அறிவியல் அகராதி/A

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அறிவியல் துறைகள்
அறிவியல் அகராதி

A

abactinal - ஆரம் விலகிய: ஆரச் சமச்சீருடைய விலங்கில் வாய்க்கு எதிரே உடல் மேற்பரப்பு அமைதல் பா. aboral. (உயி)

abaxial - அச்சு விலகிய: இலைக் கீழ்ப்பரப்பு. அதாவது பக்கத் தண்டிலிருந்து விலகியிருத்தல். பா. adaxial. (உயி)

abdomen - வயிறு: நடு உடலில் மார்புக்குக் கீழுள்ள அறை. இரைப்பை, குடல் முதலிய உறுப்புகளைக் கொண்டது. (உயி)

abducens nerve - விலகமைநரம்பு: 6ஆம் முளை நரம்பு (உயி)

abductor - நீட்டுதசை: முன் கையை நீட்ட உதவும் முத்தலைத் தசை இதனை விரிதசை என்றும் கூறலாம். பா. adductor. (உயி)

aberration - பிறழ்ச்சி: 1. வளைவாடி அல்லது வில்லையில் தோன்றும் உருவில் ஏற்படுங் குறை. இது நிறப்பிறழ்ச்சி, கோளப்பிறழ்ச்சி என இருவகைப்படும் (ஒளிஇயல்). 2. கதிரவனைச் சுற்றிப் புவி வலம் வருவதால், விண்மீன் நிலையில் ஏற்படும் தோற்ற இடப்பெயர்ச்சி. (வானியல்)

abiogenesis - உயிரிலித் தோற்றம்: உயிருள்ள பொருள்கள் உயிரற்ற பொருள்களிலிருந்து உண்டாதல், (உயி) ஒ. biogenesis

abiotic environment - உயிரிலிச் சூழ்நிலை: இதில் அடங்கும் இயல்புக்காரணிகளும் வேதிக்காரணிகளும் உயிரிகளை ஊக்குவிப்பவை (உயிர்)

abomasum. இறுதி இரைப்பை: பசு முதலிய அசைபோடும் விலங்குகளின் நான்காம் இரைப்பை. (உயி)

aboral - வாயினின்று விலகிய: வாய் அமைந்துள்ள பக்கத்திற்கு நேர் எதிர்ப்புறம் இருத்தல் எ-டு. நட்சத்திர மீன். பா. abactinal. (உயி)

abortion - கருச்சிதைவு: கருப்பையிலிருந்து கரு முதிராமல் முன்னரே வெளியேறுதல். (மரு)

ABO system - ஏஃபிஒ தொகுதி: இன்றியமையாத குருதித் தொகுதிகளில் ஒன்று (உயி)

abrasives - தேய்ப்புப் பொருள்கள்: மிகக் கடினத் தன்மையும் வலுவுங் கொண்ட பொருள்கள். எ-டு. வைரம், படிகக்கல். இவை இயற்கையானவை, செயற்கையானவை என இரு வகைப்படும். (வேதி)

abscess - சீழ்க்கட்டி: வீக்கத்தினால் குழியில் சீழ் சேர்தல். (மரு)

abscissa - மட்டாயம்: கிடையச்சுத் தொலைவு இரு பருமச் செவ்வகக் கார்ட்டீசிய ஆயத்தொலைத் தொகுதியின் கிடைமட்டக்கோடு. (கண)

abscission - உதிர்தல்: 1. தன் காம்பின் ஒரு பகுதி முறிவதால் பூஞ்சைச் சிதல் வெளியேறுதல் 2. வளர்ப்பியின் (ஆக்சின்) அளவு குறைவதால், இலை, பூ, கனி முதலியவை விழுதல். (உயி)

absolute - தனி, சார்பிலா: நிலைமைகள், வரம்புகள், தடைகள் முதலியவற்றிலிருந்து தனித்திருத்தல், செறிவான சொல். எ-டு. தனி வெப்பநிலை. (வேதி)

absolute alcohol - தனிச் சாராயம்: நீரற்ற சாராயம். (வேதி)

absolute humidity - தனி ஈரநிலை: காற்று வெளியில் நீராவி இருக்கும் அளவு. (இய)

absolute temperature - தனி வெப்பநிலை: செல்சியஸ் (சி) பாகையில் அளக்கப்படும் வெப்பநிலை, அளக்கப்படுவது நீரின் உறைநிலையிலிருந்து அல்லாமல் தனிச்சுழியிலிருந்து நடைபெறுவது கெல்வின் அளவு °K. (இய)

absolute unit - தனியலகு: அடிப்படை அலகுகளிலிருந்து நேரடியாக வருவது. இதற்கும் அனைத்துலக அலகிற்கும் வேறுபாடு சிறிதே. எ-டு ஆம்பியர். (இய)

absolute zero - தனிச் சுழி: துகள்கள் தம் இயக்க ஆற்றலை எல்லாம் இழக்கும் வெப்பநிலை. இது 273.15 சி அல்லது 439.67 எஃப். (இய)

absorptiometer - உட்கவர்மானி: வளிக்கரைதிறனை நீர்மங்களால் உறுதி செய்யுங்கருவி. (இய)

absorption - உட்கவரல்: 1. நீர்மம் அல்லது கெட்டிப் பொருள் வளியை உறிஞ்சும் முறை (இய) 2. செரித்த உணவு குடல் உறிஞ்சிகளால் சிறுகுடலில் உறிஞ்சப்படுதல். (உயி) ஒ. adsorption.

abstraction - பிரித்தறிதல்: பல பொருள்களில் காணப்படும் பொதுப் பண்புகளை அவையுள்ள பொருள்களிலிருந்து பகுத்தறியும் திறன். (இய)

abstriction - சுருக்கம்: காம்பு சுருங்குவதால் அதிலிருந்து சிதல் வெளிப்படுதல் (உயி)

abundance - ஒப்பளவு: தனிமங்களிடையே ஒரு தனிமம் இருக்கும் சார்பளவு. காட்டாகப் புவி ஓட்டில் உயிர்வளியின் ஒப்பளவு எடையளவுப்படி 50% (வேதி)

acapnia - வளிக்குறை: குருதியில் கரி இரு ஆக்சைடு (CO2) குறைதல். (உயி)

acceleration - முடுக்கம்: ஒரு துகளின் நேர் விரைவில் ஒரு வினாடி நேரத்தில் ஏற்படும் மாற்றம். (இய)

acceleration of free fall - தடையில் வீழ்ச்சி முடுக்கம்: வேறு பெயர் ஈர்ப்பு முடுக்கம். புவிக் காந்தப் புலத்தில் ஒரு பொருள் தடையின்றி விழுவதால் ஏற்படும் முடுக்கம்.


இதன் மதிப்பு 9.80665 எம்.எஸ்2. (இய)

acceleration, radial - ஆரவகை முடுக்கம்: வட்டப் பரிதியின் வழியே செல்லும் எத்துகளும் ஆரத்தின் வழியே வட்ட மையத்தை நோக்கி முடுக்கங் கொள்ளும். இது ஆரவகை முடுக்கமாகும். (இய)

acceleration, uniform - ஒரு சீர் முடுக்கம்: இயங்கிக் கொண்டிருக்கும் துகளில் நேர் விரைவு சம கால அளவுகளில் சம அளவு மாறுபடக் கூடியதாக இருந்தால் அவ்வகை முடுக்கம் ஒரு சீர் முடுக்கம் ஆகும். (இய)

accelerator - முடுக்கி: 1. எந்திரங்களில் வளிக் கலவையைச் சீராக்கும் கருவி, 2. பிளாஸ்டிக் தொழிலில் வினையை விரைவுபடுத்தும் பொருள். இதற்கு உயர்த்தி (புரமோட்டர்) என்றும் பெயர். 3. அணு வினைகள் உண்டாக மின்னேற்றத் துகள்களை அதிக ஆற்றல் பெறுமாறு செய்யுங்கருவி. பா. catalyst (இய, வேதி)

acceptor - ஏற்பி: 1. ஈதல் பிணைப்பு தோன்றும் பொழுது மின்னணுக்களைப் பெறும் சேர்மம் மூலக்கூறு அல்லது அயனி (வேதி) 2. அரைகுறைக் கடத்தியில் மாசாகச் சேர்க்கப்படும் பொருள். இணைதிறன் பட்டையிலிருந்து மின்னணுக்களை ஏற்கவல்லது. (மின்னணுவியல்)

acclimatization - சூழ்நிலைக்கு இணக்கமாதல்: ஒர் உயிரி சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளுதல். இதில் உடல் மாற்றமோ, உடலியல் மாற்றமோ, வேதி மாற்றமோ இருக்கும். எ-டு. தவளையின் மாரிக்கால உறக்கம். இது தட்பவெப்ப நிலைக்கேற்பத் தகுதியாக்கிக் கொள்ளுதல் ஆகும். (உயி)

accumulator - துணைமின்கலம்: இது மின்னாற்றலிலிருந்து பெறப்படும் வேதியாற்றலைத் தேவைப்படும் பொழுது மின்னாற்றலாக மாற்றுங்கலம். (இய)

accuracy - துல்லியம், நுட்பம்: ஒர் அளவைக் குறிக்கும் எண்ணிலுள்ள சிறப்பு இலக்கங்கள். எ.டு 2.212 மீ. கணக்கு முதலிய துல்லிய அறிவியல்களில் மிக இன்றியமையாதது. (கண)

acellular - தனிக் கண்ணறைகளால் (செல்களால்) பிரிக்கப்படாத: ஒற்றைக் கண்ணறை உயிரி. எ-டு அமீபா (உயி)

acephalous - தலையற்ற: தலை இல்லாத நிலை. (உயி)

acerous - கொம்பற்ற: கொம்பு இல்லாத நிலை. (உயி)

acetabulum - குழியம்: இடுப்பெலும்பின் இருபுறத்திலும் தொடை எலும்பின் தலை சுழலுவதற்கு ஏற்றவாறு உள்ள குழி. (உயி)

acetic acid - அசெடிகக் காடி: CH3COOH. கார மணமும், அரித்தலும், நிறமின்மையும் உள்ளது. குறைந்த வெப்பநிலையில் தூய அசெட்டிகக் காடியாகும். 2.5% புளிக்காடி (வினிகர்) செய்யப் பயன்படுவது. (வேதி)

acetone - அசெட்டோன்: CH3COCH3 நிறமற்ற எரியக் கூடிய நீர்மம். இனிய மணமுண்டு. கொழுப்புகளையும் ரெசின்களையம் கரைக்கப் பயன்படுவது. (வேதி)

acetylene - அசெட்டிலின்: C2H2. கால்சியம் கார்பைடு, நீர் ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்படும் வளி, மிகுந்த வெள்ளொளியுடன் எரிவது. உலோகங்களைத் துண்டிக்கவும் இணைக்கவும் ஆக்சி-அசெட்டலின் ஊதுகுழாய்களிலும் பயன்படுவது. பழங்களைச் செயற்கையாகப் பழுக்கவைக்கவும் பயன்படுவது. (வேதி)

ache - வலி: நோய் நிலை அல்லது அறிகுறி எ.டு. தலைவலி. (மரு) பா. pain.

achene - செவ்வறைக்கணி: எ.டு. நெல். ஒரு குல் இலைச் சூல்பையிலிருந்து உண்டாகும் பிளவுறா ஒற்றை விதைக்கனி. (உயி)

achromatic lens - நிறப்பிறழ்ச்சி நீக்கி: நிறப்பிறழ்ச்சியைப் போக்கும் கண்ணாடிவில்லை. (இய)

achromatic test - நிறப்பிறழ்ச்சி நீக்கு ஆய்வு: நிறப்பிறழ்ச்சியைப் போக்கச் செய்யப்படுவது. (இய)

acicular - ஊசி வடிவம்: இலை நீண்டும் குறுகியும் உருண்டையாக இருத்தல் எ.டு. பைன் மர இலை. (உயிர்)

acid - காடி: அமிலம், புளிப்புச் கவை, பூஞ்கத் தாளைச் சிவப்பாக்கல், அரிக்குந்தன்மை ஆகிய பண்புகளைக் கொண்டது. (வேதி)

acid, anhydride - காடி நீரிலி: ஒரு வகைக் கரிமக்கூட்டுப் பொருள். (வேதி)

acid dyes, stains - காடிச்சாயங்கள்: கரிமக் காடிகளின் சோடிய உப்புகள், பட்டு, கம்பளம் ஆகியவற்றைச் சாயம் தோய்க்கப் பயன்படுபவை. எ-டு யோசின். (வேதி)

acidity - காடிமை: புளிப்புத்தன்மை. (வேதி)

acidity constant - காடிமை மாறிலி: காடிப்பிரிகை மாறிலி. பிரிகை வினையின் நடுநிலை மாறிலி. (வேதி)

acidolysis - காடிப்பகுப்பு: காடி வாயிலாக நீராற்பகுத்தல். (வேதி)

acidometer - காடிமானி: ஒரு சேமக் கலத்தின் உள்ள மின் பகுளியின் ஒப்படர்த்தி காணும் நீர்மானி. (வேதி)

acoustics - ஒலி இயல்: ஒலியை ஆராயும் ஓர் இயற்பியல் துறை. (இய)

acquired character - ஈட்டுபண்பு: தன் உடல் கண்ணறைகளில் சூழ்நிலை விளைவினால் ஓர் உயிரி பெறும் பண்பு. இதற்கு மரபு வழி உண்டு என்பது இலெமார்க் கொள்கையாகும். (உயி)

acromegally - முனைப் பெருவளர்ச்சி: பருவமுதிர்ச்சிக்குப் பின் மூளையடிச் சுரப்பி (பிட்யூட் டரி), மிகுதியாகச் சுரப்பதால் வயது வந்தோரிடத்துக் கன்ன எலும்புகளும் தாடை எலும்புகளும் முனைப்பாக வளர்தல். (உயி)

acropetal - நுனி நோக்கிய: முனை நோக்கிய இயக்கம். பூக்களின் வளர்ச்சி நுனி நோக்கியது. (உயி)

