அறிவியல் வினா விடை - விலங்கியல்/உடலின் மண்டலங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

8. உடலின் மண்டலங்கள்.

1. செரித்தல் மண்டலம்

1. உணவு வழி (பாதை) என்றால் என்ன?

வாயில் தொடங்கிக் கழிவாயில் முடியும் ஒரு நீளமான குழாய். உணவு செரிக்க உதவுகிறது.

2. உணவு வழியிலுள்ள உறுப்புகள் யாவை?

தொண்டை, இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், சுரப்பிகள்,

3. செரித்தல் மண்டலம் என்றால் என்ன? இதன் வேலை என்ன?

செரித்தல் உறுப்புகளும் சுரப்பிகளும் உள்ளது. உணவு செரிக்க உதவுவது.

4. வாய்க்குழி என்றால் என்ன?

வாய்க்கடுத்துள்ளது. உணவு இதன் மூலம் உணவு வழிக்குச் செல்வது.

5. வாய்க்குழியிலுள்ள உறுப்புகள் யாவை?

உமிழ் நீர்ச்சுரப்பிகள், பற்கள், நாக்கு.

6. இரைப்பை என்பது யாது?

உணவுக் குழாய்க்கு அடுத்துள்ள பகுதி. இதில் இரைப்பை நீர்ச்சுரப்பிகள் உள்ளன. உணவு ஓரளவுக்கு இங்குச் செரிக்கிறது.

7. பற்கள் என்பவை யாவை?

கடின வெண்ணிற உறுப்புகள். முதுகெலும்புகளின் வாயில் அமைந்துள்ளன.

8. பற்களின் பொது வேலைகள் யாவை?

1. உணவை அரைக்க.
2. பொருள்களைப் பற்ற
3. கடிக்க
4. போரிட

9. பற்களின் நான்கு வகைகள் யாவை?

1. வெட்டுப்பற்கள் - உணவைத்துண்டிக்க.
2. கோரைப்பற்கள் - உணவைக்கிழிக்க
3. முன் கடைவாய்ப்பற்கள் - அரைக்க
4. பின்கடைவாய்ப் பற்கள் - அரைக்க

10. பல்லமைவு என்றால் என்ன?

தாடையில் பற்கள் அமைந்திருக்கும் முறை.

11. பல்லமைவு வாய்பாடு என்றால் என்ன?

பல்லமைப்பைக் குறிக்கும் வாய்ப்பாடு.


2123
2123

இதன் வரிசை மேல்தாடை வெட்டுப்பல் 4, கோரைப்பல் 2, முன்கடைவாய்ப்பல் 4, பின்கடவாய்ப்பற்கள் 6 ஆக 16 இதே போன்று கீழ்த் தாடையிலும் உள்ளன. வாய்பாட்டில் உள்ளது. ஒரு தாடையில் ஒரு பாதியிலுள்ள பற்களைக் குறிப்பது 2 ஆல் பெருக்க 16.

12. பிளவுறு கடைவாய்ப்பற்கள் என்றால் என்ன?

யானை, குதிரை ஆகிய விலங்குகளில் கடைவாய்ப் பற்களில் குறுக்குவரிப் பிளவுகள் இருத்தல்.

13. கோரைப்பல்லின் சிறப்பு யாது?

நாயிடத்துக் கோரைப்பல் நன்கு வளர்ந்துள்ளது. பாம்பிடத்து இது நச்சுப்பல். யானையினிடத்து தந்தம்.

14. குடல் வாய் என்பது யாது?

குடலைநோக்கிய இரைப்பைத்திறப்பு, தசையாலான வளையம். இரைப்பையிலிருந்து உணவு குடலுக்குச் செல்ல உதவுகிறது.

15. உணவு வழிக்கு வெளியே உள்ள சுரப்பிகள் யாவை?

கல்லீரல், கணையம்.

16. முன் சிறுகுடல் என்றால் என்ன?

குடலின் முன்பகுதி, உணவு இறுதியாகச் செரிப்பது.

17. முன் சிறுகுடலில் உணவு இறுதியாகச் செரிக்கப்படுவதற்குக் காரணமென்ன?

கணையநீர், பித்தநீர், சிறுகுடல் நீர் ஆகிய மூவகைச் செரித்தல் நீர்கள் உள்ளன. தவிரச் செரித்த உணவு உறிஞ்சப்படுவதற்குக் குடற்பால் குழல்களும் உள்ளன.

18. உணவு முழு அளவுக்கு எங்குச் செரிக்கிறது?

முன் சிறுகுடல் செரிக்கிறது. இங்கு மூவகைச் செரித்தல் நீர்கள் உள்ளன.

19. குடல்வால் என்றால் என்ன?

பெருங்குடலில் குடல் பையின் கீழ் முனையிறுள்ள விரல் போன்ற உறுப்பு. இது பயனற்ற எச்ச உறுப்பு.

20. குடல் வால் அழற்சி என்றால் என்ன?

குடல் வால் நோயுற்று வீங்குதல். அதிக வலி உண்டாகும் பொழுது இதை அறுத்து நீக்கதே நல்லது.

21. வயிறு என்பது யாது?

நடுவுடலில் மார்புக்குக் கீழுள்ள அறை. இதில் இரைப்பை, குடல் முதலிய உறுப்புகள் இருக்கும்.
22. குடல் என்பது யாது?

உணவு வழியின் நீண்ட பகுதி. இரைப்பைக்குப் பின்னுள்ளது. சிறுகுடல், பெருங்குடல் என இருவகை.

23. கழிவழி என்றால் என்ன?

உடலுக்கு வெளியே அமைந்துள்ள பொதுக் கழிவழி. இதன் வழியாகச் சிறுநீர்க் கழிவு, முட்டை முதலியவை செல்லும். எ-டு தவளை

24. அலை இயக்கம் என்றால் என்ன?

உணவு வழிச் சுவரிலுள்ள தசைகள் உண்டாக்கும் நெளி வியக்கம். இதனால் உணவு அடுத்தடுத்துள்ள உறுப்புகளுக்குச் செல்ல முடிகிறது.

25. செரித்தல் என்றால் என்ன?

நொதிச் செயலால் அரிய பொருள்கள் எளிய பொருள்களாக மாறுதல். எ-டு. அமைலேஸ் ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக்கும். பொதுவாகச் செரித்தல் இரைப்பையிலும் முன்சிறுகுடலிலும் நடைபெறுவது. இது ஒரு வேதிச்செயலே. இதைத் தொடர்வது உட்கவரலும் தன்வயமர்தலும் ஆகும்.

26. நொதிகள் என்பவை யாவை?

உயிரியல் வினை ஊக்கிகள். அரிய பொருள்களை எளிய பொருள்களாக மாற்றுபவை. காட்டாக மாப்பொருள் செரிக்கக்கூடிய சர்க்கரையாக மாறும், டயலின், அமைலேஸ், பெப்சின் முதலியவை நொதிகள் ஆகும்.

27. உட்கவரல் என்றால் என்ன?

செரித்த உணவு குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படுதல். இது ஓர் இயற்பியல் செயல்.

28. தன்வயமாதல் என்றால் என்ன?

செரித்த உணவு சிறுகுடலில் உறிஞ்சப்பட்டுத் திசுக்களில் முன் கணியமாக மாறுதல். இது வளர்மாற்றம் ஆகும்.

29. கேசின் என்பது யாது?

எளிதில் செரிக்கக்கூடிய பால் புரதம்.

2. சுழல் மண்டலம்

30. சுழல் மண்டலம் என்றால் என்ன?

குருதிக்குழாய் மண்டலம். இதயமும் குருதிக் குழாய்களும் கொண்டது. குருதி மூலம் உணவுப் பொருள்கள் உடலின் பல பகுதிகளுக்கும் செல்லுதல்.

31. இதயம் என்பது என்ன?

உட்குழிவான தசை உறுப்பு. குருதியை உடல் முழுதும் செலுத்துவது.

32. இதயம் எங்கு அமைந்துள்ளது?

மார்பில் நுரையீரல்களுக்கு நடுவே அமைந்துள்ளது.

33. நம் உடலிலுள்ள பெரிய தமனி எது?

பெருந்தமனி.

34. நம் உடலிலுள்ள இரு பெரும்சிரைகள் யாவை?

கீழ்ப்பெருஞ்சிரை, மேற்பெருஞ்சிரை.

35. நிணநீர்க் குழாய்களில் பெரியது எது?

மார்பு நிணநீர் நாளம்.

36. மூவகைக் குருதிக் குழாய்கள் யாவை?

தமனிகள், சிரைகள், தந்துகிகள்.

37. பெருந்தமனி என்பது யாது?

நம் உடலிலுள்ள பெருங் குருதிக்குழாய், பல தமனிகளாகப் பிரிந்து குருதியினை இதயத்திலிருந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது.

38. உயிர்வளியுள்ள குருதியைக் கொண்டு செல்லும் ஒரு குருதிக் குழாய் எது?

நுரையீரல் சிரை.

39. கரி இரு ஆக்சைடு உள்ள குருதியைக் கொண்டு செல்லும் ஒரு தமனி எது?

நுரையீரல் தமனி.

40. சிரைகளில் திறப்பிகள் உள்ளன. தமனிகளில் இல்லை ஏன்?

சிரைகளில் அழுத்தம் குறைவு. ஆகவே, திறப்பிகள் உள்ளன. தமனிகளில் அழுத்தம் அதிகம். ஆகவே, திறப்பிகள் இல்லை.

41. தமனி என்றால் என்ன?

உயிர்வளி கலந்த குருதியை உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் குழாய்.

42. சிரை என்றால் என்ன?

கரி இரு ஆக்சைடு கலந்த குருதியை இதயத்திற்கு எடுத்து வருவது.

43. கீழ்ப்பெருஞ்சிரை என்றால் என்ன?

உடலின் கீழ்ப் பகுதிகளிலிருந்து குருதியை இதயத்திற்குக் கொண்டு வரும் பெரும் குருதிக்குழாய்.

44. மேற்பெருஞ்சிரை என்றால் என்ன?

உடலின் மேல் பகுதிகளிலிருந்து குருதியை இதயத்திற்குக் கொண்டும் குருதிக் குழாய்.

