் (டோபண்ட்) பயன்படுவது. (இய)

tergum - முதுகுத்தகடு: கைட்டினால் கடினமாகிய தகடு. பூச்சியின் வயிறு, மார்பு ஆகியவற்றின் ஒவ்வொரு கண்டத்தின் முதுகுப்புறப் பாதுகாப்பு உறையைத் தோற்றுவிப்பது. பா. pleuron sternum (உயி)

terminal - முனை: மின்சுற்றுப் புள்ளி. இதனுடன் கடத்தி ஒன்றை இணைக்கலாம். 2. முனையம்: பல கட்டடங்கள் தொகுதியாகக் கருவியமைப்புகளுடன் உள்ள இடம் (இய)

terminal bud - முனைமொட்டு: தாவரநுனிமொட்டு. (உயி)

terminal velocity - முடிவுறு நேர்வரைவு: பாகியல் பண்புள்ள நீர்மம் ஒன்றில் கடினக் கோளம் ஒன்றை நழுவவிடும்பொழுது, முடுக்குள்ள அதன் விரைவு, நீர்மப்பாகியல் பண்பினால் தடுக்கப்பெற்று, மாறாப் பரும நேர் விரைவைப் பெறும். மாறா இப்பரும நேர்விரைவே முடிவுறு அல்லது முற்றுறு நேர்விரைவு ஆகும். (இய)

termite - கரையான்: உயரிய வகைச் சமூகப்பூச்சி. இதில் அரசி, போர் வீரர்கள், வேலையாட்கள் என மூன்று பிரிவுண்டு. மரவூட்டமுள்ள பொருளை அரிப்பது. வேலைப்பங்கீட்டுக் குட்பட்டது. ஒவ்வொருவகையும் ஒரு வேலை செய்யும். தேனீக்கள், எறும்புகள் ஏனைய இரண்டு சமூகப் பூச்சிகள். (உயி)

territory-ஆட்சி எல்லை: உணவு உண்ணல், கூடுகட்டுதல், கலவி நிகழ்த்தல் முதலிய செயல்களுக்காக ஒரு விலங்கு பாதுகாக்கும் இடம் (உயி)

Terylene- டெரிலின்: தொகுப்பிழைகளில் பயன்படும் ஒரு வகைப் பால்யஸ்டரின் வாணிபப் பெயர். (வேதி)

testa- விதைவெளியுறை: விதையின் புறவுறை பா.tegmen. (உயி)

test- சிறுதேர்வு, சிற்றாய்வு: 1. கல்வி மதிப்பீட்டின் இன்றியமையாப் பகுதி. இது புறத்திண்மை வாய்ந் தது. அடைவுத் தேர்வு, குழுத் தேர்வு, பரப்பறி தேர்வு எனப் பல வகைப்படும். 2. ஆய்வகத்தில் முடிவு காணச் செய்யப்படும் சோதனை. இது பெரும்பாலும் குறுகிய நேரம் செய்வதாகவே அமையும். எ.டு சர்க்கரை ஆய்வு (ப.து)

test cross-ஆய்வுக்கலப்பு: ஆய்ந்து பார்ப்பதற்காகச் செய்யப்படுவது. பா. backcross (உயி)

testis, testicle- விரை: ஆண் இனப்பெருக்க உறுப்பு விந்தணுக்கள் இதில் உண்டாகின்றன. (உயி)

test tube baby- ஆய்வுக்குழாய் குழந்தை: முன்பு செயற்கை வித்தேற்றத்தின் மூலம் குழந்தை பிறந்தது. தற்பொழுது ஆய்வகத்தில் முட்டை கருவுறச் செய்யப் பெற்றுக் கருப்பையில் பதிய வைக்கப்படுகிறது. இதிலிருந்து வளர்வதே பிறக்கும் குழந்தை. சென்னையில் இந்த ஆய்வு (1991) வெற்றி தரும் வகையில் நடந்துள்ளது. (உயி)

tetanus. இசிவு: தாடைக்கட்டு. கிளாஸ்டிரிடியம் டெட்டனி என்னும் நுண்ணுயிரியினால் உண்டாவது. தசை விறைப்பும் இசிவும் இருக்கும். இந் நுண்ணுயிரி உண்டாக்கும் நச்சு, தண்டு வடத் தைத் தாக்கி இயக்க நரம்புகளுக்குப் பரவும். (உயி)

tetrad - நான்மி: நான்கு எண்ணிக்கை கொண்டது. இணை சேர்தலில் ஒருங்கிணையும் இரு நிறப் புரிகளின் நான்கு நிறப் பொருள்கள். (உயி)

tetraploid-நான்மம்: இது பாலணுவிலுள்ள நிறப்புரிகளின் எண்ணிக்கை. இயல்பான எண்ணிக்கை. 2. இது இருமயம், ஒன்றிருந்தால் ஒருமயம். இங்கு நான்கிருப் பதால் நான்மயம். பல இருந் தால் பன்மயம். பொதுவாக, இயல்பு எண்ணிக்கை (2n) என்றும் இதில் பாதி (n) என்றும் குறிப்பிடப்படுவது வழக்கம் (உயி)

tetrapod - நாற்கால் விலங்குகள்: நான்கு கால் அடிகளைக் கொண்டவை. எ-டு முதலை, தவளை, அரிமா. (உயி)

tetrode - நான்முனைவாய்: மும்முனை வாயைக் காட்டிலும் கூடு தலாக ஒரு தடுவாயைக் கிரிட்) கொண்ட வெப்ப அயனித்திறப்பி (தர்மியானிக் வால்வு).

text - பதிப்புச் செய்தி: 1.கணிப் பொறியில் அமைந்த செய்தி அச்சிடப்படுவது அல்லது அகர வரிசை வடிவத்தில் காட்டப்படுவது. 2 அச்சியற்றுவதற்கு ஆயத்தமாக நினைவகத்தில் சேமித்து வைக்கப்படும் செய்தி. ஒ. news (இய)

text editor - பதிப்புச் செய்தியாக்கி: பதிப்புச் செய்தியைக் கையாளும் நிகழ்நிரல். எ-டு சொல் செயல்முறையாக்கி இது பதிப்புப் பணிகளைச் செய்வது. ஒ. news editor (இய)

textiles -1. நெசவியல்: நூற்பியல், துகிலியல் நூற்றல், நூல் பொருள்கள் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. 2. நெசவாலை நூற்பாலை, நூல் நெய்யப்பட்டுத் துணிகள் செய்யுமிடம். இத்தொழில் சிறந்த நுட்பமும் பொருளாதாரச் சிறப்பும் வாய்ந்தது. (தொநு)

text processing- பதிப்புச் செய்தி செயல்முறையாக்கம்: சொல்லைச் செயல்முறைப்படுத்தல். (இய)

thalamus-1. மூளைத்தளம். 2. பூத்தளம்: (உயி)

thallium - தேலியம்: Ti மென்மையான சாம்பல்நிற உலோகம், தகடாக்கலாம். காரீயத் தாதுக்களிலும் காட்மியத் தாதுக்களிலும் காணப்படுவது. அதிக நச்சுத் தன்மையுள்ளது. இதன் கூட்டுப் பொருள்கள் ஒளிமின் கலங்கள் அகச்சிவப்பு உணர் கருவிகள், குறைந்த உருகுநிலைக் கண்ணாடிகள் முதலியவற்றில் பயன்படுகின்றன. (வேதி)

thallophyta - தண்டகத்தாவரங்கள்: இவற்றின் உடல் அமைப்பில் இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உடல் ஒரு கண்ணறை அமைப்பும் பல கண்ணறை அமைப்பும் கொண்டது. இனப்பெருக்கம் பிளவு, சிதல்கள், பாலணுக்கள் ஆகியவற்றால் நடைபெறுகிறது. எ-டு. காளான். பாசி, (உயி)