ACTH - adrenocoticotrophic hormone, Ecorticotrophin - ஏ.சி.டி.எச். அடினோகார்கோட்ராபிக் ஆர்மோன், கார்டிகோட்ராபின்: முன் பிட்யூட்ரியின் சுரப்பு. மூச்சிழுப்பு, கீல் வாதம் முதலிய நோய்களைக் குணப்படுத்த ஊசி மருந்தாகப் பயன்படுவது. (உயி)

actinium - ஆக்டினியம்: Ac. நச்சுத் தன்மையுள்ள கதிரியக்கத் தனிமம். ஆல்பா துகள்களின் ஊற்றுவாய். (வேதி)

actinoids - ஆக்டினாய்டுகள்: 15 கதிரியக்கத் தனிமங்கள் கொண்ட தொகுதி கதிர்மங்கள் என்று கூறலாம். (வேதி)

actinometer - கதிர்வீச்சுமாணி: கதிர்வீச்சுச் செறிவை அளக்குங் கருவி. (இய)

actinomorphy- ஆரச் சமச்சீர்: ஆரச்சமச்சீர் உள்ள பூ. எ-டு. தாமரை, வெங்காயம். பா. radial symmetry. (உயி)

actinomycosis - ஆக்டினோ மைக்கோசிஸ்: ஆக்டினோ மைகோசிஸ் இஸ்ரேலி என்னும் குச்சியத்தினால் (பாக்டீரியத்தினால்) உண்டாகும் கால்நடை நோய். துரையீரல், தாடை, குடல் ஆகிய இடங்களில் நோய் தாக்கும். கட்டிகள் தோன்றிச் சீழ் வடியும். சீழில் கந்தகத் துணுக்குகள் இருக்கும். (உயி)

actinotherapy - கதிர்ப் பண்டுவம்: புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி நோயைக் குணப்படுத்துதல். (மரு)

active site - விளைமிகுபுலம்: வினையூக்கி மேல்பரப்பில் வினை நிகழுமிடம். (வேதி)

active transport - வினைமிகு போக்குவரவு: உயிரணுக்களில் படலங்கள் வழியாகப் பொருட்கள் வெளியே செல்லுதலும் உள்ளே வருதலும். (உயி)

activity. 1. கதிரியக்கம்: ஒரு கதிரியக்கப் பொருளில் ஓரலகு நேரத்தில் சிதைவுறும் அணுக்களின் சராசரி எண்ணிக்கை. 2. வினைப்பாடு: செயற்பாடு. (இய)

acuminate - நீள்கூர் நுனி: எ-டு. அரசிலை. (உயி)

acute - கூர் நுனி: எ-டு. மாவிலை. (உயி)

Adam's apple - குரல்வளை மணி: ஆணிடத்துக் கழுத்திற்கு முன்னுள்ள குரல்வளைப் புடைப்பு. தைராய்டு குருத்தெலும்பின் இரு பகுதிகளின் இணைப்பால் உண்டாவது, குரல்வளைக் கூர் என்றும் கூறலாம். (உயி)

adaptation - தகைவு: உயிரிகள் தம் சூழ்நிலைக் கேற்பச் செயற்படுதல் இது உறுப்பு நிறம் முதலிய வற்றில் இருக்கலாம். விலங்குகள் தங்கள் பகைவரிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வமைப்பு பயன்படுகிறது. இது பல வகைப்படும். 1. பாதுகாப்பு நிறம்: வெட்டுக் கிளி 2. தாக்கு நிறம்: பச்சைப் பாம்பு 3. எச்சரிக்கை நிறம்: விரியன் 4. நிறமாற்றம்: பச்சோந்தி (உயி)

adaxial - அச்சு நோக்கிய: இலை மேற்பரப்பு. அதாவது பக்கம் தண்டு நோக்கி அமைதல் இலை முதலிய பக்க உறுப்புகளில் இச்சொல் மேற்புறம் (டார்சல்) எனப் பொருள்படும். ஒ. abaxial. (உயி)

adder - விரியன்: சிறிய நச்சுத் தன்மையுள்ள பாம்பு. (உயி) கூட்டி: கூட்டுங் கருவி. (கண)

addition - reaction - கூட்டு வினை: எத்திலின், அசெட்டலின் ஆகிய வளிகள் புரோமின் கரைசலுடன் வினையாற்றி அக்கரைசலை நிறமற்றதாக்கும். (வேதி)

address - 1. முகவரிகாண்: கணிப் பொறி நினைவகத்தில் சேமிப்பு இடத்தை அடையாளங் கண்டறிதல். 2. முகவரிகாணி: வழக்கமாக இரு நிலைக் குறிபாட்டிலுள்ள எண். குறிப்பிட் இடத்தை இனங் காண்பது. கணிப்பொறி நினைவகத்தில் இவ்விடத்தில் செய்திகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். (கணி)

adductor - மடக்குதசை: முன் கையை மடக்கப் பயன்படும் இருதலைத் தசை. பா. abductor. (உயி)

adenine - அடினைன்: பியூரைன் வழிப் பொருள். டி.என்.ஏவிலும், ஆர்என்ஏவிலும் பெரும் காரப் பகுதிப் பொருள்களில் ஒன்றாக இருப்பது. (வேதி)

adenoids - மூக்கடிச்சதை: மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்குப் பின் காணப்படும் கொழுநீர்ச் சுரப்பிகள். இவை பருக்கும் போது கேட்டலும், முச்சுவிடுதலும் கடினமாக இருக்கும். (உயி)

adenosine - அடினோசைன்: டிரிபாஸ் சர்க்கரை மூலக்கூறு டன் சேர்ந்துள்ள ஓர் அடினைன் மூலக்கூறு கொண்ட நியூக்ளியோசைடு, இதன் பாஸ்பேட் எஸ்தர் வழிப் பொருள்களாவன. அடினோசைன் ஒற்றைப் பாஸ்பேட், அடினோசைன் இரட்டைப் பாஸ், பேட் அடினோ சைன் முப்பாஸ்பேட். இம் மூன்றும் வேதியாற்றலைச் சுமந்து செல்வதால் அடிப்படை உயிரியல் சிறப்புடையவை. (உயி)

adenosine diphosphate, ADP - அடினோசைன் இரட்டைப் பாஸ்பேட் எடிபி: பா. adenosine. (வேதி)

adenosine monophosphate, AMT - அடினோசைன் ஒற்றைப் பாஸ்பேட் ஏஎம்டி: பா. adenosine. (வேதி)

adenosine triphosphate, ATP . அடினோசைன் முப்பாஸ்பேட் எடிபி: பா. adenosine. (வேதி)

adenotrophic viviparity - உள்ளுறை வளர்ச்சி: சில ஈக்களில் முட்டை பொரிந்ததும் இளம் உயிர்கள் தாய் உடலிலேயே தங்கி ஊட்டம் பெறுதல். முதிர்ச்சியடைந்ததும் அவை வெளியேறிக் கூட்டுப்புழுவாதல். (உயி)

adenovirus - சுரப்பி நச்சியம்: டி.என்.ஏ. கொண்டுள்ள நச்சியத் தொகுதியில் ஒன்று கால்நடை, குரங்கு, மனிதன் முதலிய உயிரிகளிடம் காணப்படுவது. (உயி)

adermine - அடர்மின்: பைரிடாக்சின்: வைட்டமின் (உயிரியன்) பி, பால் காடிக் குச்சியங்கள். சில பூஞ்சைகள், ஈஸ்டுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. (உயி)

ADH, antidiuretic hormone - ஏ.டி.எச் ஆண்டிடையூரட்டிக் ஆர்மோன்: வேசோ பிரசின்: சிறுநீர்க் குறைப்புத் தூண்டி. பின் பிட்யூட்டரிச் சுரப்பு. சிறுநீரகம் நீர் உறிஞ்சுதலை இது துண்டுவதால், உடல் பாய்மங்களின் செறிவு கட்டுப்படுத்தப்படுகிறது. (உயி)

adhesion - ஒட்டுதல்: இது அணுப்பிணைவுக்கு மாறானது. இதில் வேறுபட்ட பொருள்களின் துகள்களுக்கிடையே கவரும் ஆற்றல் உள்ளது. நீர் விரலில் ஒட்டுவதற்கு இவ்விசையே காரணம். (இய)

adhesive - ஒட்டி: இரு பரப்புகளை ஒன்று சேர்க்கும் பொருள். பொதுவாக ஒட்டிகள் கூழ்மக் கரைசல்களே. இவை மூவகைப்படும். விலங்குப் பிசின்கள் 2. தாவரச் சளியங்கள் 3. செயற்கைப் பிசியங்கள் - ஈபாக்சிப் பிசியம். (வேதி)

adiabatic - வெப்பம் மாறாமை: இது வெப்ப இழப்போ ஏற்போ இல்லாத இயல்பு மாற்றம். (இய)

adipose tissue - கொழுப்புத் திசு. திசுக்களில் ஒருவகை. இதில் வெண் கொழுப்பு அல்லது மாநிறக் கொழுப்பு இருக்கும். (உயி)

adjustment - தகவுப்பாடு: தன் உறுப்பு, உறுப்பின் வேலை முதலியவற்றால் ஒர் உயிரி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளுதல். இதன் தலையாய நோக்கம் ஒரு நிலைப்பாட்டை அடைதலே. (உயி)

adjustorneuron - தகவுறு நரம்பன்: நரம்பு மையத்திலுள்ள நரம்பணு. இதன் மூலம் துடிப்புகள் உணர்நரம்புக் கண்ணறையிலிருந்து செய்திநரம்புக் கண்ணறைக்குச் செல்கின்றன. (உயி)

adnate - ஒட்டி இணைந்த: மகரந்த இழையோ அதன் தொகுப்போ மகரந்தப்பையின் பின்புறம் முழுவதும் பொருந்தி இருக்கும். எ-டு சண்பகப்பூ. (உயி)

adolescence - விடலைப் பருவம்: குழந்தைப் பருவத்தின் இறுதியில் தொடங்கி முழு முதிர்ச்சி ஏற்பட்டவுடன் முடியும் ஒரு முதன்மையான வளர்ச்சிப் பருவம் ஆண் 13-20 வயது. பெண் 12-18 வயது. (உயி) adrenal glands - அட்ரினல் சுரப்பிகள்: சிறுநீரக மேல் சுரப்பிகள். புறணியின் சுரப்பான கார்டின் குருதியில் உப்பின் அளவைச் சரி செய்கிறது. அகணிச் சுரப்பான அட்ரினலின் குருதியழுத்தத்தை ஒரே சீராக வைக்கிறது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பது. இச்சுரப்பிகள் சரிவர வேலை செய்யாவிடில் அடிசன்நோய் உண்டாகும். (உயிர்)

adsorption - வெளிக்கவரல்: ஒரு நீர்மம் அல்லது திண்மத்தின் மேற்பரப்பில் மற்றொரு பொருளின் அணு அல்லது மூலக்கூறு அடுக்குபடியும் முறை. இச்செயலை நிகழ்த்தும்பொருள் வெளிக்கவரி. ஒ. absorption. (இய)

adventitious buds - வேற்றிட அரும்புகள்: முளை இலைத் தாவரங்களில் இவை இலை விளிம்பில் தோன்றுபவை. எ.டு. பிரையோபைலம். (உயி)

adventitious roots- வேற்றிட வேர்கள்: எ.டு. கண்டல். (உயி)

aerial - அலைவாங்கி: வானொலி அலைகளைப் பெறவும் செலுத்தவும் பயன்படும் கருவியமைப்பு வானொலியின் ஒரு பகுதி. பா. antenna. (இய)

aerial root - காற்று வேர்: தரை மேல் வேர். தாவரத் தண்டகத்திலிருந்து மண்ணிற்கு மேல் உண்டாகும் வேர். ஈரக்காற்றிலிருந்து நீரை உறிஞ்சுவது. எ-டு: ஆலம் விழுது. (உயி)

aerobe - காற்றுப் பருகுயிரி: தான் வாழக் காற்றை உட்கொள்ளும் உயிர். (உயி)

aerobic respiration - காற்றுப்பருகு மூச்சு: இதில் தடையிலா உயிர்வளி கரிமப் பொருள்களை ஏற்றஞ் செய்வதால், கரி இரு ஆக்சைடும் நீரும் உண்டாகும். அதிக அளவு ஆற்றலும் கிடைக்கும். (உயி)

aeronaut - வான வலவர், விமானி: வானுர்தியைச் செலுத்துபவர். (வா.அறி) ஒ. astronaut.

aeronautics - வான வலவியல்: வானுர்திப்பயணம் பற்றி ஆராயுந்துறை. ஒ. astronautics

aero-space medicine - வானப் பயண (வெளி) மருத்துவம்: காற்று வெளிக்கப்பாலுள்ள பயணம் பற்றிய மருத்துவம். ஒ. aviation, space medicine. (வா.அறி)

aerotaxis - காற்றமைவு இயக்கம்: இஃது உயிர்வளிச் செறிவு வாட்டத்திற்குத் துலங்கலாக அமைவது. எ-டு. இயங்கக் கூடிய காற்றுப்பருகு குச்சியங்கள் நேரிடை அமைவியக்கமும், இயங்கக் கூடிய கட்டாயக் காற்றுப்பருகு குச்சியங்கள் எதிரிடை அமைவியக்கமும் கொண்டவை. (உயி)

aerotropism - காற்று நாட்டம்: ஒருவகை வேதி நாட்டம். இதில் நிலைப்படுத்துங்காரணி உயிர்வளி. (உயி) aestivation - 1. கோடை உறக்கம்: இது கோடையில் தாவரத்திலும் விலங்கிலும் உண்டாவது. எ.டு. பாம்பு, மீன், பனிக்கரடி.

