உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் வினா விடை - விலங்கியல்/கண்ணறையும் திசுவும்

விக்கிமூலம் இலிருந்து

7. கண்ணறையும் திசுவும்

1. கண்ணறை (செல்) என்றால் என்ன?

உயிர்ப்பொருள் நிரம்பியதே கண்ணறை. இது உயிரின் அமைப்பலகும் வேலையலகும் ஆகும்.

2. கண்ணறையிலுள்ள உயிர்ப்பொருள்களுக்கு என்ன பெயர்?

முன் கணியம் (புரோட்டோபிளாசம்)

3. கண்ணறையில் கண்ணறைப் படலத்திற்கும் உட்கருவிற்கும் இடையிலுள்ள பகுதியின் பெயர் என்ன?

கண்ணறைக் கணியம் (சைட்டோபிளாசம்)

4. கண்ணறையின் இன்றியமையாப் பகுதி எது?

உட்கரு

5. இதிலுள்ள பொருள்கள் யாவை?

நிறப்புரி, மரபணு, டி என் ஏ, ஆர் என் ஏ.

6. தனிக்கண்ணறைகளால் பிரிக்கப்படாத என்பது எதைக் குறிப்பது?

ஒற்றைக் கண்ணறை உயிரி அமீபா.

7. நுண்புரிகள் என்பவை யாவை?

கோல்கை உறுப்பு, அகக் கனிய வலைப்பின்னல் ஆகியவற்றில் துண்டுகள்.

8. மையப்புரி என்றால் என்ன?

நுண்ணிய உருளை வடிவப் பொருள். உட்கருப்படலத் திற்கு வெளியே உள்ளது. இழைப்பிரிவிலும், குன்றல் பிரிவிலும் கதிர் முனைகளை உண்டாக்குவது.

9. கோல்கை அமைப்பு என்றால் என்ன?

விலங்கணுக்களில் மைய உறுப்பைச் சுற்றியுள்ள பொருள். 1898 இல், காமிலோ கோல்கை என்பார் கண்டறிந்தது. செல் கரப்புக்குக் காரணமானது.

10. தற்சிதைவு என்றால் என்ன?

உயிரணுக்கள் இறந்தபின், அவற்றின் நொதிகளாலேயே அவை அழிக்கப்படுதல்.

11. நுண்பிளப்பு என்றால் என்ன?

உட்கரு முதலிய நுண்பொருள்களை நுண்ணோக்கியில் பிளக்கும் நுணுக்கம்.

12. குற்றிழை உயிரிகளில் காணப்படும் இரு உட்கருக்கள் யாவை?

பெருவுட்கரு, சிறுஉட்கரு. எ-டு பரமேசியம்.

13. குறுக்குக்கலப்பு என்றால் என்ன?

குறுக்கு தோன்றுவதன் வாயிலாக அதன்மூலம் ஒருபடித்தான நிறணியன் கருக்களிடையே ஏற்படும் பொருள் பரிமாற்றம். இவ்வரிய நிகழ்ச்சி கண்ணறைப் பிரிவில் நடைபெறுவது.

14. இதனை யார் எவ்வாராய்ச்சியின் மூலம் கண்டறிந்தார்?

இதனைப் புகழ் வாய்ந்த அமெரிக்க உயிரியலார் மார்கன் தாம் செய்த கனி ஈக்கள் வாயிலாக கண்டறிந்தார்.

15. பரிமாற்றக் கலப்பு என்றால் என்ன?

பெற்றோரின் பாலினால் குறிப்பிட்ட பண்பின் மரபுரிமை பாதிக்கப்படுகிறதா என்பதை ஆய்வது.

16. திசுவியல் என்றால் என்ன?

திசுக்களை ஆராயுந்துறை.

17. திசு என்றால் என்ன?

குறிப்பிட்ட வேலையைச் செய்யும் கண்ணறைகளின் தொகுதி. ஒரே அமைப்புள்ளது. தூண்டலுக்கேற்ற துலங்களைத் தெரிவிப்பது. எ-டு தசை.

18. நம் உடலிலுள்ள ஐவகை திசுக்கள் யாவை?

1. மேல்படலத்திசு - புறத்தோல், வாய், சுரப்பி.
2. தசைத்திசுகள் - வரித்தசை, வரியில்லாத்தசை.
3. தாங்குதிசுகள் - இணைப்புத்திசு, எலும்புத்திசு.
4. நரம்புத்திசு - மூளை நரம்புகள்
5. நீர்மத்திசு - குருதி.

19. திசு வளர்ப்பு என்றால் என்ன?

தகுந்த ஊடகத்தில் கண்ணறைகள், திசுக்கள், உறுப்புகள் ஆகியவற்றைப் பேணல்.

20. திசுக்களின் பொதுவான வேலைகள் யாவை?

1. தாங்குதல் அளித்தல்
2. பாதுகாப்பு அளித்தல்
3. இயக்கம் அளித்தல்
4. தூண்டலுக்கேற்ற துலங்கலை உண்டாக்கல்.
5. ஊட்டப்பொருள்களையும், கழிவுகளையும் எடுத்துச் செல்லுதல்.

21. இணைப்புத்திசு என்றால் என்ன?

தாங்குதல், பாதுகாப்பு, பழுதுபார்த்தல் முதலிய வேலைகளைச் செய்வது. தோலுக்குக் கீழ் உள்ளது.

22. கொழுப்புத்திசு என்றால் என்ன?

திசுக்களில் ஒரு வகை. இதில் வெண் கொழுப்பு அல்லது மாநிறக் கொழுப்பு உண்டு.

23. உயிர்வளிக்குறை என்றால் என்ன?

திசுக்களில் உயிர்வளி இல்லாத நிலை.

24. படலம் என்பது என்ன?

கண்ணறை, உறுப்பு முதலியவற்றைக் சூழ்ந்துள்ள திசு. எ-டு கண்ணறைப்படலம்.

25. படல எலும்பு என்றால் என்ன?

இணைப்புத் திசுவால் உண்டாவது, குருத்தெலும்பு பங்குபெறுவதில்லை.

26. அகவாக்கம் என்றால் என்ன?

புதிய பொருள்கள் முன் கணியத்தில் சேர்வதால் உயிரிகள் வளர்தல்.

27. உறுப்பு என்பது யாது?

பல திசுக்களைக்கொண்ட பகுதி. ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒரு வேலையுண்டு. எ-டு காது கேட்டல்.

28. உறுப்புகள் என்பவை யாவை?

உயிரணுவிலுள்ள உட்கரு, நுண்குமிழி முதலியவை.

29. மண்டலம் என்பது என்ன?

பல உறுப்புகள் கொண்டது மண்டலம். எ-டு செரித்தல் மண்டலம் - சுரப்பிகள், இரைப்பை , குடல்.