The Indian Society of Remote Sensing - இந்தியத் தொலையுணர் கழகம்: தொலையுணர் பயன்பாட்டிற்காக உள்ள அமைப்பு. குறிப்பாக 1990இல் வேளாண் பயன்பாடுகளுக்குத் தொலையுணர்தல் என்னும் தேசியக் கருத்தரங்கை நடத்தியது. இதற்கு இந்திய வேளாண் நிறுவனம் உதவியது.

theodolite - தளமட்டமானி: கிடைமட்டக் கோணங்களையும் நேர்க்கோணங்களையும் அளக்குங்கருவி. (இய)

thermal capacity- வெப்ப ஏற்புத்திறன்: ஒரு கிலோகிராம் நிறையுள்ள பொருளின் வெப்பநிலையை, ஒரு கெல்வின் உயர்த்த, ஜூல் அளவில் தேவைப்படும் வெப்ப ஆற்றல், அதன் வெப்ப ஏற்புத்திறனாகும். (இய)

thermal conductivity - வெப்பம் கடத்துதிறன் ஓரலகு வெப்பநிலை வாட்டம் நிலவும்போது, ஓரலகு குறுக்குப் பரப்பின் வழியே ஒரு வினாடியில் ஜூல் அளவில் கடத் தப்படும் வெப்ப ஆற்றல் ஒரு பொருளின் வெப்பங் கடத்து திறனாகும். (இய)

thermionic valve - வெப்ப அயனித் திறப்பி: ஒரு வெற்றிடக் குழாய், இதில் வெப்பமுறு எதிர் மின்வாய் இருக்கும். இதிலிருந்து மின்னணுக்கள் உமிழப்படும். நேர்மின்வாய் இவற்றைத் திரட்டும். இதன் இடத்தை இப்பொ ழுது படிகப்பெருக்கி பிடித் துள்ளது. (இய)

thermister - வெப்ப அயனிக் கடத்தி: ஒர் அரைகுறைக்கடத்தி (இய)

thermochemistry - வெப்ப வேதியியல்: வெப்ப வினைகளை ஆராயுந்துறை. (இய)

thermocouple - வெப்ப மின்னிரட்டை: வெப்ப மின்சார அடிப் படையில் அமைந்த கருவி. வெப்ப நிலைகளை அளக்கப் பயன்படுவது. வேறுபட்ட இரு உலோகக் கம்பிகள் சேர்ந்த இணைப்புகள் வேறான வெப்ப நிலையில் இதில் வைக்கப்படுகின்றன. இப்பொழுது அக்கம்பிகளின் சுற்றில் மின் னோட்டம் நிகழ்கிறது. இந்த அமைப்பே மின்னிரட்டை இதில் ஏற்படும் மின்னோட்டம் வெப்ப மின்னோட்டமாகும். இந்நிகழ்ச்சிக்குச் சீபெக்கு விளைவு என்று பெயர் (இய)

thermodynamics -வெப்ப இயக்கவியல்: வெப்பம் முதலிய ஆற்றல் வடிவங்களையும், வெப்ப நிலை, அழுத்தம், செறிவு முதலிய இயற் பியல் அளவுகளிலுள்ள தொடர் புள்ள மாற்றங்களையும் ஆராயுந் துறை. (இய)

themometer-வெப்பநிலைமானி: கலிலியோவால் (1564-1642) 1593 இல் இது புனையப்பட்டது. வெப்பநிலையை அளக்கப் பயன் படுவது. இதன் பொது வகைகள்: 1. செண்டிகிரேடு வெப்பநிலை மானி, 2. பாரன் கீட்டு வெப்ப நிலைமாணி, சிறப்பு வகைகள்: 1. மருத்துவ வெப்ப நிலைமாணி 2. பெரும சிறும வெப்பநிலை மானி, பொதுவாக, வெப்பநிலை மானியில் பெருகும் நீர்மம் பாதரசம் (இய)

thermonasty- வெப்ப அமைவு இயக்கம்: திசைச்சாராத் தாவர இயக்கம். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் துலங்கல், எ-டு. குரோகஸ்பூ (உயி)

thermoperiodism - வெப்பக் கால வியம்: சூழ்நிலைக் காரணி களில் இதுவும் ஒன்று. சில தாவரங்கள் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. குறைந்த வெப்பநிலை யும் உயர்ந்த வெப்ப நிலையும் மாறி மாறி வருவதற்கேற்ற துலங்கல் இதில் இருக்கும். இத்தகைய தாவரங்கள், குறைந்த இரவு வெப்பநிலைக்கும் உயர்ந்த பகல் வெப்பநிலைக்கும் உட்படுத் தப்படும் போது, முன்னதாகவும் நன்கு பூக்கின்றன. எ-டு கிரை சாத்திமம், தக்காளி, பா. photoperiodism, vernalization. (உயி)

thermosflask - வெப்பக்குடுவை: பா. Diwarfask.

thermostat - வெப்பமாற்றி: குறிப்பிட்ட பாகை அளவுக்கு வெப்ப நிலையைச் சீராக்கும் கருவி (இய)

thickening, secondary-இரண்டாம் நிலைத் தடிப்பு: பா. Secondary growth. (உயி)

thigmotropism - தொடுநாட்டம்: தொடு உணர்ச்சியான தூண்டலுக்கேற்ற துலங்கல், தொட்டாற் சுருங்கி (உயி)

thin layer chromatography - மென்படல நிறவரைவியல்: ஒரு வகை நிற வரைவு முறை. பா. chromatography (வேதி)

thixotropy-தொடுவேற்றுமை: சில கூழ்மங்கள் பெற்றிருக்கும் பண்பு. குலுக்கும் பொழுது அவை நீர்மமாகும். குலுக்கல் நின்றபின், அவை மீண்டும் படியத் தொடங்கும். எ-டு வண்ணக் குழம்பு (பெயிண்ட்)(வேதி). thoracic vertebrae - மார்பு முன் எலும்புகள்: மேல் முதுகுப் பகுதியில் உள்ளவை. மனிதனிடத்து 12 உள்ளன. பா. backbone (உயி)

thorax- மார்பு: தலைக்கடுத்துள்ள உடற்பகுதி. இது நுரையீரல்களுக்கும் இதயத்திற்கும் பாதுகாப்பாக உள்ளது. இதில் மார்புக்கூடு அமைந்துள்ளது. இதன் வழியே உணவு வழியின் பகுதியான உணவுக் குழல் செல்கிறது. (உயி).