2. இதழமைவு: பூ மெட்டில் இதழ்கள் அமைந்திருக்கும் முறை. இதழ்கள் என்பவை புல்லி களையும் அல்லிகளையும் குறிக்கும். இதன் முதன்மையான வகைகள்: 1. அடுக்கமைவு - புலி நகக்கொன்றை 2. சுழலமைவு - செம்பருத்தி   3. தொடு அமைவு - வெங்காயம். (உயி)

afferent - இகல்: உட்செல் 1. இகல்குருதிக் குழாய். உடலின் புறப் பகுதியிலிருந்து உள்ளே குருதியைக் கொண்டு வருவது. 2. இகல் நரம்பு. உணர்பகுதிகளிலிருந்து உணர்ச்சியை மைய நரம்பு மண்டலத்திற்குக் கொண்டு வருவது. ஒ. efferent. (உயி)

agar-agar - அகார்-அகார்: சில கடல் பாசிகளிலிருந்து பெறப்படும் பிசிமம். பல சர்க்கரைகள் சேர்ந்த கலவை. இது நீருடன் சேர்த்து ஜெல் என்னும் கூழ்மமாகிறது. அதிக வெப்பநிலையில் உருகுகிறது. வளர்ப்புக் கரைசலைக் கெட்டியாக்கப் பயன்படுகிறது. இக்கரைசல்களில் நுண்ணுயிரிகள் வளர்க்கப்படுகின்றன. இது உணவுப் பண்டங்கள் செய்யவும் பயன்படுகிறது. (உயி)

agate - கடுங்கல்: சிலிகாவின் மிகக் கடினமான இயல்பு வடிவம். அணிகலன்களிலும் கடினப் பகுதிகள் செய்வதிலும் பயன்படுவது. (வேதி)

agglutination - ஒருங்கொட்டல்: ஒருசேர ஒட்டிக் கொள்ளுதல். இச் செயல் எதிர்ப் பொருள் விளைவுகளில் ஒன்று. குச்சியங்கள், குருதியணுக்கள், முதல் தோன்றிகள் முதலியவை இவ்வியல்பு கொண்டவை. (உயி)

aggression - வலுத்தாக்கல்: ஒரு வகை விலங்கு நடத்தை. பிற விலங்குகளை அச்சுறுத்தவும், எதிர்க்கவும் நடைபெறுவது. இது எதிர்ப்புக்குரிய துலங்கலே. (உயி)

AIDs, acquired immune defciency syndrome - எயிட்ஸ், ஈட்டு எதிர்ப்பாற்றல் குறை நோய்க் குறியம்: 1981-ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டு வெளிநாடுகளுக்குப் பரவியது. குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் உள்ளது. நச்சியத்தினால் விலைமகளிர் முலம் தொற்றுவது. குழந்தைகளையும் பற்றக்கூடியது. இந்நோய் வெள்ளணுக்களை அழிப்பதால் எதிர்ப்பாற்றல் உண்டாக ஏதில்லை. தடுப்பு மருந்தும் இன்னும் கண்டறியப்படவில்லை. ஒரு கொடிய நோய். (மரு)

AIDS awareness programme - எயிட்ஸ் விழிப்புணர்வுத் திட்டம்: புற்றுநோய் போல் பரவும் ஆட்கொல்லி நோய். எயிட்சைத் தடுக்க அனைத்து அமைப்புகளும் மேற் கொண்டுள்ள சீரிய திட்டம். (மரு)

ailment - சிறு நோய்: சிறிய அளவில் தாக்கும் நோய் எ-டு. நீர்க் கொள்ளல் பா. disease. (மரு)

air - காற்று: புவியைச் சூழ்ந்துள்ள வளிக் கலவை. வளிகளைத் தவிர நீராவி, அய்டிரோகார்பன்கள், அய்டிரஜன் பெராச்சைடு, கந்தகச் சேர்மங்கள், சிறிய புழுதித் துகள்கள் ஆகியவையும் இதில் உள்ளன. (இய)

air conditioning, AC - காற்றைத் தட்பமாக்கல்: இதில் காற்றின் வெப்ப நிலை மட்டுப்படுத்தப்படுகிறது. இது வேறுபட்ட மூன்று செயல்களைக் குறிக்கும். 1. காற்றை வெளுத்தல் 2. ஈரப்பதமாக்குதல் 3. ஈரத்தை நீக்குதல். (தொ.து)

air sacs - காற்று விரிபைகள்: இவை பறவைகளுக்கே உரியவை. நுரையீரல்களின் நீட்சிகள். மார்புப் பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் அமைந்திருப்பவை. பறவை மூச்சுவிட உதவுபவை. (உயி)

alabaster - அலபாஸ்டன்: CaSO4 2H2O. நீரமை நிலையிலுள்ள கால்சியம் சல்பேட்டின் (ஜிப்சம்) இயல்பான ஒளிபுகா வடிவம். (வேதி)

albedo - ஒளி எண்: ஒரு பரப்பிலிருந்து மறிக்கப்படும் ஒளியின் அளவுக்கும் படுஒளியின் அளவுக்குமுள்ள வீதம். வியாழனின் ஒளி எண் 0.44. (இய)

albinism - வெண்ணியம்: ஓர் உயிரியில் நிறமாதல் இல்லாத கால்வழிக் குறைபாடு. வெண்ணிய விலங்குகள் அல்லது மனிதரின் தோல், மயிர், கண்கள் ஆகியவை உரிய நிறத்துடன் இரா. (உயிர்)

albumin(en) - ஆல்புமின்: கோளப் புரதத் தொகுதியில் ஒன்று. நீரில் கரையும் வெப்பப்படுத்தக் கரையா உறைபொருளாகும். இது முட்டை வெள்ளை, குருதி, பால் முதலியவற்றில் உள்ளது. (உயி)

alcohol - சாராயம்: C2H5OH கரைமம். ஈத்தேனிலிருந்து பெறப் படுவது. கற்பூரம் முதலியவற்றைக் கரைக்கும். விளக்கெரி பொருளாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது. (வேதி)

aldicarb - ஆல்டிகார்ப்: C7H14N2O2S. இப்பொருள் வெண்ணிறப் படிகம். பூச்சிக் கொல்லி. (வேதி)

aldol reaction - ஆல்டால் வினை: இதில் ஒர் ஆல்டிகைடின் இரு மூலக்கூறுகள் எரிசோடா முன்னிலையில் சேர்ந்து ஒர் ஆல்டாலைக் கொடுக்கும். அதாவது ஆல்டிகைடு ஆல்ககால் வினைபடு தொகுதி ஆகியவற்றை ஒரு சேர்மம் கொண்டிருக்கும். (வேதி)

aldrin - ஆல்ட்ரின்: C12H8Cl2ஜெர்மன் வேதியிலார் குர்ட் ஆல்டர் என்பவர் பெயரால் அமைத்த வேதிப்பொருள். கரையான் கொல்லி. (வேதி)

aleuroplast - மாக்கணிகம்: புரதத்தைச் சேர்க்கும் நிறமற்ற கணிகம். (உயி)

alexin - அலெக்சின்: நச்சு முறிவு. குருதித் தெளியத்தில் (சீரம்) இருப்பது. எதிர்த்தெளியத்தோடு சேரும் பொழுது நோய்க்கெதிராகப் பாதுகாப்பளிப்பது. (உயி) algae - பாசிகள்: பச்சையமுள்ளதால் ஒளிச்சேர்க்கை நடத்துபவை. உடல் ஒற்றைக் கண்ணறையாலானது கண்ணறை அமைப்பே மூச்சு விடுதல், கழிவகற்றல், இனப் பெருக்கம் செய்தல் முதலிய வேலைகளைச் செய்யப் பயன்படுவது. பெரும்பான்மை நீரில் வாழ்பவை 25,000க்கு மேற்பட்ட வகைகள் உண்டு. எ-டு. கிளமிடோமோனாஸ். (உயி)

algebra - இயற்கணிதம், குறிக் கணக்கு: குறிகள், குறிபாடுகள் மூலம் எண்களின் நுண்மைப் பண்புகளை ஆராயுந்துறை. (கண)

algology - பாசியியல்: பாசிகளை ஆராயும் உயிரியல் துறை. (உயி)

algorithm- வழிமுறை. இது விதிமுறைகள் வழிப்பட்ட நடைமுறை. சிறப்பாகக் கணிப்பொறி அறிவியலில் பயன்படுவது. இது சிக்கலுக்குத் தீர்வுகாண உதவும் நுணுக்கமுமாகும். (கணி)

alimentary canal - உணவு வழி: இது வாயில் தொடங்கிக் கழிவாயில் முடிவது. முதன்மையாக உணவு செரிக்கப்படுவது. (உயி)

alkali - காரம்: நீரில் கரையக்கூடிய வீறுள்ள உப்பு மூலி. கரிப்பு. காரச்சுவை, காடியுடன் சேர்ந்து உப்பைக் கொடுத்தல், சிவப்புப் பூஞ்கத்தாளை நீலமாக்குதல் முதலியவை இதன் பண்புகள். ஒ acid. (வேதி)

alkali metals - கார உலோகங்கள்: தனிமவரிசை அட்டவணையிலுள்ள முதல் தொகுதித் தனிமங்கள் : லித்தியம், சோடியம் முதலியவை. (வேதி)

alkaline earth metals - காரப்புவி உலோகங்கள்: தனிம வரிசை அட்டவணையில் இரண்டாந் தொகுதித் தனிமங்கள். கால்சியம், பேரியம். மக்கனீசியம் முதலியவை. (வேதி)

allantois. பூழ்ப்பை: பறவை, ஊர்வன, பாலூட்டி முதலிய முதுகெலும்புள்ள விலங்குகள் முச்சுவிடுவதற்காகக் கருவில் காணப்படும் படலம். (உயி)

alleles, allelomorphs - இணை மாற்றுகள்: இரண்டிற்கு மேற்பட்ட மரபணுக்கள் (ஜீன்கள்) ஒன்றுக்கொன்று மாற்றாக அமைதல். (உயி)

allergy - ஒவ்வாமை: தூசி, தூள் முதலிய ஒவ்வாப் பொருள்களுக்கு உடல் உண்டாக்கும் இயல்பு நீங்கிய தடுப்புத் துலங்கல். (மரு)

allobar - அல்லோபார்: இயற்கையில் இல்லாத ஒரு தனிமத்தின் ஒரிமங்களின் (ஐசோடோப்புகளின்) கலவை. (வேதி)

alloy - உலோகக்கலவை: உலோகம் உலோகத்துடனோ, உலோகம் மற்றொரு அலோகத்துடனோ சேர்ந்து உண்டாவது. எ-டு. இன்வார். பித்தளை, வெண்கலம். (வேதி)

allograft - அயலொட்டு: ஒர் உறுப்பை ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் ஒட்டுதல். இதில் ஒரே மாற்றிப் பொருத்தலுக்குரிய எதிர்ப்புத் துண்டிகள் இரா. ஒ. autograft. (உயி)

alopathy - அயற்பண்டுவம்: இச் சொல் ஆங்கிலத்தில் அனிமன் (1755-1843) என்பவரால் உருவாக்கப் பெற்றது. இது ஒருநோய் நீக்கு முறை குணமாக்கு நிலைக்கு எதிரான நிலைமை இதில் உருவாக்கப்படுகிறது. இதனைச் செய்பவர் அயற்பண்டுவர் (அலொபதிஸ்ட்) எனப்படுவர். ஒ. homeopathy. (மரு)

allotropes அயலுருக்கள்: கெட்டிப் பொருள்களின் வேறுபட்ட இயல்பு வடிவங்கள் எ-டு. கரியின் வேற்றுருக்கள்: வைரம், கிராபைட்டு. (வேதி)

allotropy - அயல்வேற்றுருமை: இயற்பண்புகளில் மாறுபட்டுப் பல வடிவங்களில் இருக்கும் ஒரு தனிமம் தன் வேதிப்பண்புகளிலும் மூல அமைப்பிலும் மாறாமல் இருக்கும் இயல்பு. புறவேற்றுமை என்றும் கூறலாம். எ-டு. சாய்சதுரக் கந்தகம், ஊசிவடிவக் கந்தகம், களிக்கத்தகம். (வேதி)

alpha decay - ஆல்பா சிதைவு: கதிரியக்கச் சிதைவு. அணுக்கரு தானாக ஆல்பா துகள்களை உமிழும். (இய)

alpha particle - ஆல்பா துகள்: பல கதிரியக்கத் தனிமங்களால் உமிழப்படும் இம்மி. நேர்மின்னேற்ற(+)முடையது. ஈலியக் கருவோடு ஒத்தமையும் இரு அல்லணுக்கள் (நியூட்ரான்கள்) இரு முன்னணுக்கள் (புரோட்டான்கள்) ஆகியவற்றாலானது. (இய)

alpha rays - ஆல்பா கதிர்கள்: இவை விரைந்துசெல்லும் ஆல்பா துகள்களாலானவை. (இய)

alernation ofgenerations - தலைமுறை மாற்றம்: பூக்காத் தாவரங்களின் வாழ்க்கை வரலாற்றில் மாறி மாறி வரும் இரு தலைமுறைகள் ஒன்று சிதல் பயிர்த் தலைமுறை, (ஸ்போரோபைட்). மற்றொன்று பாலணுப் பயிர்த் தலைமுறை (கேமிடோபைட்). இவ்விரண்டும் அமைப்பிலும் இனப்பெருக்க முறையிலும் வேறுபடுபவை. எ-டு. பெரணி. இது ஒர் இருமயத் தாவரம். (உயி)

altimeter - உயரமானி: உயரத்தை அளக்கும் கருவி. வானூர்தியில் அமைந்திருப்பது. (இய)