45. தமனியையும் சிரையையும் இணைக்கும் குருதிக்குழாய்கள் யாவை?

தந்துகிகள்.

46. இதயக் குருதிக் குழாய்கள் யாவை?

இவை இதயத் தமனிகள் (2), இதயச்சிரைகள் (2) ஆகியவை. இதயத் தசைகளுக்கு குருதி வழங்குபவை.

47. திறப்பிகள் (வால்வுகள்) என்பவை யாவை?

ஒரு சமயம் மூடி மற்றொரு சமயம் திறக்கும் அமைப்பு. கதவு போன்றது. இதயத்திலும் குருதிக் குழாய்களிலும் உள்ளன. எ-டு. ஈரிதழ்த் திறப்பி, மூவிதழ்த் திறப்பி.

48. ஈரிதழ்த் திறப்பியின் வேலை என்ன?

இது இதயத்தின் இட மேலறைகளும் கீழறைக்கும் இடையே உள்ளது. கீழறைக் குருதியைப் பெரும் தமனிக்குச் செலுத்துவது.

49. மூவிதழ்த் திறப்பி என்றால் என்ன?

இது வல மேலறைக்கும் கீழறைக்கும் இடையிலுள்ளது. வலக் கீழறை சுருங்கும் பொழுது குருதி வெளியேறும். அதாவது நுரையீரல் தமனிக்குச் செல்லும்.

50. இதயவிரிவு என்றால் என்ன?

இதயச் சுழற்சியின் ஒரு பகுதி. இதில் இதயக் கீழறைகளில் குருதி நிரம்பும்.

51. இதயச் சுருக்கம் என்றால் என்ன?

இதயச் சுழற்சியின் சுருங்குநிலை. இது இதய விரிவுக்கு எதிரானது. இச்சுருக்கம் இதயக் கீழறைகள் சுருங்குவதையே குறிக்கும்.

52. சுருங்கு குருதியழுத்தம் என்றால் என்ன?

எவ்விசையுடன் இடது கீழறை சுருங்குகின்றதோ அவ்விசை வெளிப்புறத் தமனிகளில் அளிக்கப்படுதல்,

53. சுருங்கு முணுமுணுப்பு என்றால் என்ன?

இதயம் சுருங்கும் பொழுது கேட்கப்படும் இரைச்சல், இரு பெருந்தமனிகள் அடைப்பாலும் மூவிழத் திறப்பு அடைப்பாலும் ஏற்படுவது.

54. குழாய் அடைப்பு என்றால் என்ன?

குருதிக் குழாயில் குருதி கட்டுவதால் குருதி ஓட்டம் தடைப்படுதல்.

55. மாரடைப்பு என்றால் என்ன?

இதயத்திற்குக் குருதி வழங்குந் தமனியில் ஏற்படும் அடைப்பு. உயிருக்கு ஊறு விளைப்பது.

56. குருதி என்றால் என்ன?

மனித உடலில் ஓடும் நீர்மம். இது ஒரு நீர்மத் திசு.

57. குருதியிலுள்ள அணுக்கள் யாவை?

1. வெள்ளணுக்கள் - நோய் நுண்ணங்களைக் கொல்பவை.
2. சிவப்பணுக்கள் - அக்சிஜனை எடுத்துச் செல்பவை.
3. தகட்டணுக்கள் - குருதி உறைய உதவுபவை.

58. குருதியிலுள்ள நீர்மப் பகுதி யாது?

கணிமம் (பிளாஸ்மா). எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது. குருதியணுக்களை எடுத்துச் செல்வது.

59. குருதியின் முக்கிய வேலைகள் யாவை?

1. உணவுப் பொருள்களைச் சுமந்து செல்வது.
2. மூச்சுவளிகள், வளர் ஊக்கிகள் ஆகியவற்றைச் சுமந்து செல்வது.
3. கழிவுகளை உரிய உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வது.

4. உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைப்பது.
5. வெள்ளணுக்கள் நோய் நுண்ணங்களைக் கொல்வது.

60. சிவப்பு குருதியணுக்கள் என்பவை யாவை?

குருதியிலுள்ளவை. ஈமோகுளோபின் என்னும் இரும்பு ஊட்டம் உள்ளவை. உயிர்வளியைச் சுமந்து செல்பவை.

61. நம் குருதியில் எந்த அளவுக்கு இவை உள்ளன?

ஒரு கன மில்லி மீட்டருக்கு 5 மில்லியன் உள்ளன.

62. இரும்பு ஊட்டம் குறைவதால் உண்டாடும் நோய் யாது?

குருதிச்சோகை.

63. குருதிப்படலம் எதற்குப் பயன்படுகிறது?

குருதியின் இயைபை ஆராய, அதைக் கண்ணாடி வில்லையில் படலமாக எடுத்துச் சாயமேற்றி நுண்ணோக்கியில் பார்க்க.

64. குருதி வகைகள் யாவை?

குருதியில் காணப்படும் எதிர்ப்பிகள், தெளிநீரிலுள்ள எதிர்ப்புப் பொருள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குருதி வகைப்படுத்தப்படுகிறது. அதன் வகைகள். A,B,AB,o

65. குருதி வகைப்பாட்டிற்குக் காரணமானவர் யார்?

1900இல் குருதியை வகைப்படுத்தலாம் என லேண்ட் ஸ்டெமினர் கூறினர்.

66. எந்தக் குருதி வகை எல்லோருக்கும் ஏற்றது?

o வகை.

67. அனைத்துத்தருநர் என்றால் என்ன?

o வகைக் குருதியில் எதிர்ப்பிகள் இல்லாததால், இது ஏனைய மூன்று வகைக் குருதியோடும் சேரும். ஆகவே, இக்குருதியிலுள்ளவர் அனைவருக்கும் குருதிக் அளிக்கும் இயல்புடையவர்.

68. ஏ.பி.ஓ. தொகுதி என்றால் என்ன?

இன்றியமையாத குருதித் தொகுதிகளில் ஒன்று.

69. தருநர் என்பவர் யார்?

தன் குருதி அல்லது திசுவை பிறருக்கு அளிப்பவர்.

70. பெறுநர் என்பவர் யார்?

குருதி அல்லது திசுவைப் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்பவர்.

71. குருதி வெள்ளணுக்கள் யாவை?

குருதியிலுள்ளவை. உடலின் போர் வீரர்கள்.

72. குருதியழுத்தம் என்றால் என்ன?

முதன்மையான தமனிச் சுவர்களில் குருதியினால் உண்டாக்கப்படும் விசை.

73. இதன் அளவு என்ன?

இயல்பானவரிடம் 120-80க்கும் இடையில் இருக்கும்.

74. குருதியழுத்தத்தை எதனால் அளக்கலாம்?

குருதியழுத்தமானியால் அளக்கலாம்.

75. குருதி செலுத்துதல் என்றால் என்ன?

குருதி குறைவாக உள்ளவர்களுக்குத் தேவைப்படும் குருதியைப் பிறரிடமிருந்து பெற்றுச் செலுத்துவது. இதற்குக் குருதி வங்கியுள்ளது.

76. குருதி உறைதல் என்றால் என்ன?

குருதி காற்றில் பட்டுப் தெளிநீராகவும் சிவப்பணுக்களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த பைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி.

77. இதைத் தூண்டுங் காரணிகள் யாவை?

திராம்பின், பைபிரினோஜன், கால்சியம் உப்புகள் ஆகியவை.

78. இதன் தன்மைகள் யாவை?

1. வெட்டுக்காயம் மூடப்படுகிறது.
2. குருதி இழப்பு தடுக்கப்படுவதால் உயிருக்கு ஊறு படுவது தடுக்கப்படுகிறது.
3. இஃது உடலுக்கு இயற்கை அளிக்கும் பாதுகாப்பு

79. ஒருங்கொட்டல் என்றால் என்ன?

ஒரு சேர ஒட்டிக் கொள்ளும் நிலை. இச்செயல் எதிர்ப் பொருள் விளைவுகளில் ஒன்று. குச்சிவடிவ உயிரிகள், குருதியணுக்கள் முதலியவை இவ்வியல்பு கொண்டவை.

80. நாடித்துடிப்பு என்றால் என்ன?

இதயத் துடிப்பை ஒட்டித் தமனிச்சுவர்கள் விரிவதால் உண்டாகும் துடிப்பு.

81. இதன் எண்ணிக்கை என்ன? எங்கு உணரலாம்?

72. மணிக்கட்டிலும் கணுக்காலிலும் உணரலாம். மருத்துவர் வசதி கருதிப்பயன்படுத்துவது மணிக்கட்டையே.

82. இதய வரைவு என்றால் என்ன?

இதயத்துடிப்புகளை விரிவுகளாகக் காட்டும் வரைபடம்.

83. இதய வரைவி என்றால் என்ன?

இதய அலை இயக்கத்தை வரைபடமாகப் பதிவு செய்யுங் கருவி

3. நிணநீர் மண்டலம்

84. நிணநீர் என்பது என்ன?

சிவப்பணு நீங்கிய குருதி. வெளிர்ப் பாய்மம். கொழுப்பு முண்டுகளால் உண்டாக்கப்படுவது. உடல் பாதுகாப்பிற்குப் பயன்படுவது.

85. நிணநீர் மண்டலத்திலுள்ள உறுப்புகள் யாவை?

நுண்ணிகள், குழாய்கள், முண்டுகள், நிணநீர்ச் சுரப்பிகள் ஆகியவை.

86. நிணநீர் ஓட்டம் எவ்வாறு ஏற்படுகிறது.

தசை அசைவுகளாலும் மூச்சு அசைவுகளாலும் நிணநீர் ஓட்டம் நடைபெறுகிறது.

87. நிணநீர் மண்டலத்தின் வேலைகள் யாவை?

1. ஊட்டப்பொருள்களையும் உயிர்வளியையும் திகக்களுக்களித்தல்.
2. திசுக்கள் உண்டாகும் கழிவுகளை மீண்டும் குருதியோடு சேர்த்தல்.
3. உயிரணுக்களுக்கிடையே நிரம்பி அவற்றை உயிர் வாழச் செய்தல்.
4. குடற் பால் குழலில் தங்கிக் கொழுப்பை உறிஞ்சுதல்.
5. இதிலுள்ள வெள்ளணுக்கள் நோய் நுண்ணங்களைக் கொல்லுதல்.