thorium - தோரியம்: Th. மென்மையான கதிரியக்கத் தனிமம். வெண்ணிறம், காற்றில் படக் கறுக்கும். இதன் முக்கிய தாதுக்கள் மோனசைட் ஆர்க்கனைட் தோரைட் (வேதி)

thorn - பெருமுள்: இது கூர்முள். கிளை குறைந்து மாறுவதால் உண்டாவது, எ-டு. கருவை. பா. spine. (உயி)

threshold - உறுத்துவாயில்: தசை நரம்பு முதலிய உறுத்து திசுக்களில் துலங்கலைத் தொடக்க வேண்டிய குறைந்த அளவு தூண்டல் செறிவு. (உயி)

thrombin-திராம்பின்: ஒரு நொதி. கரையக்கூடிய புரத பைபிரினோஜனை நார் பைபிரினாகக் குருதிக்கட்டின் பொழுது மாற்றுவது. (உயி)

thrombocyte - திராம்பணு: பா.platlet. (உயி)

throttle valve - தொண்டைத்திறப்பி: இஃது அகக்கனற்சி - எந்திரம், புறக்கனற்சி எந்திரம் ஆகிய இரண்டிலும் உள்ளது. அகக்கனற்சி எந்திரத்தில் இதன் வேலை வெடிகலவையின் (காற்று + பெட்ரோல்) அளவைத் தேவைக்கேற்றாற்போல் மட்டுப்படுத்துவது ஆகும். புறக்கணற்சி எந்திரத்தில் நீராவிக் கலத்திலுள்ள அதிக அழுத்த நீராவி, நீராவிப் பெட்டிக்குச் செல்லத் தானே திறந்து உதவுகிறது. இய,

thrust-இறுக்கம்: இறுக்குவிசை மொத்தப் பரப்பின் மீது ஏற்படும் அழுத்தம் இறுக்கமாகும். T=PA T-இறுக்கம். P-அழுத்தம், A-பரப்பு (இய) 2. ஏவுகணை உண்டாக்கும் முன்னியக்கு விசை,

thulium - தூலியம்:Tm. மென்மையான வெள்ளி நிற உலோகம், தகடாக்கலாம், கம்பியாக்கலாம். ஏனைய இலாந்தனாய்டுகளுடன் சேர்ந்துள்ளது. வேதி)

thunder - இடி: மின்னலை உருவாக்கும் மின்போக்கில் தோன்றும் ஒலி அழுத்தஅலை உயர்வால் நெருக்கங்களும் நெகிழ்வுகளும் உண்டாகும். இவையே இடி ஒலியை எழுப்புபவை. (இய)

thymin - தைமின்: டிஎன்ஏ விலுள்ள நைட்ரஜன் சார் முலம். பிரிமிடின் வளைய அமைப்பைக் கொண்டது. (வேதி)

thymus - தைமஸ்: ஒரு நாளமில்லாச் சுரப்பி (உயி)

thyratron - எதிர்வாய்த் திறப்பி: வளி நிரம்பிய திறப்பு அமைப்பு. வெப்பப்படுத்திய எதிர்மின் வாயைக் கொண்டது. மிக உயர்ந்த மின்னோட்டங்களைக் கொண்டு செல்வது. (இய)

thyroid - தைராய்டு: இது தொண்டைச் சுரப்பியாகும். மூச்சுக் குழலுக்கருகில் உள்ளது. இரு மடல்களாலானது. இதன் சுரப்பு தைராக்சைன். இஃது உடல் வளர்ச்சியையும் வளர் சிதை மாற்றத்தையும் ஒழுங்கு படுத்துகிறது. அறிவு வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் காரணம். இச்சுரப்பியின் குறை நோய்கள் கழலையும் குருளைத் தன்மையுமாகும்.

thyristor - படிகத்திருத்தி: எதிர் வாய்த்திறப்பி போன்ற குறை கடத்தியமைப்பு. திண்ம நிலைச் சொடுக்கி. சிலிகன் கட்டுப்பாடு கொண்ட திருத்தி இய)

tibia - கீழ்க்கால் உள் எலும்பு: முழங்கால் எலும்புகளில் ஒன்று. மற்றொன்று கீழ்க்கால்வெளி எலும்பு (உயி)

tree - மரம்: வேலைக்குப் பயன்படும் கட்டை முற்றிய மரங்களே அறுக்கப்பட்டு மரவாடிக்கு வருகின்றன. மரத்தொழில் சிறந்த வாணிபச் சிறப்புடையது. தேக்கு மரம் விலை உயர்ந்தது. மரம் எரிபொருள் மற்றும் பலவேலைகளுக்குப் பயன்படுவது. (உயி)

time-நேரம்: காலத்தின் ஒரு பகுதி.இது உள்ளூர் நேரம், திட்ட நேரம், கிரீன்விச்சு நேரம் என மூவகைப்படும். (பு.அறி)

timbre - ஒலிப்பண்பு: அடிப்படை அதிர்வெண் மேற்கரங்களிலிருந்து வருவது (இய)

time, Greenwich - கிரீன்விச்சு நேரம்: கிரீன்விச்சு நேரம் மைய வரைக்குரிய (மெரிடியன்) சராசரி கதிரவன் நேரம். அதாவது முதன்மை நெடுக்குக் கோட்டில் (லாஞ்சிடியுடு) கணக்கிடப்படும் திட்ட நேரம்.

time, local-உள்ளுர் நேரம்: மைய வரையைக் கதிரவன் கடக்கும் பொழுது அளக்கப்படும் ஓரிடத்தின் நேரம். இது இடத்திற்கிடம் மாறுபடும். இந்திய உள்ளிட நேரமும் இங்கிலாந்து உள்ளிட நேரமும் ஒன்றாக இரா. பா. time, standard. (பு. அறி)

time reversing mirrors - காலத் திருப்பு ஆடிகள்: இவை ஒளியலைகளைக் கால அளவில் பின் நோக்கிச் செல்லுமாறு செய்பவை. இதனால் அவற்றின் மூலத்தில் அவற்றைக் குவிக்க இயலும், பிரான்ஸ் அறிவியலார் இவற்றை உருவாக்கியுள்ளார். (1994),

time sharing-நேரப்பகிர்வு: ஒரே சமயத்தில் பலர் ஒரு கணிப்பொறியைப் பயன்படுத்தல், கணிப்பொறி மிக விரைவாகத் தகவல்களைத் தருவதே இதற்குக் காரணம். இதனால் பயன்படுத்துவோரின் தேவைகளை விரைவாக நிறைவு செய்ய இயலும். (இய)

time, standard - திட்ட நேரம்: ஒவ்வொரு நாடும் தன் நடுவே செல்லும் நெடுக்குக் கோட்டிலுள்ள ஒரிடத்தில் உள்ளூர் நேரத்தைக் கணக்கிட்டு, அதையே நாடு முழுதும் பின்பற்றும். இதற்குத் திட்டநேரம் என்று பெயர். இந்தியாவைப் பொறுத் தவரை 82.5° நெடுக்குக்கோடு திட்ட நெடுக்குக்கோடாகும்.அங்குக் கணக்கிடப்படும் நேரம் திட்ட நேரமாகும். இந்நேரம் நாட்டுக்கு நாடு வேறுபடும். பா. longitude (பு. அறி)

tin - வெள்ளீயம்: Sn. எளிதில் உருகக்கூடிய உலோகம், மென்மையானது. கம்பியாக்கலாம், தகடாக்கலாம். காற்று, நீர் பாதிக்காது. இரு புறவேற்றுருக்கள் உண்டு. வெண்ணிற வெள்ளீயம், சாம்பல் நிற வெள்ளீயம், வீட்டுப் பாண்டங்கள் செய்யவும் தகடுகள் செய்யவும் பயன்படுவது. (வேதி)