alum - படிகாரம்: இணைதிறன் மூன்றுள்ள அலுமினியம், குரோமியம், இணைதிறன் ஒன்றுள்ள பொட்டாசியம், சோடியம் முதலிய தனிமங்களின் இரட்டைச் சல்பேட்டு எ-டு. பொட்டாஷ் சல்பேட்டும் அலுமினியம் சல்பேட்டும் சேர்ந்தது. K2SO4Al3(SO4)3 24H2O. (வேதி)

alumina - அலுமினா: Al2O3 அலுமினியம் ஆக்சைடு. வடிவமற்ற வெண்ணிறப் பொருள். இயற்கையில் குருத்தக் கல்லாகக் கிடைப் பது. உலைகளுக்குக் கரை அமைக்கவும் உருக்கற்கள் செய்யவும் பயன்படுகிறது. (வேதி)

aluminium - அலுமினியம்: Al எடை குறைவான வெள்ளி போன்ற உலோகம் வானூர்தித் தொழில், தானியங்கித் தொழில் ஆகியவற்றில் முதன்மையாகப் பயன்படுவது. (வேதி)

aluminium bronze - அலுமினிய வெண்கலம்: உலோகக் கலவை, சிலைகள், நாணயங்கள், சமையல் பாண்டங்கள் முதலியவை செய்யப் பயன்படுவது. (இய)

aluminium paint - அலுமினிய வண்ணக் குழைவு: அலுமினிய நிறமியைப் பூசெண்ணெயில் கலந்து தயாரிக்கப்படுவது. கதிர்வீச்சை மறித்து வெப்பக் காற்றிலும் தொட்டிகளிலும் வெப்பத்தை நிலைநிறுத்துவது. (வேதி)

aluminium paste - அலுமினியப் பசை: நன்கு நுணுக்கிய அலுமினியத் தூளை எண்ணெயில் கலந்து இப்பசை செய்யப்படுகிறது. அலுமினிய வண்ணங்களில் பயன்படுவது. (வேதி)

aluminium soap - அலுமினியச் சவர்க்காரம்: உயர் கார்பாக்சிலிகக் காடி, அலுமினியம் ஆகியவற்றின் உப்ப. நீரில் கரையாது. எண்ணெயில் கரையும். மசை, வண்ணங்கள், பூசசெண்ணெய் ஆகியவற்றில் பயன்படுகிறது. (வேதி)

alveolus - 1 பற்குழி பல்லில் உள்ள குழி. 2. மூச்சுச்சிற்றறை துரையீரலில் உள்ள சிறிய அறைகள். (உயி)

amalgam - இரசக் கலவை: இரும்பு தவிர்த்த ஏனைய உலோகங்களோடு பாதரசம் சேரும் பொழுது உண்டாகும் கலவை. (வேதி)

amber - நிமிளை: மஞ்சள் நிறப் படிவ உயிர்ப்பிசின். அணிகலன்களில்பயன்படுவது. (வேதி)

americium - அமெரிசியம்: Am அதிக நச்சுத் தன்மையுள்ள கதிரியக்கத் தனிமம். (வேதி)

amino acids - அமினோ காடிகள்: இன்றியமையா வேதிப்பொருட்கள். கார்பாக்சிலிக் காடிகளின் வழிப் பொருள்கள். இவை எண்ணிக்கையில் 20. பயன் மிகுந்தவை 10. பயன் குறைந்தவை 10. (வேதி)

amino aciduria - அமினோ நீரிழிவு: அமினோகாடி குறைபாடு. இது ஒரு நோய். (மரு)

amitosis - நேர்முகப் பிரிவு: கண்ணறைப் பிரிவில் உட்கரு நேரடியாகப் பிளவுறுதல். ஒ. mitosis. (உயி)

ammeter - மின்னோட்டமானி: மின்னோட்டத்தை அளக்குங் கருவி. (இய)

ammonal - அம்மோனல்: அம்மோனியம் நைட்ரேட், தூள் அலுமினியம், முந்நைட்ரோடுலின் (டி.என்.டி) ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை, வெடிமருந்து. (வேதி) ammonia - அம்மோனியா: NH3 நச்சில்லா வளி, காரமணம் கொண்டது. வெடிமருந்து உரம் முதலியவை செய்யப் பயன்படுதல். (வேதி)

ammonication - அம்மோனியா உண்டாதல்: பேசிலஸ் மைக்காய்டிஸ் முதலிய குச்சியங்களால் இறந்த கரிப் பொருட்கள் சிதைக்கப்படும் பொழுது அம்மோனியா உண்டாகிறது. (உயி)

ammonifying bacteria - அம்மோனியாவாக்கும் குச்சியங்கள்: புரதத்தையும் மற்றும் வெடிவளி (நைட்ரஜன்) ஊட்டமுள்ள பொருள்களையும் சிதைத்து அம்மோனியாவை உண்டாக்குபவை. (உயிர்)

ammonium bicarbonate - அம்மோனியம் பைகார்பனேட்: NH4HCO3. வெண்ணிறப்படிகம். சமையல் தூள். (வேதி)

ammonium carbonate - அம்மோனியம் கார்பனேட்: (NH4)2 CO3. அம்மோனிய நெடியுள்ள வெண்ணிறப் பொருள். நீரில் கரையக் கூடியது. முகரும் உப்பு. ரொட்டித் தொழிலிலும், சாயத் தொழிலிலும் பயன்படுவது. (வேதி)

ammonium nitrate - அம்மோனியம் நைட்ரேட்: NH4NO3. நீர் ஈர்க்கும் உப்பு நிறமற்றது. படிக மற்றது. நீரில் நன்கு கரையக் கூடியது. ஆல்ககாலிலும் நன்கு கரைவது. வெடிமருந்து. உரம். (வேதி)

ammonium phosphates - அம்மோனியம் பாஸ்பேட்டுகள்: (NH4)2HPO4, (NH4)2PO4 பாசுவரிகக் காடியிலிருந்து கிடைக்கும் உப்புகள். சிறந்த உரங்கள். (வேதி)

ammonium sulphate - அம்மோனியம் சல்பேட்: (NH4)3 SO4. வெண்ணிறப்படிகம். உரம். (வேதி)

amniocentesis - பனிக்குடத் துளைப்பு: பேறுகால மகளிரிடமிருந்து பனிக்குடநீர், ஆய்வுக்காக எடுக்கப்படுதல். (மரு)

amnion- பனிக்குடம்: நிலம் வாழ் முதுகெலும்பிகளின் கருப்படலம், இது கருவினைப் பாதுகாப்பது. (உயி)

amoeba - அமீபா: உருமாறி. புரோட்டோசோவா (முதல் தோன்றி) பிரிவைச் சார்ந்த ஒற்றைக் கண்ணறை உயிரி. நன்னிரிலும், கடல் நீரிலும் வாழ்வது. ஒற்றைக் கண்ணறையே உடற்செயல்கள் யாவற்றையும் நிறைவேற்றுகிறது. விலங்குகளில் முதலில் தோன்றியது இப்பிரிவைச் சார்ந்த உயிரிகள் ஒட்டுண்ணிகள். (உயி)

ampere - ஆம்பியர்: மின்னோட்ட அலகு: பிரஞ்சு இயற்பியலார் (1775-1836) ஆம்பியர் பெயரால் அமைந்தது. ஓர் ஒம் தடைக்கு எதிராக ஒர் ஒல்ட் மின்னியக்கு விசை அளிக்கும் மின்னோட்டம் இது. (இய) ampere hour - ஆம்பியர் மணி: மின்னேற்றத்தின் செயல் முறை அலகு. 3600 கூலுாம்கள். (இய)

Ampererule- ஆம்பியர் விதி: இது மின்காந்த விதி. ஆம்பியர் பெயரால் அமைந்தது. கடத்தி ஒன்றின் வழியாக மின்னோட்டம் செல்லும் போது, மின்னோட்டத் திசையில் காந்த ஊசியை நோக்கி ஒருவர் நீந்துவதாகக் கொள்க. இப்பொழுது காந்த ஊசியின் வடமுனை அவர் இடப்புறமாக விலகும். (இய)

ampere turn - ஆம்பியர் திரும்புகை: காந்த இயக்கவிசையின் எல்லை அலகு. ஒரு கடத்தி ஒரு தடவை திரும்பும் பொழுது அதன் வழியாகச் செல்லும் ஒர் ஆம்பியர் மின்னோட்டம் உண்டாக்கும் காந்த இயக்கு விசைக்கு இது சமம். (இய)

amphiaster - இரு நிலை வடிவி: கண்ணறைப் பிரிவின் பொழுது தோன்றும் உரு. இது விண்மீன் போன்ற இரு வடிவங்களாலானது. கதிரினால் இணைக்கப் பட்டிருப்பது. (உயி)

amphibia - இரு நிலை வாழ்விகள்: நீரிலும் நிலத்திலும் வாழும் மண்டை ஒட்டு உயிர்கள். இளரி நிலையில் செவுள்களாலும் முதிரி நிலையில் நுரையீரலாலும் தோலாலும் முச்சுவிடுபவை. மாறு வெப்ப நிலை விலங்குகள், எ-டு, தவளை, தேரை. (உயி)

amphimixis. இருநிலைக் கலப்பு: பாலணுக்கள் சேர்வதால் ஏற்படும் உண்மைக்கலப்பு. ஒ. apomixis. (உயி)

amphioxus - ஆம்பியாக்சஸ்: இருமுனைக் கூர் உயிரி, ஈட்டி உயிரி என்றும் பெயர். புழுவிற்கும், மீனிற்கும் இடைப்பட்ட முதுகுத் தண்டுடைய விலங்கு. 2 அங்குல நீளம் உள்ளது. மண்ணில் புதைந்து வாழ்வது. (உயி)

amphipathic - இரு நிலை விரும்பி: வேற்று நிலை விரும்பிகள். நீர் வெறுப்பன, நீர் விரும்புவன என்று மூலக்கூறுகள் பிரிந்திருக்கும் நிலை. (வேதி)

amphitene - ஈரிணை நிலை: குன்றல் பிரிவில் ஒரு நிலை. இதில் சுருள் இழைகள் இரண்டிரண்டாக இணையும். (உயி)

amphitoky- இருநிலைக் கன்னிப் பிறப்பு: ஆணும் பெண்ணும் கன்னி முறையில் இனப்பெருக்கம் செய்தல். (உயி)

amphitrichous - இரு நீளிழை கொண்ட: கண்ணறையின் ஒவ்வொரு முனையிலும் இரு நீண்ட இழைகள் இருத்தல் எ-டு. குச்சியங்கள். (உயி)

amphoteric oxide - ஈரியல்பு ஆக்சைடு: இது எதிர்ப்பண்புகளைக் கொண்டது. அதாவது காடியாகவும் உப்பு மூலியாகவும் வினையாற்றுத்திறன். எ-டு. துத்தநாக ஆக்சைடு. (வேதி)

amplification - மின் பெருக்கல்: மின்னோட்டங்களின் அல்லது ஒலிகளின் வலிமையை மிகுத்தல். இதனைச் செய்யுங்கருவி. மின்பெருக்கி. (இய)

amplifier - மின்பெருக்கி: பா. amplification. (இய)

amplitude - வீச்சு: அலைப்பண்புகளில் ஒன்று. (இய)

amplitude modulation - வீச்சுப் பண்பேற்றம்: வானொலிச் செலுத்துகையில் எளிய வகைப் பண்பேற்றம். (இய)

ampulla - கோளப் பிதுக்கம்: செவி அரைவட்டக் குழலின் படல நீட்சி, குடுவை போன்றது. (உயி)

amylase - அமைலேஸ்: கணைய நொதி. மாவுப்பொருள் எனும் ஸ்டார்ச்சை சர்க்கரையாக்குவது. (உயி)

anabolism - வளர்மாற்றம்: வளர்சிதைமாற்றத்தின் ஆக்க நிலை. இதில் திசுக்கள் முன்கணியத்தால் உண்டாக்கப்படுகின்றன. எ-டு. தன்வயமாதல் அதாவது, செரித்து உறிஞ்சப் பட்ட உணவு திசுவதால். பா. metabolism. (உயி)

anaemia - குருதிச் சோகை: குருதியில் சிவப்பணுக்கள் குறைவதால், முதன்மையாக இரும்பூட்டம் இல்லாத நிலை, சோர்வு ஆகியவை இதன் குறிப்பிடதக்க இயல்புகள். (உயி)

anaerobe - காற்றுப்பருகா உயிரி: தான் வாழ காற்றுத்தேவை இல்லாத உயிர். அதாவது உயிர்வளி தேவையில்லை எ.டு. சில குச்சியங்கள். ஒ. aerobe. (உயி)

anaerobic respiration - காற்றுப்பருகா மூச்சு: ஈஸ்ட் குச்சியங்கள், தசை முதலியவற்றில் நடைபெறும் மூச்சு. கரிமப் பொருள் முழுவதும் உயிர்வளி ஏற்றம் பெறுவதில்லை ஆகவே, உண்டாகும் ஆற்றலும் குறைவு. ஒ. aerobic respiration. (உயி)

anaesthesia- உணர்வகற்றல்: வலி உணர்வை நீக்கும் நிலை. அறுவையின் பொழுது இதனைக் கொக்கேன், குளோரோபாம் முதலிய மருந்துகள் மூலம் உண்டாக்கலாம். (மரு)

anaesthetics - உணர்வகற்றிகள்: அறுவையின் பொழுது வலியை நீக்கும் மயக்க மருந்துகள் எ-டு: கொக்கேன், குளோரோபாம். (மரு)

anaesthetist - உணர்வகற்றுநர்: மயக்க மருத்து மூலம் வலியை நீக்கும் மருத்துவர். (மரு)

anal glands - கழிவாய்ச் சுரப்பிகள்: ஆசனவாய்க்கருகிலுள்ள புறப்படைச் சுரப்பிகள். (உயி)