88. நிணநீர் இயக்கம் என்பது என்ன?

செவியின் அரைவட்டக் குழல்களில் உள்ள நிணநீர் சுழலுதல். உடலில் நிணநீர் ஓடுதல்.

89. நிணநீர் இதயம் என்பது யாது?

இது விரிந்த நிணநீர்க்குழாயே. இதில் திறப்பிகள் உள்ளன. இதன் சுவர்கள் சுருங்க வல்லவை. தவளைக்குச் சிறப்பாக நிணநீர் இதயம் உண்டு.

90. நிணநீர் முண்டு என்றால் என்ன?

நிணநீர் மண்டலத்தின் எதிர்ப்புப் பொருள் உண்டாகும் பகுதி.

91. நிணநீர் அணுக்கள் என்பவை யாவை?

ஒரு வகை வெள்ளணுக்கள். இவை குருதியில் சேரும் அயல் பொருள்களை அழிப்வை.

92. தெளிநீர் (சீரம்) எதிலுள்ளது? அதன் வேலை என்ன?

கணிமத்திலுள்ளது. இதன் நிறம் வெளிறிய மஞ்சள். ஊட்டச்சத்தையும் எதிர்ப்புப் பொருள்களையும் எதிர்ப்பிகளையும் எடுத்துச் செல்வது.

93. அலெக்சின் என்றால் என்ன?

இது ஒரு நச்சுமுறிவு. குருதித் தெளிநீரில் இருப்பது. எதிர்த்தெளி நீரோடு சேரும்பொழுது நோய்க்கு எதிராகக் பாதுகாப்பு அளிப்பது.

4. எலும்பு மண்டலம்

94. எலும்பு என்றால் என்ன?

எலும்புக் கூட்டைத் தோற்றவிக்கும் கடினத்திசு. உடலுக்கு உரத்தையும் வடிவத்தையும் கொடுப்பது.

95. நம் உடலிலுள்ள எலும்புகள் எத்தனை?

206 எலும்புகள்.

96. எலும்பு மண்டலம் என்றால் என்ன?

எலும்புகளாலானது எலும்பு மண்டலம். உடலுக்குத் திண்ணிய வடிவத்தையும் அசைவையும் தருவது.

97. அகச் சட்டகம் என்றால் என்ன?

உடலிலுள்ளே அமைந்த சட்டகம். தலை எலும்புக்கூடு, முதுகெலும்பு, புறத்துறுப்பு எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டது.

98. குருத்தெலும்பு என்றால் என்ன?

செறிவான இணைப்புத்திசு. அழுத்தத்தைத் தாங்க வல்லது. வேலைக்கேற்ப வேறுபடுவது. குழந்தைச் சட்டகத்தில் அதிகமாகவும் மனிதச்சட்டகத்தில் குறைவாகவும் இருப்பது.

99. குருத்தெலும்பு காணப்படும் பகுதிகள் யாவை?

மூக்கு, செவிமடல், முள் எலும்புத் தட்டுகள். இவற்றின் வேலை தாங்குதலும் நெகிழ்ச்சியும் அளிப்பது.

100. பளிங்குக் குருத்தெலும்பு என்றால் என்ன?

மென்மையாகவும், முத்துப்போன்றும் இருப்பது. எலும்புகளின் புழக்கப்பரப்பை மூடுவது.

101. சொத்தை என்றால் என்ன,

எலும்புச் சிதைவு. முதுகெலும்புச் சிதைவு. இது பற்சொத்தையையும் குறிக்கும்.

102. எலும்புக்குழி என்றால் என்ன?

இடுப்பு எலும்பின் இருப்புறத்திலும் தொடை எலும்பின் தலை சுழலுவதற்கேற்றவாறு உள்ள பகுதி.

103. ஏவர்சியன் குழாய்கள் என்றால் என்ன,

இவை ஒன்றோடு மற்றொன்று இணைந்தவை. நீள் வாட்டில் அடர் எலும்பு வழியாகச் செல்பவை. இவற்றிற்குக் குருதிக் குழாய்களும் நரம்புகளும் செல்லும்.

104. முதுகெலும்பு என்றால் என்ன?

முள் எலும்புகளாலான தொடர். மனித முதுகெலும்பில் 33 முள் எலும்புகள் உள்ளன.

105. முகுகெலும்பிலுள்ள முள்ளெலும்புகள் 33 யாவை?

1. கழுத்து முள் எலும்புகள் 7.
2. மார்பு முள் எலும்புகள் 12.
3. இடுப்பு முள் எலும்புகள் 5.
4. திரிக முள் எலும்புகள் 5.
5. வால் எலும்புகள் 4.

106. முதுகெலும்பின் சிறப்பு யாது?

இது உடலுக்கு நேர்த்தோற்றத்தையும் அழகையும் அளிப்பது. இதிலுள்ள வளைவே அழகிற்குக் காரணம்.

107. பிடர் அச்சு என்றால் என்ன?

முதுகெலும்பின் இரண்டாம் முள்ளெலும்பு. பிடர் எலும்பைத்தாங்குவதன் மூலம் தலையைத் தாங்குவது.

108. பிடர் எலும்பு என்றால் என்ன,

முதுகெலும்பின் முதல் எலும்பு. தலை எலும்புக் கூட்டைத் தாங்குவது.

109. மார்புக் கூட்டிலுள்ள எலும்புகள் எத்தனை?

25. விலாஎலும்புகள் 12+12=24. மார்பெலும்பு 1.

110. மூட்டு என்றால் என்ன?

இரண்டிற்கு மேற்பட்ட எலும்புகள் சேருமிடம்.

111. மூட்டின் இரண்டு வகைகள் யாவை?

1. அசையா மூட்டு - தலைஎலும்புக் கூடு.
2. அசையும் மூட்டு - கீல் மூட்டு.

112. அசையும் மூட்டின் வகைகள் யாவை.

1. பந்து கிண்ணமூட்டு - தோள் இடுப்பு
மூட்டுகள் -
கை கால் பகுதிகள்
2. மூளை மூட்டு - முழங்கை எலும்பில்
ஆர எலும்பு சுழலுதல்.
3. வழுக்கு மூட்டு - மணிக்கட்டு,
கணைக்கால்.
4. கீல் மூட்டு - முழங்கை, முழங்கால்,
விரல் முட்டுகள்

113. எம்மூட்டு அதிக அசைவையும் எந்த மூட்டு குறைந்த அசைவையும் கொடுக்கும்?

அதிக அசைவு பத்து கிண்ணமூட்டு, குறைந்த அசைவு வழுக்கு மூட்டு.

114. மூட்டின் சிறப்பென்ன?

கை கால்களைப் பல திசைகளிலும் கழற்ற முடிகிறது. இதனால் உடலுக்கு எளிதாக இயக்கம் கிடைக்கிறது.

115. முழங்காற்சில் என்றால் என்ன?

முழங்கால் மூட்டின் முன்தசைநாணிலுள்ள எஸ் வடிவ எலும்பு. பின் காலை நீட்ட உதவுவது.

116. எலும்புகளில் மிகப் பெரியது எது?

தொடை எலும்பு.

117. எலும்புகளில் மிகச் சிறியவை எவை?

செவிச் சிற்றெலும்புகள்

5. தசை மண்டலம்

118. தசை இயக்க இதயம் என்றால் என்ன?

நேரிடையாகத் தசைகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் இதயம். எ-டு எல்லா முதுகு எலும்பு விலங்குகளுக்கும் உண்டு.

119. தசை இயல் என்றால் என்ன?

தசைகளை ஆராயுந்துறை.

120. தசையின் தனிப்பண்புகள் யாவை?

1. சுருங்குதல்
2. கடத்தல்.

121. தசை மண்டலம் என்றால் என்ன?

தசைகளாலான தொகுதி. எலும்புகளைப் பிணைத்து உடலுக்கு இயக்கத்தையும் அழகையும் தருவது.

122. தசை என்பது யாது?

ஓர் இணைப்புத்திசு. சுருங்குவது இதன் தனிப் பண்பு.

123. இதன் வகைகள் யாவை?

1. வரித்தசை, இயக்குத்தசை - முத்தலை, இருத்தலைதசை.
2. வரியில்லாத்தசை, இயங்குதசை - உள்ளுறுப்புத்தசை, இதயத்தசை.

124. சுருக்குத்தசைகள் என்பவை யாவை? இவை எங்குள்ளன? எவ்வாறு வேலை செய்கின்றன?

இவை ஒருவகை இயங்குதசைகளே. இவற்றில் தசை நார்கள் வட்டமாகவும், குறுக்காகவும் அமைந்துள்ளன. இரைப்பையின் அடிப்பகுதி, கழிவாய், கண்மணி. குறுக்குநார்கள் சுருங்கும்பொழுது இவற்றின் துளை விரியும். வட்டநார்கள் சுருங்கும்பொழுது துளை சுருங்கும். காட்டாகக் கண்மணி சுருங்கி விரிவதைக் கருவிழிப் படலத்தசை கட்டுப்படுத்துகிறது.

125. தசையின் வேலைகள் யாவை?

உடல் இயக்கம், நிலைப்பு, உடல் உருவம் ஆகியவற்றிற்கு இவையே காரணமாகும்.

126. நம் உடலிலுள்ள தசைகள் எத்தனை?

தசைகள் 400.

127. தசை நலிவு என்றால் என்ன?

வைட்டமின் E குறைவதால் தசையின் இயக்கம் குறைதல்.

128. இரு தலைத் தசை என்றால் என்ன?

ஓர் இயக்குத்தசை, நடுவில் பருத்தும் முனைகளில் குறுகியும் இருக்கும். மேற்கை எலும்பில் உள்ளது. இது சுருங்கும்பொழுது முன்கை மடங்குகிறது.

129. இதற்கு இப்பெயர் வரக் காரணம் என்ன?

இரு தசைநாண் உள்ளதால் இப்பெயர்.

130. நீட்டுதசை (விரிதசை) என்றால் என்ன?