tin chloride- வெள்ளீயம் குளோரைடு: SnCl2, ஒளிபுகும் திண்மம். அய்டிரோ குளோரிகக் காடியில் வெள்ளியத்தைக் கரைத்துப் பெற லாம். ஒடுக்கி, நிறம் நிறுத்தி (வேதி)

tin oxide- வெள்ளீய (ஐய) ஆக்சைடு: SnO2, வெள்ளீயச் சாம்பல் நிறமற்ற படிகம். நீரில் கரையாதது. ஓடுகள், கண்ணாடி, உலோகம் ஆகியவற்றிற்கு மெருகேற்றப் பயன்படுவது. (வேதி)

tin sulphide - வெள்ளீயச் சல்பைடு: SnS2, ஓவியப் பொன் என்று கூறப்படுவது. நீரில் கரையா மஞ்சள் நிறத்தூள். அமிலம் சேர்ந்த வெள்ளீய உப்புக் கரைசலில் அய்டிரஜன் சல்பைடைச் செலுத்திப் பெறலாம். பொன்னிற வண்ணக் குழைவு செய்யப்பயன்படுவது. (வேதி)

tincture - கறையம்: ஆல்ககாலில் கரைந்த கரைசல். அயோடின் கறையம் (டிங்சர் ஆஃப் அயோடின்) நச்சுத் தடையாகும். (வேதி) tinning - வெள்ளியமேற்றல்: பித்தளை, வெண்கலம், செம்பு ஆகியவற்றிற்கு மெல்லிய வெள்ளியத் தகடேற்றல். (வேதி)

TIROS - டிராஸ்: அமெரிக்கச் செயற்கை நிலா. வானிலையை அறியப் பயன்பட்டது. (இய)

tissue - திசு: குறிப்பிட்ட வேலையைச் செய்யுங் கண்ணறைகளின் தொகுதி. சுருங்குவதற்கும், நரம்புத் தூண்டல் துலங்கலுக்கும் நீர்ம அல்லது குருதி ஊட்டம் செல்வதற்கும் திசு காரணமாய் உள்ளது. இது தாவரத்திசு, விலங்குத் (மனிதத் திசு) என இரு வகைப்படும். இவ்வகை மேலும் விரியும். (உயி)

tissue culture - திசுவளர்ப்பு: தகுந்த ஊடகத்தில் கண்ணறைகள், திசுக்கள், உறுப்புகள் ஆகியவற்றைப் பேணல், (உயி)

titanium - டைட்டானியம்: Ti. சாம்பல் நிற மாறுநிலைத் தனிமம். இலேசானது, கம்பியாக்கலாம். உயரிய இழுவலிமையும் குறைந்த பெருகெண்ணும் கொண்டது. அதிகம் கிடைக்கக்கூடிய ஆக்சைடு தாது இரும்புக்கல். கப்பல்கள், வானவூர்திகள் முதலியவை செய்யப் பயன்படுவது. (வேதி)

titanium dioxide - டைட்டானியம் ஈராக்சைடு: TiO₃ வெண்ணிறத்தூள். நீரில் கரையாதது. காடிகளில் மெதுவாக வினையாற்றுவது. விரைவாகக் காரங்களில் கரைந்து டைட்டனேட்டுகள் என்னும் உப்பைக் கொடுப்பது. இயற்கையில் அனடேஸ், ருட்ரடைல் தாதுக்களாகக் கிடைப்பது. பீங்கான் பொருள்களுக்கு வெண் மெருகேற்றவும் மற்றும் தாள் தொழிலிலும நெசவுத் தொழிலிலும் பயன்படுதல். (வேதி)

titration - தகுதிபார்த்தல்: தரம் பார்த்தல். பருமனறி நுணுக்கம். இதில் செறிவு தெரிந்த ஒரு கரைசல், செறிவு தெரியாத ஒரு கரைசலோடு முடிவு நிலை தெரியும்வரை சேர்க்கப்படுகிறது. இஃது இயற்பியல் வேதியியலில் ஓர் அடிப்படைச் செயல்முறை. (இய)

toads - தேரைகள்: இருநிலை வாழ்வி வகுப்பைச் சார்ந்தவை. (உயி)

Tollen’s reagent - டோலன் வினையாக்கி: அணைவு அயனி, Ag(NH3)2+ இன் கரைசல். வெள்ளியாடி ஆய்வில் பயன்படுவது. இந்த ஆய்வு ஆல்டிகைடுகளையும் ஆல்கைன்களையும் கண்டறியப் பயன்படுவது. (வேதி)

tomography - தளவரைவியல்: இது ஓர் நுணுக்கம். நோய் கண்டறிவதற்காகப் பொருளின் குறிப்பிட்ட தளம் இதில் எக்ஸ் கதிர்களினால் படம் பிடிக்கப் படுதல். (உயி)

tone - உரப்பு: இழுத்துக் கட்டப்பட்ட கம்பியை ரப்பர் சுத்தியால் தட்டக் கம்பி மேலும் கீழும் அசையும் மொத்தத் தொலைவு வீச்சு எனப்படும். வீச்சு அதிகமானால் ஒலி அதிகமாகும். குறைந்தால் ஒலி குறையும். நேர் வீதப்போக்குள்ள இந்த ஒலியே உரப்பு எனப்படும். 2. நிலையான நரம்புத் தூண்டுகையினால், தசையின் தொடர்ந்த பகுதிச் சுருக்கமாகும். நம் உடல் நேர்நிலையைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. (ப.து)

tongue-நாக்கு: சுவையுறு உறுப்பு. வாய்க்குழியில் உள்ளது. இதிலுள்ள சுவை அரும்புகள் பல் சுவையை நமக்குத் தெரிவிக்கின்றன. பா. taste buds (உயி)

tonometer - இழுவிசைமானி: 1. ஒலியின் எடுப்பை அளப்பது. 2. விழிக்கோள நீர்ம அழுத்தத்தை அளப்பது 3. ஆவி அழுத்தத்தை அளப்பது. ஆக, ஒரு கருவி பல வேலைகளுக்குப் பயன்படுகிறது. (ப.து.)

tonoplast - பிரிகணிகம்: முன் கணியத்திலிருந்து (புரோட்டோபிளாசம்) நுண்குமிழியைப் பிரிக்கும் படலம். கணிமப் (பிளாஸ்மா) படல அமைப்புடையது. முன்கணியத்திற்கும் நுண்குமிழிச் சாற்றிற்குமிடையே பாலமாக உள்ளது. (உயி)

tool-தொழிற்கருவி: பணிக்கருவி. உளி, திருப்புளி, வாள், வில்லை முடுக்கி முதலியன. ஒ. apparatus, device, instrument (தொழி)

Toricelli vacuum - தாரிசெல்லி வெற்றிடம்: ஆய்வகத்தில் அமைக்குந் தொட்டிப் பளுமானியில், குழாயில் பாதரச மட்டத்திற்கு மேலுள்ள இடைவெளி, காற்று இல்லாததால் தாரிசெல்லி வெற்றிடம் எனப் பெயர் பெறுகிறது. (இய)

torque-முறுக்குவிசை: திருப்புத்திறனை உண்டாக்கும் விசை அல்லது விசைத்தொகுதி. இது சுழற்சியை உண்டாக்கும். (இய)