analogous organs - ஒப்புமை உறுப்புகள்: பற்றுக் கம்பிகள் தோன்றிய நிலையில் வேறுபட்டாலும், அவற்றின் வேலை ஒன்றே. பாசிபுளோரா, பட்டாணி ஆகிய தாவரங்களில் பற்றி ஏறுதலே பற்றுக்கம்பிகளின் வேலை. (உயி)

analogous processes - ஒப்புமை முறைகள்: அசையாப் படங்கள், கேள்விளைவுகள், உருப்பதிவுப் படப்பிடிப்புகள் முதலிய எல்லாம் சேர்ந்து பன்ம ஊடகங் களின் மாயத்தை உருவாக்குபவை. (தொ. து)

analogy - வேலை ஒப்புமை: உயிர்கள் தாம் செய்யும் வேலையில் ஒற்றுமை கொண்டதாக இருத்தல் எ-டு. பறவைச் சிறகுகளும், பூச்சி இறகுகளும். இவ்விரண்டிற்கும் ஒற்றுமை பறத்தலில் மட்டுமே. தோற்றத்தில் இல்லை. ஒ.homology. (உயி)

analysis - பகுப்பு: ஒரு மாதிரியின் பகுதிப்பொருள்களை உறுதி செய்யும் முறை. இது இருவகைப் படும். 1 பருமனறிபகுப்பு: அது என்ன? என்னும் வினாவிற்கு விடையளித்தல் 2. அளவறிபகுப்பு: இப்பகுதியின் எவ்வளவு பொருள் அதில் இருக்கிறது? என்னும் வினாவிற்கு விடையளித்தல். (வேதி)

anandrous - தாளற்ற: மகரந்தத் தாள்கள் இல்லாத பூக்கள். (உயி)

anaphase - பின்னிலை: இழைப் பகுப்புக் கண்ணறைப் பிரிவில் ஒரு வகை. மூன்றாம் நிலை. இதைப் பிரிநிலை என்றும் கூறலாம். பா. cell division. (உயி)

anastomosis - குழாய்வாய் இணைப்பு: இரண்டிற்கும் மேற்பட்ட குழாய்கள் சேர்தல். தமனிகள், சிரைகள் அல்லது மற்றக் குழாய்கள் சேர்வதால் தொடர்பு வழி உண்டாதல். (மரு)

anatomy - உள்ளமைவியல்: உயிர்களைப் பிளந்து பார்க்க உள்ளே தெரியும் உறுப்புகளை ஆராயுந்துறை. மருத்துவத்தில் சிறப்பு உடையது. (உயி)

androecium - மகரந்த (பூந்து) வட்டம்: மகரந்தத்தாள், மகரந்தப்பை முதலியவற்றைக் கொண்ட பூவின் மூன்றாம் வட்டம். பயனுறு உறுப்பு. ஒ. gynoecium. (உயி)

anemometer - காற்றுமானி: காற்று விளைவை அளக்கப் பயன்படுங்கருவி. (இய)

anemophily - காற்றுக் கவர்ச்சி: தாவரங்களில் காற்றினால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை எ-டு: நெல், தென்னை. (உயி)

aneroid barometer - நீர்மமிலாப் பாரமானி: பாரமானியில் ஒருவகை. எங்கும் எளிதில் எடுத்துச் செல்லலாம். நெம்புகோல் அடிப்படையில் வேலை செய்வது காற்றழுத்தத்தை அளக்க உதவுவது. (இய)

angiospermae - விதைத் தாவரங்கள்: இவற்றில் சூல்பையில் விதைகள் அமைந்திருக்கும். மா, பலா. (உயி)

angle of incidence - படுகோணம்: படுகதிருக்கும் செங்குத்துக் கோட்டுக்கும் இடையில் உள்ள கோணம் (இய)

angle of momentum - கோண உந்தம்: ஒரு பொருளின் கோண நேர் விரைவு, சுழலச்சில் அதன் நிலைமம் ஆகிய இரண்டின் பெருக்குத் தொகை. L= lω. L-கோண உந்தம் l-நிலைமைத் திருப்புத்திறன் ω-கோண நேர்விரைவு. (இய) angle of reflection - மறிப்புக் கோணம்: மறிப்புக் கதிருக்கும் செங்குத்துக் கோட்டுக்கும் இடையிலுள்ள கோணம். (இய)

angle of refraction - விலகு கோணம்: விலகுகதிருக்கும் செங்குத்துக் கோட்டுக்கும் இடையில் உள்ள கோணம். (இய)

anhydride - நீரிலி: நீரற்ற பொருள் எ-டு. கரி இருவளி, கந்தக முவாக்சைடு. (வேதி)

aniline - அனிலைன்: C6H5NH2: எண்ணெய் போன்ற நீர்மம். நிறமற்றது. நச்சுத்தன்மை உள்ளது. அருவருக்கும் மணம். நீரில் கரையாது. சாயங்கள், மருந்துகள் செய்யப் பயன்படுதல். (வேதி)

animal - விலங்கு: கரிமப் பொருள் அல்லது பிற உயிர்களை உணவாகக் கொள்கின்ற உயிரி. கடற்பஞ்சு தவிர, ஏனையவை இடம் பெயர்பவை. விலங்குக் கண்ணறை, கண்ணறைப் படலத்தாலானது. பச்சையம் இல்லாததால் தன் உணவைத் தானே தயாரிக்க இயலாது. வளர்ச்சி வரம்புடையது. ஒ. plant. (உயி)

animal charcoal - விலங்குக் கரி: 10% கரியும் 90% கனிம உப்பும் கலந்த பொருள். முதன்மையாக இருக்கும் கனிம உப்பு கால்சியம் பாஸ்பேட். நிறம் நீக்கி. (வேதி)

animalcule - நுண்விலங்கு: வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத விலங்குச் சிற்றுயிரி, எ-டு. அமீபா. (உயி)

animal pole - கருநோக்கு முனை: கருவளர் முனையாகும். முட்டையில் அண்மையில் கரு அமைந்திருக்கும் பகுதி. வழக்கமாக, இது கருவிலகு முனைக்கு எதிராக இருக்கும். ஒ.vegetable pole. (இய)

anion - எதிரயனி: எதிர்மின்னேற்றங்கொள்ளும் அயனி. அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுடன் மின்னணுக்கள் சேர்வதால் உண்டாவது. மின்னாற்பகுப்பில் எதிரயனிகள் நேர்முனை நோக்கிச் செல்பவை. ஒ. cation. (இய)

anisaldehyde - அனிசல்டிகைடு: எண்ணெய் போன்ற நீர்மம். நிறமற்றது. ஒப்பனைப் பொருள்களிலும் நறுமணப் பொருள்களிலும் பயன்படுதல். (வேதி)

anisogamy - வேற்றுக் கலப்பு: அயற்கலப்பு. அளவு வேறுபாடுடைய இரு பாலணுக்கள் சேர்தல். அதாவது முட்டை பெரியதாகவும் விந்து சிறியதாகவும் இருக்கும். (உயி)

anisole - அனிசோல்: CH3OC6H5 நறுமணமும், நிறமின்மையும் கொண்ட நீர்மம். நறுமணப் பொருள்களில் பயன்படுவது. (வேதி)

anisomerous - பகுதி வேற்றுமை: பூ வட்டங்களில் பகுதிகள் சமமற்றிருத்தல். (உயி)

anisophylly - வேற்றிலை நிலை: தண்டின் வேறுபட்ட பக்கங்களில் வேறுபட்ட இலைகள் தோன்றுதல் எ-டு. லைக்கோபோடய வகை. பா. heterophylly.(உயி)

anisotrophic - பண்பு வேற்றுமை: வேறுபட்ட இயற்பண்புகளைக் கொண்ட நிலை. ஒ. isotropic. (வேதி)

annealing - கட்டுப்படுத்தி ஆற்றுதல்: வெப்பப் பதப்படுத்தும் முறைகளில் ஒன்று. எஃகினைச் செஞ்சூடேற்றிப் பின்னர்க்குளிரச் செய்ய அது மென்மையாகும். (வேதி)

annelida - வளைய உடலிகள்: வளை தசைப் புழுக்கள். உடல் வளையங்களாலானவை. 14,000 வகைகள். திட்டமான உடற்குழி, உணவுக்குழி அமைந்திருக்கும். மண்புழு, அட்டை. (உயி)

annihilation - அழிந்தொழிதல்: ஒரு துகளும் அதன் எதிர் மின்னேற்றத்துகளும் ஒன்றுடன் மற்றொன்று மோதும் பொழுது சிதைதல். இதனால் உண்டாகும் அழிந்தொழிதல் கதிர்வீச்சை, ஒளியன்கள் அல்லது நடுவன்கள் எடுத்துச் செல்பவை. (இய)

annual - ஒரு பருவத் தாவரம்: தன் வாழ்க்கைச் சுற்றை ஓராண்டில் நிறைவு செய்யும் தாவரம். சூரியகாந்தி. ஒ. blennial, perennial (உயி)

annual ring - ஆண்டு வளையம்: ஒராண்டில் ஒரு தாவரத்தின் மரக்கட்டையில் சேரும் இரண்டாம் நிலைத் திசுவின் பெருக்கம். குறுக்கு வெட்டுப் பகுதியில் ஒன்றிற்கு மேற்பட்ட வளையங்கள் தெரியும். இவ்வளையம் மரத்தின் வயதை உறுதி செய்யப் பயன்படுவது. (உயி)

annular thickening - வளையத்தடிப்பு: வளைய வளர்ச்சி. முன் மரக்குழாய்கள் நுண்கடத்திகள் ஆகியவற்றின் உட்சுவரில் ஏற்படுவது. பா. xylem. (உயி)

annulus - வளையத் திசு: 1. பெசிடியோமைசிட் பூஞ்சையின் முதிர்ந்த வித்துறுப்பின் காம்பைச் சுற்றியுள்ள வளையத்தாலான திசு. 2. பெரணிச் சிதலகத்தில் காணப்படும் தனிவில் அல்லது கண்ணறை வளையம். இதுவே சிதல்கள் பரவக் காரணம். 3. பியுனேரியா முதலிய மாசிகளில் செவுள் முடியிலிருந்து புறத்தோலைப் பிரிக்கும் கண்ணறை வளையம் 4. கண்டம்: மண்புழுவிலுள்ள வளைய உறுப்பு.

anode - நேர்மின்வாய்: எதிரயனிகளைக் கவரும் முனை. ஒ cathode (இய)

anodizing - நேர்முனை ஏற்றம் செய்தல்: அலுமினியம் அல்லது அலுமினிய உலோகக் கலவையில் அலுமினிய ஆக்சைடை மெல்லியதாகப் படிய வைத்தலுக்கு நேர்முனை ஏற்றஞ் செய்தல் என்று பெயர். இச்செயலுக்குட்பட்ட உலோகம் மின்சாரத்தைக் கடத்தாது. அரிமானத்தை எதிர்க்கும் வலிமை கொண்டது. (வேதி)

anomalous expansion - முரண்படு பெருக்கம்: குறைந்த வெப்பநிலையினால் பருமன் உயர்தல். தன் வெப்பநிலை உயரும் பொழுது பெரும்பான்மை நீர் தங்கள் பருமனில் அதிகமாதல், வெப்ப நிலை உயரும் பொழுது நீர்மத்தின் அடர்த்தி குறையும். இருப்பினும் நீர் மட்டும் முரண்படு நடத்தையுள்ளது. -0.4° செ.க்கு இடையில் வெப்பநிலை உயர்விற்கேற்ப அடர்த்தி அதிகமாகும். (இய)

anomaly - முரண்படு கோணம்: நீள்வட்டச் சுற்று வழியிலுள்ள கோள் ஒன்றின் நிலையை உறுதி செய்யப் பயன்படுங் கோணம். (வானி)

antacid - நடுநிலையாக்கி: காடியை நடுநிலையாக்கும் பொருள். எ-டு. சோடியம் இரு கார்பனேட் (வேதி)

ants - எறும்புகள்: சமூகப்பூச்சிகள், சிறகற்றவை, சுறுசுறுப்பானவை. உணரிகள் உண்டு. மிகக் குறுகிய வயிறு சுருக்கத்தைக் கொண்டது. வீட்டுத் தொற்றுயிர்கள். (உயி)

antennae-உணரிகள்: 1. தலையில் பொருந்தி இருக்கும் கணுக்காலிகளின் ஒட்டுறுப்புகள் (உயி) 2. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் அலைகளைப் பெறும் பகுதிகள். (இய)

anterior - முன்புறம்: முன்முனை (பூ, தலை). அடிப்பக்கம், வயிற்றுப் பக்கம், (மனிதன்) ஒ. dorsal, posterior, ventral. (உயி)

anther - மகரந்தப்பை: பூந்துப்பை, மகரந்தத்தாளுக்கு மேலுள்ள பகுதி. மகரந்தத்துளை உண்டாக்குவது. இத்துளில் ஆண் அணுக்கள் இருக்கும். (உயி)

antheridium - ஆணியம்: பாசிகள், மாசிகள், பெரணிகள் ஆகிய தாவரங்களில் காணப்படும் ஆண் இனப்பெருக்க உறுப்பு. இது ஆண் அணுக்களை உண்டாக்குவது. ஒ. archegonium. (உயி)

anthocyanin - ஆந்தோசையனின்: குளுகோசைடு என்னும் தாவர நிறமி. (உயி)

anthophore - பூத்தாங்கி புல்லி வட்டத்திற்கும் அல்லி வட்டத்திற்கும் இடையே பூத்தளம் நீட்சியடைதல். (உயி)

anthotaxy - பூவமைவு: பா. inflorescence. ஒ. phyllotaxy. (உயி)

anthracene - ஆந்தரசின்: C14H10 வெண்ணிறப்படிகம். சாயங்களை அளிப்பது. (வேதி)