முன் கையை நீட்ட உதவும் முத்தலைத்தசை

131. மடக்குதசை என்றால் என்ன?

முன்னங்காலை மடக்கப் பயன்படும் இருதலைத்தசை.

132. கெண்டைக்கால் தசை என்றால் என்ன?

இது ஓர் இயக்குத்தசை இதிலிருந்து குதிகாலோடு சேரும் தசைநாண் அச்சில்லஸ் தசைநாண் எனப்படும். இத்தசை நடத்தல், ஓடுதல், குதித்தல், நிற்றல் முதலிய இயக்கங்களுக்கு முதன்மையானது.

133. நாத்தலைத்தசை என்பது யாது?

முதுகு எலும்பு விலங்குகளின் தொடைத்தசை. கால்வரை நீளுவது.

134. தசைப்பிடிப்பு என்றால் என்ன?

தசையின் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வலிதரும் சுருக்கம். உடற்பயிற்சியின் பொழுது ஏற்படுவது. தசையை நீட்டி இதைப் போக்கலாம்.

135. குறுக்குத்தட்டம் (உதரவிதானம்) என்றால் என்ன?

பாலூட்டிகளின் மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் மிகப்பெரிய தசை. உடலிலுள்ள தசைகளில் மிகப் பெரியது.

136. எதிர்விளைப்பாடு என்றால் என்ன?

இரு தசைகள் ஒன்றுக்கு மற்றொன்று எதிர்மமாறாகச் செயற்படுதல், இதனால் உயிருக்கு நன்மையே. காட்டாக, இருதலைதசையும் முத்தலைதசையும் ஒன்றுக்கு மற்றொன்று எதிராக இயங்குவதால் முன் கையை நீட்டி மடக்க முடிகிறது.

137. பந்தகம் என்றால் என்ன?

மூட்டில் எலும்புகளை இணைக்கும் கயிறுகள்.

138. நாண் என்றால் என்ன?

தசையை எலும்போடு இணைக்கும் கயிறு.

139. இறப்பு என்பது என்ன?

திசுக்களில் வளர்விதை மாற்றம் அறவே ஒடுங்குவதால் ஏற்படும் நிலை.

140. இறப்பு விறைப்பு என்றால் என்ன?

மனிதன் இறந்த பின் தசைகள் விறைத்துக் கடினமாதலே இறப்பு விறைப்பு, இது நிகழ்ந்தபின் கைகால்களை மடக்க இயலாது. எனவேதான், மனிதன் இறந்த பின் கைக்கட்டு கால்கட்டு போடப்படுகின்றன. தசை நார்களில் அடினோசைன் மூப்பாஸ்பேட்டு படிவதால் இந்நிலை ஏற்படுகிறது.

141. சோர்வு அல்லது களைப்பு என்றால் என்ன?

கழிவுகள் சிதை மாற்றத்தால் குவிவதால் தசையின் சுருங்கும் தன்மை குறையும். இதற்குத் தசைச் சோர்வு என்று பெயர். இதைப்போக்கச் சிறந்த வழி ஓய்வு கொள்ளுதலே ஆகும்.

142. மையோசின் என்றால் என்ன?

தசைப்புரதம். இறப்பு விறைப்புக்கு இதுவே காரணம்.


6. மூச்சு மண்டலம்

143. மூச்சு மண்டலம் என்றால் என்ன?

நுரையீரல்கள், மூச்சுக்குழல்கள் ஆகியவை அடங்கியது. மூச்சுவிட உதவுவது முதன்மையான வேலை.

144. நுரையீரல்கள் என்பவை யாவை?

காற்றினால் மூச்சுவிடும் உயிர்களுக்கான மூச்சுறுப்புகள். பொதுவாக இவை இரண்டு. இவற்றின் இறுதிப் பகுதிகள் மூச்சுச் சிற்றறைகள். இவற்றில் வளிமாற்றம் நடைபெறுகிறது.

145. மூச்சுச்சிற்றறை என்றால் என்ன?

நுரையீரலில் உள்ள சிறிய அறைகள். இங்குத்தான் வளி மாற்றம் நடைபெறுகிறது.

146. மூச்சுவிடுதல் என்றால் என்ன?

காற்றை உள்ளிழுத்து வெளிவிடுதல் ஆகும். வெளி மூச்சில் கரி இரு ஆக்சைடு வெளிச் செல்லுகிறது, உள் மூச்சில் வெளியிலிருந்து உயிர்வளி உள்வருகிறது. இது திசுக்களுக்குச் செல்லும் பொழுது அங்கு ஆக்சிஜன் ஏற்றம் நடைபெறுகிறது.

147. மூச்சு ஈவு என்றால் என்ன?

மூச்சுவிடுதலின் பொழுது செலவழிந்த உயிர்வளிப் பருமனுக்கும் உண்டாகும் கரி இரு ஆக்சைடு பருமனுக்கு முள்ள வீதம். வழக்கமாக இது 0.8 என்றும் அளவில் இருக்கும்.

148. குரல்வளை மணி என்றால் என்ன?

ஆணிடத்துக் கழுத்திற்கு முன்னுள்ள குரல்வளைப் புடைப்பு. தைராய்டு குருத்தெலும்பின் இரு பகுதிகளின் இணைப்பில் உண்டாவது. இது பெண்களுக்கு இல்லை.

149. மூச்சடைப்பு என்றால் என்ன?

புகை, நெடி முதலியவற்றால் மூச்சில் தடை ஏற்படுதல்.

7. கழிவு மண்டலம்

150. கழிவு மண்டலம் என்றால் என்ன?

தோல், சிறுநீரகம் ஆகிய கழிவுறுப்புகளைக் கொண்ட தொகுதி. முதன்மையான வேலை கழிவு அகற்றல்.

151. சிறுநீரகங்கள் என்பவை யாவை?

அவரை விதை வடிவமுள்ள இரு தட்டையான கழிவுச் சுரப்பிகள், சிறுநீரை வெளியேற்றுபவை. எல்லாப் பாலூட்டிகளிலும் உண்டு.

152. என்லி சுருள் என்பது என்ன?

சிறுநீர்ப் பிரித்தியின் ஒரு பகுதி. பெரும்பான்மை நீர் மீண்டும் உட்கவரப்படுதல் நடைபெறும் பகுதி.

153. மால்பிஜியின் சிறப்பென்ன?

இவர் இத்தாலிய அறுவை இயலார் (1628-1694), சிறுநீரகங்களிலுள்ள பல பகுதிகளை ஆராய்ந்தவர். அப்பகுதிகள் இவர் பெயர் கொண்டவை.

154. மால்பிஜியன் உறுப்பு என்பது யாது?

சிறுநீர்ப் பிரித்தியின் பகுதி. கோள முடிச்சையும் பௌமன் பெட்டகத்தையும் கொண்டது.

155. மால்பிஜியன் குழலிகள் என்பவை யாவை?

பூச்சிகளின் முதன்மையான கழிவுறுப்புகள்.

156. ஏடிபிகேடி என்றால் என்ன? இது எதனால் ஏற்படுகிறது?

இது ஒரு சிறுநீரக நோய். தற்புரி ஓங்கிப் பன்மக் கட்டி சிறுநீரகத்தில் உண்டாகும். இது பிகேடி - 7 என்னும் மரபணுவினால் ஏற்படுகிறது. நிறப்புரி 16 என்னும் புரியில் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (1994)

157. சிறுநீர்ப்பிரித்தி என்றால் என்ன?

சிறுநீரகத்தின் அமைப்பலகும் வேலையலகும் ஆகும்.

158. நீர்க்கடுப்பு என்றால் என்ன?

சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் வலி.

159. தோலின் சிறப்பு யாது?

பரப்பால் பெரிய ஐம்பொறிகளின் ஒன்று. உயிரிக்கு இயற்கைப் போர்வை. பலவகைத் தொடு உணர்ச்சிகளையும் மூளைக்குத் தெரிவிப்பது.

160. இதன் இரு முக்கிய வேலைகள் யாவை?

1. உடலின் வெப்பநிலையைச் சரிசெய்தல்.
2. வியர்வையைக் கழிவாக வெளியேறுற்றுதல்.

8. நரம்பு மண்டலம்

161. நரம்பு மண்டலம் என்றால் என்ன?

மூளையும் அதன் பகுதிகளும் அதனோடு தொடர்பு கொண்ட நரம்புகளும் அடங்கிய தொகுதி. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒருமுகப்படுத்துவது.

162. கஜால் அறிவித்த கொள்கை யாது?

நரம்பு மண்டலம் நரமபணுக்களாலும் அதன் பகுதிகளாலும் ஆனது என்னும் கொள்கையை இவர் 1906 இல் அறிவித்தார்.

163. கோல்கை கண்ணறைகளை நரம்பு மண்டலத்தில் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?

கோல்கை. 1883இல் கண்டறிந்தார்.

164. மைய நரம்பு மண்டலம் என்றால் என்ன?

மூளை, தண்டுவடம் அவற்றோடு தொடர்புள்ள நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டது. உடலின் தலைமைச் செயலகம்.

165. மையநரம்பு மண்டலத்தின் வகைகள் யாவை?

1. தானியங்கு நரம்பு மண்டலம்.
2. பரிவு நரம்பு மண்டலம்.
3. துணைப் பரிவு நரம்பு மண்டலம்.
இவை மூன்றும் மூளையின் கட்டுப்பாடு இல்லாமல் தாமாக இயங்குபவை. உள்ளுறுப்புகளின் வேலைகளைக் கட்டுப்படுத்துபவை.

166. தானியங்கு நரம்புமண்டலம் என்றால் என்ன?

இது பரிவு நரம்பு மண்டலம், மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி. மூளையின் கட்டுப்பாடில்லாமல் தானாக இயங்குவது. உள்ளுறுப்புத் தசைகளைக் கட்டுப்படுத்துவது.

167. பரிவு நரம்பு மண்டலம் என்றால் என்ன?

இது தானியங்கு நரம்பு மண்டலத்தின் ஒரு பிரிவு. இதன் நரம்புகள் இதயம், நுரையீரல் முதலிய உள்ளுறுப்புகளுக்குச் சென்று அவற்றைக் கட்டுபடுத்துகின்றன.