Torr - டார்: அலகுச்சொல். உயர் வெற்றிடப்புலத்தில் பயன்படும் அழுத்தத்தைக் குறிப்பது. ஆகவே, அழுத்த அலகு. இது 133.322 பாஸ்கல்கள். (இய)

torus - பூத்தளம்: பா. thalamus. (உயி)

torsion - முறுக்கம்: ஒரு முறுக்கு அல்லது இரட்டையினால் உண்டாக்கப்படும் திருகிய உருத்திரிபே முறுக்கமாகும். முறுக்குச் சட்டம் என்பது ஒரு வகைக் கம்பிச்சுருளாகும். இதில் ஒருமுனை நிலையாக இருக்கும். மறுமுனையில் முறுக்குவிசை (டார்க்) அளிக்கப்படும். முறுக்குச் சட்டங்கள் உந்துவண்டிகளின் தொங்கு தொகுதிகளில் பயன் படுகின்றன. கம்பிகளின் இத்தகைய தன்மையைப் பயன்படுத்தி அவற்றின் விறைப்பு எண்ணை (ரிஜடிட்டி மாடுலஸ்) கணக்கிட இயலும். (இய)

torsion balance -முறுக்குத்தராசு: கம்பிகள் முறுக்கமடைதலால் முறுக்குகோணம் உண்டாகிறது. இம்முறுக்கு கோணத்தை ஏற்படுத்தும் சிறிய விசைகளை அளக்க இத்தராசு பயன்படுகிறது. tortoise - ஆமை: நிலத்தில் ஊர்வது. பல்லில்லா முதுகெலும்பி, நகமுள்ள புறத்துறுப்புகள். மாட வடிவ ஓட்டில் உடல் அமைந்துள்ளது. தலையையும் புறத்துறுப்புகளையும் பாதுகாப்பிற்காகக் கூட்டின் உள்ளே இழுத்து வெளியே நீட்ட வல்லது. (உயி)

total internal reflection - முழு அகமறிப்பு: படுகோணம் மாறுதானக் கோணத்தைவிடப் பெரிதாக இருக்கும்போது உண்டாகும் மறிப்பு முழு அகமறிப்பாகும். இது ஏற்பட 1.முதலில் ஒளிக்கதிர் அடர்மிகு ஊடகத்தின் வழியாகவும் 2. அதன் படுகோணம் அடர்மிகு ஊடகத்தின் மாறுதானக் கோணத்தைவிடப் பெரிதாகவும் அமைய வேண்டும். இம்மறிப்பினால் கானல் காட்சி, வைரம் மின்னுதல் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மறிப்பு - எதிரொளிப்பு (இய)

toxicant - நச்சுப்பொருள்: நச்சுத் தன்மை உண்டாக்கும் வேதிப் பொருள். (வேதி) toxicology - நஞ்சியல்: நஞ்சின் இயல்பு அதன் விளைவுகள் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. வேதிப்பொருள்களின் ஊறுதரும் விளைவுகளைப் பண்பறி நிலை யிலும் அளவறி நிலையிலும் பகுத்தறிவது. மருத்துவத்துறை சார்ந்தது. (உயி)

toxin- நஞ்சு: குச்சியம், பூஞ்சை முதலிய நோயூக்கிகளால் உண்டாக்கப்படும் வேதிப்பொருள். உயிர்க்கொல்லிகளாகச் செயற்கையில் தயாரிக்கப்படுவது. (உயி)

trace element - சுவடறிதனிமம்: நுண் தனிமம். நுண்ணுாட்டம் சிறிய அளவுள்ள தனிமம். ஒர் உயிரி நலமுடன் இருக்கத் தேவையான தனிமம். அதாவது, உட்கொள்ளும் உணவில் சில பகுதிகளே இருக்கும். எ-டு தனிமம் மாலிப்டினத்திலுள்ள கூட் டுப்பொருள் நைட்ரேட் ரிடக்டேஸ், தாவர வேர்களில் நைட்ரேட்டை நைட்ரைட்டாக ஒடுக்குதல். பா. macronutrient. (உயி)

tracer-சுவடறிவி: ஒரு தனிமத்தின் ஓரிமம். விரவல் முதலிய இயற்பியல் முறைகளையும் வேதி வினைகளையும் ஆராயப்பயன் படுவது. (வேதி)

trachea - மூச்சுக்குழல்: வெளிக்காற்றை உட்செலுத்தும் குழல். இஃது உயிர்த்தலுக்கு இன்றியமையாதது. (உயி)

tracheids - நுண்மரக்குழாய்கள்: நுண் கடத்திகள். பெரணிகள், உறையில் விதையில்லாத் தாவரங்கள் ஆகியவற்றின் மரத் திசுவை உண்டாக்குபவை. உணவு சேமித்தல், நீரைக்கடத்தல், தாவர உடலுக்குத் தாங்குதல் அளித்தல் ஆகியவை இவற்றின் வேலைகள். (உயி)

tracing paper - சுவடுவரைதாள்: மூலப்படத்தைப் படி எடுக்கப் பயன்படும் ஒளி ஊடுருவக்கூடிய தாள். (வேதி)

tracking and observation - வழி யறிதலும் உற்றுநோக்கலும்: வான வெளிக் கலத்தை ஏவுகணையின் இறுதியடுக்கு வரை வழிப்படுத்தலாம். செலவு முழுவதும் வழியறியலாம். இதை வழியறி நிலையங்கள் மேற் கொள்ளும். கலம் இலக்கை அடையும்வரை வானொலியினால் வழியறியலாம். இய)

tranquilizer - அமைதியாக்கி: விழிப்பைப் பழுதுபடுத்தாமலும் சோர்வு ஏற்படுத்தாமலும் கவலையையும் நெருக்கடியையும் குறைக்கும் மருந்து. இது இரு வகைப்படும். 1. பெரு அமைதியாக்கிகள்: உள எதிர்ப்பிகள், நரம்பு நிலைப்பிகள் 2. சிறு அமைதியாக்கிகள்: கவலை நீக்கிகள் எ-டு பென்சோடை யோசிபைன்கள். (மரு)

transcription - பகர்ப்பு: நிறப்புரியிலுள்ள டிஎன்ஏவில் மரபுச் செய்தியுள்ளது. இது தூது ஆர்என்ஏவில் ஒரு தனிப்புரியாக மாற்றப்படுவதே பகர்ப்பு ஆகும். இச்செயல் உயிரணுவின் உட்கருவில் நடைபெறுவது. பா. translation (உயி)

transducer - மாற்றமைப்பி: ஒலி, ஒளி, வெப்பம் முதலிய மின்சாரமில்லாக் குறிபாடுகளை மின்குறிபாடுகளாக மாற்றுங் கருவியமைப்பு (இய)

transduction- மாறிச்செல்லல்: ஒரு குச்சியத்திலிருந்து மற்றொரு குச்சியத்திற்கு நச்சியம் மூலம் மரபுப்பொருள் (டிஎன்ஏ) செல்லுதல். இச்செயல் இயற்கையில் நடைபெறுவதில்லை. மீள்சேர்க்கை டிஎன்ஏ நுட்பத்தில் ஒரு வழிமுறையாகும், பா. genetic engneering (உயி)

transect-தாவர வளையம்: குறிப்பிட்ட பகுதியில் தாவரச் சிறப்பின அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் பகுதி. (உயி)