anthracite - அனல்மிகு நிலக்கரி: இதில் கரி 95%. தீச்சுடர் புகையின்றி எரிந்து, அதிக வெப்பத் தைத்தரும் எரிபொருள். நிலக்கரியின் மூன்று வகைகளுள் ஒன்று. ஏனைய இரண்டு பழுப்பு நிலக்கரி, பொது நிலக்கரி. (வேதி)

antibiosis - உயிர் எதிர்ப்பு வாழ்வு: உயிரிகளுக்கு இடையேயுள்ள இயைபு, அவற்றில் ஒன்றிற்குத் தீங்காக அமைதல். இது ஒரு தடையே. பா. symbiosis. (உயி)

antibiotics - உயிரி எதிர்ப்பிகள்: கரிமச் சேர்மத் தொகுதிகள். அமைப்பில் வேறுபடுபவை. நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுபவை. ஏனைய நுண்ணுயிரிகளின் செயல்களைத் தடை செய்பவை, அல்லது அவற்றை அழிப்பவை. சிறந்த எடுத்துக் காட்டு பெனிசிலின் இதனை அலெச்சாண்டர் பிளமிங் 1928இல் கண்டுபிடித்தார். ஏனையவை ஸ்டெப்டோமைசின், ஆரியோமைசின், டெராமைசின். (உயி)

antibody - எதிர்ப்புப் பொருள்: வெளிப்பொருள் உண்டாக்கும் வினைக்குத் துலங்கலாக உயிரிகளில் உண்டாக்கும். பாதுகாப்புப் பொருள். இதனைத் தடுப்புப் பொருள் என்றும் கூறலாம். இது ஒரு புரத மூலக்கூறே. வெள்ளணுக்கள் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்கவல்லவை. பா. antigen. (உயி)

antichlors - குளோரின் நீக்கிகள்: சலவைத்தூளால் வெளுக்கப்பட்ட துணிகளிலுள்ள அதிகப்படியான குளோரினை நீக்கும் வேதிப் பொருள்கள். எ-டு. சோடியம் தயோ சல்பேட், கந்தக இரு ஆக்சைடு, சோடியம் சல்பேட்டு. (வேதி)

antidote - மாற்று: நச்சுமுறி. காடி நஞ்சுக்கு மாற்று. சோடியம் இரு கார்பனேட். (வேதி)

antigen - எதிர்ப்புத்தூண்டி: சாதக நிலைகளில் உயிர் எதிர்ப்புப் பொருளைத் தூண்டும் புரத மூலக்கூறு. இது ஒரு குறிப்பிட்ட எதிர்த் துலங்கல், குச்சியங்கள், நச்சியங்கள் மூலம் உடலுக்கு வருவது. எ-டு. டிவேக் எதிர்ப்புத் தூண்டிகள். பா. antibody. (உயி)

antimater - எதிர் ஏற்றப் பொருள்: புவிக்கு அப்பாலுள்ள கற்பனைப் பொருள். புவியிலுள்ள பொருள் போன்றே துகள்களைக் கொண்டது. ஆனால் துகள்கள் எதிர்மின்னேற்றங்களைக் கொண்டவை. அல்லணுவாகி (நியூட்ரான்) இருத்தல், காந்த முனைத்திறன் கொண்டிருக்கும். (இய)

antimony - ஆண்டிமனி: Sb. நொறுங்கக்கூடிய வெள்ளி நிற உலோகம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் அரிதில் கடத்துவது, அச்சு உலோகம் செய்யப் பயன்படுவது. (வேதி)

antioxidants - உயிர்வளி ஏற்றித் தடுப்பிகள்: வண்ணங்கள், ரப்பர், பிளாஸ்டிக்குகள் ஆகியவற்றில் உயிர்வளி ஏற்றுவதால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்கும் பொருள்களாகப் பயன்படுவை. (வேதி)

antinode - எதிர்க்கணு: நிலையான அலைக்கோலத்தில் காணப்படும் பெரும் அதிர்வுப்புள்ளி. ஒ. node. (இய)

antiparticle - எதிர் ஏற்றத்துகள்: ஒரே நிறையும் சுழற்சியும் கொண்டது. எ-டு. முன்னணு (புரோட்டான்). மின்னேற்றம் +1 அலகு. எதிர் ஏற்ற முன்னணு (ஆண்டி புரோட்டான்). மின்னேற்றம் -1 அலகு. (இய)

antipyretic - அனல்குறைப்பி: காய்ச்சலின் போது வெப்ப நிலையினைக் குறைக்கும் மருந்து. (உயி)

antisepsis - புரையஎதிர்ப்பு உண்டாக்கல்: நச்சுயிர் வளர்ச்சியை அழித்தல் அல்லது திசு நோய்த் தொற்றலைத் தடுத்தல். அறுவையில் இம்முறையினை 1880இல் லார்டு லிஸ்டர் கார்பாலிகக் காடியை முதன்முதலாகப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தினார். (உயி)

antiseptics - புரைய எதிர்ப்பிகள்: உயிர்த்திசுக்களில் நுண்ணுயிர்கள் வளர்வதைத் தடுக்கும் பொருள்கள் - டெட்டால், அயோடின். (உயி)

antioxin - நச்சு எதிர்ப்பி: நஞ்சை நடுநிலையாக்கும் பொருள். இது ஒர் எதிர்ப்புப் பொருள். நஞ்சுகளை ஊசி மூலம் செலுத்தி, அவற்றினால் உண்டாகும் துலங்கலுக்கேற்ப இந்நஞ்சு உண்டாக்கப்படுவது. (உயி)

anus - கழிவாய்: ஆசனவாய், உணவு வழியின் பின் திறப்பு. இதன் வழியே கழிவு வெளியேறும். (உயி)

aorta - பெருந்தமனி: உடலில் உள்ள பெருங்குருதிக் குழாய். பல தமனிகளாகப் பிரிந்து குருதியினை இதயத்திலிருந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது. (உயி)

aperiodic - அலைவற்ற, அதிர்வற்ற: கால நிகழ்வற்ற (இய)

aperture - குறுந்துளை: ஒளிக் கருவிகளில் ஒளியினை உள்விடும் திறப்பு. எ-டு. ஒளிப்படப் பெட்டி, துண்ணோக்கி. (இய)

apetalous - அல்லியிலா: சில தாவரப் பூக்களில் அல்லிகள் இல்லாத நிலை. (உயி)

apheion - கதிரவன் சேய்மை நிலை: பகலவனின் மையத்திலிருந்து பெருந்தொலைவிலுள்ள கதிரவன். நிலாவின் சுற்றுவழிப் புள்ளி. (வானி)

aphid - அசுவனி: தாவரப் பேன் 1-5 மி.மீ நீளமுள்ளது. பேரிக்காய் வடிவம். மெல்லுடல். நீண்ட கால்களும் உணரிகளும் உண்டு. (உயி)

apiary - தேனீ வளர்ப்பு: தேன் திரட்டவும் தேன் மெழுகு எடுக்கவும் தேனிக்கள் வளர்த்தல். (உயி)

apical meristem - நுனி வளர்த்திசு: பா. meristem.

apocarpous - இணையாச் சூலகம்: தாவரச் சூலகத்தில் சூல் இலைகள் தனித்தனியாக இருத்தல். எ-டு. மனோரஞ்சிதம். (உயி)

apocyntion - திங்கள் சேய்மை நிலை: திங்கள் நிலாவின் சுற்று வழியில் திங்களிலிருந்து அமையும் அப்பால் நிலை. (வானி)

apogamy - அல்கலப்பு: ஒரும (n) சிதல் தாவரம் பாலணுத் தாவரத்தின் எப்பகுதியிலும் வளர்தல், இதில் பாலணுக் கலப்பு இல்லை. (உயி)

apogee - புவிச்சேய்மை நிலை: புவி மையத்திலிருந்து பெருந்தொலைவிலுள்ள புவி நிலாச் சுற்று வழிப் புள்ளி. எ-டு செயற்கை நிலாவின் புள்ளி. ஒ. perigee.

Apollo - அப்பல்லோ: மனிதனைத் திங்களுக்கு அனுப்பிய அமெரிக்க வானவெளிக்கப்பல் (1968-1972) அப்பல்லோ திட்டத்தில் நடைபெற்றது. (வா.வெ.அறி)

apomorphine - அபோமார்பின்: C17H17NO2. மார்பைனிலிருந்து பெறப்படும் படிக வடிவக் கராமம். வலி நீக்கி. (வேதி)

apparatus - ஆய்கருவி: ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பயன்படும் கருவி. (இய)

appendage - ஒட்டுறுப்பு: இணையுறுப்பாக உள்ள புற உறுப்பு. இவ்வுறுப்பு கணுக்காலிகளில் உண்டு. இணை இணையாக இருப்பது. இணையின் ஒவ்வொரு பகுதியும் கணுக்களால் ஆகியிருக்கும். இக்கணு அமைப்பே கணுக்காலிகளுக்கு அப்பெயர் வரக்காரணம். (உயி)

appendix - குடல் வால்: பெருங்குடலில் குடல் பையின் கீழ் முனையிலுள்ள விரல் போன்ற உறுப்புக்குக் குடல் வால் என்று பெயர். இது பயனற்ற உறுப்பு. இது நோயுற்று வீங்குதலைக் குடல் வால் அழற்சி என்கிறோம். (உயி)

Apple - ஆப்பிள்: இந்தியச் செய்தித் தொடர்பு நிலா. (இய)

appliance efficiency - கருவி பயனுதிறன்: பா. efficiency. (தொ.நு)

application - பயன்பாடு: ஒன்று நம் வாழ்வில் நாள்தோறும் பயன்படுவதைக் குறிப்பது. இது நெறிமுறையாகவோ கருவியாகவோ இருக்கலாம். எ-டு. காற்றழுத்தத்தால் எழுதுகோல் எழுதுதல். செயற்கை நிலா வானிலை முன்னறிவிப்பிற்கும் செய்தித் தொடர்புக்கும் பயன்படுதல். (தொ.நு)

application programme - பயன்பாட்டு நிகழ்வரை. (தொ.நு)

application programmer - பயன்பாட்டு நிகழ்நிரல் நிரலர். (தொ.நு)

applications software - பயன்பாட்டு மென்பொருள், மென்னியம்: உயர்நிலை மென்பொருள். எ-டு. இருப்புக்கணக்குக் கட்டுப்பாடு. (தொ.நு)

applied science - பயன்படு அறிவியல்: நெறிமுறையை வாழ்க்கையில் பயன்படுத்துவது - மருத்துவம், பொறிஇயல். ஒ. basic science.

aprotic solvent - முன்னணு ஏற்காக் கரைப்பான்: முன்னணு அளிக்காத கரைப்பான். (வேதி)

apsides - வல வழி நிலைகள்: வானியல் சுற்று வழியிலுள்ள இரு நிலைகள். ஒன்று ஈர்ப்பு மையத்திற்கு அருகிலும் மற்றொன்று அதிலிருந்து விலகியும் இருத்தல். (வானி)

aqua fortis - வெடிகாடி: நைட்டிரிகக் காடி HNO3. (வேதி)

aquations - நீர்ம அயனிகள்: நீரியக் கரைசலிலுள்ள நீர்நிலை கொண்ட உலோக அயனிகள். (வேதி) aqua mirabilis - வியப்பு நீர்மம்ː இஞ்சி, சாதிக்காய் முதலியவற்றிலிருந்து பெறப்படும் வடித்தெடுப்பு. (வேதி)

aqua regia - அரச நீர்மம்: அடர் அய்டிரோ குளோரிகக்காடியும், அடர் நைட்டிரிகக் காடியும் 3:1 என்னும் வீதத்தில் சேர்ந்த கலவை. அதிக அரிப்புத் தன்மை உடையதால் பொன், பிளாட்டினம் ஆகிய உலோகங்களைக் கரைக்கப் பயன்படுகிறது. (வேதி)

aquarium - நீருயிர் வளர்ப்பகம்: தொட்டிகளில் நீர் ஊற்றி அவற்றில் நீர்வாழ் தாவரங்கள் அல்லது விலங்குகள் வளர்க்கப்படுதல். அறிவியல் பயிற்றுவதில் முதல்நிலை அறிவை அளிப்பதால் கல்வித் திட்டத்தில் சிறப்பிடம் பெறுவது. (உயி)

aqueous humour - கண் முன்நீர்: கண்ணில் விழிவெளிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையே உள்ள நீர். ஒளிக்கதிர் செல்லப் பயன்படுதல். ஒ. vitreous humour. (உயி)

arabinose - அராபினோக்ஸ் C5H10O5: நீரில் கரையக்கூடிய வெண்ணிறப் படிகம். ஐஞ்சர்க்கரை, கோந்துகளிலிருந்து பெறப்படுதல் அல்லது குளுகோசிலிருந்து பெறப்படுதல் அல்லது குளுகோசிலிருந்து செயற்கையாக உண்டாக்கல். குச்சிய இயலில் வளர்ப்புக் கரைசல். (வேதி)

arachnida - சிலந்தியங்கள்: கணுக்காலியின் ஒரு வகுப்பு. இதில் தேள், சிலந்தி முதலியவை அடங்கும்.

arachnoid membrane - சிலந்திப் படலம். பா. meninges. (உயி)

araeometer - ஒப்படர்த்திமானி: ஒப்படர்த்தியை அளக்கப் பயன்படுங் கருவி. இது ஒரு நீர் மானியே. (இய)

archaeopteryx - ஆர்க்கியாப்டிரிக்ஸ்: அழிந்தொழிந்த புதை படிவப் பறவை. ஊர்வனவற்றிற்கும் பறவைகளுக்கும் இணைப்பாக அமைவது. (உயி)

archegonium - பெண்ணியம்: பெரணிகளிலும் மாசிகளிலுமுள்ள பெண்ணுறுப்பு. ஒ. antheridium. (உயி)