168. துணைப் பரிவு நரம்புமண்டலம் என்றால் என்ன?

இது தானியங்கு நரம்புமண்டலத்தின் ஒரு பகுதி. உள்ளுறுப்பு வேலைகளைக் கட்டுப்படுத்துவது.

169. புறஞ்செல் நரம்புமண்டலம் என்றால் என்ன?

நரம்பும் நரம்பு முடிச்சுகளும் சேர்ந்த தொகுதி. மைய நரம்பு மண்டலத்திலிருந்து உறுப்புகளுக்கும் உடலின் புறப்பகுதிகளுக்குச் செல்வது.

170. மூளை எங்கு அமைந்துள்ளது?

மண்டை ஓட்டில் பாதுகாப்பாக அமைந்துள்ளது.

171. மூளையின் பகுதிகள் யாவை?

பெருமூளை, இடைப்படுமூளை, சிறுமூளை, முகுளம், தண்டுவடம், நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டது. உடற்செயல்களைக் கட்டுப்படுத்துவது, ஒருமுகப்படுத்துவது.

172. மூளைச்சாக்காடு என்றால் என்ன?

மூளையின் உயிர்ப்பான செயல்கள் நிலையாக ஒடுங்கும். இந்நிலையிலேயே உறுப்பு மாற்றத்திற்குரிய உறுப்புகள் நீக்கப்படும்.

173. நடு மூளை என்றால் என்ன?

மூளையின் ஒரு பிரிவு. முன் மூளையையும் பின் மூளையையும் இணைப்பது.

174. சிறுமூளை என்றால் என்ன?

பின்மூளையின் பெரும் பகுதி. இயக்குத்தசைக்கிடையே ஒத்துழைப்பை உண்டாக்கி நடத்தல், ஓடுதல் முதலிய இயக்கு வேலைகள் நடைபெற மூளைக்கு உதவுவது. உடலின் நேர்த்தோற்றத்திற்கு காரணம் இதுவே.

175. கள்ளுண்டவன் தள்ளாடுவதேன்?

சிறு மூளை பாதிக்கப்படுவதால், அதன் கட்டுப்பாட்டிலுள்ள தசைகளில் ஒருமித்த இயக்கம் குலைகிறது.

176. பெருமூளைப் புறணி என்றால் என்ன?

பெருமூளைப் பகுதி. விருப்பத்திற்குட்பட்ட இயக்கங்களையும், பார்வை, கேட்டல், தொடுதல் முதலிய உறுத்துணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது.

177. மூளைத் தண்டுவடப் பாய்மத்தின் நன்மை யாது?

மைய நரம்பு மண்டலத்தைத் தீங்கிலிருந்து காப்பது.

178. பெருமூளையின் சிறப்பு என்ன?

இது மூளையின் சிறந்த பகுதி. இதன் வேலைகள்
1. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒருமுகப்படுத்துதல்.
2. செயற்கை மறிவினையைக் கட்டுப்படுத்துவது.
3. அறிவுக் கூர்மைக்கும் நினைவற்றலுக்குக் காரணம்.

179. அறிவுக் கூர்மை மிகுதியாக இருக்க மூளை எப்படி இருக்க வேண்டும்?

மடிப்புகள் அதிகமுள்ளதாக இருக்க வேண்டும்.

180. யானையின் மூளை அதன் உடல் பருமனுக்கேற்பப் பெரிதாக உள்ளதா?

இல்லை. சிறியதாகவே உள்ளது.

181. முகுளத்தின் சிறப்பென்ன?

அடிமூளைப்பகுதி. இரைப்பை, நுரையீரல்கள் முதலிய உள்ளுறுப்புகளின் வேலைகளைக் கட்டுப்படுத்துவது.

182. தண்டுவடம் என்பது யாது?

முதுகெலும்பில் செல்லும் நாண். இதுவே அனிச்சைச் செயலின் நிலைக்களம்.

183. முப்படலங்கள் என்பவை யாவை?

மூளையையும் தண்டுவடத்தையும் மூடியுள்ள மூன்று படலங்கள்.
1. சிலந்திப் படலம்.
2. வன்படலம்.
3. இளம்படலம்.

184. முப்படல அழற்சி என்றால் என்ன?

முப்படல வீக்கம். நினைவுக் குறைவு, தலைவலி, குமட்டல் முதலியவை இதன் அறிகுறிகள்.

185. இயக்குவாய் என்றால் என்ன?

தசை, சுரப்பி அல்லது உறுப்பில் முடியும் இயக்க அல்லது சுரப்பு நரம்பு முனை.

186. நரம்பு என்றால் என்ன?

நாரிழையாகும். இது மூளை நரம்புகளையும், தாவர நரம்புகளையும் குறிக்கும்.

187. நரம்புத் துடிப்பு என்றால் என்ன?

நரமபணுக்கள் வழியாகச் செல்லும் குறிபாடு.

188. நரம்பிழை (நியுரான்) என்றால் என்ன?

இது நரம்பணுவும் அதன் கிளைகளும் ஆகும். நரம்புத் துடிப்புகளைக் கடத்துவது. இது நரம்பு மண்டலத்தின் அமைப்பலகும் வேலையலகும் ஆகும்.

189. நரம்பிழையின் முக்கியப் பகுதிகள் யாவை?

1. உடல்
2. அச்சிழை. இது நரம்பன்று. உடலிலிருந்து துடிப்புகளை வெளியே எடுத்துச் செல்வது.
3. கிளை, இது நரம்பணு உடலுக்குத் துடிப்புக்களைக் கொண்டு செல்பவை.

190. நரம்பணுக்களின் வகைகள் யாவை?

1. உணர்நரம்பணுக்கள். இவை துடிப்புகளின் புலன் உறுப்புகளிலிருந்து (தோல்) மைய நரம்பு மண்டலத்திற்குக் கொண்டு செல்பவை.
2. இயக்க நரம்பணுக்கள். மைய நரம்பு மண்டலத்திலிருந்து துடிப்புகளைத் தசைகளுக்கு எடுத்துச் செல்பவை.

191. அச்சிழை என்றால் என்ன?

உயிரணுவின் உடலிலிருந்து துடிப்புகளை எடுத்துச் செல்லும் நரம்பிழை.

192. கிளை நரம்பிழை என்றால் என்ன?

ஒரு நரம்பணுவிலிருந்து கிளைக்கும் இழை. இது கண்ணறை நோக்கித் துடிப்புகளை எடுத்துச் செல்லும்.

193. தகவுறு நரம்பணு என்றால் என்ன?

நரம்பு மண்டலத்திலுள்ள நரம்பணு. இதன் மூலம் துடிப்புகள் உணர் நரம்புக் கண்ணறையிலிருந்து செய்தி நரம்புக் கண்ணறைக்குச் செல்கின்றன.

194. விலகமைநரம்பு என்றால் என்ன?

இது 6 ஆம் மூளை நரம்பு. விழிக்கோளம் சுழலப் பயன்படுவது.

195. இகல்நரம்பு என்றால் என்ன?

உட்செல் நரம்பு. உணர்பகுதிகளிலிருந்து உணர்ச்சியை மைய நரம்பு மண்டலத்திற்கு எடுத்துச் செல்வது.

196. அகல்நரம்பு என்றால் என்ன?

வெளிச்செல் நரம்பு. நரம்பு மண்டலத்திலிருந்து புறப்பகுதிக்குத் தூண்டலைக் கொண்டு செல்வது.

197. முகர்நரம்பு யாது?

முதல் மூளை நரம்பு. மணம் நுகரப் பயன்படுகிறது.

198. அடிநரம்பு முடிச்சுகள் என்றால் என்ன?

மூளை நரம்புத்திசுவின் சிறு திரள்கள். கட்டுப்பாட்டிற்குரிய இயக்கங்களை ஒழுங்குப்படுத்துபவை.

199. நரம்பு முடிச்சு என்றால் என்ன?

நரம்புத் திரட்சி. மைய நரம்பு மண்டலத்திற்கு வெளியில் இருப்பது. இம் மண்டலத்தின் ஒரு பகுதி.

200. மறிலிளை (அனிச்சைச் செயல்) என்றால் என்ன?

தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் நிலை. மூளையின் தலையீடு இல்லாமல் நடைபெறுவது. எ-டு உமிழ்நீர் சுரத்தல். இயற்கை மறிவினை.

201. மறிவினையின் வகைகள் யாவை?

1. இயற்கை மறிவினை.
2. செயற்கை மறிவினை.

202. செயற்கை மறிலினை என்றால் என்ன?

செயற்கைத் தூண்டலால் உண்டாவது. பெருமூளைப் புறணியில் தோன்றுவது. வேறு பெயர் கற்றல் மறிவினை.

203. செய்கை மறிவினையில் ஆராய்ச்சி செய்து புகழ் பெற்றவர் யார்?

உருசிய உடல் நூல் அறிஞர் பாவ்லவ்.

204. கட்டுப்படுத்தல் என்றால் என்ன?

இயற்கைத் தொடர்பற்ற தூண்டலுடன் ஒரு துலங்கலைப் பொருத்துமாறு செய்யும் முறை.

205. இதை நிறுவியவர் யார்? இதன் சிறப்பென்ன?

இதை நிறுவியவர் நோபல் பரிசுபெற்ற பாவ்லவ். கற்றலில் பயன்படுவது. இதில் கற்றல் மறிவினை ஏற்படுவது.

206. இந்த ஆய்வுக்கு இவர் பயன்படுத்திய இரு பொருள்கள் யாவை?

நாய், மணி

207. இதன் வகைகள் யாவை?

1. இடைநிலைக் கட்டுப்படுத்தல்
2. இயக்கக் கட்டுப்படுத்தல்
3. சமூகக் கட்டுப்படுத்தல்.

208. முழங்கால் மறிவிளை என்றால் என்ன?

முழங்கால் உதறல். முழங்கால் பந்தகம் தட்டப்படுவதால், கால் முன்தள்ளப்படும்.

9. சுரப்பி மண்டலம்

209. சுரப்பி என்றால் என்ன?

சுரக்கும் உறுப்பு. இது சுரக்கும் நீர் சுரப்பு எனப்படும்.