transfer RNA - மாற்றியமைக்கும் ஆர்என்ஏ: ரிபோசோம்களுக்கு அமினோகாடிகளை எடுத்துச்சென்று தூது ஆர்என்ஏ மூலக்கூறு நெடுக அவற்றை அமையச் செய்யும் ஆர்என்ஏ வடிவம். இங்குப் புரதம் உண்டாக அவை பெப்டைடு பிணைப்புகளால் இணைக்கப்படுகின்றன. tRNA- மாற்றியமைக்கும். ஆர்.என்.ஏ. mRNA- தூது ஆர்.என்.ஏ. (உயி)

transformer - மின்மாற்றி: எதிர் மின்னோட்ட அழுத்தத்தை, அதிர்வெண் மாற்றமில்லாமல், கூட்டவோ குறைக்கவோ பயன்படுங் கருவி. இதில் முதல்சுருள், துணைச்சுருள் என இருவகைச் சுருள்கள் உண்டு. இச்சுருள்களின் கம்பிகள் வெவ்வேறு தடிமனுள்ளவை. இது ஏற்றமின் மாற்றி (மின்னழுத்தத்தை அதிகமாக் குவது) இறக்க மின் மாற்றி (மின்னழுத்தத்தைக் குறைப்பது) என இருவகைப்படும். இது சிறிய அளவிலும் பெரிய அளவிலும் இருக்கும். (இய)

transistor-டிரான்சிஸ்டர், படிகப் பெருக்கி: ஜெர்மானியப் படிகத் தை மையமாகக் கொண்ட கருவி யமைப்பு. இது ஒரு வழிக்கடத்தியாகும். அதாவது ஒருதிசையிலேயே மின்னோட்டத்தைக் கடத்தும். வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறி ஆகியவற்றின் மின்சுற்றுகளின் அடிப்படையாகும். இது ஒரு முனை வழிக்கடத்தி, இருமுனை வழிக் கடத்தி எனப் பல வகைப்படும். வானொலித் திறப்பியினை நீக்கி, அதன் வேலையினைச் செய்வதாகும். மின்னலைகளைப் பெருக்குவது. உயர்ந்த மின்னலைகளை உண்டாக்குவது, எதிர்மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது ஆகியவை இதன் முக்கிய வேலைகள். அறிவியலிலும் தொழில் நுணுக்க இயலிலும் ஒரு புரட்சி உண்டாக்கிய படிகம் (இய) பா, laser

transition - நிலைமாறல், சடுதி மாற்றம்: டிஎன்ஏவில் ஒரு பியூரின் மூலம் மற்றொன்றினால் பதிலீடு செய்யப்படுதல். ஒ. transversion, (ப.து) .

transition elements - மாறு நிலைத் தனிமங்கள்: தனிம வரிசை அட்டவணையில் மூன்று வரிசைகளிலுள்ள தனிமங்கள். 1. ஸ்காண்டியம் முதல் துத்தநாகம் வரை 2. எட்ரியம் முதல் காட்மியம் வரை 3. இலேந்தனம் முதல் பாதரசம் வரை. இவை எல்லாம் உலோகங்களே. இவற்றின் பண்புகள் 1. இணைதிறன்கள் வேறுபடுபவை. 2. பல கனிமக் கலவைகளை உண்டாக்குபவை 3. இவற்றின் சேர்மங்கள் நிறமுள்ளவை. (வேதி)

transition temperature - மாறு வெப்பநிலை: ஒரு பொருளில் திட்டமான இயற்பியல் மாற்றம் நடைபெறும் வெப்பநிலை, எ-டு நீர் ஆவியாதல். (வேதி)

transition state - மாறுநிலை: குறுகிய வாழ்வுடைய அதிக ஆற்றல் கொண்ட மூலக்கூறு. படி மூலி அல்லது அயனி (வேதி)

transition zone - மாறுநிலை மண்டலம்: குழாய்த்திசுத் தாவரத்திலுள்ள மண்டலம். இங்கு வேர் மற்றும் தண்டக உறுப்புகள் இணைகின்றன. மேலும் இங்குக் குழாய்த்திசு அமைப்பு, வேர் குழாய்த்திசு அமைப்புக்கும் இடைப்பட்டதாக இருக்கும். (உயி)

translation - பெயர்ப்பு: தூது ஆர்என்ஏவில் பதிந்துள்ள மரபுச் செய்தி பெயர்க்கப்பெற்றுப் புரதமாக மாற்றப்படுதல் புரத தொகுப்பிகளில் (ரிபோசோம்களில்) பகர்ப்பு நடைபெறுதல். (உயி)

translocation - கடத்தல்: தாவரத்தின் ஊட்டப் பொருள்கள் அதன் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லுதல். இதனை நொதிச்செயல் ஊக்குவிப்பது. பா. transpiration. (உயி)

transmitter - செலுத்தி: செய்தித் தொடர்புக்காக வானொலி அதிர்வெண் மின்காந்த அலைகளை உண்டாக்கிப் பரப்பும் கருவியமைப்பு. (இய) transmutation - மாற்றுத் தனிமமாக்கல்: அணுக் கருக்களைத் துகள்களால் தகர்ப்பதாலோ கதிரியக்கச் சிதைவினாலோ ஒரு தனிமத்தை மற்றொரு தனிமமாக மாற்றும் முறை. (வேதி)

transparent-ஒளி செல்லக்கூடிய: ஒ. translucent (உயி)

transpiration - நீராவிப் போக்கு: தாவரங்கள் தங்கள் இலைகளிலுள்ள துளைகள் வழியாக வேண்டாத நீரை வெளித்தள்ளலே நீராவிப் போக்காகும். இச்செயல் தாவரத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலையைக் குறைக்கிறது. உறிஞ்சும் விசையாக அமைந்து அதிக நீர் மர உச்சிக்குச் செல்ல உதவுகிறது. மரங்கள் எவ்வளவு உயரம் வளர்த்த போதிலும் அதன் உச்சிக்கும் மற்றப் பகுதிகளுக்கும் நீர் செல்ல முடிகிறது. அதிக அளவு நீரை உறிஞ்சித் தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய நீரைப் பெறுகின்றன. உயிரணுச் சாற்றைச் செறிவடையச் செய்து ஊடுபரவுதலுக்கு உதவுகிறது. பா. translocation. (உயி)

transplantation - 1.பதியஞ் செய்தல்: மாற்றிப் பொருத்தல். திசு அல்லது உறுப்பை ஓர் உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு மாற்றிப் பொருத்துதல். எ-டு சிறுநீரகத்தை மாற்றிப் பொருத் தல். 2. நடவு: நாற்றைப் பறித்து உழுத வயலில் நடுதல் (உயி)

transponder - தூண்டு துலக்கி: transmitter responder என்பதன் சுருக்கம். மாற்றியமைக்கும் கருவி. வானொலி அல்லது ரேடார் கருவியமைப்பு குறிகையைப் பெற்றுத் தானே அதற்கேற்ற குறிகையை அனுப்புவது செயற்கை நிலாக்களில் அதிகம் பயன்படுவது. (தொ.நு)

transport-போக்குவரத்து: ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாகச் செல்ல வழிவகை செய்வது. இது நீர்ப் போக்குவரத்து (கப்பல்கள்), நிலப் போக்குவரத்து (ஊர்திகள்), வானப் போக்குவரத்து (வானூர்திகள்) எனப் பலவகைப்படும். (இய)