Archimedes' principle - ஆர்க்கிமெடிஸ் நெறிமுறைː பா. buoyancy. (இய)

archiplasm - மூலக்கணியம்: விண்மீன் வடிவிகளையும் கதிர்களை யும் உண்டாக்கும் தனிச் சிறப்புடைய பொருள். இது கண்னறைப் பிரிவில் தோன்றுவது. பா. germ plasm. (உயி)

architectural acoustics - கட்டிட ஒலியியல்: அரங்கு ஒன்றினுள் ஒலி தெளிவாகக் கேட்பதற்குரிய நிபந்தனைகளை இத்துறை கூறுகிறது. (இய)

argentometer - வெள்ளியுப்புமானி: கரைசலிலுள்ள வெள்ளியின் அளவை அளக்கப் பயன்படுங் கருவி. இது ஒரு நீர் மானியே. (வேதி) argil - களிமண்: தூய அல்லது குயவர் களிமண். (வேதி)

argon -ஆர்கான்: Ar. ஒற்றையணு இயல்புள்ள மந்தவளி, காற்றுவெளியில் 0.95% உள்ளது. நீர்மக் காற்றிலிருந்து பகுத்து வடித்தல் மூலம் பெறலாம். 1804இல் ரலே, ராம்சே ஆகிய இருவரும் கண்டு பிடித்தது. மின் குமிழ்களிலும் ஒளி விளக்குகளிலும் நிரப்பப்படுவது. (வேதி)

argument - 1. வாதம்: முடிவுகாணத் தொடக்கமாக அமையும் முன் மொழிவு. 2. சார்பின் மாறி: சிக்கல் எண்ணின் ஒரு பகுதி. (கண)

arithmetic - எண்கணிதம்: எண்களைக் கையாளுவதற்குரிய திறன்களை ஆராயுந்துறை. எண்சார் செய்தியுள்ள சிக்கல்களைத் தீர்க்க இத்துறை உதவுவது. இதனால் எண் தொகுதி அமைப்பை அறியலாம். எண்களை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றவும் இயலும். எ-டு. பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுதல். (கண)

armature - கவரகம்: மின்னியக்கி அல்லது பிறப்பியின் பகுதி, முதன்மை மின்னோட்டத்தைக் கொண்டு செல்வது. இது சிறிய பிறப்பியில் சுழலும் கம்பிச் சுருளாகவும் பெரிய பிறப்பியில் நிலைக்கம்பிச் சுருளாகவும் இருக்கும். முறுக்குவிசை (டார்க்) கவர்சுருளில் செயற்பட்டுப் பளுவிற்கு எதிராக வேலை நடைபெற உதவுவது. பா. rotor, stator. (இய)

aromatic compound - நறுமணச் சேர்மம்: கரிமச் சேர்மத் தொகுதி தன் அமைப்பில் பென்சின் வளையங்களைக் கொண்டிருப்பது பென்சீன். (வேதி)

arousal - எழுச்சி: ஒரு விலங்கின் நடத்தைத் தூண்டல், விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருத்தல். (உயி)

arrowroot - கூவற்கிழங்கு: தூய ஸ்டார்ச் உள்ளது. எளிதில் செரிக்கக் கூடியது. (உயி)

arsenic - சவ்வீரம்: As. புறவேற்றுருக்கள் உள்ள தனிமம்: 1. மஞ்சள் சவ்வீரம் 2. கருஞ் சவ்வீரம் 3. சாம்பல் சவ்வீரம். சவ்வீரச் சேர்மங்கள் அதிக நச்சுத் தன்மை வாய்ந்தவை. ஆகவே பூச்சிக் கொல்லிகள் செய்யப் பயன்படுபவை. (வேதி)

artery - தமனி: பெருந் தமனியிலிருந்து பல கிளைகளாகப் பிரிந்து, இதயத்திலிருந்து உயிர்வளிக் குருதியை உடலின் பல பகுதி களுக்கும் எடுத்துச் செல்லும் குழாய். ஒ. vein. (உயி)

arthropoda - கணுக்காலிகள்: விலங்குலகின் பெருந்தொகுதி. கடின இணைப்புள்ள புற எலும்புக்கூடு உண்டு. கணுக்களால் இணைக் கப்பட்ட இணை இணையாக உள்ள கால்கள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ளன. எ-டு. கரப்பான். (உயி)

arthroscope - மூட்டுக்குழி நோக்கி: முட்டுக்குழியின் முன்பகுதிகளைப் பார்க்கப் பயன்படும் கருவி. (உயி)

artificial gold - செயற்கைப்பொன்: மஞ்சள் மாநிறத்துள். நீரில் கரையாது. காரச் சல்பைடுகளில் கரையும். போலிப் பொன்முலாம் பூசப் பயன்படுவது. (வேதி)

artificial insemination - செயற்கை விந்தேற்றம்: செயற்கை முறையில் விந்தினைப் பெண் கருப்பையில் செலுத்துதல். உயர்வகைக் கலப்பு விலங்குகளை உண்டாக்க இம்முறை பயன்படுவது. எ-டு. கறவை மாடுகள். (உயி)

artificial kidney - செயற்கைச் சிறுநீரகம்: குருதியினைத் தூய்மை செய்யச் சிறுநீரகத்தின் வேலையைச் செய்யுங் கருவி. (உயி)

Aryabhatta - ஆரியபட்டா: சோவியத்து உதவியுடன் இந்தியா ஏவிய முதல் செயற்கை நிலா. ஒ. Bhaskara. (வா.வெ.அறி)

asafoetida - பெருங்காயம்: பென்னல் குடும்பத் தாவரத்திலிருந்து பெறப்படும் பிசின். நரம்புக் கோளாறுக்குரிய மருந்துகளில் பயன்படுவது. சமையற்கலையில் நறுமணப் பொருளாகவும் பயன்படுவது. (உயி)

asbestos - கல்நார்: கூரை, குழாய் முதலியவை செய்யப் பயன்படுவது. (வேதி)

ascaris - நாக்குப் பூச்சி: குடலில் வாழும் வட்டப் புழு. (உயிர்)

ascites - நீர்ப்பெருவயிறு: உட்சூழ்படலக் குழியில் நீர்மம் திரண்டிருத்தல். cirrhosis. (மரு)

asexual reproduction - பாலிலா இனப்பெருக்கம். பா. reproduction. (உயி)

asphalt - கீல்காரை: ஒட்டக்கூடிய அரைக்கெட்டிப் பொருள். கறுத்த மாநிறம் கொண்டது. வண்ணங்களிலும் பூச்செண்ணெய்களிலும் பயன்படுவது. (வேதி)

asphyxia - மூச்சுத்திணறல்: மூச்சு நிற்றல். பலவகைப்படும். (மரு)

asprin - ஆஸ்பிரின்: அசெட்டைல் சாலிசிலிகக் காடி, உடல் வலிநீக்கி. (வேதி)

assimilation - தன்வயமாதல்: செரித்த உணவு சிறுகுடலில் உறிஞ்சப்பட்டுத் திசுக்களாக மாறுதல். இது வளர்மாற்றம். (உயி)

asteroids, planetoids, minor planets - சிறுகோள்கள்: இவை செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே காணப்படுபவை. வானவெளித்துருவிகள் இவற்றை நன்கு ஆராய்ந்துள்ளன. வானவெளிப் பயணத்திற்குத் தடையாய் இருப்பவை. (வானி)

asthma - ஈளை நோய்: மூச்சுத் திணறலோடு மூச்சு விடுதல். மூச்சு வலிப்பினால் வெளிமுச்சிலும் தொல்லை இருக்கும். (மரு)

astigmatism - குவியாப் பார்வை: கண் குறைபாடு, வில்லை மூலம் ஒளிக் கதிர்கள் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஒரே சமயத்தில் குவியாத நிலை. கதிர்கள் கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் செல்லும். (இய)

astronaut - வானவெளி வலவர்: வானவெளி வீரர், வீராங்கனை. ஒ. aeronaut.

astronautics - வானவெளி வலவியல்: வானவெளிப்பயணம் பற்றி ஆராயும் துறை. ஒ. aeronautics.

astronomical unit - வானியல் அலகு: கதிரவனுக்கும் புவிக்கும் உள்ள சராசரித் தொலைவு. கதிரவன் மண்டலத்திற்குள் அளவைகளை அளக்க வானியலில் தொலைஅலகாக உள்ளது. தோராயமாக அது 1.496 x 1011 மீட்டர் ஆகும். (இய)

astronomy - வானியல்: கதிரவன், கோள், விண்மீன் முதலிய வானப் பொருள்களை ஆராயுந்துறை. (இய)

astro-particle - வானவெளித் துகள். (வா.அறி)

astrophysics - வான இயற்பியல்: விண்வெளிப் பொருள்களின் இயல்பையும் அவற்றால் காற்று வெளியில் நடைபெறும் நிகழ்ச்சி களையும் ஆராயும் வானியல் சார்ந்த துறை. (இய)

atlas - பிடர் எலும்பு: முதுகெலும்பின் முதல் எலும்பு. தலை எலும்புக் கூட்டைத் தாங்குவது.(உயி)

atmospheric noise - காற்றுவெளி இரைச்சல்: காற்றுவெளித் தடையினால் வானொலி ஏற்பில் உண்டாகும் இரைச்சல் (இய)

atmospheric pressure - காற்றுவெளி அழுத்தம்: 760 மிமீ பாதரச கம்பத்தைத் தாங்குவது. எஸ்.ஐ. அலகு 101325 பாஸ்கல்கள். (இய)

atmospherics - மின்வெளியேற்றங்கள்: இவை காற்று வெளியில் உண்டாகி வானொலிப் பெறுவிகளில் கரமுரா என்னும் இரைச்சலை உண்டாக்கவல்லவை. (இய)

atoll - பவளத் தீவு: வட்டவடிவப் பவழ மலைத் தொடர். மைய உப்பங்கழிகளைச் சார்ந்திருப்பது. (பு.அறி)

atom - அணு: ஒரு தனிமத்தின் மிகச்சிறிய பகுதி. இதனை மேலும் எளிதாகப் பிளக்க இயலாது. வேதி வினையில் ஈடுபடுவது. இதிலுள்ள கரு அளப்பரிய ஆற்றல் நிறைந்தது. இதில் மூன்று துகள்கள் உள்ளன. 1. முன்னணு (புரோட்டான்) 2. அல்லணு (நியூட்ரான்) 3. மின்னணு (எலக்ட்ரான்). அணுக்கருவிலுள்ள மின்னணுக்களே ஒரு தனிமத்தின் வேதிவினையை உறுதி செய்கின்றன. ஒரு தனிமத்திற்கு இரண்டிற்கு மேற்பட்ட ஒரிமங்கள் (ஐசோடோப்ஸ்) உண்டு. (இய)

atom bomb - அணுக்குண்டு: அணுக்கருப்போர்க்கருவி. மிகப் பரந்த அழிவினை உண்டாக்குவது. கட்டுப்படுத்த இயலாத அணுக்கருப் பிளவினால் வெடிப்பு ஏற்படுவது. இஃது உருவாக ஐன்ஸ்டின் கொள்கை காரணமாக இருந்தது. முதல் அணுக் குண்டு 1945 ஆகஸ்டு 6 இல் ஜப்பானிலுள்ள ஈரோசிமாவில் போடப்பட்டது. அமெரிக்கா, உருசியா ஆகிய இருவல்லரசுகளிடம் அணுக்குண்டுகள் அதிகம் உள்ளன. பா. atomic reactor (இய)

atomicity - அணுக்கட்டெண்: அணுக்கள்சேர்ந்து மூலக்கூறுகள் உண்டாகின்றன. ஒரு தனிமத்தின் ஒரு மூலக்கூறில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை அத்தனிமத்தின் அணுக்கட்டெண் எனப்படும். இதிலிருந்து ஒரு தனிமத்தின் மூலக்கூறு வாய்பாட்டை எழுத இயலும் அவோ கடரோவின் கருதுகோளைப் பயன்படுத்தி நீர்வளி, உயிர்வளி, குளோரின் முதலிய பொதுவளிகளின் அணுக்கட்டெண்களைக் கணக்கிடலாம். (இய)

atomic clock - அணுக்கடிகாரம்: மிகத்துல்லியமான கடிகை. அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவற்றின் அதிர்வுகளிலிருந்து கால அளவு அடிப்படை அமைந்துள்ளது. (இய)

atomic energy - அணுவாற்றல்: பா. nuclear energy. (இய)

atomic heat - அணு வெப்பம்: ஒரு தனிமத்தின் வெப்ப எண், அணு எடை ஆகிய இரண்டின் பெருக்குத் தொகை.(இய)

atomic nucleus - அணுக்கரு: பா. atom. (இய)

atomic physics, nuclear physics - அணு இயற்பியல்: அணுவின் இயல்புகளை ஆராயுந்துறை. (இய)

atomic reactor - அணு உலை: அணுக்கள் பிரிவுறும் உலை. இதில் மின்னணுக்களின் எண்ணிக்கை கூடாமலும் குறையாமலும் இருக்கத் தகுந்த அமைப்புள்ளது. எளிதில் பிளவுறக்கூடிய யுரேனியம் -235 அணு ஆற்றலைப் பெற இது பயன்படுகிறது. இதில் உள்ள கரிக் கோல்கள் தொடரியக்கத்தைக் கட்டுப்படுத்துபவை. இவற்றை வெளியே இழுக்கத் தொடரியக்கம் அதிகமாகும். உள்ளே தள்ளக் குறையும். இவ்வடிப்படையிலே அணுக் குண்டு செய்யப்படுகிறது. (இய)

atomic theory - அணுக்கொள்கை: இது ஒரு கருதுகோள். ஒரே தனிமத்தின் எல்லா அணுக்களும் ஒன்று போல இருப்பவை என்பது கருத்து. பா. Dalton's atomic theory. (இய)

atomic volume - அணுப்பருமன்: திண்ம நிலையிலுள்ள ஒரு கிராம் அணு அடைத்துக்கொள்ளும் பருமன். அணுப்பருமன் = அணுஎடை அடர்த்தி. (இய)

atomic weight - அணு எடை: இது ஒரு தனிமத்தின் ஓர் அணு வின் எடைக்கும் 1/12 பங்கு கரி 12 ஒரிமத்தின் எடைக்குமுள்ள வீதமாகும். (இய)

atropine - அட்ரோபைன்: C17H23NO3 ஒரு காரமம் (ஆல்கலாய்டு). நிறமற்றது. படிகமற்றது. நச்சுத்தன்மையுள்ளது. மருத்துவத்தில் கண்பாவையை விரிவடையச் செய்யப் பயன்படுவது (உயி)

attenuation - செறிவொடுங்கல்: பொருளின் வழியே கதிர் வீச்சு செல்லும் போது, அதன் அடர்த்தியும் செறிவும் ஒடுங்கல். (இய)