210. சுரப்பியின் வகைகள் யாவை?

1. நாளமுள்ள சுரப்பிகள் - குழாய் மூலம் தங்கள் சுரப்புகளைச் செலுத்துபவை. எ-டு உமிழ் நீர்ச்சுரப்பி.
2. நாளமில்லாச் சுரப்பிகள் - தங்கள் சுரப்புகளை நேரிடையாகக் குருதியில் சேர்ப்பவை. எடு, தொண்டைச் சுரப்பி, மூளையடிச் சுரப்பி.

211. சுரப்பி மண்டலம் என்றால் என்ன?

நாளமுள்ள சுரப்பிகள், நாளமில்ல கரப்பிகள் கொண்ட தொகுதி. சுரத்தல் முதன்மையான வேலை.

212. நாளமில்லாச் சுரப்பிகள் என்பவை யாவை?

குழாய் இல்லாமல் தம்முடைய சுரப்புகளை நேரடியாகக் குருதியில் சேர்க்கும் சுரப்பிகள், தைராய்டு, பிட்யூட்டரி, ஆட்ரினல் ஆகிய மூன்றும் முதன்மையானவை.

213. வளர்ச்சியாக்கிகள் (ஆர்மோன்கள்) என்றால் என்ன?

வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் முதலிய செயல்களை ஒழுங்குபடுத்தும் உடலியல் வினையூக்கிகள். எ.டு தைராக்சின் (தைராய்டு) பிட்யூட்டரின் (பிட்யூட்டரி)

214. வளர்தூண்டிகளின் சிறப்பை யார் எப்பொழுது வற்புறுத்தினர்?

1902 இல் வில்லியம் வேலிஸ், எர்னஸ்ட் ஸ்டார்லிஸ் ஆகிய இருவரும் வற்புறுத்தினர்.

215. இலாங்கர்கன் திட்டுச் சுரப்பிகள் என்றால் என்ன?

இவற்றை 1869 இல் இலாங்கர்கன் விளக்கினார். இன்சுலினைச் சுரப்பவை, கணையத்திலுள்ளவை. இச்சுரப்பு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது.

216. அட்ரினலின் எப்பொழுது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1901 இல் ஜோகிச்சி டாகாமைன் (ஜப்பான்), தாமஸ் பெல் ஆகிய இருவரும் தனித்தனியே 1901இல் அட்ரினலைக் கண்டறிந்தனர்.

217. இன்சுலின் பிரிப்பை அறிவித்தவர்கள் யார்? எப்பொழுது?

1922இல் பிரடரிக் பேண்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகிய இருவரும் அறிவித்தனர்.

218. கழுத்துக் கழலை என்றால் என்ன?

தைராக்சின் சுரப்பில் அயோடின் ஊட்டம் குறைகின்ற பொழுது ஏற்படும் குறைநோய். தொண்டைச் சுரப்பி பருப்பதால், கழுத்து முன்பகுதியில் கரளை உண்டாகும்.

219. தைமஸ் என்பது யாது? அதன் வேலை என்ன?

ஒரு நாளமில்லாச் சுரப்பி. தடுப்புத் திறனை உடலுக்கு அளிப்பது.

220. தைராய்டு என்பது யாது? அதன் சுரப்பு யாது? அதன் வேலை என்ன?

இது நாளமில்லாச் சுரப்பி. இதன் சுரப்பு தைராக்சைன், இதன் வேலைகள்
1. உடல் வளர்ச்சியையும் வளர்சிதை மாற்றத்தையும் ஒழுங்குபடுத்துகிறது.
2. அறிவுவளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் காரணம்.

221. இச்சுரப்பியின் குறை நோய்கள் யாவை?

கழலை, குருளைத்தன்மை.

222. ஆண்ட்ரோஜன் என்றால் என்ன?

பால் தூண்டிகளில் ஒன்று. மீசை முளைத்தல், அக்குள் மயிர் முளைத்தல் முதலிய இரண்டாம் நிலைப்பண்புகளை உண்டாக இதுவே காரணம்.

223. அரக்கமை என்றால் என்ன?

பருவ முதிர்ச்சிக்கு முன் மூளையடிச் சுரப்பி மிகுதியாகச் சுரப்பதால் உண்டாகும் அதிக வளர்ச்சி. இது ஒரு குறைநோய்.

224. குருளைத்தன்மை என்றால் என்ன?

தொண்டையடிச்சுரப்பி சரியாக வேலை செய்யாததால் குழந்தைகளிடத்து ஏற்படும் குறைநோய். வளர்ச்சி குன்றுவதால் 15 வயதுடையவர் 3 வயது குழந்தைபோல் இருத்தல்.

225. அடிசன் நோய் என்றால் என்ன?

அண்ணீரகச் சுரப்பிகளின் புறணிச்சுரப்பு குறையும் பொழுது ஏற்படும் குறைநோய்.

226. இந்நோயின் அறிகுறிகள் யாவை?

பெருந்தசை நலிவு, குறைந்த குருதியழுத்தம், தோல் கறுப்பாதல், குமட்டல்.

227. இந்நோய் இருந்த ஒரு குடியரசுத் தலைவர் யார்?

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கென்னடி

228. ஏ.சி.டி.எச் என்பதின் பயன்யாது?

அடினோகார்டிரோபிக் ஆர்மோன் அல்லது கார்டி கோட்ராபின். முன்பிட்யூட்டரிச் சுரப்பியின் நீர், மூச்சிழுப்பு, கீல்வாதம் முதலிய நோய்களைக் குணப்படுத்த ஊசி மருந்தாகப் போடப்படுவது.

229. ஏடிச் என்பது யாது? அதன் வேலை என்ன?

ஆண்டிடிடையூரட்டிக் ஆர்மோன் அல்லது வேசோ பிரசின். இது பின் முளையடிச் சுரப்பியின் நீர். சிறுநீர்க் குறைப்புத்தூண்டி சிறுநீரகம் நீர் உறிஞ்சுவதை இது தூண்டுவதால், உடல் பாய்மங்களின் செறிவு இதனால் கட்டுப்படுத்தப்படுகிறது.

230. அண்ணீ ரகச் சரப்பிகள் (அட்ரினல்) என்றால் என்ன?

ஒவ்வொரு சிறு நீரகத்தின் மேல் முக்கோண வடிவத்திலுள்ள ஒரு சுரப்பி, இது அகணி, புறணி என இருபகுதிகளைக் கொண்டது.

231. இவற்றின் சுரப்புகளும் அவற்றின் வேலைகளும் யாவை?

1. புறணியின் சுரப்பு கார்ட்டின். இது குருதியில் உப்பின் அளவைச் சரி செய்வது. பெண்ணிடத்து ஆண்மையை உண்டாக்குவது.
2. அகணியின் சுரப்பு அட்ரினலின். இது குருதி அழுத்தத்தை ஒரே சீராக வைக்கிறது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பது.

232. விடலைப்பருவம் (அடோலசன்ஸ்) என்றால் என்ன?

குழந்தைப் பருவத்தின் இறுதியில் தொடங்கி, முழு முதிர்ச்சி ஏற்பட்டவுடன் முடியும் ஒரு முதன்மையான வளர்ச்சிப் பருவம்.

233. இதன் வயது எல்லை என்ன ?

1. ஆண் 13-25
2. பெண் 12-18.

234. இப்பருவத்தை அழகாக விளக்கியுள்ள பெரும் இந்தியத் கவிஞர் யார்?

நோபல் பரிசுப் பெற்ற கவி தாகூர்.

235. நம் உடலிலுள்ள நாளமுள்ள சுரப்பிகள் யாவை?

உமிழ்நீர்ச்சுரப்பிகள், கணையம், கல்லீரல்.

236. கல்லீரலின் சிறப்பென்ன?

உடலிலுள்ள சுரப்பிகளில் மிகப் பெரியது. இது சுரக்கும் பித்த நீர் பித்தநீர்ப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது உடலின் வேதித் தொழிற்சாலை.

237. கல்லீரல் தொடர்பாக உண்டாகும் இருநோய்கள் யாவை?

கல்லீரல் இறுகல், மஞ்சட்காமாலை.

238. கல்லீரலின் வேலைகள் யாவை?

1. குருதி வேதி இயைபைச் சீராக்குதல்.
2. கொழுப்பு செரிக்கப் பித்தநீர் உதவுதல்.
3. இரும்பைச் சேமித்தல்.
4. வைட்டமின்கள் A,D ஆகிய இரண்டையும் சேமித்தல்.
5. குருதியிலிருந்து நஞ்சுகளை நீக்குதல்.

239. பித்தநீர் என்றால் என்ன?

கல்லீரல் சுரக்கும் பச்சை மஞ்சள் நிறச் சுரப்பு. இது கொழுப்பு செரிக்க உதவுகிறது.

240. கணையத்தின் இரட்டைச் சிறப்பென்ன?

இது கணைய நீரையும் இன்சுலினையும் சுரக்கிறது. முன்னது மாப்பொருள், புரதம், கொழுப்பு ஆகியவற்றைச் செரிக்கச் வைப்பது. பின்னது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது. இச்சுரப்பி நாளமுள்ள சுரப்பி, நாளமில்லாச் சுரப்பி ஆகிய இரண்டிற்கும் எடுத்துக்காட்டு.

241. மண்ணீரல் என்றால் என்ன?

இரைப்பையின் மேல் பகுதியிலுள்ள மென்மையான குழாய் உறுப்பு.

242. இதன் வேலைகள் யாவை?

1. புதிய சிவப்பணுக்களை உண்டாக்குகிறது.
2. வெள்ளணுக்களை உற்பத்தி செய்கிறது.

243. நாளமுள்ள இரு கழிவுநீர்ச் சுரப்பிகள் யாவை?

வியர்வைச் சுரப்பிகள், சிறுநீரகங்கள்.

10. இனப்பெருக்க மண்டலம்

244. இனப்பெருக்க மண்டலம் என்றால் என்ன?

இனப்பெருக்கத்திற்குரிய ஆண் உறுப்புகளும் பெண் உறுப்புகளும் உள்ள தொகுதி. இவை மனிதனிடம் நன்கு வளர்ந்துள்ளன.