transputer-படிகப்பொறி: படிகப்பெருக்கியிலிருந்தும் (டிரான்சிஸ்டர்) கணிப்பொறியிலிருந்தும் இப்பெயர் உருவானது. 1990 வாக்கில் ஐந்தாந் தலைமுறைக் கணிப்பொறிக்காகப் பிரிட்டனில் உருவாகிய ஆற்றல் வாய்ந்த நுண் செயல்முறையாக்கி (மைக்ரோ புராசசர்) (இய)

transuranic elements - மீ அணுவெண் தனிமங்கள்: கதிரியக்க வரிசைத் தனிமங்கள். யுரேனியத்தைக் காட்டிலும் உயர்ந்த அணுவெண்களைக் கொண்டவை. எ-டு நெப்டடூனியம், புளுட்டோனியம். (வேதி)

transverse process- குறுக்கு முள்: முள்எலும்பின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள மருங்கு நீட்சி. பா. thoracic vertebrae,(உயி)

tribe - குடிஇனம்: நெருங்கிய தொடர்புள்ள பேரினங்கள். பல குடி இனங்கள் சேர்ந்து உட் குடும்பத்தைத் தோற்றுவித்தல். புற்கள் போன்ற பெரிய குடும்பங்களை வகைப்படுத்தும் பொழுது இது பயன்படுகிறது. ஒரைசீ. ட்ரைடீசி, ஆவினி ஆகியவை பூயிடி உட்குடும்பக் குடி இனங்கள். (உயி)

trichome - தூவி: ஒரு கண்ணறை அல்லது பல கண்ணறையுள்ள புறவளர்ச்சி. புறத்தோலிலிருந்து கிளம்புவது. (உயி)

tricuspid valve-மூவிதழ் திறப்பி: மூன்றுபடல மடிப்புகளைக் கொண்டது. இதய வலது மேலறைக்கும் கீழறைக்கும் இடையே உள்ளது. வலது கீழறை சுருங்கும்பொழுது குருதி வெளியேறுமே ஒழியத் திரும்ப வலது மேலறைக்குச் செல்லாது. இதை இவ்வாறு செய்வது இத்திறப்பியே. ஒ. (உயி)

trifoliate - முக்கூட்டிலை: ஒரே புள்ளியிலிருந்து கிளம்பும் மூன்று தனிச்சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை : அவரை. (உயி)

triggering circuit -விசைப்பு மின் சுற்று. (இய)

trimer - முப்படி: ஒத்த மூன்று மூலக்கூறுகளைச் சேர்ப்பதால் உண்டாகும் மூலக்கூறு அல்லது சேர்மம். (வேதி)

triode - மும்முனைவாய்: மூன்று மின்வாய்களைக் கொண்டது. (இய)

triple bond-முப்பிணைப்பு: மூவினை மின்னணுக்கள் பங்கு கொள்ளும் இரு அணுக்களிடையே உண்டாகும் உடன் பிணைப்பு மரபு வழியில் மூன்று கோடுகளாகக் காட்டப்பட்டிருக்கும். Н-С = С-Н (வேதி)

triple point -முந்நிலை: வளி,நீர்மம், திண்மம் ஆகிய முந்நிலைப் பொருள்களும் சமநிலையில் இருக்கும் ஒரே நிலை. (வேதி)

triploblast -முப்படை: உடல் மூன்று அடுக்குகளாலாகிய உயிரி. எ-டு மண்புழு.புரோட்டோசோவா, கடற்பஞ்சுகள். குழிக்குடலிகள் மட்டும் முப்படை இல்லாதவை. (உயி)

triploid - மும்மம்: ஒற்றைப்படை நிறப்புரிபோல் மூன்று மடங்கு நிறப்புரிகளைக் கொண்ட உயிரி. பா. (உயி)

Trishul - திரிசூல்: தரையிலிருந்து காற்று வெளிச் செல்லும் எறி படை இதன் தாக்கெல்லை 500 கி.மீ. சண்டிப்பூர் இடைக்கால ஆய்வு எல்லையிலிருந்து 28-12-96 அன்று வெற்றியுடன் விடப்பட்டது. போர்ப்படை, வானப்படை கடற்படை ஆகிய மூன்று படைகளுக்கும் இது உதவும். (தொ.நு)

tritium - டிரைடியம்: T. முப்பொருண்மை கொண்ட நீர் வளியின் கதிரியக்க ஓரிமம் (வேதி)

trochophore-குஞ்ச இளரி: மெல்லுடலிகள், வளைய உடலிகள் முதலியவற்றின் இளமுயிரி. மயிரி ழைக் குஞ்சம் உள்ளது. இவ் விளரி இருப்பது இதனைக் கொண்ட தொகுதிகளுக்கிடையே உயிர்மலர்ச்சி உறவு இருப்பதைக் காட்டுகிறது. ஒ dipleurula (உயி)

tropism - நாட்டம்: நாட்ட அசைவு. எ-டு, நீர் நாட்டம், ஒளிநாட்டம், வேதிநாட்டம். இவற்றில் நீர், ஒளி, வேதிப் பொருள் ஆகியவை அசைவு ஏற்படுவதற்குரிய தூண்டல்கள். (உயி)

trough - அகடு: ஓர் ஒலியலையிலுள்ள பள்ளத்திற்கு அகடு என்றும் மேட்டிற்கு முகடு என்றும் பெயர். ஆக, ஓர் ஒலி அலை ஒரு முகடு ஓர் அகடு ஆகிய இரண்டாலானது. (இய)

trunk - நடுவுடல்: 1. உடலின் நடுப்பகுதி. தலையையும் புறத்துறுப்புகளையும் கொண்டது. இதனை உடம்பு என்றுங்கூறலாம்.2. இணைப்பு: தொலைபேசி இணைப்பகங்களுக்கிடையே உள்ள பிணைப்புச்சுற்று. (தொ.நு)

trunkcal-இணைப்புத்தொடர்புப் பேச்சு: வெளியூர்ப்பேச்சு. பா. call. (தொ.நு)

tube nucleus -குழாய் உட்கரு: மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழலாகிறது. இக்குழலின் நுனியில் இரு உட்கருக்கள் இருக் கும். மேல் பிறப்புட்கருவும் கீழே குழல் உட்கருவும் காணப்படும். இவ்விரண்டில் பின்னது சிதைவது பா. vegetative nucleus, generative nucleus. (உயி).

tuber - கிழங்கு: தண்டின் பருத்த தரைகீழ்ப்பகுதி உண்ணக் கூடியது. இது தண்டு அல்லது வேரின் மாற்றுரு. இதில் வேர்க் கிழங்கு என்பது ஒருவகை. இதில் ஆணிவேர் அல்லது வேற்றிட வேர் கிழங்காகும். எ.டு. சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றொரு வகை தண்டுக்கிழங்கு இதில் கீழிலைக் கோணத்திலிருந்து உண்டாகும் தரை கீழ்க்கிளை பருத்துக் கிழங்காகும். எ-டு உருளைக்கிழங்கு.