ATS-anti-tetanusserum serum - இசிவு எதிர்ப்புத் தெளியம். இ.சி.த: (மரு)

audibility, limits of - கேள்திறன் வரம்புகள்: அதிர்வுறும் ஒலியலைகள் அனைத்தும் மனிதர் காதுக்குக் கேட்பதில்லை. 20-2000 அதிர்வெண் கொண்ட அலைகளையே கேட்க இயலும். இந்த எல்லையே கேள்திறன் வரம்புகள். (இய)

audiofrequency - கேள் அதிர் வெண்: செவியுறு அதிர்வெண். 30-2000 ஹெர்ட்ஸ் எல்லையில் அடங்கும் அலை அதிர்வெண். இது செவிக்குப் புலனாகும். (இய)

audiometer - கேள்மானி: செவியுறுமானி, செவியுணர்வுகளை அளக்குங்கருவி. (இய)

auditorynerve - கேள்நரம்பு: செவிநரம்பு, முதுகெலும்பிகளின் உட்செவியிலுள்ள 8ஆம் மூளை நரம்பு. ஒலி அதிர்வுகளை மூளைக்குத் தெரிவிப்பது. (உயி)

auditory response cradle, ARC - கேள் (செவியுறு) துலங்கல் தொட்டில்: கைப்பெட்டி போன்ற கருவியமைப்பு. பிறந்த குழந்தைகளின் கேட்கும் திறனை ஆராய்ந்தறிவது. பேரா. சாம், டக்கர் முதலியோர் இதை வடிவமைத்தவர்கள் (1995). (மரு)

aufbau principle - ஆஃபா நெறிமுறை: அணு ஆற்றல் மட்டங்கள் மின்னணுக்களின் ஆற்றல் வரிசைக்கு ஏற்ப நிரம்புகின்றன. இந்நெறி முறையே ஆஃபா நெறிமுறை. பா.Hund's rule. (இய)

Auger effect - ஆகர் விளைவு: அணுவிலிருந்து மின்னணுவெளி யேறுவது. அவ்வாறு வெளிப்படும் அணுவே ஆகர் அணு. (இய)

auric chloride - ஆரிகக் குளோரைடு: AuCl3. பொற் (III) குளோரைடு, பொன்னைக் கரைத்துப் பெறப்படும் சேர்மம். மின் முலாம் பூசுவதிலும் ஒளிப்படக்கலையிலும் பயன்படுவது. (வேதி)

auricle -1. புறச் செவி 2. இதயமேலறை. (உயி)

aurora - முனை ஒளி: புவி முனைகளில் ஏற்படும் ஒளி, வடமுனை ஒளி. தென்முனை ஒளி, என இருவகைப்படும். ஒரே சமயத்தில் தோன்றுபவை. (இய)

aurora australis - தென்முனை ஒளி: புவியின் தென் கோளத்தில் ஏற்படும் ஒளி. (இய)

aurora borealis - வடமுனை ஒளி : புவியின் வடகோளத்தில் ஏற்படும் ஒளி. (இய)

author - பெயராளர்: ஒரு டேக் சானின் முதல் தகுதிப் பெயரை வெளியிடுபவர். வகைப்பாட்டியல் சொல். (உயி)

autecology - தற்சூழ்நிலை இயல்: தற்சூழியல். உயிரிகளின் தனிவகைகளுக்கும் அவற்றின் சூழ்நிலைகளுக்கும் இடையேயுள்ள தொடர்பினை ஆராயும் துறை. பா. synecology (உயி)

autocarp - தற்கனி: தற்கருவுறுவதால் உண்டாகும் கனி. (உயி)

autogamy தற்கலப்பு: இது தற்கருவுறுதலாகும். இதில் ஒரே உயிரின் ஆண் பாலணுவும் பெண் பாலணுவும் சேர்தல். வேறு பெயர்கள் தற்கருவுறுதல், அகக்கலப்பு. ஒ heteroecious. (உயி)

autograft - தன்னொட்டு: ஒர் உயிரியின் உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குத் திசுவை மாற்றுதல். ஒ. allograft. (உயி)

automation - தானியங்கல்:மனிதன் செய்த கருவித் தொகுதியினால் நடைபெறும் இயக்கம். இக்கருவிகள் ஆட்கள் இல்லாமல் தொலைக் கட்டுப்பாட்டினால் இயங்கும். இவற்றில் முதன்மையாக மின்னணுக் கருவிகள் பயன்படும். சிறந்த தொழில் நுணுக்கம். பொருள்களைப் பெருமளவுக்குச் செய்யப் பயன்படுவது. எ-டு. தொழிற்சாலையில் உந்து வண்டிகளைப் பூட்டல். (தொ.நு)

automatism - தன்னியக்கம்: தான் அறியாமலேயே நடைபெறும் ஒழுங்கமைந்த நடத்தை. எ-டு. உறக்கத்தில் நடத்தல், வலிப்பு. (உயி)

automobile - ஊர்தி, தானியங்கி. (தொ.நு)

automobile engineering - ஊர்திப்பொறி இயல்: ஊர்திகள் அமைப்பு இயங்குதல் ஆகியவை பற்றி ஆராய்வது. (தொ.நு)

autonomic nervous system - தானியங்கு நரம்பு மண்டலம்: இது பரிவு நரம்பு மண்டலம். மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி. மூளையின் கட்டுப் பாடில்லாமல் தானே இயங்குவது. உள்ளுறுப்புத் தசைகளைக் கட்டுப்படுத்துவது. பா. sympathetic nervous system. (உயி)

autophagy - தன் விழுங்கல் தற்செரிமானம். ஒர் உயிரியின் குறிப்பிட்ட கண்ணறைகள் மிகையாக உள்ள அல்லது சிதைந்த கண்ணறை உறுப்பிகளைச் செரிக்க வைத்தல். (உயி)

autotomy - தன் முடமாதல்: ஓர் உயிரி தன் உடல் பகுதிகளைத் தானே முறித்துக் கொள்ளுதல் எ-டு. பல்லி வால் முறிதல். (உயி)

autotrophic, autotrophs: தம்மூட்ட வாழ்விகள்: கனிமப் பொருள்களிலிருந்து தம் உணவைத் தாமே உண்டாக்கிக் கொள்ளும் உயிரிகள் தாவரங்கள். (உயி)

auxanometer - வளர்ச்சிமானி: தாவரப் பகுதிகளின் நீள் வளர்ச்சியை அளக்கப் பயன்படுங்கருவி. (உயி)

auxins - வளர்ப்பிகள்: தாவர வளர்தூண்டிகள். உயிரியல் வினையூக்கிகள், கரிமச் சேர்மங்கள். எல்லாத் தாவரங்களிலும் அமைந்து அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பவை. ஒட்ஸ் நாற்றுகளில் இவை பற்றி முதன்முதலில் ஆராயப்பட்டது. எ-டு. இண்டோல் 3, அசெட்டிகக்காடி, கிபரெலின்கள். இவை தோட்டக்கலையிலும் வேளாண்மையிலும் அதிகம் பயன்படுபவை. ஒ. hormones. (உயி)

average - சராசரி: அளவுகளின் சராசரி மதிப்பு. 9 பழங்களை 3 பேருக்குப் பிரித்தால் ஒவ்வொருவருக்கும் சராசரி 3 பழம் கிடைக்கும். 9/3 = 3. பெருக்குச்சராசரி, எண் கணிதச் சராசரி என இது இருவகைப்படும். (கண)

aves - பறவைகள்: முதுகெலும்பிகள், உடல் வெப்பநிலை மாறா விலங்குகள். சிறகுகள் அமைந்திருத்தல் தனிச் சிறப்பு. கோழி, வாத்து, மயில் தவிர ஏனையவை பறப்பன. (உயி)

aviary, volary - பறவையகம்: பறவைக் கூடம். (உயி)

aviation medicine - வானப் போக்குவரத்து மருத்துவம்: வானூர்திப்பயணத் தொடர்பானது ஒ. aerospace medicine.

aviculture - பறவை வளர்ப்பு: பறவைகளை வளர்க்கும் கலை. (உயி)

Avogadro's constant - ஆவோ கடரோ மாறிலி: முன்னர் இது ஆவோ கடரோ எண் என குறிக்கப்பட்டது. ஒரு மோல் பொருளிலுள்ள அணுக்கள் அல்லது முலக்கூறுகளின் எண்ணிக்கை. இதன் மதிப்பு 6.02252 x 1023. (வேதி)

Avogadro's hypothesis - ஆவோ கடரோ கருதுகோள்: ஆவோ கடரோ என்பார் (1776-1856) 1811 இல் முன்மொழிந்த விதி. குறிக்கோள் வளிகளுக்கு மட்டுமே இது பொருந்தக்கூடியது. ஒரே வெப்பநிலையிலும் அழுத்தநிலையிலுமுள்ள பல வளிகளின் பருமன் சமமானால் அவற்றில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிைக்கையும் சமமாக இருக்கும். இவ்விதி கேலூசாக்கின் பருமனளவு விதியை நன்கு விளக்குகிறது. (வேதி)

axenic culture - தூய வளர்ப்பு: இதில் ஒரு நுண்ணியிரியின் ஒரு சிறப்பினம் மட்டும் இருக்கும். (உயி)

axil - இலைக் கோணம்: தண்டகத்தில் தண்டுக்கும் இலைக்கும் இடையிலுள்ள கோணம். இதில் கோணக் குருத்துள்ளது. (உயி)

axillary bud - இலைக்கோண மொட்டு. (உயி)

axis - பிடர் அச்சு: 1. முதுகெலும்பின் 2ஆம் முள் எலும்பு. பிடர் எலும்பைத் தாங்கித் தலையத் தாங்குவது. 2. தாவர அச்சு, தாவரத்தின் மைய அச்சு, இதில் தண்டும் வேரும் இருக்கும். (உயி)

axolot - முதிர் இளரி: ஆம்பிலோ ஸ்டோமா பேரின வகைகள். வாலுள்ள இரட்டை வாழ்விகள். இவற்றின் இளம் உயிர் முதிர்ந்து வாழ்நாள் முழுதும் இனப் பெருக்கம் செய்யவல்லது. பா. larva. (உயி)

axon - அச்சியன்: அச்சிழை. கண்ணறை உடலிலிருந்து துடிப்புகளை எடுத்துச் செல்லும் நரம்பிழை.(உயி)

azeotrope, azeotropic mixture - இணைஇயைபுரு, இணைஇயைபுருக் கலவை: நீர்மக் கலவையில் நீர்மநிலையின் இயைபை ஆவிநிலை பெற்றிருத்தல். ஆகவே, இயைபில் மாற்றமின்றிக் கொதிப்பதால் அதன் கொதிநிலையிலும் அதைத் தொடர்ந்து எவ்வகை மாற்றமும் இல்லை. எ-டு. நீரில் அய்டிரோ குளோரிகக் காடிக் கரைசல். இக்கரைசலைக் கொதிநிலை மாறாக் கரைசல் என்றும் கூறலாம். (வேதி)

azimuth - உச்சி வரை: ஆயத் தொலைகளின் கிடைமட்டத் தொகுதி (கண)

azo-dyes - ஆசோ-சாயங்கள், வெடிவளிச் சாயங்கள்: நைட்ரஜன் (வெடிவளி) கூட்டுப் பொருள் உள்ளது. நிறம் மஞ்சள், சிவப்பு அல்லது செம்பழுப்பு. (வேதி)

azotobacter - அசொட்டோபேக்டர்: நைட்ரஜனை (வெடிவளி, வெடியம்) நிலைநிறுத்தும் குச்சியங்கள். வேளாண்மையிலும் தோட்டக் கலையிலும் சிறப்புள்ளவை. எ-டு. நைட்ரசமோனாஸ் என்னும் குச்சியம் அம்மோனியாவை நைட்ரேட்டு என்னும் உயிர்வளி ஏற்றம் அடையச் செய்தல். இவ்வுப்பை நைட்ரோபேக்டர் என்னும் குச்சியம் நைட்ரைட்டு என்னும் உப்பாக்குதல் (உயி)

azulene - அசூலின்: நீலமும் ஊதாவும் சேர்ந்த படிகங்கள். நாப்தலீன் போன்ற மனம் பயனுறு எண்ணெய்களிலிருந்து கிடைத்தல், ஒப்பனைப் பொருள்களில் பயன்படுதல் (வேதி)

azurite - அசூரைட்: Cu3(OH)2(CO3)2. இயல்பான அடிப்படைச் செம்புக் கார்பனேட். நீல நிறம். ஒவியர் நிறமாகப் பயன்படுதல். (வேதி)

azygospore - கலவியிலிச்சிதல்: கன்னிப் பிறப்பு முறையில் தோன்றி ஒய்வு கொள்ளும் கருச்சிதல். (உயி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/A&oldid=1036945" இருந்து மீள்விக்கப்பட்டது