245. இனப்பெருக்கம் என்றால் என்ன?

விந்தணு கருமுட்டையோடு சேர்ந்து கருவணு உருவாகிறது. இதிலிருந்து புதிய உயிர் உருவாகிறது. இச்செயலே இனப்பெருக்கம் ஆகும். உயிர் இனங்கள் தொடர்ந்து சென்று நிலைத்திருக்க இது மிக இன்றியமையாதது.

246. இனப்பெருக்கம் எத்தனை வகைப்படும்?

1. கலவி இனப்பெருக்கம் - விந்தணு கருவணு மூலம் நடைபெறுவது.
2. கலவியிலா இனப்பெருக்கம் - பிளவுபடல், துண்டாதல் மூலம் நடைபெறுதல்.

247. கன்னிப் பெருக்கம் என்றால் என்ன?

பூச்சிகளில் காணப்படும் ஒரு கன்னி இனப்பெருக்க முறை. கலவி இல்லாமல் பெண்கள் பெண்களையே இதில் உண்டாக்கும்.

248. கீழின விலங்குகள் மேற்கொள்ளும் கலவியிலா இனப்பெருக்க முறைகள் யாவை?

பிளவுபடல், கன்னி இனப்பெருக்கம்.

249. விந்தணு என்றால் என்ன?

பால் இனப்பெருக்கத்தில் பங்கு கொள்ளும் ஆண் அணு. தலை, உடல், வால் உண்டு.

250. கருமுட்டை என்றால் என்ன?

விந்தணுவை ஏற்கும் பெண் அணு.

251. முனைப்புரி (அக்ரோசோம்) என்றால் என்ன?

விந்தணுவின் தலைப்பகுதி, முட்டையைத்துளைத்துச் செல்லப்பயன்படுகிறது.

252. கருப்பை என்றால் என்ன?

பெண்ணிடத்துக் கருக்குழலின் விரிந்த பகுதி. இதில் முட்டைகள் வளரும்.

253. சூல்பை என்றால் என்ன?

சூல் அல்லது முட்டை வரும் இடம்.

254. கரு என்றால் என்ன?

கருவணுவிலிருந்து உண்டாகும் பாலினப் பொருள். புதிய கால் வழியை உண்டாக்குவது.

255. கருவியல் என்றால் என்ன?

கருத்தோற்றம், அதன்வளர்ச்சி ஆகியவற்றை ஆராயும் துறை.

256. பிளவுபடல் என்றால் என்ன?

இனப்பெருக்கத்தினால் ஓர் உயிரி சமபகுதியாக இரண்டாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் தனித்தனி இளம் உயிரிகளாதல். எ-டு அமீபா.

257. பிளலிப்பெருகல் என்றால் என்ன?

கருவுற்ற முட்டை இழைப்புரிவுகளாய்ப் பிரிவுறுதல். இதில் சமஎண்ணிக்கை உட்கருவினுள் சிறிய கண்ணறைகள் உண்டாகும்.

258. கருவுயிரி என்றால் என்ன?

உடற்பகுதிகள் எல்லாம் தெளிவாகத் தோன்றிய பின் கருப்பையிலுள்ள அல்லது முட்டையிலுள்ள உயிரி.

259. கருவளர்காலம் என்றால் என்ன?

கரு உருவாதல் முதல் அது பிறக்கும் வரையுள்ள இடைவெளி. இது யானைக்கு அதிகம், 20 மாதங்கள். (கஜ கர்ப்பம்)

260. பாலூட்டிகளின் கருவளர்காலம் எவ்வளவு?

9-12 மாதங்கள்

261. கருவளர்காலம் குறைந்த பாலூட்டிகள் இரண்டு கூறு.

1. சுண்டெலி - 3 வாரங்கள்
2. முயல் - 5 வாரங்கள்

262. புறப்படை என்றால் என்ன?

கருவின் வெளிப்புற அடுக்கு, தோல், தோல்சார் அமைப்புகள், நரம்பு மண்டலம், உணர் உறுப்புகள் ஆகியவற்றை இது உண்டாக்குகிறது.

263. அகப்படை என்றால் என்ன?

வளர்க்கருவின் மூன்றடுக்குகளில் ஒன்று.

264. கருக்கோளியம் என்றால் என்ன?

பதிவதற்கு முன் பிளவிப் பெருகலின் பிந்திய நிலைகளிலுள்ள பாலூட்டி முட்டை, நீர் நிரம்பிய உட்குழிவான அணுக்ககோளத்தாலானது. இதிலிருந்து கரு வளர்கிறது.

265. கருக்கோளம் என்றால் என்ன?

கருவுற்ற முட்டை பிளவிப் பெருகலினால் உண்டாகும் கோளவடிவ வளர்நிலை.

266. கருதோக்குமுளை என்றால் என்ன?

கருவளர்முனை. முட்டையில் அண்மையில் கரு அமைந்திருக்கும் பகுதி, வழக்கமாக, இது கருவிலகு முனைக்கு எதிராக இருக்கும்.

267. பதியஞ்செய்தல் என்றால் என்ன?

திசு அல்லது உறுப்பை ஓர் உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு மாற்றிப் பொருத்துதல். எ-டு, சிறு நீரகத்தை மாற்றிப் பொருத்துதல்.

268. வாழ்நாள் என்பது யாது?

பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள காலம். இது உயிர்களுக்குத் தகுந்தவாறு மாறுபடும். ஓராண்டு வாழும் விலங்கும் பல்லாண்டுகள் வாழும் விலங்கும் உண்டு. மனிதனின் சராசரி வாழ்காலம் 100 ஆண்டுகள்.

269. வாழ்க்கைச்சுற்று என்றால் என்ன?

உயிரிகளின் வாழ்க்கையில் காணப்படும் வளர்ச்சி நிலைகள். பூச்சி முதலியவற்றில் நான்கு நிலைகளிலும் கீழினத் தாவரங்களில் இருநிலைகளிலும் காணப்படுவது. பொதுவாகக் கருவணு தோன்றி முதிரும் வரை உள்ள நிலைகளை வாழ்க்கைச்சுற்று உள்ளடக்கியது.

270. கலப்பின உயிரி என்றால் என்ன?

வேறுபட்ட இருவகை உயிர்களின் கால்வழி. எ-டு கோவேறு கழுதை.

271. பெற்றோர் கலப்பு என்றால் என்ன?

ஒரு கலப்பினத்தின் பாலணு, அதன் பெற்றோர் பாலணுக்கள் ஒன்றினால் கருவுறுதல்.

272. செயற்கை விந்தேற்றம் என்றால் என்ன?

செயற்கை முறையில் விந்தினைப் பெண் கருப்பையில் செலுத்துதல். உயர்வகைக் கலப்பு விலங்குகளை உண்டாகக் இம்முறை பயன்படுவது. எ-டு கறவை மாடுகள்.

273. மலடாக்கல் என்றால் என்ன?

ஆண் பெண் இருப்பெருக்க உறுப்புகளை நீக்கி, இனப்பெருக்க ஆற்றல் இல்லாமல் செய்தல்.

274. இருபால் என்றால் என்ன?

ஆண், பெண் ஆகிய இருபால் இனக் கண்ணறைகளைத் தோற்றுவிக்குந் தன்மை. எ-டு மண்புழு.

275. இனப்பெருக்க மாற்றம் என்றால் என்ன?

சில விலங்குகளின் வாழ்க்கைச் சுழற்சியில் கலவி இனப் பெருக்கமும் கலவி இலா இனப்பெருக்கமும் மாறி மாறி வருதல். அதாவது இது ஒரு தலைமுறை மாற்றம்.

276. இளமைப் பெருக்கம் என்றால் என்ன?

இளம் உயிரியில் ஏற்படும் இனப்பெருக்கம். இளம் உயிரி என்பது முட்டையிலிருந்து வெளிவந்த உயிர், வளர்ச்சி நிலையில் உள்ளது. எ-டு சலமாந்தரின் இளம் உயிர் இத்திறன் கொண்டது.

277. அடையளித்தல் என்றால் என்ன?

திசு வளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அளித்தல். பிறந்த முதிர்ச்சியற்ற குழந்தையைச் செயற்கைக் சூழ்நிலையில் வளர்த்தல்.

278. பேரிளமை என்றால் என்ன?

மாறா இளமை. இளமைப் பண்புகள் இருக்கும் போதே ஓர் உயிரி இனப்பெருக்கம் முதலிய செயல்களைக் செய்தல். இது தற்காலிகமாகவும் நிலையாகவும் இருக்கலாம். விலங்கிற்கு ஆச்சோலாட்டிலும் தாவரத்திற்கு லெம்னாவும் எடுத்துக்காட்டுகள்.

279. வளர்உருமாற்றம் என்றால் என்ன?

முட்டைப்பருவத்திலிருந்து முதிர்ந்தபருவத்திற்கு முன்வரை நடைபெறும் மாற்றங்கள் இதில் அடங்கும். எ-டு தலைப்பரட்டை தவளையாதல். கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாதல். இது அதன் வாழக்கை வரலாறு ஆகும்.

280. கம்பளிப்புழு என்றால் என்ன?

பூச்சிகளின் வாழ்க்கை வரலாற்றில் முட்டையை அடுத்த இரண்டாம் நிலை. இது ஓர் இளம் உயிரி அல்லது இளரி. மிகு வளர்ச்சிப் பருவம்.

281. கூட்டுப்புழு என்றால் என்ன?

பூச்சிகளின் வாழ்க்கை வரலாற்றில் மூன்றாம் நிலை. இது ஓய்வு நிலைப் பருவம். எ-டு வண்ணத்துப்பூச்சி.

282. இனப்பெருக்க வளம் என்றால் என்ன?

தன் வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணுயிர் இடும் முட்டை அளவு.

283. ஒற்றைக்கண் இளரி என்றால் என்ன?

ஓட்டிளரி. நண்டுவகை விலங்குகளில் இளம் உயிர்.

284. வால் வேற்றிளரி என்றால் என்ன?

முதல் தண்டுள்ள விலங்குகளின் தனிபாலுயிரியின் கருமுட்டையிலிருந்து உண்டாகும் இளம் உயிர்.