tubercle - கரடு: 1. எலும்பிலுள்ள சிறுமேடு, 2. என்புருக்கி நுண்ணுயிரி உண்டாக்கும் சாம்பல் நிறமுண்டு. (உயி)

tuberculosis - என்புருக்கிநோய்: காசநோய், மனிதனிடத்து நுண்ணுயிரியினால் உண்டாகும் கொடிய நோய். பி.சி.ஜி இதற்கு எதிராகத் தடுப்பாற்றல் அளிக்கும். (உயி)

tumour-கட்டி: பெரிய அளவுள்ள வீக்கம். எளிய கட்டியாகவோ துன்புறுத்தும் கட்டியாகவோ இருக்கும். இரண்டாவது நிலை புற்றுநோயாக அமையும். இது உயிருக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது. (உயி)

tundra - பனிச்சமவெளி: பெரும் வட்டார தாவரச் சமுதாயம். தாவரத் தொகுதி மிகக் குறைவாக இருக்கும். பூப்பாசிகள், மாசிகள், புற்கள் முதலியவை மட்டுமே இருக்கும். உருசியாவில் மிகுதி. (உயி)

tungsten - டங்ஸ்டன்: .W. இதன் பழைய பெயர் உல்பரம், அரிய மாறுநிலை உலோகம். வெண்ணிறம், முதன்மையாக உல்பரமைட்டிலிருந்து பெறப்படுவது. ஒளிர்விளக்குகள் இழைகள் செய்யவும் உயர் விரைவு எஃகு செய்யவும் பயன்படுதல். (வேதி)

tunica - அகலுறை: பல படலங்களைக் குறிக்கும். எ-டு புறவுறை, உள்ளுறை, நடுவுறை (தமனி) (உயி).

tunica-carpus theory-அகலுறை இகலுறைக் கொள்கை: முனைத் திசு அமைப்பு பற்றியும் வளர்ச்சி பற்றியும் கூறுங்கொள்கை. இதில் இருதனித்திசுப் பகுதிகள் உண்டு. அவையே இகலுறையும் அகலுறையும். இகலுறை: திசுவின் உட்பகுதி. கண்ணறைப் பிரிவு ஒழுங்கற்றது. அகலுறை: ஒருங்கடுக்குகளாலானது. இதில் கண்ணறைப்பிரிவு ஆரப் போக்குடையது. (உயி)

tuning fork-இசைக்கவை: கேட்டலை ஆய்ந்தறியப் பயன்படும் கருவி.

turbine - விசையாழி: காற்று, நீர், நீராவி முதலியவற்றின் உந்துதலால் இயக்கப்படும் உந்தி. இதில் ஓர் ஆழியில் தகடுகள் செங்குத்தாக அடுத்தடுத்திருக்கும். இந்த ஆழி ஓர் உந்தியோடு இணைக்கப்பட்டிருக்கும். தகட்டில் நீராவி செல்லும், ஆழி உருளுவதால், உந்தியும் இயக்கப்படுகிறது. இயக்கும் ஆற்றலுக் கேற்ப, இது காற்றாழி, நீராழி, நீராவியாழி எனப் பல வகைப்படும். (இய)

turbo generator -விசையாழி இயற்றி: விசையாழிப்பிறப்பி ஒரு மின்னியற்றியை இயக்கும் நீராவி விசையாழியாகும். (இய)

turgor pressure -விறைப்பழுத்தம்: பா. turgor (உயி)

turpentine -கற்பூரத்தைலம்: பைன் மரங்களின் பிசுமத்தைக் காய்ச்சி வடிக்க, இந்நீர்மம் கிடைக்கும். கரைப்பான். (வேதி)

turtle - கடலாமை: கடலில் வாழ்வது, பல்லில்லை. மென்மையான உடல், கடின ஓட்டில் உள்ளது. இந்த ஓட்டிலேயே இதன் தலை, கால், வால் எல்லாம் அடங்கியுள்ளன. முன்புறத்துறுப்புகள் நீந்துவதற்குத் துடுப்புகளாகியுள்ளன. (உயி)

twins - இரட்டை(யர்): ஒரே கரு முட்டையிலிருந்து உருவாகும் இரு தனி உயிர்கள். ஒன்று மற்றொன்றைப் போலவே இருக்கும். புகழ்மிக்க ஆர்க்காட்டுச் சகோதரர்கள் (இலட்சுமணசாமி, இராமசாமி) இரட்டையர்களே. (உயி)

tympanum - செவிப்பறை: புறச்செவிக்கும் உட்செவிக்கும் இடையிலுள்ள பகுதி. ஒலி அதிர்வுகளை உட்செவிக்குச் செலுத்துவது.

type specimen-வகைமாதிரி: சிறப்பினம் அல்லது துணைச் சிறப்பினத்தை விளக்கவும் பெயரிடவும் உதவும் போலிகை, (உயி)

Tyndall effect - டிண்டல் விளைவு: ஒளிவழியில் கூழ்மத் துகள்களால் ஒளிச்சிதறல் ஏற்படுதல். இதனால் பார்க்கக்கூடிய ஒளிக்கற்றை உண்டாகிறது. இந்நெறிமுறை மீ நுண்ணோக்கியில் பயன்படுகிறது. (இய)

type-1.மாதிரி: ஒரு சிறப்பினத்தை வரையறுக்கப் பயன்படும் பொருள். இது உலர்ந்த பொருளாகவோ வரைபடமாகவோ இருக்கலாம். ஒரு பேரினத்தின் மாதிரி வகையையும் குடும்ப மாதிரிப் பேரினத்தையும் விளக்கப் பயன்படும் சொல், எ-டு பேரினம் சொலானம் என்பது சொலனேசிக் குடும்பத்தின் மாதிரிப் பேரினமாகும். 2.வகை. வேதி மாற்ற வகை. 3. அச் செழுத்து. (ப.து)

type metal - அச்சு உலோகம்: ஓர் உலோகக் கலவை. காரீயம், ஆண்டிமணி, வெள்ளீயம் ஆகியவை குறிப்பிட்ட வீதத்தில் சேர்ந்தது. ஆண்டிமணி கடினத்தைக் கொடுப்பது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது புத்தக எழுத்துகளில் இது குறைவாகவும் சில்லறை வேலை எழுத்துகளில் அதிகமாகவும் இருக்கும். இதற்கேற்ப விலையும் கூடும். (வேதி)

typhoid fever -முறைக்காய்ச்சல்: கொடிய தொற்றுநோய். வாழ்நலம் குறைவாகவுள்ள இடங்களில் ஏற்படுவது.சால்மோனிலா டைப்பி என்னும் நுண்ணுயிரியினால் உணவு மூலம் ஏற்படுவது.அடைகாலம் 14 நாட்கள். ரோஜா நிறத்தடிப்பு முதுகிலும் வயிற்றிலும் முதல்வார முடிவில் ஏற்படும். (உயி)

typhoon -சூறாவளி: வடக்குப் பசிபிக் பெருங்கடலி லும் தென்சீனக் கடலிலும் ஏற்படும் வெப்பமண்டலக் காற்று.பா. cyclone, hurricane. (பு:அறி)

typhus - ரிக்கட்சியால் காய்ச்சல்: அதிகம் தொற்றக் கூடியது. தடிப்பு தாளாத தலைவலி, உயர் வெப்பநிலை முதலியவை அறிகுறிகள். தொற்றுள்ள பேன்கள் அல்லது எலித் தெள்ளுப் பூச்சிகளிலிருந்து வரும் ரிக்கட்சியால் பொருள்களிலிருந்து உண்டாவது. இதை உண்டாக்குந் தொற்றுயிரி ரிக்கட்சியா புரோவா செகி, சல்பனாமைடு மருந்துகள் பயன்படுத்தப்படலாம். (உயி)

tyrosine-டிரோசின்: பொதுவான அமினோ காடிகளில் ஒன்று. பா.aminoacids.(வேதி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/T&oldid=1040368" இலிருந்து மீள்விக்கப்பட்டது