285. புழு இளரி என்றால் என்ன?

இது காலும் தலையுமற்ற இனம் உயிர். சில கணுக்காலி களில் காணப்படுவது. காற்றிலும் காணப்படும். எ-டு ஈ போன்ற ஈரிறக்கைப் பூச்சிகள்.

286. வேற்றிளரி என்றால் என்ன?

முட்டையிலிருந்து வெளிவரும் இளமுயிர்.

287. வேற்றிளரியின் பல வகைகள் யாவை?

1. கம்பளிப்புழு - வண்ணத்துப்பூச்சி
2. தலைப்பரட்டை - தவளை
3. தட்டை இளரி - ஓபிலியா
4. மருங்கிளறி - கடல் சாமந்தி
5. பைலிடியம் இளரி - குழல் வாய்ப்புழு
6. மியூல்லர் இளரி - தட்டைப்புழு
7. ஆரஇளரி - நட்சத்திரமீன்.

288. தட்டை இளரி என்பது யாது?

குழிக்குடல்களின் வேற்றளரி.

289. மருங்கிளரி என்றால் என்ன?

கடல் சாமந்திகளுக்குரிய இளரி.

290. இறட்டை இறகிளரி என்றால் என்ன?

நட்சத்திர மீனுக்குரிய இருமருங்கிளரி.

291. முதிர் இளரி என்றால் என்ன?

ஆம்பிலோனிப்போமா பேரின வகைகளின் வாலுள்ள இரட்டை வாழ்விகள். இவற்றின் இளம் உயிர் முதிர்ந்து வாழ்நாள் முழுதும் இனப்பெருக்கம் செய்ய வல்லது.

292. உதட்டிளரி என்றால் என்ன?

நன்னீர்ச்சிப்பி வகை மட்டியின் இளம் உதட்டு உயிரி.

293. முழு உருமாறிகள் என்பவை யாவை?

தம் வாழ்க்கைச் சுற்றில் முழு உருமாற்றம் பெறும் பூச்சிகள் வண்ணத்துப்பூச்சி. இதில் முட்டை , கம்பளிப் புழு, கூட்டுப்புழு, முதிரி என நான்கு பருவங்கள் உண்டு.

294. முற்றிளரி என்றால் என்ன?

நீரில் வாழ்ந்து செவிள்களால் உயிர்க்கும் நிறைஇளரி. பொதுவாகப் பல பூச்சிவகைகளில் காணப்படுவது.

295. நிறை உயிரி என்றால் என்ன?

உருமாற்றம் நிறைவடைந்து கூட்டைவிட்டு வெளிவரும் உயிரிகளின் வாழ்க்கைச் சுற்றில் இறுதி நிலையான நான்காம் நிலை. எ-டு தவளை, வண்ணத்துப்பூச்சி.

11. ஐம்பொறிகள்

296. ஐம்பொறிகள் யாவை?

கண், காது, மெய், வாய், மூக்கு.

297. இவற்றின் புலன்கள் யாவை,

1. கண் - பார்த்தல்
2. காது - கேட்டல்
3. மெய் (தோல்) - தொடு உணர்ச்சிகளை அறிய.
4. வாய் (நாக்கு) - சுவையறிதல்
5. மூக்கு - முகர்தல்

298. இவற்றில் சிறந்த இரண்டு எவை? ஏன்?

கண், காது. பார்த்தறிதல், கேட்டறிதல் ஆகியவை மூலம் நாம் பெரும் அறிவில் பெரும்பகுதியாகும். பொதுவாக, ஐம்பொறிகள் அறிவு வாயில்கள் என்ப்படும்.

299. கண்ணின் சிறப்பென்ன?

ஐம்பொறிகளில் இன்றியமையாதது. பொருள்களைப் பார்த்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவுவது.

300. கண்ணிலுள்ள மூன்று படலங்கள் யாவை?

1. விழிப்படலம். இது முன்புறம் விழிவெண்படலமாகியுள்ளது.
2. விழியடிக் கரும்படலம். இது முன்பக்கம் கருவிழிப் படலமாகியுள்ளது.
3. விழித்திரை.
301. விழித்திரையின் சிறப்பென்ன?

இது நரம்புத்திரை. இதில்தான் பொருளின் உருவம் விழுகிறது.

302. கண்மணி என்பது யாது? இதன் வேலை என்ன?

கண்ணின் கருவிழிப் படலத்திலுள்ள துளை. ஒளி உட்செல்வதைக் கட்டுபடுத்துவது.

303. ஒரு பொருளை நாம் எவ்வாறு பார்க்கிறோம்?

விழித்திரையிலுள்ள கோல்களும் கூம்புகளும் ஒளியாற்றலை நரம்பாற்றலாக மாற்றுகின்றன. இதைப் பார்வை நரம்பு மூளைக்குத் தெரிவிக்கும் பொழுது, நாம் பொருளின் உருவை உணர்கிறோம்.

304. கண்தக அமைதல் என்றால் என்ன?

பொருள்களின் தொலைவிற்கேற்ப விழிவில்லையின் பருமன் கூடிக்குறைகிறது. சிறப்பாக, அருகிலுள்ள பொருள்களின் பிம்பம் திரையிள் விழிக்குவியத் தொலைவு குறையுமாறு விழிவில்லையின் பருமன் அதிகமாவதற்குச் கண்தக அமைதல் என்று பெயர். இதற்குக் குற்றிழைத்தசை உதவுகிறது.

305. கண்ணில் எங்குப் பிம்பம் உண்டாகிறது?

மூன்றாம் திரையான விழித்திரையில்.

306. குவியாட்பார்வை என்றால் என்ன?

கண் குறைபாடு வில்லை மூலம் ஒளிக்கதிர்கள் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஒரே சமயத்தில் குவியாத நிலை. கதிர்கள் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் செல்லும்.

307. நிறப்பிறழ்ச்சி நீக்கி என்றால் என்ன?

நிறப் பிறழ்ச்சியைப் போக்கும் கண்ணாடி வில்லை.

308. நிறப்பிறழ்ச்சி நீக்கு ஆய்வு என்றால் என்ன?

நிறப்பிறழ்ச்சியைப் போக்கச் செய்யும் சிறிய ஆய்வு.

309. நிறப்பார்வை என்றால் என்ன?

இது ஒரு பார்வைக் குறைபாடு, நிறமற்ற பொருள்கள் நிறமுள்ள பொருள் போல தெரியும். நிறங்கள் நிறைவாக வெளிப்படா.
310. குருட்டுப்புள்ளி என்றால் என்ன?
விழித்திரையில் பார்வை நரம்பு நுழையும் புள்ளி. இப்புள்ளிக்கு ஒளியுணர்வு இல்லை.

311. அறை என்னும் சொல் எதைக் குறிக்கிறது?

1. புறச்செவி.
2. இதய அறை.

312. செவியின் சிறப்பென்ன?

ஐம்பொறிகளில் சிறப்புள்ளது. பல செய்திகளைக் கேட்டு அறிந்து நாம் அறிவு பெற உதவுகிறது.

313. செவிப்பறையின் வேலை என்ன?

நடுச் செவியில் அமைந்து ஒலி அதிர்வுகளைச் செவி நரம்புகளுக்கு அனுப்புகிறது.

314. நடுச்செவிக் குழலின் வேலை என்ன?

செவிப்பறைக்கு இருபுறங்களிலும் காற்றழுத்தத்தைச் சரி செய்து சரியாகக் கேட்க உதவுகிறது.

315. நடுச்செவியிலுள்ள மூன்று சிற்றெலும்புகள் யாவை?

சுத்தி எலும்பு, பட்டைச் சிற்றெலும்பு, அங்கவடி எலும்பு.

316. உட்செவியிலுள்ள இரு பகுதிகள் யாவை?

1. காது நத்தை எலும்பு கேட்டல்.
2. அரைவட்டக் குழல்கள் - உடலுக்கு நிலைப்பு அளித்தல்

317. நாம் ஒலியை எவ்வாறு உணர்கிறோம்?

ஒலி அலைகள் நரம்புத் தூண்டல்களாக மாறச் செவி நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும்பொழுது நாம் ஒலியை உணர்கிறோம்.

318. கேள் நரம்பு என்றால் என்ன?

செவிநரம்பு, முதுகெலும்புள்ள விலங்குகளின் உட்செவி யிலுள்ள 8 ஆம் மூளை நரம்பு. ஒலி அதிர்வுகளை மூளைக்கு தெரிவிப்பது.

319. செவிப்பறையின் வேலை என்ன?

இது ஒலி அதிர்வுகளை உட்செவிக்குச் செலுத்துகிறது.

320. மயிர்ச்சிலிர்ப்பு எவ்வாறு ஏற்படுகிறது?

தோல் தசை சுருங்குவதால் ஏற்படுகிறது.

321. மூக்கடிச்சதை என்பது என்ன?

மூக்கு, தொண்டை ஆகியவற்றிற்குப் பின் காணப்படும் கொழுப்பு நீர்ச் சுரப்பிகள். இவை பருக்கும் பொழுது கேட்டலும், மூச்சுவிடுதலும் கடினமாக இருக்கும்.

322. ஒரு பொருளின் மணத்தை உணர்வதற்கு அது எந்நிலையில் இருக்க வேண்டும்?

வளி நிலையில் இருக்க வேண்டும். இதை முகர் நரம்பு மூளைக்குத் தெரிவிக்கிறது.

323. நாக்கு எவற்றின் மூலம் சுவையை அறிகிறது?

சுவை நரம்புகள் மூலம் அறிகிறது.

324. ஒரு பொருளின் சுவையை அறிய அது எந்நிலையில் இருக்க வேண்டும்?

நீர்மநிலையில் அதாவது கரைசல் நிலையில் இருக்க வேண்டும். சுவை நரம்புகள் சுவையை மூளைக்குத் தெரிவிக்கின்றன.

325. நாக்கு அறியும் பல சுவைகள் யாவை?

நாக்கின் நுனி இனிப்பையும், அடி கசப்பையும், பக்கங் கள் புளிப்பையும் உணர்கின்றன. உவர்ப்பையும் துவர்ப்பையும் எல்லாச் சுவையரும்புகளும் உணர்கின்றன.